ஆனந்தா
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 4, 2024
பார்வையிட்டோர்: 1,387
(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு ஒரே பெண் சித்திராங்கி என்று பெயர்.
அவள் விளையாடுவதற்காக மான் முயல், சீமைப் பெருச்சாளி, புறா, பச்சைக்கிளி, மைனா முதலிய பலவற்றை அரண்மனையில் வளர்த்து வந்தார்கள். சித்திராங்கிக்கு அவற்றின் மீது ரொம்பப் பிரியம். ஆனால் எல்லாவற்றைக் காட்டிலும் ஒரு பஞ்ச வர்ணக் கிளியின் மேல் தான் உயிர். அந்தக் கிளிக்கு ஆனந்தா என்று பெயர். எப்பொழுதும் அந்தக் கிளியைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருப்பாள். சாப் பிடும் பொழுதுகூட, தனக்கெதிரில் தங்கக் கிண்ணியில் வாழைப்பழத்தை வைத்து கிளியைச் சாப்பிடச் சொல்வாள்.
இப்படியே சில வருஷங்கள் சென்றன. நாளாக ஆக எப்பொழுதுமே அரண்மனையில் இருப்பதென்றால் அவளுக்குப் பிடிக்கவில்லை. வெளியே போவதை அரசன் தடுத்திருந்தான். ஆனந்தாவின் தோழமை கூடக் கொஞ்சம் புளித்தது. என்ன செய்வாள்? ஆகாயத்தில் மேகங்கள் போவதைப் பார்த்து, பார்த்து கண்கள் கலங்கும். ஒரு நாள் தன்னுடைய ஜன்ன லண்டை வந்து நெல்லைப்பொறுக்கித்தின்னும் சிட்டுக் குருவியைப் பார்த்து அவள் “நீ எங்கே இருந்து இங்கு வந்தாய்?” என்று கேட்டாள்.
“அதோ தெரிகிறதே முந்திரித் தோப்பு, அந்தத் தோப்புக்கருகில் குடிசைகள் இருக்கின்றன. ஒரு குடிசையின் உள்ளே உயரத்தில் கூடு கட்டி இருக் கிறேன். நெல் முதலியவைகளைத் தின்று பசியாறி இறகு ஆற உலகெங்கும் சுற்றுவேன். அரண்மனைக்கு வருவேன். எங்கு வேண்டுமானாலும் செல்வேன். எனக்கு கவலை கிடையாது. கடைசியாகத் திரும்பிக் கூட்டுக்குப் போய் விடுவேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டது சிட்டுக்குருவி.
சிட்டுக்குருவியைப் போல் ஆகவேண்டும் என்ற ஆசை அவளுக்கு வலுத்துவிட்டது.
ஆனந்தாவுக்கும் அப்படியேதான். எத்தனை நாட் கள் தான் அரண்மனையோடும், சித்திராங்கியோடும், தங்கக் கிண்ணியோடும் காலத்தைக் கழிப்பது என்று நினைத்து ஏங்கிற்று அந்தக் கிளி.
ஒரு நாள் சித்திராங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் அவளுக்கெதிரிலிருந்த ஆனந்தா திடீரெனக் கிளம்பிப் பறந்து போய்விட்டது. ராஜகுமாரத்திக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. அரண்மனைத் தோட்டத்திலும் அங்குமிங்கும் தேடச் சொன்னாள். கிளியைக் காணோம்.
அரண்மனையை விட்டுக் கிளம்பிய ஆனந்தா ஊரெல்லாம் ஆடி ஓடிப் பறந்து விட்டுப் பிறகு முந்திரி தோப்புக்கு வந்தது. தோப்புக்கருகில் ஒரு குடிசை வாசலில் ஒரு சிறு பெண் உட்கார்ந்து மண்வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பெயர் வள்ளி. அவளுடைய தகப்பன் ஒரு கூலிக்காரன். ஆகாயத்தை எட்டிப் பிடிப்பது போன்ற அரண்மனை யின் கோபுரங்களையும் மணிக் கூண்டையும் பார்க்கும் பொழுதெல்லாம் தன்னை அங்கே வரும்படி அழைப்ப தாக அவளுக்குத் தோன்றும். அங்கே அழைத்துப் போகும்படி தகப்பனைக் கெஞ்சுவாள். “தீபாவளிக்குப் போவோம், பொங்கலுக்குப் போவோம்” என்று சொல்லி அவன் ஏமாற்றுவான்.
மண் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த வள்ளிக்கு எதிரே, ஒரு கோவைப் பழத்தைக் கவ்விக் கொண்டு வந்து ஆனந்தா புல் தரையில் உட்கார்ந்தது. கிளி அழகு கொஞ்சுவதைப் பார்த்ததும் அவளுக்கு ஆசை உண்டாயிற்று.
தன் தாயாரைக் கூப்பிட்டு அதைப் பிடித்துத் தரும்படி சொன்னாள். வள்ளியிடம் கிளியைப் புடித்து கொடுத்தவுடன், அவள் ‘கிளியே! பஞ்சவர்ணக் கிளியே! உனக்கெந்த ஊர்? நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டாள்.
“நான் ராஐகுமாரி சித்திராங்கியின் உப்பரிகையி லிருந்து உலாவிவரப் புறப்பட்டேன்.”
“ராஜகுமாரத்தி எப்படி இருப்பாள்,கிளியே?”
“அவள் அழகாய் ரோஜா போலே இருப்பாள். ரொம்ப நல்லவள். நீ கூட வருகிறாயா? நாமெல்லாம் அங்கே விளையாடலாம்.”
“தீபாவளிக்குப் போவோம், பொங்கலுக்குப் போ வோம் என்று அப்பா ஏமாற்றுகிறார். இப்பொழுதே போவோமா? வந்தால் ராஜகுமாரி என்னுடன் பேசுவாளா?”
வள்ளியை அடுத்த நாள் அரண்மனைக்கு அழைத் துக்கொண்டு போவதாக ஆனந்தா வாக்களித்துவிட்டு, வள்ளி இடது கை விரலில் போட்டிருந்த பாசிமணி மோதிரத்தையும், வலது கை விரலில் போட்டுக் கொண்டிருந்த கொட்டாங்கச்சி மோதிரத்தையும் கேட்டு வாங்கிக் கொண்டு பொழுது சாயும் நேரத்தில் அரண்மனை வந்தடைந்தது.
ஆனந்தாவைத் திரும்பப் பார்த்ததும் சித்திராங் கிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. ஐம்பது தரம் கிளியை முத்தமிட்டாள். கிளி பதில் பேசவில்லை. கண்ணை மட்டும் உருட்டிற்று. ஒரு வேளை கிளிக்குப் பசியா யிருக்கலாம் என்று ஒரு மாம்பழத்தைக் கொண்டு வந்து வைத்தாள் ராஜகுமாரி. கிளி சாப்பிடாமல் கண்களை மூடிக் கொண்டது.
“ஆனந்தா! கொஞ்சம் சாப்பிடு,களை தீர்ந்து போகும்” என்று மன்றாடினாள்.
கிளி தன் வாயிலிருந்த மோதிரங்களைக் கீழே போட்டது.
“இதெல்லாம் ஏது ஆனந்தா?”
“அதோ முந்திரித் தோப்புத் தெரிகிறதே. அங்கே சிட்டுக்குருவி போல விளையாடிக் கொண்டிருக்கிறாள் வள்ளி. அவள் கொடுத்தாள் எனக்கு வேண்டுமென்றால் உனக்குக் கூட வாங்கித் தருகிறேன்.”
“ஆனால் இப்பொழுதே போவோமா?”
“இல்லை, இருட்டி விட்டது. நாளைப் போவோம்” என்று கிளி மாம்பழத்தைக் கடிக்க ஆரம்பித்தது.
மறுநாள் உச்சி வேளை அரண்மனைச் சேவகர்கள் சாப்பிட்ட சிரமத்தில் தூங்கி வழிந்து கொண்டிருந்தார் கள். ராஜகுமாரத்தியும், ஆனந்தாவும் அரண்மனையை விட்டுக் கிளம்பி விட்டார்கள். கிளி முதலிலே வழி காட்டிக்கொண்டு பறந்து போயிற்று அதைப் பின் தொடர்ந்தாள் சித்திராங்கி.
மெதுவாக முந்திரித் தோப்பின் அருகிலுள்ள குடிசைக்கு வந்தார்கள். பனமட்டைகள், சடசட வென்று சப்தம் செய்வதும், தட்டாரப் பூச்சிகளும், தேவடியாப் பூச்சிகளும் வயல்களில் பிறப்பதும், அல்லிக் குளத்தில் பெண்கள் குளிப்பதும், குழந்தைகள் மண்ணில் புரள்வதும் ராஜகுமாரத்திக்கு ரொம்ப வினோதமாகவும் சந்தோ ஷமாகவும் இருந்தன. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததிலேயே பொழுது போய்விட்டது.
அப்பொழுது வள்ளி எங்கிருந்தோ சுள்ளி பொறுக்கி கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண் டிருந்தாள். அவளுடைய கையில் மொந்தன் வாழைப் பழத்தோல்கள் நிறைந்திருந்தன வீட்டிற்கு வந்ததும் வேப்பமர நிழலில் உட்கார்ந்து வாழைப்பழத் தோலை உரித்து தின்ன ஆரம்பித்தாள்.
“இதோ, இவள் தான் வள்ளி!” என்று கிளி ராஜகுமாரிக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு, முந்திரிக் கிளை மீதேறி உட்கார்ந்து சிறகுகளைக் கோதிக் கொண்டது சித்திராங்கி வள்ளியின் கைகளை பிடித்துக் கொண்டு “ஏன் வள்ளி, வாழைப் பழத்தோலை தின்கிறாய்?” என்று கேட்டாள்.
“பழம் யார் கொடுக்கிறார்கள்?” என்றாள் வள்ளி.
“போகட்டும் நீ தலையில் விறகு கொண்டு வந்தாயே உங்கள் வீட்டுச் சமையல்காரன் கொண்டு வரமாட்டானா?”
“என் அம்மாதான் சமையல்காரி. அவள் நெல்லைக் குத்தி அரிசியாக்குவதற்குள் நான் போய் சுள்ளி கொண்டு வருவேன். பிறகு அம்மா சமைக்கும் பொழுது இங்கே உட்கார்ந்து விளையாடுவேன்.”
ராஜகுமாரிக்குத் தன்னையறியாமலேயே ஒரு வேதனை உண்டாயிற்று. தன்மீது இருந்த பட்டுச் சட்டைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு வள்ளியுடன் விளையாட ஆரம்பித்தாள். இப்படியே ரொம்ப நேரமாகி விட்டது.
‘அரண்மனைக்கும் போவோம்’ என்று கிளி கூப் பிட்டும் ராஜகுமாரி கிளம்ப மறுத்து விட்டாள். கிளிக்குப் பயமாகப் போய்விட்டது. நேரே அரண் மனைக்குப் பறந்து சென்றது.
அரண்மனையில் ஒரே குழப்பம் பெண்ணையும், கிளி யையும் காணாமல் தாறுமாறாய் அரசன் வேலையாட்களை வைது கொண்டிருந்தான். பலர் இன்னது செய்வ தென்றியறியாமல் ராஜகுமாரத்தியைத் தேடி அங்கு மிங்கும் அலைந்தனர்.
ஆனந்தாவைப் பார்த்ததும் அரசன் அசைவற்று நின்று “சித்திராங்கி எங்கே?” என்றான். கிளி பதில் பேசவில்லை. மெதுவாக மரத்திற்கு மரம் தத்திப் பறக்க ஆரம்பித்தது. கிளி செய்வது ஆச்சரியமாக இருக்கிறதே என்று அரசனும் மந்திரியும், வேலையாட்களும் அதன் பின்னே சென்றனர். கடைசியாக முந்திரித் தோப்பினருகில், சித்திராங்கிக்கு எதிரில் போய் கிளி உட்கார்ந்தது.
வள்ளி ஓடையில் குளித்துக் கொண்டிருந்தபடியே ராஜகுமாரிக்கு கொட்டாங்கச்சி மோதிரம் செய்யும் விதத்தைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அரச னும் மந்திரியும் ஒரு மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். வள்ளி குளித்து விட்டு கரை ஏறிய பிறகு ராஜகுமாரி ஜலத்தில் இறங்கி விளையாட முயற்சி செய்தாள்.
அரசன் மறை விடத்தைவிட்டு வெளியே வந்தான். கோபித்துக் கொண்டு அரண்மனைக்குக் மகளைக் கிளம்பச் சொன்னான். ”வள்ளி இல்லாமல் அரண் மனைக்கு வரமாட்டேன்!” என்று பிடிவாதம் செய்தாள் சித்திராங்கி.ராஜாவின் மனம் அன்பினால் குழைந்தது. பஞ்சவர்ணக்கிளி முன்னே பறந்து வழிகாட்ட வள்ளி ஒரு பக்கமும் சித்திராங்கி ஒரு பக்கமுமாக அரசன் அரண்மனையை நோக்கி நடந்தான்.
– 1934 முதல் 1968 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை ஆகும்.
– காக்கைகளும் கிளிகளும், முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.