சங்கர்லால் வந்துவிட்டார்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 100 
வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

31

காட்டின் மத்தியில் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தான் சவரிமுத்து, நடந்து செல்லுவதிலேயே இரவுப் பொழுது கழிந்து விடுமோ என்று எண்ணினான். அவன் நினைத்தபடியே தங்கத்துரையும் சின்னத்துரையும் இருந்த வீட்டை அடைந்த போது விடிந்து விட்டது! 

சவரிமுத்து விழிப்புடன் பார்த்தான். எதிரே, வீட்டின் வெளியே தங்கத்துரையும் பேரழகியும் சின்னத்துரையும் உட்கார்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். 

சவரிமுத்து தொலைவில் நின்ற படியே பேரழகியைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். பிறகு – 

ஒடினான் அவள் இருந்த இடத்தை நோக்கி! 

அவன் ஓடிவருவதைப் பார்த்ததும் எழுந்து கொண்டாள் பேரழகி. சவரிமுத்து ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டான். அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. உணர்ச்சி வசப்பட்டு நின்றான். பேரழகி தன் தந்தையின் நிலை கண்டு கண்ணீர் சிந்தினாள். 

“அப்பா! சிறையிலிருந்து ஓடி வந்து விட்டீர்களாமே! போலீசார் மீண்டும் உங்களைப் பிடித்தால் என்ன ஆகும்? சிறையிலிருந்து தப்பி வந்ததற்காகச் சிறைவாசம் நீண்டு விடுமே?” என்று கதறினாள் அவள். 

சவரிமுந்து அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல் தங்கத்துரையைப் பார்த்தான். “தங்கத்துரை, உங்கள் உதவியை நான் என்றும் மறக்கவே மாட்டேன்!” என்றான். 

தங்கத்துரை மெல்லச் சிரித்தார். 

சவரிமுத்து அவரைத் தனியே அழைத்தான். “தங்கத்துரை பேரழகியை அழைத்துக் கொண்டு நீங்கள் வட இந்தியாவில் போய் இருங்கள். நானும் சின்னத்துரையும் வந்து உங்களைச் சந்திக்கிறோம்” என்றான். 

“வட இந்தியாவுக்கா?” என்றார் தங்கத்துரை. – 

“ஆமாம், கல்கத்தாவில் எனக்கொரு நண்பன் இருக்கிறான், அவனுடைய முகவரி தருகிறேன். கல்கத்தாவில் தங்கியிருக்க எல்லா வசதிகளையும் அவன் செய்து தருவான். நானும் சின்னத்துரையும் இன்னும் பத்து நாட்களில் அங்கு வந்து சந்திக்கிறோம் உங்களை!” என்றான் சவரிமுத்து, 

“எதற்காகப் பேரழகியைக் கல்கத்தாவுக்கு அழைத்துப் போக வேண்டும் என்கிறாய்? அவள் இங்கே இருப்பதனால் என்ன?” என்று கேட்டார் தங்கத்துரை. 

“போலீசார் நம்மை எப்படியும் வேட்டையாடி விடுவார்கள்! அதற்குள் நாம் தப்பிப் போய்விட வேண்டும். தப்பிப் போவதற்கு சரியான இடம் சுல்சுத்தாதான்! நீங்களும் பேரழகியும் முதலில் போய்விடுங்கள். புதையலைக் கிளப்பிக் கொண்டு நானும் சின்னத்துரையும் வந்து விடுகிறோம்! எல்லாரும் சேர்ந்து போவதைவிட வாய்ப்புக் கிடைக்கும் போது தனித்தனியே போவது நல்லது. கல்கத்தாவில் எல்லா நகைகளையும் பணமாக்கி விடலாம் எளிதில்!” என்றான் சவரிமுத்து. 

“எப்போது நாங்கள் புறப்பட வேண்டும்?” என்று கேட்டார் தங்கத்துரை. 

“இன்று மாலையே புறப்படுங்கள். கல்கத்தா மெயிலில் போவது தவறு. மெயில் வண்டிகளிலும் எக்ஸ்பிரஸ் வண்டிகளிலும் தாம் போலீஸ் கண்காணிப்பு மிகுதியாக இருக்கும். ஆகையால் பல வண்டிகள் மாறிப் போவது தான் மேல்” என்றான் சவரிமுத்து. 

“எப்போது புறப்பட வேண்டியிருக்கும்?” என்று கேட்டார் தங்கத்துரை.

“இன்று மாலையே புறப்படுங்கள். செலவுக்கு வேண்டிய பணம் நான் தருகிறேன்!” என்றான் சவரிமுத்து, 

சிறையிலிருந்து தப்பிவந்து தத்தளித்துக் கொண்டிருக்கும். 

சவரிமுத்திடம் பணம் எது என்று வியப்பு ஏற்பட்டது! 

சவரிமுத்து சின்னத்துரையைப் பார்த்தான். “சின்னத்துரை, ஆயிரம் ரூபாய் கொடு!” என்றான். 

சின்னத்துரை இடுப்பில் கட்டியிருந்த பெல்டை அவிழ்த்தார். அந்தப் பெட்டில் பல அறைகள் இருந்தன. ஓர் அறைக்குள் இரண்டு விரல்களை விட்டு. நூறு ரூபாய் நோட்டுக்களாக வெளியே இழுத்தார். பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை வெளியே இழுத்தார். பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துத் தங்கத்துரையிடம் கொடுத்தார். 

தங்கத்துரை அவற்றை வாங்கிப் பார்த்தார். எல்லாம் நல்ல நோட்டுகள். இவ்வளவு பணம் சின்னத்துரையிடம் ஏது என்று வியப்படைந்தார். அவர் ஒன்றும் சொல்லாமல் எல்லா நோட்டுகளையும் மடித்துக் கால்சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். 

சவரிமுத்து சொன்னான் : “பாசஞ்சரில் போவது தான் சிறந்தது. மாலை ஆறரை மணிக்குப் பூரிக்குப் போகும் பாசஞ்சர் சென்ட்ரல் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. அதில் புறப்பட்டுச் செல்லுங்கள். விஜயவாடா நிலையத்தை அடைந்ததும், வேறு புகை வண்டியைப் பிடித்துச் செல்லுங்கள்” 

ஆகட்டும் சவரிமுத்து. நான் சொன்னபடியே பேரழகியைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து சேர்த்து விட்டேன். இனிமேல் பேரழகியைப் பாதுகாக்கும் பொறுப்பும் என்னுடைதாகிவிட்டது. நீங்கள் இருவரும் கல்கத்தாவுக்கு விரைவில் வந்து விடுவீர்கள் இல்லையா?” என்றார் தங்கத்துரை. 

“என்னுடைய வேலை முடிந்ததும் சின்னத்துரையை அழைத்துக் கொண்டு கல்கத்தாவுக்குப் புறப்படுகிறேன். அதுவரையில் இங்கே நாங்கள் ஒளிந்து வாழ வேண்டியிருக்கிறது!” என்றான் சவரிமுத்து. 

“நான் கொண்டு வந்த நகைப் பையை எங்கேயாவது பத்திரப்படுத்த வேண்டுமே!” என்றார் தங்கத்துரை. 

சவரிமுத்து, சின்னத்துரையைப் பார்த்தான். 

தங்கத்துரை எதைப்பற்றியோ தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தார். அவர் எதைப் பற்றி அப்படி ஓயாமல் சிந்தனை செய்கிறார் என்று சவரிமுத்துக்கு வியப்பாக இருந்தது. சின்னத்துரையும் அவரையே பார்த்துக் கொண்டு நின்றார். 

“என்ன அப்படி யோசிக்கிறீர்கள்” ஆயிரம் கல்களுக்கு அப்பால் உள்ள கல்கத்தா நகருக்குப் போசு வேண்டுமே என்று சிந்திக்கிறீர்களா?” என்று கேட்டான் சவரிமுத்து. 

“அதற்காக இல்லை” என்றார் தங்கத்துரை. 

“வேறு எதற்காக உங்களுக்குச் சிந்தனையாக இருக்கிறது’ என்று விடாமல் குடைந்து கேட்டான் சவரிமுத்து, 

தங்கத்துரை மெல்லச் சிரித்தார். அவர் சிரிப்பிலிருந்தே இருவரும் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணினார் அவர். ஆனால்- 

சின்னத்துரைக்குத் தான் அது புரிந்தது. சவரிமுத்துக்கு புரியவில்லை அவ்வளவு எளிதில்! 

சின்னத்துரையும் இப்போது மெல்லச் சிரித்தார். “புரிந்து விட்டதா?” என்று சின்னத்துரையைப் பார்த்துக் கேட்டான் சவரிமுத்து, 

“ஏன் புரியவில்லை? தங்கத்துரை நம்மிடம் எதற்காக வந்தார் என்பதை அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாதே! அவருடைய நகைப் பை நம்மிடம் இருக்கிறது இல்லையா?” என்றார் சின்னத்துரை. 

சவரிமுத்து தங்கத்துரையைப் பார்த்துச் சொன்னான் : “தங்கத்துரை, என் மீதோ, சின்னத்துரையின் மீதோ நீங்கள் ஐயம் கொள்ள வேண்டாம். நகைப் பை எங்கேயும் போய்விடாது. நீங்கள் இல்லாமல் அதை நாங்கள் விற்கவும் மாட்டோம். சின்னத்துரையிடம் அது மிகவும் பத்திரமாக இருக்கிறது. அதைப் பாதுகாக்கச் சின்னத்துரையைவிடச் சிறந்த ஓர் ஆளை நாம் சுண்டுபிடிக்கவே முடியாது!” 

“நகைப் பையை அவர் தன் கையிலேயே வைத்திருக்கிறார். எங்கேயாவது போனால் காரில் கொண்டு போகிறார். இது மிகவும் ஆபத்தான செயல் அல்லவா?” என்று கேட்டார் தங்கத்துரை, 

“எது ஆபத்து, எது ஆபத்து இல்லை என்பது சின்னத்துரைக்கு நன்கு தெரியும். நீங்களும் நானும் கூட அதை அவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருக்க முடியாது! அவரைப் பற்றி நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கல்கத்தாவுக்கு உங்களை நான் தனியாகப் போகச் சொல்லவில்லையே! என் உயிருக்குயிரான ஒரே மகளை உங்கள் ஒப்படைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள். உங்கள் வசம் நகைகளுக்கு நான் பொறுப்பாளி!” என்று உறுதி கூறினான் சவரிமுத்து.

“தவறாகப் புரிந்து கொண்டாய் சவரிமுத்து! சின்னத்துரையின் மீதோ, உன் மீதோ எனக்கு எந்தவிதமான ஐயமும் இல்லை. தெருவில் தனியாகப் போகும் சிறு பிள்ளையின் கையில் இருக்கும் தின்பண்டத்தைப் பருந்து எப்படி எதிர்பாராத விதமாகப் பாய்ந்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அதைப் பிடுங்கிச் சென்றுவிடுகிறது! இப்போது நம்மைத் தேடிப் பருந்துகள் பல வட்டமிடுகின்றன. அந்தப் பருந்துகளில் ஒன்று நம்மை ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே நான் சொன்னேன்!” என்றார் தங்கத்துரை, 

இதைக் கேட்டுச் சின்னத்துரையும் சவரிமுத்தும் சிரித்தார்கள். 

“எந்தப் பருந்தும் எங்களை நெருங்கிவிட முடியாது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன” என்று புதிர் போடுவதைப் போல் பேசினார் சின்னத்துரை. 

“சொல்லுங்கள்” என்றார் தங்கத்துரை அமைதியாக. 

“ஒன்று, நாங்கள் சிறு பிள்ளைகள் அல்ல! எளிதில் ஏமாந்து விடமாட்டோம். இரண்டாவதாக நாங்கள் நடுத்தெருவில் நடக்கவில்லையே! எந்தப் பருந்தும் எங்கள் மீது வகையாகப் பாய முடியாது!” என்று விளக்கிச் சொன்னார் சின்னத்துரை. 

தங்கத்துரை நகைகளைப் பற்றிய பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டார். 

“அப்படியானால் மாலை புறப்படுகிறேன். பேரழகிக்குக் சுல்சுத்தாவைச் சுற்றிக் காண்பிக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவளுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பேரழகியைப் பார்த்தார் தங்கத்துரை. 

அவள் முகம் சோர்ந்துவிட்டிருந்தது. கல்கத்தாவுக்குப் போகப் போகிறாமே என்ற மகிழ்ச்சி அவள் முகத்தில் தோன்றவில்லை. 

தங்கத்துரை மனத்தில் எண்ணிக் கொண்டார் : பேரழகிக்குச் சென்னையைவிட்டுப் போகப் பிரியமில்லை. தன் தந்தை பயங்கரமான வழியை வகுத்துக் கொண்டிருக்கிறாரே தனது எதிர்கால வாழ்விற்காக என்பதை அவள் மனம் அறிந்து கொண்டது. பெற்றெடுத்த தன் அன்னையைக் கூடப் பார்க்காமல் கல்கத்தா போக வேண்டுமே என்று அவள் மனம் வேதனைப்படுகிறது! 

சவரிமுத்து சொன்னான். “தங்கத்துரை, நானும் சின்னத்துரையும் புகைவண்டி நிலையத்துக்கு வழி அனுப்ப வருகிறோம். பயணத்திற்குத் தயாராக இருங்கள்.” 

“சரி” என்று சொல்லிவிட்டு, சுட்டில் ஒன்றில் மரத்தின் கீழ் போய்ப் படுத்துத் தூங்கப் போய்விட்டார் தங்கத்துரை. அவர் படுத்துக் கொண்டதைப் பார்த்தால் பகலெல்லாம் தூங்குவார் போலிருந்தது. முனியப்பனை அழைத்து, “சாப்பாட்டு வேளைக்கு மட்டும் என்னை எழுப்பு!” என்று சொல்லிவிட்டு இரண்டு தலையணைகளை வசதியாகத் தலைக்கு அடியில் போட்டுக் கொண்டு படுத்து விட்டார். 

அன்று முழுவதும் அவர் தூங்கிக் கொண்டேயிருந்தார். எப்படித்தான் அவருக்கு அவ்வளவு தூக்கம் வந்ததோ? 

32

மாலையில் குறிப்பிட்ட நேரத்துக்குத் தங்கத்துரை பேரழகியை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார். அவருடன் சின்னத்துரையும் சவரிமுத்தும் புறப்பட்டார்கள். 

“உங்களைப் புகைவண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு நான் ஷெனாய் நகருக்குப் போகிறேன். இன்று எப்படியும் புதையல் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்தாக வேண்டும்!” என்றான் சவரிமுத்து, 

“நான் உங்களைக் காரில் கொண்டு வந்து விட்டுத் திரும்பி விடுகிறேன்!” என்றார் சின்னத்துரை. 

முனியப்பனை எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொல்லிவிட்டு சின்னத்துரை எல்லோரையும் அழைத்துக் கொண்டு கார் இருந்த இடத்தை நோக்கி நடந்தார். காரில் ஏறிக் கொண்டு சென்ட்ரல் நிலையத்தை அவர்கள் அடைந்த போது பூரிக்குப் போரும் புகைவண்டி புறப்படச் சரியாக ஐந்து நிமிடங்களே இருந்தன. 

தங்கத்துரை பேரழகியை அழைத்துக் கொண்டு இறங்கினார். சவரிமுத்து அவர்களுடன் நடந்தான். சின்னத்துரை டிக்கட்டுகளை வாங்கி வந்தார். மூன்றாம் வகுப்புப் பெட்டியிலேயே சின்னத்துரையும் பேரழகியும் ஏறிக் கொண்டார்கள். 

வண்டி புறப்படுமுன் தனது துக்கத்தை அடக்கிக் கொண்டு பேரழகி பேசினாள். “அப்பா, நீங்கள் வரும் போது அன்னையையும் அழைத்து வாருங்கள் அப்பா” 

சவரிமுத்து போலில்லை. அவன் ‘சரி’ என்று சொல்லுவதைப் போலத் தலையை மட்டும் மேலும் கீழுமாக ஆட்டினான். 

“தங்கத்துரை, பேரழகி எது கேட்டாலும் வாங்கித் தாருங்கள். எனது நண்பனின் முகவரியைப் பத்திரமாக வைத்துக் கொண்டீர்கள் அல்லவா? பணம் வேண்டுமானால் அவனிடம் வாங்கிக் கொள்ளுங்கள். எத்தனை ஆயிரம் கேட்டாலும் தருவான்!” என்றான் சவரிமுத்து. 

தங்கத்துரை ஒன்றும் சொல்லாமல் இலேசாகச் சிரித்தார். மணி ஒலித்தது. அதை அடுத்து ஊதல் ஓசை கேட்டது. பச்சை விளக்கு மேலும் கீழும் ஆடியது. வண்டி நகர்ந்தது. 

சவரிமுத்தும் சின்னத்துரையும் பிளாட்பாரத்தில் நின்றிருந்த கூட்டத்தில் மறைந்து விட்டார்கள் ஒரு நொடியில். 

பேரழகி சன்னல் வழியாக எவ்வளவு எட்டிப் பார்த்தும் சவரிமுத்தை மீண்டும் பார்க்கவே முடியவில்லை. தங்கத்துரை சிறிது நேரம் இப்படியும் அப்படியும் பார்த்துவிட்டு, சாய்ந்து சன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டார். 

அடுத்த புகை வண்டி நிலையத்தில் இறங்கி விடுபவளைப் போலப் பேரழகி சன்னல் ஓரமாக நிமிர்ந்து உட்கார்ந்திருந்தாள். 

“பேரழகி, நாம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் போகப் போகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள். அடுத்தபடியாக நாம் இறங்கப் போவது விஜயவாடா புகை வண்டி நிலையத்தில், இந்த வண்டி நாலைக் காலையில் பத்து மணிக்கு மேல் தான் விஜயவாடா நிலையத்தை அடையும். ஆகையால் பேசாமல் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்!” என்றார் தங்கத்துரை. 

பேரழகி அவர் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாத மாதிரி சன்னல் விளிம்பில் தலையை நீட்டித் தொடர்ந்து வேடிக்கைப் பாார்த்துக் கொண்டு வந்தாள். 

புகைவண்டி வேகமாகப் போசுத் தொடங்கியதும், காற்றடிப்பதாலும், எஞ்சினிலிருந்து பறந்து வரும் நிலக்கரித் தூள்கள் கண்களில் விழுவதாலும், தன்னால் சோர்வடைந்து படுத்து விடுவாள் என்று எண்ணிப் பேசாமல் இருந்தார் தங்கத்துரை. 

ஒரு சில நிமிடங்களில் புகைவண்டி பேசின்பிரிட்ஜ் நிலையத்தில் நின்றது. பிளாட்பாரத்தில் கொஞ்சம் கூட்டம் இருந்ததால் எப்படியும் வண்டி புறப்பட இரண்டு நிமிடங்களாவது ஆகும் என்று எண்ணிய தங்கத்துரை பேரழகியிடம், “இதோ வந்து விடுகிறேன். நீ இந்த இடத்தை விட்டுப் போகாதே!” என்று சொல்லிவிட்டு இறங்கி ஓடினார். 

அவர் பிளாட்பாரத்தின் ஒரு மூலையில் இருந்த தொலைபேசிக் கூண்டை அடைந்தார். கால் சட்டைப் பையில் இருந்த சில்லறையை எடுத்து ஓர் இரண்டணா காசை எடுத்தார். அவசரம் அவசரமாக ஒரு நம்பருக்கு டயல் செய்தார். “ஹலோ” என்ற குரல் கேட்டதும் காசைப் போட்டு விட்டுப் பேசினார். 

“ஹலோ சங்கர்லால்?”

“ஆமாம்” 

“தங்கத்துரை பேசுகிறேன். சங்கர்லால், நான் இப்போது ஓர் இக்கட்டான நிலையில் இருக்கிறேன். பேரழகியை அழைத்துக் கொண்டு கல்கத்தாவுக்குப் போகும்படி சொல்லி விட்டான் சவரிமுத்து, அவனும் சின்னத் துரையும் புதையலைக் கிளப்பிக் கொண்டு வருகிறார்களாம் நான் இருக்குமிடத்திற்கு! இப்போது என்ன செய்ய வேண்டும்?” 

“எங்கிருந்து பேசுகிறீர்கள்?” 

“பேசின்பிரிட்ஜ் ஜங்ஷனிலிருந்து பேசுகிறேன். பூரி பாசஞ்சரில் எங்களை ஏற்றிவிட்டுச் சவரிமுத்துவும் சின்னத்துரையும் போய்விட்டார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்! நெல்லூரில் இறங்கிச் சென்னைக்கே வந்து விடட்டுமா? அவர்கள் சொன்னபடி கல்கத்தாவுக்கே போய்விடட்டுமா?” 

“நீங்கள் இப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்தது தவறு! என்னுடன் நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஞாபகம் இருக்கிறதா தங்கத்துரை?” 

“வெகு தூரம் போக வேண்டிய நிலை வந்ததும் உங்களிடம் எப்படியாவது தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணினேன். அவ்வளவுதான்!” 

“தங்கத்துரை, கவனமாகக் கேளுங்கள். சவரிமுத்துவின் விருப்பப்படியே கல்கத்தாவுக்குப் போய் இருங்கள். மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்!” என்றார் சங்கர்லால், 

தொலைபேசிக் கூண்டிலிருந்து கண்ணாடிக் கதவுகளின் வழியாகப் பார்த்தார் தங்கத்துரை, கடைசிப் பெட்டியிலிருந்து சின்னத்துரை இறங்கி வந்தார்! 

அவர் எப்போது புகைவண்டியில் ஏறினார்? 

“சங்கர்லால், எங்களை அனுப்பிவிட்டுச் சவரிமுத்தும் சின்னத்துரையும் போய்விட்டதாக எண்ணினேன். சவரிமுத்தைக் காணோம். ஆனால், சின்னத்துரை இதோ! புகை வண்டியில் கடைசிப் பெட்டியில் ஏறிக் கொண்டதை நான் கவனிக்கவில்லை. அவர் என்னைத் தொடர்ந்து, வந்தாரா என்று எனக்கு அச்சமாக இருக்கிறது!” என்றார் தங்கத்துரை. 

“சின்னத்துரைக்கு ஐயம் வராதபடி நடந்து கொள்ளுங்கள். சின்னத்துரை உங்களைத் தொடர்ந்து வர நியாயம் இல்லை. அவர் என்னூர் தீவுக்குப் போக அதே புகை வண்டியில் புறப்பட்டிருக்கலாம் அல்லவா?” 

“அப்படியானால் எங்களுடைய, எங்கள் பெட்டியிலேயே ஏறிக் கொண்டிருக்கலாமே! சங்கர்லால், சின்னத்துரையிடம் தான் என் நகைப்பை இருக்கிறது! நான் வருகிறேன். சின்னத்துரை என்னைப் பார்த்துவிட்டார்!” என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டு வெளியே வந்தார் தங்கத்துரை. 

அவர் நினைத்தபடியே – 

சின்னத்துரை தங்கத்துரையை நோக்கி வேகமாக வந்தார்.

தங்கத்துரை அவரைப் பார்த்து மெல்லச் சிரித்தார். ”சின்னத்துரை, நீங்கள் எப்போது புகை வண்டியில் தொத்திக் கொண்டீர்கள்? சவரிமுத்து எங்கே?” என்றார். 

சின்னத்துரை சிரிக்கவில்லை. “தங்கத்துரை! யாருடன் தொலைபேசியில் பேசினீர்கள்?” என்று கேட்டார். 

”சின்னத்துரை நான் கல்கத்தாவுக்குப் போகிறேன். நான் திரும்பிவர இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ?” என்னுடைய மனைவியிடம் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும். கல்கத்தாவுக்குப் போவதாகவும் தெரிவித்து விட்டேன். ஏற்கனவே பல நாட்களாக நான் காணவில்லையே என்று அவன் ஏங்கிக் கொண்டிருந்தான்!” என்றார் தங்கத்துரை, 

“சென்ட்ரல் நிலையத்திலிருந்தே நீங்கள் பேசியிருக்கலாமே?” என்றார் சின்னத்துரை. 

“சென்ட்ரல் நிலையத்தில் நேரமில்லை என்று எண்ணினேன், உங்களிடம் பேசிக் கொண்டிருக்கவே சரியாக இருந்தது. நீங்கள் எங்கே புறப்பட்டீர்கள்?” என்று மீண்டும் கேட்டார் தங்கத்துரை, 

சின்னத்துரையின் குரல் இப்போது அடியோடு மாறி ட்டது. தங்கத்துரை சொன்னதை அவர் நம்பியது போல் காணப்பட்டார். “நான் என்னூரில் இறங்கி விட வேண்டும். வண்டி புறப்பட பிறகு தான் என்னூருக்குப் புறப்பட்டேன், கடைசிப் பெட்டியில் தாவிக் கொண்டேன். இல்லாவிட்டால் உங்களுடனே ஒரே பெட்டியில் வந்திருப்பேனே!” என்றார். 

”உங்களுடைய கார்? சென்ட்ரல் நிலையத்துக்குப் பக்கத்திலேயே அதை விட்டு விட்டீர்களா?” என்று கேட்டார் தங்கத்துரை. 

“காரைச் சவரிமுத்து எடுத்துப் போவதாகச் சொன்னான். அவன் ஷெனாய் நகருக்குப் போய்த் திரும்பி வருவதற்குள் என்னூரில் இருக்கும் தீவுக்குப் போய்த் திரும்பி வந்துவிடலாமே என்று எண்ணினேன்!” என்றார் சின்னத்துரை. 

“எங்கள் பெட்டியிலேயே ஏறிக் கொள்ளுங்கள்” என்றார் தங்கத்துரை. 

இதற்குள் வண்டி புறப்பட்டது. இருவரும் ஓடிப் போய்ப் பேரழகி உட்கார்ந்திருந்த பெட்டியில் தாவி ஏறினார்கள். 

எதிர்பாராத விதமாகச் சின்னத்துரையைக் கண்ட பேரழகி அவனுடன் தன் தந்தையும் வருகிறாரா என்று எட்டிப் பார்த்தாள். 

“பேரழகி, ஏன் அப்படிப் பார்க்கிறாய்? சவரிமுத்து வரவில்லை. நான் மட்டும் தான் வந்தேன். என்னூரில் இறங்கிக் கொள்கிறேன்” என்றார் சின்னத்துரை, 

பேரழகி ஏமாற்றத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 

33

சவரிமுத்து காரை மெல்ல ஓட்டிச் சென்றான். 

பொழுதோடு புறப்பட்டு விட்டோமே, நேரத்தைப் போக்குவது எப்படி என்று அவனுக்குக் கவலையாகத்தான் இருந்தது; கார் இருந்த போதிலும் கண்ட இடங்களில் எல்லாம் சுற்றிக் கொண்டிருக்க அவனுக்கு அச்சமாக இருந்தது. திருடர்கள் இப்போது எவ்வளவுக்கெவ்வளவு முன்னேறியிருக்கிறார்களோ, அதைவிடப் போலீஸ் இலாகாவும் முன்னேறியிருக்கிறது என்பதைச் சவரிமுத்து நம்பினான். 

கார் சந்தடியின்றி ஓடிக் கொண்டிருந்தது. கார் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று எண்ணியது அவன் மனம். சின்னத்துரை வாழத் தெரிந்தவர். எப்படி வாழ வேண்டும். எதை வாங்க வேண்டும் எதை. வாங்கக் கூடாது என்று அவருக்குத் தெரியும் என்று எண்ணினான். காரில் ஒரு சிறிய வானொலிப் பெட்டி இருந்தது. வானொலிப் பெட்டி சிறியதாக இருந்தாலும் அதன் விலை அதிகம் என்பதை அறிவான் சவரிமுத்து. வானொலிப் பெட்டிக்குப் பக்கத்திலேயே தன்னால் இயங்கும் கடிகாரமும் இருந்தது. கடிகாரத்தில் மணி ஏழு ஆகியிருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் கழித்துப் போகலாம் என்று எண்ணினான் அவன். வானொலிப் பெட்டியைத் திருப்பினான். மெல்ல மெல்ல இழைந்து வந்த இசை அவனுக்குக் கேட்க இனிமையாக இருந்தது. காரை ஓர் ஓரமாக நிறுத்தினான். பக்கத்தில் ஒரு பெரிய ஓட்டல் இருந்தது. பெரிய ஓட்டல் தான் என்றாலும் கூட்டம் அதிகமாக இல்லை. ஏழு மணி ஆகிவிட்டதால் குறைந்து விட்டதோ என்னமோ? 

சவரிமுத்து, காரிலேயே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். பிறகு, வானொலிப் பெட்டியை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினான். காரின் கதவை அடித்துச் சாத்திவிட்டு ஓட்டலுக்குள் சென்றான். 

ஒரு மூலையில் பெரிய மேசையின் முன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். அவன் தன்னந் தனியாக அவ்வளவு பெரிய மேசையின் முன் உட்கார்ந்த போது, அந்த ஓட்டலே அவனுக்காகத்தான் இயங்கிக் கொண்டிருந்ததைப் போலிருந்தது!

பரிமாறுபவன் ஓடிவந்து, “என்ன வேண்டும் ஐயா?’ என்றான். 

“காபி கொண்டு வா” என்றான் சவரிமுத்து. 

பரிமாறுபவன் ஓடிப் போய் காபி கெண்டு வந்தான். 

காபியை மெல்ல உறிஞ்சிக் குடித்தபடியே சிந்தனை செய்தான். நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. 

அவன் ஓட்டலை விட்டுப் புறப்பட்ட போது, மணி ஏழரை, வெறும் காபியைக் குடித்து விட்டு அரை மணி நேரம் ஓட்டலில் உட்கார்த்திருந்தான். ஓட்டல்காரர் அந்த மின்சார விசிறியை நிறுத்திய பிறகுதான் சவரிமுத்து சிந்தனை கலைந்து, இனியும் இங்கே உட்கார்ந்திருந்தால் ஓட்டல்காரர் வந்து எழுந்து போகும்படி கூடச் சொல்லமாட்டார். கழுத்தைப் பிடித்து தள்ளுவாரி! என்று எண்ணிப் புறப்பட்டு விட்டான்! 

காசைக் கொடுத்துவிட்டு அவன் காசைக் கிளப்பினான். கார் மெல்ல ஷெனாய் நகரை நோக்கி ஓடியது. 

ஷெனாய் நகரை அடைந்ததும், சுடர்மணியின் இருப்பிடத்திற்குச் செல்லவில்லை சவரிமுத்து. அவனுடைய கணக்குப்படி இந்த வேளையில் சுடர்மணி மாட்டுக் கொட்டகையில் தான் இருக்க வேண்டும். ஆகையால், மாட்டுக் கொட்டகைக்கு அருகில் காரை நிறுத்தினான். 

அவன் காரை நிறுத்திய இடத்திலிருந்து ஐந்தாறு வீடுகள் தள்ளி இருந்தது மாட்டுக் கொட்டகை அவன் காரை நிறுத்தியதும் விளக்குகளை அணைத்துவிட்டு, இருட்டில் உட்கார்ந்தபடியே சாலையின் இருபக்கங்களிலும் பார்த்தான் அவனுடைய பார்வை – 

நிழலில் மறைந்திருக்கும் நிழலைக் கூடத் தொலைவிலிருந்தே அளவிடும் போல் இருந்தது! 

சாலையில் எவரும் இல்லை. 

சவரிமுத்து கீழே இறங்கினான். காரின் கதவைத் திறந்ததும் தன்னால் இயங்கும் விளக்கு எரிந்தது. நவீன காலத்தில் புதிய கார்களில் ஏற்படுத்தப்பட்ட அந்த விளக்கு. வசதியாக இருந்த போதிலும், அந்தச் சூழ்நிலையில் அவனுக்கு அது கொதிப்பை மூட்டியது. அந்த விளக்கின் ஒளியில் எவராவது தன் முகத்தைப் பார்த்து விடக்கூடாதே என்று எண்ணினான். அடுத்த சில மணி நேரங்களில் என்ன நடக்க வேண்டும் என்பதை அவன் மனம் திட்டமிட்டது! 

காரின் கதவை – சாத்தினான் மெல்ல! 

சவரிமுத்து மெல்ல நடந்து சென்றான். இருட்டின் நிழவிலேயே மறைந்து மறைந்து நடந்து மாட்டுக் கொட்டகையில் முன் நின்றான். 

கதவு- 

சாத்தியிருந்தது. 

உள்ளேயிருந்து எந்தவிதமான ஓசையும் இல்லை அவன் கதவருகில் சென்று காதை வைத்துக் கேட்டான். 

மாடுகள் வைக்கோலை இழுத்துத் தின்னும் போது ஏற்படும் சலசலப்பு ஓசை மட்டும் இலேசாசக் கேட்டது. சவரிமுத்து நிமிர்ந்து நின்று சுதவை மெல்லத் தட்டினான் கைவிரல்களால். பிறகு ஒதுங்கி ஒரு பக்கமாக நின்றான். 

சில வினாடிகள் கழித்து, கதவு திறந்தது. சுடர்மணி வெளியே வந்தான். கதவைச் சாத்தினான். ‘உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்” என்றான் சுடர்மணி. 

சவரிமுத்து வியப்படையவில்லை. “உள்ளே எவராவது இருக்கிறார்களா?” என்று மெல்ல ஐயத்துடன் கேட்டான் அவன். 

“மனிதர்கள் எவருமில்லை. மாடுகள் தாம் இருக்கின்றன. ஏன் இந்த ஐயம் உனக்கு?” என்று கேட்டான் சுடர்மணி. 

“எனக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் ஐயம் வரத்தான் செய்யும். என்னையே சில வேளைகளில் நான் நம்புவதில்லை” என்றான் சவரிமுத்துஇ 

“வியப்பாக இருக்கிறதே! உன்னையே நீ நம்புவதில்லையா? அது எப்படி?” என்று வியப்புடன் கேட்டான் சுடர்மணி. 

“எந்த ஒரு செயலையும் செய்து முடிக்கும்வரையில் என் மீதே எனக்கு நம்பிக்கை இருப்பதில்லை. நான் எடுத்துக் கொண்ட எச்சரிக்கை சரியானவையா, வகுத்துக் கொண்ட வழிகள் வெற்றி தருவனவா என்ற அச்சமும் ஐயமும் வந்துவிடும். அதனால் என்னையே நான் நம்புவதில்லை என்று தானே பொருள்?” 

“உண்மைதான், இப்போதாவது உனக்கு உன்மீது நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா?” 

“எது எப்படியிருந்தாலும் உன்னை நான் பரிபூரணமாக நம்பிவிட்டதாக எண்ணிவிடாதே! உன் மனத்தை மாற்றிக் கொண்டாய் அல்லவா?” 

“இதில் என்ன இன்னும் உனக்கு ஐயம்?” நான் தான் உன் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தேனே!” 

“அப்படியானால் எந்த இடத்தில் புதையல் இருக்கிறது என்பதைச் சொல்லு.”

“அதை வாயால் சொல்ல நான் ஆயத்தமாக இல்லை. எந்த வீட்டில் இருக்கிறது என்பதை நீ முதலில் சொல் இருவருமே அந்த வீட்டுக்குப் போவோம். குறிப்பிட்ட வீட்டை அடைந்ததும் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நான் காட்டுகிறேன். இருவருமே சேர்ந்து புதையலைக் கிளப்புவோம்.” 

“நான் நினைத்ததைவிட நெஞ்சழுத்தம் உள்ளவனாக இருக்கிறாய் நீ! நாம் இருவருமே ஒருவரை ஒருவர் நம்பவில்லை! ஆனால், இருவரும் சேர்ந்து புதையலைக் கிளப்ப முயற்சி செய்வதில் ஈடுபட ஆயத்தமாக இருக்கிறோம். நானும் அந்த வீட்டைப் பற்றி வாயால் சொல்லப் போவதில்லை. அந்த இடத்திற்கே அழைத்துச் செல்லுகிறேன். வா போகலாம்” என்றான் சவரிமுத்து. 

சுடர்மணி அவனைத் தொடர்ந்து சென்றான். சவரிமுத்து காரில் ஏறி உட்கார்ந்ததும், அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்தான் சுடர்மணி. 

சவரிமுத்து காரைக் கிளப்பினான். சிறிது தொலைவு சென்றதும், ஓசையற்ற ஓர் இடத்தில் காரை நிறுத்தினான். விளக்குகளை அணைத்தான். 

“இந்த இடத்திலா இறங்க வேண்டும்?” என்று கேட்டான் சுடர்மணி. 

“இல்லை, இன்னும் நாம் எவ்வளவோ தொலைவு போக வேண்டும். நாம் போகும் இடம் எது என்று உனக்குத் தெரியக்கூடாது! ஆகையால், உன் கண்களைக் கட்டிவிடப் போகிறேன்” என்று சொல்லிக் கைக் குட்டை ஒன்றைக் கால் சட்டைப் பையிலிருந்து எடுத்தான். சுடர்மணியின் கண்கள் இரண்டையும் மறைத்துக் கைக் குட்டையால் கட்டிவிட்டு, ‘போகலாமா?” என்றான். 

“போகலாம், கார் எந்தத் திக்கில் போகிறது என்று கூடச் கண்டுபிடிக்க முடியாது போலிருக்கிறதே!” என்றான் சுடர்மணி. 

“புதையலைக் கிளப்பிக் கொண்டு வரும்போது பார்த்துக் கொள்” என்றான் சவரிமுத்து, பிறகு காரைக் கிளப்பினான். அது வளைந்து வளைந்து விரைவாக எங்கேயோ சென்றது! 

34

காரை ஓர் இடத்தில் ஓரமாக நிறுத்தினான் சவரிமுத்து. சுமார் பதினைந்து நிமிட ஓட்டத்திற்குப் பின் கார் எங்கேயோ ஓர் இடத்தில் நின்றுவிட்டது என்பது மட்டுமே புரிந்தது சுடர்மணிக்கு. 

கண்ணைத் திறக்கலாமா?” என்று கேட்டான் அவன். “அவசரப்படாதே! நான் சொல்லுவதற்கு முன் கண்ணைத் திறந்துவிட்டால், உன் கண்கள் இரண்டையும் பெயர்த்து ஏறிந்துவிடுவேன் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்!” என்றான் சவரிமுத்து! 

சுடர்மணி பேசாமல் இருந்து விட்டான். 

சவரிமுத்து கீழே இறங்கிக் காரின் மறு பக்கம் வந்தான். கதவைத் திறந்து, சுடர்மணியின் கையைப் பிடித்துக் ‘கீழே இறங்கு’ என்றான். அவன் கீழே இறங்கி, சவரிமுத்து இருந்த திக்கில் மெல்ல நடந்தான். 

ஒரு வீட்டின் முன் கொண்டு போய் நிறுத்தினான் சவரிமுத்து. சுடர்மணி பிறவிக் குருடனைப் போல் பேசாமல் நின்றான். சவரிமுத்து சாவிக் கொத்தை எடுத்துப் பூட்டைத் திறந்தான். பிறகு – 

‘உள்ளே வா’ என்றான். 

சவரிமுத்தின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றான் சுடர்மணி, 

அவன் உள்ளே வந்ததும், சவரிமுத்து கதவைச் சாத்தித் தாழிட்டான். சுடர்மணியின் கண்ணைக் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்தான். 

சுடர்மணி ஆவலுடன் நாலாபுறமும் பார்த்தான். வீட்டின் உட்புறம் எல்லாம் வழக்கறிஞரின் வீடு மாதிரியே இருந்தது. ஆனால்- 

அந்த வீட்டில் அவர்களைத் தவிர வேறு எவரும் இல்லை. சுவர்களில் படங்கள் இல்லை. கூடத்திலும் அறைகளிலும் மேசையோ நாற்காலியோ வேறு எந்த விதமான பொருள்களோ இல்லை. வீடு முழுவதும் காலியாகவே இருந்தது. 

“இது யார் வீடு?” என்று கேட்டான் சுடர்மணி. 

“இது யார் வீடாக இருந்தால் என்ன? வீட்டைக் காண்பித்து விட்டேன். குறிப்பிட்ட அந்த வீட்டிற்குள் நீ இருக்கிறாய். கூடவே நானும் இருக்கிறேன். எந்த இடத்தில் புதையல் இருக்கிறது என்பதைக் காட்டினால், உடனே அதைப் பெயர்த்துக் கொண்டு புறப்படலாம்!” என்றான் சவரிமுத்து. 

சுடர்மணி அந்த வீடு முழுவதும் சுற்றிப் பார்த்தான். வீட்டின் வெளியே எட்டிப் பார்க்க முடியவில்லை அவனால், எல்லா சன்னல்களும் மூடப்பட்டிருந்தன. ஷெனாய் நகர் முழுவதுமே ஒரே மாதிரியான வீடுகள் பலவற்றைத் தில்லைநாயகம் கட்டிவைத்து விட்டுப் போனார் என்பது சுடர்மணிக்குத் தெரியும். எத்தனையோ நூறு வீடுகளில் இதுவும் ஒன்று! இனிமேலும் சிந்தித்தால் சவரிமுத்துக்கு ஐயம் வரும் என்று, கூடத்திலிருந்த ஒரு சன்னலை காட்டினான். “அதோ அந்தச் சன்னலுக்கு மேலேதான் இருக்க வேண்டும்” என்றான் அவன். 

சன்னலுக்கு மேலேயுள்ள பாகம் இருவருக்குமே எட்டவில்லை. ஏதாவது நாற்காலியோ முக்காலியோ இருந்தால் வசதியாக இருக்கும்” என்றான் சுடர்மணி. 

“வீட்டைக் கட்டியவர்களுக்கு, நாம் இந்த வீட்டை இடித்துப் பார்க்கப் போகிறோம் என்பது தெரியாது! இல்லாவிட்டால் இங்கே ஏணியைப் போட்டு வைத்திருப்பார்கள்!” என்று கேலியாகச் சொன்னான் சவரிமுத்து! பிறகு, ‘வீடு முழுவதும் மற்றொரு முறைத் தேடிப் பார்க்கிறேன். எதுவும் கிடைக்காவிட்டால் நான் குனிந்து கொள்கிறேன். என் முதுகின் மீது ஏறி நின்று கொண்டு சுவரை இடித்துத் தள்ளு” என்றான். 

சுடர்மணி வியப்புடன் நின்று கொண்டிருந்தான். எந்தக் காரணத்தைக் கொண்டும் புதையலைக் கிளப்பாமல் இவன் விட மாட்டான் என்று எண்ணியது அவன் மனம். 

சவரிமுத்து பின்கட்டுக்குச் சென்றான். அங்கே ஒரு மூலையில் விழுந்து கிடந்த சாதிக்காய்ப் பெட்டியைத் தூக்கி வந்தான். “வீட்டைக் கட்டியவர்கள் தப்பித் தவறி இதைவிட்டு விட்டுப் போய்விட்டார்கள். இதன் மேல் ஏறி நின்று கொண்டு சுவரைப் பெயர்த்து தள்ளு!” என்றான். 

சாதிக்காய்ப் பெட்டியை நிற்கவைத்து அதன் மேல் ஏறி நின்றான் சுடர்மணி. அவன் கால் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய சுத்தியலை எடுத்தான். சுவரின் சன்னலுக்கு மேல் தட்டிப் பார்த்தான். அவனுக்கு ஐயம் வந்துவிட்டது. 

“என்ன?” என்றான் சவரிமுத்து. 

“இந்த இடம் தானே?” 

“இந்த இடமாகத்தான் இருக்க வேண்டும்!” 

“ஐயம் எதற்கு அப்போது? சுவரைப் பெயர்த்துத் தள்ளு! சுடர்மணி கால் சட்டைப் பையிலிருந்து ஓர் உளியை எடுத்தான். உளியைச் சுவரில் வைத்துச் சுத்தியலால் தட்டிக் கொண்டே சென்றான். 

சுண்ணாம்பும் சிமிண்டும் சுலந்த சுவர் உதிர்ந்து கொண்டேயிருந்தது. அரை மணி நேரத்தில், அரையடி ஆழத்திற்குப் பெயர்த்து விட்டான். இன்னும் கொஞ்சம் தட்டினால் சுவரில் பொத்தல் விழும் போல் இருந்தது! 

“போதும் நிறுத்திக் கொள்” என்றான் சவரிமுத்து. சுடர்மணி சுவரைப் பெயர்ப்பதை நிறுத்திவிட்டுச் சவரிமுத்தைக் கீழே குனிந்து பார்த்தான் . 

“இடம் உனக்குச் சரியாகத் தெரியுமா தெரியாதா?” என்று கேட்டான் சவரி முத்து. 

“என் அப்பா இறங்கும் போது சரியாகச் சொல்லவில்லை. சன்னலுக்கு மேலே என்றார். எந்தச் சன்னலுக்கு மேலே என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. ஏதோ சைகை காட்டினார். அவர் காட்டிய சைகையிலிருந்து சரியாக எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை!” 

“அவர் எப்படிச் சைகை காட்டினார்?” 

“வலது கையில் இரண்டு விரல்களைக் காட்டினார். கூடத்தின் வலதுபுறம் இரண்டாவது சன்னலாக இருக்கக் கூடாதா?” 

“அப்படிப் பார்த்தால், ஒவ்வொரு அறையிலும் தான் இரண்டு சன்னல்கள் இருக்கின்றன. தூங்கும் அறையில் இரண்டாவது சன்னலாக இருக்கக் கூடாதா?” 

“இருக்கலாம்” 

கூடத்தின் வலது பக்கம் என்றே வைத்துக் கொள். வரும்போது வலது பக்கமா, கூடத்திலிருந்து வெளியே போகும் போது வலது பக்கமா? மற்றொரு பக்கத்திலும் இரண்டாவது சன்னலைப் பார்த்துவிடு” 

“எல்லாம் சன்னல்களையுமே பார்த்து விடலாமே!” என்றான் சுடர்மணி. 

“அதற்கு நேரமில்லை. ஊகம் செய்து வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் புதையலை நாம் கிளப்புவதற்குள், நம்மைப் போலீசார் கிளப்பிக் கொண்டு போய் விடுவார்கள்” என்றான் சவரிமுத்து. 

சுடர்மணி விரைந்து வேலை செய்தான். சாதிக்காய்ப் பெட்டியை இழுத்துப் போட்டுக் கொண்டு கூடத்தின் மற்றொரு பக்கம் இருந்த இரண்டாவது சன்னலுக்குமேல் சுவரைப் பெயர்த்துத் தள்ளினான். அங்கேயும் சுவர் பெயர்ந்து விழுந்தது தான் மிச்சம்! 

புதையலைக் காணோம்! 

“இந்த வீட்டில் இருபது சன்னல்கள் இருக்கின்றன. எல்லாச் சன்னல்களையும் இடித்துக் கொண்டிருக்க முடியாது என்ற உறுதியுடன் என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா?” என்று விறைப்புடன் கேட்டான் சவரிமுத்து. 

சுடர்மணியும் விறைப்புடன் சவரிமுத்தைப் பார்த்தான். ‘சவரிமுத்து! உனக்கு இருக்கும் ஐயம் எனக்கும் இல்லாமல் இல்லை! நீ என் மீது ஐயப்படுவதைப் போல் நான் உன் மீது ஐயப்படுகிறேன்!” என்றான். 

“என்மீது என்ன ஐயம்?” 

“உண்மையாக இந்த வீட்டில் தான் புதையல் இருக்கிறதா? அல்லது வேறு வீட்டைக் காண்பித்து என்னை ஏமாற்றி அனுப்பிவிட்டு, அப்புறமாக நீயே புதையலைக் கிளப்பலாம் என்று எண்ணிவிட்டாயா?” 

சுடர்மணியின் கேள்வி, துப்பாக்கியின் குண்டைப் போல் சவரிமுத்தின் மனத்தில் பாய்ந்தது. 

“சுடர்மணி! இந்த வீடுதான் என்பதில் கொஞ்சமும் ஐயம் வேண்டாம். எல்லாச் சன்னல்களையும் தட்டிப்பார். இன்னும் ஒரு மணி நேரம் அவகாசம் தருகிறேன். அப்புறம் நாம் இங்கே இருக்கக்கூடாது!” என்றான். 

சுடர்மணி ஒன்றும் சொல்லாமல் ஒவ்வொரு சன்னலாகத் தட்டினான். பல சன்னல்களைப் பெயர்த்தான். 

புதையலைக் காணோம்! 

சோர்வுடன் திரும்பி வந்து சவரிமுத்தின் முன் நின்றான் சுடர்மணி. 

“இப்போது என்ன செய்யலாம் சவரிமுத்து?” 

“என்ன செய்வது? திரும்பிப் போகலாம், மற்றொரு நாளைக்கு வருவோம். இந்த வீட்டில் எவரும் குடியில்லாமல் இருப்பது மிக்க வசதியாக இருக்கிறது நமக்கு!” என்றான் சவரிமுத்து! பிறகு –

சுடர்மணியின் கண்களை மீண்டும் கட்டிவிட்டான். அவன் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். வீட்டின் கதவைச் சாத்திப் பூட்டிக் கொண்டு, காரை நோக்கிச் சென்றான் சுடர்மணியை அழைத்துக் கொண்டு. 

இருவரும் காரில் ஏறினார்கள். 

சவரிமுத்து, காரை விரைவாகச் செலுத்தினான். சுடர்மணியின் மாட்டுக் கொட்டகையின் அருகில் வந்ததும் கண்ணைக் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்துக் கொண்டு “மீண்டும் பார்க்கிறேன்!” என்றான். 

சுடர்மணி கீழே இறங்கினான். “எப்போது?” என்றான். “எப்போது என்று இப்போது செல்லுவதற்கில்லை!” என்று சொல்லிக் கொண்டே காரை விரைந்து செலுத்தினான் சவரிமுத்து. 

காரில் சிவப்பு விளக்கு மறையும் வரையில் காரையே பார்த்துக் கொண்டு நின்றான் சுடர்மணி. பிறகு திரும்பி மாட்டுக் கொட்டைக்குள் நுழைந்தான். 

35

கல்கத்தா நகர் முற்றிலும் புதிய ஊரல்ல தங்கத்துரைக்கு. அவர் இதற்கு முன் பல தடவைகள் சுல்கத்தாவுக்குப் போயிருக்கிறார். அவருக்கு உதவி செய்ய அங்கே அவருக்கு பல தண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரையும் விட்டு வீட்டு தங்கத்துரை சவரிமுத்து குறிப்பிட்ட மனிதனைத் தேடிச் சென்றார். அந்த மனிதனின் பெயர் மலையமான். தெற்கேயிருந்து வடக்கே குடியேறியவன். அவனுடைய இருப்பிடம் நல்லவர்கள் வாழும் பகுதியல்ல! அந்தக் குறிப்பிட்ட இடத்தைப் பற்றிக் கேட்கும்போதே சுல்கத்தா வாசிகள் தங்கத்துரையை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கன். வயதான மனிதர் ஒருவர் வாய்விட்டுச் சொல்லிலிட்டார். “திருடர்களும், கொள்ளையையே தொழிலாகக் கொண்டவர்களும், நெஞ்சில் இரக்கமற்றவர்களும் வாழும் பகுதியல்லவா அது!” என்றார் அவர்! 

தங்கத்துரை அப்போதும் விடவில்லை. எப்படியோ ஒரு வழியாக அந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். ஆனால் – 

மலையமான் அங்கே இல்லை! 

ஏதோ ஒரு குற்றத்திற்காகப் போலீசார் அவனைப் பிடித்துச் சென்று ஆறு மாதம் சிறையில் தள்ளிவிட்டதாகவும், அவன் போய் ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றும், அவனைப் பார்ப்பதென்றால் சிறையில் தான் பார்க்க வேண்டும் என்றும் சிலர் சொன்னார்கள்!

மலையமானைச் சிறையில் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணினார் தங்கத்துரை. அவர் தமது நண்பர் ஒருவர் வீட்டில் கொண்டு போய்ப் பேரழகியை விட்டுவிட்டு, ‘பேரழகி! இங்கேயே நீ இரு! நான் அலுவலாக வெளியே போகிறேன். எப்போது வருவேன் என்று தெரியாது!” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். 

பொதுத் தொலைபேசி இருக்குமிடத்திற்குச் சென்று சென்னையுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், சங்கர்லாலுடன் அவசரமாகப் பேச வேண்டும் என்றும் சொன்னார். 

ஒரு மணி நேரம் கழித்துச் சங்கர்லாலுடன் தொடர்பு கிடைத்தது. “ஹலோ சங்கர்லால்! தங்கத்துரை பேசுகிறேன்!” என்றார். 

“தங்கத்துரை! சவரிமுத்தின் ஆளைக் கண்டுபிடித்தீர்களா?”

“இல்லை! அவன் சிறையில் இருக்கிறானாம். நண்பர் ஒருவர் வீட்டில் பேரழகியை விட்டுவிட்டு வந்தேன். நான் இன்றே விமானத்தில் சென்னைக்கு வந்து நாளைக்குத் திரும்பி விட வேண்டும்! சின்னத்துரையின் மீது எனக்குத் தீராத ஐயம் ஏற்பட்டிருக்கிறது!” 

சங்கர்லால் மெல்லச் சிரித்தார். அவருடைய சிரிப்பொலி தொலைபேசியில் ஆயிரம் கல்களுக்கு அப்பால் இருந்த தங்கத்துரையின் காதில் விழுந்தது. 

“ஏன் சிரிக்கிறீர்கள் சங்கர்லால்?” 

“நீங்கள் சொல்லும் காரணம் அவ்வளவு பெரிதாக எனக்குப்படவில்லை. அதைவிடப் பெரிய காரணம் ஏதோ இருக்சு வேண்டும். இல்லாவிட்டால் சென்னைக்கு வர நீங்கள் ஏன் துடிக்க வேண்டும்? அந்தக் காரணத்தைத் தொலைபேசியில் சொல்லுவது தவறு என்று எண்ணி என்னிடம் வேறு காரணத்தைச் சொல்லி விட்டீர்கள், அல்லவா?” 

“ஆமாம் சங்கர்லால்! உண்மையான காரணத்தைச் சொல்லட்டுமா?” 

“வேண்டாம்! நீங்கள் இன்றிரவு விமானத்தில் புறப்படுங்கள். கல்கத்தா விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு நீங்கள் புறப்பட்டுவர எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்துவிடுகிறேன்!” என்றார் சங்கர்லால் பிறகு – 

தொலைபேசியின் தொடர்பு அறுந்துவிட்டது. 

– தொடரும்…

– சங்கர்லால் வந்துவிட்டார்! (மர்ம நாவல்), சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *