தமிழால் பிழைத்தேன்
கதையாசிரியர்: எம்.லட்சுமிபதி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி தமிழ் முரசு (ம.பொ.சி)
கதைப்பதிவு: June 29, 2026
பார்வையிட்டோர்: 53
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தியாவுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைனைத்தையும் வெகு துரிதமாகச் செய்து கொண்டிருந்தார் அருணாசலம். அவரது வட்டிக்கடையில் அடைக்கலம் புகுந்திருந்த நகைகளும், இந்தியாவில் செலாவணி யாவதற்கேற்ப மாற்றப்பட்ட தொகைகளும் கடற் பிராயணத்திற்கு ஆயத்தமாகப் பத்திரப் படுத்தப்பட்டன. வழிச் செலவுக்குத் தேவையான பணத்தை மட்டும் தனியாக ‘மணிபர்ஸில்’ வைத்து ‘கோட்’ பைக்குள் செருகிக் கொண்டார்.
அவருடைய கடையின் ஏஜண்டான கந்தசாமியோ, முதலாளியின் (மூன்று) மனைவிகள், மக்கள், உறவினர் ஆகியோருக்காக வாங்கப்பட்ட உயர்தர ஆடைகள், பிஸ்கெட்டுகள், பொம்மைகள், நடை சாக்லெட்கள் முதலியவற்றை ஜாக்கிரதையாக அடுக்கி வைத்துப் பெட்டிகளையும், படுக்கையையும் தயார் செய்வதில் ஈடுபட்டிருந்தார். அவருடைய கைகள் தான் இந்த வேலைகளை யந்திரம் போல் செய்து கொண்டிருந்தனவே யன்றி, கருத்து சிறிதளவும் அங்கு இல்லவே இல்லை.
இந்தியாவுக்கும் இலங்கைக்கு மிடையேயுள்ள சிறு கடலைத் தான் அனுமார் தாண்டியதாக இராமாயணத்தில் படித்திருக்கிறோம். ஆனால், கந்தசாமியின் மனக்குரங்கோ பல நூறு மைல் தூரம் விரிந்து கிடக்கும் பெருங் கடலையே ஒரு கணத்திற்குள் தாண்டிப்போய் ஆசை மனையாளின் நினைவிலும் அருமைக் குழந்தையின் பாசத்திலும் பின்னிக் கொண்டது.
கந்தசாமி, இந்தியாவிலிருந்து கிளம்பி இந்த அருணாசலத்தின் கடைக்கு ஏஜண்டாக வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அப்பொழுது, எழுந்து நடக்கத் தெரியாமல் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த அவருடைய ஒரே செல்வமகன், இப்பொழுது தமிழ் நாட்டின் வளம்பொருந்திய மண் தெருக்களிலே தளர் நடை போட்டுத் திரிய ஆரம்பித்து விட்டான். “அம்மா” என்ற சொல்லையே அரை குறையாக உளறிக் கொண்டிருந்த அவன், “அப்பா எங்கே?” என்று மழலை மொழியால் கேள்வி போடவும் முனைந்து விட்டான்!
அருமைக் குழந்தையின் இத் தகைய வளர்ச்சியைப்பற்றி சில வாரங்களுக்கு முன்புதான் விவர மாகக் கடிதம் எழுதியிருந்தாள் கந்தசாமியின் மனைவி செல்லம்மாள். அத்துடன், குழந்தையும் தானுமாக இருந்து எடுத்த படம் ஒன்றையும் இவருக்கு அனுப்பி யிருந்தாள். அதை நினைந்து நினைந்து பெருமூச்சு விட்டார் கந்தசாமி. மகனின் வளர்ச்சி அவருக்கு மகிழ்ச்சி யளித்தது. ஆனால், தன் மனையாளின் மாறுதலோ மனவேதனையேயே தூண்டியது. ஏனெனில், குழந்தையின் மாறுதல் வளர்பிறையைப் போன்றது. செல்லத்தின் வளர்ச்சியோ தேய்பிறையாகத் திரும்பி விட்டது! ஆம், அவளது நெற்றியில் நெளிந்து விளையாடும் கருங்கூந்தலிலே, இப்பொழுது சில ‘வெள்ளிக் கம்பி’ களும் மின்ன ஆரம்பித்து விட்டதை அந்தப் படத்தின் மூலம் அவர் தெரிந்து கொண்டார்!
மனையாளின் இளமையும், குழந்தையின் பிள்ளைப்பருவக் குறும்புகளும், தன்னால் அனுபவித்து மகிழ முடியாமலேயே வீணாகின்றனவே என்று நெஞ்சம் குமுறினார். முதலாளி அருணாசலத்துடன் தானும் புறப்பட்டு இந்தியாவுக்குச் சென்று இப்பொழுதாவது அந்தக் களிப்பை யெல்லாம் காண வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், முதலாளியின் மனம் ஒப்பவில்லை. “இன்னும் நமது கடைக்கு வரவேண்டிய கடன் ஏராளமாயிருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிடக் கூடாது. அந்தப் பாக்கி முழுவதையும் வசூல் செய்த பிறகு நீங்கள் வந்து சேருங்கள்!” என்று கட்டளையிட்டார் அருணாசலம்.
கந்தசாமியின் உள்ளம் காற்று போன பலூனைப்போல் சுருங்கிச் சொட்டையாயிற்று. “இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி அஞ்ஞாத வாசமோ?” என்று ஏங்கினார். ஆயினும், முதலாளியின் உத்தரவை மீறிக் கிளம்புவதற்கு அவர் துணிய வில்லை. அந்த ஏழை நெஞ்சத்திற்கு, அடிமை முத்திரையை உடைத்தெறியத் தெம்பு ஏது?
ஆகவே, இன்னும் சில மாதங்களையும் இங்குதான் கழித்துத் தொலைய வேண்டும் என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டார் கந்தசாமி. இந்த ஐந்து ஆண்டுகளை எப்படியோ போக்கிவிட்ட அவருக்கு, இன்னும் சில மாதங்களையும் ஒருவிதமாக ஒட்டிவிடலாம் என்ற தைரியமும் இருந்தது. ஆனால், தமது வட்டிக்கடை இருக்கிற வட்டாரத்திலே கொஞ்சகாலமாகச் சூழ்நிலை மாறிக் கொண்டிருந்தது. பயங்கரமான முறையில் பணக்காரர்களைத் தாக்கிப் பொருள் பறிக்கும் நோக்கத்துடன் கொள்ளைக் கூட்டத்தினர் பலர் திட்டமிடுவதாகப் பேசிக் கொள்ளப்பட்டது.
அந்தக் காரணத்தினால்தான் முதலாளி அருணாசலம், அவசரமாய் இந்தியாவுக்கு மூட்டை கட்டலானார். அகப்பட்ட வரையில் சேர்த்துக்கொண்டு அவர் பிறந்த நாட்டுக்குப் புறப்பட்டு விட்டார். இன்னும் வசூலாக வேண்டிய பாக்கியையும் சேகரித் துக்கொண்டு வருவதற்குக் கந்தசாமியை வைத்துவிட்டுச் சென்றார். உயிரையே பணயம் வைத்தாவது இயன்றவரையிலும் முதலாளிக்குச் சேர்த்துக் கொடுக்கவே ‘பிறவி எடுத்த’ ஏழைக் கந்தசாமி, ‘ஏஜண்டு’ என்ற பெயர்ப் பெருமையுடன், தமது தீவாந்தர வாசத்தை மீண்டும் நீடிக்க நேர்ந்தது.
கப்பல் புறப்பட்டு விட்டது முதலாளி அருணாசலம், கப்பலின் மேல்தளத்திலே உல்லாசமாக உலவிக் கொண்டிருந்தார். கண் இமைக்காமல் அதைப் பார்த்துக் கொண்டே கரையில் நின்றார் கந்தசாமி. இசைபாடித் தாலாட்டும் அலைகளின் மீது அசைந்தாடிக்கொண்டு ஆனந்தமாகச் சென்றது கப்பல்.
சிறிது நேரத்தில் கப்பலின் உருவம் கண்ணுக்குத் தெரியாமல் மறைய ஆரம்பித்தது; பின்னும் சற்று நேரத்தில் கப்பலின் புகைகூட கொஞ்சங் கொஞ்சமாக மறைந்து விட்டது. ஆனால், கந்தசாமியினுடைய நெஞ்சம் புகைவது மட்டும் அடங்கவில்லை! கொந்தளிக்கும் கடலைவிடக் கடுமையாகக் குமுறியது அவர் உள்ளம்.
சிந்தை தெளிந்து சுற்று முற்றும் பார்த்தார். தமது கண்ணீர் தான் பார்வையை மறைத்து விட்டதோ என்ற ஐயத்துடன் கண்களைத் துடைத்துக் கொண்டார். ஆம், இருள் கவியத் தொடங்கி விட்டது. கந்தசாமியும் இருண்ட நெஞ்சத்துடனேயே கடைக்குத் திரும்பி வந்தார். ஆனால், அவரது நினைவு மட்டும் இந்தியாவிலிருக்கும் செல்லத்தையும் குழந்தையையும் பிரிந்து வர மறுத்தது.
ஏக்கத்துடனேயே வாழ்க்கையைத் தொடரலானார் கந்தசாமி. இருப்பு இருந்த பணம் முழுவதும் இந்தியாவுக்குக் கொண்டு போகப்பட்டு விட்டதால், வர வேண்டிய பாக்கிகளை வசூலித்துத்தான் வாழ்வின் தேவைகளை அவர் சரிசெய்து கொள்ள வேண்டியிருந்தது. அதிலும், இன்னொரு தொல்லை. அடகுக்கு வந்த நகைகள் பலவற்றையும் முதலாளி அருணாசலம் எடுத்துச் சென்று விட்டதனால், அவற்றின் சொந்தக்காரர்கள் வந்து நெருக்குதற்கும் அவர் ‘ஜவாப்’ சொல்ல நேர்ந்தது. இத்தனைக்குமிடையே கொள்ளைக் கூட்டத்தினரின் கொடுமை வேறு அந்த வட்டாரத்தில் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது ! என்ன செய்வதென்று புரியாத நிலையில் திண்டாடித் தவித்துக் கொண்டிருந்தார் கந்தசாமி.
ஒருநாள் இரவு. அந்த வீதி முழுவதும் ஒரே அட்டகாசம் கிளம்பி விட்டது. அடுத்து எதிர்த்த கட்டடங்களிலே அதிகாரக் கூச்சல்களும், வேதனைக் கூக்குரல்களும் பயங்கரமாக ஒலித்தன. அச்சத்தினால் நடு நடுங்கிய கந்தசாமி, தமது கடையை நன்றாகத் தாளிட்டுக் கொண்டு உள்ளே ஒடுங்கிக் கிடந்தார்.
பின்னும் சிறிது நேரத்தில் ‘படார், படார்’ என்று மிக அருகிலேயே சப்தம் கிளம்பிற்று. அவ்வாறு தட்டப்படுவது தமது கடையின் கதவுதான் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அவரது நா உலர்ந்து விட்டது; கை கால்கள் சோர்ந்து விட்டன. எழுந்து சென்று கதவைத் திறப்பதற்குத் தெம்பு இல்லை. ஆனால், அதற்காக அந்தக் கொள்ளைக் கூட்டம் பின்வாங்கி விடவில்லை. கதவைத் தூள் தூளாக நொறுக்கித் தள்ளி உள்ளே புகுந்து விட்டது!
எத்தகைய கொடுமையைச் செய்வதற்கும் தயாராக வந்திருந்தனர் அவர்கள். இரத்தம் சிந்தச் செய்வதற்கு வேண்டிய சகலவிதமான கொலைக்கருவிகளும் அவர்களிடமிருந்தன. பிணவெறி கொண்ட பேய்களைப் போல் கூச்சலிட்டனர் அவர்கள்.
“என் உயிர் ஒன்றைத் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஐயோ, என்னை மட்டும் ஒன்றும் செய்யாதீர்கள்!” என்று பரிதாபமாகக் கதறினார் கந்தசாமி.
இவருடைய சரணாகதிக் குரல், அந்தக் கொள்ளைக்காரர்களின் செவிக்கு ஏறவில்லை. கந்தசாமியின் தலையைப் பிடித்து ஆவேசமாக உலுக்கினான் ஒருவன். அவனது மற்றொரு கையிலிருந்த கொடுவாள், கந்தசாமியின் கழுத்தைத் துண்டித்து விடுவது போல் பளபளத்தது. ‘எங்கே’ என்று கேட்பது போல் கைகளைக் காட்டி ஏதேதோ கேட்டனர் சுற்றி நின்ற கொள்ளையர்கள். அவர்கள் பேசுவது ஒன்றுமே புரியவில்லை.
“ஐயோ, என்னிடம் ஒன்று மில்லையே!” என்று அலறினார் கந்தசாமி. அதுவும் அந்தக் கொள்ளையர்களுக்குப் புரியத்தான் இல்லை! வந்திருந்த கூட்டத்தார் கொள்ளையடிக்கும் ‘கொள்கை’யில் தான் ஒரே விதமானவர்கள்—பேசும் மொழிகளிலோ பல்வேறு வகையானவர்கள். கடல் கடந்த சீமைகளில் பேசப்படும் அத்தனை மொழியாளர்களும் அந்தக் கூட்டத்திலிருந்தனர். ஏன், ‘ஒரே தேசம்’ என்று கூறப்படும் இந்தியர்களிலும் கூட சிலர் இருக்கத்தான் இருந்தனர். ஆனால், அவர்கள் வேறு மொழிக்காரர்கள்! ஒலி வழியே தமிழனின் உள்ளத்தைத் தொட்டு, அவனது எண்ணத்தை அறிய முடியாத பிற இனத்தவர்கள்! இத்தகைய மகத்தான வேற்றுமையுடன் அவர்கள் இந்தியராயிருந்தென்ன – வேறு தேசத்தினரா யிருந்தால் தான் என்ன? இரண்டும் ஒன்று போலத்தானே!
“பணம் வைத்திருக்கிற இடத்தைச்சொல்லாமல் நம்மை ஏமாற்றப் பார்க்கிறான் இந்த முதலாளி! வெட்டிக் கொல்லுங்கள் இவனை!” என்று இதே சமயத்தில் சீன மொழியில் கத்தினான் ஒருவன்.
“ஐயையோ! நீங்கள் பேசுவது ஒன்றுமே எனக்குப் புரியவில்லையே. தமிழ் தெரிந்த ஒருவர் கூட இங்கே கிடையாதா?” என்று கந்தசாமி புலம்பினார்.
“என்ன, புரியவில்லையா? நீ சம்பாதித்த பணமெல்லாம் எங்கே வைத்திருக்கின்றாய்; சொல்லி விடு!” என்று இனிய தமிழில் கூறிய வண்ணம் அந்தக் கூட்டத்திற்குள்ளிருந்து ஒருவன் முன்வந்தான்.
தெரியாத மொழிக்காரர்களின் நடுவே சிக்கித் தவித்துக் கொண்டிருந்த கந்தசாமி, திடீரென்று ஒரு தமிழ்க் குரல் ஒலிப்பதைக் கேட்டதும், புத்துயிர் பெற்றவர் போல் தலை நிமிர்ந்தார். நெருக்கடியான அந்த நேரத்தில் தெய்வமே குதித்து வந்து தன்னுடன் பேசுவதாக எண்ணிக் கவலையை மறந்தார்.
தமிழ் பேசியவனையே கந்தசாமியிடம் விசாரிக்கச் சொல்லி விட்டு மற்றக் கொள்ளையர்கள் சற்று விலகினர். அவன் தமிழிலேயே எல்லா விவரங்களையும் கந்தசாமியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான், பிறகு தன் சகாக்களிடம், “இந்த வட்டிக் கடையின் முதலாளி வேறொருவன். அவன் இங்கிருந்த பணத்தை யெல்லாம் எடுத்துக் கொண்டு முன்பே இந்தியாவுக்கு ஓடி விட்டான். இந்த ஆள் வெறும் கணக்கு எழுதுகிறவன் தான். நம்மைப் போல் ஏழை – ஆகையால், இவனை சும்மா விட்டு விடுவோம்” என்று அவர்களுடைய மொழியில் கூறினான்.
அடுத்த நிமிஷமே அந்த கொள்ளைக்காரர்களனைவரும் விறுவிறு வென்று வெளியே சென்று விட்டனர். கடை ஏஜண்டு கந்தசாமிக்கு அப்புறம் தான் நல்ல உயிர் வந்தது. “அப்பாடா!” என்று பெரு மூச்சு விட்டார். தன் உடலில் வழிந்து கொண்டிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு எழுந்தார். தன் எதிரே தமிழ் பேசிய அந்தக் கள்வன் நின்ற அவனது பாதங்கள்பட்ட இடத்தைத் தொட்டு இரு கண்களிலும் ஒற்றிக் கொண்டார்,
“அவன் கொள்ளைக்காரன் தான்; கொடுமையானவன் தான். ஆனாலும், அவன் தமிழன்! அவன் மட்டும் இல்லாதிருந்தால், மற்றவர்கள் புரியாத் தனமாகவே வீணாக என்னைக் கொன்று தீர்த்திருப்பார்கள்! என் இனத்தானால்தான் என் உயிர் தப்பியது; எனது தாய்மொழியான தமிழால் தான் நான் பிழைத்தேன்..” என்று அவர் உதடுகள் முணு முணுத்தன.
– ஏப்ரல் 1949, தமிழ் முரசு (ம.பொ.சி).
தொடர்புள்ள சிறுகதைகள்
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்னும் ஒரு விதம்!
வளர்கவி
June 29, 2026
காயலாங்கடை
நா.ரங்கராசன்
June 29, 2026
எதுவும் மாறல
மனோகர் மைசூரு
June 29, 2026