கறுப்பு மரணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2026
பார்வையிட்டோர்: 363 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1720ஆம் ஆண்டு மூன்றாம் மாதமான பங்குனியின் நடுப்பகுதி என நினைக்கின்றேன். ழான் பிரான்சிஸ் மன்செஸ்டர் நகரில் இறந்து போனான். அவனது மனைவியும், மகனும், மகளும் உறவினர்களைக்கட்டித்தளுவி அழுது கொண்டிருந்தார்கள். அவன் இன்னமும் நீண்டகாலம் வாழ்ந்திருக்கக் கூடியவன் எனவும், அவனால் இன்னமும் நன்மைகள் அந்த நகருக்குச் செய்ய வேண்டி இருந்ததாகவும் தெருவாசிகள் கதைத்தார்கள். அவன் இறந்து போனதன் ரகசியம் யாருக்கும் புரியாமல், மரணச் சடங்கு இயல்பாகவே நடந்தது. மலர் வலயங்கள் முன் நகர தேவாலயம் கொண்டு செல்லப்பட்ட பூதவுடல், பாதிரியாரின் செபித்தலின் பின்பாக, அடக்கம் செய்யப்படவேண்டிய குழிக்கு கொண்டு செல்லபப்பட்டு நகர மக்களின் அஞ்சலியின் பின் புதைக்கப்பட்டது. 

அவன் உண்மையில் இறந்து போனான் என்பதும், அவனது உடற்சூடு தணிந்து போனது பற்றியும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டபின்பே இவைகள் நடந்தேறின. 

மரணம் என்பது எல்லோருக்கும் உரியது. தங்களுக்கும் நிகழும் என்பது பற்றிய விளக்கம் அனைவருக்கும் இருந்திருப்பினும் வெகுவிரைவில் அது நிகழ்ந்து விடப் போவது பற்றியோ, அது தங்களைச் சூழ்ந்து கொண்டு விட்டதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. 

ழான் பிரான்சிஸ் சுத்தத்தை விரும்பி இருந்தான். தனது வீடு முழுவதும் அழகாகக் காட்சிதர வேண்டும் என எண்ணி அறைகள், மண்டபம், சமையலறை எல்லாவற்றையும் அழுக்கு நீக்கவென வேலை நேரம் தவிர வீட்டில் இருக்கும் காலத்தின் பல மணித்தியாலங்களை எடுத்துக் கொண்டான். அத்தோடு, வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தூசுதட்டி அழகுபடுத்தினான். மீள்பாவனைக்கு உட்படுத்தக்கூடியதும், தேவை எனக் கருத்திற் கொண்டதுமான பழைய பொருட்களை ஒரு அறையினுள் இட்டிருந்தான். அதனுள் தன்தாத்தாவின் ஞாபகத்தின் பொருட்டு வைத்திருந்த வெண்கலப் பானையும், பழைய உடுப்புக்களும் கூடக் கிடந்தன. 

எப்போதாவது மேலதிகமான விடுமுறை கிடைக்குமாக இருந்தால் அதனுள் நுழைந்து கொள்வான். அதற்கெனத் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகக்குறைந்தது தேவைப்படும். இப்படிப்பட்ட விடுமுறையை அவனது தொழில் அடிக்கடி வழங்குவதில்லை என்ற காரணத்தினால் அவ்வறையினுள் நுழைதல் வருடத்துக்கு ஒருமுறை, இருமுறையாகவே இருக்கும். அவ்வறையினுள் நிறைந்து கிடைக்கும் தூசு மூக்கினுள் நுழைந்து அதிக மூச்சிழுப்புடன் ஆஸ்த்துமாவை ஏற்படுத்திவிடும். என்பதால், அவன் மனைவியும், அதனுள் நிறைந்திருக்கும் இருட்டிற்கான பயத்தினால் மகளும் அக்கதவைத் திறப்பதே இல்லை. இருளென்பது குறைந்த ஒளி என்பது பற்றிய அறிவு கிடைக்கக்கூடிய வயதை மகள் எட்டியிருக்கவில்லை. மகன் மாத்திரம் தந்தைக்கு தெரியாமல் அதனுள் இருந்து விளையாடுவான். விளையாடுவது மட்டுமே அவனுடைய முக்கிய நோக்கமாக இருந்ததில்லை. அதனுள் கிடந்தவற்றை ஆராய்ச்சி செய்து பொழுதைக் கழிக்கவென அப்பா இல்லாத நேரங்களில் நுழையும் அவன் அம்மா தேடிக் கண்டு பிடித்தபின் அல்லது பொருட்களை உருட்டிச் சத்தத்தை எழுப்பும்போது அம்மா போடும் கூச்சலின் பின்னே தான் வெளியே வருவான். ழான் பிரான்சிஸ்ஸைத் தவிர எவரும் வீட்டைச் சுத்தப்படுத்துவதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. அன்றாடம், மனைவி கூட்டித்துப்பரவு பண்ணினாலும் பெருமளவு ஈடுபாடு அவளுக்கு இருக்கவில்லை. 

அவ்வறையைச் சுத்தம் பண்ணவென இரு நாட்கள் தீர்மானித்தானாகில் அதில் இருபத்து நான்கு மணி நேரமோ அதைவிடக் கூடிய நேரமோ எலிக்குட்டிகளை அகற்ற, எலிகளை அடிக்க, கரப்பான் பூச்சி துரத்தவெனக் கொலை செய்யும் பொழுதாக கரைந்து போகும். ஆனாலும் அவற்றை முற்றாக ஒழித்துவிட அவனால் முடிந்ததில்லை. அவைகள் முற்றாக அழிக்கப்பட்டாயிற்று எனக் கருதிப் பெருமைப்பட்டுக் கொண்ட நாற்பத்தியெட்டு மணித்தியாலத்துக்குள்ளாகவே எலியை, எலியின் சத்தத்தையோ அல்லது கரப்பான் பூச்சியையேனும் கண்டு விடுவான். இப்படியான அறையினுள் நுழைந்து அதன் சுத்தத்துக்காக மூன்று நாட்கள் உழைத்து சரியான நாற்பத்தைந்து நாட்களின் பின்தான் இறந்து போனான். 

ழான் பிரான்சிஸின் மரணம் நிகழ்ந்து ஒருவாரத்திற்குள்ளாகவே எடின் தோமஸ். பீற்றர் ஜோன் என்ற இருவரும் இறந்து போனார்கள். அவர்களிருவரும் அத் தெருவைச் சேர்ந்தவர்கள்தான். ழான் பிரான்சிஸ் உடைய மகன் கூட அவன் இறந்து ஒன்றரை மாதமளவில் இறந்து போனான். இவர்களுடைய அடக்கங்கள் சம்பிரதாயப்படி நடந்து முடிந்தன. இதன் பின்னான நாட்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு, மூன்று என நிகழ்ந்து கொண்டிருந்த இறப்பு, நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே போனது. 

செப்டம்பர் மாதத்தில் ஒருவருக்கும் அடக்கத்துக்கு முன் செய்ய வேண்டிய சம்பிரதாயமான காரியங்களைக் கூடச் செய்யமுடியா வண்ணம் கூட்டமாக இறந்து போனார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குழிகளை வெட்டிக் கிடத்த முடியாத நிலை உருவாகி இருந்ததனால். பெரியதொரு குழிவெட்டி உடல்களைத் தூக்கி வீசிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் இறப்பை ஊர்ஜிதம் செய்து கொள்ள அவகாசமேதும் கிடைத்திருக்கவில்லை. இவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வித நோய் கண்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர எதையும் அறிந்து கொள்ள முடியாதநிலை இருந்ததனால் உடற்சூடு அடங்க முன்னதாக துணியில் சுற்றிக்கட்டி எதிர்பார்த்து வெட்டப்பட்டிருந்த குழியில் இட்டு நிரப்பினார்கள். அதை மூட வேண்டிய நிலை உருவான போது இன்னமொரு பெரிய குழி தயாராக இருந்தது. நகரில் மக்கள் தொகை குறைந்து போக இறப்புகளும் குறைந்து போய் அடுத்த ஆண்டின் காற்பகுதியில் முடிவுக்கு வந்தது, கிட்டத்தட்ட அவ்வூரின் மக்கள் முற்றாக அழிந்து போனபின். 


250 ஆண்டுகள் மேற்பட்டுப் போனதன் பின் தற்செயலாகத் தோண்ட நேர்ந்த பெரியகுழி ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. தொகையான மக்கள் இறந்து போனதன் காரணத்தை ஆராய வேண்டி ஏற்பட்டது. சின்னத் தேடல்களில் இருந்த அறிவு விஞ்ஞானமாக பெருவளர்ச்சி கண்டிருந்ததனால் பாதி உக்கலும், சிதைவும் கண்டிருந்த எழும்புக் கூடுகள் ஆராய்ச்சிக்கென கொண்டு செல்லப்பட்டது. என்பு மச்சைகளைக் கிண்டி ஆய்வு நடாத்தினார்கள். எழும்புக் கூடுகளின் பெருவிரல்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணி இன்னமுமாக அவர்கள் சிந்தனையைத் தூண்டி இருந்தது. ஆய்வு பத்தாண்டுகளை அண்மித்துப் போய் இருந்ததனால் முடிவுகளை அவர்கள் வெளியிட வேண்டிய நிலையில் இருந்தார்கள். 

இறப்பைத் தளுவிக் கொண்ட எவரும் அதற்கான வயதுகளை அடைந்திருக்கவில்லை. என்பதை தாங்கள் அறிந்து கொண்டதுடன், தொற்று நோயின் காரணமாகவே இத் தொகையான மரணம் ஏற்பட்டிருக்க வேண்டுமெனக் ‘ கருதி பற்களைக் கிண்டி மரபணுக்களின் மூலம் அந்த நோயையும், காவி தன்மை – தாக்கம் என எல்லாவற்றையும் அறிந்து கொண்டதுடன், ஆணி அடிக்கப்பட்டிருந்த காரணத்தையும் ஊகித்துக்கொள்ள முடிந்ததாகத் தெரிவித்திருந்தார்கள். 

“பிளெக்” எனப்பட்ட அந்த நோய் எலி, கரப்பான்களினூடாக உடலை அடைந்து தன் வேலையைத் தொடங்கி உடலின் ஒரு துண்டு தசையைக் கட்டியாக்கி அதைப் பெருப்பித்து அழுகச் செய்து கிருமிகளை உடல் முழுவதுமாகப் பரப் நாற்பத்தைந்து நாட்களுக்குள் இறக்கடித்து விடக்கூடிய சக்தி அவற்றுக்கு இருந்ததாம். அத்தோடு ஒருவரிடமிருந்து இன்னுமொருவருக்குத் தாவிவிடக்கூடியவாறு இருந்ததனாலும் அப்போது (1720ல்) அதைக் கண்டுபிடித்துவிடவோ, தடுத்து விடவோ கூடிய எதுவித எண்ணமும் தோன்றியிராமையினாலும் தான் இப்படியாக இறந்துபோக நேரிட்டதாம். 

பெருமளவிலாக இறக்க ஆரம்பித்ததும் உடற் சூடு அடங்குமுன்னம் புதைத்ததாகவும், அதற்கு தனித்தனியே குழிகளைத் தோண்ட நேரமின்மையினால் ஒன்றாகப் போட்டிருக்கலாம் எனவும் அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். இதனால் தான் அவர்கள் இறந்து விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி காலின் பெருவிரலில் ஆணியை அடித்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முனைந்திருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்கள். 

நோயை இனங்கண்டு முடித்த பின்பே அதற்கு கறுப்பு மரணம் எனப் பெயர் சூட்டினார்களாம். 

250 ஆண்டுகளுக்கு மேலாக அவ்எலும்புக்கூடுகள் சிதைந்து போகாமல் எப்படி இருந்தது என்பதும், தோண்டப்படும் போதாவது அவைகள் துகள்களாகிக் கொள்ளாமல் அவர்கள் எடுத்து பயன்படுத்தத்தக்கதாய் இருந்தது என்பதும் அதிர்ச்சியைத் தந்தது எனக்கு, அவைகள் சரியான நிலையில் இல்லாததனாலேயே உறுதியான பற்களைக் கொண்டு ஆராய்ந்திருக்க வேண்டும். 

பின்னர் கூட பற்கள் தொடர்பாய் எனக்குத் தகவல் ஒன்று கிடைத்தது. பற்களைக் கொண்டு ஒரு மனிதனின் சரித்திரத்தைக் கூறிவிட முடியுமாம் (புறத்தோற்றத்தை வைத்து என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது) அதன் உள்ளிருக்கும் மரபணுக்களின் மூலம் – அவனுக்கு நேர்ந்த மரணம் கொலையா. தற்கொலையா, இயற்கையானதா என்றும் கூட இனங்கண்டு கொள்ள முடியுமாம். (பல்லுப் பறக்க அடிக்கும் ரகசியம் கூட அப்போதுதான் புரிந்தது) 


எந்தக் காட்சிப்படுத்தலும் தன்னை மீறி நிகழ்ந்திரா வண்ணம் எச்சரிக்கையுடையதாய் கறுப்பு – இருண்மை சூழ்ந்திருந்தது. தன்னை மட்டும் காட்டி காரணகாரியங்களை மறைத்தது. 

மரணங்கள் எல்லாமே இருண்மை சூழ்ந்த கறுப்பாய்த்தான் இருந்தன என்பதையும், – இருக்கின்றன, – இருக்கப் போகின்றன என்பதையும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமென நினைக்கின்றேன் – இது மேலோட்டமாகக் கூறியது என எண்ணிவிட வேண்டும். 

எனது தந்தை சீனி நோய் கண்டு படுக்கையில் கிடந்த வண்ணமே இறந்து போனார். அவர் நோயினால் இறந்து போனார் என ஏமாந்து போயிருந்தோம். பின் அவரது செய்கைகளை இரண்டாம் நினைவுக்குக் கொண்டுவந்தபோது அவர் வாழ்வில் ஏற்பட்ட விரக்தியிலிருந்து விடுபட உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது புரிந்தது, ஆனாலும் அவரது ஆத்மா எங்கு அலைகின்றது அல்லது மறுபிறப்பினை எடுத்துவிட்டது என்றோ, அதற்கு இதுதான் நடந்திருக்கும் என்றோ என்னால் கூறமுடியாது. -உங்களாலும் கூட- 

நான் தினமும் செல்ல வேண்டி இருந்த பேரூந்து அந்த அறுபதடி பள்ளத்தில் வீழ்ந்து விடக்கூடாது என நினைத்திருந்த பள்ளத்திலிருந்த ஆற்றில், ஒரு தாய் தன் மூன்று வயது மகளை வயிற்றில் கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை செய்து கொண்டாளாம். அவளின் வயிற்றினுள் ஆறுமாதச் சிசுவும் இருந்ததாம். அவள் கோழை எனவும், பிழைக்கத் தெரியாதவள் எனவும் ஊரவர்கள் கதைத்த வார்த்தையில் எந்த விதமான நியாயப்பாடும் இருந்ததாக அவளின் பின்புலத்தை அறிந்து கொள்ள முனைந்த போது எண்ணினேன். 

இவற்றைவிடவும் எம்பிலிப்பிட்டியும், செம்மணியும் கூட கறுப்பு மரணத்தின் வகையாகவே இருந்தது. இன்னமும் எத்தனை செம்மணிகள் உறங்குகின்றன தெரியுமா? எப்படியும் மரணங்கள் எல்லாமே கறுப்பாய்த்தான் இருக்க வேண்டும். 

– தை 2003.

– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *