வளர் பிறை
(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
4 – சுந்தரி

எந்தக்காலத்திலும் துணிவு இருந்தால் அதிர்ஷ்டம் தானாகவே வந்துவிடுகிறது. வடிவேலுவின் மனம் எப்படி எப்படி இருக்கிறதோ, அவனிடம் இந்த விஷயத்தை எப்படித் தெரிவிப்பதென்றெல்லாம் எவ்வளவு நாளாகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவனிடம் துணிந்து கேட்டவுடன் அவன் சரியென்று சம்மதித்துவிட்டானே. இனி நான் வடிவேலுவை அவன் இவன் என்று பேசக் கூடாது. அவர் என் கணவர். அவருடைய கவலைகள் என் கவலைகள். அவருடைய இன்பமே என் இன்பம். நல்ல கட்டழகு வாய்ந்தவர். மிகவும் புத்திசாலி. இளகிய மனசு. நல்ல குணம். நல்ல சுபாவத்தினால்தானே தன் உடமைகளை யெல்லாம் அவர் இழந்தார். விதியும் இதுவரை அவரைக் கொடுமைக் கரங்களால்தான் அணைத் தது. இனிமேல் நான் அவருக்குத் துணை. அவருக்குக் கஷ்டம் வந்தால் அதைப் பகிர்ந்துகொள்ளவும், இன்பத் தைப் பெருக்கவும் நான் உதவுவேன்.
இரும்புப் பெட்டியிலிருந்து தாயாருக்குத் தெரியாமல் இரண்டாயிரம் ரூபாய் எடுத்து வைத்திருக்கிறேன். இதைக்கொண்டு ஒரு வியாபாரம் ஆரம்பித்தால் வாழ்க் கைக்கு அவசியமான அளவு வரும்படி கிடைக்காதா? அவர்தான் நல்ல உழைப்பாளியாயிற்றே. இந்தப் பணத்தை ஒன்று பத்து நூறாகப் பெருக்கிப் பெரிய தனவந்தர்களாகக்கூட ஆகிவிடலாம். மனக்கோட்டை பெரிதாகத் தான் இருக்கிறது. மனக்கோட்டை நிஜ உருவம் பெறு வதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். கடவுள் அருள் செய்வார்.
நாளை இரவு 10 மணி வண்டிக்குப் புறப்பட்டால் நாளை நின்று மாலையில் நாகர்கோவிலுக்குப் போய்விடலாம். அங்கே வீடு அமர்த்திக் குடும்பம் ஆரம்பிக்க ஒரு வாரமாவது பிடிக்கும். அப்புறம் இன்ப வாழ்க்கைதான்! வடிவேலு வியாபாரம் பண்ணப் போய்விடுவார். நான் என் குழந்தை – இனி அது என் குழந்தைதானே – முருகனுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருப்பேன்.
புது உறவு. புது வாழ்க்கை. துன்பத்திலிருந்து என் இலட்சிய இன்பத்திற்கு ஒரே பாய்ச்சல்! புது வாழ்க்கை யில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி. நான் தாசி வாழ்க்கை வாழாமல் ஒருவனுடைய மனைவியென்று வாழ்வதே போதுமானது. வடிவேலுவுக்கும் எனது லட்சியம் நன்றாகப் புரிந்துவிட்டது. நான் அவருக்குக் கிடைத்தது இந்தச் சமயத்தில் பெரும் பாக்கியமென்றே கருதுகிறார். என் தாயார் இந்த ஏற்பாட்டிற்குச் சம்மதித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவள் மனது பரம்பரைக் குணத்தில் தோய்ந்து உறைந்து போய் விட்டது. அதை என் பக்கம் திருப்புவது என்பது முடியவே முடியாது. அவளை ஏமாற்றிவிட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை.
தாயாரை ஏமாற்றுவதென்றால் மனது என்னவோ பண்ணுகிறது. தாய்க்கு என்மீது எவ்வளவு வாத்ஸல்யம்! நான் சுகமாக வாழவேண்டுமென்றுதான் அவளும் கவலைப் படுகிறாள். ஆனால் அவள் வழி வேறு. அகழியிலேயே கிடக்கும் முதலைக்கு அதுதானே சொர்க்கம்! அதுபோல் அவளுக்குத் தாசி வாழ்க்கையே நல்லதென்று படுகிறது. இதை நான் குற்றமென்று சொல்ல முடியுமா? பல சமூ கங்களில் நடந்துவரும் பலவிதப் புரட்சிகளைக் கண்டு கண்டு என் மனம் புதுவழியில் செல்ல முனைந்து நிற்கிறது. புரட் சியின் ஆரம்பம் விபரீதமாகத்தானே இருக்கும். ரயில் வண்டித் தொடர்கூட ஒரு தண்டவாளத்திலிருந்து வேறொரு பாதைக்குப் பிரியும்போது ‘தடதடா’ என்று முழங்கு கிறதே! அதுபோல் மாறுதலின் ஆரம்பத்தில் மனம் ‘கடபுடா’ என்று புரளத்தான் செய்யும். போகப் போக எல்லாம் சரியாகிவிடும்.
நான் இங்கிருந்து போய்விட்டால் அவள் என்னை ஓயாது நினைத்து வருந்துவாள். அவளுக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமில்லையே. சிறு வயது முதல் என்னைச் செல்லமாக வளர்த்தாள். மிக அரிய கலைகளான நாட்டியமும் சங்கீதமும் கற்றுக்கொடுத்தாள். ஆடையாபரணங் களையெல்லாம் எனக்குப் பூட்டி அலங்கரித்தாள். அவளுக்கு நான் செய்யும் பிரதியுபகாரம் என்ன? பிரதியுப் காரம் கருதியா தாய் குழந்தையை வளர்க்கிறாள்? தாயின் கடமையை அவள் செய்தாள். நான் சமூகத்தின் உயர்வுக்கான என் கடமையைச் செய்யப் போகிறேன். ஒரு லட்சியத்தை நாடிப் போகும்போது தாயின் பாசத்தையெல்லாம் மறக்க வேண்டியது தான். தாயின் பாசத்தைவிட என் லட்சியத்தின் பாசமே மேலானதாகத் தோன்றுகிறது. என் தாய்க்குக் கலையின் மீது மோகம் அதிகம். தன் நாட்டியத்திறமையும், தன் சங்கீதவழியும் சந்ததியோடு தழைக்க வேண்டும் என்ற ஆவல் உடையவள். அதற்காகவே எனக்கு நன்றாகப்பயிற்சி கொடுத்து அதில் வெற்றி கண்டு ஆனந்தமடைந்தாள். நான் இவ்வாறு ஓடிப்போவ தனால் அவள் தாயுள்ளம் பரிதவிப்பதோடு பன்னெடுங்காலமாக வேரூன்றியுள்ள அவள் கலையுள்ளம் தன் செல்வத்தையே பறி கொடுத்துவிட்டது போலத் துடிதுடிக்கும். ஐயோ பாவம்!
என்னைத் தேடுவதற்காக எவ்வளவோ முயற்சி செய்வாள். காணாவிட்டால் ஒருவேளை அவளுக்குப் பைத்தியமே பிடித்துவிடுமோ! நானும் வடிவேலுவும் குழந்தையோடு போய்விட்டால், அதிலிருந்தே அவள் என் நோக் நோக்கத்தை அறிந்துகொள்ளமாட்டாளா? ஏது? ஊஹும். அவளுக்கு என் லட்சியம் புரியாது. பொல்லாத வடிவேலுவுடன் கள்ளத்தனமாக ஓடிப்போய்விட்டாள் என்றுதான் நினைத்துக்கொள்வாள். தன் கலை தன் பரம்பரையோடு அழிந்துவிடுகிறதே என்றும் வருந்துவாள். ஆனால் என்ன செய்வது ?
வடிவேலுவின் அக்காள் நாளை, என்னைப்பற்றியும் தன் தம்பியைப்பற்றியும் என்ன நினைப்பாள்! மிகவும் யோக்கியமாக இருந்த தன் தம்பி என்னால் கெட்டுப்போய் என்னோடு ஊரைவிட்டே ஓடிப்போய்விட்டான் என்று தான் நினைப்பாள். வடிவேலுவின் அக்காள் மட்டும் என்ன? இந்த ஊர் முழுவதுமே எங்கள் இருவரையும் தூற்றத்தானே செய்யும்! தூற்றினால் என்ன? வரப் போகும் என் சந்ததிகள் மற்றச் சமூகத்தினரைப்போல குடும்ப வாழ்வு வாழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக் கிருக்கிறது. அந்த வெற்றியின் முன் இந்தத் தூற்றல் எம் மாத்திரம்!
நாளை இரவு எப்பொழுது வருமோ? நாம் அவசரப் டும் போது தான் நேரமும் ரொம்ப மெல்ல நடக்கிறது. வடிவேலு இப்பொழுது என்ன எண்ணிக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. கடவுள்தான் என் லட்சியம் நிறைவேறுவதற்குத் துணைசெய்யவேண்டும்.
5 – வடிவேலு
நாகர்கோவிலுக்கு வந்து சேரும்வரை என் மனம் எப்படி ‘திக் திக்’ கென்று அடித்துக்கொண்டது. ரயிலில் வைத்து எங்களை யாராவது தெரிந்தவர்கள் பார்த்து விட்டால் என்ன செய்வதென்று கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தேன். அதிர்ஷ்டவசமாக நாங்கள் அப்படி ஒருவர் கண்ணிலும் படவில்லை. எங்கள் ஊர் ரயில்வேப் போர்ட்டர் என்னை மட்டிலும் பார்த்தான். வடக்கே மாயவரம் வரை போவதாக அவனிடம் சொல்லி ஏமாற்றிவிட்டேன்.
ரயில் பிரயாணத்தின்போது சுந்தரி எவ்வளவு அன்போடு நடந்துகொண்டாள். என் முதல் மனைவியின் அன்பைவிட இவள் காட்டும் அன்பு அதிகமென்றே சொல்லவேண்டும். குழந்தை முருகனைத் தன் சொந்தக் குழந்தையாகவே பாவிக்கிறாள்! அந்தப் பயலுக்கும் இதற்குள் சுந்தரியின் மீது எவ்வளவு பிரியம் உண்டாய் விட்டது.
அவளை விட்டுப் பிரியமாட்டேனென்கிறானே! நான் எதிர்பார்த்ததைவிட மேலான பாதுகாப்பு அவனுக்குக் கிடைத்துவிட்டது! அவனுக்கு மட்டுமென்ன? என் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துகிறவள் சுந்தரிதான். தான் கொண்டு வந்திருந்த இரண்டாயிரம் ரூபாயையும் என் கையிலேயே கொடுத்துவிட்டாளே! இங்கு வந்தும் ஒருவாரமாயிற்று. புஷ்பத் தோட்டங்களை அமர்த்திவிட்டேன். வியாபாரம் தொடங்கவேண்டியதுதான்.
வியாபார உலகில் போட்டாப்போட்டிதான் அதிகமா யிருக்கிறது. பணத்தை ஏராளமாக அள்ளிக் கொட்டினால் தான் சரியானபடி வியாபாரம் நடத்த முடியும். குறைந்தது ரூபாய் ஆயிரமாவது இப்போது முதல் போட வேண்டும்.
தோட்டக்காரனுக்கு 200 ரூபாயாவது முன் பணம் கொடுத்தால்தான் என் கடைக்குத் தினமும் பூ அனுப்ப முடியும் என்கிறான். அவர்களை நம்பிப் பணத்தை எப்படிக் கொடுப்பது? நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.
இல்லாவிட்டால் என் கடைக்குப் பூ எப்படி வரும் ? முன்பணமாக நானூறு போயிற்று. ஒப்பந்தப்படி பூ அனுப்பவில்லையானால் தோட்டக்காரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
இங்கு பூக்கடைகளும் ஏராளமாகத்தான் இருக்கின்றன! இந்தக் கூட்டத்தோடு நானும் போட்டியிட்டால் என்ன ஆகுமோ! வியாபாரத்தில் லாபமும் வரலாம் நஷ்டமும் வரலாம். அதை எண்ணிக்கொண்டிருந்தால் தொழில் நடத்துவது எப்படி? தைரியமாக இறங்க வேண்டியதுதான். இவ்வாறு துணிந்து தோட்டங்களுக்கு முண்பணம் கொடுத்துவிட்டு ஒரு கடையை உயர்ந்த வாடகையில் அமர்த்தினேன்.
நான் பூக்கடை முதலாளி ஆனது பற்றி சுந்தரிக்கு ரொம்ப சந்தோஷம். தினமும் அவளுடைய அழகிய கூந்தலை அலங்கரிக்கப் புஷ்பம் கொண்டுபோய்க் கொடுப்பேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகுடன் பிரகாசிப்பாள். அண்டை அயலில் உள்ளவர்கள் சுந்தரியைப் போற்றிப் புகழ்வார்கள். “புருஷன் மனைவி யென்றால் இப்படியல்லவா ஒற்றுமையாக வாழவேண்டும்.” என்று கூட அநேகர் சுந்தரியின் காதில் விழும்படி சொல்லிக் கொண்டார்களாம்.
அன்று, என் முதல் மனைவியையும் ஆஸ்தியையும் இழந்துவிட்டு இருந்த நிலமை என்ன! இன்று, சுந்தரியின் கணவனாக சகல சம்பத்துடன் முதலாளி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் நிலமை என்ன! ஏதோ ஒரு பூகம்ப அதிர்ச்சியினால் மடு இருந்த இடத்தில் மலை தோன்றியது போல அல்லவா இருக்கிறது என் வாழ்க்கையில் நடந்த மாறுதல்.
நல்ல வளமுள்ள சீமைக்குத்தான் வந்திருக்கிறேன். முருகன் “அப்பா, அம்மா” என்றுகூடப் பேச ஆரம்பித்து விட்டான். சுந்தரி இதற்குள்ளாகவே அவனுக்குச் சங்கீதம் கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறாள். என் வாழ்க்கை இன்பப் பொழிலாகவே இருக்கிறது. சுந்தரி என் சௌகர்யத்துக்காக எவ்வளவு கவலைப்படுகிறாள். சில வேளைகளில் எனக்குக் கோபம்கூட வந்துவிடுகிறது அவள்மேல்! “வேர்க்கடலைப் பண்டம் சாப்பிடக்கூடாது, தண்ணீரில் குளிக்கக்கூடாது” என்று டாக்டர் மாதிரிச் சொல்லிக் கொண்டிருந்தால் நான் என்ன செய்வது?
வியாபாரத்தில் அதிக லாபம் ஒன்றும் வரவில்லை. புஷ்பங்கள் ஏராளமாக வந்து குவிந்துகொண்டிருந்தன. பாதி தான் விலைபோகிறது. பாதி அப்படியே வீணாய்விடுகிறது. நான் கடை ஆரம்பித்த சமயம் புஷ்பத்தின் விலை மலிவாகவே இருந்தது.
புஷ்ப வியாபாரம் இன்னும் ஆறு மாத காலம் வரை இப்படித்தானிருக்குமென்று அனுபவப்பட்டவர்கள் சொன்னார்கள். நானும் ஆறுமாதம் பொறுத்துப் பார்த்தேன். வியாபாரம் அதிகரித்தது. ஆனால் தோட்டங்களிலிருந்து ஒப்பந்தப்படி பூக்கள் வந்து சேரவில்லை, இம்மாதிரி இடைஞ்சல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. நானும் எவ்வளவோ பிரயாசைப்பட்டுப் பார்த்தேன். புஷ்ப வியாபாரம் செய்வதைவிட பூந்தோட்டம் வைத்துப் பயிர் செய் வது லாபகரமாகத் தோன்றியது. தோட்டப்பயிரில் எனக் குச் சிறிது அனுபவமும் உண்டு. ஆரம்பத்திலேயே ஒன்றிரண்டு தோட்டங்களை வாங்கிப் பயிர் செய்திருந்தால் இதற்குள்ளாக எவ்வளவோ பணம் சேர்த்திருக்கலாம். நடந்துபோனதைப்பற்றி யோசித்து என்ன பயன் ? இனி நடக்கப்போவதையல்லவா யோசனை செய்யவேண்டும்.
பூந்தோட்டம் வைப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் கடையை யார் வாங்குகிறார்கள்! இதன் மூலம் கொஞ்சம் நஷ்டம் ஏற்படுகிறது. தோட்டம் அகப்படுவதும் கஷ்டம்தான். இந்தக் கஷ்டங்களையெல்லாம் சுந்தரியிடம் சொல்லி அவளையும் வருத்தப்படும்படி செய்யக்கூடாது. கடையைவிடத் தோட்டத்தில் அதிக லாபம் வருமென்றுதான் சொல்லவேண்டும். வாழ்க்கைக்கு ஒரு பிடிமானம் இல்லாமல் பணம் மட்டும் கரைந்துகொண்டு போவதைப் பார்த்தால் ஒரு விதத்தில் எனக்குக் கவலையாகத் தானிருக்கிறது.
இதுவரையில் எங்கள் இருப்பிடத்தைச் சுந்தரியின் தாயாரோ என் அக்காளோ கண்டுபிடிக்கவில்லை. கண்டு பிடிக்க முடியவா போகிறது! அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. என் குடும்பத்தைப்பற்றிய கவலை சுந்தரியின் துணையினால் அடியோடு நீங்கிவிட்டது. அதைப், பாதுகாக்கும் வழியைத்தான் நான் நன்றாக ஆராயவேண்டும்.
தோட்டப்பயிர் செய்யப்போகிறேன் என்றால் சுந்தரி வருத்தப்படுவாள். நான் கஷ்டப்பட்டு உழைப்பேன் என்றால் அவளுக்கு மனம் கேட்காது. ஆகையால் தோட்டம் வாங்கி ஆட்களை வேலைக்கமர்த்திப் பயிர் செய்யப்போகிறேனென்று அவளிடம் ஒரு பொய் சொல்லவேண்டும்.
நாளைக்கே இதற்கான முயற்சிகளைச் செய்யவேண்டும். எதிர்காலம் விதியின் கையில் அல்லவா சிக்கியிருக்கிறது.
6 – சாரதாம்பாள்
இப்படியும் ஒரு பெண் உண்டா? எத்தனை அருமை யாக வளர்த்தேன். எவ்வளவு கஷ்டப்பட்டு அவளுக்கு நாட்டியமும், சங்கீதமும் கற்றுக் கொடுத்தேன். ஐயோ! என் முயற்சியெல்லாம் விழலுக் கிறைத்த நீராகி விட்டதே! என் பெற்ற மனம் எப்படித் துடிக்கிறது.
சுந்தரி, உன் மனதிலுள்ளதை நான் அறிய முடியாமல் போய் விட்டதே. கேவலம் ஒரு காசு பெறாத அந்த வடிவேலுவுடனா நீ ஓடிப்போக வேண்டும்! ஆஹா! நான் எவ்வளவு மதிப்புடன் வாழ்ந்து வந்தேன். எனக்கா இந்த அபகீர்த்தி வரவேண்டும். “சாரதாம்பாளின் மகள் சுந்தரி அற்பன் வடிவேலுவுடன் ஓடிப்போய் விட்டாள்” என்று ஊரார் பேசிக்கொள்வதை என் காதுகள் கேட்கும்படி காலம் வந்துவிட்டதே! என் விதிதான்.
தனிமை! தனிமையிலேயே நான் ஏங்கி ஏங்கிக் சாக வேண்டியதுதானா ? எத்தனையோ பேர் வந்து இதைப் பற்றித் துக்கம் விசாரித்து விட்டுப் போய்விட்டார்கள். இதனாலெல்லாம் ஆறிவிடுமா என் மனப்புண்?
“சுந்தரியை நான் தேடிக்கொண்டு வருகிறேன்” என்று அநேகம்பேர் பணத்தை வாங்கிக்கொண்டு போனார்கள்.
அவர்களெல்லாம் திரும்ப வந்து கையை விரித்து விட்டார்கள். சுந்தரியை இனி நான் காணமுடியுமென்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
வடிவேலுவை அடையவேண்டுமென்ற கவலைதானா அத்தனை நாளாக அவளை வாட்டி வந்தது? இந்த விஷயம் தெரிந்திருந்தால் வடிவேலுவை என் வீட்டிலேயே அவளுக்குப் பணியாளாக அமர்த்தியிருப்பேனே! ஜமீன்தார் மக்களெல்லாம் சுந்தரியின் கடைக்கண் பார்வைக்காகத் தவம் செய்து கொண்டிருக்கையில் இந்த வடிவேலுவைப் பணிய வைப்பதுதானா பெரிய காரியம்! ஐயோ பைத்தியக்காரப் பெண்ணே! உன்மனம் போனபடியெல்லாம் இங்கு சுதந்திரமாக வாழ்வதைவிட்டு ஒரு கேடு கெட்டவன் பின் ஓடினாயே! உன் காலாலிட்ட வேலையை இரண்டு கைகளாலும் செய்வதற்கு எத்தனை பேர் காத்திருக்கிறார்கள். நீ எங்கு சென்று அவனோடு கஷ்டப்படுகிறாயோ! தவளை பாம்பின் வாயைச் சரணடைந்தது போலல்லவா இருக்கிறது உன் செய்கை. நீ எவ்வளவு புத்திசாலியாக இருந்தாய்! உன் புத்தி இப்படி விபரீதமாக ஏன் திரும்பியது வடிவேலு இங்கு எப்படி வந்தான்? என் சுந்தரியின் மனதை எப்படிக் கலைத்தான்? இதையெல்லாம் என்னால் யூகிக்க முடியவில்லையே! நெடு நாளைய ஆலோசனையின் பேரில் புறப்பட்டார்களோ அல்லது அவன் திடீரென்று என் மகளின் மனதைத் திருப்பி விட்டானா? வடிவேலு பலமான திட்டம் போட்டுக் கொண்டு தான் தன் குழந்தையையும் எடுத்துக் கொண்டு போயிருக்கிறான்.
பெண்டாட்டியை இழந்தவன். பணமும் போய்விட்டது. யோக்கியன் போலத்தான் நடித்துக் கொண்டிருந்தான். சுந்தரியைப் பிடித்தால் பணக்காரனாகிவிடலா மென்று அவனுக்குத் தோன்றியிருக்கும். என் வீட்டிலேயே வந்து தங்கி விட எண்ணியிருப்பான். சுந்தரியிடமும் கேட்டிருப்பான். நான் இதற்குச் சம்மதிக்க மாட்டேனென்று சுந்தரி சொல்லியிருப்பாள். அதன் மேல் இந்த மாதிரிப் பணத்தோடு ஓடிப்போகும் நாசகார யோசனையை அவன் வெளியிட்டிருப்பான். இந்தப் புத்தி கெட்ட பெண் அவன் பேச்சில் மயங்கிப்போய் ஓடியிருக்கிறாள்.
அவன்தான் சொன்னான்; இந்த சுந்தரிக்குத் தன் தாயைப்பற்றிக் கொஞ்சம்கூட எண்ணமில்லையா? நான் உன்னை நம்பி உயிர் வாழ்ந்தேனடி! இனி உன்னை மறந்து நான் எப்படி உயிர்வாழ்வது? சாப்பாடு என்று சரியாகச் சாப்பிட்டு எவ்வளவு காலமாயிற்று. இன்னும் நான் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேனே! எதற்கு? உன்னையே நினைத்து நினைத்து ஏங்குவதற்குத்தானா? நான் எப்படியெல்லாம் மனக்கோட்டைகள் கட்டினேன். அத்தனையும் தகர்ந்து பாழாய் விட்டதே!
குஞ்சரத்தின் வீடு மூன்று மாடிஉள்ளதுதானே! உன் காலத்தில் அவளுக்கு மேலாக நான்கடுக்கு மாடிவீடு கட்டி அதில் நீ ஒய்யாரமாக வாழ்வதை நான் கண்ணாரக் காண நினைத்திருந்தேனே! அதற்கா இப்படிச் செய்தாய்? உனது நடனத்தைப்பற்றி நாடு முழுவதும் புகழவேண்டு மென்று நான் கனவு கண்டு கொண்டிருந்தேனே! அதற்கா என்னை இப்படித் தவிக்கவிட்டிருக்கிறாய்? ஒரு வேளை கடவுளுக்கே என் பேராசைகளைக்கண்டு கோபம் ஏற்பட்டு விட்டதோ! நான் பேராசை ஒன்றும் படவில்லையே! ரூப சௌந்தர்யத்தையும், கலைத் திறமையையும் கடவுள் என் மகளுக்குப் பரிபூரணமாகக் கொடுத்திருந்தார். இதன் காரணமாக நான் எவ்வளவோ ஆசைப்படலாமே!
பொறாமைக்காரிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்! “உனக்கென்னம்மா! சுந்தரியை வைத்துக்கொண்டு லக்ஷ லக்ஷமாய் சம்பாதித்து விடுவாய்” என்றாளே குஞ்சரம். நான் அன்று அதைக் கேட்டுப் பெருமையல்லவா அடைந்தேன். எத்தகைய பொறாமையோடு அவள் இந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்க வேண்டும். சுந்தரிக்குத் திருஷ்டி தோஷம் வந்துவிடக்கூடாது என்று தாயத்துக்களெல்லாம் மந்திரித்துக் கட்டியிருந்தேனே! அன்று சபையில் எத்தனையோ பாவிகள் நினைத்திருப்பார்கள் “சாரதாம்பாளைப்போல யோகக்காரி கிடையாது; சுந்தரியின் மூலம் அவள் எவ்வளவோ மேன்மையடைவாள்” என்று. அந்தப் பாவிகளின் எண்ணத்தினால்தானோ என்னவோ நான் சுந்தரியையே இழந்து தவிக்கிறேன். குஞ்சரத்திற் கெல்லாம் இப்பொழுது மனம் ரொம்ப நிம்மதியாக இருக்கும். சுந்தரியைப் பதினைந்து வயது வரை அருமையாக வளர்த்தும் அதன் பலனை அடைய முடியாது போயிற்று. முன் ஜென்மத்தில் நான் இம்மாதிரி யாரையாவது தவிக்க விட்டிருப்பேன்.
காரணத்தைக் கண்டுபிடித்து விட்டால் கவலை ஓய்ந்து போகிறதா? உடம்புதான் தேய்ந்துகொண்டே வருகிறது. கிழக்கட்டை இனி எப்படி இருந்தால் என்ன? எப்பொழுதாவது சுந்தரி மனமிரங்கி என்னைக்காண வரமாட்டாளா? வருவாளென்ற நம்பிக்கையில்லை. இருந்தாலும் ஆசைக்கயிற்றில் மனம் ஊசலாடுகிறது. எத்தனைதான் கஷ்டங்கள் வந்தாலும் இந்த ஊருக்குப் பழையபடி திரும்புவாளா அவள்? ரொம்ப மானமுடைய பெண்ணாச்சே! பாவி வடிவேலு அவளை என்ன பாடு படுத்துகிறானோ! பணத்தைப் பறித்துக்கொண்டு அவளை எங்காவது பரதவிக்க விட்டு விட்டானோ என்னவோ!
முந்தாநாள் ஒரு பிச்சைக்காரி தன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள். யாரோ ஒரு காதலனுடன் வீட்டிலிருந்து ஓடிவந்துவிட்டாளாம். நடுவழியில் அவளை ஏமாற்றிவிட்டு அவன் எங்கோ ஓடிப்போய் விட்டானாம். அதிலிருந்து அவள் நிர்க்கதியாக எங்கெங்கோ வேலை செய்து பிழைத்தாளாம். கடைசியாக உடம்பில் வலுவில்லாமல் பிச்சையெடுக்க வந்துவிட்டாளாம். தன் சொந்த ஊருக்குப்போக மனம் வரவில்லையாம் அவளுக்கு. இந்த மாதிரியான வரலாறுகளை நான் எத்தனையோ பிச்சைக்காரர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் முந்தா நாள் அந்தப் பிச்சைக்காரி சொல்லிய சம்பவங்கள் என் மனதில் என்னென்னவெல்லாமோ கற்பனைகளைக் கிளறிவிட்டது.
எங்கோ ஒரு ஊரில் வடிவேலு என் மகள் சுந்தரியை விட்டுவிட்டு ஓடிவிடுகிறான். சுந்தரி அவனைக் காணாது தேடியலைகிறாள். பழையபடி ஊருக்குவர வெட்கப்பட்டு அங்கேயே ஒரு சோற்றுக்கடையில் வேலை பார்க்கிறாள். பலர் அவளை ஏமாற்றிக் கெடுக்க முயற்சிக்கிறார்கள். அதைக்கண்டு சுந்தரி அங்கிருந்து ஓடுகிறாள். வயிற்றுப் பசியினால் அழகையும் இழந்து வருந்திப் பிச்சை எடுக்கிறாள். எங்கோ ஒரு வீட்டில் தன் கதையைச் சொல்லிப் பிரலாபிக்கிறாள். அந்த வீட்டம்மாள் கொஞ்சம் சோறு போடுகிறாள்…! இப்படியெல்லாம் என் கற்பனைச்சுழல் போய்க்கொண்டே இருந்தது. நல்லவிதமான கற்பனைகளின்படி காரியம் நடப்பது அபூர்வம். கெட்டவிதமாகக் கற்பனை செய்தால் அது பலித்தேவிடுகிறது. நான் சுந்தரியின் தற்போதைய வாழ்க்கையைப்பற்றிக் கற்பனை செய்தது உண்மையாகவே நடந்திருந்தால்! ஏன்தான் நான் இப்படியெல்லாம் கற்பனை செய்து வருந்தவேண்டும்! சுந்தரியின் விதி அப்படியிருந்தால் அதை நான் தடுத்து நிறுத்த முடியுமா? பெற்ற மகள் என்ற பாசம் என்னை எவ்வளவு வாட்டிவிட்டது!
பாசம் ஒருபுறமிருக்கட்டும் பரம்பரையாக வளர்த்து வந்த கலை என்னோடு முடிந்துவிடுமே! சுந்தரி கற்றுக் கொண்ட கலை இனி அபிவிருத்தியடையவா போகிறது? அவள் வழியே வேறாகப் போய்விட்டதே! என் கலைத்திறமையைப் பின்வரும் சந்ததிகள் அடைய முடியாமல் செய்து விட்டாள் மகள் என்னும் பாவி! என் கலையின் பரம்பரைத் தொடர் அறுந்துவிட்டது. வேறு புத்திரிகள் இருந்தாலாவது கலையைப்பற்றி ஒருவித ஆறுதல் எனக்கிருக்கும். ஒரே மகளுக்கு என் திறமை அத்தனையையும் காட்டிப் போதித்தேன். சுந்தரி இப்படி வியர்த்தமாக்குவாள் என்று தெரிந்திருந்தால் நான் அள்வளவு சிரத்தையுடன் அவளுக்கு நாட்டியம் கற்பித்திருப்பேனா? எத்தனையோ நாட்டியக்காரிகள் முயன்று முயன்று தோல்வியைக் கண்டிருக்கிறார்கள். ஆனால் சுந்தரிக்கு நாட்டியமும் சங்கீதமும் எவ்வளவு எளிதாக வந்துவிட்டது. அவளும் அசட்டையில்லாமல் கலையைப் போற்றிவந்தாளே! சுந்தரி, கலைப்பணி செய்வதற்காகவாவது நீ இங்கிருக்கக்கூடாதா? கலையோடு கலந்த வாழ்வு உனக்கு அதிர்ஷ்ட வசத்தால் கிடைத்தது. நீ அதை உதறித் தள்ளிவிட்டு அற்ப வாழ்வு வாழப் போய்விட்டாய்! கலை போயிற்று. நம் கௌரவம் போயிற்று. இனி என் வாழ்வு அவல வாழ்வுதான்! என் உயிருள்ளவரை சுந்தரியைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொண் டேயிருக்கவேண்டியதுதான். என் சொத்து, சுகம் எல்லாம் என்னோடு பாழாகிவிடும். என் சந்ததி என்னோடு அற்றுப்போய்விட்டது. இப்பொழுது வாழ்க்கையில் எனக்கு நிம்மதி ஒன்று மட்டும் கிடைத்தால் போதுமென்று ஏங்குகிறேன். துக்கக்கடலில் ஆழ்த்தப்பட்டிருக்கும் எனக்கு நிம்மதி என்னும் கரை தென்பட எவ்வளவு காலம் ஆகுமோ! அல்லது கரையே தென்படாது போய்விடுமோ என்னவோ!
– தொடரும்…
– வளர் பிறை (நவீனம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1946, கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை ஸ்டேட்.
![]() | சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம் தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். நன்றியுரை "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க... |
