மூன்று மரணங்கள் பற்றிய முற்குறிப்பு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2026
பார்வையிட்டோர்: 324 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தூக்கம் கலைந்து போக முன்னரே தட்டினார்கள். எனக்குரிய தண்டனையை உடனடியாக நிறைவேற்றியாக வேண்டுமென்பதால், நான் எழுந்து வர வேண்டுமாம். இங்கு அதை நடாத்தினால்; கட்டில் இரத்தத்தினால் நனைந்து, மெத்தையில் ஊறி மீள் பாவனைக்கு உட்படுத்த முடியாத நிலை ஏற்படுமாம். எனக்காகத் தண்டனையை மாற்றிக் கொள்ளவும் முடியாதாம். வேண்டுமானால், வழியை மாற்றிக்கொள்ள முடியுமெனக் கயிற்றைக் காட்டினார்கள். அதற்கும் வெளியேதான் போயாக வேண்டுமாம். சரியாகப்பட்ட வசதி இல்லையென்பது முக்கிய காரணமாக இருக்கின்றதாம். உத்தரவை தங்களால் மீறமுடியாது என்றார்கள். உடன் போக எழுந்து போ தூக்கம் கலைந்தது. இப்படிக் கனவுகளுள் தினமும் யாராவது வந்து சொன்னார்கள். 

அன்றைய தினம் வந்தவன் வைத்தியனாக இருக்க வேண்டும். அவர்கள் போலவே உடையணிந்திருந்தான். செய்கைகள் கூட அவ்வாறே இருந்தது. இதயத்துடிப்பைப் பார்த்து, முதுகில் தட்டி, நாக்கை நீட்டவைத்துப் பார்த்துவிட்டும், அந்தச் செய்தியைச் சொல்லிப் போனான். கனவில்தான் அதுவும் நிகழ்ந்தது. துரத்தினார்கள் அருகில் நிற்க வேண்டாமென. தற்செயலாக நிற்கநேரினும் தள்ளி நின்று கொண்டு மூக்கைப் பிடித்தார்கள். பிணக்களையும் பிணவாடையும், என்னிடமிருந்தது என்பது அவர்கள் முறைப்பாடு, 

இது நனவுகளில் இப்படியான ஒரு நாளில்தான், கனவுக்குள் அந்த ஒலி கேட்டது. என்னுடைய குரல் போலவே இருந்தது. என்றாலும், எங்கிருந்து எப்படி என்பது ஆரம்பத்தில் தெரியாமல் இருந்தது. ‘நீ ஏன் இன்னமும் தாமதித்துக் கொண்டிருக்கிறாய். எனத்தான் விளங்கவில்லை. தாமதமாக்கப்படுவதாகவும் இருக்கலாம். எல்லோருக்கும், நிட்சயிக்கப்பட்டதாக இருந்தாலும் உனக்கு விரைவாய் வந்து சேரும் – தேவையாய் இருப்பதும் அதுதான். அதுவேதான் என்னை விடுதலையடையச் செய்யும், உன்னால் நானும் அவமானப்பட்டுப் போனேன். ‘இனிக் கவலை இல்லை”- இருமியது. – ‘உனக்குரிய மரணம் நெருங்கிவிட்டது. அதை எதிர்கொள்ளத் தயாராய் இரு பயப்படமாட்டாய் அதையும் நானே செய்ய வேண்டி இருக்கும். எதற்கும் அறிவிக்கிறேன். இனிமேல் சுற்றித் திரிய முடியும். என்ற சந்தோசம் எனக்கிருந்தாலும், உருக்குலையப் போகின்றாய் என்பதில் சிறிது வருத்தமுண்டு” என்னால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூடச் சொன்னது. 

‘எதிர்பார்த்திருக்கிறேன். அது நல்லதுதான், ஆனாலும் எனக்குமட்டும் முதலில்…” நேரடியாக விடை சொல்லாமல் கதை சொன்னது. உமாதேவியைச் சிவன் ஒருநாள் நந்தவனத்துக்கு அழைத்துச் சென்றார். செடிகள் அழகாய்ப் பூத்துக் குலுங்கியது. மலரொன்றைப் பறித்துத் தரமுடியுமா? என்றார். அதிகமாகச் சிந்தித்தாள். 

முன்னர் பறிக்கப்பட்ட அடையாளங்கள் தென்பட்ட கிளை சாய்ந்து கிடந்த செடியிலிருந்து பூவொன்றைப் பறித்து வந்தாள். அதற்காக அவள் சற்றுத் தூரம் செல்ல வேண்டி இருந்தது. ஏன் இத்தனை செடிகளைத் தாண்டி அதில் சென்று பறித்தாய் என்றார் சிவன். அவள் சொன்னாள். ‘இவைகளின் அழகு கெட்டுவிடுவதில் எப்போதும் உடன்பாடு இருக்கவில்லை” என்று, அவளை நோக்கிச் சிரித்த சிவன் ‘இதன் காரணமாகவே துன்பப்பட்டவையே இன்னமும் உழலுகின்றன” – ‘நீ கூட அதுபோலத்தான்” கனவிலும் அழுகை வந்தது. ‘என் விடுதலைக் கருத்திற் கொண்டேனும், அதை ஏற்றுக் கொள்ளுதல் நல்லம். நானும் விரும்புகிறேன் எனக்குச் செய்யும் பேருதவியாகக் கூட இருக்கும். அதைவிடச் சிறந்த உதவி உன்னால் செய்ய முடியாது. எனவே நினைக்கிறேன். இதன் காரணமாக உனக்கேதும் நடந்துவிடப் போவதில்லை என்பதில் நீ தெளிவுற்றிருக்க வேண்டும்.” மறைந்துபோனது அது என்னுடைய ஆத்மா எனவும், எனது குரலிலேயே உரையாடிக் கொண்டிருந்தது என்பதையும் பின்நாட்களில் உணர முடிந்தது. இப்படியான கதைகளும், கனவுகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன.

வீட்டுக்காரப் பெண்மணி எனக்காகக் காத்திருந்தது போல் ஒரு பார்சலை நீட்டினாள். என் வரவை எதிர்பார்த்திருந்திருக்கிறாள். வழமையை விட அழகான உடையுடன் காணப்பட்டாள். அன்று அவளுடைய பிறந்ததினம் என்பதை ஞாபகப்படுத்தினாள். அதனால் தான், அது தனக்கானது என நினைத்துக் கொண்டாளாம். ஆனாலும் அதைத்தந்தவன் எனக்கானது என்பதை வலியுறுத்தி, நான்மட்டுமே பிரித்துப்பார்க்க வேண்டும். எனக் கட்டளையிட்டுச் சென்றதால் பிரிக்கவில்லை என்றாள். குண்டுப் பொதியாகவோ, அசம்பாவிதங்களை ஏற்படுத்தக் கூடிய பொதியாகவோ இருக்கலாம் எனக்கூட ஒரு கணம் எண்ணிவிட்டிருந்தாளாம். சிரித்துக் கொண்டே பூவினால் அலங்கரிக்கப்பட்டு வெட்டப்பட்டிருந்த ஒரு துண்டு கேக்கைத் தந்தாள். மௌனமாய் இருந்துவிட்டு இருவரும் ஒன்றாய்க் கதைத்தபோது வார்த்தைகள் கலந்து கொண்டாலும், என் குரல் பெரிதாக இருந்ததனால் அவளுக்கு விளங்கி இருக்க வேண்டும். அவனை எங்குமே பார்த்ததில்லையாம் அதற்கான ஞாபகங்கள் கூட இல்லை என்றாள். பிச்சைக்காரனுடைய தோற்றத்தில் இருந்தாலும் சென்றபின் சந்தன வாசம் வீட்டை நிறைத்துக் கொண்டதாம். கண்கள் பக்குவப்பட்டவன் என்பதைக் காட்டியதால் அதிகம் பேசாமல் இருந்திருக்கலாம் என ஊகித்துக் கொண்டாளாம். வெட்கத்தை மறைத்திருந்த ஒரு துண்டுத்துணியை விட வேறு எதுவும் இல்லாத போது, இதை அவனால் எப்படி வாங்கியிருக்க முடியும் என்பதைச் சிந்திக்க வேணும் முடியவில்லையாம் என்றவள், அதற்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை என்றும் சொன்னாள். தன்னைப் பற்றியோ- பார்சலைத்தட்டி -இதைப்பற்றியோ எதுவும் சொல்லவுமில்லை, வந்தமர்ந்து கொள்ளவுமில்லை. நான் அழைக்கவில்லை எனக் கருதிக் கொள்ளக்கூடாது. 

பொதியைக் கையளித்து விட்டுச் சென்றவள், சட்டையின் இரு பொத்தான்களை கழற்றி இருந்த போது அறையின் கதவைத் தள்ளிவிட்டு, தலையை நீட்டி, ‘அவனின் முகத்தில் உன் சாயல் தென்பட்டது.” தலையை இழுத்து மறைந்தாள். என்னவாக இருக்குமென்பதில் சந்தேகமிருந்தது. யார் என்பதிலுங்கூட, அவள் சொன்ன உருவத்திற்கு மனதிலிருந்த படங்களில் எதுவும் ஒத்துவரவில்லை. சுற்றியிருந்த கடதாசியை அகற்றி கூடைக்குள் போட்டேன். பெரிதான புத்தகம், விஷ்ணு புரத்தைப் போல தடிப்பானது, ஆனால் நீள அகலங்கள் கூடியது. அட்டை பல நிறங்களில் அலையலையாக இருந்தது. உள் முகப்பில் ‘மரணம்” என்ற வாசகத்தைத் தவிர வேறு எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. நான்காக மடிக்கப்பட்ட ஒரு துண்டு இருந்தது. உட்பக்கங்களெல்லாம் எழுத்துக்களால் நிறைந்திருந்தது. எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. நான்காக மடிக்கப்பட்ட ஒரு துண்டு இருந்தது. உட்பக்கங்களெல்லாம் எழுத்துக்களால் நிறைந்திருந்தது. எதுவும் வாசித்துப்புரிந்துக் கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. அரைகுறையானவை போலத் தென்பட்டது. தேவைப்படும் போது மாத்திரம் திறக்கப்பட வேண்டும். உன் ஐயங்களைப் போக்கும், சஞ்சலத்தின் விளக்கம். இது மரணம் மட்டுமல்ல, வாழ்க்கையும் உலக நியதியும் ” துண்டில் எழுதப்பட்டிருந்தது. நிறையவே தத்துவங்கள் உள்ளிருக்க வேண்டுமெனத் தோன்றியது. கொஞ்ச வார்த்தைகளும் வாழ்க்கையை முழுமையாகச் சொன்னது. 

கனவுகளின் ஆக்கிரமிப்பை தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. திறக்க முற்பட்டேன் “வரலாமா” கதவைத் தட்டி வந்தவள், தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு புத்தகத்தைப் பார்த்தாள். ‘தேசப்படமா’ – ‘தேசப்படமா’ – “ஆம் எழுதியுள்ளதைச் சொன்னேன்” தலையைத் திருப்பிக் கொண்டு போனாள். திறந்த பக்கத்தில் ‘உனக்கு சந்தோசம் அருகில் இருக்கிறது” என்று மட்டும் இருந்தது. திரும்பவும் அட்டையையும், கொஞ்சம் தாள்களையும் விக் போது தெரிந்த பக்கத்தில் மரணம் நெருங்கிவிட்டது” என்றிருந்தது. இன்னமும் குழப்பம் சந்தோசம் மரணம், இருதிசைப்பட்ட சொற்களைச் சேர்த்துக் கட்டியது போல இழுபட்டிருந்தாலும் மங்கிய ஒளிபோல புரிந்திருந்தது. விடுதலையின் மார்க்கமாகச் சூட்டப்பட்டிருக்கலாம். மேலும் விளக்கம் தேடிப் புரட்டினேன். அது எழுத்துக்களால் நிரப்பப்பட்டிருந்த பக்கம், ‘மாபெரும் கடல் எல்லோரும் மூழ்க வேண்டியதும், தளுவிக் கொள்ளவென அலைகளை நீட்டிக் கொண்டே இருக்கும். அதன் சுருளைக் கண்டு பயந்து கொண்டிருக்கிறோம். அதைப்பற்றிக் கதைக்கக் கூட அஞ்சி வாயில் கைவைத்து வார்த்தைகளை அடைத்துக் கொள்கின்றோம். அது ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல, அதன் ஆழம் சலனமற்றது. மரணம் அழகிய பாடல், நறுமணம் கொண்டது சுதந்திரமானதும் ஆகும். அங்கு யாரும் ஒதுக்கப்படுவதுமில்லை அணைக்கப்படுவதுமில்லை. அவரவர் எண்ணங்கள் பாதுகாக்கப்படும். காதுகளுள் இனிய ஓசை ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்.” இன்னமும் நிறையச் சொல்லப்பட்டிருந்தது. மரணம் சந்தோசமானதென்ற சாராம்சத்தினால், முன்னையை விட அதிகமாகவே மரணத்தை நேசிக்கத் தொடங்கினேன். 

3 

“நான் இடைவிடாமல் போராடுகிறேன். அது யாருக்கும் தெரியாது. ஒரு சிலர் அதைப் புரிந்து கொண்டிருக்கலாம். அது தவிர்க்க முடியாததுதான். ஆனால் எவருக்குமே அதைப்பற்றிச் சரியாகத் தெரியாது. ஆனாலும் தினசரிக் கடன்களைப் பூர்த்திசெய்து கொண்டு வருகிறேன். ஓரளவிற்கு கவனக்குறைவு என்னிடமுள்ளதைப்பற்றி குறைகூற முடியும். ஒவ்வொரு மனிதனும் போராடுகிறான். ஆனால், நான் மற்றவர்களை விட கூடுதலாகப் – போராடுகிறேன். கனவில் ஏதோ உருவத்தை விரட்டக் கைகளை அசைப்பது போன்று பிறர் தூக்கத்தில் போராடுவார்கள். ஆனால், நான் விழிப்புடன் என்னிடமுள்ள சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி மிகவும் கவனமாகவும், நன்கு திட்டமிட்டும் போராடுகிறேன். தங்களுக்காக மட்டும் கூவிக்கொண்டு, அதே நேரத்தில் பயத்தைக் கிளப்பும் அமைதியில் ஆழ்ந்திருக்கும் கூட்டத்திலிருந்து எதற்காக நான்விலகி எழுந்து போராடுகிறேன்? ஏன் பிறர் கவனத்தை என் பால் ஈர்க்கிறேன்? விரோதிகளின் முதல் பட்டியலிலேயே ஏன் என் பெயர் முதல் இடத்தில் இருக்கிறது.” இறப்பைப்பற்றி புரிந்துகொள்ள முன்னான வேளைகளில் குழும்பியிருந்த என் நினைவுகளைப் போன்று, காஃப்காவை நாட்குறிப்பில் காணமுடிந்தது. குழப்பங்கள் தெளிவில் முடியுமாம். உலகம், லீலை, விளையாட்டு அதிக கவனத்துடன் ஒன்றித்து பங்காளியாகப் போகின்றபோது அதீத போராட்டம் கவலை -வெறுப்பு தொற்றிக் கொள்கிறது. சோககீதத்துள் மனம் தொங்கிப் போகின்றது. தொடர்ந்து கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும். 

படைப்பு விளங்கிய பின், வாழ்க்கை இலகுவாகும். மரணம் தெரிவதால் முயற்சி வேகங் கொள்ளும், சந்தேகம் இல்லாமற்போகும். இப்போது நண்பர்களுக்கு நான் மரணம் பற்றி விளக்கம் தர ஆரம்பித்திருந்தேன். என் ஆத்மாவை புரியவும். சந்தோசப்படுத்தவும் தவறியிருந்ததால் போக துடித்துக் கொண்டிருந்தது. கனவுக்குள் பயமுறுத்தியது. மற்றைய ஆத்மாவைச் சந்தோசப்படுத்துவதுதான், அதற்குச் சந்தோசமாம். எப்படியும் அவைகள் தான் ஓரிடத்தில் வாழப்போகின்றவையாம். சடப்பொருளின் மதிப்பில் பிரிவினைகள் காட்டக் கூடாதாம். முதல் இறப்பு சடப்பொருளிலான உடல் இறந்து போதலில் ஆரம்பிக்கின்றது. உண்மையான மரணமும் கூட, இதன் பின்னான எதுவும் நமக்குத் தெரிவதில்லை. ஆனாலும் அரைகுறையானது. இதன் பின் இன்னமும் இரண்டுள்ளது. மூச்சு நின்றுபோதல், முழு மரணமில்லை. நரம்புகளும் கலங்களும் துடித்துக் கொண்டிருக்கும் சுற்றியிருந்து சும்மாவேனும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பார்கள். பாதிப்போர் குடும்பக் கதை கதைக்கவும் வெற்றிலை போட்டுக் கொள்ளவுமென அமர்ந்திருப்பார்கள். தசையும், தோலும் போர்த்த எலும்புக் கூட்டைப் பார்க்க யாராவது வரும் வரை வைத்தீருக்க வேண்டியுமிருக்கும், வயிற்றைக்குமட்டும் நாற்றமெடுக்கும் வரை அது நீடிக்கலாம். மூக்கைப் பொத்திக் கொண்டு அஞ்சலி செலுத்த வேண்டியுமிருக்கும். சொந்தங்களின் குரல் அடைத்து, புத்தி பேதலித்து, அவசர அவசரமாய் தொலைந்த எதையோ தேடிக் கொண்டிருப்பார்கள். 

என்னுடன் கதைப்பவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாகக் குறைந்து போயிருந்தது, ஒதுங்கித் தலைமறைவானார்கள். மரணத்தின் தூதுவன்” என பெயர் சூட்டப்பட்டிருந்தது. சில வேளைகளில் ‘மரண தேவன்” எனக்கூட அழைக்கப்பட்டேன். 

அப்பா

மிக விரைவாகவே சில விடயங்களை தங்களுக்கு அறிவிக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. அதையிட்டு தங்களின் உணர்வு பற்றி சரியாகக் கூறமுடியாதுள்ளேன். மகன் எனக் கவலையும் படலாம், தொலைந்தான் என சந்தோசமும் படலாம், எப்படியாகினும் சந்தோசப்படுதலை விரும்புகின்றேன். 

இது கடிதமாக இருக்கின்றபடியினாலும், தாங்கள் கேட்டு எழுதுகின்ற படியினாலும், உடல் பற்றி எழுதவேண்டுமென நினைக்கின்றேன். அது நலமாகக் காணப்படுகின்றது. ஆனபடியினால் சுகமாய் இருப்பதாக முடிவெடுக்க வேண்டாம். அதுதான் எல்லோருக்கும் வேண்டியதாய் இருக்கின்றது. நிலையாமைப்பற்றியே அனைவரும் சிந்திக்கின்றோம். இன்புறுகின்றோம். அதையே சகலமுமாய்க் கருதுகின்றோம். வாழ்க்கையில் தத்தளித்துக் கிடந்த எனக்கு துடுப்புக் கிடைத்திருக்கின்றது. அதன்படி விரைவாக எனது பயணத்தை மரணம் நோக்கியதாக்கிக் கொண்டுள்ளேன். எல்லோர் பயணமும் அதை நோக்கியதாக இருந்தாலும், நான் பயமேதும் இன்றி மரணத்தை நோக்கி சரியான திசையில் எதிர்கொள்ளச் செல்கின்றேன். தாங்கள் சந்தோசப்பட இதில் நிறையவுள்ளது. பயமொழித்தல் கண்டும், திசையைத் தேர்வு பண்ணியது கண்டும் என்னைப் பாராட்ட வேண்டும். இவற்றுக்கு, கனவில் தோன்றிய ஆத்மாவும், கையளிக்கப்பட்ட மரண புத்தகமும் பேருதவியாய் அமைந்தன. மரணம் நெருங்கி இருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுவிட்டது. அது பற்றி தெரியப்படுத்தவும் உடலைப்பற்றிக் கூறவுமே எழுதத் தொடங்கினேன். 

ஆவி போனபின்னர் எவ்வித காரணத்தினாலும் நாற்றமெடுக்கும் வரை வைத்திருக்க வேண்டாம். அது பலரை சங்கடப்படுத்துவதுடன் வேலையையும், இடைஞ்சலையும் உண்டாக்கும். எரித்துப்போட சிரமப்படவேண்டாம். அதனால் இறந்து போகாத கலங்களும், உறுப்புக்களும் துடித்துப்போகும், எங்காகிலும் தொங்கவிட நேர்ந்தால் சந்தோசப்படுவேன். பலவற்றுக்கு இரையாகும். – நாட்டு நிலைமையைக் கருத்திற் கொண்டால் முடியாமல் போகலாம் -. ஆறடிக்குள் போட்டு மண்ணைப் போடுங்கள். சிறு அங்கிகளாவது தின்னட்டும், கறையான்கள் வாய்க்குள் புகுந்து, குடலை ஒரு குழுவும், நுரையீரலை இன்னொரு குழுவுமாக அரிக்கட்டும், உணவாகிப்போன திருப்தி இருக்கும். சிந்தனைகளேனும் அவைகளைச் சென்றடையட்டும். மரணம் சந்தோசமானது மட்டுமல்ல, சந்தோசப்பட வேண்டியதும், எப்படியும் என்மறைவு பலரை மகிழ்ச்சி கொள்ளச் செய்யக் கூடியது. அதில் எல்லோரையம் இணைந்து கொள்ளச் சொல்லுங்கள், அழுவதனால் பயன் ஏதும் இல்லை. இது தொடர்பில் யாவருக்கும் அறிவித்துள்ளேன். இனிமேல் சந்தோசப்பட்டவனாகவே இருப்பேன். மன உழைச்சலில் இருந்து அந்நியப்பட்டு சந்தோச மரணத்துள் மூழ்கக்காத்திருக்கும். 

இவன் 

5

இரண்டாம் இறப்பு எனக்கில்லையாம். சந்ததியில் உயிரணுக்கள் வாழ்ந்து கொண்டிருந்து, அவர்கள் இறப்பதனால் ஏற்படுகின்றதாம். திருமண வயதைத் தாண்டி இருப்பினும் நிகழாதது மகிழ்வாக இருந்தது. என்பாவச் சுமைகளை யாரும் சுமக்க வேண்டிய தேவையிராது போனது. அவைகள் என்னுடனேயே புதைந்து போகும். ‘அதிலிருந்து நீ பிழைத்ததனால் என்விடுதலை விரைவுபடும்.” என்றது ஆத்மா, அதற்கு விரைவாகப் போய்ச்சேர வேண்டுமென்ற நோக்கம் இருந்தது. 

மூன்றாம் மரணம் ஏற்பட வாய்ப்பிருந்தது, ஆனாலும் உடலழிந்து ஒரு வாரத்துள் அதுவும் நிகழ்ந்து விடும். அது புகழின் மரணமாக இருக்கும், ஆண்டுக் கணக்காக விவாதிக்கப்படும். அளவிற்கோ, ஆய்வு செய்யப்படும் அளவிற்கோ எதையும் சாதித்திருக்கவில்லை என்பதனால், கூடிய அவகாசம் தேவைப்படாது. ஆனால் திட்டித்தீர்க்கவென கொஞ்சமாவது தேவை. பாரிய பாவங்கள் நிகழ்த்த பாடவிட்டாலும் செய்தவற்றுக்கு தூஷிக்க ஒரு வாரகாலம் போதுமானதாயிருக்கும். என எண்ணுகிறேன். அதன் பின் நிகழும் மூன்றாவது மரணத்துடன் முற்றாய் நீங்கிடமுடியும், என்ற நம்பிக்கை இருந்தது. மீள் பிறப்பு, கதைகளுக்கு மட்டும் உரித்தானதாக இருக்க வேண்டும். விஞ்ஞானம் அதை மறுதலிப்பதனால் இன்னமும் மகிழ்வாய் இருந்தது. நிகழினும், அறிந்து கொள்ளக்கூடிய பூர்வஜென்ம பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பின் நல்லதாய்ப் போகும். உன் மூன்று இறப்புகளிலும், எனக்கு இடைஞ்சல் இருப்பதாகத் தெரியவில்லை.” சந்தோசப்பட்ட ஆத்மா எதிர்கொள்ளத் தயாராகும்படி மறுபடி, மறுபடியும் வலியுறுத்தியது. 

6 

சகோதரங்களே. ஆத்மாவைப் போன்ற நண்பர்களே, 

என் மரணம் குறித்து கவலை கொள்ளாதிருப்பீர்களாக, ஆ ன்மா போக வேண்டுமென உரைத்ததற்காக நீங்களும் விட்டுப்போக எண்ணுகின்றீர்கள், என்றில்லை அவ்வாறு எண்ணிக்கொள்வதுதான் சாலச் சிறந்தது எனக் கருதுகின்றேன். தங்களனைவரையும் முற்றாகப்புரிந்து கொண்டு நடந்தேன் என்பதற்கில்லை. எனைப்புரிய வழியின்றி முடியாமல் தவித்தேன். என்பது தெரிந்திருக்கும், தங்களுக்காக வேண்டிய எவ்வித உதவிகளையும் முடிந்ததைக்கூட செய்யவில்லை எனக் கருதுகின்றேன். கவலையீனமும். சோம்போறித்தனமும் முற்றாக என்றில்லா விட்டாலும் ஓரளவுக்கேனும் ஆட்கொண்டிருந்தது. 

என்னால் இழைக்கப்பட்டவற்றுக்கும், கொட்டப்பட்ட வார்த்தைகளின் பொருட்டும் மறுபிறப்பில் பிராயச்சித்தம் தேடமுடியாது. – நம்பிக்கை இல்லை. – இவ்வேளையிலேயே மன்னித்து மறந்து போகுமாறு வேண்டிக் கொள்கின்றேன். இன்னமொன்றும் கேட்டுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. ஆத்மாவின் பொருட்டு, உடலின் மரணத்தின் போது அழுது கொண்டிருக்க வேண்டாமாம். அது மகிழ்வாய் வழியனுப்புப்படி கேட்கிறது. இருக்கும் போது பட்ட துன்பம் போதுமாம். புதைக்கப்பட்ட பின்னரும் உடலது செய்கைகளைக் கதைக்க வேண்டாம் என்கிறது. தன் பயணம் இதன் பொருட்டு பாதிக்கப்படலாம் என அஞ்சுகிறது. என் நினைவுகள் நீங்காவடுவாக தங்களிடம் நீடித்திருக்கக் கூடியதல்ல என்பதையும் நான் அறிவேன். அந்தளவிற்கு ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. இவைகள் சாத்தியப்படுத்தக் கூடிய செயல்களாக உள்ளதனாலும். தங்களனைவர் மீதும் கொண்டிருக்கும் நம்பிக்கையின் காரணமாகவும், செயற்படுத்துவீர்களென கருதிக்கொள்கின்றேன். – அவ்வாறே நினைக்க வேண்டியும் உள்ளது. 

இவன்

– தை 2002.

– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *