வளர் பிறை
கதையாசிரியர்: மாறன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2026
பார்வையிட்டோர்: 2,290
(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
7. சுந்தரி

நான் இப்பொழுது குழந்தை முருகனுடன் விளையா டிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறேன். இந்தச் சம பத்தில் என் தாயார் எப்படிக் கவலைப்பட்டுக்கொண்டிருக் கிறாளோ; என்னைப்பற்றி அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாளென்பதை அறிய ஆவலாக இருக்கிறது! இதைத் தெரிவது எப்படி? அவள் இருக்குமிடத்துக்கும் அந்த நாகர்கோவிலுக்கும் நடுவே 250 மைல்களல்லவா குறுக்கே மறைத்துக்கொண்டு இருக்கிறது. பாண்டவர்கள் ஒரு வருஷம் அஞ்ஞாதவாசம் செய்தார்கள்! நானும் என் கணவரும் எங்கள் வாழ்க்கை முழுதும் பந்துக்கள், சொந்த ஊரார் முகத்தில் விழிக்காமல் இப்படியே வாழவேண்டி யிருக்குமோ என்னவோ!
அப்படி இருந்துவிட்டால்தான் என்ன? என் லட்சியம் கைகூடிவிட்டது. நாகர்கோவிலுக்கு வந்து இந்த நான்கு வருஷகாலத்திற்குள், நான் தாசி சாரதாம்பாள் மகள் என்பதையே மறந்துவிட்டேன். அது மட்டுமா? தாசிகள் என்றாலுமே எனக்கு வெறுப்பு உண்டாகிறது. பூக்கட்டும் பண்டார ஜாதிக்காரியாகிவிட்டேன் நான். நாகர்கோவில் ஜனங்கள் என்னை வடிவேலுவின் மனைவி யென்பதை ஒப்புக்கொண்டாகிவிட்டது. வாழ்நாள் முழுதும் இதே தோரணையில் இருந்துவிட்டால் போதுமானது.
என்னால் முடிந்தவரையில் வடிவேலுவின் மனம் கோணாமல் நடந்துவருகிறேன். குழந்தையின் மேல் அவருக்கு எவ்வளவு பாசம்! அவனை நன்றாகப் படிக்கவைத்து விடவேண்டுமென்று எங்களுக்கு ஆவல். ரொம்ப சூடிகையாக இருக்கிறான். இந்த வருஷமே பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டுமென்று இருந்தேன். எனக்கு அவனை விட்டுப் பிரிந்திருக்கவே முடியலில்லை. கணவர் காலையில் எழுந்ததும் தன் அலுவலைக் கவனிக்கப் போய்விடுகிறார். அவர் திரும்பி வரும்வரையில் எனக்கு முருகனோடு விளையாடிக் கொண்டிருப்பதில் பொழுது போவதே தெரிய வில்லை. முருகனையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டால் எனக்கு நேரமே போகாது.
என் கணவர் இப்பொழுது ஆறுமாதமாக ஏதோ கவலையில் ஆழ்ந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. என்ன கவலையினால் அவர் முகம் இப்படி வாடியிருக்கிறதென்று அறிய முயன்றால் முடியவில்லை. கேட்டாலும் ஏதோ சொல்லி மழுப்பிவிடுகிறார். வியாபாரத்தில் நல்ல லாபம் இல்லையோ என்னவோ! கனவில்கூட வரவு செலவு கணக்குகளைப் பிதற்றுகிறார்.
அன்று நான் வியாபாரத்தைப்பற்றி விசாரிக்க ஆரம் பித்தேன். “வியாபாரம் நன்றாக நடக்கிறதே ! இந்த வருஷம் ஏராளமான லாபம் கிடைத்திருக்கிறது” என்று சொன்னார். இது பொய்தானென்று எனக்கு நிச்சயமாகப் படுகிறது. ஆனாலும் இதைப்பற்றி நான் மேலும் கிளறவில்லை. அவர் ஏன் என்னிடம் இந்தவிதமாகப் பொய் சொல்லி நஷ்டத்தை மறைக்கவேண்டும்? நானும் வருத்தப்படுவேனென்றுதான் அவர் இவ்வாறு மறைக்கிறார் அவருக்குத் தெரியாத யுக்தியையா நான் சொல்லப்போகிறேன்.
அவர் ஏதோ தோட்டம் விலைக்கு வாங்கப்போகிறா ரென்று வேலைக்காரப்பையன் சொல்லிக் கொண்டிருந்தான். அவர் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எனக்கு அதைப்பற்றி அக்கரையில்லை. கையிலுள்ள பணம் பூராவும் போய்விடக்கூடாதே என்றுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது. வீட்டுச் செலவை இன்னும் கொஞ்சம் சுருக்க வேண்டும். வியாபாரத்தைப்பற்றியே இனி ஒன்றும் அவரிடம் பேசக்கூடாது. பணக்கஷ்டம் வந்தது என்று தெரிந்தால் என் நகைகளைக் கழட்டிக் கொடுத்தாவது அவர் நினைத்த தொழில் நடக்கும்படி செய்வேன்.
நகைகளை நேரடியாகக் கொடுத்து விற்கச் சொன் னால் அவர் சம்மதிப்பாரா? இந்த நகை எனக்குப் பிடிக்கவேயில்லை. விற்றுவிடுங்கள்” என்றுதான் சொல்லவேண்டும். அப்புறம் பணம் வந்தபிறகு, “இந்தப் பணத்தையும் வியாபாரத்தில் போட்டு விருத்தி பண்ணுங்கள் ” என்று சொல்லவேண்டும்.
புருஷன் மனைவி இருவரும் அன்போடு அன்னியோன்னியமாக இருப்பதிலும் இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது! நான் அவருடைய நன்மையையே விரும்புகிறேன். அவர் என்னுடைய நன்மையையே பெரிதாக மதிக்கிறார். அன்பு காரணமாக வரும் சிறு சிறு சங்கடங் கள் இன்பந்தான் தருகின்றன. முருகன் என்ன சண்டைகள் போடுகிறான் என்னோடு! விளையாட்டாக அடிக்கக் கூடச் செய்கிறான். அந்த அடிகள் எல்லாம் புஷ்ப அர்ச் சனைகள்போல அல்லவா இன்பமளிக்கிறது எனக்கு!
8. வடிவேலு
“அடுத்து முயன்றாலும் ஆகு நாளன்றி எடுத்த கரு மங்கள் ஆகா. என்று நன்றாகத்தான் சொல்லியிருக் கிறார்கள் பெரியவர்கள். பூந்தோட்டம் வாங்க வேண்டு மென்று எவ்வளவு முயற்சிக்கிறேன். நாட்கள் தான் கடந்து கொண்டே போகிறது. ஐந்து வருஷ வியாபாரத்தின் மூலம் ஆயிரம் ரூபாய் வரை கையை விட்டுப் போய் விட்டது. கையில் இருப்பதைக்கொண்டு தோட்டம் வாங்காவிட்டால் இதுவும் செலவாகிவிடும்.
சுந்தரிக்கு என் பண நஷ்டம் தெரியாதபடி சமாளித்துக்கொண்டு வருகிறேன். வீட்டுச் செலவுக்குத் தாராளமாகக் கொடுத்து வந்தால் என் வியாபாரம் நன்றாக நடக்கிறதென்றுதானே அவள் எண்ணிக்கொள்வாள். தோட்டம் வாங்கி முடியும் வரை தான் பண நஷ்டம். பின்பு அமோகமாக லாபம் வருமென்பது நிச்சயம். ஆனால் நல்ல தோட்டம் கிடைக்க வேண்டும். நல்ல தோட்டங்களின் சொந்தக்காரர்கள் அவைகளை விலைக்கு விற்பதில்லை. வள மற்ற தோட்டங்கள்தான் இரண்டொன்று விலைக்குத் தருவதாகச் சொல்கிறார்கள். அதுவும் ஏகப்பட்ட விலை. நான் பிரியமாகக் கேட்பதிலிருந்து அவர்கள் விலையை அதிகமாகச் சொல்கிறார்கள். பணம் அதிகம் கொடுத்துத் தான் வாங்கவேண்டியிருக்கிறது.
கடையில் நஷ்டம்தான் ஏற்பட்டு வருகிறது. இதை எவ்வளவு சீக்கிரம் நிறுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறுத்தவேண்டும். இதை விட்டுவிட்டால் ஜீவனத்திற்கு உடனே ஏதாவது தொழில் வேண்டும். எனக்குப் புஷ்பத் தோட்ட அனுபவம் தவிர வேறு ஒரு தொழிலும் நன்றாகத் தெரியாது. ஆகையால் தோட்டப்பயிரில்தான் இறங்க வேண்டிவருகிறது. அதிலும் நஷ்டம் ஏற்பட்டால்!
யுக்தி, அனுபவம், பொருள் இவைகளைக் கொண்டு ஒரு காரியத்தை ஆரம்பிக்கலாம். ஆனால் அது வெற்றி கரமாக முடியுமா, அல்லது அல்லது அதில் தோல்விதான் ஏற்படுமா என்பதை விதியல்லவா நிர்ணயிக்கிறது. பூக்கடை நன்றாக நடக்குமென்று எண்ணித்தான் ஆரம்பித்தேன். ஆனால் அது என்னை ஆண்டியாக்கப் பார்க்கிறது. பூந்தோட்டமும் இப்படியே செய்தாலும் செய்யலாம். யார் கண்டது!
நான் குடும்பத் தலைவன். எப்படியும் சம்பாதித்து ஆகவேண்டும். என் உடல் திறனுள்ளவரை எப்படியும் சம்பாதிப்பேனென்ற உறுதி எனக்கு இருக்கிறது. ஆனால் சுந்தரி சுகமாக வாழ்ந்தவள். பணக்கஷ்டம் என்பதை என்னவென்றே அறியாதவள். என் காரணமாகவே அவள் இப்பொழுது எளிமையான வாழ்வு வாழ்கிறாள். உல்லாசப் பொருள்களையெல்லாம் வேண்டாமென்று தள்ளிவிட்டாள். வீட்டுச் செலவையும் எவ்வளவோ சிக்கனமாகவே நடத்துகிறாள்.
முருகன் அவளுடைய அன்பினால்தான் வளர்கிறான். கடவுள் புண்ணியமாக துவரை நோய்நொடி ஒன்றும் எங்கள் குடும்பத்தில் தலைகாட்டவில்லை. சுந்தரிதான் வீடு வாசலைச் சுத்தமாக வைத்துக்கொள்கிறாளே!
முருகனைத் தன் குழந்தையென்றே பாவித்துவிட்டாள் சுந்தரி. அவனும் சுந்தரியைத் தன் பெற்றதாய் என்று தானே நினைத்துக்கொண்டிருக்கிறான். அடுத்த வருஷமாவது அவனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டுசேர்க்க வேண்டியதுதான். சுந்தரி இதற்குள்ளாகவே அவனுக்குத் தமிழ் எழுத்துக்களெல்லாம் போதித்துவிட்டாளே! லக்கங்களைக்கூட அவன் ரொம்பத் தெளிவாகச் சொல்கிறான் அவனுடைய ஜாதகப்படி அவன் எவ்வளவோ செல்வம் சேர்ப்பானென்று தெரிகிறது. அவன் தலையெடுக்கும் வரை நான் சிரமப்படவேண்டும். பின்பு நான் நிம்மதியாக வாழலாம்.
சில சமயங்களில் என் அக்காளைப்பற்றியும், சுந்தரியின் தாயாரைப்பற்றியும் நான் நினைப்பதுண்டு. அவர்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ‘ரொம்ப நல்லவனாக இருந்த வடிவேலு சுந்தரியைக் கூட்டிக்கொண்டு எங்கோ ஓடிப்போய்விட்டான்’ என்றுதானே அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஏன்! எனக்கே என்னைப்பற்றி ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு துணிச்சல் எனக்கு எங்கிருந்து வந்தது! சந்தர்ப்பங்களின் மூலம் மனிதன் எப்படியெல்லாம் மாறிவிடுகிறான்!
சுந்தரியோடு நாகர்கோவிலில் வந்து குடும்பம் நடத்துவேன் என்று நான் கனவுகூடக் கண்டிருக்க மாட்டேன். சுந்தரிகூட இதைப்பற்றி நினைத்திருக்க மாட்டாள். சரியான சம்பாத்தியம் மட்டும் இருந்துவிட்டால் எனக்குக் கவலையே கிடையாது. நிரந்தரமாக ஒரு வரும்படி ஏற்படுவதற்கு நாளை எப்படியும் அந்தப் பூந்தோட்டத்தை விலைபேசி வாங்கிவிட வேண்டியதுதான்.
9. சுந்தரி
தான் பூந்தோட்டம் ஆரம்பித்ததில் என் கணவருக்கு ரொம்ப திருப்தி. உற்சாகமாகத் தினமும் அதைப் பற்றி என்னிடம் பேசுகிறார். முருகனை அடிக்கடி அங்கு கூட்டிக் கொண்டு போகிறார். முருகன் பள்ளிக்கூடத்திற்கும் ஒழுங்காகப் போய் வருகிறான். உபாத்தியாயர் இவன் மீது ரொம்பப் பிரியமாக இருக்கிறாராம்.
இன்னும் நான்கு மாதத்தில் முருகனுக்குத் தம்பியோ தங்கையோ பிறக்கப்போகிறது என் கணவருக்குத் தலை கால் தெரியவில்லை. அடிக்கடி என்னைக் கேலி கூடப் பண்ணு கிறார். ஒரு தடவை என்னைத் திருவனந்தபுரத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கு ரமணீயமான இயற்கைக் காட்சிகளையெல்லாம் கண்டுகளித்தேன். அங்கு கதகளி நடனத்தைப் பார்த்தபோது என்னையறியாமலே என் கால்கள் துடிக்க ஆரம்பித்துவிட்டன! தாளமும் சுருதியும் லயித்து விட்டால் நமது உடம்பிலுள்ள நரம்புகளெல்லாம் தன் வசமிழந்து பரவசமடைகின்றன. அதிலும் எனக்கு நாட்டியத்தில் பயிற்சி இருந்ததனால் கதகளி நடனத்தை நன்றாக அனுபவித்தேன்.
ஒரு சபையில் அவரோடு உட்கார்ந்து ஒரு காட்சியைக் காண்ப தென்றால் இன்பமாகத்தான் இருக்கிறது. ஒரு கணவ னேடு வாழும் மகிமையே மகிமை! எனது அன்பு முழுவதையும் அவர் மீது செலுத்தமுடிகிறது. ஒருவர்க்கு மற்றவர் துணை. எவ்வளவு ஐக்கியம் ஏற்பட்டுவிடுகிறது தம்பதிகள் என்ற பந்தத்தினால்! தாசி வகுப்பினர்கள் இந்த சுகத்தை அறியாமல் நரக வாழ்க்கை வாழ்கிறார்களே! குதிரை தன் வாயில் போட்டிருக்கும் கடிவாளத்தை ஆபரணமென்று நினைத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தா னிருக்கிறது தாசிகள் தங்கள் பிழைப்பை உயர்வாக எண்ணிக்கொள்வது.
நல்ல வேளையாக நான் அந்த அசிங்கமான வாழ்க்கை யில் புகுந்துவிடாமல் தப்பித்து என் மனதைப் பரிசுத்தப் படுத்திக்கொண்டேன். அதுமட்டுமல்ல, என் குலத்தவர்களுக்கு நான் ஒரு வழிகாட்டியாக இருக்கிறேன் மற்றத் தாசிப் பெண்களும் என்னைப் போலவே ஒரு கணவனோடு வாழ்வதென்று தீர்மானித்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்து விட்டால் தாசிக்குலம் என்பதே நாளடைவில் இல்லாமல் போய்விடும். அப்படி ஒரு காலம் வருமா?
மனித லட்சியங்களுக்கு எல்லையே கிடையாது. போகப்போக அடிவானத்தைப்போல எட்டிப் போய்க் கொண்டிருக்கிறது. சமூகச் சீர்திருத்தத்திற்கு அஸ்திவாரம் போட்டுவிட்டதாக நான் எண்ணி மகிழ்ந்து கொள்கிறேன். என் மட்டில் பார்க்கப்போனால் என் லட்சியம் கைகூடி விட்டதென்றுதான் நினைக்கிறேன். எனக்கு இன்னும் நான்கு மாதங்களில் பிறக்கப்போகும் குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால், அது தாசியாக வாழ முடியாது. குடும்ப வாழ்க்கையில் தாய் தந்தையருடன் இருந்து வளரும் குழந்தை இதுபோன்ற வாழ்க்கையைத்தானே விரும்பும். எனக்கு ஏற்பட்டது போன்ற மனக் குழப்பமும் எதிர்ப்பும் அதற்கு இருக்காது. எங்கள் பரம்பரையாகிய இந்த ரயில்வண்டித்தொடர் தாசிக்குலம் என்ற பாதையை விட்டு விலகி விட்டது. இந்தச் சந்ததிக்கும் தாசிக் குலத்திற்கும் இனி யாதொரு சம்பந்தமும் கிடையாது.
தனக்குத் தம்பியோ தங்கையோ பிறக்கப்போகிறது என்று முருகன் கூட ஆனந்தக் கூத்தடிக்கிறான். அவனுக்கு என்ன தெரிகிறது! அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வேடிக்கையாகச் சொல்வதை வைத்துக்கொண்டு அவனும் “அம்மா, எனக்குத் தம்பி பிறந்தா நானும் அவனும் ஒண்ணாகவே பள்ளிக்கூடத்துக்கு போவோம். ரெண்டு பேரும் ஒண்ணாகவே விளையாடுவோம்!” என்று அழகிய மழலையில் சொல்கிறான். குழந்தைகளின் மழலை மொழிகளைக் கேட்டுக்கொண்டே யிருக்கவேண்டும் போலிருக்கிறது. இனிமையான சங்கீதத்தைக் கேட்கும் சுகம் குழந்தைகளின் மழலை மொழியிலும் இருக்கிறது.
முருகனுக்கும், பிறக்கப்போகும் என் குழந்தைக்கும், நன்றாக சங்கீதப் பயிற்சி கொடுக்கவேண்டும். என்னிடமுள்ள நாட்டியக்கலை வீணாகி விடக்கூடாது. நான் குடும்பப் பெண் ஆன பிறகு வீட்டில் வைத்துக்கூட நாட்டியம் ஆட வெட்கமாக இருக்கிறது. அடாடா! நாட்டியம் என்று எண்ணியவுடனே என் பழைய வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது கணவரின் திருப்திக்காக வாவது ஒருநாள் எனது நாட்டியத் திறமையை அவரிடம் காட்டவேண்டுமென்றிருக்கிறது. ஆனால் நான் நாட்டிய மாடுகின்றேன் என்று இங்கு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் யாராவது அறிந்து விட்டால் நான் தாசிக் குலத்தைச் சேர்ந்தவளோ என்று அவர்கள் சந்தேகப்பட நேரிடும். இவ்வளவு அரிய கலையை ஒரு அவமானச் சின்னத்தோடல்லவா இணைத்து விட்டார்கள். எந்தக் குலத்தவரும் நாட்டியக்கலையைப் பயிற்சி செய்யலாம் என்ற காலம் சீக்கிரம் வரவேண்டும். எது எப்படியிருந்தாலும் என் குழந்தைகளுக்கு நான் நிச்சயமாக நாட்டியக்கலையில் பயிற்சி கொடுக்கப்போகிறேன். பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் தழைத்துவரும் இந்தக் கலாபொக்கிஷம் என்னால் வியர்த்தமாகிவிடக்கூடாது.
என் மனதில் என்னென்ன எண்ணெங்களெல்லாம் கிடந்து குமைகின்றன. தாசிப் பெண் குடும்பப்பெண்ணாக மாறினால் இவ்வளவு மனோ வேதனை ஏற்படத்தான் செய் யும்போலிருக்கிறது. நான் என் குலத்தை மறைப்பதற்காக எப்படியெல்லாமோ பேசவேண்டியதிருக்கிறது. குடும்ப வாழ்க்கையைச் சிறு வயதுமுதல் நன்றாகப் பார்த்து அனுபவிக்காததால் நான் சரியான மனைவியாக நடப்பது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் ஒவ்வொன்றாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது பக்கத்து வீட்டு மரகதம் அடிக்கடி தன் கணவனுடைய வீரச் செயல்களை யெல்லாம் சொல்வாள். அம்மாதிரியே நானும் என் கணவரைப்பற்றி அன்று அவளிடம் இரண்டொரு கற்பனைச் சம்பவங்களைச் சொல்லிப் பெருமையடித்துக் கொண்டேன். அவளும் ‘”சரி சரி” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.
எதிர் வீட்டுக்காரி ஒரு உத்தியோகஸ்தரின் மனைவி. அவள் கணவர் ரொம்பக் கண்டிப்பாக இருப்பார். அவள் அதைப்பற்றி என்னிடம் ஆவலாதிகள் சொல்வாள். என் கணவரும் ரொம்பக் கண்டிப்புக்காரர்தான் என்பதைக் காண்பிக்க இரண்டொரு கற்பனைச் சம்பவங்களை அவளிடம் அள்ளி வீசினேன். அவள் கேலியாகச் சிரித்தாள். “ஏன் சிரிக்கிறாய்?” என்று நான் கேட்டேன். “உங்கள் வீட்டில் உன் கணவர் ஒரு வார்த்தைகூட அதட்டிப் பேசியதே கிடையாதே! அப்படியிருக்கும்போது நீ அவரைப்பற்றி இப்படியெல்லாம் பொய் சொன்னால் நான் எப்படி நம்புவது?” என்று கேட்டுவிட்டாள். எனக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது. எதற்காக இந்த மாதிரிப் பொய் சொல்லி அகப்படவேண்டும்.
அண்டை அயலிலுள்ள பெண்களுக்கெல்லாம் என் மேலும் முருகன்மேலும் மிகவும் பிரியம். விசேஷ நாட்களில் அவர்கள் வீட்டிற்குத் திண்பண்டங்கள் அனுப்பி வைப்பேன். அவர்களும் அடிக்கடி ஏதாவது கொண்டு வந்து கொடுப்பார்கள். என் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை நான் சும்மா அனுப்புவதே இல்லை. புஷ்பம், காபி, பலகாரம் இவைகளைக் கொடுத்து உபசரிப்பேன். குடும்பப் பெண் என்றால் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமல்லவா?
ஒரு நாள் அடுத்த வீட்டு மரகதம் என் தாயார் தகப்ப னார், மாமனார் மாமியாரைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டாள் எனக்குப் பரம சங்கடமாகப் போயிற்று. எல்லோரும் காலமாகிவிட்டார்கள் என்றுதான் பொய் சொல்ல வேண்டியிருந்தது. உயிரோடிருக்கும் என் தாயாரை கூடச் சமீபத்தில் இறந்துபோனாள் என்று துளிக் கண்ணீர் வடித்தேன்.அப்பப்பா! குலம்விட்டுக் குலம் தாவுவதற்குத் தான் மனச்சாட்சியை எப்படியெல்லாம் கொலை பண்ண வேண்டியிருக்கிறது. இதுபோல இன்னும் ஐந்தாறு வருஷம் கழிந்துவிட்டால் எல்லாமே சகஜமாய்ப் போய்விடும். என் குழந்தைகளும் என் பழைய கவலைகளை அடியோடு மறக்கச்செய்து விடுவார்கள். இதே நாகர்கோவிலில் என் குழந்தைகளுக்கு நல்ல இடத்திலிருந்து சம்பந்தம் கொண்டு விடவேண்டும். காலத்தின் வேகத்தில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்படலாம். இதுவும் ஏன் நடக்காது?
– தொடரும்…
– வளர் பிறை (நவீனம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1946, கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை ஸ்டேட்.
![]() |
சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம் தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். நன்றியுரை "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
எங்கெங்கு காணினும் சக்தியடா
எஸ்.மதுரகவி
June 20, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
June 20, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 20, 2026
