பரிணாமம்
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2026
பார்வையிட்டோர்: 512

‘பாட்டி, நீங்களும் தான் என்னோட வரீங்க, சாயங்காலம், என்ன சரியா?’ தன் கூந்தலைஸ் சீவியபடியே கூறினாள், என் வயிற்றுப் பேத்தி. அவளைப் பார்த்த எனக்கு, ‘இப்படியும் ஒரு பெண்ணால் யோசிக்க முடியுமா?’ என்று தோன்றியது. முகத்தில் கவிந்த என் அலுப்பைக் கண்ணாடியில்லாமலேயே என்னால் உணர முடிந்தது.
“நான் எதுக்கு, நீ செய்யறதச் செய், இதில என்ன வேற எதுக்கு இழுக்கற ரம்யா. எனக்கு வர இஷ்டமில்லை,” என்றேன் அவள் முகத்தை பார்க்காமலேயே.
“ஐயோ பாட்டி, இதையே தானே சொல்லிட்டிருக்கீங்க. நீங்க வந்தா கொஞ்சம் ‘அட்வைஸ்’ பண்ணுவீங்கல்ல. ரகுவுக்கும் உங்க மேல ரொம்ப மரியாதை தெரியுமா. உங்க ‘ஒபீனியன்’ நிச்சயமா அவனுக்குத் தேவைன்னு நெனைக்கிறான்,” குனிந்து என் தாடையில் தன் விரல்களைக் குவித்துக் குழந்தையைக் கொஞ்சுவதைப் போல முகத்தையும் வைத்துக் கொண்டு கேட்டாள். ‘இவளுக்கு வயது இருபத்தொன்பதா, இல்லை ஒன்பதா,’ என்று முன்தினம் மனதில் எழுந்த வினா என்னுள் மறுபடியும் “அவனோட மரியாதையக் கொண்டுப் போய் அடுப்புல போடு. நா நேத்தியிலிருந்து நீயே போகாதேன்றேன். என்ன வேற கூப்டறயா?” என்றேன் கடுப்புடன்.
“ப்ளீஸ், பாட்டி வீடுல தனியா கெட்டுகொட்டுன்னு உக்காந்திருக்கறதுக்கு. எங்களோட ஜாலியா வாங்களேன், பாட்டி,” தான் சொன்னதயே திரும்பத் திரும்பஸ் சொன்னாள் ரம்யா. நான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன், பதில் சொல்லாமல் புருபுருவென்ற களையுடன் பளிசென்ற அவள் முகத்தில் இருந்த அகன்ற விழிகளும் உணர்ச்சிகளை மாற்றி மாற்றிப் பேசின.
“என்ன பாட்டி, மௌனம் சம்மதம். ஓகே செட்டில்ட். நாம போறோம். அஞ்சு மணிக்கே ஆபீஸிலிருந்து வந்துடுவேன் பாட்டி. ரெடியா இருங்க ப்ளீஸ், செல்லம்ல, பை, பை” என் கன்னத்தில் அவசரமாக முத்திவிட்டுத் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று வாயிற்கதவை நோக்கி விரைந்தாள்.
இந்தக் காலத்துப் பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நானும் எத்தனையோ முறை யோசித்துப் பார்த்து விட்டேன். ஹூம்ஹூம், எனக்கு ஆன வயதிற்கு என் பேத்தியை மட்டும் புரிந்து கொள்ள இன்னும் ஒரு ஜென்மம் எடுக்க வேண்டும் போல இருக்கிறது.
தானே திருமணம் செய்து கொண்டாள். முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு நிதானத்திற்கு நான் வருவதற்குள், மூன்றே வருடத்தில் விவகாரத்தும் செய்து விட்டாள். திருமணத்தை முடிவு செய்த அதே அவசரம் மணவிலக்கிலும். இதற்கு மட்டும் ‘இல்லவேயில்லை,’ என்று சாதிப்பாள். அவளின் வயதில் எனக்கு ஒரு பெண்ணும் ஒரு பிள்ளையும் பிறந்துவிட்டிருந்தனர். இவள் தானே தேடிக் கொண்ட வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு எதுவுமே நடக்காத மாதிரி உல்லாசமாக அலுவலகம் போய்க் கொண்டிருந்தாள். என் மகள் பூரணி, அதான் ரம்யாவின் அம்மா இதைப் பற்றிக் கவலைப்படுவதோடு சரி. மருமகனுக்கோ வாயில் ஈ புகுந்தது தெரியாமல் ஒரு பிஸினஸ். இவர்களுக்கு ரம்யாவைப் பற்றி அக்கறை இருந்த போதிலும் செயலில் ஒன்றும் காணோம். நானும் பூரணியிடம் எததனையோ முறை புலம்பி விட்டேன். அவளோ தன்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று அலுத்துக் கொண்டு, ‘முடிந்தால் நீயே முயற்சி செய்’ என்று என்னை சிங்கப்பூருக்கு விமானமேற்றி அனுப்பிவிட்டாள்.
ரம்யாவைத் தன் வேலையை விடச் சொல்லி, இந்தியாவிற்கும் கூட்டிக் கொண்டு வந்து விடுவதாய் மகளிடம் சவால் விட்டு விட்டு சிங்கப்பூர் வந்தி இதோ இரண்டரை மாதமும் ஓடிவிட்டது. செந்தோசா, ஜூரோங் பறவைப் பூங்கா என்று ஒவ்வொறு வார இறுதியிலும் பணத்தை தண்ணீராய்ச் செலவு செய்து கூட்டிக் கொண்டு போனாள். பார்க்க பார்க்கத் தெவிட்டாத அழகு தான் ஒவ்வோரு இடமும் சந்தேகமில்லை. கண்கள் இடங்களை கண்டு களிக்க மனத்தின் ஓரத்தில் வந்த நோக்கம் நிறைவேறாத கவலை ஓடியபடியே இருந்ததே, ரம்யா மட்டும் இசைந்து கொடுக்கவேயில்லை.
பாட்டிக்கு என் மேல் இருந்த அக்கறை தான் சில சமயங்களில் அவரை என்மீது கோபம் கொள்ள வைக்கிறது. மற்றபடி, அம்மாவை விட என்மீது பாட்டிக்கு தான் அதிக அன்பு. அம்மாவுக்கு என்னிடம் இருப்பது பிரியமான மாணவி மீது ஆசிரியை செலுத்தும் அன்பே. அதில் பெரிய ஒரு ஒட்டுதலைப் பார்க்க முடியாது. சிறுவயதிலேயே அம்மா தன் புருஷனுக்கும் பிஸினஸுக்கும் கொடுத்ததில் பாதி நேரத்தைக் கூட எனக்கும் அண்ணாவிற்கும் செலவிட்டது கிடையாது. பாட்டி வீட்டில் எங்களைப் படிக்க விட்டு விட்டு இருவரும் ஊர் ஊராய்ச் சுற்றி வந்தார்கள். போன வருடம் என்னுடைய ‘டிவோர்ஸ்’ சமயத்தில் கூட பாட்டி தன் கால்வலியின் காரணமாகத் தான் என்னைப் பார்க்க வரவில்லை. வர முடியவில்லையே என்று பெரும்குறை அவருக்கு. ‘டிவோர்ஸ்,’ என்றால் துக்கம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்று நினைத்த தலைமுறையைச் சேர்ந்த பாட்டி போனிலேயே பாவம் புலம்பித் தீர்த்தார். என் சமாதானம் அவரை ஆசுவாசப்படுத்தவில்லை. அண்ணாவைத் தன் சார்பாய் உடனே அனுப்பி வைத்தார்.
அண்ணா வந்தவன் எப்படியாவது என் மூன்று வருட மண வாழ்க்கையை இன்னும் பல வருடங்கள் நீடிக்க பிரயத்தனங்கள் செய்தான். “ரம்யா, மூணு வருஷம் கூட முடியவில்லையே அதுக்குள்ள உங்களுக்குள்ள என்ன பிரச்சன?”
“அண்ணா, உனக்கு இதோட எத்தன தடவ சொல்லிட்டேன். எங்களுக்குள்ள பெரிசா பிரச்சைன்னு ஒண்ணும் இல்ல. சண்டை வராமப் பிரியறது எனக்குப் பிடிச்சிருக்கு அண்ணா. ஏன்னா, அவன் ஒரு நல்ல நண்பன். அதுல சந்தேகமே இல்ல. என்னப் பத்தியும் அவன் அதையே தான் சொல்றான். ஆனா, அவனுக்கு அடக்கியாளத் தான் பொண்டாட்டி தேவைனு எங்க ரெண்டு பேருக்குமே புரிஞ்சுது. எனக்கு அடங்கிப் போக முடியல்லன்னும் புரிஞ்சுடிச்சு. உனக்கொண்ணு தெரியுமா, நாங்க ரெண்டு பேரும் ஒரே விஷயத்துல மட்டும் ஒத்த சிந்தனையுடையவர்கள்னு தெரிஞ்சுகிட்டோம்.”
“…”
“எதுலன்னு நீ கேக்கணும்.”
“எதுல?”
“உம்… அதாவது நாங்க ரெண்டு பேரும் நாலு வருஷம் நண்பர்களா இருந்தோம்ல. அப்ப இருந்த சந்தோஷம் இப்ப இல்ல. அப்படின்னா என்ன அர்த்தம்? நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸாவே இருந்திருக்கணும். பார்ட்னர்ஸா இருக்கத் தான் லாயக்கு. இப்பவும் நானும் அவனும் வெரி குட் பிரெண்ட்ஸ். பாரேன், நேத்திக்குக் கூட போன் பண்ணினான். நீதானே எடுத்த, தினமும் போன் பண்ணி பேசிக்கறோம். இந்த வீடு அவனோடது. எனக்கே எனக்கு ரெண்டு வருஷத்துக்கு வாடகையில்லாம கொடுத்திருக்கான். அதுக்குள்ள நான் செட்டில் ஆயிடுவேன்னு அவனுக்குத் தெரியும்.”
“ரம்யா, இந்த கண்டுபிடிப்புக்குத் தான் மூணு வருஷம் கல்யாணம் பண்ணி வாழ்ந்தீங்களா?”
“பின்ன? கல்யாணம் பண்ணாம சேர்ந்து இருக்கறதுக்கு நீ ஒத்துக்குவியா? இல்ல பாட்டி தான் என்ன உயிரோட விடுவாங்களா? அவ்வளவு ஏன், எனக்கே கூட அதுல இஷ்டமில்ல. அதான் கல்யாணம் பண்ணிகிட்டோம். இப்போ நண்பர்களா இருக்கறது தான் சரின்னு பிரியப் போறோம். இன்னும் ஏழே மாசத்தில ‘டிவோர்ஸ்’ கெடைச்சுடும்.”
“பாட்டி எவ்வளவு வருத்தப் படறாங்க தெரியுமா? டிவோர்ஸ்ஸை வாபஸ் வாங்க முடியாதா, ரம்யா?”
“இதைச் சொல்லத் தான் வந்தியா நீ, இல்ல, ஏன் நான் இப்ப தான் நிம்மதியா இருக்கேன். அது பொறுக்கல்லயா ஒனக்கு?”
“என்ன சொல்லற, இப்படியே தனியா இருக்கறதாப் பிளானா?”
“ஏன் தனியா இருக்கறதாப் பிளானா?”
“ஏன் தனியா இருக்கணும். எனக்கு தோணும் போது என்ன என்னோட குறைநிறைகளோட ஏத்துக்கறவன் வந்தா கல்யாணம் பண்ணிப்பேன்.”
“ஆம்பிளைகள்ள பெரிய வித்தியாசம் கிடையாது ரம்யா, அது தான் உண்மை.”
“அப்படியா, சரி அப்ப நான் இப்படியா தனியா இருந்துட்டுப் போறேன். விடு.” அன்று மட்டுமில்லாமல் தொடர்ந்து வந்த சில நட்களிலும் கூட அண்ணா என்னை எப்படியாவது விவாகரத்து விண்ணப்பத்தைத் திரும்பப் பெறச் செய்ய முயற்சித்தான். ஒன்றும் நடக்கவில்லை. கிளம்புவதற்கு முன்னால், ஏர்போர்ட்டில் வைத்துத் தான் அவன் உள்ளத்தில் இருந்த உண்மை வெளியே வந்தது. அவனுக்கு பெண்பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி. பெண் வீட்டார் என்னைப் பற்றிக் கேட்கும் போது ‘விவாகரத்து’ போன்ற விஷங்களைச் சொன்னால் சிலர் யோசிக்கிறார்களாம். முதலில் அண்ணன் மீது சின்ன எரிச்சலுடன் கோபம் வந்தாலும் அவனது அந்தச் சுயநலம் நியாயமாகப் பட்டது.
இதோ இந்த விவாகரத்துச் சட்டப்படி முடிந்து சில மாதங்களும் கடந்து விட்டன. மனப்போராட்டங்கள் இன்றி என் வரையில் நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை.
ரம்யாவைப் பொறுத்தவரை நான் ஒரு சுற்றுப்பயணி. வந்த ஒரே வாரத்தில் அதை அவள் சொல்லாமல் சொல்லிவிட்டிருந்தாள். அன்று நடந்த உரையாடல் இன்று காலையில் நடந்ததைப் போல நினைவிலிருக்கிறது.
“ரம்யா, திடீர்னு நா வந்தது எதுக்குன்னு ஒனக்குத் தெரியுமா?” மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன் பயணக்களைப்பு நீங்கத் தூங்கியெழுந்ததுமே. “உம் அண்ணா தான் எனக்கு ஈமெயில் பண்ணியிருந்தான். நீங்க வந்த அன்னிக்கு மொத நாள் தான் மெயில் வந்தது.” முகத்தை நேருக்கு நேர் பார்த்தபடியே பதில் சொன்னாள்.
“சரி, சொல்லிட்டான்ல, நல்லதாப்போச்சு. நீ உன்னோட வேலையை விட்டுடு. என்னோட சென்னைக்குக் கிளம்பு. அங்க ஒனக்கு வேலையா கெடைக்காது. ஒன்னோட தெறமைக்கிக் கூப்பிடுவானே இந்தா இந்தான்னு. நல்ல வேலையாவே கெடைக்கும். நீ…”
“பாட்டி, ப்ளீஸ் நா ஒண்ணும் சின்ன கொழந்த இல்ல பாட்டி. எனக்குன்னு முடிவெடுக்கத் தெரியும் அதோட…”
“என்ன முடிவெடுக்கத் தெரியும். இல்ல கேக்கறேன், சொல்லச் சொல்லக் கேக்காம ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டியே, அது மாதிரியா?”
“பாட்டி, ப்ளீஸ், தட்ஸ் இனஃப், போனதைப் பத்தி சொல்லிச் சொல்லிக் குத்திக் காமிக்கணுமா? இப்ப நான் இங்க இருக்கறதுனால உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“எனக்கென்ன பிரச்சனையா? உங்கம்மாவும் அப்பாவும் பிஸினஸ் பிஸனஸ்னு அலையிறாங்க. அவங்க இப்போதைக்கு மும்பைய விட்டு வரமாட்டாங்க. நீயு இங்க தான் இருப்பேன்னா, அப்புறம் உனக்கு நல்ல வழி பண்ணிட்டுத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் இருக்கானே உங்கண்ணா, அவனுக்கு என்ன பதில் சொல்ல?”
“நாந்தான் ஏற்கனவே இதுக்கும் அதுக்கும் முடிச்சுப் போட வேணான்னு சொல்லிட்டேனே பாட்டி. அண்ணாவுக்கு தாராளமா கல்யாணம் பண்ணுங்க. இப்போதைக்கு எனக்குக் கல்யாணம் வேண்டாம். எனக்கு வேணும்னு தோணிணா அப்போப் பார்த்துக்கலாம்.”
“எப்படி போன தடவ மாதிரியா?” அடக்க மாட்டாமல் நான் கேட்க…. முறைத்தாள்.
“இல்ல, ரெஜிஸ்டர் பண்ணிட்டு எனக்குக் கோபம் வருது. இந்த டாப்பிக் வேணாமே, ப்ளீஸ்…”
“வேணாம் வேணாம்னு சொல்லிகிட்டே இருந்தா என்ன ரம்யா இது? நா உன்ன வளர்த்தவ. உன் மேல அக்கறையிருக்கறதால தான் சொல்றேன். இன்னும் எத்தன வருஷம் உயிரோட இருப்பேனோ தெரியாது அதுக்குள்ள…” அடக்க முடியாமல் அழுதேன்.
“ஓகே, ஓகே, அழ வேண்டாம். இப்ப என்ன எனக்குக் கல்யாணம் பண்ணனுமா. சரி, ஒரே ஒரு வருஷ அவகாசம் கொடுங்க பாட்டி ப்ளீஸ்.”
“உம்… அப்படி ஏதாவது சொல்லு. பிடி கொடுக்காமலே பேசினா.”
“சரி சாப்பிடுவோமா…” பேச்சை மாற்ற பார்த்தாள்.
“பாத்தியா, நைஸா நழுவறே. இப்ப ரிஸைன் பண்ணிட்டு என்னோட கிளம்பு ஊருக்கு. அங்க வேல பாரு. அப்புறமா கல்யாணத்தப் பத்தி பேசிக்கலாம்.”
“இல்ல பாட்டி. அப்படியெல்லாம் முடியாது. பிராஜெக்ட் முடிய ஒரு வருஷம் ஆகும். நீங்க இருந்து ஊரெல்லாம் சுத்திப் பாத்துட்டுப் போங்க. இல்ல, பிடிச்சா இங்கயே இருங்க. நா ‘டிப்பெண்டெண்ட் பாஸ்’ அப்ளை பண்றேன்,” என்று சிறுகுழந்தைக்குச் சொல்வது போல் சொன்னாள்.
“ஐயோ, வேணாம்பா சாமி. ஒரு மாசம் கூட இருக்க முடியுமான்னு தெரியல்ல. நீயும் ஆபீஸ் போயிடற. ஒரே போர், திடீர்னு என்னோட முழங்கால் வலி ஜாஸ்தியானா, டாக்டர் செல்வரங்கத்து கிட்டப் போகணும்.”
“ஐயோ, பாட்டி, இங்கயும் நல்ல டாக்டர் இருக்காங்க பாட்டி. அந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு வேணாம்,” என்று பேச்சுத் திசை திரும்பப் பார்த்தாள்.
“நீயா பண்ணிகிட்ட கல்யாணம் ஆன அவலஷணமெல்லாம் போதும். நீ சரின்னு சொல்லு நா பாக்கறேன் மாப்பிள்ளை.”
“இவ்வளவு தானே, டபிள் ஓகே எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணினா, உங்களுக்குப் போன் பண்றேன், நீங்களே பாருங்க.”
“சரி. ஆனா, என்னோட நீ வர மாட்டே, அப்படித் தானே?”
“பிளீஸ், புரிஞ்சுக்கோங்க பாட்டி. நா நிம்மதியா சந்தோஷமா இருக்கேன். கல்யாணம் தான் வாழ்க்கையா? அதுல ஜஸ்ட் ஒரு பார்ட் தானே பாட்டி. வேறே எவ்வள்வோ இருக்கு இருக்கு.”
திருமணம் ‘ஜஸ்ட்’ ஒரு பாகமாம் வழ்க்கையில். சரி அப்படியே வைத்துக் கொண்டாலும் அந்த பாகம் ஒரு முக்கிய பாகம் என்று நான் விடாமல் வாதாட வேண்டியிருக்கவில்லை. ரம்யாவே ஒத்துக் கொண்டாள் முக்கிய பாகமென்று. ஏன் சட்டென்று விவாகரத்து செய்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கும் மிகவும் நிதானமாக பதில் வந்தது. முகத்தில் இருந்த சிரிப்பு மட்டும் மறைந்து லேசான வாட்டம் வந்தது. ஆனால், மிகத் தெளிவாக இருந்தாள் என்பது அவளின் பதில் வந்த தொனியிலும் வார்த்தைகளிலும் தெரிந்தது. கல்யாணத்தில் அவசரம் காட்டினார்களாம். விவாகரத்துக்கு அவசரப் படாமல் சேர்ந்த் உட்கார்ந்து முடிவெடுத்தார்களாம். அவளின் இருண்ட நினைவுகளை மேலும் மேலும் பேசி உயிர்பிக்க விரும்பாமல் நானும் அன்று பேச்சை மாற்றினேன். எப்படியும் நீயே மாப்பிள்ளை பார் என்று சொல்லியிருக்கிறாளே என்று எனக்குச் சமாதானம் அடைய மட்டுமே முடிந்தது அன்று.
பாட்டிக்கு பயம், நான் ஒரேயடியாகக் கல்யாணமே கல்யாணமே வேண்டாமென்று சொல்லிவிடுவேனோ என்று. அதோடு நான் ரகுவோடு சிநேகமாய் இருப்பதும் பிடிக்கவில்லை. அதை ஜீரணித்துக் கொள்ளவும் முடியவில்லை அவரால். நான் ரகுவிற்கு உதவுதையும் அவரால் ஏற்க முடியமால் தவிக்கிறார். பாவம் பாட்டி, மாறி வரும் காலத்திற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. என்னிடம் இருக்கும் அக்கறையும் அன்புமே அவரைத் தனக்கு உடன்பாடில்லாத விஷயங்களை வாழ்வில் சந்திக்க வைக்கின்றன. அதனால், என்னுள் ஒரு குற்றவுணர்வு முளைத்து வளர்ந்தபடியிருந்தது. ஆனால், அதற்குத் தீர்வாய் எதையும் என்னால் யோசிக்க முடியவில்லை. எங்களுக்குள் இருந்த பரஸ்பர அன்பிற்கு விலையாகவே அவற்றைப் பார்க்க முடிந்தது என்னால்.
நான் பள்ளியிறுதியில் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது பாட்டியின் ஒன்று விட்ட அண்ணாவின் மகள் விவாகரத்து செய்த செய்தி வந்தடைந்தது. சில வாரங்களிலேயே நாங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்திற்குப் போயிருந்த போது, அதைப் பற்றியே எல்லோரும் பேசினார்கள். சுடச் சுடக் கிடைத்த அந்தச் செய்தி அவர்களின் வெறும் வாயில் அரைபட்ட அவலானது. திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள் நகை புடவையைப் பற்றியும் கூட மறந்து இதைப் பற்றியே பேசித் தீர்த்தார்கள்.
“ஒரே சண்டையாமே ரெண்டு வருஷமாவே அவங்க ரெண்டு பேருக்கும்…”
“கோர்ட் படியேறி ஒருத்தர ஒருத்தர் நார் நாராக் கிழிச்சிக்கிட்டாங்களாமே, ஒருத்தர் முகத்த ஒருத்தர் இனிமே பார்த்துக்க வழியில்ல. நாலு சுவத்துக்ள்ள இருக்க வேண்டியதையெல்லாம் கடைப் பரப்பி, கண்றாவி…”
“பிள்ளைங்க ரெண்டும் இப்ப நடக்கறது புரியாம நடுவுல மாட்டிகிட்டு முழிக்கிறதுங்களாம், பாவம்…”
“உம்… அவ ராங்கிக்காரி தான்னு எனக்கு எப்பவோ தெரியும். ஒரு தடவ அவங்க வீட்டுக்குப் போயிருந்த போது…”
“இல்லங்க, அந்த ஆளு தானேமே எல்லாத்துக்கும் மூல காரணம். நடத்த சரியில்லன்னு பேசிக்கறாங்க.”
பாட்டி வீட்டுக்கு வந்ததும் கூட அதையே பேசிக் கொண்டிருந்தார். எங்களுக்கெல்லாம் சலிப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. ஒருவரைப் பற்றிப் பேசுவதில் கூட நியாயமும் நாசூக்கும் இருப்பதை ஏனோ எல்லோரும் மறந்து விடுகிறார்கள். பாட்டியால் அப்படியெல்லாம் கூடப் பேச முடியுமா என்று அன்று நான் வியந்தேன். வார்த்தைகள் சற்று காட்டமாகயும் கீழ்தரமாயும் இருந்தன. குடும்பத்தோட பெயர் கெடுக்க வந்த கோடாலிக்காம்பு, என்றெல்லாம் கண்டபடி பேசினார். அண்ணாவும் நானும் முகம் சுளித்துக் கண்களாலேயே கண்டனம் தெரிவித்தோம். தன் அண்ணாவின் மகளை விமர்சித்த அன்று பாட்டிக்குத் தன் சொந்த பேத்தியே பின்னாளில் விவாகரத்து செய்வாள் என்று தெரிந்திருக்கவில்லை. ஒரு வேளை தெரிந்திருந்தால் அப்படிச் சொல்லியிருக்க மாட்டாரோ?
வருடங்கள் உருண்டதில் பாட்டியின் காதுகள் விவாகரத்துச் செய்திகளுக்குப் பழகிவிட்டன. கல்யாணச் செய்தி போல அதுவும் அடிக்கடி அவரை அடைந்ததில் அவருக்கு டிவோர்ஸ் என்பது பெரிய விஷயாமாய் இல்லாமல் போனது. ஆனால் பிரிந்தவர் எலியும் பூனையுமாக பார்த்த அவருக்கு பிரிந்தவரிடையே நிலவக் கூடிய நட்பு முகம் சுளிக்க வைக்கிறது. இதை ஏற்க பாட்டிக்கு இன்னும் சில வருடங்கள் வேண்டுமோ?
காலம் செய்யும் ஜாலம் தான் எத்தனை பிரமிக்க தக்கது? தக்கது? ஐந்து வருடங்களுக்கு முன்னர் ‘ஏற்பாடு’ செய்யப்படும் ‘திருமணம்’ எல்லாம் ஒரு திருமணமா என்று விவாதித்துக் கொண்டிருந்த எனக்கே இன்று வாழ்க்கைக் கூறுகள் பலவற்றைப் பலரும் பார்த்து ஆராய்ந்து ஏற்பாடு செய்யும் திருமணத்தில் மிகுந்த நம்பிக்கை வந்திருக்கிறது. வாழ்வின் முக்கிய பாகமான திருமணத்திற்கு இணையும் இருவரின் தேர்வு மட்டுமே எப்போதும் சரியாக இருக்க வழியில்லை. இரண்டிலும் விதிவிலக்குகள் இருக்கவே செய்கின்றன. பொதுவாகக் கூறவும் வழியில்லை. எனக்கு ஒரே ஆறுதல் கல்யாணம் செய்து கொண்டு உடனே பிள்ளை பெறாமலிருந்ததுது. இல்லையென்றால், சுமுகமாகப் பிரிந்து பழைய நட்பு தொடர்வதில் எனக்கிருந்த பெருமையெல்லாம் அர்த்தமில்லாது போயிருக்கலாம். பாட்டி மேலும் வருத்தப்பட்டிருப்பார். அந்த விதத்தில் நன்மையாகவே நடந்திருக்கிறது.
மாலையில் விருந்துக்கு பாட்டி வருவாரா என்று மறுபடியும் தோன்றியது. காரை கார்ப் பார்க்கிங்கில் நிறுத்தும் போது, அதன் பிறகு வேலையில் புதைந்ததில் எண்ணங்கள் தற்காலிகமாய் விடைபெற்றன.
மதியம் வீட்டை சுத்தம் செய்யும் பகுதி நேரப் பணிப்பெண் வந்து என் மதியத் தூக்கத்தை கெடுத்தாள். அவள் வேலையையெல்லாம் முடிக்கும் வரை சஞ்சிகையொன்றைக் கையி வைத்துக் கொட்டாவியை அடக்கியபடி படிக்க முயன்றேன். மனம் அதில் லயிக்கவில்லை. மீண்டும் மீண்டும் ‘போக வேண்டுமே’ என்று அலுத்துக் கொண்டது. ரம்யாவிற்கும் ரகுவிற்கும் தெரிந்த ஒரு கல்யாண விருந்தாம். அங்கு ரகுவிற்காக அவன்வீட்டில் பார்த்திருந்த பெண்ணின் குடும்பமும் வருகிறதாம். கிட்டதட்ட ஒரு பெண் பார்க்கும் படலம் தான். இதில் ரம்யாவின் விருப்பம் தான் ரகுவிற்கு முக்கியமாம். என்ன தலைமுறையோ இந்த தலைமுறை! இவர்கள் போக்கு சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.
மாலையில் சொன்னாற் போலவே சீக்கிரமே ரம்யா வீட்டிற்கு வந்தாள். எனக்கு விருந்துக்குப் போக விருப்பமில்லாவிட்டாலும் அவளுக்காகவே கிளம்பித் தயாராய் இருந்தேன்.
விருந்துக்கு வந்திருந்தவர்கள எல்லோருமே என்னருகே வந்து மரியாதையாகப் பேசினார்கள். ரகுவும் வந்து காலைத் தொட்டு, “ஆசீர்வாதம் பண்ணுங்கப பாட்டி” என்றான்.
நான் ரம்யாவின் முகத்தைப் பார்த்தபடியே, “உம்.. உம்..நல்லா இரு,” என்றேன்.
“நீங்க என்ன பாட்டி நினைக்கிறீங்க லதாவப் பத்தி. ரம்யா அவளோட பேசிட்டு ஓகே சொல்லிட்டா. அடுத்து நீங்க தான் சொல்லனும்.”
“நா என்ன சொல்லணும்?”
“சொல்லுங்க, உங்க ஒபீனயனச் சொல்லுங்களேன்.”
“ஏன், நா வேணான்னா நீயும் வேணாம்னு விட்டுடுவியா?’ என்று சீண்டினேன்.
“அஃப் கோர்ஸ், பின்ன? நீங்க எவ்வளவு அனுபவ சாலி, உங்க கருத்துக்கு நிச்சயம் மரியாதைக் கொடுக்கணும் இல்ல. அதுக்கப்புறம் என்ன?” என்றேன் சிரித்தபடி.
“அதான் ரம்யா சொல்லிட்டா இல்ல. அதுக்கப்பறம் என்ன?” என்றேன் பட்டும்படாமலே.
“அதுவும் சரிதான். ரம்யாவை விட என்ன வேற யார் நல்லா புரிஞ்சிக்க முடியும். அவளோட சாய்ஸ் தான் லதா. அவ அதிகம் படிக்கல்ன்னாலும், அழகா அடக்கமா இருக்கா. வேலையையும் விட்டுடுவாளாம், நான் சொன்னா. லதா எனக்கு பொருத்தமா இருப்பான்னு ரம்யா சொல்றா,” சிரித்துக் கொண்டே என் மனதில் ஓடியதை அறியாமல் கேட்டான் ரகு.
“பொருத்தமாவா இல்ல தோதாவா?”
“என்ன ரம்யா, பாட்டி நல்ல மூடுல இல்லையா? என்னாச்சி?”
“அவங்கள விடு ரகு, லதா வீட்டுல என்ன சொல்றாங்க?”
“அவங்களுக்கு ஓகே. நாந்தான் ரம்யா சொல்லட்டும்னு உனக்காகக் காத்திருக்கேன். இப்ப நீயே லதா அம்மா கிட்ட சொல்றியா?”
“எனக்கொண்ணும் இல்ல. நீ வேணா ரெண்டு நாள் யோசிக்கிறதா இருந்தா யோசியேன்.”
“இல்ல யோசிச்சிட்டேன் ரம்யா.”
“அப்ப சரி, நாம்போய் சொல்றேன். நீயும் என்கூட வா.”
இருவரும் பேசிக் கொண்டே பெண்ணின் பெற்றோரை நோக்கி நடந்து செல்வதைப் பார்த்த எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இவர்களுக்கெல்லாம் வாழ்க்கை விளையாட்டாகிவிட்டதா, இல்லை ஆராய்ச்சி களமாக நினைக்கிறார்களா?”
எல்லோருமாக மறுபடியும் என் என் இருக்கைக்கு அருகில் வந்து, “அம்மா சாப்பிட்டீங்களா? வேற எதும் வேணுமா?” என்று பெண்ணின் அம்மா விசாரித்தார். அங்கே இருக்கைகளில் எல்லோரும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர். ரகுவும் லதாவும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். பெண்ணின் அம்மா,” ரகு டிவோர்ஸ் பத்தியெல்லாம் சொல்லிட்டாரு. சொல்லப் போனா போன வாரமே சம்மதம் சொல்லியிருக்கணும். அவங்கம்மா அப்பாவோட ‘யூஎஸ்’கு போன் பண்ணிப் பேசிட்டோம் ரகு தான், ரம்யா பார்த்துச் சொல்லுவான்னு சொன்னாரு. க்ளோஸ் பிரெண்ட்னும் சொன்னாரு. நீங்கள்ளாம் ஃபெமிலி ப்ரெண்ட்ஸாம்மா?”
“உம்… ஃபெமிலியாயிருந்து ப்ரெண்ட்ஸ் ஆனவங்க…” என்றபடியே சாதாரணமாக முகத்தை வைத்துக் கொள்ள முயன்றேன்.
“இல்லங்க, உங்களுக்குத் தெரியும்னு நெனைச்சேன். ஏன் ரகு நீ இவங்க கிட்ட சொல்லல்ல? உம்?…” சமாளித்தாள் ரம்யா நடுவில் குறுக்கிட்டு. சொல்லிவிட்டு என்னையே முறைத்தாள்.
“ஹும்ஹும், சும்மா ப்ரெண்ட்னு தான் ரம்யா சொல்லியிருக்கேன்,” என்று ரகு சொன்னான்.
“ஓ, ஓகே நானே சொல்லிடறேன். லதா… ரகு தான் என்னோட எக்ஸ்ஹஸ்பண்ட், அவனப் பத்தி அவனவிட எனக்குத் தான் நல்லாத் தெரியும். வி ஆர் வெரி குட் பிரெண்ட்ஸ்.”
![]() |
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மாதம் பிறந்தது
விந்தியா
May 22, 2026
உயர்ந்த உள்ளம்
எஸ்.ராமமூர்த்தி
May 22, 2026
