கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் முத்தாரம்
கதைப்பதிவு: June 20, 2026
பார்வையிட்டோர்: 92 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அழாதே சிவகாமி, அழாதே. கொஞ்ச தூரம் – சிறிது நேரம் பொறுத்துக் கொள். வண்டி டாக்டர் கிருபாபுரியின் வாசலிலே நிற்கும். கிருபாபுரி தங்கமானவர். தயாநிதி. உனக்குத் தெரியாதா, என்ன? முதலில் கொஞ்சம் எரிந்து விழுவார், ‘காலையிலேயே கூட்டி வரக்கூடாதா?’ என்று. ‘இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும் நாய் போல நாங்கள் காத்திருக்க வேண்டுமா? வேறு வேலையே கிடையாதா?’ என்று கோபிப்பார். ‘முடியாது. முடியாது. நாளைக் காலையிலே வா’ என்று கர்ஜிப்பார். நான் காலிலே விழுந்து கேட்பேன். ‘விரைவாகத்தான் கிளம்பினேன். வழி சரியில்லை. வானம் வேறுபொத்துக் கொண்டது. வந்து சேர்ந்ததே நாங்கள் செய்த பாக்கியம்’ என்று. ‘சரி, சரி. ஆஸ்பத்திரியிலே போய் இருங்கள்’ என்பார். அவர் கொடுக்கும் மாத்திரையோ, மிக்சரோ, பெனிசிலினோ, கால்ஷியமோ உன்னை ஒரு நாளில் குணப்படுத்தி விடும். கண்களைத் துடைத்துக்கொள்” என்று ஆறுதல் கூறினான் டாக்ஸி டிரைவர் ராஜு.

வேலூரை நோக்கி ராஜுவின் டாக்ஸி ஊர்ந்து கொண்டிருந்தது. இன்றைய தினம் டாக்ஸி சேர வேண்டிய இடத்திற்குப் போனதும் வழக்கம் போல் அவனுக்கு வாடகை கிடைக்காது. காரணம், வண்டியிலே இருந்தவள் அவன் மனைவி சிவகாமி, சாகப் பிழைக்கக் கிடக்கிறாள். அவளைத்தான் டாக்டர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். இந்த ‘நல்ல காரியத்தை’ அவனுக்குக் கல்யாணமான முப்பது வருடங்களில் இன்று தான் செய்கிறான். அவனுக்கு குடும்பத்தின் மீது பாசம் வந்தது இயற்கைக்கு ஏனோ பிடிக்கவில்லை. திடீரென்று நிர்மலமாக இருந்த ஆகாயம் மழையை பொழிய ஆரம்பித்தது. சிறு தூரல் பெரு மழையாகவே மாறியது. இருபது மைல் போக வேண்டும்; தெருவோ சொல்ல வேண்டியதில்லை: எந்த மந்திரியோ, ஜில்லா போர்டு பிரசிடெண்டோ அந்த கிராமத்தைச் சேர்ந்திருந்தால், தார் ரோடென்ன; சிமெண்ட் ரோடே கிடைத்திருக்கும். அந்த அதிருஷ்டத்தையும் அந்த ஊர் பெற்றிருக்கவில்லை. ஊரின் பெயரென்ன என்று கேட்கிறீர்களா? ஊரிலும் பேரிலும் என்ன இருக்கிறது? யார் என்பதிலே தானே அத்தனையும் அடக்கம்! உங்களுக்கு விருப்பமான எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

ராஜுவின் மோட்டார் பஞ்ச காலத்திலே பரிதாபத்திற்குரிய பாட்டாளிகளுக்கு கஞ்சி வார்ப்பதற்காக போடப்பட்ட பாதையிலே மிதந்து கொண்டிருந்தது. ஏனென்றால் மழையின் சீற்றத்தில் பாதை வாய்க்காலாக மாறியிருந்தது. ராஜு ஓட்டிய மோட்டாரோ வாடகை வண்டி. அதன் இலட்சணம் எல்லோருக்கும் தெரியும். வாக்சாலோ, வான்கார்டோ, ப்யூக்கோ, போர்டோதான் அந்த வாய்க்காலில் என்ன செய்ய முடியும்?

ராஜுவின் திறமைதான் வண்டியை நகர்த்திக்கொண்டிருந்தது. முப்பது வருட அனுபவமாயிற்றே அவனுக்கு அந்தத் தொழிலில்! காட்பாடி ஜங்ஷனில் ராஜண்ணன் என்றாலே வாடகை மோட்டார் ஓட்டிகளின் வட்டாரத்தில் ஒரு தனி கௌரவம். மூன்று சக்கரங்களிலே கூட அவனது வண்டி ஓடியிருக்கிறது. ஆனால் இப்போது, நிலத்திலே மட்டுமல்ல; நீரிலும் மோட்டார் ஓட்டுவேன் – என நிரூபித்துக் கொண்டிருந்தான். எங்கும் கும்மிருட்டு. இடியும் மின்னலும் போட்டியிட்டன. ஆயிரம் அம்புகளின் கூர்மையை தாங்கி குளிர் காற்று வீசியது. பின் சீட்டிலே, மரண அவஸ்தையுடன் மனைவி; ஸ்டீரிங்கிலே அவன் கை இருந்தது. அவன் நாக்கிற்கு எந்த ஸ்டீரிங்கும் இல்லை. எனவே தொடர்ந்து அந்த இரைச்சலிலும் பேசிக் கொண்டே இருந்தான்.

“‘டாக்டர், நீங்கள் பெரும். கருணா மூர்த்தி’ – என்பேன். ‘சரி. சரி. ஏதாவது உனக்கு சாக்கு கிடைத்துவிடுகிறது. வருகிற வழியில் ஐந்து இடத்தில் ‘சாயா’கடையில் நிறுத்தி யிருப்பாய். உன்னுடைய குடும்ப அக்கரைதான் உலகப் பிரசித்த மாயிற்றே’ என்பார். ‘இல்லை டாக்டர். இல்லை. அவ்வளவு அரக்க குணம் படைத்தவனா நான். என் மனைவியின் இந்த நிலையிலும்?’ என்று நிறுத்துவேன். அவர் காலை கட்டிக்கொள்வேன். உடனே டாக்டர் விடுவித்துக்கொண்டு. ‘என்னைக்கட்டிக் கொள்வது கிடக்கட்டும். மதுக்கடைக்கு போவதை பாதியாவது நிறுத்த வேண்டும். உங்களை யெல்லாம் உலகத்திலே வைத்திருக்கக் கூடாது. நீ எங்கே உருப்படப்போகிறாய்?’ என்று செல்லமாகக் கோபிப்பார். ‘இந்தத் தடவை மன்னித்து விடுங்கள். டாக்டர். நான் பழைய ராஜுவல்ல. இனிமேல் அப்படி நடந்தால் காரி உமிழுங்கள். எப்படியாவது என் சிவகாமியை குணப்படுத்தி விடுங்கள். ஊட்டியிலே யிருந்து அடுத்த வாரம் வரும் நண்பனிடம் ஒரு ஜோடி சீமை நாய்க் குட்டி உங்களுக்காகவே கொண்டு வரச் சொல்லியுள்ளேன். ஐநூறு ரூபாய் பெறும். பணமா டாக்டர் பெரிது? என் வாழ்நாளில் எவ்வளவோ பணத்தைப் பார்த்திருக்கிறேன். சீமை நாய்க்குட்டி வளர்ப்பதில் உங்களுக்குள்ள பிரேமை எனக்குத் தெரியும். டாக்டர்!’ என்று மன்றாடுவேன்”. ஸ்டீரிங் இல்லாத அவன் நாக்கு உதிர்த்த சொற்களைவிட ஆயிரம் எண்ணங்கள் அவனது உள்ளத்தில் அலை மோதின. வானத்தின் இடி, புயல், மின்னல் அத்தனையும் உள்ளத்தில் அவன் போட்டி யிட்டன. இருள் சூழ்ந்த அவன் இதயத்தில் திடீரென்று ஒளி மின்னல் ஒரு பழுக்கக் காய்ச்சிய இரும்பை அவன் நெஞ்சத்தில் அழுத்துவது போல் உணர்ந்தான். அவனுக்கு வயது ஏறக்குறைய ஐம்பது ஆகிறது. அவன் வாழ்வில் குடிப்பதும் மற்றவருடன் மல்லுக்கு நிற்பதும் தவிர வேறு விசேஷமே இடம் பெற வில்லை. மகிழ்ச்சியும் வருத்தமும் அவனுக்கு அறிமுகமில்லாத பொருள்களாக மாறியிருந்தன. அவ்வளவு வியர்த்தமாக வாழ்ந்தான்.

அன்று மாலையும் வழக்கம் போல்தான் போதையுடன் வீட்டிற்கு வந்தான். சிவகாமியின் முதுகுக்கும் இவனது கரத்திற்கு முள்ள உறவுமுறை தான் அவர்களுக்குள்ள நெருக்கமான தொடர்பு. அந்த புண்ணியவதி ஒரு விசுவாசமுள்ள நாய்க் குட்டியின் சுபாவத்தைப் பெற்றிருந்தாள். சிவகாமியின் கண்கள் கோபத்தையோ உமிழ்ந்ததில்லை. சர்க்கஸ்காரனின் சாட்டைக்கு பயந்து நடக்கும் வன மிருகத்தின் சாயல்தான் அவள் கண்களில் இருந்தது. ஆனால் அன்றைய தினம் அவள் பார்த்த பார்வை, எத்தனையோ. பேரறிஞர்களின் உரை புகட்டாத உண்மைகளை அவனுக்குப் புகட்டியது. எத்தனையோ கண்களை ராஜு கண்டிருக்கிறான். மலர் விழி, மான் விழி, சுழலும் விழி, சுந்தர விழி, வேல் விழி, வாள் விழி – இப்படி எத்தனையோ! ஆனால் சிவகாமியின் கண்களிலே எந்த காந்தமோ, கவர்ச்சியோ இல்லை. சலனமற்ற சாக்காட்டின் அமைதி அவள் கண்களிலே இருந்தது. அந்தப் பார்வை அவனுக்கு எப்போதோ பெற்றிருக்க வேண்டிய போதனையை அளித்தது. எனவே தான் முதன் முதலில் கணவன் ஓட்ட, கார் சவாரி செய்யும் பேறு கிடைத்தது.

‘சிவகாமி’ என்று தழ தழத்த குரலில் கூப்பிட்டான். என்று மில்லாத உருக்கம் குரலில் இருந்தது. “சிவகாமி, டாக்டர் கிருபாபுரி, உன்னை நான் அடிக்கிறேனா என்று கேட்பார்! இல்லை என்று சொல்லிவிடு. நான் உன்னை இனி மேல் அடிக்கவே போவதில்லை. இப்போதுதான் என்ன நான் உன்னை அடித்தேன் என்றா நினைக்கிறாய்? நிஜமாக இல்லை. என் மன விரக்தி; அதை விட வேறுபுகலிடம் இல்லை. அதனால் தான் அப்படிச் செய்தேன். உன் மீது எனக்கு எவ்வளவு அன்பு தெரியுமா? வேறு ஒரு மனிதன். இந்த நம்பிக்கையற்ற நிலையில் உன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வானா? என்னை நம்பவேண்டும் சிவகாமி. நிஜமாகவே இனிமேல் நான் உன்னை அடிக்கமாட்டேன். உறுதி, உடம்பு எப்படி இருக்கிறது? பேசு சிவகாமி, ஏதாவது பேசு” என்றான். அவனுக்கு கோபமாக வந்தது. “நான் மனம் திறந்து பேசுகிறேன். பதிலே சொல்ல மாட்டேன் என்கிறாய். நான் டாக்டர் வீட்டிற்குஅழைத்துப் போகப் போவதில்லை” என வண்டியைத் திருப்ப முயன்றான். அவளைப் பார்க்க அவன் விரும்பவில்லை. பின்னாலே திரும்பாமல், வலது கரத்தால் வண்டியை ஒடித்துக் கொண்டே, இடது கரத்தால் அவளைத் தொட்டான். சில்லிட்டுப்போன அவள் கரத்தை உணர்ந்தான். அவன் கரத்தை எடுத்தவுடன் ஈரமான விறகு போல் தொப்பென்று விழுந்தது சிவகாமியின் கரம்.

“அய்யோ, செத்துவிட்டாள்! என் சிவகாமி, செத்துவிட்டாள்!” என அலறினான்; புலம்பினான்; துடித்தான்; அழுதான்; கதறினான்; கண்ணீர் விட்டான். வியர்த்தபுரியிலே வாழ்வை வீணாக்கி விட்டோம் என்பதை உணர்ந்து விவேகபுரியில் காலடி யெடுத்து வைத்தான். ஆனால் விசாரபுரிதான் அவனை வரவேற்கக் காத்திருந்தது. முப்பது வருடங்கள் சிவகாமியுடன் வாழ்ந்திருக்கிறான்; இல்லை இல்லை. பிணைக்கப் பட்டிருந்தான். அவள் மீது அவன் ஆறாக் காதல் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்ததில்லை. எந்த விநாடி அவனது இதயத்தின் இரகசியத்தை அவளுக்குச் சொன்னானோ, எந்த வினாடி அவளில்லாமல் அவனது வாழ்வு பாலைவனம் என்பதை மனதார தெரிந்தானோ, எந்த விநாடி ஓர் நிரபராதிக்கு தாங்கொணாக் கொடுமை யிழைத்து விட்டோம் என்று விசாரப்பட்டானோ, அந்த வினாடி அவள் அவனிடமிருந்து நீங்கா விடை பெற்றுக் கொண்டாள்.

இளமை ததும்ப. எழில் ததும்ப, காதல் ததும்ப, கண்களில் நம்பிக்கைச் சுடர் விட, பதினாறு வயதுப் பாவையாக, பத்தரை மாற்றுப் பசும்பொன் தங்கமாக சிவகாமி அவனைக்கரம் பிடித்த மணக்கோலக் காட்சி தென்பட்டது. செழிப்பான குடும்பத்திலே தான் பிறந்தாள் சிவகாமி. ராஜுவும் அப்போது சம்பள டிரைவரல்ல; ஒரு சிறு ‘ஒர்க்ஷாப்’பிற்கு அதிபதி. வாழ்வதற்குத் தேவையான எல்லாம் இருந்தது. ஏனோ வாழவில்லை.

‘அந்த அன்பு தெய்வத்தின் மீது எனது கொடுமைக் கணைகள் பாயாமல் இருந்தால் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பாள்’ – என்று நினைத்தான். அவளை நடவு வேலைக்கு கழனிக்கு அனுப்பியதை. பீடி சுற்ற வைத்ததை, கைக் குத்தலரிசி புடைக்கச் செய்ததை – இன்னும் பலவற்றை இதயத் திரை காட்சியாக்கியது.

“மீண்டும் நான் புது வாழ்வு வாழ முடியுமானால்..?” – நினைப்பதற்கே புளகாங்கிதமாய் இருந்தது. “எனது குடிலை குதூகல மண்டபமாக்குவேன். அந்தக் குடும்ப விளக்கை அணையாது பாதுகாப்பேன். மீண்டும் நான் புது வாழ்வு வாழ் முடியுமானால்..” அவனது வார்த்தைகள் முடியவில்லை. வண்டி உருண்டோடிக் கொண்டிருந்தது, அவனது மனச் சக்கரமும் அதைவிட பன்மடங்கு சுழன்று கொண்டிருந்தது. அதற்குமேல் நடந்தது அவனுக்குத் தெரியாது.

மறுநாள் காலை டாக்டர் கிருபாபுரியின் ஆஸ்பத்திரியில் ராஜு படுக்கையில் கிடந்தான். எதிரே டாக்டர் நின்று கொண்டிருந்தார். ராஜு எழுந்து வணங்க முயற்சித்தான். கைகளும் கால்களும் ஸ்மரணையற்று இருந்தன. எழுந்திருக்க முடியவில்லை!

“அமைதியாகப்படுத்துக் கொள்” என்றார் டாக்டர்.

“டாக்டர். எனது கால்கள்- கைகள்…?” என்றான்.

“ராஜு. இனி அவை உனக்குச் சொந்தமல்ல” என்றார். பயம் ராஜுவைக் கப்பிக் கொண்டது.

“நான் இன்னும் பத்து நாள் உயிர் வாழவேண்டும் டாக்டர்”

”எதற்கு?”

“என் மனைவி இறந்ததை சொந்தக்காரர்களுக்கு சொல்லியனுப்ப வேண்டும். அவளது இறுதிக் கடன்களை நிறைவேற்ற வேண்டும். டாக்ஸியை முதலாளியிடம் சேர்க்க வேண்டும். தங்களுக்கு ஊட்டியிலிருந்து வரும் சீமை நாய்க் குட்டிகளை…”

“அமைதியாகப் படுத்துக் கொள்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார் டாக்டர் கிருபாபுரி.


அன்று மாலை வேலூரிலும் காட்பாடியிலும் டாக்ஸி ஸ்டாண்டுகள் வெறிச்சென்றிருந்தன. ஜட்கா வண்டிகளுக்கு ஏக கிராக்கியாகயிருந்தது. முந்தின நாள் இரவு, ராஜு என்ற நெடு நாளைய குடிகார டிரைவர் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு பெரு மழையில் வேலூர் வந்ததாகவும், குடிபோதையில் ராஜு வண்டியை எதிரே இருத்த ஓடையில் இறக்கியதாகவும், காட்டு வெள்ளத்தின் வேகத்தில் வண்டி கவிழ்ந்ததாகவும், மனைவி ஸ்தலத்திலேயே மாண்டதாகவும், ராஜு ஆஸ்பத்திரியிலே இறந்ததாகவும் குதிரை வண்டிக்காரர்கள் பேசிக் கொண்டனர். அதே நேரத்தில் ராஜு சிவகாமி பிரேத ஊர்வலத்தில் எல்லா டாக்ஸிகளும் மௌனமாக அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன.

– ஆகஸ்ட் 1956, முத்தாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *