அலமாரியில் ஒரு இடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 22, 2026
பார்வையிட்டோர்: 315 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

“பழைய இரும்பு… பேப்பர்…”

குரல் தெருவில் முதலில் போகும். சுலைமான் பாய் அதற்குப் பிறகு வருவார்.

ஊரின் வீடுகள் அவருக்குத் தெரியும் — யார், எப்போது, என்ன கொடுப்பார்கள் என்று. பள்ளிவாசல் தெருவிலுள்ள வீடுகள் வெள்ளிக்கிழமைக்கு பிறகு செய்தித்தாள்களை கட்டிப்போடுவார்கள். நகர்ப்புற வங்கி குடியிருப்பில் மாதம் ஒருமுறைதான் அழைப்பார்கள் — ஆனால் ஒரு முறை என்றால் மூட்டை நிறைய.

சுலைமான் பாய் அவசரப்பட மாட்டார். கதவுகள் திறக்கும் வரை காத்திருப்பார்.

மடக்கிய செய்தித்தாளை விரிப்பார். மூன்று மடிப்புகள் — ஆழமாக இருந்தால், அதை தனியே வைப்பார்.

மாலையில் வீட்டுக்குள் நுழையும் போது, கதவு சத்தம் மட்டும்.


அன்று நண்பகல்,

வாங்கிய பொருட்களை சாலையோரத்தில் உட்கார்ந்து பிரித்துக்கொண்டிருந்தார்.

அருகில் குப்பைத்தொட்டிக்குப் பக்கத்தில் ஒரு கறுப்பு பை.

சுலைமான் பாய் அதை எடுக்கவில்லை. முதலில் காலால் ஒதுக்கினார்.

பை திறந்தது. காகிதங்கள் காற்றில் கிளம்பின.

ஒரு காகிதம் – அவர் கைக்கு வந்தது.

புகைப்படம்.

கருப்பு வெள்ளை. ஓரங்கள் மஞ்சளாகி இருந்தன.

நான்கு பேர் – இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள். பின்னால் ஒரு வீடு. வாசலில் காகிதத் தோரணங்கள்.

எல்லோரும் கேமராவை பார்க்கிறார்கள்.

ஒருத்தி மட்டும் – முன் வரிசை, வலது பக்கம். கைகளை வயிற்றில் கட்டிக்கொண்டு. முடி பின்னல் தளர்ந்து தோளில். விரல்களில் மருதாணி — கருப்பு வெள்ளையில் மங்கலான சாயம்.

சுலைமான் பாய் புகைப்படத்தை திருப்பினார்.

பின்னால் பேனாவில்:

1962.

குல்சும்மோட நிக்காவுக்கு அடுத்த நாள். நம்ம வீடு.

அடித்து அடித்து எழுதிய சில கிறுக்கல்கள்.

லாரி ஹார்ன் அடித்தது. சுலைமான் பாய் புகைப்படத்தை சட்டைப் பையில் போட்டார்.


மதியம் — ஒரு தேநீர் கடை.

அப்துல்காதர் டீ வாங்கிக் கொடுத்தார். சுலைமான் பாய் குடிக்காமல் கையில் வைத்திருந்தார்.

“என்னாச்சு பாய்?”

சுலைமான் பாய் புகைப்படத்தை மேஜையில் வைத்தார்.

அப்துல்காதர் கண்ணாடியைச் சற்றே மேலே தள்ளி பார்த்தார். ஒரு நொடி. இன்னும்.

பிறகு புகைப்படத்தை மெதுவாக வைத்தார்.

“குல்சும்னு இருக்கு பின்னாடி.”

“ஆமா.”

“ஊர்ல யாராவது இருப்பாங்க.”

“யார்?”

அப்துல்காதர் தெருவைப் பார்த்தார். சிறிய இடைவெளி.

ஒரு நாய் அந்தப் பக்கம் கடந்து போனது.

“தூக்கிப்போடுங்க.” –

டீயை ஒரே மூச்சில் குடித்தார்.

சுலைமான் பாய் கையில் –

டீ மேல் மெல்ல ஆடை பிடித்தது.


மாலையில் சுலைமான் பாய் பள்ளிவாசல் பக்கம் போனார்.

வெளியே அவரைப் போலவே வயதானவர்கள். புகைப்படம் கையில் சுற்றியது.

முதல் இரண்டு பேர் புகைப்படத்தை பார்த்தார்கள். தலை ஆட்டி திரும்பினார்கள்.

மூன்றாவது — உஸ்மான் ஹாஜி.

புகைப்படத்தை கையில் எடுத்தார். கைகள் அசையவில்லை. புகைப்படம் மட்டும் கொஞ்சம் கீழே இறங்கியது.

“இது… அந்த… ஜமீலா… மனோர்…”

நின்றார்.

“அவரோட வீட்டுல… கல்யாணம் நடந்தது…”

புகைப்படம் திரும்பியது.

“இதுல யாரு குல்சும்?”

“தெரியல.”

தோள் சற்றே அசைந்தது.

பாங்கு — தொடங்கியது. முடிந்தது.

“குப்பையிலயா கெடந்துச்சு?”

“ஆமா.”

அவர் கையைச் சற்றே துடைத்தார். சட்டைப் பையிலிருந்து தஸ்பீஹு. எண்ணத் தொடங்கினார்.


அன்று இரவு,

சுலைமான் பாய் புகைப்படத்தை மீண்டும் எடுத்தார்.

வலது பக்கம் நிற்கும் பெண் — கைகளை வயிற்றில் கட்டிக்கொண்டு. எல்லோரும் கேமராவை பார்க்கிறார்கள். அவள் மட்டும் — சற்று, மிகவும் சற்று — பக்கவாட்டில்.

உயர்த்தி பிடித்தபோது, தூசி கண்ணில் பட்டு உறுத்தியது.

ஜன்னலோரமாக வெளியே வீச கை நீண்டது.

காற்று புகைப்படத்தை திருப்பியது.

“குல்சும்மதான் சுலைமானுக்கு…” – அம்மா சொன்னதும், அப்பா சிரித்ததும் நினைவுக்கு வந்தது.

அவர் மீண்டும் அந்த முகத்தைப் பார்த்தார்.

கை நீண்டபடியே நின்றது.

பிறகு கையை மடக்கி,

புகைப்படத்தின் மடிந்த ஓரத்தை விரலால் நிமிர்த்தினார்.

அது முழுக்க நேராக ஆகவில்லை.

அலமாரியில் ஒரு இடத்தில் வைத்தார்.

அங்கே ஒரு புகைப்படம் மட்டுமே இருந்தது.

பல வருடங்களாக.

இப்போது – இன்னொன்று.

சு.அப்துல் கரீம் சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *