விடிவெள்ளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2025
பார்வையிட்டோர்: 252 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோஷம் ஆகாயத்தைப் பிளந்தது. 

மார்ணிங் ஸ்டார்! மார்ணிங் ஸ்டார்! கம் ஆன் கம் ஆன் மார்ணிங் ஸ்டார்!- 

“இல்லேடா அதோ பார், எவர் ரெடி வருது- வந்தூட்டுது! எவர் ரெடிதான்! எவர் ரெடி! எவர் ரெடி!! -” 

“யாரப்பா ஜாக்கி?” 

“போடா முட்டாள் பணம் அத்தினியும் மார்ணிங் ஸ்டார் மேல்தான் கட்டியிருக்கேன் – அப்புவையன் ஆரூடம்டா பொய்க்காது ! இன்னிக்குக்கூட விபூதியும் குங்குமமும் குலுக்கிப் போட்டுப் பார்த்தேன். குங்குமப் பொட்டலம்தான் கைக்கு வந்தது. பிள்ளையாரே, உனக்கு ஒரு காலணா கற்பூரம்!- மார்ணிங் ஸ்டார்! மார்ணிங் ஸ்டார்!” 

குதிரைகள் திருப்பத்தில் விரட்டியடித்துக் கொண்டு வருகின்றன, “மார்ணிங் ஸ்டாரின் கால்கள் பூமியில் பதிவதாவேத் தெரியவில்லை ; தரை மட்டத்துக்கு ஓர் அடி பரப்பி அந்தரத்தில் நீந்துகின்றன. 

“மார்ணிங் ஸ்டார்! மார்ணிங் ஸ்டார்! பார்த் தையாடா நான் அப்பவே சொன்னேனே, மார்ணிங் ஸ்டார்! நம்ப சந்து பிள்ளையாருக்கு சக்தி ஜாஸ்திடா! ஒரு நாளும் என்னைக் கைவிடமாட்டார்; நீ என்ன லைட்னிங் மேலேயா கட்டினே?-சரிதான்; பணமும் லைட்னிங்தான் – அப்பப்பா கண்டெடுத்தேன், அம்மம்மா காணோமே என்கிற மாதிரி! நான் சொல்ற பேச்சைக் கேட்காமல் போனால் உச்சந்தலையில் கை வெச்சுக்க வேண்டியதுதான். பஸ்மாசூரன் மாதிரி- மார்ணிங் ஸ்டார்! மார்ணிங் ஸ்டார்!!!” 

பந்தயம் முடிந்து விட்டது! 

மார்ணிங்ஸ்டார் வாயில் நுரை தள்ளிற்று. விலா வில் வியர்வை பொங்குகிறது. மேலே ஜாக்கி அதன் கழுத்தைத் தட்டிக் கொடுக்கிறான். அவனுக்கும் மூச்சு இறைத்தது. ஹரிஹரன் ‘மார்ணிங் ஸ்டாரி’ன் கடிவா ளத்தைப் பிடித்துக் கொண்டு, தன்னைச் சூழ்ந்திருப்ப வர்களின் அசூயையை ஆனந்தமாய் அனுபவித்த வண்ணம் வெற்றி நடைபோட்டு வருகிறான். 

விலாவில் விழுந்த உதையின் விலுக்கில் கனவு கலைந்து ஹரிஹரன் உளறியடித்துக் கொண்டு எழுந்திருந்தான். 

தொந்தியில் துணி சரிய, பொறி பறக்கும் கண்க ளுடன் மணி ஐயர் எதிரில் நின்றார். 

“ஏண்டா, போண்டாவை வேகப்போட்டூட்டு, அடுப் பண்டை என்னடா தூக்கம்? மூதேவி எங்கேன்னு காத்துண்டு இருப்பாளே! கருகல் நாத்தம் வாசலுக்கு வந்து ஆளைப் பொசுக்கறது! என்ன, ஹோட்டல் பேரைக் கெடுக்கவா வந்தே? உங்கப்பன் வீட்டு சொத்தா, சாமானை வீணடிக்க?” 

ஹரிஹரன் அவசர அவசரமாய்ப் போண்டாவைத் திருப்பினான். கொஞ்ச நாளாவே இந்த மணி ஐயன் ஒரு மாதிரியாத்தான் இருக்கான். இருக்கட்டும் படவா! நேற்று மாதிரியிருக்கு, சமுத்திரக்கரையில் கூடையிலே சுண்டலை வைத்துக் கொண்டு ஈ ஓட்டிக் கொண்டி ருந்ததை இவன் மறந்தூட்டாலும் எனக்கு மறந்தூடுமா? நானே காலணாவுக்கு வாங்கி வாயிலே போட்டுண்டு “தூ! ஊசிப் போச்சு”ன்னு இவன் மூஞ்சியிலே துப்பாத தோஷம் காலடியிலே உமிஞ்சவன் தானே ! இருக்கட்டும் இவனுக்கெல்லாம் ஒரு வழி வெக்கணும், ஏதோ ஸ்வாமி புண்யத்தில், ‘மார்ணிங் ஸ்டார்’ “வின்’ அடிச்சதும் இவன் ஓட்டலுக் கெதிரேயே ஒரு ஓட்டல் போட்டு, இவனுக்கு மேலே ஒரு முழ உயரத்துக்கு மேஜையைப் போட்டுண்டு உட்காரணும். இதனால் நஷ்டமானாலும் ஆயிட்டுப் போறது. வந்த பணமெல்லாம் போண்டியானாலும் சரி, ஒரு கை பார்த்துவிடணும். ஆமாம். வாசலுக்கெதிரே ஸைக்கிள் ஸ்டாண்ட்.மேஜை மேலே ரேடியோ. உள்ளே சாப்பிடற “டேபிள்’ ஒவ்வொண்ணுக்கும் கண்ணாடி போட்டு ஒவ்வொரு மேஜைக்கும் கடுதாசுப் பூ வெச்சு ஒஸ்திப் பீங்கானிலே ஆமாம் ஸ்விட்சுப் போடவேண்டியது தான் எலெக்ட்ரிக் விசிறி கிர்ர்ன்னு- 

“அடே, அவனை அங்கேயிருந்து எழுப்புங்கடா ! சாமி, ஆடிண்டிருக்கான் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கிறான். வந்தவாளை விசாரிக்கச் சொல்லு. மயக்கங் கலை யட்டும் -” என்று மணி அய்யர் ‘கல்லா’ விலிருந்து கத்தினார். 

“ஏண்டா ஹரிஹரா, கொஞ்ச நாழி வெளியில் காத்தாட நின்றுவிட்டு வருவதற்குள் ப்ரளயம் பண்ணிப் பிடறையே !” என்று சொல்லிக் கொண்டே, ராமையர் உள்ளே நுழைந்தார். பிறகு குறும்புத்தனமாய் “என்னடா உன் எஜமானுக்கு வயிறு எரியறதாமே, கொஞ்சம் ‘ஐஸ் வாட்டர் ஊத்தக்கூடாதா ஊறுகாய்  ஜாடி மாதிரி அந்த வயத்திலே?” 

“எல்லாம் இரு இரு இன்னி சாயங்காலம் வரைக்கும் தான். அப்புறம் இந்த மணி ஐயன் எங்கேயோ, நான் எங்கேயோ!” 

“ஏன் அதற்குள்ளேயும் எந்த மாமனார் பணத்தோடே இன்னொரு கல்யாணம் நிச்சயம் பண்ண வரான்?” 

“மார்ணிங் ஸ்டார்.” 

“என்னமோ அப்பா, நீதான் மார்ணிங் ஸ்டார் மேல் அப்படி ஒற்றைக்கொம்பா நிக்கறே! எல்லாரும் ‘லைட்னிங்’-” 

“ராமையரே உமக்கும் எமக்கும் எவ்வளவோ வாரெடை இருக்கு இந்தக் குதிரை ஜாதக விஷயத்தில் நீர் எனக்கு விட்டுக் கொடுத்துதான் ஆகணும். மூளையில் லாமலா ‘மார்ணிங் ஸ்டார்’ மேலேயே போட்டிருக்கேன்!” 

“எனக்கு எப்படியப்பா தெரியும், உனக்கு மூளை யிருக்கு இல்லையென்று ?” 

“இன்னி சாயங்காலம் தெரியுங்காணும் ஓய்! நூறு ரூபாய் ஸ்வாமி முள்ளங்கிபத்தை மாதிரி நூறு ரூபாய்!”

“ரூபாய் ஏது அப்பேன் இப்போ ? பஸ் டிக்கட் மாதிரி நோட் என்று சொல்லு !” 


ஹரிஹரன் மேல் துண்டால் உடம்பைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்தான். 

நூறு ரூபாய்! சிறுகச் சிறுக, ‘எம்.எஸ்.’ கச்சேரி கேட்ட பணம் போக, ‘பாகவதர் படம்’ பார்த்த பணம் போக, மூர்மார்க்கெட்டுக்கு ஷோக்காய்க் கண்ணாடி, சீப்பு, வாசனைத் தைலம் எல்லாம் வாங்கப் போய், முடிச்சவிழ்ப்பவன் பறிச்சது போக, ஹோட்டலில் கை தவறிக் கீழே நழுவவிட்ட கண்ணாடி டம்ளர்களுக்கு (இது தினம் ஆகும் இரண்டு மூணு சராசரி) அழுத அபராதப் பணம்போக, வீட்டில் செலவுக்கு தர்மபத்தினி அலமேலுவுக்குக் கட்டின கப்பம்போக, ஆசைக் கிழத்தி சந்திராவுக்கு ஸமர்ப்பித்த பணம் போக- இத்தனை கண்டங்களையும் சமாளித்துக் கொண்டு, தேனீ தேன் கூட்டுவதுபோல் சிறுகச் சிறுகச் சேர்த்த பணம் – நூறு ரூபாய்! 

ஆமாம். இந்தச் சந்திரா விவகாரம்தான் வரவர ரொம்ப மோசமாய்ப் போச்சு. புள்ளி போட்டால் அவள், பற்றுத்தான் தூக்கி நிற்கும். எப்படியாவது அவளைத் தொலைத்துவிட வேண்டியதுதான். ஆனால் இப்படியே தான் எட்டு வருஷமா. 

ஹரிஹரா ! அடே, அக்ரமம் பண்ணாதேடா யாராரோ வந்திருக்காளே, கவனீடா !” 

“என்ன, ஸார், வேணும்? டில்பர்டோஸ் ஸூரத்காரி பாம்பே காஜா,காசி ஹல்-” 

“அதெல்லாம் நமக்கென்னாத்துக்குங்க ஐயரே! ரெண்டு போண்டா ஸாம்பார் நிறைய சாம்பார் விட்டுக் கொண்டாங்க. கையோடே ஒரு கப் காப்பி. சுருக்க ஆவட்டும் சரக்குப் பிடிக்கப் போவணும்” 

காப்பி கலப்பதில் ஹரிஹரனுக்கு இணை எவருமே யில்லை. அது ஒண்ணுக்குத்தான் ஹரிஹரனை மணி ஐயர் வேலையில் வைத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லணும். காப்பிக்கு மாத்திரம் ஹரிஹரனுக்குத் தனிக் கைராசி – ‘காப்பி’ராசி. 

டிகாக்ஷனை ஸத்தாயிறக்கி, கெட்டிலில் ஊற்றி, இறுக மூடி,பால் ‘குபு குபு’ என்று மணத்துடன் புகைவர ஒரு பக்கத்தில் காய வைத்துக்கொண்டு, அப்போதைக்கப் போது “ஒரு கப் காப்பி!” “அரை கப் காப்பி ஸ்ட்ராங்!” என்று கூவல் கிளம்பும் பொழுதெல்லாம், சட்டென்று கெட்டிலை எடுத்து ஒரு சுழற்று சுழற்றி டம்ளரில் டிகாக்ஷனை ஊற்றி, ஒரு கரண்டி பாலை உயரத் தூக்கி ஆற்றி, காப்பி பவுன் நிறமாய் மாறி நுரை தளும்ப கம கமவென்று மணங் கமழ- 

“சபாஷ்! காப்பி என்றால் மணி ஐயன் ஹோட்டல் தானப்பா! பாக்கியெல்லாம் பாடாவதியானாலும் காப்பியிலே எல்லாமே அடிச்சுண்டு போயிடறது. காப்பின்னா எப்படியிருக்கும் தெரியுமா? எப்படிச் சொல்றது ? ‘திக்’காயிருக்கும் என்கட்டுமா? மணமா யிருக்கும்னு சொல்லட்டுமா?- அதெல்லாம் சரியில்லேப்பா! பொம்ம னாட்டி மாதிரியிருக்கும், அழகாய்! ஜோராய் சொகு-” 

“ஆமா – காப்பி போட்டால் மாத்திரம் ஆயிட்டுதா கலக்கற ஷோக் வேறேயிருக்கப்பா ! அதுக்கு ஹரிஹரன் தான் சரி. பார் அவன் ஆத்தற ‘ஸ்டைலை’யே பார்!? 

வந்தான் ஹரிஹரன். காப்பி டம்ளரையும் டபரா வையும் பந்தாடுவதுபோல் ஏந்திக் கொண்டு வந்து மேஜையண்டை நின்று, காப்பியை ஒரு விசிறு விசிறி ஆற்றினான். டம்ளருக்கும் டபராவுக்கு மிடையில், சுமார் மூன்றடி வீச்சுக்குக் காப்பி சாட்டை அடித்தது. ஆனால், டபராவில் இறங்க வேண்டிய காப்பி மறுபடியும் டபரா வில் இறங்கவில்லை. நேரே, காப்பி கேட்டிருந்த ஆள் தலைமேலேயே போய் இறங்கி ஒரு இடம் பாக்கி இல்லை – அவருடைய முகம் மீசை மயிர் நுனிகள், பட்டுச் சொக்காய், அங்க வஸ்திரம்’ ஜரிகை விசிறி மடிப்பு வேஷ்டி-ஒன்று பாக்கியில்லை. (அப்புறம் ராமையர்: “ராமபாணம் கெட்டுது போடா!”) 

நாற்காலிகளும் மேஜைகளும் நகர்ந்தன. கண்ணாடி டம்ளர்கள் கிண் கிணுத்தன. பித்தளை டம்ளர்கள் கலகலத்தன. 

“த்ஸோ! த்ஸோ! த்ஸோ !* 

“ஹஹஹ்!” 

“ஹோ ஹோ ஹோ!” 

“அடாடா! புத்தம் புதிசுபோல இருக்கே ஸார்” 

“ஹரிஹரா!” 

ஹரிஹரன் கல்லாவுக்கெதிரே நின்றான். மணி ஐயருக்கு நாக்கு மேல்வாயை முட்டுகிறதேயொழிய, வார்த்தை வரமாட்டேன் என்கிறது. 

“பில் புஸ்தகத்தை இங்கே வை!” 

ஹரிஹரன் பேசாமல் அப்படியே வைத்தான். 

“பென்சிலை வை!” 

அதுவும் ஆயிற்று. 

“வெளியே போ! போயிடு – இங்கே நிற்காதே-” 


ஹரிஹரன் சற்று நேரம் தெருவில் அலைந்து கொண்டிருந்தான். அவனுக்குக் காற்றாட ஸௌகரிய மாயிருந்தது. பக்கத்து வெற்றிலை பாக்குக் கடையில் வெற்றிலை போட்டுக் கொண்டான். 

வேலை ? ? 

ஓ! வேலையா? அதைப்பற்றி அவனுக்குக் கவலை யில்லை. அவனைவிட்டால், மணி ஐயனுக்கு வேறு கதியில்லை ; மணி ஐய்யனை விட்டால், அவனுக்குக் கதியில்லை. இம்மாதிரி இரண்டு, மூன்று மாதங்களுக் கொருதடவை நேர்வதுண்டு. இந்த வேலைக்குத்தான் மானம்,வெட்கம், ரோசம், விவஸ்தை ஒன்றும் கிடை யாதே! 

அபிஷேக சுந்தரர் வெளியில் செல்லும் வரையில் ஹரிஹரன் சற்றுத் தலைமறைவாயிருந்தான். அவர் போன பிறகு, சற்றுத் தைரியமாகவே ஹோட்டல் வாசற் படியண்டை உலாவ ஆரம்பித்தான். 

சாயங்கால வேளை முற்ற முற்றஉள்ளே கூட்டம் நெரிந்தது. 

“ஹரிஹரா!” 

“இதோ!” 

“உள்ளே போய்க் கவனி!”

ஹரிஹரன் பம்பரமாய்ச் சுழன்றான். அவன் வேலைக்கு வேகம் ஏற்பட்டாலே ஒரு குஷிதான். அங்கே போவதும் இங்கே வருவதும், கொட்டியிறைப்பதும் இதைக் கூடையில் வாருவதும், உடைப்பதும் துடைப்பதும்- 


பந்தயத்தின் முடிவுகள் பத்திரிகைகளில் வந்து விட்டன.சோடாக் கடையில் ஒரு சின்ன ஜமா’ கூடிப் பேசிக் கொண்டிருந்தது. ஹரிஹரன், அவசர அவசர மாய், இடுப்பு முண்டில் கையைத் துடைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தான். 

“ஹரிஹரனா ! வா, வா, வா வாடா அப்பனே!- வந்தையா?” 

இந்த அலாதியான கொஞ்சல் வரவேற்பு ஹரிஹர னின் அடிவயிற்றை என்னவோ பண்ணிற்று. 

“அஹோ வாரும் பிள்ளாய் ஹரிஹரரே!” – என்றான் இன்னொருவன். 

அடுத்தாற்போல் ராமையர் வந்து சேர்ந்தார். “நம் நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதா? உன் குதிரை கெலித்ததா?” 

*இன்னும் கெலித்துக் கொண்டேயிருக்கு !-” என்றது ஒரு குயுக்தி, 

“அப்படின்னா?” 

“தெரியாதா? தெரிஞ்ச விஷயந்தானே? ‘லைட் னிங்க்’ முதல்; ‘ஸாவேஜ்’ இரண்டாவது; ‘ஜாலி’ மூணாவது—” 

“மார்ணிங் ஸ்டார்?” என்று பரபரப்பாய்க் கேட்டான் ஹரிஹரன். 

“நோவேர்தான் ! கடைசியிலே முதல் !” 

“மார்னிங் ஸ்டாரா சாமி?- என்று சோடாக்கடை நாயர் குறுக்கே பேச ஆரம்பித்தான். அவன் முகத்தில் விஷமம் கூத்தாடிற்று. “யான் பந்தயங் காணப் போயி ருந்தது. ஈ மார்ணிங் ஸ்டார் விஷயம் யாவரும் கேளணும்! வாலைத் தூக்கி ஓடவும் சக்தியில்லா.ஆ குதிரை யாவதுக்கும் கடைசி: அதுக்கு ஆகாரம் இல்லா என்னு என் சம்சயம். யாது காரணம் கேட்டோ? முன்னே குதிரை ஓடறதில்லா, ஆ குதிரை வாலை மார்ணிங் ஸ்டார் மென்னு அசை போடறது. அது குதிரையல்லா கழுதை-” 

நாயரை அடிக்க ஹரிஹரன் கையை ஓங்கிவிட்டான். நாயர் தலைகுனிந்து பின் வாங்கிக் கொண்டே, “யாது ஸாமி, இந்தா தேஷயம்? யான் உள்ளதைப் பறைஞ்சுது. ஞான் அரிச்சந்த்ர வம்சமாக்கும்-என் குடும்பம் மலை யாளம் போய்க் குடியேறியது-யான்-” 

தலை சுழன்றது. 


ஹரிஹரன் வந்து கதவை இடித்தான். இல்லை. உடைத்தான். அவன் விடுதி கடைசிக் கட்டு. நல்ல நாளிலேயே முன் கட்டிலிருப்பவர்கள் கதவைத் திறக்க மாட்டார்கள். அதுவும் நடுநிசியில் கேட்பானேன்? 

“ஹும் ஹும்” என்று முனகிக்கொண்டு, மெல்ல மெல்ல ஆடி ஆடி அசைந்து தள்ளாடி வந்து. கதவைத் திறந்த அலமேலு கையில் விளக்கைப் பிடித்த வண்ணம் நின்றாள். உடலெல்லாம் வெடவெட’வென்று உதறிற்று: கடுஞ்ஜுரம். 

சற்று நேரம் எங்கேயோ ஞாபகமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, குனிந்த தலையுடன் ஹரிஹரன் உள்ளே நடந்தான். 

“மூணு நாளாய்க் கண்ணைத் திறக்கக்கூட முடியல்லே என் நினைப்பேயில்லை- உங்களையும் காணோம் -இந்த வீட்டில் இத்தனை பேரிருக்கான்னு பேரேயொழிய, மல்லாந்த வாய்க்குத் தண்ணு ஊத்தற மனுஷாள் ஒத்தருமில்லே – நீங்களோ” 

ஹரிஹரனின் மூளை எங்கேயோ வேலை செய்து கொண்டிருந்தது. 

“தாகமோ நாக்கை வறட்றது. அன்ன ஆகாரம் பச்சைத் தண்ணு மூணு நாளாயில்லை. இப்பொத்தான் எழுந்திருந்து ஒரு வாய்க் காப்பித் தண்ணு போட்டேன் அதுக்குள்ளே குளிர் வந்துடுத்து அதை மாத்திரம் கொஞ்சம் கலந்து கொடுங்கோ- பாலைக்கூடக் காய்ச்சி ஆயிடுத்து-” 

ஹரிஹரன் இன்னமும் பேசவில்லை. இவ்விடத்து நினைப்பில்லாமலே சின்ன அடுக்கில் டிகாக்ஷனை இறக்கி அதன் மேல் பாலை விட்டுக்கொண்டே. கஷாயம் திரிவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். பிறகு, ஒரு கலக்குக் கலக்கி, ஒரு தரம் தூக்கி ஆற்றி னான் – தன்னினைவு சுறீலென்று எழுந்தது. 

மத்துக் கடைந்து பொங்கியது போன்ற அம்மன வெழுச்சியில் அவனுக்கென்ன தோன்றிற்றோ காப்பியை விசிறியடித்த வேகத்தில், எதிர்ச் சுவரில் பரவி விழுந்தது. அங்கிருந்து அது கோடு கோடாய் வழிவதை ஒரு
நாழிகை கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, ஹரிஹரன் வெளியே நடந்தான். 


எங்கே செல்வது? 

சந்திரா- 

சந்திரா நல்ல அழகு; மஹா புத்திசாலி. பேச்சிலே தேன் ஒழுகும்; பாடினால், சாப்பாடுகூட வேண்டிய தில்லை; இன்றைக்கெல்லாம் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், சந்திரா மனுஷ ஜன்ம மில்லை. இப்போது போய்க் கதவையிடித்தால், “அஞ்சு ரூவாயானாலும் சும்மா வரப்போமோ?…” என்று ஸஹானா பாடிக் கொண்டே, சிரித்த முகத்துடனேயே கதவைச் சாத்திவிடுவாள். 

குனிந்த தலையுடன் ஹரிஹரன் நடக்க ஆரம்பித் தான். அவன் கால்கள் அவனையும் அறியாமல் சமுத் திரக்கரைக்கு இழுத்துச் சென்றன. போய், மணலில் குப்புற விழுந்தான். 

மையிருட்டில் குளிர்ந்த காற்று உடலின் மேலும், மூடிய கண் இமைகளின் மேலும், மெல்லெனத் தவழ்ந்து விளையாடியது. பிறகு, குளிர ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவன் அப்படியே படுத்திருந்தான். இரண்டு தினங்களாகவே நல்ல தூக்கமில்லை. இன்றிரவு சாப்பாடு மில்லை. குடித்திருக்கும் காப்பிக்கோ அளவேயில்லை. வயிற்றைப் பிரட்டி, வாந்தி வருவதுபோல் குமட்டிற்று. மூர்ச்சை போட்டாற்போல் விழுந்து கிடந்தான். 

எங்கிருந்தோ ஸென்ட்ரல் ஸ்டேஷனின் மணி அடித்தது. 1, 2, 3, 4–! 

நேரமாகிவிட்டது; அடுப்பை மூட்டி, இட்டிலிப் பாத் திரத்தை அதன்மேல் ஏற்ற நேரமாகிவிட்டது. இன்று அவன் ‘டேர்ண்’. 

தலையைத் தூக்கிச் சுற்றுமுற்றும் பார்த்தான், விடியும் சமயந்தான். நட்சத்திரங்கள் எல்லாம், ஒன்றன் யின் ஒன்றாய் அவிந்தாகி விட்டது. அப்பொழுது தூரத்தில் அடிவானம் வெள்ளத்தைத் தொடும் எல்லையில் பளிச்சென்று ஒரு நட்சத்திரம் பிறந்தது. 

அதுதான் விடிவெள்ளி. Morning Star. 

உதட்டில் ரத்தம் கசிய அமுக்கிக் கடித்து விழுங்கிய அழுகை கண்களில் பீறிட. ஹரிஹரன் எழுந்து ஹோட்டலைப் பார்க்க நடந்தான்.

– கங்கா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1962, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *