கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2026
பார்வையிட்டோர்: 85 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆபத்துக்குப் பாவமில்லை! 

காரணம் சொல்லி ஷகீலாவை அழைக்கிறார்கள். காலையில் இருந்து நாலைந்து பேர் வந்து விட்டார்கள். “அல்லா மேலே பாரத்தைப் போட்டுட்டு வாம்மா…!” 

கடைசியாக வந்து இப்பொழுது அழைப்பது ஹலீம் ஹாஜியாரின் மனைவி மீரா உம்மாள். மிகவும் வேண்டிய மாது. 

“போகலாமா? போசு முடியுமா?” 

“யோசனை பண்றதுக்கு இப்ப நேரமில்லே ஷகீலா. எந்த நேரத்திலேயும் உன் வாப்பாவுக்கு எதுவும் ஆவலாம்… கடைசியா ஒரு தரம் பார்த்துக்க வேணாமா? நாளைக்கி நீ அழுவப்புடாது, பாரு. ம்… பெறப்படும்மா!” 

”கடைசியாகவா? அப்படியென்றால்…?” 

“சக்கராத்து ஹால்லே இருக்காங்க உன் வாப்பா… இந்த நிமிசமோ அடுத்த நிமிசமோன்னு இருக்கு!’ 

மரணப் போராட்டத்தில் இருக்கும் தகப்பனாரைப் பார்க்க, யார் யாரோ வந்து ஷகீலாவை அழைக்கிறார்கள். சொந்த மகள் கல்லாக நிற்கிறாள். 

“இல்லை… கல்லாக இருக்கவில்லை. உடைந்த தக்காளிப் பழமாகியிருக்கிறது உள்ளம். வெளிக்காட்டிக் கொள்ள முடியாதபடி வேதனை பிழிந்து எடுக்கிறது. 

தோளிலும், மடியிலும் போட்டு, செல்வச் செழிப்பில் சீராட்டிப் பாராட்டிய தந்தை முடிவை நோக்கிக் கொண்டிருக்கிறாராம். 

ஷகீலாவின் சகோதரிகள், குழந்தைகள், மச்சான்மார் களும் ஒருவர் பாக்கியில்லாமல் வந்து விட்டார்கள். இவள் தான் பாக்கி என்று, மீராஉம்மாள் சொல்கிறாள். “வீட்டுப் படியைத் தாண்டினால் நீ வேறு, நான் வேறு!” என்று கட் டின புருஷன் சட்டம் போட்டிருக்கிறான், அதை மீறிச்செல்ல முடியுமா? 

சிக்கந்தர் அந்த விஷயத்தில் நெருப்பாக இருக்கிறான் என்பது ஷகீலாவுக்குத் தெரியாதது அல்ல. 

பத்துநாட்களுக்கு முன்னால்- “வாப்பா ரொம்ப முடியாம கெடக்குறாங்களாம்…” 

ஷகீலா முணுமுணுத்தாள். 

“நீ அங்கே போகணும்கிறியா?’ என்றான் சிக்கந்தர்.

“ஒவ்வொருத் தரும் ஒவ்வொரு விதமா பேசறாங்க அதுக்கு எடங்குடுக்காமெ ஒரு தடவை மட்டும்…” 

“முடியாது…….முடியாது!’ 

ஆவேசமான மறுப்பு. மனைவியின் மீது அன்பைப்பொழி கிறவன், மாமனார் விஷயத்தில் மட்டும் அக்னிப் பிழம்பாகி விடுகிறான். 

”ஷகீலா…எனக்கு மானம் மரியாதை முக்கியம். அது மாதிரியே நீயும் எனக்கு முக்கியம். நான் உனக்கு முக்கி யம்னு நீ நெனச்சா, அங்கே போறதைப்பத்தி நெனக்கக் கூடாது. தகப்பனார் தான் முக்கியம்னு நெனச்சா, நீ தார ளமா அங்கேயே போயிடலாம், நெரந்தரமா…!” 

வேறென்ன சொல்ல வேண்டும்? இதற்கு மேலேயும் சொன்னான். 

தன் பேச்சை மீறி, தகப்பனார், வீட்டுக்கு ஷகிலா போனால், அந்த நிமிஷமே அவர்களிடையே “தலாக்” ஏற் பட்டு விட்டதாக ஆகிவிடும் என்றானே! ஆறு வருட மண வாழ்க்கை ரத்தாகி விடும் என்பது சாதாரண எச்சரிக்கையா? 

ஷகீலா பிறந்த வீட்டை மிதித்து, இரண்டு வருடம் ஆகப்போகிறது. 

மாமனாரின் முகத்தில் விழிக்கப் போவதில்லை என்று பிர மாணம் எடுத்துக் கொண்டவன் போல், விலகி நிற்கிறான் சிக்கந்தர். ஷகீலா அவன் நிழலாகவே இருக்கிறாள். 

“படிச்ச பையன்னு ஷகீலாவைக் கட்டிவச்சேன். பையன் தேறமாட்டான் போல இருக்கு, மத்த மருமகப்பிள்ளைங்க மாதிரி முன்னுக்கு வரமாட்டான் போல இருக்கு!” 

சிக்கந்தர் காதில் விழுகிற மாதிரி, பலமுறை மாமனார் பேசியிருக்கிறார். 

“மத்த பொண்ணுங்க கண்ணுக்கு அழகா சீர் சிறப்பா குடும்பம் நடத்திக் கிட்டிருக்காங்க. ஷகீலாவை இந்தப் பையனுக்குப்போய் கட்டி வச்சேனே…!” என்று அவர் முணு முணுக்கவில்லையா? 

சிக்கந்தர் பட்டதாரி. சுமாரான வசதியுள்ள குடும்பம் தான். கொஞ்சம் நிலபுலன்கள் இருந்தன. பொருத்தமான வேலையை எதிர்பார்த்திருந்த போதுதான் ஷகீலாவை அவ னுக்குக் கட்டி வைத்தார் காதிர் முகியிதீன். அவருடைய மற்ற மாப்பிள்ளைகளைப்போல் சிக்கந்தர் பகட்டாகவும் பசையாகவும் இல்லை என்ற குறை அவருக்கு. 

மாமனாரின் மனக்குறை பலமுனைகளில் சிக்கந்தரை தாக் கிக் கொண்டிருந்தது. ஷகீலாவை ஒரு நாள் நிமிர்ந்து பார்த்து விட்டு வியந்து நின்றான் சிக்கந்தர். “என்ன ஷகீலா இது? நகை நட்டெல்லாம் என்ன ஆச்சு?” 

பதில் சொல்லமுடியாமல் மிடறு விழுங்கினாள்.

”ஓ! நான் நெனைக்கிற மாதிரிதான் நடந்திருக்கணும்!”

“என்ன சொல்றீங்க?”-ஷகீலா தழுதழுத்தாள்.

“உன்னோட நகைகளை ஒவ்வொண்ணா வித்து சாப்புட்டுடு வேன்னு நெனைச்சி பத்திரமா கழட்டி வச்சிக்கிட்டார் உன் வாப்பா இல்லையா?” 

ஷகீலாவின் முகம் விழுந்து விட்டது. 

“பொட்டில் அடித்த மாதிரி இத்தனை கச்சிதமாக நடந்ததை உடைத்துச் சொல்லி விட்டானே! எப்படி முடிந்தது இவனால்?” 

கண்ணை கசக்கிக் கொண்டாள். 

‘’பரவாயில்லை ஷகீலா! இது நான் எதிர்பார்த்ததுதான். அதனாலேதான் சொல்ல முடிஞ்சது நடந்ததை.” 

ஷகீலா சங்கடப்பட்டாள். “இவ்வளவு நடந்தப்புறம் மாமனார், மருமகன்கிற பந்தத்துக்கு இடம் இல்லை. அதனாலே புருஷனா, தகப்பனாங்கிறது இப்ப உனக்குப் பிரச்னை. எங்கே இருக்கிறது பாதுகாப்புன்னு நீ நெனைக்கறியோ, அங்கே நீ இருக்கலாம், ஷகீலா. நான் சுயநலக்காரன் இல்லே…ஆனா சுயமரியாதை உள்ளவன். உன்னுடைய சுகத்தையும் திருப்தியையும்தான் நான் பெரிசா நெனைக்கிறேன்!” விவாதங்களுக்கு அவன் இடம் வைக்கவில்லை. 

அவள் தாண்ட முடியாதபடி ஒரு கோட்டைக் கிழித்து விட்டான். 

சிக்கந்தர் ஊரிலில்லாத நேரத்தில் சோதனை ஏற்பட்டிருக்கிறது. அவன் வெளியூருக்குப் புறப்பட்டுப் போய்  நான்கு நாட்கள் ஆகிவிட்டன. வெளிநாட்டுக்குப் போக வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஷகீலா அதை விரும்பவில்லை. 

”ஷகீலா! என் பேரிலே எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்வாப்பாகிட்டே நான் பணம் காசை எதிர்பார்க்கலே. உன் நகைகளை கழட்டி வாங்கிக்கிட்டாரே அவர், அதைவிட ஒரு பெரிய அவமதிப்பு எனக்கு இருக்க முடியாது… அந்த அளவுக்கு உனக்கு நகை பண்ணிப் போடற வரைக்கும் எனக்கு நிம்மதி கெடையாது…” என்றான். 

அழுதாள். 

ஆதரவோடு கண்ணீரை துடைத்துவிடப் போனான். கண்ணீரை இப்பொழுது கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரே யொரு முறை, கடைசியாக, தந்தையைப் பார்த்து விட்டு கண்ணீரைக் கொட்டிவிட்டு வரவேண்டும் என்று துடிக்கிறாள். 

முடிகிற காரியமா? 

“ஷகீலா ! யோசனை பண்ணிக்கிட்டிருக்கப் புடாது. இந்நேரம் அங்கே உன் வாப்பாவுக்கு என்ன ஆச்சோ தெரி யலே, இப்ப சிக்கந்தர் வீட்லே இருந்தா, ஆபத்துக்குப் பாவம் இல்லேன்னு உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிருக்கும்.நீ கெளம்பும்மா…” 

மீரா அம்மாள் தூண்டுகிறாள். தோளைப்பற்றி இழுக்கி றாள். எப்படியோ துணிவு வந்து விட்டது. 

ஷகீலா கிளம்பிவிட்டாள். வீட்டில் மற்றவர்களுக்கு இழப்புதான், ஆமாம், காதிர் முகியிதீன் போய் விட்டார் என்ற துயரம். 

ஷகீலாவுக்கு இரட்டை இழப்பு துயரத்திற்கு எல்லை இருக்கவில்லை. 

தகப்பனாரை அள்ளிக் கொடுத்தாகி விட்டது.

கணவனின் ஆதரவும் அல்லவா போய்விட்டது!

செய்தி ஊர் முழுவதும் பரவி விட்டது. 

சிக்கந்தரின் வார்த்தையை மீறி வாப்பாவைப் பார்க்க வந்ததால் அவனுடைய “தலாக்” எச்சரிக்கை ஷகீலா விஷயத்தில் ஊர்ஜிதமாகி விட்டது என்று மூலைக்கு மூலை பேச்சு!

வீடு விடியவில்லை. ஒரு துன்பம் போதாது என்று இன் னொரு துயரம், ஷகீலா கேள்விக் குறியாக இருந்தாள். அவள் நிலைமை என்ன? அனாதையா? வாழா வெட்டியா? 

கணவனிடம் திரும்பிச்செல்ல மார்க்கம் இல்லை என்கிறார்கள். ஏதோ ஒரு வேகத்தில் சிக்கந்தர் விவாகரத்து எச்சரிக்கை கொடுத்திருந்தாலும் அது செல்லுபடியாகும் என்று பெரியவர்கள் கூறுவதாகப் பேசிக் கொள்கிறார்கள். அத்தனை சுலபத்தில் அறுத்து எறியக்கூடிய உறவா அது? ஷகீலா துவண்டு விழுந்திருக்கிறாள். சோறு தண்ணீர் கிடையாது. தூக்கம் இல்லை. ஓயாத கண்ணீர். 

என்ன நடந்திருக்கிறது. சிக்கந்தருக்கு கண்ணைக் கட்டி விட்ட மாதிரி இருந்தது. 

ஷகீலா இல்லாத வீடு வீடாகத் தெரியவில்லை அவனுக்கு. வேலைகளை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பியவன் அப்படி ஓர் அதிர்ச்சியை எதிர்ப்பார்க்கவில்லை. மாமனார் மண்ணறைக்குப் போய்விட்டார் என்ற தகவல் பஸ்ஸை விட்டு இறங்கியதுமே அவனுக்கு எட்டி விட்டது. 

ஷகீலா தாய் வீட்டுக்குப் போய் வாப்பாவின் கடைசி நேரத்தில், பக்கத்திலேயே இருந்தாள் என்பதும் செவியில் விழுந்தது. 

அவள் தந்தையை இழக்கப் போய், அவளைச் சிக்கந்தர் இழந்து விட்டானா? 

மனம் தறிகெட்டு அலைந்தது வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தான். 

அறை, கட்டில், பெட்டிகள், பீரோ, கொடியில் ஷகீலா வின் புடவைத் துணிமணிகள் எல்லாம் அப்படியப்படியே இருக்கின்றன. 

இனி இவற்றின் கதி என்ன? திருப்பியனுப்பி விட வேண் டுமா? ஷகீலாவின் நிழல் கூட இனி இந்த வீட்டில் படமுடியாதா? 

ஆதரவாக யாராவது தன்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும் போல் தவிப்பு, அவனுக்கு. 

ஷகீலாவே போய்விட்ட பிறகு யார் வரப்போகிறார்கள்?

”சிக்கந்தர்!” வாசலில் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். 

ஹலீம் ஹாஜியார்! மீராஉம்மாளின் கணவர். அவனு டைய மாமனாரின் நண்பர். வந்தவரை உட்காரச் சொன் னான். 

“நீ வந்தது கேள்விப்பட்டதும் கெளம்பி வர்றேன்..!'” நிரம்பப் பேசுவார் போல் தெரிந்தது. 

“அல்லா நாடினது நடக்கும் காதிர் முகியிதீன் போய்ச் சேர்ந்திட்டார். கடைசி வரைக்கும் அவருக்கு ஒரே கவலைதான்…!” 

“என்ன பெரிய கவலை வேண்டியிருக்கிறது, அந்தக் கல் நெஞ்சக் காரருக்கு!” அவனுக்கு குமுறலாகவே இருந்தது.

”’சிக்கந்தர்! காதிர் முகியிதீன் உனக்கு மாமனாக இருக்க லாம். எனக்கு பால்யத்திலேருந்தே சிநேகிதர். என் யோசனை இல்லாமெ அவர் எதுவும் செய்ததில்லே!” 

நிமிர்ந்து பார்த்தான். 

“மாப்பிள்ளையை பார்க்கணும் அழைச்சிகிட்டு வாங்கன்னு புலம்பிக்கிட்டேயிருந்தார். வந்து பாத்தப்ப நீ ஊர்ல இல்லேன்னு ஷகீலா சொல்லிச்சு. ஷகீலாவை அழைச்சிட்டுப் போக நெனைச்சி கூப்புட்டேன். வரமாட்டேன்னு சொல்லிட் டது. அப்புறம் கடைசிநேரத்திலே என் வீட்டுக்காரங்களை அனுப்பி அழைச்சிட்டு வரச் சொன்னேன். மீரா உம்மாதான் பொறுப்பா பேசி கூட்டியாந்தது. இப்பவும் அது பக்கத்திலே அவங்கதான் இருந்து கவனிச்சுக்கிறாங்க!” சிக்கந்தர் மனமுடைந்தான் தான். 

“எவ்வளவோ சொல்லனும் போல இருக்கு. ஆனா எப் படிச் சொல்றதுன்னு எனக்கே சங்கடமா இருக்கு” 

”சிக்கந்தர்! முதல்லே ஒரு உண்மையை நீ புரிஞ்சுக் கணும். நீ நெனைச்சிருக்கிற மாதிரி உன் மாமனார் திமிர் பிடிச்சவரோ, உன் மேலே பிரியம் இல்லாதவரோ இல்லே. மத்த மருமகப் பிள்ளைகளைப் பத்தி அவர் கவலைப்பட்டதே இல்லை.அவங்க உன்னை இளப்பமா பார்க்கிறதாலே, உன்னை அவங்க அளவுக்கு உயர்த்தி வைக்கணும்னு நெனைச்சிதான் ஒரு உபாயத்தைச் செய்து பார்த்தார்…” 

சிக்கந்தர் நம்பத் தயாராக இல்லை. 

“நான் இப்படி சொன்னா ஷகீலா கூட நம்பாது. ஆனா நடப்பு அதுதான். அப்பப்ப உனக்கு ஆத்திரம் வர்றமாதிரி அவர் பேசினது, நடந்துக் கிட்டதெல்லாம், உனக்கு ஒரு வேகத்தை உண்டாக்கி விடுறதுக்காகத்தான்; அந்த வேகத் தில் மத்த மாப்பிள்ளைகளை விட நீ மேலே வருவேன்னு நம்பினார்…! 

”சே, இது உபாயமா? உத்தியா?” எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. 

”பத்து நாள் முன்னாடி என்னைக் கூப்பிட்டனுப்பினார். உடல் நிலையைப் பாத்தா சீக்கிரமே “மவ்த்து” வந்திடும் போல இருக்குன்னு சொன்னார். நான் சமாதானம் சொன் னேன். ‘கண்ணை மூடுறதுக்கு முன்னாலே, ஒரு ஏற்பாட்டைச் செய்துடணும்னு சொல்லி, அதன்படியே செய்து முடிச் சிட்டார். ஆமா ; அவருடைய வீடு, தோட்டம் நிலபுலன்லே பெரும் பகுதி எல்லாத்தையும், ஷகீலா பேர்ல எழுதி வச் சிட்டார். ரொம்ப ரகசியமா…” 

சிக்கந்தர் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். 

“அதிலேருந்து சதா, உன்னைப் பத்தி தான் பேசிக்கிட் டிருந்தார். மாப்பிள்ளை மனசைப் புண்படுத்தியிருக்கேன்னு பல முறை புலம்பினார். ஷகீலாவையும், உன்னையும் இங்கே ஒரு வேளை கை நனைக்கணும்னு நெனைச்சிருந்தார். எல்லாம் தலை கீழாப் போச்சு, சிக்கந்தர்!” 

ஹலீம் ஹாஜியார் கண்கலங்கிப் போனார். 

“இப்ப ஊர்க்காரங்க உங்க விவகாரத்தைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருக்காங்க… “தலாக் தலாக்”னு அவங்க பேசறது, என்னைச் சம்மட்டியாலே அடிக்கிற மாதிரி இருக்கு…” என்றார். அந்தஅடி, தன் மீது அல்லவா விழு கிறது என்று ஓலமிடுகிறது, சிக்கந்தரின் உள்ளம். ‘உடைந்து வழிகிறது கண்ணீர். அநியாயமாக ஷகீலாவை இழந்து விட்டேனே!” என்று அடித்துக் கொள்கிறது மனம். 

“சிக்கந்தர்,இப்ப நீ கண்ணீர் வடிக்கிற மாதிரிதான், நானும் மீரா உம்மாவும் அழுதோம். நீ விதிச்சிருந்த நிபந் தனை, இவ்வளவு பெரிய சோதனையா முடியும்னு நாங்க எதிர்பாக்கலே, உள்ளூர் ஆலிம்கள் கிட்டே யோசனை கேட்டப்ப, இந்த தலாக் செல்லுபடியாகும்னு சொல்லிட்டாங்க. சேதி ஊர்பூரா பரவி விட்டது…” 

சிக்கந்தர் நிலை குலைந்திருந்தான். 

“எனக்கும் மீரா உம்மாவுக்கும் நிம்மதி இல்லே.நித் திரை இல்லை. ஒரு விதத்திலே இந்த நெலைமை ஏற்படுறதுக்கு நாங்க தான் காரணம் இல்லையா? மீரா உம்மா ஷகீலாவைக் கூட்டிட்டு வந்ததினாலேதான் இவ்வளவும்! ரெண்டு பேரும் யோசனை பண்ணினோம்.. யார் கிட்டேயும் சொல்லிக்காம வெளியூர் மதராசுவுக்குப் போய், சரியான தீர்ப்பு வாங்கிட்டு வரணும்னு முடிவு செஞ்சேன்… போன இடத்திலே…” 

”ஏன் நிறுத்திட்டீங்க? சொல்லுங்க…” 

“இதோ இருக்கு அவங்க குடுத்த பத்வா! நீயே படிச்சிப்பார் அந்தத் தீர்ப்பை!” 

காகிதத்தை வாங்கிக் கொண்டான், நடுங்கும் கரத்தில் பிரித்தான், ஊர் ஜமாஅத்துக்கு எழுதப்பட்டிருந்த கடிதம் அது. 

“பிரஸ்தாப தலாக் விவகாரத்தைப் பரிசீலித்தோம். இந்தத் தலாக் – விவாகரத்து – செல்லுபடியாகும் என்று சிலர் சொன்னதாகத் தெரிய வந்தது. இது சிக்கலான விஷயமாகப் பட்டாலும், தெளிவான ஒரு முடிவுக்கு வர இடம் இருக்கிறது. ஒரு பெண்ணின் தந்தை இறந்து விட்டபிறகு, அந்த வீடு அவருடைய வீடல்ல. அது மட்டுமல்ல, ஷகீலாவுக்கு, தான் இருந்த வீட்டையும் அவள் தகப்பனார் எழுதி வைத்து இருக்கிறார். எனவே அந்த வீடு பெண்ணுக்குரிய வீடாகி விடுகிறது. ஆகவே, பிரஸ்தாப பெண் தன் வீட்டுக்குத்தான் சென்றிருக்கிறாளே தவிர, தகப்பனாரின் வீட்டுக்கு அல்ல. ஆகவே, இந்த தலாக் செல்லாது தலாக் நிகழ்ந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் கணவன் மனைவியாக வாழலாம்!” 

நெகிழ்ந்து போய் ஒரு குழந்தையைப்போல், தேம்பித் தேம்பி அழுதான். ஆதரவோடு அணைத்துக் கொண்ட ஹலீம் ஹாஜியாரைப் பின் தொடர்ந்து மனைவியை பார்க்கப் புறப்பட்டான் சிக்கந்தர். 

– தினமலர்-வாரமலர்

– சாயல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1983, தமிழ் மன்றம். கல்ஹின்னை, கண்டி. 

jmsali ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *