சங்கர்லால் வந்துவிட்டார்!
கதையாசிரியர்: தமிழ்வாணன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: July 2, 2026
பார்வையிட்டோர்: 126
(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35
26

தங்கத்துரை சவரிமுத்திடமும் சின்னத்துரையிடமும் பேரழகியைக் கண்டுபிடித்ததைப் பற்றிச் சொல்லவில்லை. அவளை எங்கெல்லாமோ தேடிக் கொண்டிருப்பதாகவும், எப்படியும் அவளைக் கண்டுபிடிக்காமல் விடப் போவதில்லை என்றும் உறுதி கூறினார்.
“நீங்கள் பேரழகியைக் கொண்டு வந்து என்முன் நிறுத்தினால்தான் உங்கள் பேச்சில் எனக்கு நம்பிக்கை ஏற்படும்! எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் என்று எனக்கே தெரியவில்லை!” என்றான் சவரிமுத்து.
சின்னத்துரைக்கு தங்கத்துரையின் திறமையில் நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். ஆகையால், அவர் ஒன்றும் பேசாமல் இருந்தார்.
மறுநாள் மாலை தங்கத்துரை நகரத்திற்குப் போக வேண்டும் என்றார். சவரிமுத்தும் ஷெனாய் நகருக்குப் போசு வேண்டும் என்றான். சின்னத்துரை இருவரையும் அழைத்துக் கொண்டு கார் இருந்த இடத்திற்கு வந்தர். இருவரும் காரில் ஏறியதும் கார் புறப்பட்டது. காரை சின்னதுரை ஓட்டினார்.
“உங்களுக்காக நான் நகரத்தின் எல்லையிலே எங்கேயாவது காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்டார் சின்னதுரை. சவரிமுத்து.
“வேண்டாம்! நான் திரும்பிவர எவ்வளவு நேரம் ஆகுமோ? நானே எப்படியாவது வந்து விடுகிறேன்” என்றான்.
“இரவு பத்து மணிக்குள் நான் திரும்பிவிடுவேன். எதற்கும் எனக்காகப் பத்து மணிவரையில் காத்திருங்கள்” என்றார் தங்கத்துரை.
“எந்த இடத்தில் காத்திருக்க வேண்டும்?” என்று கேட்டார் சின்னத்துரை.
“இப்போது எந்த இடத்தில் இறக்கி விடுகிறீர்களோ, அதே இடத்தில் இருங்கள்” என்றார் தங்கத்துரை.
கார் நகரின் எல்லையை அடைந்தது. பஸ் கிடைக்குமிடத்தில் ஒரு பக்கமாகக் காரை நிறுத்தினார் சின்னதுரை.
சவரிமுத்துவும் தங்கத்துரையும் கீழே இறங்கினார்கள் இருவரும் வெவ்வேறு திக்குகளில் சென்றார்கள்.
தங்கத்துரை ஒரு வாடகைக் காரில் ஏறி உட்கார்ந்தார். கார் திரும்ப வேண்டிய இடங்களில் மட்டும் கையைக் காட்டினார் தங்கத்துரை. காரோட்டி அவர் எந்த இடத்திற்குப் போகிறார் என்பது தெரியாமலே காரை அவர் காட்டிய வழியெல்லாம் ஓட்டினான். ஒரு திருப்பத்தில் –
“காரை நிறுத்து!” என்றார் தங்கத்துரை. கார் ஓர் ஓரமாக நின்றது.
தங்கத்துரை கீழே இறங்கினார். “இங்கேயே இரு. நான் கையைக் காட்டியதும் நான் இருக்குமிடத்துக்கு வா. அதுவரையில் காரிலேயே உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிரு!” என்று சொல்லிவிட்டு. மெல்ல நடந்தார். ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீட்டின் திண்ணையில் இருட்டாக இருந்தது. வீட்டில் எவரும் இல்லை. வெளிக் கதவு –
பூட்டிக் கிடந்தது!
தங்கத்துரை திண்ணையில் உட்கார்ந்து அம்பிகா லாட்ஜின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. மாணிக்கத்தை இன்னும் கானோமே? சங்கர்லால் குறிப்பிட்ட நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது –
போலீஸ் வேன் ஒன்று வந்து அம்பிகா லாட்ஜின் முன் நின்றது! அதிலிருந்து உதவிப் போலீஸ் கமிஷனர் வகாபும், சில போலீஸ்காரர்களும் குதித்தார்கள். வகாபின் தலைமையில் அந்தச் சிறிய படை ஓட்டலுக்குள் விரைந்து நுழைந்தது!
தங்கத்துரைக்கு வியப்பாக இருந்தது. இந்த இடத்தில் உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப் எப்படி வந்தார்? அவர் தன்னைப் பார்த்தால் உடனே சைது செய்து அந்தப் போலீஸ் வேனிலே வெளியே கொண்டு போய்விடுவாரா? ஆனால் –
தங்கத்துரை அஞ்சவில்லை! இருந்த இடத்தை விட்டு அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். சங்கர்லாலின் பேச்சில் அவருக்கு நம்பிக்கை இருந்தது.
சிறிது நேரத்தில், உள்ளே போன வேகத்திலேயே உதவிப் போலீஸ் கமிஷனர் வகாபும் போலீஸ்காரர்களும் திரும்பி வெளியே வந்தார்கள். வகாப் வேனில் ஏறி உட்கார்ந்ததும், போலீஸ்காரர்களும் அதில் பின்னால் தொத்திக் கொண்டார்கள். வேன் புறப்பட்டு விரைந்து ஓடி வந்தது. வேனின் விளக்கு வெளிச்சம் தங்கத்துரையின் முகத்தில் படுவதற்கு முன் கோட்டுப் பையிலிருந்த தீப்பெட்டியை எடுத்துக் கீழே போட்டுவிட்டு அதை எடுக்கக் குனிந்தார்.
அப்போது –
தங்கத்துரையின் முகம் சரியாகத் தெரியவில்லை. வேன் போய்விட்டது.
தங்கத்துரை நிமிர்ந்து பார்த்தார். வேன் வேகமாகச் சென்று தெருத் திருப்பத்தில் திரும்பி மறைந்து விட்டது!
சிறிது நேரம் கழித்துத் தங்கத்துரை இருந்த இடத்தை நோக்கி மெல்ல வந்து கொண்டிருந்தான் மாணிக்கம். அவன் தங்கத்துரையின் அருகில் வந்ததும், “என்னுடன் வாருங்கள், தங்கத்துரை” என்றான்.
தங்கத்துரை அவனுடன் நடந்தார். சாலையின் மற்றொரு கோடியை நோக்கி நடந்தார்கள் இருவரும். வழியில் மாணிக்கம் சொன்னான்: “தங்கத்துரை, பேரழகியைப் பாதுகாக்கும் பொறுப்பு இனி உங்களுடையது. இத்துடன் என் பொறுப்பு முடிந்து விட்டது. அவளை நீங்களாகவே கண்டுபிடித்ததாகச் சொல்ல வேண்டும். வேறு எதுவுமே சொல்லக் கூடாது!”
“மாணிக்கம்! அந்தக் கவலை உனக்கு வேண்டாம். எதையும் பொறுப்புடன் செய்யும் திறமை எனக்குண்டு. எதிர்பாராத விதமாக இப்போது ஒரு கூட்டத்தாரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களிடமிருந்து தப்புவது மட்டும் பெரிய செயலல்ல. அவர்களைக் கொண்டே நம்முடைய காரியங்கள் சிலவற்றையும் வெற்றியுடன் சாதித்துக் கொள்ள வேண்டும்!” என்றார் தங்கத்துரை.
மாணிக்கம் அவரிடம் சாலி ஒன்றைக் கொடுத்தான். அதோ பாருங்கள். பச்சை வண்ணம் பூசப்பட்டிருக்கும் அந்தச் சிறிய வீட்டில் இருக்கிறாள் பேரழகி! அவளை எப்படி அழைத்துச் செல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டான்.
தங்கத்துரை சாவியை வாங்கிக் கொண்டார். “மாணிக்கம், உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப் ஒரு சிறிய போலீஸ் படையுடன் வந்து போகிறாரே. எதற்காக?” என்று கேட்டார்.
மாணிக்கம் சிரித்தான். “ஓட்டல்காரர் என் வழிக்கு வர மறுத்துவிட்டார். புலிக்குட்டி என்பவர் தான் பேரழகியைக் கடத்தி வந்து ஓட்டல்காரரிடம் ஒப்படைத்து விட்டுத் திரும்பி வந்து அழைத்துப் போவதாகவும், அப்போது ஆயிரம் ரூபாய் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். புலிக்குட்டி செத்துவிட்டான் என்றதும், ஓட்டல்காரர் உடனே உண்மையை ஒப்புக் கொள்ளவில்லை. புலிக்குட்டிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும், பேரழகியை வேறு ஒருவர் அவரிடம் கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றதாகவும் சொன்னார். எது எப்படியிருந்தாலும், போலீஸ் இலாகா இந்த விஷயத்தில் வெகு தீவிரமாக முனைந்திருப்பதாகவும், ஓட்டல் முதலாளி தப்ப முடியாது என்றும், உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப் அவ்வளவு நல்ல மனிதர் அல்ல என்றும், ஓட்டல்காரர் பேரழகியை அடைத்து வைத்திருப்பதை அறிந்தால் வகாப் அவருடைய எலும்புகளை முறித்து விடுவார் என்றும் பயமுறுத்தி விட்டு, ஓட்டல்காரருக்குத் தெரியாமல் வகாபைத் தொலைபேசியில் அழைத்து அம்பிகா லாட்ஜில் வந்து பேரழகி இருக்கிறாளா என்று தேடிவிட்டுப் போகும் படி சொன்னேன். எதிர்பாராத போலீஸ் படையெடுப்பு ஓட்டல்காரரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. பேரழகி இருக்குமிடத்தை நான் எங்கே சொல்லிவிடுவேனோ என்று அஞ்சினார். வகாப் போன பிறகும் கூட அவருக்கு உயிர் வரவில்லை. பேரழகியை அழைத்துப் போகும்படி வீட்டின் சாவியை என்னிடம் கொடுத்தார். நான் விடுவேனா? ஆயிரம் ரூபாய் எனக்கு கொடுத்தால் தான், பேரழகியை அழைத்துச் செல்லுவேன் என்று பயமுறுத்தினேன். உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்றாகி விட்டது அவருக்கு! பேரம் பேசத் தொடங்கி விட்டார். ஐநூறு ரூபாய் கொடுத்தார். இத்தனை நாட்கள் நான் ஓட்டலில் தங்கியிருந்ததற்கும் ஒன்றும் பணமே வாங்கவில்லை என்னிடம்!” என்றான்.
தங்கத்துரை மாணிக்கம் சொன்னதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு திரும்பி –
வாடகைக் காரை நோக்கிக் கையை அசைத்தார்.
வாடகைக்கார் அவர்கள் இருக்குமிடத்தை நோக்கி வந்தது.
“மாணிக்கம், இனிமேல் எல்லாம் என் பொறுப்பு. நீ போகலாம். சாவகாசமாக ஒரு நாளைக்கு சந்திப்போம்” என்று சொல்லிவிட்டுத் தங்கத்துரை அந்த வீட்டின் முன் போய் நின்றார். கதவு பூட்டப்பட்டிருந்தது. பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். பேரழகி ஒரு மூலையில், தனி அறையில் உட்கார்ந்திருந்தாள். அவள் தங்கத்துரையைப் பார்த்ததும், விழிகளை விரித்துப் புருவங்களை உயர்த்தி வியப்புடன் பார்த்தாள்.
தங்கத்துரை அவள் அருகில் சென்று நின்றார். தலைக்கு மேலே மின்சார விளக்கு எரிந்த போதிலும் கூடத் தங்கத்துரை வந்து நின்றதும், அவருடைய நிழல் பேரழகியின் மீது பட்டு அவளுடைய முகத்தை மறைப்பது போலிருந்தது. தங்கத்துரை. ஓரமாக நின்று பேரழகியைக் கூர்ந்து கவனித்தார்.
“யார் நீங்கள்?” என்று கேட்டாள் பேரழகி.
“உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறேன். பேரழகி!”
“என்னுடைய பெயர் கூடத் தெரியுமா? யார் நீங்கள்?”
“நான் யாராக இருந்தால் என்ன? உன்னுடைய அப்பா என்னை அனுப்பி வைத்தார். உன்னை அழைத்து வரும்படி சொன்னார். உன்னைப் பார்க்க உன் அப்பா எவ்வளவு துடிப்புடன் இருக்கிறார் தெரியுமா?” என்றார் தங்கத்துரை. பேரழகியைப் பார்க்க உண்மையில் அவருக்கு அனுபதாபமாக இருந்தது. இவ்வளவு அழகான குற்றமற்ற பெண்ணின் தந்தை சவரிமுத்து இப்படி வாழ்ந்து வருகிறானே என்று எண்ணும் போது தான் அவருக்கு அனுதாபம் பிறந்தது.
பேரழகி எழுந்து நின்றாள். அவள் முகத்தில் கோபம் படர்ந்தது. “இப்படியெல்லாம் சொல்லி என்னை ஏமாற்ற முடியாது! என்னுடைய அப்பாவிடம் அழைத்துப் போவதாகச் சொல்லித்தான் ஒருவர் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து அடைத்து வைத்தார். இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள், போலீசார் என்னைத் தேடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆகையால் என்னை இடம் மாற்ற வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள்.
“உண்மை தெரியாமல் பேசுகிறாய் பேரழகி! உன்னை ஏமாற்றி இந்த இடத்தில் கொண்டு வந்து விட்டவனுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை! என்னுடன் வந்தால் உன் அப்பாவைக் காணலாம் நீ என்பது உறுதி”
“என் அப்பா யார் என்றாவது தெரியுமா உங்களுக்கு?” என்று ஐயத்துடன் கேட்டாள் பேரழகி.
தங்கத்துரை இலேசாகச் சிரித்தார். “இன்னுமா என்னை நம்பவில்லை? உன் அப்பா தான் என்னை அனுப்பினார் என்று சொன்னேனே? சவரிமுத்து உன் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்!” என்றார் அவர்.
“இப்போது எங்கே என்னை அழைத்துச் செல்லப் போகிறீர்கள்? சிறைக்குத்தானே!” என்று கேட்டாள் பேரழகி.
“சிறையில் உன் அப்பா இல்லை இப்போது!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் தங்கத்துரை.
“அப்பாவை விடுதலை செய்துவிட்டார்களா?” என்று கேட்டாள் பேரழகி அப்போது அவள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியின் ஒளியைக் கவனித்தார் தங்கத்துரை.
அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “உன் அப்பாவை விடுதலை செய்யவில்லை. அவராகவே விடுதலை பெற்றுக் கொண்டு வெளியே வந்துவிட்டார்!”
பேரழகியின் முகம் பேயைக் கண்டதைப் போல் மாறி விட்டது. “என்ன? அப்பா சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டாரா? போலீசார் விடமாட்டார்களே? கண்டுபிடித்து விட்டால் சிறைவாசம் அதிகமாகிவிடுமே? பிடிபடாவிட்டால் நாயைச் சுடுவது போல் அல்லவா சுட்டு விடுவார்கள்!” என்றாள் அவள்,
“அச்சம் கொள்ளாதே பேரழகி! அவ்வளவு எளிதில் சவரிமுத்தைப் போலீசார் கண்டுபிடித்து விடமாட்டார்கள்!” என்றார் தங்கத்துரை.
“எதற்காக அவர் சிறையிலிருந்து தப்பி ஓடினார்?” என்று கேட்டாள் பேரழகி.
“நீ மறைந்து போனதுதான் காரணம்! நீ மறைந்து விட்ட சேதி சவரிமுத்துக்குத் தெரிந்ததுமே சிறையை விட்டு ஓடி விட்டார்! உனக்கு எந்தவிதமான ஆபத்தும் நேரக்கூடாதே என்ற கவலைதான் அவரை வாட்டி வருகிறது” என்றார் தங்கத்துரை.
“இப்போது எங்கே இருக்கிறார் அப்பா?” என்று கேட்டாள் பேரழகி.
“அங்கேதானே போகிறோம்! வெளியே வாடகைக் கார் வந்து நிற்கிறது. வா போகலாம்” என்றார் தங்கத்துரை.
பேரழகி தங்கத்துரையைத் தொடர்ந்து நடந்தாள். அவர் காரின் கதவைத் திறந்தார். உள்ளே பேரழகி ஏறி உட்கார்ந்ததும், தங்கத்துரை அவள் பக்கத்தில் உட்கார்ந்தார். காரோட்டியைப் பார்த்து, “புறப்பட்ட இடத்திலேயே கொண்டு போய்விடு!” என்றார்.
வாடகைக் கார் விரைந்து சென்றது.
27
சவரிமுத்து அந்தச் சிறிய ஓட்டலுக்குள், ஒரு மூலையில் உட்கார்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தான். வெகு நேரம் சித்தனை செய்தபடியே அவன் தேநீர் பருகிக் கொண்டிருந்தான். வெளியே-
இருண்டு கிடந்தது.
தங்கத்துரை பேரழகியைக் கண்டுபிடித்து அழைத்து வகுவாரா என்று ஐயமாக இருந்தது அவனுக்கு. பேரழகியைப் பற்றியே வெகு நேரம் சிந்தனை செய்து கொண்டிருந்தான் அவன். இன்னும் அவன் வந்த வேலை ஆகவில்லை. ஷெனாய் நகர் அரை பர்லாங்குத் தூரத்தில் இருந்தது. ஷெனாய் நகருக்குப் பக்கத்தில் தான் எங்கேயோ நஞ்சப்பன் வீடு இருந்தது. எந்த இடம் என்று உடனே நினைவுக்கு வரவில்லை. மற்றொரு கோப்பைத் தேநீர் வரவழைத்துக் குடித்துக் கொண்டே சிந்தனை செய்தான். அவனுடைய நேரமெல்லாம் ஓட்டலிலேயே ஓடிவிடும் போலிருந்தது. அவன் வெகு நேரம் யோசித்து பார்த்து நஞ்சப்பனின் வீடு எந்தத் திசையில் இருந்தது என்பதை சுவனப்படுத்திக் கொண்டான். இடத்தை விட்டு மெல்ல எழுந்து நடந்தான்.
அவன் சிந்தனையுடன் நடந்த போது காசு கொடுக்க மறந்து போனான். ஓட்டல்காரர் மணியடித்தார். சவரிமுத்து தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதைப் போல் திரும்பி வந்து காசை மேசையின் மேல்போட்டு விட்டு நடந்தான்.
நஞ்சப்பன் கொல்லத்துக்காரன் என்பதால் அவனுடைய வீட்டைக் கண்டுபிடிப்பது எளிதாகிவிட்டது. அந்தப் பக்கத்தில் எல்லோருமே நஞ்சப்பனைத் தெரிந்து வைத்திருந்தார்கள். இந்தப் பக்கத்தில் எல்லா வீடுகளையுமே அவன் தான் கட்டியிருப்பான் போலிருக்கிறது என்று எண்ணினான் சவரிமுத்து.
நஞ்சப்பனின் வீடு சிறியது தான். ஆனால் அதை அழகாகக் கட்டி விட்டிருந்தான் அவன். சுதவு மூடியிருந்தது. உள்ளே விளக்கு எதுவும் எரியவில்லை.
சவரிமுத்து கதவின் முன் நின்றான். இருட்டில் கூர்ந்து பார்த்தான். வெளியே-
பூட்டிக் கிடந்தது.
சவரிமுத்து திரும்பித் தெருவில் வந்து நின்றான், “யார் வேண்டும்?” என்ற குரல் கேட்டுத் திரும்பினான்?
பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அவனை நோக்கி வந்தார்.
*இந்த வீட்டில் ஒருவரும் இல்லையா?”
“ஏன் இல்லை? யார் வேண்டும் என்று கேட்டேனே?”
“நஞ்சப்பனின் வீடு இதுதானே?”
“ஆமாம், ஆனால் நஞ்சப்பன் செத்துப் போய்விட்டானே!” தங்கத்துரை சொன்னது உண்மைதான் என்பது உறுதியாகி விட்டது இப்போது.
“நஞ்சப்பனின் மகனைப் பார்க்க வேண்டும்” என்றான் சவரிமுத்து.
“எதற்கு?”
“எதற்கு என்றால்? எங்களுக்குள் ஏதாவது விவகாரம் இருக்கும். உங்களிடம் நான் எப்படி அதைச் சொல்ல முடியும்?”
அந்த மனிதர் ஏளனமாகச் சிரித்தார். “என்னிடம் சொல்ல வேண்டாம். இங்கேயே காத்திருங்கள். எதற்கு என்று என்னிடம் சொன்னால் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை” என்றார் அவர்.
சவரிமுத்துக்குச் சங்கடமாக இருந்தது. அவன் பக்குவமாகக் கேட்டான் : ‘நஞ்சப்பனின் மகன் வர நேரமாகுமா?”
பக்கத்து வீட்டுக்காரர் உதடுகளைப் பிதுக்கினார். “எப்படிச் சொல்ல முடியும்? திண்ணையில் உட்கார்ந்து காத்திருங்கள்!” என்றார்.
சவரிமுத்துக்கு ஆத்திரம் வந்தது. ஆத்திரப்பட்டுப் பயனில்லை என்று தெரிந்து கொண்டான் அவன். ஒரு சில மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்! மற்றவர்கள் என்ன செய்கிறார்கள். யார் எதற்காக அவர்களைத் தேடி வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் கட்டுக் கடங்காத ஆவல்! அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பதைத் தெரிந்து கொண்டான் சவரிமுத்து. அவரை ஏமாற்ற வேண்டும் என்று சரடுவிட்டான். ”ஒரு புது வீடு கட்ட வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறேன். நஞ்சப்பனை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் தான் இறந்து போனதாகச் சொல்லுகிறீர்களே! அவருடைய மகனைக் கொண்டு வீட்டைக் கட்டிவிடலாம் என்று எண்ணியிருக்கிறேன்!” என்றான். அதைக் கேட்டதும், அந்த மனிதர் விழுந்து விழுந்து சிரித்தார்.
சவரிமுத்து ஒன்றும் புரியாமல் “என்ன?” என்றான். “நீங்கள் வீட்டைக் கட்ட வேண்டுமென்றால் சுடர்மணியைத் தேடிப் பயனில்லை”
“சுடர்மணி யார்?”
“அவன் தான் நஞ்சப்பனின் மகன். அவனுடைய பெயரைக் கூட நீங்கள் கேள்விப்படவில்லை போலிருக்கிறது!” என்றார் பக்கத்து வீட்டுக்காரர் கேலியாக.
சவரிமுத்து ஒன்றும் புரியாமல் விழித்தான்.
பக்கத்து வீட்டுக்காரர் விளக்கமாகச் சொன்னார். “நீங்கள் விழித்து நிற்பதில் பயனில்லை. நஞ்சப்பன் கொல்லத்துக்காரன் என்பதால், அவனுடைய மகனும் கொல்லத்துக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டீர்கள் இல்லையா? நீங்கள் எண்ணுவதைப் போல் சுடர்மணி கொல்லத்துக்காரன் இல்லை. அவன் வேறு தொழிலை ஏற்றுக் கொண்டு விட்டான்!”
சவரிமுத்து அந்த மனிதரையே பார்த்துக் கொண்டு நின்றான். “என்ன தொழில்” என்று கேட்டான் மெல்ல.
பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார்: “பால் வியாபாரம் செய்து வருகிறான். சுமார் பத்துப் பசுக்களை வாங்கிவிட்டிருக்கிறான்! நல்ல வரும்படி இருந்த போதிலும் அவனுடைய செலவுக்கு எட்டவில்லை! அவன் கொஞ்சம் செல்வாளி!”
“வியப்பாக இருக்கிறதே!” என்றான் சவரிமுத்து-
“எது வியப்பாக இருக்கிறது? சுடர்மணி அதிகமாகச் செலவு செய்வதா?” என்று கேட்டார் பக்கத்து வீட்டு மனிதர்.
“இல்லை, சுடர்மணி பால் வியாபாரத்தில் இறங்கியது தான்” என்றான் சவரிமுத்து.
“இதில் வியப்பு என்ன இருக்கிறது? நஞ்சப்பன் வீடு கட்டிக் கொண்டிருந்த போது மாடியிலிருந்து விழுந்து செத்துப் போனான். அதனால் அந்தத் தொழில் வேண்டாமென்று முடிவு கட்டிவிட்டான் சுடர்மணி!” என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.
“சுடர்மணியை உடனே நான் பார்க்க வேண்டும். எங்கே பார்க்கலாம்?” என்று கேட்டான் சவரிமுத்து.
“நீங்கள் அவனைத் தேடி வந்த காரணத்தைச் சொல்லவில்லையே? உண்மையான காரியத்தை நீங்கள் சொல்லவில்லை!”
சவரிமுத்து சொன்னான் : “உண்மையான காரியத்தைச் சொல்லிவிடுகிறேன். நஞ்சப்பன் எனக்குக் கொஞ்சம் பணம் தர வேண்டும். அவன் இறந்து போனதால், இப்போது எனக்குச் சேர வேண்டிய பணத்தைச் சுடர்மணியிடமிருந்து தான் வாங்கிக் கொள்ள வேண்டும்!”
பக்கத்து வீட்டுக்காரரும் இதை நம்பிவிட்டார். “முதலிலேயே இதைச் சொல்லக் கூடாதா? சுடர்மணி இப்போது வழக்கறிஞரின் வீட்டுக்குப் பால் கறந்து ஊற்றுவது வழக்கம்!” என்றார் அவர்.
“எந்த வழக்கறிஞர்?” என்று கேட்டான் சவரிமுத்து.
“வழக்கறிஞரின் வீடு தெரியாதா? இந்தப் பக்கம் அவ்வளவாகப் பழக்கமில்லை போலிருக்கிறது. ஷெனாய் நகரில் இருக்கிறது அவர் வீடு. அப்படிக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றால், வழக்கறிஞர் தாண்டலனின் வீடு எது என்று எவரையாவது கேள்!” என்றார் பக்கத்து வீட்டு மனிதர்.
சவரிமுத்து திரும்பினான். அவருக்கு நன்றி என்று கூடச் சொல்லாமல் விரைவாக நடந்தான். அந்த மனிதருக்கு எவராவது நன்றி கூறுவார்களா என்று எண்ணியது அவன் மனம்!
28
வழக்கறிஞரின் வீட்டைக் கண்டுபிடிக்கப் பதினைந்து நிமிடங்களே பிடித்தது. அந்தத் தெருவில், இரு பக்கங்களிலும், எல்லா வீடுகளும்-
ஒரே மாதிரியாக இருந்தன.
சவரிமுத்து சாலை ஓரமாக ஒரு மரத்தடியில் நின்று வழக்கறிஞரின் வீட்டைப் பார்த்தான். உள்ளே. கீழே கூடத்தில் மட்டும் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மாடி மேலும், மற்ற அறைகளிலும் விளக்குகள் எரியவில்லை.
வீட்டின் வெளியே –
எவரும் இல்லை.
சுடர்மணி பால் கறந்துவிட்டுப் போய் விட்டானா இல்லையா என்று தெரியவில்லை. கறவைப் பசு எதுவும் வெளியே இல்லையே?
சவரிமுத்து மரத்தின் நிழலில் நின்று சிந்தித்தான். தெருவில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளின் ஒளியிலிருந்து அந்த மரத்தின் நிழல் சவரிமுத்தை மறைத்தது. அவன் வெகு நேரம் சிந்தனை செய்தான். இந்தப் பச்சுத்திலிருந்த வீடுகள் எல்லாம் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த போது அவற்றைப் பார்த்திருக்கிறான். இப்போது –
எவ்வளவோ மாறிப் போயிருந்தது!
சவரிமுத்து மெல்ல நடந்தான். சாலையின் ஓரமாக வழக்கறிஞரின் வீட்டுப் பக்கம் போனான். அவர் வீட்டின் பக்கவாட்டில் போய் நின்றான். அவன் கண்கள் பக்கவாட்டுகளில் எவராவது வருகிறார்களா என்று பார்த்தன. அப்போது –
வழக்கறிஞரின் வீட்டு மாடியிலிருந்து கோழி கத்துவதைப் போல் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பயங்கரமான சிரிப்புச் சத்தம்!
பேய்ச் சிரிப்பு!
சவரிமுத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது! அவன் திரும்பிப் பார்த்தான். வழக்கறிஞரின் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பணியாட்களும் வழக்கறிஞரும் மாடிமேல் ஓடுவது தெரிந்தது. சவரிமுத்து பின்பக்கம் சென்றான். புறக்கரைப் பக்கம் –
எவனோ குதித்து ஓடுவதைப் போல் இருந்தது!
சவரிமுத்து அவனைத் தொடர்ந்து இருட்டில் ஓடினான். முன்னால் ஓடியவன் காற்றாய்ப் பறந்தான்.
சவரிமுத்து இருட்டில் விடாமல் தொடர்ந்தான். முன்னால் ஓடியவன் திரும்பிப் பார்த்து விட்டான். சவரிமுத்தைப் பார்த்ததும், அவனுடைய ஓட்டம் அதிகமாகியது.
சுற்றி வளைத்து எங்கெல்லாமோ ஓடிப் போய் –
ஒரு வீட்டிற்குள் புகுந்து விட்டான் ஓடியவன். சவரிமுத்தும் அந்த வீட்டிற்குள் புகுந்தான். உள்ளே, வரிசையாகப் பல மாடுகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் நடுவில் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டான் அந்த மனிதன்.
சவரிமுத்து இருட்டில் சிறிது நேரம் நின்று கவனித்தான். பிறகு-
“சுடர்மணி, வெளியே வா”
பதில் இல்லை.
“சுடர்மணி, உன்னிடம் பேச வேண்டும்”
பதில் இல்லை.
“சுடர்மணி, வெளியே வரப்போகிறாயா, இல்லையா? நீ வெளியே வராவிட்டால், நானாகவே எப்படியும் உன்னைக் கண்டுபிடித்து விடுவேன். வழக்கறிஞரிடம் உன்னைக் கொண்டு போய் நிறுத்திவிடுவேன்!”
சுடர்மணி வெளியே வந்தான், அவனை வெளியே அழைத்து வந்து ஒளியில் நிற்கவைத்துப் பார்த்தான் சவரிமுத்து, சுடர்மணியின் முகத்தில் வேர்வைத் துளிகள் நிரம்பி நின்றன. அவனுக்கு மூச்சு வாங்கியது.
சவரிமுத்து அவனைப் பார்த்து மெல்லச் சிரித்தான்.
“என்ன வேண்டும் யார் நீ?” என்று கேட்டால் சுடர்மணி.
“என்னைத் தெரியவில்லையா?” என்று கேட்டான் சவரிமுத்து,
“தெரியவில்லை, யார் நீ?” என்று மீண்டும் கேட்டான் சுடர்மணி.
”உன் அப்பா என்னைப் பற்றி உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையா?” என்று கேட்டான் சவரிமுத்து.
சுடர்மணி சினத்துடன், “யார் நீ?” என்று தொடர்ந்து கேட்டான்.
சவரிமுத்து சிரித்தான். “சுடர்மணி, நஞ்சப்பன் சாகும் போது உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையா? நான் தான் சவரிமுத்து!’
சுடர்மணியின் முகம் மாறியது. அவன் உடனே சமாளித்துக் கொண்டு, “சவரிமுத்து? என் அப்பா உன்னைப் பற்றி என்னிடம் என்ன சொன்னார்?” என்றான்.
“உண்மையைச் சொல். என்னைப் பற்றி உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையா?”
“இல்லை”
”நகைகள் இருக்குமிடத்தைப் பற்றி ஏதாவது சொன்னார்?”
“நகைகளா?”
சவரிமுத்து அந்த மங்கலான ஒளியில் சிறிது நேரம் அவனை உற்றுப் பார்த்தான். பிறகு சொன்னான் : “சுடர்மணி என்னைப் பற்றி உனக்குத் தெரியுமோ தெரியாதோ? ஆனால் இப்போது நீ தெரிந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்போது சிறையைவிட்டு ஓடி வந்திருக்கிறேன், உன்னைக் காண! நான் நினைத்ததைச் செய்யாமல் எப்போதுமே விட்டதில்லை. உன்னுடைய வயதில் எவரும் செத்துப் போக விரும்பமாட்டார்கள் என்பது திண்ணம், என்னிடம் நீ ஓர் உண்மையை மறைக்கிறாய் என்று உறுதியுடன் நம்புகிறேன். நஞ்சப்பன் இறந்த போது உன்னிடம் என்ன சொல்லிட்டுப் போனான் என்பதைச் சொல்லாவிட்டால், என்ன நடக்கும் என்பதை உன்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது!”
சுடர்மணி ஒன்றும் பேசாமல் சவரிமுத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். அவன் நெஞ்சில் உரத்துடன் அப்படி நின்றானா, அல்லது அச்சத்தால் ஏற்பட்ட பீதியுடன் அப்படி நின்றானா என்று சவரிமுத்துக்குத் தெரியவில்லை. மீண்டும் குரலைக் கனைத்துக் கொண்டு கேட்டான்; “நஞ்சப்பன் எப்படிச் செத்துப் போனான்?”
“வீடு கட்டிக் கொண்டிருந்த போது மாடியிலிருந்து தவறி விழுந்து செத்துப் போனார்!” என்றான் சுடர்மணி.
”அவர் கீழே விழுந்த போது நீ எங்கே இருந்தாய்?”
“வீட்டில் இருந்தேன். எதற்காக இதையெல்லாம் கேட்கிறாய்?”
ஒன்றுமே தெரியாதவனைப் போல் பேசாதே! நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லு, நஞ்சப்பன் விழுந்துவிட்ட சேதி கேட்டதும் ஓடி வந்தாயா?”
“ஆமாம்”
“நீ வந்த போது நஞ்சப்பன் உயிருடன் இருந்திருப்பான் என்றே எண்ணுகிறேன்!”
“ஆமாம்”
“நீ வந்ததும் என்ன சொன்னான்?”
“அவர் அப்போது ஒன்றுமே சொல்லக் கூடிய நிலைமையில் இல்லை. நான் வந்த இரண்டு நிமிடங்களுக்கெல்லாம் இறந்து விட்டார்!”
“இரண்டு நிமிடங்கள் போதுமே! அந்த இரண்டு நிமிடங்களில் எவ்வளவோ விஷயங்களைச் சொல்லியிருக்க முடியுமே!”
”ஒன்றுமே சொல்லவில்லை அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் இவைதாம். சுடர்மணி, எனக்கு நேர்ந்த கதியைப் பார்! என் தொழில் உனக்கு வேண்டாம். பெட்டியில் கொஞ்சம் பணமிருக்கிறது. கறவைப் பசுக்கள் பத்து வாங்கி விட்டுப் பால் வியாபாரம் செய்! அதைச் சொல்லிவிட்டு அவர் தமது மூச்சை விட்டுவிட்டார்!” என்றான் சுடர்மணி.
“வேறு ஒன்றுமே சொல்லவில்லையா?” என்று கேட்டான் சவரிமுத்து,
“வேறு என்ன சொல்லியிருப்பார் என்று எண்ணுகிறாய்?” என்று சவரிமுத்தையே மடக்கினான் சுடர்மணி.
சவரிமுத்து கோபத்தை அடக்கிக் கொண்டு இலேசாகச் சிரித்தான். “சுடர்மணி! நான் எதற்காகச் சிறைக்குப் போனேன் தெரியுமா! சவரிமுத்து எதற்காகச் சிறையில் தள்ளப்பட்டான் என்பதை நாடு முழுவதுமே அறியும் அது கூடத் தெரியாது என்று சொல்ல மாட்டாய் என்றே நம்புகிறேன்!” என்றான்,
“ஏதோ கோயில் நகைகளைக் களவாடி விட்டதாகச் சொல்லி உன்னைச் சிறையில் தள்ளிவிட்டார்கள். அல்லவா?”
“ஆமாம், என்னைச் சிறையில் தள்ளியதில் தவறு ஒன்றுமில்லை. என்னுடன் நஞ்சப்பனையும் சிறையில் தள்ளியிருந்தால் இன்று நஞ்சப்பன் உயிருடன் இருந்திருப்பான்!” ‘என்ன? என் அப்பாவைச் சிறையில் தள்ளியிருக்க வேண்டுமா? என்ன உளறுகிறாய்?”
“நான் ஒன்றும் உளறவில்லை. நீதான் ஒன்றும் புரியாதவனைப் போல் விழிக்கிறாய் என்னை ஏமாற்ற! என்னை எமாற்றுபவர்களை நான் இலேசில் விடுவதில்லை!”
“கோயில் கொள்ளையில் என் அப்பாவுக்கு பங்கு உண்டு என்று சொல்லுகிறாயா?”
“சொல்லுவது மட்டுமல்ல, அது நூற்றுக்கு நூறு உண்மையுங்கூட! கோயிலிலிருந்து கிளப்பிய நகைசுளை எடுத்துக் கொண்டு ஓடியபோது, போலிஸ்காரன் என்னைத் துரத்தி வந்தான். எடுத்த நகைகளைத் திருப்பிக் கொடுப்பதா என்ற எண்ணம் எழுந்தது எனக்கு! சிறைக்குப் போனாலும் சரி, எடுத்த நகைகளைப் போலீசாரின் கண்ணில் கூடக் காட்டுவதில்லை என்ற எண்ணம் என் மனத்தில் பளிச்சிட்டது. அப்போது எதிர்பாராத விதமாக நஞ்சப்பனைக் கண்டேன். இந்தப் பக்கங்களில் வீடுகள் அரைகுறையாகக் சுட்டப்பட்டிருந்தன அப்போது, நஞ்சப்பனிடம் நகைகளைக் கொடுத்து விட்டு, அதை மறைத்து வைக்கும் படி சொல்லிவிட்டு ஓடினேன். ஆனால் போலீசார் என்னைப் பிடித்து விட்டார்கள். போலீசாருக்குக் கடைசி வரையில் உண்மையைச் சொல்லவே இல்லை! நஞ்சப்பன் நகைகளை அப்படியே ஏதாவது ஒரு சுவரில் வைத்துக் கட்டியிருப்பான் என்பதில் ஐயமில்லை. அவன் நகைகளை வைத்திருக்கும் வீடு எது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எந்த இடத்தில் அதை வைத்து மறைத்துச் சுவரை எழுப்பியிருக்கிறான் என்பது தான் தெரியாது! இந்த உண்மையை உன்னிடம் சொல்லிவிட்டுச் செத்துப் போயிருப்பான் நஞ்சப்பன் என்றே எண்ணுகிறேன். உண்மையைச் சொல்லி விடு. வீட்டை நான் காண்பிக்கிறேன். இடத்தை நீ கண்டுபிடித்துச் சொன்னால் நகைகளை எளிதில் கிளப்பிவிடலாம். நஞ்சப்பனுக்குப் பாதி நகைகளைத் தருவதாகச் சொல்லியிருந்தேன். அந்தப் பாகத்தை உனக்குத் தருகிறேன்!” என்றான் சவரிமுத்து.
சுடர்மணியிடம் பக்குவமாகப் பேசித் தன் வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று எண்ணினான் அவன்.
சுடர்மணி சிறிது நேரம் சிந்தனை செய்தான். அவன் தன் பக்கம் சாய்வான் என்று எண்ணினான் சவரிமுத்து, ஆனால் –
“நீ சொல்லுவது எல்லாமே புதுமையாக இருக்கிறது! இந்த மாதிரியான சேதி எதுவுமே என் அப்பா என்னிடம் சொல்லவில்லை. அவரிடம் நீ நகைகளைக் கொடுத்திருந்தாலும் அவர் அதை வாங்கியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இறந்து போன என் தந்தையின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த நீ ஓடிவந்தாயா?” என்று ஆவேசம் வந்தனைப் போல் சொன்னான்.
சவரிமுத்துக்கு ஆத்திரம் வந்தது. அவன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு சொன்னான் : “வழக்கறிஞரின் வீட்டில் நீதான் கோழியைப் போல் சுத்திவிட்டு, பேய்ச் சிரிப்பைச் சிந்திவிட்டு ஓடிவந்தாய் என்று எண்ணுகிறேன். இதற்குக் காரணம் இருக்கிறது!”
“என்ன காரணம்?”
“வழக்கறிஞர் குடியிருக்கும் வீட்டில் தான் நஞ்சப்பன் நகைகளை மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறாய்! அதற்காக, வழக்கறிஞர் குடும்பத்தை அந்த இடத்திலிருந்து கிளப்ப அவர்களை பயமுறுத்துகிறாய் என்று எண்ணுகிறேன்!”
“கத்தப் பொய்! நான் சுத்தவே இல்லை!”
“வழக்கறிஞர் அச்சம் கொண்டு அந்த வீட்டைக் காலி செய்து விடுகிறார் என்று வைத்துக் கொள். அப்புறம் அந்த வீடு காலியாகவே இருக்கும். பேய் உலவும் வீடு என்று எவரும் அந்த வீட்டிற்குக் குடிவர மாட்டார்கள். வீடு காலியாக இருந்தால், நகைகள் எங்கே புதைக்கப்பட்டிருக்கிறது என்பதை எளிதில் கண்டு பிடித்துவிடலாம் என்று கனவு காண்கிறாய்! இல்லையா?”
“நீ சொல்லுவது அவ்வளவும் கற்பனை!”
“எனக்கு வேறு சில வேலைகளும் உள்ளன. ஆகையால் இப்போது உன்னை நான் விட்டு வைக்கிறேன். இருபத்து நாலு மணி நேரம் தவணை தருகிறேன். நாளை இரவு இதே நேரம் உன்னை இங்கே சந்திக்கிறேன். இந்த இடத்தில் நீ இல்லாவிட்டாலும், எங்கிருந்தாலும் உன்னைக் கண்டு பிடித்துவிடுவேன் என்பதைக் கவனம் வைத்துக் கொள்! குறிப்பாக வீட்டின் எந்த பாகத்தில் எந்த இடத்தில் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல், எந்த வீட்டில் ஒளிக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் சொல்லுகிறேன். இருவருமே சேர்ந்து நகைகளைக் கிளப்பலாம். இதற்கு நீ சரிப்பட்டு வராவிட்டால், என்ன செய்வது என்பது எனக்குத் தெரியும்!” என்றான் சவரிமுத்து.
“இருபத்து நாலு மணி நேரம் எனக்குத் தவணை கொடுத்திருக்கிறாய். இந்த இருபத்து நாலு மணி நேரத்திற்குள் போலீகார் மீண்டும் உன்னைப் பிடிக்காமல் விட்டு வைத்தால் தானே நீ திரும்பி வந்து எனக்குத் தொல்லை கொடுக்கப் போகிறாய்?” என்றாள் சுடர்மணி!
“அஞ்ச வேண்டாம்! போலீசார் பிடியில் மீண்டும் நான் சிக்கமாட்டேன். எப்படியும் நாளை மாலை வருகிறேன். உன்னுடைய முடிவு இரண்டு பேருக்குமே சாதகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்!” என்று சொல்லிவிட்டு தடத்தான் சவரிமுத்து, அப்போது –
சிறிது தூரத்தில் இருந்த மரத்தின் மறைவிலிருந்து நழுவிய ஓர் உருவம் மின்னல் வேகத்தில் வேறு திக்கில் சென்று மறைந்தது! இதைச் சுடர்மணியோ, சவரிமுத்தோ கவனிக்கவே இல்லை!
29
சங்கர்லால் தொலைபேசியில் பேசிவிட்டுத் தொலைபேசியை வைத்தார். அவர் மனம் சிந்தனையுள் ஆழ்ந்தது. “யாரது தொலைபேசியில் அழைத்தது? அவசர காரியமா?” என்று ஆவலுடன் கேட்டாள் இந்திரா.
“வழக்கறிஞர் தாண்டவன்தான் பேசினார். மீண்டும், இத்தனை நாட்கள் கழித்து அவருடைய வீட்டில் அமனியாம்! சேவல் கத்துவது போலக் கூச்சல் கேட்டதாம். அதைத் தொடர்ந்து பயங்கரமான சிரிப்புச் சத்தமாம்! அவருடைய மனைவி உடனே அந்த வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாளாம்!” என்றார் சங்கர்லால்.
“உண்மைதானே? ஆண்கள் வீட்டில் இருப்பது அரிது, பெண்கள் தானே வீட்டில் இருந்து அவதிப்பட வேண்டும். பேய் என்பது இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்? அச்சத்துடனும் பீதியுடனும் ஒரு வீட்டில் வாழ்வதை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள்!” என்றாள் இந்திரா.
சங்கர்லால் இலேசாகச் சிரித்தார். “இதுவரையில் உண்மையாகப் பேயை எவரும் கண்டதாகத் தெரியவில்லை. இந்தத் தடவை வழக்கறிஞர் வீட்டில் உண்மையாகவே பேயைக் காண்பேனா என்னவோ! பார்க்கலாம்!” என்று சொல்லிவிட்டு வெளியே புறப்பட்டார்.
அவர் வெளியே புறப்படப் போகிறார் என்பதை அறிந்ததுமே மாணிக்கம் காரைக் கொண்டு வந்து பங்களாவின் முன் நிறுத்தினான்.
சங்கர்லால் காரில் ஏறி உட்கார்ந்தார். மாணிக்கம் கீழே நின்றபடி சங்கர்லாலைப் பார்த்தான். சங்கர்லால் காரைக் கிளப்பினார். கார் புறப்படும் முன், “மாணிக்கம், பேய் நடமாட்டம் உள்ள ஓர் இடத்திற்கு. நான் போகிறேன். அங்கே நீயும் வருவதில் எனக்கு ஒன்றும் தடையில்லை. ஆனால் கயல்விழி தன் கணவன் பேய் நடமாடும் இடத்திற்குப் போவதை விரும்பமாட்டாள் என்றே எண்ணுகிறேன். நான் வீட்டில் தங்குவதே இல்லை என்று இந்திரா குற்றம் சாட்டுகிறாள். நீயாவது கயல்விழியிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்!” என்று சொன்னார்.
தாழ்வாரத்தில் வந்து நின்ற இந்திரா சங்கர்லாலைப் பார்த்துச் சிரித்தாள். கயல்விழி இந்திராவின் கையைப் பிடித்துக் கிள்ளிவிட்டாள்!
சங்கர்லால் எல்லாவற்றையும் ஓரக் கண்ணில் பார்த்தபடியே காரை விட்டார் வேகமாக அது மலைப்பாதையை விட்டு இறங்கி, உதவி போலீஸ் கமிஷனர் வகாபின் வீட்டை அடைந்தது. சங்கர்லால் காரில் உட்கார்ந்தபடியே ஆரனை அமுக்கினார்.
வகாப் அப்போது தான் திரும்பி வந்திருக்க வேண்டும்… அவர் தமக்கு உரிய உடையுடன் காணப்பட்டார். சங்கர்லாலின் காரைப் பார்த்ததுமே அவர் ஓடி வந்தார். “சங்கர்லால், எங்கே புறப்பட்டு விட்டீர்கள் இந்த வேளையில்?” என்றார் அவர்.
“காரில் ஏறி உட்காருங்கள்!” என்றார் சங்கர்லால்.
வகாப் காரில் ஏறிச் சங்கர்லாலின் பக்கத்தில் உட்கார்ந்தார்.
சங்கர்லால் காரை வேகமாக விட்டார். வகாப் வியப்புடன் பக்கவாட்டில் திரும்பிச் சங்கர்லாலைப் பார்த்தார்.
“இப்போது எங்கே போகிறோம்?”
“பேயைக் காண!”
“பேயா? சங்கர்லாலின் அகராதியில் பேய் என்பதற்குப் பொருளே இருக்காதே!”
“இல்லைதான்! இந்திராவுக்குப் பேய் இருக்கிறதா இல்லையா என்ற ஐயம் வந்துவிட்டது. வழக்கறிஞர் மீண்டும் தொலைபேசியில் இப்போது அழைத்துப் பேய் நடமாடுவதாகச் சொன்னார். அதைக் கேட்டதும் இந்திரா வழக்கறிஞரின் மனைவிக்காக அனுதாபப்படுகிறாள்!”
“அப்படியானால் இந்தப் பேய் சீக்கிரம் பிடிபட்டு விடும் என்று சொல்லுங்கள். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?”
“மீண்டும் வழக்கறிஞரின் வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்க்கிறேன்”
“சங்கர்லால் வரும்போது வீட்டிற்குள் எங்கேயுமே பேய் ஒளிந்து கொண்டிருக்காது என்பது உறுதி!”
“எதற்கும் நம் கண்ணால் ஒரு முறை பார்த்துவிடலாம்” என்றார் சங்கர்லால்,
வகாபுக்கு வியப்பாக இருந்தது. அவர் ஒன்றும் பேசவில்லை. ‘தங்கத்துரையைக் கண்டேன்” என்றார் சங்கர்லால் அமைதியுடன்.
உடனே –
வகாப் நிமிர்ந்து உட்கார்ந்தார். “எங்கே? எப்போது? அவரை உடனே கைது செய்யக்கூடாது?” என்றார் வகாப்.
சங்கர்லால் மெல்லச் சிரித்தார். “அவசரப்படாதீர்கள். தங்கத்துரையைக் கைது செய்வதில் பயன் ஏதும் இல்லை. அவரைவிட்டு வைப்பதால் பயன் உண்டு!” என்றார்
“கொலைக் குற்றமும், கொள்ளையடித்து வீட்டுக்குத் தீ வைத்த குற்றமும் அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தங்கத்துரையைக் கைது செய்யாமல் விட்டு வைப்பதா? எனக்கு ஒன்றும் சரியாகப் புரியவில்லை சங்கர்லால்!””
“நாளடைவில் புரியும்!” அமைதியுடன் இருங்கள்!”
“அப்படியானால் தங்கத்துரையைப் பற்றி என்னிடம் சொல்லி, என்னுடைய ஆவலைக் கிளறிவிட்டிருக்க வேண்டாம்!” என்றார் வகாப்,
சங்கர்லால் சிரித்தார், “வகாப், தப்பித் தவறி எங்கேயாவது தங்கத்துரையைக் கண்டால் கைது செய்து விடவேண்டாம், காரியம் கெட்டுவிடும் என்று எச்சரிக்கை செய்யவே இப்போது உண்மையைச் சொன்னேன்!” என்றார் அவர் கேலியாக.
“தங்கத்துரையை நான் எங்கேயாவது பார்த்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? அவரைக் கைகுலுக்கி அவருடைய திறமைக்காகப் பாராட்ட வேண்டுமா? அல்லது பார்க்காதது போல் இருந்து விட வேண்டுமா?” என்று கேட்டார் வகாப்
“தங்கத்துரை உங்கள் கண்களில் எளிதில் அகப்படமாட்டார். அப்படி ஒரு வேளை எங்கேயாவது பார்த்து விட்டாலும் நீங்கள் அவரைப் பார்க்காததைப் போல் நடந்து கொள்ள வேண்டும். உங்களைக் கண்டதுமே அவர் மெல்ல நழுவிவிடுவார் என்பதில் ஐயமில்லை!” என்றார் சங்கர்லால்.
“இன்னும் எத்தனை நாட்களுக்கு தங்கத்துரையை விட்டு வைக்க வேண்டும்?” என்று கேட்டார் வகாப்.
“மீண்டும் நான் சொல்லும் வரையில்” என்றார் சங்கர்லால்,
வகாப் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். அவருடைய மனம் சிந்தனை செய்தது. அவருடைய ஆவலைச் சோதனை செய்வது போலிருந்தது சங்கர்லாலின் போக்கு.
கார் ஷெனாய் நகரை அடைந்தது. வழக்கறிஞரின் வீட்டின் முன் காரை நிறுத்தினார் சங்கர்லால். வகாபும் சங்கர்லாலும் கீழே இறங்கி வழக்கறிஞரின் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
வழக்கறிஞர் நேரத்தை வீணாக்காமல், “வாருங்கள் சங்கர்லால்!” என்று சொல்லி மாடிக்கு அழைத்துச் சென்றார் சங்கர்லாலை, அவர் பின்னாலேயே சென்றார் வகாப்.
சங்கர்லால் மாடிமேல் இருந்த கூடத்தையும், எல்லா அறைகளையும் பார்த்தார். மேசைகளும், நாற்காலிகளும் ஒழுங்காகவே இருந்தன. மின்சார விளக்குகள் எல்லாம் எரிந்து கொண்டிருந்தன. விளக்குகளில் பல்புகள் எதுவும் முன்பு கண்டதைப் போல் கீழே விழுந்து கிடக்கவில்லை!
சங்கர்லால் வழக்கறிஞரைப் பார்த்தார். அவருக்குப் பக்கத்தில் வழக்கறிஞரின் மனைவியும் வந்து நின்று கொண்டிருந்தார்.
வழக்கறிஞர் சொன்னார் : “சங்கர்லால், நீங்கள் முன்பு வந்து போன பிறகு எங்கள் வீட்டில் அமைதி நிலவியது. மீண்டும் இன்று அந்த அமைதி குலைந்து விட்டது! முன்பெல்லாம் மேசைகளும், நாற்காலிகளும், பூந்தொட்டிகளும் உருண்டு கிடக்கும். இன்று அப்படி ஒன்றும் நடக்கவில்லை!”
வழக்கறிஞரின் மனைவி சொன்னாள் : “நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ? உண்மையாகவே சேவல் சுத்துவதைப் போன்ற சத்தம் இங்கே கேட்டது! சேவல் தான் ஏதோ தப்பித் தவறி இங்கே வந்து விட்டதோ என்று எண்ணினேன். எல்லோரும் மாடிமேல் ஓடிவந்து பார்த்ததில், சேவலும் இல்லை, ஒன்றுமில்லை! சேவல்` கத்துவதைப் போன்ற ஓசை அடங்கிய மறுவினாடியே பயங்கரமாகச் சிரிப்புச் சத்தம் கேட்டது!”
சங்கர்லால் மெல்லச் சிரித்தார். வழக்கறிஞரின் மனைவி பேய் தான் உலவுகிறது அந்த வீட்டில் என்பதை உறுதிப்படுத்தவே அப்படி சொல்லுகிறாள் என்பது தெரியும் சங்கர்லாலுக்கு.
அவர் ஒன்றும் சொல்லாமல் கூடத்தில் இருந்த சுவர்களைப் பார்த்தார். அவர் வெகு நேரம் எல்லா பக்கங்களிலும் கூர்ந்து பார்த்தார். ஓர் இடத்தில், சன்னலுக்கு மேலே சுவரில் சில புள்ளிகள் தெரிந்தன. சங்கர்லால் பக்கத்தில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அதன் மேல் ஏறி நின்றார். சன்னலுக்கு மேலே புள்ளிகள் தெரிந்த இடத்தில் சற்று உற்றுக் கவனித்தார்.
சிறிய சுத்தியல் ஒன்றால் எவரோ அந்த இடத்தில் தட்டிப் பார்த்திருக்கிறார்கள்! சுத்தியலால் தட்டியதால் சுண்ணாம்பு பெயர்ந்து விழுந்து விட்டிருக்கிறது. சுண்ணாம்பு பெயர்த்த இடத்தில் புள்ளிகள் தெரிந்தன.
சங்கர்லால் கைவிரல்களை மடக்கிக் கொண்டு அந்த இடத்தில் தட்டிப் பார்த்தர். டக்டக்கென்று அழுத்தமாகச் சத்தம் கேட்டது. அவர் கீழே இறங்கி நாற்காலியை முன்பு இருந்த இடத்தில் இழுத்துப் போட்டார்.
“இந்த இடத்தில் சுவரில் நீங்கள் சுத்தியால் எப்போதாவது தட்டிப் பார்த்தீர்களா?” என்று கேட்டார் சங்கர்லால், வழக்கறிஞரைப் பார்த்து.
வழக்கறிஞர் வியப்புடன் சங்கர்லாலையும் வகாபையும் பார்த்தார். வகாபுக்கும் ஒன்றும் விளங்கவில்லை என்பது வழக்கறிஞருக்கு அவரைப் பார்த்தவுடனே தெரிந்து விட்டது. சங்கர்லாவைப் பார்த்து, “நாங்கள் ஏன் அந்த இடத்தில் சுத்தியால் தட்டிப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டார்.
“ஏதாவது புதையல் இருக்கிறதா என்று பார்க்க!” என்றார் சங்கர்லால்,
“இந்த வீட்டில் எங்கேயாவது புதையல் இருக்கிறதா என்ன?” என்று கேட்டார் வழக்கறிஞர்.
“இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் தான் எவரோ தட்டிப் பார்த்திருக்கிறார்கள்! சுவரைத் தட்டிப் பார்த்தது பேயாசு இருக்குமோ என்ற ஐயம் வந்து விட்டது உங்கள் மனைவிக்கு! அச்சம் வேண்டாம். மீண்டும் அந்தப் பேய் வந்தால் என்னைத் தொலைபேசியில் அழையுங்கள்” என்றார் சங்கர்லால்.
வழக்கறிஞரின் மனைவி அச்சத்துடன் பார்த்தாள் சங்கர்லாலை “மீண்டும் அந்தப் பேய் இங்கே வருமா?” என்றாள்.
“வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது! ஆனால் ஒன்று அந்தப் பேய் உங்களை ஒன்றும் செய்யாது. ஆகையால் அச்சம் வேண்டாம்!” என்று சொல்லிவிட்டுச் சங்கர்லால் வகாபுடன் கீழே வந்தார்.
அவரை வழியனுப்ப வந்த வழக்கறிஞர், “சங்கர்லால் இன்றிலிருந்து நான் தூங்காமல் இரவும் பகலும் உற்றுக் சுவனிக்கப் போகிறேன். சிறு ஓசை ஏதாவது கேட்டாலும் உங்களைத் தொலைபேசியில் அழைக்கிறேன். இந்தத் தொல்லையிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்!” என்றார்.
சங்கர்லால் சிரித்துக் கொண்டே காரைக் கிளப்பினார். கார் சிறிது தொலைவு சென்றதும், “என்ன சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார் வகாப்.
‘ஐந்தே நிமிடங்களில் பேயைப் பிடித்து விடலாம்! ஆனால் ஒன்று, இப்போது பேயைப் பிடிப்பதால் எந்த விதமான பயனும் இல்லை. நல்ல வாய்ப்பு ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது பேயைப் பிடித்தால் பயனுண்டு!” என்றார் சங்கர்லால்.
“எப்போது அந்த நல்ல வாய்ப்புக் கிடைக்கும் என்றாவது சொல்லுவீர்களா?” என்று கேட்டர் வகாப்.
“எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம்! வழக்கறிஞர் தொலைபேசியில் நம்மை மீண்டும் அழைக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்!” என்றார் சங்கர்லால்.
”வழக்கறிஞர் வீட்டில் புதையல் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? வேடிக்கைக்காகச் சொன்னீர்களா என்று ஐயமாக இருக்கிறது!” என்றார் வகாப்.
“இதில் வேடிக்கை ஒன்றும் இல்லை. உண்மையாகவே ஒரு புதையல் இருக்க வாய்ப்பு இருக்கிறது! அந்தப் புதையலுக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம்!”
“உண்மையாகவா, சங்கர்லால்!”
“ஆமாம் சவரிமுத்து கோயிலிலிருந்து கிளப்பிய நகைகளைத் தாம் புதையல் என்று நான் குறிப்பிடுகிறேன்”
”சவரிமுத்து கொண்டு வந்த நகைகள் புதையலாக வழக்கறிஞரின் வீட்டில் இருக்கிறதா?” என்று வியப்புடன் கேட்டார் சங்கர்லால்,
“பொறுத்திருந்து பார்ப்போம்” என்று சொல்லிவிட்டுச் சிந்தனையுள் ஆழ்ந்தார் சங்கர்லால்,
வகாபுக்கு வழக்கறிஞரின் வீட்டையே இடித்துத் தள்ளி அந்தப் புதையலைக் கண்டுபிடிக்க வேண்டும் போல் தோன்றியது. சங்கர்லாலின் உதவி இருக்கும்வரையில் அதற்குத் தேவை இருக்காது என்ற முடிவுக்கு வந்தார். சங்கர்லால் ஏதோ ஒரு காரணத்திற்காகப் பொறுமையுடன் இருக்கிறார் என்று எண்ணிய அவர் மேலும் பல கேள்விகளைக் கேட்டுத் துளைக்காமல் பேசாமல் இருந்து விட்டார்.
சங்கர்லால் வகாபை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டு, முல்லைவனத் தோட்டப் பங்களாவை நோக்கிக் காரை விட்டார்.
இந்திரா தூங்காமல் அவர் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
30
சவரிமுத்து இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் கழித்துத் திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் போனதும் சுடர்மணி மன அமைதியை இழந்தான். அவன் வீட்டிற்குப் போகவில்லை. நிலைகொள்ளாமல் தெருவில் மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் எங்கே போய்க் கொண்டிருந்தான் என்பது அவனுக்கே தெரியாது! அவன் உடல் சோர்ந்ததும் வீட்டுக்குப் போய் படுத்துத் தூங்கிவிடலாம் என்று எண்ணினான். சவரிமுத்து விடுத்த எச்சரிக்கை அவன் தூக்கத்தையே கெடுத்துவிடும். போல் இருந்தது. அளவுக்கு மிஞ்சிய சோர்வின் காரணமாகவாவது எளிதில் தூங்கிவிட முடியும் என்று அவன் முடிவு என்று அவன் முடிவு கட்டியதில் வியப்பில்லை.
பல தெருக்களை அவன் கடந்து சென்றுவிட்டான். எங்கும் நிற்காமல் அவன் நடந்து கொண்டேயிருந்தான். நினைத்தபடியே சோர்வடைந்துவிட்டான்! வீட்டிற்குத் அவன் திரும்பலாம் என்று எண்ணித் திரும்பினான். அப்போது –
அவன் பக்கத்தில் சந்தடியின்றி ஒரு சிறிய கார் வந்து நின்றது. காரின் பின் பக்கக் சுதவு திறந்தது. சுடர்மணி திரும்பிப் பார்ப்பதற்குள் இரும்பு போன்ற ஒரு கரம் அவனைக் காரில் இழுத்து உட்கார வைத்தது. சோர்வடைந்து விட்டிருந்த சுடர்மணி கொஞ்சமும் எதிர்க்க முடியாமல் தொப்பென்று சீட்டில் விழுந்தான். காரின் சுதவு பட்டென்று மூடியது. விரைந்து புறப்பட்டுப் பறந்தது.
எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது!
சுடர்மணி உற்றுப் பார்த்தான், எதிரேயும் பக்கவாட்டிலும் பார்த்தான். காரை எவனோ ஓட்டிச் சென்றான். பின் சீட்டில், சுடர்மணிக்குப் பக்கத்தில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பேர்வழிகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் –
அறிமுகமில்லாதவர்கள்!
சுடர்மணி பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான். என்ன நடக்கப் போகிறது என்று கூட எண்ணிப் பார்க்க முடியவில்லை. அவனால்!
பல இடங்களில் வளைந்து திரும்பிச் சென்ற கார், வீடுகள் அதிகமாக இல்லாத ஓர் இடத்தை அடைந்தது, விசாலமான சாலையின் ஓரத்தில், மரத்தின் பக்கத்தில் ஒரு பெரிய கார் நின்றிருந்தது. அந்தப் பெரிய காரின் பக்கத்தில் உராய்ந்து கொண்டு நின்றது சிறிய கார்.
பெரிய காரின் முன் சீட்டில் காரோட்டியும், பின் சீட்டில் ஒரு பெரிய மனிதரும் உட்கார்ந்திருந்தனர். காரின் உள்ளேயும் வெளியேயும் விளக்கும் எரியவில்லை.
பெரிய மனிதரை எங்கேயோ பார்த்திருக்கிறான் சுடர்மணி. எங்கே பார்த்திருக்கிறான், யார் அவர் என்று சரியாகத் தெரியவில்லை. தெரு விளக்கின் வெளிச்சம் அவர் முகத்தில் படவில்லை. ஆகையால், அவர் முகத்தைச் சரியாகப் பார்க்க இயலவில்லை.
இருட்டில் உட்கார்ந்தபடியே அந்தப் பெரிய மனிதர் பேசினார் : “சுடர்மணி, இப்போது உன்னை ஏன் இங்கே கொண்டுவரச் சொன்னேன் தெரியுமா?”
சுடர்மணி வியப்புடன் பார்த்தான் அந்த மனிதரை! பழக்கப்பட்ட குரல் தான் அது! அவர் பேசியபோது தலையைக் கொஞ்சம் வெளியே நீட்டிப் பேசினார். அப்போது அவருடைய முகம் தெரு விளக்கின் ஒளியில் இலேசாகப் பட்டது. அவர் –
அண்ணாமலைதான்!
தில்லைநாயகத்தின் எஸ்டேட் நிர்வாகி அண்ணாமலையே தான் அவர். அடிக்கடி இதற்குமுன் பார்த்திருக்கிறான் அவரை! அண்ணாமலை தன் தந்தை நஞ்சப்பனைப் பார்க்கப் பல தடவை வந்திருக்கிறார் என்பது தெரியும்!
அண்ணாமலை உறுதி நிறைந்த குரலில் பேசினார் : “சுடர்மணி, உன்னிடம் ஓர் உண்மையைச் சொல்லப் போகிறேன். என்னுடைய ஆட்களில் இருவர் உன்னைப் பல நாட்களாகவே உனக்குத் தெரியாமல் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறார்கள். இனியும் அவர்கள் உன்னைக் கண்காணித்து வருவார்கள் என்பதில் ஐயமில்லை! உன்னை சவரிமுத்து சந்தித்துப் பேசிய முழு விவரமும் எனக்கு தெரியும். அவன் இருபத்து நாலு மணி நேரம் அவகாசம் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறான் அல்லா? அவன் குறிப்பிட்ட நேரத்தில் திரும்பி உன்னைப் பார்க்க வருவான் என்பதில் ஐயம்’ வேண்டாம். நீ எங்கிருந்தாலும் அவன் உன்னைக் கண்டுபிடித்து விடுவான். அவன் உன்னைத் தேடி வந்ததும், உண்மையை அவனிடம் சொல்லாவிட்டால், கொதிப்பால் உன்னைத் தொலைத்துக்கட்டி விடுவான் அவன் இல்லையா!”
எதற்காக அவர் இப்படிப் பேசுகிறார் என்று சுடர்மணிக்குப் புரியவில்லை. ஆனால், அவர் சொல்லுவது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை என்பது அவனுக்குத் தெரியும்.
அண்ணாமலை தொடர்ந்து சொன்னார்: “சுடர்மணி, நான் சொல்லுவதை கவனமாகக் கேட்டுக் கொள். சவரிமுத்துக்குப் பயந்து, அவனிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறாய் என்று வைத்துக் கொள். உண்மையைத் தெரிந்து கொண்டதும், இனி மேல் உன்னால் அவனுக்குப் பயனில்லை. எதிர்காலத்தில் அவனுக்கு நீ ஒரு பெரிய முட்டுக் கட்டையாக அமைந்து விடுவாயோ என்று எண்ணி எப்படியும் உன்னைத் தொலைத்துவிடுவான். தெரிகிறதா?”
அதுவும் உண்மைதான். சுடர்மணியால் மறுக்க முடியவில்லை. ஆனால் அவர் எதற்காக இதெல்லாம் சொல்லுகிறார் என்பது தான் அவனுக்குப் புரியவில்லை!
‘நீ என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுகிறேன். சவரிமுத்து நாளைக்கு வந்ததும், அவனுடன் சேர்ந்து புதையலைக் கிளப்ப முடிவு செய்துவிட்டதாகச் சொல்ல வேண்டும். புதையல் இருக்கும் இடம் எதுவென்று உனக்குத் தெரியும். இல்லையா? எந்த வீட்டில் என்பது உனக்குத் தெரியாது. சவரிமுத்துக்குப் புதையல் எந்த வீட்டில் இருக்கிறது என்று தெரியாது! குறிப்பிட்ட ஓர் இடம் தெரியாவிட்டால் புதையலைக் கிளப்புவது கடினம். வீட்டின் ஒவ்வொரு பாகத்தையும் இடித்துத் தள்ளிக் கொண்டிருக்க முடியாது! இருவரும் சேர்ந்து புறப்படுங்கள். எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மட்டும் வாயால் சொல்லிவிடாதே! சவரிமுத்து வீட்டைக் காண்பித்ததும், எந்த இடம் என்பதை நீ குறிப்பிட்டுச் சொல்லுவதாக வாக்குறுதி கொடுத்தால் அவன் நம்பிவிடுவான். குறிப்பிட்ட அந்த வீட்டை அடைந்ததும், சவரிமுத்து சொல்கிறபடியே செய்து கொண்டு வா. புதையல் வெளிக் கிளம்பியதும், சவரிமுத்தை என்னுடைய ஆட்கள் கவனித்துக் கொள்வார்கள். உனக்கு எந்தவிதமான ஆபத்தும் நேராது. நாம் இருவரும் ஆளுக்குப் பாதியாகப் பங்கு போட்டுக் கொள்ளலாம்” என்றார் அண்ணாமலை அக்கறையுடன்,
சுடர்மணி சிந்தனை செய்யத் தொடங்கினான். அண்ணாமலைக்குத் தன் மீது ஏன் இவ்வளவு அக்கறை என்பது புரிந்துவிட்டது அவனுக்கு!
“சுடர்மணி, யோசிக்காதே! நான் சொல்லுவதைக் கடைப்பிடித்தால் தான் உயிர் வாழ முடியும் உன்னால்! உன் தந்தை விட்டுப் போன புதையலையும் கிளப்ப முடியும் எளிதில்! என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? இதோ, இந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொள், புதையலைக் கிளப்பியதும் பாதிப் புதையலுக்குச் சமமாகப் பணமாகவே கொடுத்து விடுகிறேன்! அந்த நகைகளை உன்னால் எளிதில் விற்க முடியாது. என்னால் விற்கமுடியும்!” என்று சொல்லி ஒரு கட்டுப் பத்து ரூபாய் நோட்டுக்களை அவன் மடியின் மீது வீசி எறிந்தார் அண்ணாமலை.
சுடர்மணி அந்த நோட்டுக்களை எடுத்துப் பார்த்தான். பாங்கிலிருந்து புறப்பட்டு வந்த புதிய நோட்டுக்கள் அவை!
அந்த நோட்டுக்களை அவன் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த போதே அண்ணாமலை ஏதோ சைகை காட்டினார். இரண்டு கார்களும் ஒரே வேளையில் புறப்பட்டு வெவ்வேறு திக்குகளில் பறந்தன.
சுடர்மணியின் வீட்டுக்கு இரண்டு பர்லாங்குத் தொலைவில் அவனை இறக்கிவிட்டு, எங்கேயோ பறந்து விட்டது அந்தச் சிறிய கார்.
நஞ்சப்பன் எங்கேயோ சுவரில் புதைத்துவிட்டுச் செத்துப் போனான். அந்தப் புதையலைப் பற்றித் தில்லைநாயகத்தில் எஸ்டேட் நிர்வாகி அண்ணாமலைக்கு எப்படித் தெரியும் என்று எண்ணி வியந்தபடி மெல்ல நடந்தான் சுடர்மணி. அண்ணாமலை எதையும் அறியாமல் ஆயிரம் ரூபாய் தரமாட்டார் என்று சுடர்மணிக்குத் தெரியும்.
அண்ணாமலையின் ஆட்கள் இப்போது கூடத் தன்னைத் தொடர்ந்து வருகிறார்களா என்று திரும்பிப் பார்த்தான் சுடர்மணி. அவன் கண்களுக்கு எவருமே தெரியவில்லை!
– தொடரும்…
– சங்கர்லால் வந்துவிட்டார்! (மர்ம நாவல்), சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
July 2, 2026
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
July 2, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
June 29, 2026