கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 4, 2024
பார்வையிட்டோர்: 1,471 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்டில் ஒரு பெரிய பழய ஆலமரம் இருந்தது. அதில் எண்ணற்ற பட்சிகள் வசித்து வந்தன. மரத்தின் அடியில் பலிதா என்ற பெயருள்ள எலி ஒன்று ஒரு வங் கில் வசித்து வந்தது. முன்னெச்சரிக்கையாக இந்த வங் குக்கு எலி நூறு வாயில்களை அமைத்திருந்தது. மரக் கிளையில் லோமசா என்னும் பெயருள்ள பூனையும் வசித்து வந்தது. பட்சிகளுக்கும் எலிக்கும் பூனையைக் கண்டால் பயம். 

அந்த ஆலமரத்தடியில் ஒவ்வோரு நாளும் ஒரு வேடன் கண்ணி வைப்பது வழக்கம். பூனை எப் போதுமே ஜாக்கிரதையாகத் தான் இருப்பது வழக்கம். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு நாள் பூனை அந்தக் கண்ணியில் சிக்கிக் கொண்டது. வலிமையுள்ள எதிரி சங்கடத்தில் மாட்டிக்கொண்டு விட்டால் நோஞ்சான் களுக்கெல்லாம் மகிழ்ச்சி தானே! 

எலிக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் தைரியமும் உண்டாகிவிட்டது.வங்கை விட்டு வெளியே வந்து கண்ணி யில் வைத்திருந்த மாமிசத் துண்டை அமைதியாகச் சாப்பிட ஆரம்பித்தது. சாப்பிட்டு முடியும் சமயத்தில் தலையைத் தூக்கிப் பார்த்தபொழுது ஹிரினா என்ற கீரிப் பிள்ளை தன் வங்கின் வாயிலை அடைத்துக்கொண்டு உட் கார்ந்திருப்பதைக் கண்டது. தான் வங்குக்குத் திரும்பிப் போகும்போது பிடித்துத் தின்று விடும் நோக்கத்துடன் கீரிப்பிள்ளை உட்கார்ந்திருப்பதை எலி உணர்ந்துவிட்டது. ஆலமரத்தின் மேலே ஏறியாவது தப்பிவிடலாம் என்று எலி நினைத்துக் கொண்ட பொழுது மரத்தின் பேரில் இருந்த சந்திர கா என்ற ஆந்தை கண்ணில் பட்டது. 

எலிக்கு இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற இக் கட்டான நிலை உண்டாகி விட்டது. மேலே ஆந்தை கீழே கீரி! இருந்தாலும் எலி தளர்ச்சி அடையவில்லை. ஆழ்ந்து சிந்தித்துவிட்டு எலி ஒரு முடிவு செய்துகொண் டது. இந்த அபாயகரமான நிலையில் எதிரியான பூனை யுடன் நேசம் கொள்வதுதான் தப்புவதற்கான வழி என்று எலி தீர்மானித்தது. உடனே பூனையை நெருங் கிற்று. வலைக்குள் சிக்கி இருக்கும் பூனையால் இப் பொழுது ஒன்றும் செய்து விட முடியாது என்ற தைரி யத்தில்.பூனை அண்ணா! ஒரு வார்த்தை உன்னுடன் பேச வேண்டும் என்று தேன் சொட்டும் குரலில் எலி தொடங்கிற்று. ‘இதோ பார்! நாம் இருவரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது உனக்குத் தெரியும். நீ உத்தரவு கொடுத்தால் வலையைக் கடித்து எறிந்து விட்டு என்னால் உனக்கு விடுதலை அளிக்க முடியும். இந்த உதவி செய்யவேண்டும். என்னை உன் நண்பனா கப் பாவிக்க வேண்டும். தின்றுவிடக் கூடாது. வெள் ளம் அடித்துக்கொண்டு போகும் மரத்தை வெள்ளத்தில் மூழ்கித் தவிப்பவன் பற்றிக் கொண்டால் இரண்டு வித லாபம் ஏற்படும். மரமும் கரைசேர்ந்து விடும். வெள் ளத்தில் தவித்தவனும் கரை சேர்ந்து விடுவான். அதைப் போல நீ என்னை நண்பனாகப் பாவித்தால் இரண்டு பேருக்கும் நன்மை சம்மதம்தானா?’ என்று எலி கேட்டது. 

கண்களை மூடிக்கொண்டு பூனை ஒரு நிமிஷம் யோசித்தது. யோசனை நியாயமாகப்பட்டது. தம்பி, அப்படியே செய் இனி உன்னை என் நண்பனாக கருது கிறேன் என்று பூனை எலிக்குப் பதிலளித்தது. 

உடனே எலி பூனை இருக்கும் வலைக்குள் புகுந்து சிறிது நேரம் தமாஷாக உலக விவகாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த கீரிக்கும் ஆந்தைக்கும் பெருத்த ஏமாற்றம் உண்டாகி விட்டது. இனி எலியைப் பிடித்து உண்ண முடியாது என்று கீரிக் கும் ஆந்தைக்கும் தெரிந்து விட்டது, எலியைப் போய் பிடிப்பதென்றால் தாங்கள் வலையில் சிக்கிக்கொள்ள நேரும் என்பதைத் தவிர பூனையுடன் வேறு போராட வேண்டிவரும் என்பதை அவை உணர்ந்தன. இருந்தா லும் இந்த நட்பு குலைந்து போகாதா என்று எண்ணமிட் டுக்கொண்டே தங்கள் தங்கள் இடத்தில் பொறுமை யாக உட்கார்ந்திருந்தன. 

இதற்கிடையே எலி கண்ணியின் கயிறுகளை இங் கொன்றும் அங்கொன்றுமாகக் கடித்துப் போட்டுக் கொண்டிருந்தது. சுருசுருப்பின்றி எலி வேலை செய் வதைப் பார்த்த பூனை மொணமொணக்கத் தொடங் கிற்று. ‘உன்னைக் காப்பாற்றுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். இவ்வளவு மெதுவாக இருந்தால் எப்படி? என்றது. “நானும் அப்படியே செய்வேன் என்பதைக் காணப்போகிறாய். எதற்கும் பொறுமை வேண்டும்’ என்று எலி சமாதானம் அளித்துவிட்டு வேலையை இரவு முழுவதும் இழுக்கடித்துக் கொண்டிருந்தது. 

பொழுது விடிந்து விட்டது. ஆனால் வேலையோ ஆனபாடில்லை என்பதை பூனை கண்டதும் கோபம் கொண்டது. வேடன் வந்து விடப்போகிறான். நான் மாட்டிக்கொள்ளப் போகிறேன். என்னை ஏமாற்றி விட்டாய் என்று பூனை வெறுப்புடன் கூறிற்று. பயப் படாதே என்னை நம்பு’ என்று பதிலளித்து விட்டு முன் போலவே மெதுவாகக் கண்ணியின் கயிறுகளைக் கடித்து விட்டு இரண்டொரு முக்கியமான கயிறுகளை மட்டும் மிச்சம் வைத்திருந்தது. 

கடைசியாக வேடனின் தலை தெரிந்ததும் கீரிக்கும் ஆந்தைக்கும் நடுக்கம் உண்டாகி விட்டது. பூனைக்கு உயிரே போய்விட்டது. துரோகி என்று பூனை எலியைத் திட்டிற்று. அதற்காக எலி கோபம் அடையவில்லை. வேடன் நெருங்கி வந்ததும் ஆந்தை பறந்து போயிற்று. கீரி புதருக்குள் ஓடி விட்டது. பூனைக்கு ஜீவனே இல்லை. இப்பொழுது எலி சுருசுருப்புடன் பாக்கிக் கயிறுகளைக் கடித்துவிட்டு இதோபார். விடுவித்துவிட்டேன் என்று கூறிக்கொண்டே வங்குக்குள் போய் நுழைந்து கொண் டது. விடுதலை அடைந்த பூனை மரத்தின் மேல் பரபரப்புடன் ஏறிற்று. 

வேடன் வருவதற்கு முன்பே பூனையை விடுவித்தி ருந்தால் என்ன விபத்து விளையுமோ என்று எண்ணித் தான் எலி அவ்வளவு மெதுவாக வேலை செய்தது. 

கடைசியில் வேடன் கண்ணியைச் சுருட்டிக் கொண்டு துயரத்துடன் வீட்டை அடைந்தான். அவன் வலையில் எந்தப் பிராணியும் சிக்கவில்லை என்பதைத் தவிர வலையும் அறுந்துவிட்டது. 

வேடன் வீடு திரும்பிய பிறகு பூனை மரத்திலிருந்து இறங்கி வந்து எலியின் வங்கண்டை வந்து எலியுடன் பேச விரும்பிற்று. அதற்கு எலி என்ன சொல்லிற்று தெரியுமா? 

நேற்று நம்மை அபாயம் சூழ்ந்திருந்தது. ஆகை யால் நம்மிடையே நட்பு இருந்தது. இனிமேல் நடவாது இரவு குளிரில் அகப்பட்டுக் கொண்டதால் உடம்பு நன்றாய் இல்லை. வணக்கம் என்று கூறிவிட்டு எலி வங் கின் ஐம்பத்தி ஏழாவது வாசல் பக்கம் போய் விட்டது.

– 1934 முதல் 1968 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை ஆகும்.

– காக்கைகளும் கிளிகளும், முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *