ஜே.எம்.சாலி

jmsali

ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார்.

எழுதிய நூல்கள்

  • கனாக் கண்டேன் தோழி
  • விலங்கு
  • அலைகள் பேசுகின்றன
  • தமிழகத்துத் தர்க்காக்கள்
  • மாநபி கண்ட மருத்துவம்
  • குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி
  • புரூஸ்லி
  • வெள்ளைக் கோடுகள்
  • நோன்பு

உட்பட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது 2015
  • கண்ணன் சிறுவர் இதழ் நடத்திய நாவல் போட்டிப் பரிசு
  • தமிழக அரசின் பரிசு (இருமுறை)
  • காரைக்காலில் நடைபெற்ற 3ம் ஆண்டு இலக்கியப் பெருவிழாவில் பாராட்டு விருது

சில அலைகள்

சிங்கப்பூர் பின்னணியில் எழுதிய சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் நூலாக வெளியிடும்படி பிரியமுள்ள பலர் சில ஆண்டுகளாகத் தூண்டி வந்தார்கள். இயற்பெயரிலும் சில புனைப்பெயர்களிலும் சிங்கப்பூர், மலேசிய, தமிழக இதழ்களில் இந்த வட்டாரப் பின்னணியில் கணிசமாகவே எழுதியிருக்கிறேன்.

1964 ஆம் ஆண்டில் தமிழ் முரசில் பணிபுரியத் தொடங்கிய போது ஆசிரியர் தமிழவேள் கோ. சாரங்கபாணி ஞாயிறு முரசில் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும்’ என்று பணித்தார்.

1971 ல்ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் சேர்ந்ததும் வேலையாக சிங்கப்பூர் பின்னணியில் தொடர்கதையை ஆரம்பிக்கச் சொன்னார் அப்போதைய துணை ஆசிரியர் மணியன். ‘பேசுகின்றன’ தொடராக வந்து வரவேற்பைப் பெற்றது. அதுவே நூலாக பல பதிப்புகளாக வெளிவந்தன. கதாசிரியர் 72 பக்கத்தில் கதையை காவிய அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார் என்று இலக்கிய எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி அந்த நூலுக்கு தினமணி பத்திரிகையில் மதிப்புரை வழங்கியது மனதில்பசுமையாக இருக்கிறது. சிங்கப்பூர் வானொலியும்அந்தமான்வானொலி நிலையமும் அந்தக்கதையை சொந்தமாகவே நாடகமாக்கி ஒலிபரப்பியதை நினைக்கும் போது இனிக்கிறது.

பதச் சோறாக இதைச் சொல்கிறேன். சுயப்பிரதாபமாக அல்ல. எழுத்தாளன், படைப்பாளன், இலக்கியவாதி என்ற பரிமாணங்கள்கனமானவை. அந்தக்கனத்தை நான் அவற்றுக்கு அப்பாற்பட்டு பார்வையாளன் என்று கூறிக் கொள்வதில் சுகம் இருக்கிறது. சுவை இருக்கிறது. சுமை இருக்கவில்லை. நல்ல பார்வையாளன் பார்த்ததைப் பகிர்ந்து கொள்ள முற்படுவன். உணர்ந்ததை உணர்த்த விரும்புவான். எழுதுகோலை அனிச்சையாக அப்போது எடுக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு. எழுதுகிறான். படைக்கிறான்.

அவன் எழுத்தாளனா ,படைப்பாளியா, என்பதை படிப்பாளிகள்தான்முடிவு செய்ய வேண்டும். என்று நான் குறிப்பிடுவது வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், விமர்சகர்கள், திறனாய்வாளர்கள். அங்கீகாரம், பட்டயம், பாராட்டு, விருதுகள்அவர்களிடமிருந்து கிடைப்பவை என்பது அபிப்பிராயம்.

அலைகளாக சில உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆவல் இருக்கிறது. சொல்வதைச்சுருக்கமாகச் சொல்வதே ஆரோக்கியம். அந்த வகையில் இந்தத் தொகுப்பைப் பற்றி சிலவரிகளைச் சொன்னால் போதும். காவிரி மண்ணில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்வது எனக்குக் கிடைத்த ஒரு பேறு. காவிரி தீரத்தைச் சுற்றியும் கதை படைக்கலாம். சிங்கப்பூர்ஆற்றங்கரைப் பின்னணியிலும்கதை தொகுப்பாக வழங்கும் நேரம் வந்திருக்கிறது.

‘இத்தொகுப்பிலுள்ள ‘வேலி’ 28 ஆண்டுகளுக்கு விகடனில் பிரசுரமான சிறுகதை. சிங்கப்பூர் பத்திரிகைச் படைக்க இயலும். அவ்வப்போது சிங்கப்பூர் உணர்வுடன் அக்கரை, இக்கரை இதழ்களில் எழுதிய சில சிறுகதைகளை இப்போது தான் கிடைத்திருக்கிறது.

செய்திகளைக் கதையாக்கி விகடனில் சில சிறுகதைகளை 1971 ல் எழுதினேன். காயம், தீர்ப்பு ஆகியவை அவற்றில் அடங்கும். குங்குமம், தினமணி கதிர், கல்கி, தமிழ் முரசு முதலான இதழ்களிலும் அவ்வப்போது சிங்கப்பூர் பின்னணியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் சிலவற்றைத் தொகுத்து கவிதா வெளியீடாக தமிழுலகுக்கு வழங்கும் உரிமையாளர் திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கும், ஆற்றுப்படுத்திய கோவை விஜயா பதிப்பக நண்பர் மு.வேலாயுதம் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறேன். இந்த முயற்சிக்குத் தூண்டுகோலாக அமைந்த அனைவருக்கும் என்அன்பை உரிமையாக்குகிறேன். என்றும் இனிய அன்புடன்,

ஜே.எம்.சாலி
சிங்கப்பூர்
13.12.1998


இந்த நூல் – ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

ஏப்ரல் 1955.

கலைமகள் அலுவலகத்திலிருந்து கண்ணன் இதழுடன் 5 ரூபாய் மணி ஆர்டர் வந்தது. ‘எங்கள் பகுதி’யில் பிரசுரமான பரிசுக் கடிதத்திற்குரிய அன்பளிப்பு எனக் குறிப்பிட்டு ஆசிரியர் ஆர்வி.(ஆர்.வெங்கட்ராமன்) கையெழுத்திட்டிருந்தார்.

அந்த நாள் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு ஐந்து ரூபாய் பரிசு பெரியது.

கலைமகள் குடும்பத்தின் குழந்தை இதழான ‘கண்ணன்’ நான் படிக்கத் தொடங்கிய முதல் பத்திரிகை. ஐந்து வருடம் வாசகனாக இருந்தேன். முந்திய இதழைப் பற்றிய அரைப் பக்க விமர்சனக் கடிதம் பரிசைத் தேடித் தந்ததால், தொடர்ந்து எழுத முடிவு செய்தேன்.

பாலர் கவியரங்கத்துக்கு கவிதை அனுப்பினேன்.

“உன் கவிதை கிடைத்தது. கண்ணனில் பிரசுரமாகும். உன் ஊக்கம் வளர்க…” தபால் கார்டில் நீல நிற பென்சிலால் எழுதியிருந்தார் ஆர்வி.

தாஜ்மஹால் என்ற கவிதைக்கு 3 ரூபாய் அன்பளிப்பு வந்தது. அடுத்தடுத்து சில மூன்று ரூபாய் கவிதைகள்.

கதை எழுதினால் அன்பளிப்பு அதிகமாகக் கிடைக்கும் என்ற ஆர்வத்துடன் ‘தேர்தல்’ என்ற சிறுகதையை அனுப்பினேன்.

அந்த முதல் கதைக்கு 10 ரூபாய் அன்பளிப்பு வந்தது. உற்சாகம் கரை புரண்டது. இனி கவிதை வேண்டாம் என முடிவு செய்து கதைகளை எழுதி அனுப்பினேன். முதல் ஆண்டிலேயே பல சிறுகதைகள் பிரசுரமாயின. எந்தக் கதையும் திரும்பி வரவில்லை. நாட்டுப்புற மாணவனான என்னை அடையாளம் கண்டு, அரை அணா தபால் கார்டு மூலம் உற்சாகப் படுத்தி வந்தார் ஆசிரியர் ஆர்வி.

பள்ளிப் பருவத்திலேயே பல இதழ்களையும் வரி விடாமல் படித்து வந்தேன்.

அடுத்து, 1956 முதல் கும்பகோணத்தில் கல்லூரிப் படிப்பு, அந்த 4 ஆண்டுகளில் கண்ணன் எழுத்தாளர் அணியில் முக்கிய இடம் கிடைத்தது. தீபாவளி மலருக்கு சிறுகதை கேட்டு கடிதம் வரும். எழுத்தாளர் அறிமுகப் பகுதியில் மறக்க முடியாத அரைப்பக்க வாசகம்.

“கிராமத்து சூழ்நிலையில் அழகான தமிழ் நடை கொண்டு எழுதப்பட்ட ஜே.எம்.சாலியின் சிறுகதைகள் மாதுளம் பழத்து முத்துக்கள் போன்றவை. அத்தனை கட்டுக்கோப்பாகவும் கனிரசம் கொண்டதாகவும் இருக்கும்… அவர் தொடர்ந்து எழுதி. சமுதாயத்தில் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும் என்பதே நம் ஆசை…”

அந்த நல்லாசியை ஏற்று, பல பத்திரிகைகளுக்கு எழுத முற்பட்டேன். கண்ணனுடன் கல்கண்டு, கரும்பு. மாணவர் குரல் சிறுவர் இதழ்களிலும் எழுதி வந்தேன்.

1958-ல் ஆனந்தவிகடன் மாணவர் திட்டத்தில் சிறுகதை எழுதினேன்.

1959-ல் கண்ணன் நடத்திய தொடர்கதைப் போட்டியில் ‘இரு கண்கள்’ பரிசு பெற்றது. 1961-ல் கலைமகள் காரியாலயம் அதை நூலாக வெளியிட்டது. விலை 75 காசு.

குழந்தை எழுத்தாளர் சங்கம் 1961-ல் நடத்திய புதினப் போட்டியில் பரிசு பெற்றேன். அது ‘தங்கக் கிளிகள்’ தொடர்கதையாக கண்ணன் இதழில் இடம் பெற்று, பின்னர் நூலாக வெளிவந்தது.

1955 முதல் 1962 வரை குழந்தை – சிறார் இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்த நாளில், மாணவப் பருவத் தில், நாட்டுப் புற வாசத்தில், எழுதிய சிறுகதைகளின் ஒரு தொகுப்பே இந்த நூல். கதைகளுக்கு அப்போது வரையப்பட்ட ஓவியங்களும் இத்தொகுப்பில் இடம்பெறுவது மகிழ்ச்சிக் குரியது.

– ஜே.எம். சாலி


முன்னுரை – ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

ஏப்ரல் 1955,

கலைமகள் அலுவலகத்திலிருந்து ‘கண்ணன்’ இதழுடன் 5 ரூபாய் மணிஆர்டர் வந்தது. ‘எங்கள் பகுதி’யில் பிரசுரமான பரிசுக் கடிதத்துக்குரிய அன்பளிப்பு எனக் குறிப்பிட்டு, ஆசிரியர் ஆர்வி கையெழுத்திட்டிருந்தார்.

அந்த நாள் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு ஐந்து ரூபாய் பரிசு பெரியது..

‘கலைமகள்’ குடும்பத்தின் குழந்தை இதழான ‘கண்ணன்’, நான் படிக்கத் தொடங்கிய முதல் பத்திரிகை. ஐந்து வருடம் வாசகனாக இருந்தேன். முந்திய இதழைப் பற்றிய அரைப் பக்க விமர்சனக் கடிதம் பரிசைத் தேடித் தந்ததால், தொடர்ந்து எழுத முடிவு செய்தேன்.

‘பாலர் கவியரங்க’த்துக்குக் கவிதை அனுப்பினேன்.. ‘உன் கவிதை கிடைத்தது. கண்ணனில் பிரசுரமாகும். உன் ஊக்கம் வளர்க..

‘தபால் கார்டில் நீல நிற பென்சிலால் எழுதியிருந்தார், ஆர்வி.

‘தாஜ்மஹால்’ என்ற கவிதைக்கு 3 ரூபாய் அன்பளிப்பு வந்தது. அடுத்தடுத்து, சில மூன்று ரூபாய்க் கவிதைகள்..

‘கதை எழுதினால் அன்பளிப்பு அதிகமாகக் கிடைக்கும் என்ற ஆர்வத்துடன், ‘தேர்தல்’ என்ற சிறுகதையை அனுப்பினேன்.

அந்த முதல் கதைக்கு (1955 ஆகஸ்ட்) 10 ரூபாய் அன்பளிப்பு வந்தது. உற்சாகம் கரை புரண்டது. ‘இனி கவிதை வேண்டாம்’ என முடிவு செய்து, கதைகளை எழுதி அனுப்பினேன்.

முதல் ஆண்டிலேயே பல சிறுகதைகள் பிரசுரமாயின. எந்தக் கதையும் திரும்பி வரவில்லை!

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாட்டுப்புற மாணவனான என்னை எழுத்தின் மூலம் அடையாளம் கண்டு, அரை அணா தபால் கார்டு மூலம் உற்சாகப்படுத்தி வந்தார் ஆசிரியர் ஆர்வி.

பள்ளிப் பருவத்திலேயே பல இதழ்களையும் வரி விடாமல் படித்து வந்தேன்.

அடுத்து, 1956 முதல் கும்பகோணத்தில் கல்லூரிப் படிப்பு. அந்த 4 ஆண்டுகளில் கண்ணன் எழுத்தாளர் அணியில் முக்கிய இடம் கிடைத்தது. தீபாவளி மலருக்குச் சிறுகதை கேட்டுக் கடிதம் வரும். எழுத்தாளர் அறிமுகப் பகுதியில், மறக்க முடியாத அரைப்பக்க வாசகம்:

‘கிராமத்துச் சூழ்நிலையில் அழகான தமிழ் நடை கொண்டு புனையப்பட்ட ஜே. எம். சாலியின் சிறுகதைகள் மாதுளம் பழத்து முத்துக்கள் போன்றவை. அத்தனை கட்டுக் கோப்பாகவும் கனிரசம் கொண்டதாகவும் இருக்கும்….அவர் தொடர்ந்து எழுதி, சமுதாயத்தில் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும் என்பதே நம் ஆசை…’

ஆர்வியின் அந்த நல்லாசியை ஏற்று, பல பத்திரிகை களுக்கு எழுத முற்பட்டேன். கண்ணனுடன் கல்கண்டு, கரும்பு, மாணவர் குரல் சிறுவர் இதழ்களிலும் எழுதி வந்தேன்.

1958இல் ஆனந்தவிகடன் மாணவர் திட்டத்தில் சிறுகதை எழுதினேன்.

1959இல் கண்ணன் நடத்திய தொடர்கதைப் போட்டியில் ‘இருகண்கள்’ பரிசு பெற்றது.

ஆகஸ்ட் 1961இல் கலைமகள் காரியாலயம் அதை நூலாக வெளியிட்டது. விலை 75 காசு!

ஆசிரியர் ஆர்வி மனம்விட்டு எழுதிய பதிப்புரை வாசகங்களை மறக்க முடியுமா?

‘ஜே. எம். சாலிக்கு அறிகமும் தேவையில்லை. அவர் குழந்தை இலக்கிய உலகில் பிரபலமானவர். கண்ணன் பத்திரிகையில் பல ஆண்டுகளாகப் பல சிறுகதைகள் எழுதி, வாசகர்களுடைய அன்பையும் பாராட்டையும் ஒருமுகமாகப் பெற்றவர். இவருடைய கதைகள் கற்பனையழகும் தெள்ளிய நடையும் பொருந்தியவை. இளம் மனத்துக்கு இனிக்கும் அமுதமான கதைகள் எழுதும் இவர் இப்போது எம். ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.

கண்ணன் பத்திரிகை ஆண்டுதோறும் நடத்தும் தொடர்கதைப் போட்டியில் இந்தக் கதையான இருகண்கள் பரிசு பெற்றது. பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவந்த போது, சிறுவர் மட்டுமென்ன, பெரியோர்களும் இதை ஆவலோடு விரும்பிப் படித்தார்கள். ஆற்றொழுக்குப் போன்ற கதையோட்டமும் நடையும் அத்தனை பேரையும் ஒருங்கே கவர்ந்து விட்டன. நிகழ்ச்சிகளின் ஒழுங்கும் உரையாடல் களின் உயிர்த்துடிப்பும் படிப்பவரைப் பரவசப்படுத்தும் என்று உறுதியாகக் கூறலாம்…

குழந்தை எழுத்தாளர் சங்கம் 1961இல் நடத்திய புதினப் போட்டியில் என் ‘தங்கக்கிளிகள்’ பரிசு பெற்றன. அது, கண்ணன் இதழில் தொடர்கதையாக இடம் பெற்று, பின்னர் நூலாக வெளிவந்தது.

1955 முதல் 1962 வரை சிறார் இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்தநாளில், மாணவப் பருவத்தில், நாட்டுப்புற வாசத்தில், எழுதிய கதைகளின் தொகுப்பே இந்த நூல்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் 1978இல் ‘கனாக் கண்டேன் தோழி’ (விகடன் தொடர்கதை) நூலை வெளியிட்டு தமிழக அரசின் சிறந்த புதினத்திற்குரிய பரிசைப் பெற உதவிய பூம்புகார் பிரசுரம் பதிப்பகத்தாருக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலையும் வெளியிடுவது அவர்களோடு உறவு விளையுமாறு உதவிய சகோதரர் இலக்கியவீதி இனியவனுக்கும் சிறப்புக்குரியது. அரிய, இனிய அங்கீகாரமாகக் கருதி மகிழ்கிறேன்.

கண்ணன் இதழ் மூலம் ஆர்வி. அவர்கள் என்னை எழுத்தாளனாக்கி விட்ட 53-ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து நெகிழ்கிறேன்.

என்னையும் இலக்கியவீதி இனியவன், சாருகேசி எஸ்.விஸ்வநாதன், லெமன், மாயூரன், ரேவதி – ஹரிஹரன், தே.பார்த்தசாரதி, ஜோதிர்லதா கிரிஜா, பூரம், விமலா ரமணி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர் அணியை, ஒரு கிளைப் பறவைகளை உருவாக்கிவிட்ட ஆசான் ஆர்வி அவர்களுக்கு இந்த ஒரு கிளைப் பறவைகளைச் சமர்ப்பிக்கிறேன்.

ஜே.எம்.சாலி
சிங்கப்பூர்
1.10.2008


 சிறுகதைச் சிற்பி – சாயல் , முதற் பதிப்பு: மே 1983

பாவலர் திலகம் எஸ். எம்.ஜைனுதீன், B. Sc., B.Ed. (பட்டர்வொர்த், மலேசியா) 

இஸ்லாமும் இன்பத் தமிழும் வளர்க்கும் இன்றைய எழுத்தாளர்களில் ‘சிறுகதைச் சிற்பி’ என்னும் சிறப்பிற்குரியவர் ஜே.எம்.சாலி எம்.ஏ. 

தமிழ் முஸ்லிம் கதாசிரியர்களில் இப்பொழுது பிரபலமாக இருப்பவர் யார்? 

‘அறமுரசு – தமிழக இதழில் இடம் பெற்ற கேள்வி இது.

‘ஜே.எம்.சாலிதான். ஆனந்தவிகடன் வாசகர்களில் பலர் இவரை பிராமணர் என்று நினைத்துக் கொண்டு விடுகிறார்களாம். சாலி ஐந்து வேளையும் தவறாமல் தொழுகிறார்’. 

இவ்வாறு பதிலளித்தார் அறமுரசு ஆசிரியர். 

‘நண்பர் ஜே.எம். சாலி ஆனந்தவிகடன் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சுவையான கதைகளை எழுதுகிறார் – முன் எப்போதும் ஒரு முஸ்லிம் எழுத்தாளர் தமிழ்நாட்டின் பிற சமுதாய மக்களிடையே பிரபலமடையாத அளவுக்கு பிரபலமடைந்திருக்கிறார். 

ஜே.எம்.சாலியின் ‘விலங்கு’ — சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதிய மதிப்புரையில் ‘அறமுரசு’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. சாலியின் எழுத்துலக வரலாற்றைப் படிப்போர் இப்பாராட்டிற்கு அவர் முற்றிலும் உரிமையானவர் என்பதை ஏற்றுக் கொள்வர். 

இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர் ஜே.எம்.சாலி. மூத்த தமையனார் பெருங்கவிஞர். ‘இபுனு ஜமாலுத்தீன்’- இப்புனைப் பெயரில் இன்றும் பக்திமணம் கமழும் இனிய கவிதைகளைப் படைப்பார். காலஞ் சென்ற ‘சிந்தனைச் சிற்பி’ ஜே.எம்.ஹுசேன் பி. ஏ. (ஜேயெம்) சிறந்த கதாசிரியர். இவர்களின் தூண்டுதலின் பேரில் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை பயிரிட்டார் இளம் சாலி, 1955ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த காலம். ‘கண்ணன்’ பத்திரிகை ‘பாலர் கவியரங்கம்’ பகுதியை அறிமுகம் செய்திருந்தது. அதில் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த சாலி ‘தேர்தல்’ என்ற சிறுகதையை அதே ஆண்டில் படைத்து கதாசிரியராகப் பரிணமித்தார். கலைமகள் நிறுவனம் குழந்தைகளுக்காக நடத்திய ‘கண்ணன்’ சாலியின் சிறுகதைகளுக்கும் தொடர்கதைகளுக்கும் சங்கப் பலகை போல இடமளித்துக் கொண்டிருந்தது. ‘கண்ணன்’ நடத்திய நாவல் போட்டியில் ‘இரு கண்கள்’ பரிசு பெற்று சாலியை, ஆசிரியர் ஆர்வியின் அன்பிற்குரியவராக்கியது. 1958ல் ஆர்வி, கதாசிரியரை இவ்வாறு அறிமுகப்படுத்தி இருந்தார். 

‘கிராமத்துச் சூழ்நிலையில் அழகான தமிழ் தடை கொண்டு எழுதப்பட்ட இவருடைய கதைகள் மாதுளம் முத்துக்கள் போன்றவை. அத்தனைக் கட்டுக் கோப்பாகவும் கனிரசம் கொண்டதாகவும் இருக்கும். இவர் மேன்மேலும் தொடர்ந்து எழுதி இஸ்லாமிய சமூகத்தில் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும் என்பதே நம் ஆசை’. 

ஆர்வியின் ஆசை வீண் போகவில்லை. 1958-ம் ஆண்டு ஆனந்த விகடனில் சாலியின் ‘நெருப்பு’ முதல் சிறுகதையாக இடம் பெற்றது. அதே ஆண்டு ‘முஸ்லிம் முரசு’ நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘பற்றுக்கோடு’ முதல்பரிசைப் பெற்றது. 

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் 1960-ல் பி. ஏ. முதல் வகுப்பில் தேறி சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. தமிழ்ப் பிரிவில் சேர்ந்தார் சாலி. நான் புதுக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. தமிழ் முரசில் உமறுப் புலவர் பரம்பரை தொடரில் சாலியின் தமையனார் ஜே.எம்.அபூபக்கர் (இபுனு ஜமாலுத்தீன்) அவர்களைப்பற்றி திறனாய்வு செய்து கொண்டிருந்தேன். ஜே.எம்.ஹுசைன் எனக்குப் பெருந்துணையாய் இருந்தவர். இவர்கள் மூலம் ஜே. எம். சாலிஹ் எனக்கு அறிமுகம். ‘பிறை’ ‘மணி விளக்கு’ போன்ற இதழ்களில் இவருடைய சிறுகதைகள் வந்த வண்ணம் இருந்தன. ஒரே பல்கலைக்கழகத்தில் படித்த நாங்கள் இலக்கிய நண்பர்களானோம். 1962 ம் ஆண்டு எம்.ஏ. முதல் வகுப்பில் தேறி மத்திய அரசின் கணக்காயர் பணிமனையில் சேர்ந்தார். இந்தச் சமயத்தில் சாலியின் முத்திரை கதைகள் ஆனந்த விகடனில் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. ‘பொன் விளக்கு’ குழந்தை நாவல், குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பரிசைப் பெற்றதும் இந்தக்காலக் கட்டத்தில்தான். 

1964-ம் ஆண்டு தமிழ் முரசு ஆசிரியர் குழுவில் பணி யாற்றிக் கொண்டிருந்தேன். சாலியும் தமிழ்முரசு பணிமனைக்கு வந்தார். முஸ்லிம் முரசு ஆசிரியர் அல்மர்ஹூம், எஸ்.அப்துல் ரஹ்மான் முயற்சியின் பேரில் தமிழ் முரசில் பணியாற்றும் சந்தர்ப்பத்தைப் பெற்றார். தமிழ் வேளின் அரவணைப்பில் பத்திரிகையாளராக உருவெடுத்த சாலி 1971ல் ‘ஆனந்தவிகடன்’ துணை ஆசிரியரானார். விகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.பாலன், “இதயம் பேசுகிறது” மணியன் இருவரின் அன்பும் நல்லெண்ணமும்தான் இதற்குக் காரணம் என்று நன்றியுணர்வோடு கூறுகிறார் நாவலாசிரியர். தமிழ்வேளின் தூண்டுதலின் பேரில் ‘இஸ்லாமும் தமிழும்’ ஆராய்ச்சித் தொடரை எழுதினார். தற்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் என்ற ஆராய்ச்சியை முன்பே முஸ்லிம் முரசில் செய்திருந்தார் சாலி. தமிழகத்தில் இருவரும் பயின்று கொண்டிருந்த போது இஸ்லாமியத் தமிழ்ச்சுடர் அறிஞர் ஆர்.பி.என்.கனி ‘இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்’ தயாரித்துக் கொண்டிருந்தார். இன்றைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை ஆயும் பணிக்குப் பொருத்தமானவர் சாலி என்ற முடிவுக்கு வந்தார். முதுபெரும் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் இருவரும் இலக்கியச் செய்திகளைத் திரட்டும் பணியில் இறங்கினோம். அதன் பயன் சாலியின் அருமையான ஆராய்ச்சிப் படைப்பு. தமது இலக்கியக் கருவூலத்தில் இதுபற்றி நன்றிப் பெருக்கோடு குறிப்பிட்டுள்ளார் ஆர்.பி.எம்.கனி. இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதை பற்றிய ஆய்வு முஸ்லிம் முரசு ஆண்டு மலரில் வந்தது. நாவல் இலக்கியம் பற்றியும் பல்வேறு சமயங்களில் கட்டுரைகள் படைத்துள்ளார் சாலி. 

‘இரு கண்கள்’, ”தங்கக் கிளிகள்” இரண்டும் சாலியின் குழந்தைகளுக்கான நாவல்கள், சிங்கப்பூர் பின்னணியில் பிறந்தது. “அலைகள் பேசுகின்றன” என்ற குறுநாவல் விகடனில் எழுதப்பட்டது. மூன்று பதிப்பும் விற்பனையாகி விட்ட விழுப்பத்திற்குரியது. 

“72 பக்கத்தில் ஒரு காவிய அந்தஸ்துக்கு கதையை உயர்த்தி இருக்கிறார் ஆசிரியர்” என்று மறைந்த எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி ‘தினமணி’யில் விமர்சித்திருந்தார். 

‘கனாக்கண்டேன் தோழி’ விகடனில் தொடர் கதையாக வந்தது. பலரின் பாராட்டிற்குரிய நவீனம். இதில் கிராமியச் சூழலும், அதனோடு ஒன்றிவிடுகின்ற மனித உள்ளங்களின் எழுச்சிகளும் ஏக்கங்களும் சிறப்பாகக் காட்டப்படுகின்றன. இப்புதினம் ஒரு புதுமையான முடிவைக் காணுகிறது. 

*சொல்லித் தெரிவதில்லை’ ‘மலர் மஞ்சம்’, ‘முள்ளும் மலரும்’ சாலியின் மற்ற நாவல்கள், ‘விலங்கு’ சிறுகதைத் தொகுதி. கலைமகள், ‘ஹிந்து’ போன்ற இதழ்கள் இத்தொ குப்பிற்காக சாலியை பாராட்டியுள்ளன. 

‘உலக வீரர் அலி’ ‘வீரர் அலியின் வெற்றிக்கதை ‘புரூஸ் லி வரலாறு’, ‘புரூஸ்லியின் தற்காப்புக் கலை’ ‘புரூஸ் லியின் புரட்சிப் படங்கள்’, ‘புரூஸ்லியைக் கொன்றது யார்?’ ‘இடி அமின்’ – இவை ஜே. எம். சாலியின் வாழ்க்கை வரலாற்று நூல்கள். இவர்களைத் தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கே உரியது. 

‘குமுதம்’.-கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி:– ‘முகம்மது அலியும் இடி அமீனும் சந்தித்தால் என்ன பேசிக் கொள்வார்கள்?’ 

ப: ஜே. எம். சாவியைப் பற்றி. இந்த அளவிற்கு சாலியின் நூல்கள் பிரபலமாயின. 

மாநபியின் இயற்கை மருத்துவம் இஸ்லாமியத் தமிழுலகிற்கு சாலி அளித்த அரும் விருந்து. 

சிறுகதை, நாவல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சாலி, ஆரம்ப காலத்தில் கவிதை வெறிபிடித்தவராக இருந்தார். தமிழக வானொலிக் கவியரங்குகளில் இருவரும் பங்கேற்ற நினைவு இன்னமும் பசுமையாக இருக்கி றது. சிலப்பதிகார வரிப்பாடல்கள் குறவஞ்சி, பள்ளு,கலம் பகங்களின் சந்தப் பாடல்கள் ஆகியவை இவருடைய கவிதை வேகத்திற்கு அடிப்படையாக அமைந்தன. தேவைக்காகப் பாவைப் பயன்படுத்துவதென்று வரையறுத்துக் கொண்ட சாலி இந்தத் துறையில் தீவிரமாய் ஈடுபடவில்லை. 

சிறுகதை, நாவல் இவை சாலியின் இருகண்கள். தரமான இலக்கியம் படைக்க வேண்டும் என்ற தாகம் இவருக்குண்டு. தமது படைப்பாற்றல் பற்றி சாலி இவ்வாறு கூறுகிறார். 

‘பெரும் எண்ணிக்கையில் எழுதிக்குவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. ஒரு கட்டம் வரையில் அத்தகைய ஆசை இருப்பது இயற்கை. ஆனால் வாசகர்கள் எழுத்தாளனைப் புரிந்து கொண்டு இவனிடம் நல்ல படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை வைக்கத் தொடங்கிய பிறகு எண்ணிக்கையை விட தரத்தில் கவனம் செலுத்த வேண்டியது படைப்பாளியின் கடமையாகி விடுகிறது. அப்பொழுது ஒரு பயமும் வந்துவிடுகிறது.’ 

இப்பொழுதெல்லாம் சாலி கற்பனைக் கதைகள் எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். பாதிக்கு மேற்பட்ட கதைகளில் உண்மைச் சம்பவங்கள் தேவையான சிறுசிறு மாற்றங்களுடன் எழுதப்படுகின்றன. ‘இருப்பதை இனிய வடிவத்தில் சொல்வது தானே இலக்கியம்!’ இது சாலியின் கேள்வி! 

இவருடைய முஸ்லிம் சிறுகதைகளில் இன்றைய சமுதாயத்தின் குறைபாடுகளையும் தேவையில்லா பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டுகிறார் கதாசிரியர் . ஒளிவு மறைவு இல்லாமல் தம் இன மக்களின் கோபாதாபங்களையும் ஏமாற்றுக்களையும் சித்தரிக்கிறார் சிறுகதைச் சிற்பி. 

முஸ்லிம் குடும்பக் கதையோடு நின்றுவிடாமல் பல பின்னணிகளில், பல சூழ்நிலைகளில் எழுதி வருகிறார் சாவி, இலங்கை, சிங்கை, மலைநாடு, அந்தமான் போன்ற இடங்களிலும் இவருடைய சிறுகதைகள் உருவாகின்றன. ‘அனுலாவின் படகு’ இலங்கைச் சூழலில் எழுந்த விகடன் முத்திரைக் கதை. ‘வேலி’ சிங்கப்பூர் பின்னணியில் பிறந்தது. ‘மின்னல்’ அந்தமான் தீவில் பளிச்சிடுகிறது. 

அகிலனின் ‘கதைக்கலை’ இலக்கியத்திற்கு அருமையான சான்று சாலியின் கதைகள். சிங்கை, மலேசியாவில் சிறுகதை வளர்ச்சி ஆய்வு செய்யும் பேராசிரியர் அமீர் அலி, சாலியின் படைப்பிலக்கியத் திறனைப் பாராட்டுகிறார். சிந்தனைத் தெளிவு, சீர்திருத்தப் போக்கு, நீரோடை போன்ற நடை உள்ளதை உரைப்பதில் ஓர் உன்னதமான போக்கு, கற்பனை வளம், கருத்துக் குவியல் அனைத்தும் நிறைந்த அமர இலக்கியங்களைப் படைக்கும் சாலி, தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தகுந்த இடத்தைப் பெறவேண்டும். 

இவருடைய திறமைக்கு குமுதத்தின் மற்றொரு கேள்வி பதிலே போதுமானது. 

கே: ஜே. எம். சாலியைப் பற்றி சில வரிகள். ? 

ப: ‘புத்திசாலி!’… 

(சிங்கப்பூர் “தமிழ் நேசன்”, ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 1980ல் பிரசுரித்த கட்டுரை) 

பதிப்புரை – சாயல், முதற் பதிப்பு: மே 1983

சிறுகதை இயல் பெருமைப்படக்கூடிய விதத்தில் அழகழகாக சிறுகதைகளை அமைத்து தமிழகத்தில் வெளிவருகின்ற பிரபல சஞ்சிகைகள் அனைத்தையும் தனது படைப்புக்கள் அலங்கரிக்கச் செய்தவரான சிறுகதை மாமன்னர் ஜே.எம்.சாலி எம். ஏ. அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுதியொன்றை, முதன் முதலில் இலங்கையில் வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். 

‘கனாக் கண்டேன் தோழி’ எனும் நாவல் எழுதி தமிழ்நாடு அரசாங்கத்தின் பரிசு பெற்றுள்ள பிரபல எழுத்தாளரான ஜனாப் சாலி பல துறைகளிலும் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார். இஸ்லாமிய இலக்கியம், தமிழக தர்காக்கள் பற்றியெல்லாம் நூல்கள் எழுதியுள்ள அவர், குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி, கால் பந்துக்காரர் பெலே, புரூஸ் லீ போன்றோர் பற்றியும் எழுதியிருக்கிறார். 

‘சிறுகதைச் சிற்பி’ என்றும் அழைக்கப்படுகின்ற ஜனாப் சாலியின் முழுக்கைவண்ணம் காணப்படுபவைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்புத்தான் ‘சாயல்’. பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகளை இக்கதைகள் புனையப்பட்டுள்ள அடிப்படையாக வைத்து தனால், அவை மேலும் சிறப்புப் பெறுகின்றன. கதைகளில் வரும் கருத்துக்கள் மனதில் ஆழப் பதியக்கூடிய ஆற்றொழுக் கான நடையில் ஒவ்வொரு கதையும் எழுதப்பட்டிருப்பதனால், ‘மீண்டும் ஒரு முறை படித்தாலென்ன’ எனும் எண்ணத்தை மனதில் எழுப்பி, பல முறைகள் திருப்பித் திருப்பிப் படிக்கும் படி தூண்டுகின்றன. ‘சாயல்’ நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் எமக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. 

இந்த நூலில் பிரசுரமாகியுள்ள கதைகளை முன்னர் வெளி யிட்ட சஞ்சிகைகள் மறுபிரசுரம் செய்வதற்கு அனுமதித்த மைக்கு எமது நன்றி. இலங்கையில் தனது சிறுகதைத் தொகு தியை வெளியிட எமக்கு வாய்ப்புத்தந்த ஜனாப் சாலி அவர் களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறோம். 

27/1, Beach Road, 
Mount Lavinia, 
24.04.1983. 
எஸ்.எம்.ஹனிபா.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *