ராஜகுமாரியும் கம்பளிப் பூச்சியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 4, 2024
பார்வையிட்டோர்: 1,316 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராஜகுமாரியின் மாடி அறைக்குக் கொஞ்சம் எட்டி ஒரு ஓதிய மரம் வளர்ந்திருந்தது. நூலேணி வழியே பெண்கள் இறங்குவார்கள் என்று படித்திருக் கிறோமே அந்த மாதிரி கம்பளிப்பூச்சிகள் அதிலிருந்து சரம் சரமாகத் தினம் இறங்கிக் கொண்டே இருந்தன. ராஜகுமாரிக்குக் கம்பளிப்பூச்சி என்ன செய்யும் என்று ஆரம்பத்தில் தெரியாது. அந்த வேடிக்கையைத் தினம் பார்த்துக் கொண்டே இருந்தாள். 

ஒருநாள் வழக்கம் போல் மரத்திலிருந்து நூல் வழி யாகக் கம்பளிப் பூச்சிகள் இறங்கிக் கொண்டிருந்தன. அப்பொழுது பலமாகக் காற்று ஒன்றடித்தது. அதில் ஒரு கம்பளிப் பூச்சி ராஜகுமாரியின் அறைக்குள் போய் விழுந்து விட்டது. அதை அவள் கவனிக்கவில்லை. பூச்சி சுவர் வழியாக ஊர்ந்து போய்க் கொண்டிருந்த பொழுது ராஜகுமாரியின் கை அதன் மேல் பட்டு விட்டது. அவ் வளவு தான் கம்பளிப் பூச்சியின் மயிர் கையில் ஒட்டிக் கொண்டு ஒரே அரிப்பு. கீழே போட்டுக் கையைத் தேய்த்தாள். அரிப்பு அடங்கவில்லை; இன்னும் அதிக மாகப் போய்விட்டது. ஒரே அழுகையோடு கூ கூ என்று கத்தினாள். கடித்த இடமெல்லாம் தடித்துப் போய்விட்டது. வேலைக்காரி உள்ளே ஓடிவந்து ராஜ குமாரியைப் பார்த்தாள். “கம்பளிப்பூச்சி கடிச்சிருக்கு. உள்ளே எப்படி வந்தது?” என்றாள். “எனக்கென்ன தெரியும்?” என்றாள் ராஜகுமாரத்தி. 

“அதோ ஒதிய மரத்திலே அடை வச்சிருக்கிறாப் போல் இருக்கிறது அந்த மரம் இருந்தாலே அப்படித் தான்” என்று சொல்லிவிட்டு, கம்பளிப்பூச்சிக் கடிக்கு ஏதோ மருந்தைத் தடவினாள். பிறகு, அதையெங்கும் பூச்சிக்காகத் தேடினார்கள். அது அகப்படவில்லை. 

அரிப்பு கொஞ்சம் அடங்கின பிறகு, ராஜகுமாரி அரண்மனைக் கோடாலிக்காரனைக் கூப்பிட்டு, அந்த ஓதிய மரத்தையே வெட்டிப்போட்டு, அப்படியே வைக் கோலைப் போட்டுக் கொளுத்திவிடு என்று உத்திரவிட் டாள். 

கொஞ்ச நேரம் கழிந்த பிறகு ராஜகுமாரி மாடி ஜன் னல் வழியாகக் குனிந்து கீழே பார்த்தாள். ஒதிய மரம் இருந்த இடமே தெரியவில்லை.போச்சுடா சனியன் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு கம்பளிப்பூச்சி சுவரின் வழியாகக் கீழே போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தாள். அதுதான் தன்னைக் கடித்த பூச்சி என்று நினைத்துக் கொண்டு, கீழே இறங்கி வந்து பார்த்தாள். அதறகுள் கம்பளிப்பூச்சியைக் காண வில்லை. 

பூச்சி மெதுவாக நகர்ந்து அடுத்த பம்பளிமாஸ் மரத்து நுனிக்கிளை கிட்டப் போய் விட்டது. நல்ல வேளையாக அங்கே தாய்ப் பூச்சி ஒரு இடுக்கில் படுத்துக் கொண்டு கிடந்தது. 

“அம்மா அம்மா! நம்முடைய வீட்டை இடிச்சு நெருப்பு வச்சுக்கொளுத்தி விட்டாள் ராஜகுமாரி. இனி மேல் நாம், எல்லாம் எங்கே தூங்குகிறது?” என்று கேட்டது. 

“நீ அவளைப் போய்ச் சீண்டியிருப்பாய். போகட் டும். இனிமேல் நாமெல்லாம் விரதம் இருக்க வேண்டி யது தான். நான் தூங்குவதற்கு அறைகட்டிக் கொள்ளப் போகிறேன். நீயும் கட்டிக்கொள். பட்டினியாய்க் கிட. மூணுமாசம் வரையில். நானும் இருக்கிறேன். அப்புறம் பாரு! உன்னையும் என்னையும் தேடிக்கொண்டு இந்த ராஜகுமாரத்தி வருகிறாளா இல்லையா, பாரு!” என்றது. 

இந்தப் பேச்செல்லாம், கீழே நின்று கொண்டிருந்த ராஜகுமாரியின் காதில் விழுந்தது. “இங்கே எங்கேயோ கம்பளிப்பூச்சி இன்னும் இருக்கிறாப்போல இருக்கு” என்று தன் வேலையாட்களைக் கூப்பிட்டுத் தேடச்சொன் னாள். வேலையாட்கள் வந்து தேடிப் பார்த்தார்கள். பம்பிளிமாஸ் மரத்து நுனியில் இரண்டு கம்பளிப் பூச்சி இருந்தது வெளிப்பட்டது. 

“இந்தப் பம்பளிமாஸ் மரத்தை வெட்டி விடட்டுமா, கொளுத்தட்டுமா?” என்று அவர்கள் கேட்டார்கள். 

“மரத்தை வெட்டப்படாது. நானாகவே இந்த மரத்துக்கு ஜலம் விட்டிருக்கேன். பம்பளிமாஸ் இதிலே காய்த்து, நான் பார்க்க வேணும். அதைத் தொடப்படாது” என்று சொன்னாள் ராஜகுமாரி. 

வேலையாட்கள் மரத்தை வெட்டாமல் கம்பளிப் பூச்சியை விரட்ட பல யுக்திகள் செய்தும் பலிக்காமல் போயிற்று. கடைசியாக ராஜகுமாரியும் வேலையாட்களும் அரண்மனைக்குள்ளே போய் விட்டார்கள். அதற் குப் பிறகு இரண்டு கம்பளிப் பூச்சிகளும் இரண்டு கூடு கட்டிக் கொண்டு நீண்ட தூக்கம் போடத் துவக்கின. 

மறுநாள் காலையில் ராஜகுமாரி தோட்டத்துக்கு வந்து கம்பளிப் பூச்சி இருந்த இடுக்கைப் பார்த்தாள் பூச்சியைக் காணோம். அதற்குப் பதில் சின்னதாய், பச்சையாய், பருத்திக் கொட்டை அளவிலே இரண்டு கூடு அங்கு ஒட்டிக் கொண்டிருந்தது அப்பொழுது தாய்ப்பூச்சி சொன்னது ஞாபத்திற்கு வந்தது. “இன் னும் மூணு மாசம் கழிச்சு அவளே நம்மைத் தேடிக் கொண்டு வருகிறாளா இல்லையா,பாரு ” என்ற தல்லவா? மூணுமாதம் கழித்து என்னதான் ஆகிறது பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டாள். 

அது முதல் தினம் ஒரு தடவை அந்த இடத்தை வந்து பார்த்து விட்டுத்தான் போவாள். இப்படியே மூணு மாசம் கழிந்தது. 

ஒரு நாள் நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ராஜகுமாரத்தி வந்து கூட்டைப் பார்த்தாள்.நீளமாய் ஆகாசத்தைக் கிள்ளி வைத்தது போல ஒரு சின்னப் பட்டு பூச்சியும் சிவப்பாய் நெருப்பைக் கத்திரித்து வைத்தது போல் ஒரு சின்ன பட்டுப் பூச்சியும் உட்கார்ந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்ததும் அவளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. 

“அடாடா!” என்றாள். 

அந்த ஓசையைக் கேட்டு இரண்டு பூச்சிகளும் மரத்தை விட்டுக் கிளம்பி விட்டன. தோட்டத்தைச் சுற்றிப் பறந்தன. ராஜகுமாரி அவற்றைப் பிடிக்க ஓடினாள், அகப்பட்டால் தானே! “எங்களைப் பிடிக்க முடியுமா? கம்பளிப் பூச்சியாய் இருந்து கடிக்கிற பொழுது பிடிக்கலாம். இப்பொழுது சந்தோஷத்துக்கு இறகு முளைச்சால்போலச் சுத்துகிறபொழுது பிடிக்க முடியுமா?” என்றன பட்டுப் பூச்சிகள். 

அன்று முதல் ராஜா தோட்டத்து வேலிக் காலிலே ஓதிய மரமும், பூவரசமரமும் தான் வைத்துப் பயிர் செய்யவேண்டுமென்று ராஜகுமாரத்தி ராஜா விடம் சொல்லி உத்தரவு போடச் சொல்லிவிட்டாள். அப்பொழுதுதானே கொள்ளை கொள்ளையாகக் கம்பளிப் பூச்சி வரும். கம்பளிப்பூச்சி நிறைந்திருந்தால்தானே பட்டுப்பூச்சி கூட்டமாய், கப்பல் மாதிரி தோட்டத்திலே மிதக்கும்? 

– 1934 முதல் 1968 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை ஆகும்.

– காக்கைகளும் கிளிகளும், முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *