மறைந்து போன உருக்கள்
கதையாசிரியர்: திசேரா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2026
பார்வையிட்டோர்: 343
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாழ்க்கை
யுகங்கள் தோறும் பிரளயங்கள் தோன்றி உலகை மூழ்கடித்துக் கொண்டிருக்க, இடியும் மின்னலும் புதிய பிறப்புகளையும், சமூகங்களைக் காண மகாத்மாக்களையும், மகாகவிகளையும் தோற்றுவிக்கலாம் என்ற நம்பிக்கை நிலவி வந்து கொண்டே இருந்தது. நம்பிக்கைகள் வாழ்வின் குரூரத்தனங்களாலும், அவமானங்களாலும் கேள்விக்குறி யாக்கப்பட்டாலும், ஆத்மாவினுள் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு அணுவிலேனும் எதிர்பார்ப்பு மிச்சமிருந்து கொண்டே இருந்தது.
நம்பிக்கை
வானம் இடி கொண்டது. மின்னல் பக்கவேரொன்று போல் பளிச்சிட்டது. மேகங்கள் ஏதுமிராமல் வானம் நீலமாய் மேற்பரப்பெங்கும் விரிந்து கிடந்தாலும் இடி மின்னிக் கொண்டு இருந்தது. அந்தச் சத்தமும் அதிர்வும் 23.5° சரிவில் இருந்து உலகை இன்னமும் சாய்த்து விடுமாப் போலவோ, சரிவைக் குறைத்து நிமிர்த்தி விடுவது போலவோ உலுக்கியது. கண்ணைக் குருடாக்கும் மின்னல் இரு கிளைகளாய் நீண்டு பூமியைத் தாக்கி தீக்குழம்பாய், இரு குவியல்களாய் உருவாகியது. வெம்மையாய் சூடு கக்கி அருகிலிருந்தவற்றைக் கருக்கி, காற்றைக் கலக்கி நடுங்கச் செய்து சிறிது சிறிதாய் ஒளியிழந்து கொண்டிருந்தது. அகோரம் குறைந்து வீசிய காற்று குழம்புக் குவியல்களைக் குளிரச் செய்தது. இடியதிர்வில் புவி நடுக்கத்தில் குவியல்கள் இரண்டினதும் அடிப்பரப்புக் குறைந்து மேல் நோக்கி உயர்ந்தது. நீண்டு நிமிர்ந்தும், நீண்டது உச்சியின் பாரம் தாங்கொணாமல் வளைந்ததுமாக இரு உருவங்கள் தோன்றின. பாகுநிலைக் குழம்புகள் திண்மங்களாய் உறைந்தன. வெளிப்புறம் குளிர்ந்து காய்ந்ததாக இருந்தாலும், உட்புறக் குழம்பு உறைந்து போக எடுக்கும் ஆண்டுகளைப் பற்றி கணக்கிட்டுக் கூறமுடியாது. குளிர்காலம் முடிந்து அனல்காற்று வீசினாலோ, கோபத்தில் சூடாகினாலோ அதன் உறைதல் நிகழாமலேயே போகக் கூடியதாகவும் இருக்கலாம். வெம்மையில் கனன்று குழம்பாகவே போய் விடக்கூடிய சாத்தியக் கூறுகளுமிருந்தன.

அவ்வுருவங்கள் உருக்கொண்டிருக்கும் இடம் சூனியமாயிருந்தது. இவை பற்றி விஞ்ஞானிகளோ, மக்களோ கூட அறிந்து இருக்கவில்லை. இது நடு இரவில் நிகழ்ந்ததனால் வசதியாயிருந்தது. இல்லாவிடில் கூட்ட நெரிசலும் அவர்களின் சுவாசச் சூடுமே உருக்கொள்ளவிடாமற் பண்ணியிருக்கும். விஞ்ஞானிகள் இருந்திருந்தால் உருக்கொண்டவுடன் அவ்வுருவங்களை ஆய்வு கூடங்களில் கிடத்தி, கத்தியால் கீறி, “வெப்” தளங்களில் வெளியிட்டிருப்பார்கள். (சில வேளைகளில் நோபல் பரிசுகளும் கூடக் கிடைத்திருக்கலாம்.) உலகின் மீதுள்ள அநியாயங்களை அழித்துப்போடவென இறைவனின் கோபக் கனல்களில் இருந்து வந்து விழுந்தவை. இவ்வுருவங்கள் அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, ஈசத்துவம், வசித்துவம், பிராகாமியம் என்பவை கைவரப் பெற்றவையாக இருக்குமெனவும் கருத்துக்கள் வந்திருக்கும்.
சுழல் காற்று வீசத் தொடங்கியது. எங்கேயோ ஆரம்பமாகிய காற்றுவட்டம் ஆரையைக் குறைத்து சிறிய வட்டமாகி இரு உருவங்களையும் மையமாகக் கொண்டு சுழன்றது. இரு வட்டச் சுழலும் ஒன்றையொன்று இடைவெட்டா வண்ணம் தூரப் பிரதேசங்களிலேயே சுழன்றன. சுழலின் வேகம் பற்றிக் கூற முடியா வண்ணம் கண் இமைப்பதற்குள் நூற்றுக் கணக்கான சுற்றுக்களைச் சுற்றியிருக்க வேண்டும். சிறிது நேரம் சுழன்றபின் மேலெழுந்து ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தொலைவில் ஒன்றாகி வான்வெளியுள் மறைந்தது.
இரு உருவங்களும் ஆடையணிந்து நின்றன. ஒன்று வெள்ளை உடையுடன், கறுப்புக் கோட் அணிந்து, தலைப்பாகையுடன் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்க. மற்றையது வெள்ளைச் சேலையுடன் கூனல் விழுந்து குனிந்து நின்றது. கையில் ஊன்றுகோலொன்றும் கூட இருந்தது. இவ்விரு உருவங்களும் முன்னமே உலகில் வாழ்ந்தவர்களின் தோற்றத்தைக் கொண்டிருந்தது. யாராலும் மறக்க முடியாத மூன்றாம் மரணம் ஏற்படாத உருவங்களாகவே பட்டது. பாடல்களால் பாரைச் சமன் செய்ய முனைந்த தோற்றங்கள் ஒரே தேசமொன்றின் வடக்கெல்லையிலும், மத்தியின் மேலெல்லையிலும் தோற்றம் பெற்றவைகள் சூழலைப் புரிய வேண்டி நகர ஆரம்பித்தன. இரண்டும் வேறுபட்ட சூழலில் இருந்தாலும் “அடக்கப்பட்டிருந்தவை” என்பதில் ஒற்றுமையாயிருந்தது. உருக்கள் நடக்க ஆரம்பித்திருந்த வேளை விடியல் ஆரம்பித்தது. சூரியன் மெல்லென எழுந்து எல்லோரையும் உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது.
அவமானம் – 1
பிரட்டுக் கலைந்து மக்கள் கதையளந்து கொண்டு போனார்கள். “கங்காணி போய்க் கொண்டிருக்கிறார்” – “பனியிலிருந்து தலையைத் தலைப்பாகை பாதுகாக்கும்” இவரது கோலம் எல்லோருக்கும் கங்காணியைத்தான் ஞாபகமூட்டியது. இதற்கெல்லாம் அவரது கறுத்த நிறத்தையுடைய கோட் காரணமாயிருக்க வேண்டும். வீதியோரத்தில் காலைக் கடன் முடிக்கக் குந்தி இருந்த சிறுவன் கண்டுவிட்டு ஓடினான். “அம்மோவ் கங்காணிமோவ்” திரும்பிக் கூடப்பார்க்காமல் வீட்டினுள் சென்று மறைந்தான். அவர்களுக்கு கங்காணி உருவங்கள் பயமுறுத்தக் கூடியவை. கீழாடைகளை நனைத்து விடுவார்கள். கையிலிருக்கும் கம்பும், கத்தியும் கூட காரணமாய் அமைந்திருக்கக் கூடியவைதான். ஆனாலும் இவரிடம் ஏதுமில்லாமல் இருப்பினும் முன்னமே தொற்றி ஊறியிருந்த பயமே அவ்வகை உருக்களைக் கோரமாய்க் காட்டியது. அந்த உருவம் ‘பாரதி” என்பதைக் கூட மறந்து அவனைப் போக விட்டார்கள். வாழும் பொழுதுகளில் யாரும் புரியப்படுவதில்லை என்பது நிஜமாய்ப் போயிருக்கக் கூடியது.
உச்சி வெயிலாகியும் நடந்தான். இயற்கையை சுவாசித்துக் கெண்டே அற்ப உலகில் தான் கண்டு இலயித்த உலகு நிஜத்துள் இறங்கியிருப்பதாய் மகிழ்ந்து கொண்டே நடந்தான். பார்க்கும்போது புறவயப்பட்ட பார்வைக்கு எல்லாம் நன்றாய்த்தான் இருக்கும் என்ற நியதியை மறந்து இயற்கைக்குள் மூழ்கி நடந்தான். புரட்சி விதையினால் உலகு அழகாய் வளர்ந்திருக்கிறதெனவும், யாவரும் சமமாய் இருக்கிறார்கள் எனவும் எண்ணிப் புன்னகைத்தான். “குறிஞ்சி என்பதே இயற்கை கொஞ்சுவதுதான் இயற்கை மயக்கத்திலிருந்து மீளவொண்ணாமல் கிடந்தான். வெயில் தகிப்பும், நடைக்களைப்பும் நாவை உலரச் செய்திருந்ததால் தாகமெடுத்தது. தீர்க்க முடியாத தாகத்தை தீர்த்து விட்டதாய் உணர்ந்தான். இது தொண்டை காய்தலுக்கும் நாவரட்சிக்குமான தாகம். கருங்கல் இடவுகளுள் மண் நிரப்பி இருந்த படிகளையும், பாசிபடிந்த ஓரங்கள் சிதைந்து கிடந்த கானையும் தாண்டி நீண்டு கிடந்த லயத்து வீடொன்றின் கதவைத் தட்டினான். உள்ளிருந்து வந்தவன் ஆண், “என்ன”, “தாகமாய் இருக்கிறது தொண்டை வறண்டுவிட்டது.” என்றான் பாரதி. அவன் கீழிருந்து தலைப்பாகை வரை உற்று நோக்கினான். அவன் களைத்துத்தானிருக்கின்றான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். கண்களில் என்றும் பார்த்திராத பிரகாசமான ஒளி வீசுவதைக் கண்டான்.
“இதற்கு முன் தங்களைக் கண்டதில்லை”
“எனைத் தெரியவில்லை” பாரதி கேட்கவும்,
“ஞாபகமில்லை, அப்படி இருத்திக் கொள்ளக் கூடியதாக அறிமுகம் ஏற்படவில்லை. என நினைக்கிறேன்” முறுக்கு மீசையையும், அவன் பின்புறம் யாரும் நிற்கிறார்களா எனவும் பார்த்து விட்டு. ‘எந்தத் தோட்டம்” என்றான்.
“குறித்த பிரதேசத்துள் அடங்கிக் கொள்பவனல்ல, உலகமே வீடு, அனைவருக்கும் உரியவன் மகாகவி மரணமில்லாதவன், – பாரதி”
“பாரதி” யோசித்தவனாய் உள்நுழைந்து கொண்டான். ஆண்களும் வீட்டில் வேலை செய்கிறார்கள். ‘ஆணுக்கு பெண் சமன்” சிரித்தவன், மண் பயனுற வேண்டும். வானகமிங்கு தென்பட வேண்டும்., வாய்க்குள் முனகினான். உள் நுழைந்தவன் குசுகுசுத்த சத்தமும், எதையோ இழுத்து உண்டாக்கிய சத்தமும் கலந்து வந்தது. சில்வர் டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்தான். அது சுத்தமாய் கழுவப்பட்டதற்கு ஆதாரமாய் பள பளத்தது.
“இனி தங்களது வறட்சி நீங்கிவிடும் என நினைக்கிறேன்” “நன்றி” குடித்து விட்டுக் கானைத் தாண்டியவன் கானினுள் முன்னரை விட அதிக அழுக்குடன் நீர் சென்று கொண்டிருப்பதைப் புரிந்துக் கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. அழுக்குச்சட்டை, கிழிந்த சாரனுடன் நின்றவன் அழுக்கைச்சுரண்டி நீருடன் அனுப்பிக் கொண்டிருந்தான். அவன் முன்னமே பாரதிக்கு அறிமுகமாகி இராவிட்டாலும் அவனிடம் கொண்ட ஈர்ப்பின் காரணமாக அவனது தோளைத் தட்டியதும் அவன் அதிர்ந்துபோய் இரண்டடி பின் சென்று நின்று ‘எனைத் தொட்டதால் பயந்துவிட்டேன். தொட்டுப் பேசுபவர்கள் குறைவு, அதுவும் இம்மாதிரியான வேலை செய்யும் போது அறவே இருக்கமாட்டார்கள்.”
“தொடுவதால் நீ தேய்ந்து விடுவாயா” அவன் முகத்தைப் பார்க்கவும் அவன் இடம் வலமாய்த் தலையை ஆட்டினான். “அப்படியானால் நான்” ஏதோ பிழையை உணர்ந்தவனாய் பதற்றத்துடன், “எங்கள் பிறப்பின் – தொழிலின் பொருட்டு தாழ்ந்தவர்களாய் ஒதுக்கப்பட்டவர்கள்.” இதைக் கேட்டதும் பாரதிக்குக் கோபம் வந்தது. “ஏன் கூனுகின்றீர்கள். உங்களைத் திருத்த முடியாதா? மானிடனில் இழிந்தவனுமில்லை” உரத்து “உயர்ந்தவனுமில்லை” அவன் கைகளைக் கட்டிக் குறுகி நின்றான்.
‘இப்படி நிற்பது தவறு நீயும் எல்லோருக்கும் சமமானவன்” பாரதி சொன்னதும் தன்னுள் இருந்தவற்றைக் கதைக்கலாம் என்ற நம்பிக்கை வந்திருக்க வேண்டும். ‘தாங்கள் அதைச் சொல்லலாம் சொல்வதால் பாரதூரமான பிரச்சினை வந்துவிடுமென நினைக்கவில்லை. நாங்கள் சொல்வதனால் யோசிக்க வேண்டியிருக்கும் எத்தனை காலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றோம்.”
‘நீங்கள் தொட்டதும் மயிர்கள் சிலிர்த்துக் கொண்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இப்படி யாரும் தொடுவதில்லை. நீங்கள் சொன்னதைப்போல அவர்கள் சிந்தித்திருக்கலாம். கதைக்க அழகாய் இருந்தாலும் நடைமுறைக்கு… அவன் இழுத்துக் கொண்டு முடிக்க முன்னமே பாரதி கத்தினான். ‘நடைமுறைப்படுத்த வேண்டும். வண்ணங்களில் வேற்றுமை இருக்கலாம். ஆட்சேபனையில்லை, மானிடரில் இல்லை. உங்கள் கைகள் வலிமையானவை என்பது தெரியாது.” எதையோ நினைத்துத்தான் கதைத்தான். என்பதும் அது அவனுக்கும் புரிந்திருக்க வேண்டும். தலையைச் சொறிந்து கொண்டே கும்பிட்டு பழகி விட்டதாய் கூறினான். மாற வேண்டும் குட்டக்குட்ட குனியக் கூடாது. விடியலைத் தேடி நகருமாறு கூறிவிட்டு, வேலிச்சந்தினுள் இவர்களின் உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டு நின்ற வெள்ளை உருவைக் கவனிக்காமல் கோபமாய் நடந்தான். இது சாதாரணமாய் நடப்பதுதான். கதைத்துக் கொண்டிருக்கும் போது மூன்றாவது மனிதனின் இரு காதுகளும் நீண்டிருப்பது இயல்புதான். இதுவேதான் தகவல்கள் காற்றைவிட வேகங்கொள்ளக் காரணமாயிருந்தது. சற்றுங் குறையாத வெம்மை அவன் மூச்சுக்காற்றில் வீசியது. கண்ணீர் குடித்த வீட்டு ஆணைக் கொண்டு வந்தான். பெண் வேலைக்கு போயிருக்கிறாள்.
இந்த உலகில் வர்க்க சமத்துவம் இல்லாமற் போனாலும் ஆண் – பெண் நிகராக வாழ்வதாய்ச் சந்தோசித்தான். அதில்தான் கொஞ்சம் குளிர்ந்தான். இது நிகழ்ந்திரா விட்டால் கோபத்தினால் அவன் முழுவதுமாய் கரைந்து போயிருக்கலாம். உட்பகுதியில் கனன்று கொதித்த குழம்பு அசையாமல் பாகுத்தன்மையில் நின்றது. படிகளை எண்ணாமல், எண்ணிக்கொள்ள பெறுமையில்லாமல் ஏறினான். அவன் நினைத்ததெதுவும் நடக்கவில்லை. எல்லாம் மாறாய்த்தான் நடந்தது. சிந்தனைக்குள் மூழ்கி நிற்கும் இடத்தை மறந்து நின்றவனை அந்த நிகழ்வுதான் அங்கு கொண்டு வந்தது. ‘அரும்பக்கிள்ள வேண்டாம்” மலையைவிட்டுத் துரத்தி விடுவதாகவும். சில அசிங்கமான வார்த்தைகளையும் சேர்த்து திட்டினான். மலையில் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தவர்களை பார்த்து கறுத்தக் கோட்டும். அரைக்கால்சட்டையும் அணிந்திருந்தவன் தான் சத்தமாய் திட்டினான். அவன் கங்காணியென அழைக்கப்பட்டவனென இவனுக்கும் தெரியாதிருக்க வேண்டும். தெரிந்திருக்க நியாயமும் இல்லை. இப்பேச்சுக்குரியவர்களும் ஏனையவர்களும் தலையில் துணிகளை மடித்து கொங்காணி போட்டிருந்தார்கள். அவர்கள் பின்புறம் மாட்டியிருந்த கூடையின் பட்டி தலையை அழுத்தி வடுவையோ, காயத்தையோ உண்டுபண்ணி விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குத் தெரியாமல் இரு தோள்களில் கால்களை வைத்துக் கொண்டோ, தலையில் உட்கார்ந்தோ, நின்ற வண்ணமோ உள்ள உருவங்கள் சிலரது பார்வைக்கு மட்டுமே புலப்பட்டது. இதைத் தடுக்கவென எதுவிதத் தடுப்புகளும் இல்லாததிலிருந்து இது பற்றியதான புரிதலோ, அருட்டலோ அவர்களிடம் இருக்கவில்லையெனத் தோன்றியது.
கறுப்புக் கோட் அணிந்திருந்த கங்காணி இன்னமும் நிறையத் திட்டினான். வெற்றிலைக் குதம்பலைத் துப்பி விட்டும் திட்டினான். அவன் வெளியிட்ட வார்த்தைகள் பாரதியின் செவியினுள் நுழைந்து அவனுள் இருந்த குழம்பைக் கொதிக்கப் பண்ணிக் கண்ணால் ஆவி பறக்கச் செய்தாலும் வேலை செய்பவர்கள் தலையைக் குனிந்து தங்களுள் சிரித்துக் கொண்டு வேலையில் கவனமாய் இருந்தார்கள். அவர்களுக்கு பழசுபட்ட வார்த்தைகளாய் இருந்திருக்க வேண்டும். அவன் பைத்தியத்தைப்போல சிறு கற்களை உதைப்பதும் நிமிர்ந்து கை நீட்டிக் காட்டுவதுமாய்த் திட்டிக் கொண்டே மேலும் கீழும் நடந்தான். பாரதியுள் கொதித்துக் கொண்டிருந்த தீக்குழம்பு தொகுதிப் பெருநாடி பொதுச் சிரசு நாடி மூளை நாடிகளென ஓடி மூளைக்குள் பரவி இருக்க வேண்டும். எதுவும் செய்யத் தோன்றாமல் வேகமாய் இறங்கி நடந்தான். ஒவ்வொரு படியெனத் தாண்டாமல் சில படிகளை விட்டு விட்டு விரைவாய் கொதித்து இறங்கினான். அவனைப் பார்க்கும்போது அவசரத்துக்கு ஓடிக் கொண்டிருப்பவன் போல பட்டது. மக்கள் அஞ்சியஞ்சிச் சாவதாகவும், இவர்கள் அஞ்சாத பொருள் உலகில் இல்லையெனவும், மூடர்களாய் குனிந்து, கைகட்டி நிற்பது பற்றிப் பொருமினான். காய்ந்து வெறியேறிய கண்களின் பார்வைகள் சுட்டெரித்து, விடுவிக்கப்பட வேண்டிய கட்டுக்கள் அதிகம் இருப்பதை உணர்ந்தான்.
வீறாய் கோயிலின் படிகளில் ஏறினான். கோயில் பூட்டித்தான் இருந்தது. ஆண், பெண், அலிக்கற்களை அறிந்தோ, சிற்ப சாத்திர முறைப்படி தேர்ந்தோ. புவியீர்ப்பின் மையத்தளத்தை இனங்கண்டோ. ஆகமமுறைப்படியாக அமைக்கப்படாத ஆலயம் (கிராமிய வழிப்பாட்டுடன் இருந்த மாரியம்மனுக்கு வைதீகநெறி சார்ந்து அமைக்கப்பட்ட ஆலயமாக இருக்க வேண்டும்) சென்ற வருடத் திருவிழாவிற்கென அமைக்கப்பட்ட பந்தலின் மேல் இடப்பட்டிருந்த யூகலிப்பிரஸ் இலைகள் காய்ந்து சருகாகி விழக் காத்திருந்தன. தலைப்பாகையை, சரி செய்து தலைக்குள் அழுத்தினான். அது விழுந்து விடுமென்ற அச்சத்தை விட உறுதியாய் இருக்க வேண்டுமென எண்ணியிருக்க வேண்டும். கோபப்பொறி பறக்கக் கத்தினான்.
“உங்களைப் போன்ற பயந்தான் கொள்ளிகளை நான் எங்கும் கண்டதில்லை, காண வேண்டிய கட்டாயமோ கூட இருந்திருக்க முடியாது, அதற்கான ஞாபகங்கள் கூட என்னிடமில்லை, கைகளைக் கட்டியும், வாய்களைப் பொத்திக் கொண்டும் இருக்க வேண்டிய நிலை உங்கள் எல்லோருக்கும் இல்லையெனத் தோன்றுகின்றது.
அது நியாயமானதாகக் கூடப்படவில்லை. இன்னமும் அடங்கிக் கிடப்பதற்கான வழியாகவே அது இருக்கப் போகின்றது. இவற்றை வைத்துக் கொண்டு பயந்தவர்கள் என்றோ, புரியாதவர்கள் என்றோதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. இதுவே தொடருமானால் உங்கள் இரத்தங்களை உறிஞ்சிக் குடிக்கக் கூட யாரும் பயப்படப் போவதில்லை.”
ஆத்திரத்தில் எழுந்து உருண்டை தொண்டைக் குழிக்குள் அடைக்க, உதடுகளும் நாவும் காய்ந்து போனது. கண்கள் அகல விரிந்து கொள்ள எழுந்து நடந்தான். இவர்களை நினைத்துக்கொள்ள நெஞ்சு பொறுக்கவில்லை என்றும் சொன்னான்.
வீதி அவனுக்காய்ப் பிரிந்து நின்றது. எங்கு? எதற்கு? ஏன்? என்ற எதுவிதக் கேள்விகளையும் எழுப்பிக் கொள்ளாமல் தன் பாட்டில் நடந்தான். அவனால் விடைகான முடியாத ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்து நிலைக்குத்தாய் நின்றன. உடல் புவியீர்ப்புடன் சிக்குண்டு பூமியுடன் தொடர்பு கொண்டு நடக்க, எண்ணங்கள் தாண்டி சூரியனைக் கவ்விப் பிடிக்கவெனவோ, சுட்டெரிக்கவெனவோ பறந்தது.
“பாரதி” ஒரு குரல் அவனது எண்ணங்களை புவிக்கிழுத்து உடலுடன் இணைத்தது. குவளையின் ஞாபகத்துடன் திரும்பினான். அழைத்த குரலுக்கும் பாரதிக்குமிடையில் ஆங்காங்கே மயிர்களை இழந்து காயம்பட்டிருந்த நாய் குறுக்கோடியது. இருவரது பார்வையும் அதில் லயித்துத்தான், எதிரெதிராய்ச் சந்தித்தன, தங்களைக் கண்டதிலும், எங்களுக்காய்ப் பேசவெனவோ, எங்கள் நிலைமையைக் கண்டு மனம் வருந்திக் கொள்ளவெனவோ ஒரு ஜீவன் உள்ளதை நினைத்துப் பெருமை கொள்வதுடன் சந்தோசப்படுவதாகவும் சொன்னான்.
அவனது வசனங்களில் அது தென்பட்டதாக இல்லை. மனவயப்பட்டதாக இருந்திருக்கலாம். பாரதியைக் கேட்டிருப்பவனாக்கி தொடர்ந்து கொண்டே போனான். தேங்காய், மாசி தேடிவந்த காலம் முதலாய் நிமிர்ந்து நடக்கவில்லையா. விடப்படவில்லையா என்பது பற்றி சரியான தெளிவில்லை. ஆனாலும், மழைக்குள் ஊர்ந்து, நிரைகளுள் நுழைந்து, சரிவில் விழுந்து. சகதியுள் புரண்டு. வாழ்க்கையுள் ஏற முனைந்து வழுக்கி விழுந்தும், கீழிருந்து வெள்ளையாய் நின்ற உருவங்கள் இழுத்து விடுவதும், சாரனை முழங்கால் வரைத்தூக்கி, அடிபட்டோ, உராய்வுபட்டோ சரியான வடிவில்லாமல் தோலின் நிறத்தை விட வெளிறியிருந்த அடையாளத்தைக் காட்டினான். – அட்டைகள் ஊர்ந்து இரத்தங்குடித்துப் பெருப்பதும், தொந்தி விழுந்த உருவங்களின் நடமாட்டம், கவிதை சொல்லி அங்கங்களை இழந்த உருக்கள் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாரதியின் நரம்புகள் புடைத்து. ‘கண்ணுள் இரத்தம் வலைப்பின்னலானது. மயிர்க்கணுக்கள் புடைக்க மயிர்கள் சிலிர்க்க எழுந்தான். சற்றுக் கூனிய நிலையிலிருந்து மார்பை நிமிர்த்திக் கண்களைப் பெரிதாக்கி புருவங்களை உயர்த்தி, வலதுகரத்தை உயர்த்தினான்.
‘ஏழையென்றும், அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில். இழிவு கொண்ட மனிதரென்பது இவ்வுலகில் இல்லை.” என முழங்கினான். இன்னமும் சிந்தித்துக் கொண்டிருக்க ஒன்றுமில்லையென்றும், அதற்கு அவசியமில்லை, கை விலங்குகளை உடைத்தெறிவதற்கு புறப்படுவது தான் மீதியாய் இருக்கின்றது. இதிலிருந்து பின் வாங்குவதென்பது கால தாமதத்தை ஏற்படுத்துவதுடன் எதிரிகளுக்கு பாதுகாப்பைத் தேட அவகாசத்தை வழங்கிவிடும்.” அவன் கதைத்துக் கொண்டிருக்கும் போதே சுற்றிக் கூட்டமாகியது. நின்றவர்களில் அதிகம் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவனுள் குழம்பு பொங்கிக் கொண்டிருக்க வேண்டும். வார்த்தைகள் பொங்கி வந்தன. கவிதைகளும் சொன்னான்.
அவ்வாறாக கவிதையொன்று சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான், சக்கரங்கள் பூட்டி நகர்ந்து வந்த இயந்திரம் உறுமிக் கொண்டு நின்றது. உள்ளிருந்து நீளக்குழாய்களுடன் இறங்கியவர்களில் பலர் அவர்கள் அனைவரையும் சுற்றிக் கொண்டபின் இருவர் பின்பு இறங்கிவந்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு இடது தோளிலிருந்து குறுக்காய் பட்டி போடப்பட்டிருந்தது. கறுப்பு நிறமான அது இடுப்பில் கட்டும் பெல்ட்டை போலவே இருந்தது. ‘இங்கு தமிழ்க் கதைக்கும் ஒருவன் வந்திருப்பதாய் தெரியும். உங்கள் மொழியை விட அவனுடையது அர்த்தமாயும், செறிவுடையதாகவும், கடினம் கூடியதாகக் கூட இருந்திருக்கின்றது.” கத்திக் கொண்டிருந்த அதிகாரியின் பின் வெள்ளை முழுக்கை சட்டையுடன் ஒருவன் நின்றிருப்பதை இப்போதுதான் பலர் கவனித்தார்கள். சாரனும் கூட அதே நிறத்தில் இருந்ததனால் இவனை இனங்காண உதவியாய்க் கூட இருந்தது. “அவன்தான்.” பாரதியை நோக்கிச் சுட்டினான். பின் எதுவித வார்த்தைகளும் வரவில்லை இரும்புக் குழாயின் பிற்பகுதியுடன் இணைக்கப்பட்டிருந்த மரப்புடி கூட்டத்தை விலக்கியது. இதனாலேயே பலர் முகங்களில்சிவப்புச் சிதறல் தெரிந்தது. பாரதிக்குக் கூட வலது கன்னத்தில் சிவப்பாய் மின்னல் போன்று கிளைவிட்ட வெடிப்புத் தெரிந்தது. குழப்பநிலைக்கேயான குரலையோ, வார்த்தைகளையோ பிரித்தறிய முடியாத சத்தம் சூழ்ந்து கொண்டிருந்தது.
ஒருவன் கழுத்தைப் பிடித்து முன்னோக்கிச் சரிந்தான். தடுமாறி இடறி நின்ற பாரதியின் தலைப்பாகை வாகனத்தின் கீழ் உருண்டுபோனது. யாராவது அதை எடுத்துக் கொள்வார்கள். “ஏன்”? மரப்புடி முள்ளந்தண்டை வயிற்றுப்புறம் நோக்கித் தள்ளியது. தாங்கமுடியாமல் விழுந்தவனை இழுத்து இயந்திரப் பெட்டியினுள் அள்ளிக் கொண்டு வந்து போட்டார்கள். (கிட்டத்தட்ட நாய்கள் பிடிப்பது போல)
அவமானம் – 2
கூன் விழுந்தவள் பொல்லை ஊன்றிக் கொண்டே நடந்தாள். எந்த ஜீவ நடமாட்டமும் இல்லாத பாலைவனப் பிரதேசம் போல வறண்டு கிடந்தாலும். கணுக்காலளவு புற்கள் ஆங்காங்கே தென்பட்டது. காணக்கிடைத்த வீடுகள் கூட வீடுகள் என்று சொல்லமுடியாத பக்கச்சுவர்கள் மட்டுமுடையதாகவோ, பாழுண்டவையாவோ தான் கிடந்தன. காட்டெலிகளும், கரப்பான் பூச்சிகளும், சிலந்திகளும் இன்னமும் சில ஊர்வன மட்டுமே இருக்கலாம். நெடுந்தூரத்தில் சில மரங்கள் தென்பட்டன. எந்தவித நடமாட்டமும் தெரியவில்லை. பார்வைப் புலத்துக்குட்பட்ட பிரதேசம் முழுவதும் சோகம் நிரம்பி இருந்ததை அவளும் உணர்ந்தாள். கால்கள் வலியெடுத்ததுடன் சூடு காலை வைக்க முடியாதபடி பண்ணியிருக்க வேண்டும். நின்று நிழலாற இடமில்லாததால் வேகமாய் நிழல் தேடி ஓட்டமாய் நடந்தாள். சில மரங்கள் எரிபட்டு அடியுடன் வேரை மேல் காட்டி சாய்ந்து இருந்ததையும் கண்டாள். சூனியப் பிரதேசமொன்றின் மையப்பகுதியில் நிற்பதாய்த் தோன்றியது. கூரை இல்லாத எரியுண்டு புகைப்படிந்து கிடந்த வீடொன்றுக்கருகில் இருந்த மரத்தின் நிழலில் குந்தினாள். மங்கிய கண்களுடன் சுற்றி நோக்குகையில் யுத்தமொன்று நடந்து ஓய்ந்ததற்கான அறிகுறிகளே தென்பட்டது. உடல்கள் வீசப்பட்டதா? எரிக்கப்பட்டதா? என்பதில் அவள் சிந்தனை போனது. காலிரண்டையும் நீட்டி முதுகை மரத்தில் வைத்திருந்தவள் அருகில் குவித்துக் கிடந்த மண் குவியலில் கையிலிருந்த கம்பை நுழைத்துக் கிளறினாள். குண்டு வெடித்துச் சதைத்துண்டுகள் சிதறுவது போல் மண் பறந்தது.
“சூய்” எதையோ விரட்டுவது போல கோழி அல்லது காகம் இவ்வாறு விரட்டப்படுதல் இயல்பு- அண்ணாந்து மரத்தின் மேல் பார்த்தாள். காகமொன்று மரத்திலிருந்து பறந்தது. அதன் எச்சம் வெள்ளையாய் காலுக்கருகிலும், கறுப்பு உறுண்டை போல மடியில் ஒன்றும் விழுந்தது. கையிலெடுத்து உற்று நோக்கினாள். அது நாவற்பழம். அவள் அப்படியாக எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னர் களைப்புற்ற போதுகூட, மேல் நோக்கினாள் தான் இருந்தது நாவல் மரத்தின் கீழ் என்பதும் தெரிந்தது. பழம் இருக்கின்றது என்பதை தெரிந்திருக்கக் கூடியதாக முன்னர் எதுவும் நடக்கவில்லை. நிழல் மாத்திரமே தேவைப்பட்டிருந்தது. பாலமுருகன் மேலிருந்து “சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்றான். அவள் எவ்வித யோசனையும் இல்லாமல் ‘சுட்டபழம்” சத்தமாகவே கத்தினாள். சப்புக் கொட்டும் அவள் வாய்க்குள் சிதைந்த வண்ணம் உருண்டு ஓடிக் கொண்டிருந்தது நாவற்பழம்.
மண் குவியலுடன் ஒட்டியிருந்த குழிக்குள் இருந்து ஒரு பிஞ்சுத்தலை எட்டியது. “என்ன செய்கிறாய்” மேல் நிலைத்திருந்த பார்வையை கீழே எடுத்தவள் சிறுவனைக் கண்டு கையிரண்டையும் இணைத்துக் கும்பிட்டாள். “முருகா” எதுவும் விளங்காமல் குழம்பிய சிறுவன் “நான் முருகனில்லை” என தனது பெயரைச் சொன்னான். “உன் பெயர் எதுவாக இருப்பினும் எனக்கு முருகனாகவே தெரிகிறாய். மரத்திலேறி சுட்டபழங்களைப் போடேன். களைப்பாய் இருக்கிறேன்” – “நான் சுடுபட வேண்டும் என்கிறாய்” பின்புறம் இடதுகையை நீட்டிச் சுட்டிக்காட்டி ‘அங்கிருந்து வரும் குண்டு என்னைக் கொன்று விடும், நீயும் என்னுடன் வருதல் உன் ஆயுளைக் [ கூட்டும்” – “எங்கே” என எட்டிப்பார்த்தாள். அவன் குழிக்குள் இருந்து கொண்டு மேலே எட்டுவதற்காக வேரில் ஒற்றைக்காலில் நிற்பதையும் கண்டாள். “எதனால்” – “இருந்தால் செத்துப் போய்விடுவாய் இறங்கிக்கொள், யுத்தம் நடக்கிறது” கைகளைப் பிடித்து இழுத்து குதிக்கப் பண்ணினான். பனங்குற்றிகளை நிறுத்தி செவ்வகமாக அறை போன்றிருந்த உட்புறப்பகுதியில் இருக்கச் சொன்னான். உள்ளே பாயொன்று விரிக்கப்பட்டிருந்தது. பையன் சம்மணங்காலிட்டு அமர்ந்து அருகிலிருந்த புத்தகத்தைத் தள்ளி வைத்தான். அவளும் காலை நீட்டி பனங்குற்றியில் முதுகைச் சாய்த்தாள். மேலேயும் கிடையாக பனங்குற்றிகள் அருகருகில் வைக்கப்பட்டிருந்தது. அவைகள் மணலை கீழ்நோக்கி வராமல் தடுத்துக்கொண்டிருந்தன. “சோழர்களுக்கும், பாண்டியர்களுக்குமா’ பழைய நினைவிலிருந்து மீட்டுக் கொண்டுவர வேண்டியிருந்தது.
“இல்லையில்லை இங்குள்ளவர்களிடம் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை விட நவீன துப்பாக்கிகள் இருக்கின்றன. அவைகள் இரும்பினால் தயாரிக்கப்பட்டவை. இப்போவெல்லாம் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது.” – ஆயுதங்களின் வீரியம் பற்றியும் இறந்துபோன, இறந்து போவதற்கென காத்துக்கிடப்பதுபோல அவஸ்தைப்படுபவர்களைப் பற்றியும் சொன்னான். அதில் தமிழர்களே அதிகமாய் இருப்பது பற்றியும், மொழி முன்னணி கொண்டிருப்பதையும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அவன் அறிவுக்கு எட்டியிருந்த யுத்த காண்ட பகுதியையும் சொன்னான். கூனல் நிமிர்ந்து விட்டதுபோல உடலை நிமிர்த்தியவள் “இப்படியான வாழ்க்கையா இங்கு” – “ஆயுதங்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.” என்றவன் “நீ யார் பாட்டி” சிறுவர்களுக்கே உரித்தான அறிந்து கொள்ளும் இயல்புதான் அவனுக்கும் இருந்தது. ‘நான்தான் ஔவையார். இன்றைய உலகை தரிசிக்க வந்தேன்.” சலித்துக் கொண்டவள் ‘இந்த உலகோ இப்படியானதா” “எனக்குத் தெரியும் உன்னை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், அரிது – பெரிது பாடியவள். எனக்கு நன்றாய்த் தெரியும் உன்னை” அவனுக்குள் சந்தோசமும், பெருமையும் தோன்றியது. கூடவே ஆவலும் நிறைய ‘நீ இக்காலத்தில் அரியதைப் பாடினால் என்ன பாடுவாய்” யோசித்தவள் அவனால் சொல்லப்பட்டதிலிருந்து தொகுத்துக் கொண்டாள்.
“அரியது கேட்கும் அருமையான பையா
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது
மானிடராய்ப் பிறப்பினும்
கூன், குருடு, செவிடு. பேடு நீங்கிப் பிறத்தலரிது
பிறந்த காலையும்,
ஞானமும் கல்வியும் நயத்தலரிது – நயத்த காலையும்
வாழ்க்கையை உணர்தலரிது – உணர்ந்து விடினும்
உயிரோடிருத்தல் அரிது – உயிரோடிருப்பினும்,
கை, காலுடன் அங்கவீனமுறாதிருத்தல் அரிது.
அங்கவீனமுறாதிருப்பினும்
பயத்தில் நடுங்காதிருத்தலரிது
பயமுறாதிருந்தால் -வாழ்வை வென்றிடலாம்.”
கைகளைத் தட்டியவனுக்குத் தத்துவங்கள் போதிக்கப்பட்டது போல “நன்றாய்ப் பாடினாய் போ, பெரிது எது” கை தட்டல்கள் அவளை எப்போதும் பாதித்திருந்ததில்லை. அவனால் பூரித்துத்தான் போனாள்.
“பெரியது கேட்கும் பேரறிவுச் சிறுவா.
பெரிது பெரிது புவனம் பெரிது.
புவனமோ வல்லரசுகளுக்குள் அடக்கம்
வல்லரசோ ஆயுதத்துள் அடக்கம்
ஆயுதங்களோ உயிர்களையும் கொல்லும்
ஆயுதங்களின் பெருமை சொல்லவும் பெரிதே.”
இரு கால்களையும் மடக்கி கீழ்த் தாடையை அதில் வைத்துக் கொண்டான். “சோழனுக்கும் பாடியது போல, இந்த மரண வாழ்க்கையையும், ஆயுத உலகையும் நான்கு கோடிப்பாட்டுக்குள் அடக்கேன்.” “தாகமெடுக்கிறது, நீர் சிறிது தரமுடியுமா?” அருகிலிருந்த போத்தலை எடுத்து தலைகீழாக்கி நோக்கியவன் “நில் எடுத்து வருகிறேன்” அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வேரில் காலை வைத்து மேலே தாவியவன், தலையை நீட்டி “கவனமாய் இரு. மேலே வராதே” ஏதோ நினைவுக்கு வந்த ஒளவை கேட்டாள். “உனது பெற்றோர்” – “வந்து சொல்கிறேன்.” தலையை இழுத்துக் கொண்டு மறைந்து போனான். சிறுவன் சொன்ன கதைகளை உருப்படுத்தினாள். வாழ்வை நினைக்க நினைக்க அவளுள் ஏதோவொன்று உருளத் தொடங்கியது. நினைவுக்குள் அமிழ்ந்து இருந்தவளை வெடிச்சத்தங்களும், ‘ஐயோ பாட்டி” என்ற குரலும் குலைத்தது. கைகளை ஊன்றி எழுந்து கொண்டவள், வேரில்காலைக் குத்தி மேலே தாவினாள். அது அவளுக்குக் கூடத்தெரியாது வயது ஒரு தடையாய் இருக்க முடியாது.
குப்புறக் கிடந்தவனுக்கு அருகில் கீழே கிடந்த போத்தலில் இருந்த தண்ணீர் மண்ணைக்குழியாக்கி விட்டு, ஊறிப்போனது போக மீதி சிவப்பாய் ஓடியது. உடலைச் சூழ ஐந்தாறு பச்சைகள் கலந்து உருக்கள் நின்றிருந்தன. இவளைக் கண்டதும் அதிலொன்று இவளை நோக்கி இரும்புக் குழாயை நீட்டியது. அருகில் இருந்தவன் அதை கீழ் நோக்கிப் பிடிக்கத்தள்ளிவிட்டு, காதுள் என்னவோ சொன்னான். சொல்லும்போது அவனது கண்கள் விரிந்து, புருவங்கள் உயர்ந்து. நீள்பட்ட வாயிலிருந்து வீணி வடிந்ததையும் கண்டாள். அவளை நோக்கி திரும்பியவன் குழலின் பட்டியை தோளில் மாட்டி பின்னுக்குத் தள்ளிவிட்டு அவளருகில் வந்தான். கம்பைத் தட்டிவிட்டு கைகளை உயர்த்தி. அப்படியே நிற்கும் படி மணிக்கட்டுகளைப் பற்றி உலுக்கி, தன் இருகைகளையும் அவளுடலில் ஒட்டிகீழ் நாக்கிக் கொண்டு வந்து கைகளைப் பின்னுக்காக்கி அவளை முன்னுக்கிழுத்து இறுக்கி அணைத்தான். அரக்கத்தனப் பிடியிலிருந்தவளுக்கு மூச்சுத் திணறியது. அவனைத் தள்ளிவிடக் கூடிய பலம் இல்லை. என்பதை உணர்ந்தாள். ‘முருகா- முருகா” கத்தினாள் புதிதாய் யாரும் வரவில்லை அவன்கள்தான் நின்றிருந்தான்கள். கைகளைக் கட்டிப்பார்த்துச் சிரித்தவண்ணம் அவனின் மாரில் கைகளைக் குத்தியவள், கண்ணை மூடி பலம் முழுவதையும் திரட்டித்தள்ளினாள். பலம் திரண்டு கைகளுக்கு வந்தது. விலகியவன் நிலைதடுமாறி கீழே விழாமல் இரண்டடி பின்னுக்கு வைத்து ஏனையோரைப்பார்த்து திரும்புவதற்குள் குனிந்துக் கொண்டே ஓடினாள். – வேகமாய் நடந்தாள் – தடுமாறிக் கொண்டே முன்னம் குந்தியிருந்த நாவல் மரத்துக்கு பின்னே போனாள். பாதுகாப்பிற்கு தகுதியான இடமென உறுதியிட முடியாவிட்டாலும் தற்போதைக்கு சமாளிக்கும் எண்ணமாக இருந்திருக்கலாம்.
கேள்விக்குறி
தீக் குழம்புருவங்கள் உறைதலுக்கான எவ்விதக் கூறுகளும் கிடைக்காமல் போனது. மனதுள் தோன்றிய வெம்மை குழம்பைக் கொதிக்கப்பண்ணியது. இயலாமையும் கூடச் சூடாக்கி இருந்தது. பாகுநிலையாகி, திரவங்களாய் கொப்பளித்து கொதித்ததில் புறத் தோற்றங்கள் கரைத்து நீட்டப்பட்டிருந்த அங்கங்கள் கரைந்து ஒழுகத் தொடங்கியது. விரல்களும், காதுச் சோணைகளும், மூக்கும் சொட்டு சொட்டாய் விழுந்தது. உருவங்கள் முற்றாய் கரைந்து உருத் தெரியாமல் குழம்புக் குவியலாய் தரையில் படர்ந்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னான தரையிலும் – மரத்தின் பின் மணலிலும் கிடந்தது. அவையும் கொதிப்பெடுத்து ஆவிபறந்து சிறிது சிறிதாய் அதன் பரப்புக் குறைந்தது. ஆவியானாலும், நெருப்பு வீழ்ந்ததற்காக கறுப்பான நிலமும் -புற்கள் கருகி சூடுகண்ட மண்லும், மீதிப்பட்டிருந்தது.
அவர்கள் இரு உருவங்களையும் தேடினார்கள். அவற்றின் பூர்வீகம், தோற்றம், மறைவு எதுவும் தெரியாதவர்களாய்த் தேடி, தலைமைச் செயலகத்துடன் தொடர்புகளை இணைத்து தகவல்களைக் கொடுத்தார்கள். பயங்கரமானவர்கள் எனவும் முக்கிய புள்ளிகள் எனவும் தகவலில் சேர்க்கப்பட்டிருந்ததால், அவர்களைக் கண்டு பிடித்தேயாகவேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டது. அதன் காரணமாக மக்களின் உதவி தேவைப்படுவதாகவும், தகவல்கள் பத்திரமாயும், இரகசியமாகவும் வைக்கப்படுமாம். தேவையாயின் பாதுகாப்பும் வழங்கப்படும். உறுதியானவையெனக் கருதப்படும் பட்சத்தில் பரிசில்கள் வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வந்தன.
எதிர்பார்ப்பு
காற்றாய் செய்திகள் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாய் சேர்த்து வானைநோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிசயத்தைக் கண்டுகொள்ள, மேகங்கள் கறுப்பாய், சாம்பல் நிறம் கொண்டதாய் மிதந்து கொண்டிருந்தது. ஏதாவது இரண்டு முட்டி மின்னலை, இடியைத் தோற்றுவிக்கலாம். அதிலொரு துகள் பூமியில் வீழ்ந்து, உருவம் தோன்றி விடியலை நோக்கிக்கொண்டு செல்லலாம் என நம்பிக்கையுடன், நடு இரவுகளிலும் வானைநோக்கிக் காவல் இருந்தார்கள். வந்தவர்களை விட்டுவிட்ட கவலையும் இருந்தது. பாதுகாப்பளித்து தலைவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டுமாம், சிந்தனையும், அனுபவத்தையும் கேட்டறிய வேண்டுமாம். கூட்டம் கூட்டமாய்க் கதைத்த வண்ணம் வானையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.
| எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்னும் ஒரு விதம்!
வளர்கவி
June 29, 2026
காயலாங்கடை
நா.ரங்கராசன்
June 29, 2026
எதுவும் மாறல
மனோகர் மைசூரு
June 29, 2026