வளர் பிறை
கதையாசிரியர்: மாறன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2026
பார்வையிட்டோர்: 1,871
(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
10. முருகன்

வீட்டைவிடப் பள்ளிக்கூடம் எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. சேர்ந்து விளையாடுவதற்கு நிறையப் பிள்ளைகள் இருக்கிறார்கள். என் சட்டையையும் பூட்ஸையும் பார்த்து அநேக பிள்ளைகள் என்கூட ரொம்ப சிநேகமாகி விட்டார்கள். நான் தினமும் ஏதாவது தின்பண்டம் கொண்டு போவேன். அதற்காகப் பல பையன்கள் என் பின்னாலேயே சுற்றுவார்கள். விளையாட்டுக்களில் அடிக்கடி நான்தான் தலைமை வகிக்கிறேன். வாத்தியார் என்னை அடிப்பதே இல்லை. நான் தப்பிதம் செய்தாலும் அதட்டவே மாட்டார். எப்பொழுதும் பள்ளிக்கூடத்திலேயே இருந்து விடலாம் போல் இருக்கிறது.
பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவரக் கொஞ்சம் நேரமாகிவிட்டால் அம்மா பள்ளிக்கூடத்துக்கு ஆள் அனுப்பி விடுவாள். எனக்கு லேசாக உடம்பு சுட்டால் உடனே டாக்டரைக் கூட்டிக்கொண்டு வருகிறாள். என்னை யாராவது தொட்டால் போதும், உடனே அவர்களோடு பேசக் கூடாது என்று எனக்குப் புத்திமதி சொல்வாள். என் சட்டை கொஞ்சம் அழுக்காகிவிட்டால் உடனே வெளுத்த சட்டை போட்டுவிடுவாள் எனக்கு.
என்னைக் கடைத்தெருவிற்கும், பூந்தோட்டத்திற்கும் அழைத்துப்போவதில் என் அப்பாவிற்கு மிகவும் இஷ்டம். பூந்தோட்டத்தில் அப்பாவே கஷ்டப்பட்டு வேலை செய்வார். நானும் வேலை செய்வதைக் கண்டு அவர் சந்தோஷ மடைவார். தோட்டத்திற்குள் போனவுடன் ஒரு ரோஜாப் பூவைப் பறித்து என் சட்டையில் சொருகிவைப்பார். பிறகு தோட்டத்திற்கு, வேலையாளோடு தண்ணீர் பாய்ச்சுவார். மண்ணைக் கொத்திக் கொடுப்பார். பூக்களைப் பறித்துக் கூடையில் போட்டு வேலையாளைக் கடைத்தெருவுக்கு அனுப்பிவிட்டு நானும் அவரும் வீட்டுக்கு வருவோம்.
அம்மா, “நீங்கள் ரொம்பக் களைப்படைந்திருக்கிறீர்களே! தோட்டத்தில் ஏதாவது வேலை செய்தீர்களா?” என்று அப்பாவைப் பார்த்துக் கேட்பாள். “அதெல்லாம் ஒன்றுமில்லையே, அங்கிருந்து நடந்து வந்தது தான் கொஞ்சம் களைப்பாயிருக்கிறது” என்று அம்மாவிடம் பொய் சொல்லுவார். பொய் சொல்லக்கூடாது என்று எனக்குப் புத்திமதி சொல்பவர் தான் மட்டும் ஏன் இப்படிப் பொய் சொல்ல வேண்டும்? எனக்கு இது புரியவில்லை.
இன்னும் சிலநாளில் எனக்குத் தம்பியோ தங்கையோ பிறக்கப் போகிறது! எனக்கு வீட்டில் விளையாட ஆள் கிடைத்துவிடும்.
11. வடிவேலு
பூந்தோட்டம் வாங்கி ஆறுமாதமாயிற்று. அதில் என் முழு உழைப்பையும் காட்டிவருகிறேன். இருந்தாலும் மாதம் இருபது இருபத்தைந்துக்கு மேல் அதில் வரும்படி கிடைக்கவில்லை. மண்ணிலுள்ள வளமெல்லாம் போன பிறகுதான் நான் அதை வாங்கியிருக்கிறேன். உரம் போட்டு நிலத்தைச் செழுமையாக்கி விடலாமென்று பார்த்தால் இன்னும் ஐநூறு ரூபாயாவது வேண்டியிருக்கும். பணம் போனாலும், அதற்குப் பதிலாக நிலமாவது கையில் தங்குமே என்று கையிலிருந்த பணத்தைக் கொடுத்துத் தோட்டத்தை வாங்கினேன். வாங்கி என்ன செய்வது! பலனில்லா நிலம்!
மாதம் இருபது இருபத்தைந்து சம்பாதிப்பதற்காக இவ்வளவு முதல் போட்டு இப்படிக் கஷ்டப்பட வேண்டியதில்லை. இதெல்லாம் சுந்தரிக்குத் தெரிந்தால் மனம் வருந்துவாள். வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக நான் எவ்வளவோ முயற்சிக்கிறேன். ஆயினும் எடுத்ததெல்லாம் வீணாகிறதே!
பெண் குழந்தை வேறு பிறந்திருக்கிறது. சுந்தரியின் பிரசவத்திற்காக நிலத்தின் மீது இருநூறு ரூபாய் கடனும் வாங்கியாயிற்று. கடனைத் திரும்ப எப்படி அடைப்ப தென்பதைப்பற்றி இப்பொழுது யோசிக்கக்கூட எனக்கு அவகாசமில்லை. ஓயாது உழைத்து உழைத்து என் உடல் வலுவிழந்துவிட்டது. சிறிது காலம் ஓய்வெடுக்க ஆவலாயிருக்கிறது. ஆனால் இப்பொழுது வீட்டுச் செலவுக்குப் பணம் வேண்டுமே!
முதலிலேயே ஆடம்பரமான செலவுடன் எங்கள் குடும்பம் ஆரம்பித்துவிட்டது. செலவுகளைக் குறைக்க வேண்டுமென்றால் கஷ்டமாகத்தானிருக்கிறது. நான் பணத்திற்காகக் கஷ்டப்படுவதை அறிந்தே சுந்தரி வீட்டுச் செலவுகளைக் குறைத்துக் கொண்டாள். எப்படியானாலும் வரவைவிடச் செலவு அதிகப்படியாகத்தான் ஆகிறது.
பாடப் புஸ்தகம் வேண்டுமென்று முருகன் எத்தனையோ நாளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறான். அன்றாடம் பூவிலிருந்து கிடைக்கும் முக்கால் ரூபாய், ஒரு ரூபாயைக் கொண்டு வீட்டுக்கு அவசியமான சாமான்களை வாங்குவதா ? முருகனுக்குப் புஸ்தகம் வாங்குவதா? எனக்கு நல்ல வேஷ்டிகள் ஒன்றுமில்லை. சுந்தரிக்கும் துணிமணிகள் எடுக்க வேண்டும். அதைப்பற்றி அவள் ஒன்றுமே என்னிடம் கேட்டதில்லை. நாலைந்து நாள் வருமானத்தைச் சேர்த்து வைத்து அவளுக்கு ஒரு சேலை வாங்க வேண்டுமென்றால், தினமும் இப்படியே தான் கழிந்து கொண்டிருக்கிறது. யோசித்து யோசித்து என் மூளையும் என் தோட்டம் போலவே வரண்டு விட்டது. சுந்தரி என்கையில் ஒப்படைத்த இரண்டாயிரம் ரூபாயும் கரைந்து போய் விட்டது. இதைப்பற்றியும் பிரசவச் செலவுக்காகக் கடன் வாங்கி யிருப்பதைப் பற்றியும் நான் சுந்தரியிடம் சொல்லவே இல்லை. சொன்னால் அவள் என்ன நினைத்துக் கொள்வாளோ! பேதைப்பெண் என்னை நம்பி வந்ததோடு, தன் பணத்தையும் என் கையில் ஒப்படைத்தாள். வாழ்க்கையைப் புதுப்பிக்க வந்தாள்; நான் அவளைக் கஷ்டதசையில் கொண்டு வந்து விட்டேன். ஆனால் நான் வேண்டுமென்று அவளுக்கு ஒரு தீங்கையும் நினைக்கவில்லை. விதிதான் என்னை இப்படிச் சோதிக்கிறது. என் சம்பாத்தியக் குறைவினால் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. சுந்தரியின் உடம்பு வரவர மிகவும் இளைத்துக் கொண்டே வருகிறது. முருகனுடைய படிப்புக் கெடுகிறது. கைக்குழந்தை தாயைப் போலவே மிக அழகாக இருக்கிறது. குழந்தைக்கு எவ்வளவோ நகைபோட்டுப் பார்க்க வேண்டுமென்று ஆவலாக இருக்கிறது. ஆவல் மட்டும் இருந்தால் போதுமா? பணம் வேண்டுமே!
அக்கம் பக்கத்திலுள்ள பெண்கள் சொந்த உறவினர்கள் போல வந்து சுந்தரிக்கு உதவுகிறார்கள். அந்த மட்டிலும் நான் மிகவும் பாக்யசாலி தான். சுந்தரியின் அன்பினால் எத்தனையோ பெண்கள் அவளுக்கு உயிர்த் தோழிகளாக ஆகிவிட்டார்கள். எவ்வளவு தான் பணத்தை அள்ளிக் கொடுத்தாலும் இத்தனை அன்பான உதவிகளை எதிர் பார்க்க முடியாது. பணத்தினால் செய்ய முடியாததை அன்பினால் செய்யமுடியும் என்பதைச் சுந்தரி எனக்கு நிதரிசனமாகக் காட்டிவிட்டாள்.
முருகனுக்குத் தாயைப் போலவே நல்ல பழக்கங்க ளெல்லாம் அமைந்துவிட்டன. எல்லோரும் அவனிடம் பிரியமாக இருக்கிறார்கள். முருகன் பிறரிடம் அன்பாக வும் பணிவோடும் பேசுகிறான். எதிர்காலத்தில் அவன் மிகவும் கண்ணியமாகவும், யோக்கியமாகவும் வாழ்க்கை நடத்துவான் என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியுமல்லவா! அவனுடைய படிப்புத்தான் எப்படி நடக்குமோ தெரியவில்லை. மேல் படிப்பெல்லாம் படிக்கவைக்க வேண்டுமென்று எனக்கும் சுந்தரிக்கும் எண்ணம்.
வருகிற வருமானத்தைப் பார்த்தால் சாப்பாட்டுச் செலவுக்கே போதாமலிருக்கிறது. வரும்படியை அதிகப்படுத்த மார்க்கமுமில்லை. இம்மாதிரியே எவ்வளவு காலம்தான் காலங்கழிக்க முடியும். திடீரென்று ஒருநாள் வியாதியினால் படுத்துக் கொண்டால் செலவுக்குப் பணம் இல்லாமல் போய்விடும். சுந்தரி என்ன செய்வாள்! முருகன் என்ன செய்வான்! சம்சாரம் ஒரு சாகரமென்பது சரியாகத் தானிருக்கிறது!
எனது பொக்கிஷ நிலைமையைப்பற்றி சுந்தரியிடம் இப்பொழுதே சொல்லிவிட வேண்டியதுதான். இல்லையானால் என்னைப்பற்றி அவள் தவறாக எண்ணிக் கொள்வாள். தன்னைப்போல் அழகிய பெண் குழந்தையைப் பெற்ற மகிழ்ச்சியில் சுந்தரி பூரித்துப் போய் இருக்கிறாள். அவளிடம் எப்படி என் பொருளாதார நிலைமையைச் சொல்வது! எத்தனையோ தடவை அவளிடம் சொல்ல வாயெடுத்தேன். ஆனால் என்னை அறியாமலேயே பேச்சை மாற்றி விடுகிறேன்.
குழந்தையின் சிரிப்பை நாள் முழுதும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. சுந்தரிக்குக் குழந்தையைத் தவிர வேறு மனிதர் உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. எப்பொழுதும் குழந்தையைப் பற்றியே பேச்சு, நினைப்பு எல்லாம்! அவள் விரும்பியபடியெல்லாம் அதற்கு உடைகள், நகைகள் வாங்கினேன். எல்லாம் கடன் வாங்கித்தான். நான் கடன் வாங்கிச் செலவு செய்கிறேன் என்பதைச் சுந்தரி கண்டாளா? பூந்தோட்டம் திடீரென்று பணத்தை அள்ளிக்கொடுக்கிறது என்றுதான் அவள் நினைத்துக் கொண்டிருப்பாள். எனக்குக்கூட குழந்தையைக் கண்டவுடன் கடன் கவலையெல்லாம் பறந்து விடுகிறது.
சுந்தரி சங்கீதத்தில் லயித்தவளாதலால் மோகன ராகத்தின் பெயரையே தன் குழந்தைக்குச் சூட்ட வேண்டு மென்றாள். நான் என்ன வேண்டாமென்றா சொல்வேன். அன்று முதல் குழந்தையை மோகனா என்றே கூப்பிட்டு வருகிறோம். சங்கீதத்தைப் போலவே குழந்தை எங்களுக்கு இன்பமளித்துக் கொண்டிருக்கிறது. பக்கத்து வீட்டுப் பெண்கள் தன் குழந்தையை எடுத்து வைத்துக்கொண்டு மோகனா என்று கொஞ்சினால் போதும். சுந்தரியின் மகிழ்ச்சிக்கு எல்லையே காணமுடியாது.
பணத்தைப்பற்றிய கவலை ஒன்றைத் தவிர மற்றப்படி வீடு குதூகலமாக இருக்கிறது. கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து எங்கள் இன்ப வாழ்வைப் பாழ்படுத்திவிடுவார்களோ என்று என் மனம் அடிக்கடி வாதிக்கும். என்னைப் பற்றிக்கூட நான் அதிகமாகக் கவலைப்படவில்லை. எப்பாடு பட்டாகிலும் என் ஜீவனத்திற்குப் பார்த்துக் கொள்வேன். பொறுமையோடு என்னைப் பற்றிய கஷ்டங்களைப் சகித்துக் கொள்வேன். ஆனால் சுகபோகத்தில் வாழ்ந்த சுந்தரியும், கவலையற்று வாழவேண்டிய இரண்டு குழந்தைகளும் பொருளாதாரக் கஷ்டத்தினால் எவ்வளவோ பாதிக்கப்படுகிறார்களே என்பதுதான் என் ஓயாக் கவலை. துன்பத்திற்கும் ஒரு முடிவு உண்டல்லவா! எப்படித்தான் என் கவலைகள் நீங்குகிறதென்று பார்ப்போம்.
12. சுந்தரி
என் கணவர் தன் பணக் கஷ்டத்தைப்பற்றி என்னிடம் சொல்வதற்கு எவ்வளவு தயங்கினார். என் பணம் இரண்டாயிரத்தையும் காலி பண்ணிவிட்டதாகக் கண்ணீர் வடித்தார். எனக்கு என்னவோ போலிருக்கிறது. இதற்காக அவர் இவ்வளவு வருந்துவானேன். அவர் கெட்ட வழிகளில் ஒன்றும் பணத்தை வீணாக்கிவிடவில்லை யென்பது தான் எனக்கு நன்றாகத் தெரியுமே! ஏதோ வியாபாரத்திலும், பூந்தோட்டத்திலும் பணம் நஷ்டமாய்விட்டது. அதனால் என்ன? பண நஷ்டத்தைப்பற்றி அவரைப் போல் என்னால் துக்கப்பட முடியவில்லை.
ஐநூறு ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகச் சொல்லி வருத்தப்பட்டார். கடன் வாங்கியது குடும்பத்திற்காகத் தானே! இந்தக் கடனை அடைக்க முடியாமலா போய் விடும். ஒரு சமயம் பணத்திற்குக் கஷ்டமாக இருக்கும். எப்பொழுதும் இப்படியே இருந்து விடுமா? ஓடுகிற காலம் ஓடினால் கூடுகிற காலத்தில் கூடுகிறது. இந்தச் சமயத்தில் நான் அவருக்கு ஆறுதல் சொல்லாமல் அவரோடு சேர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அவர் மனமுடைந்து போவார்.
என் ஒட்டியாணத்தை விற்றுக் கடனை அடையுங்கள் என்றால் முடியவே முடியாது என்று சாதிக்கிறார். இதனால் எனக்கு ஏதோ பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடு மென்று அவர் கவலைப்படுகிறார். அவர் நினைக்கிறபடி நான் ஒன்றும் இதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. பெட்டியிலேயே பூட்டிவைத்திருக்கும் ஒட்டியாணத்தைக் குடும்பக் கஷ்டத்தை நீக்குவதற்காக விற்பதில் என்ன குற்றம்? என் பணத்தையெல்லாம் அவர் நஷ்டப் படுத்திவிட்டாராம். இன்னும் நகைகளையும் பாழாக்கிவிட இஷ்டமில்லையாம். எப்படியாவது தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்துக் கடனை அடைத்துவிடுவாராம். இவருடைய அன்பினால் வருவது கெடுதலே ஒழிய நன்மையில்லை யென்பதை நான் எவ்வளவோ சொல்லிவிட்டேன். அவர் கேட்கவே மாட்டேனென்கிறார். அவர் சொல்கிறபடி எப்படி நடக்க முடியும்? குடும்பக்கவலை, கடனைப்பற்றிய தொந்தரவு இவைகளையே சிந்தித்துக் கொண்டிருந்தால் எப்படி ஒரு முயற்சியைச் செய்யமுடியும்! தோட்டத்தின் மூலம் இப்பொழுது கிடைக்கும் வரும்படி குடும்பச் செலவுகளுக்குப் போதாதென்று தெரிகிறது. தோட்டத்திற்குப் பணம் செலவழித்து உரம் போட்டுப் பண்படுத்தினால் தானே அது உழைப்பிற்குத் தக்க பலனைக் கொடுக்கும்! கற்பாறையில் முட்டுவதுபோல, வளம் கெட்டுப்போன வீண் நிலத்தில் பாடுபட்டு என்ன செய்வது! இவர்தான் தோட்டவேலை முழுவதையும் செய்து வருகிறாராம். பகல் முழுவதும் வியர்க்க விறுவிறுக்க உழைத்து வேலை செய்து வருவதனால் தான் அவருடைய உடம்பு இப்படி இளைத்துப் போகிறது. அவருடைய உழைப்பிற்குத் தக்கபடி ஆகாரம் உண்பதில்லை. கவலையை நாம் அடக்கி ஆளாவிட்டால், அது நம்மையே விழுங்கிவிடும் என்பதை அவர் தெரிந்து கொள்ள மாட்டேனென்கிறார். அவருடைய மனச்சாக்ஷி ரொம்பவும் பொல்லாதது. எதற்கெடுத்தாலும் தன்னையே குறை கூறிக்கொள்ளுகிறார். என்னைப் பல துன்பங்களுக்குள்ளாக்கிவிட்டதாக அவர் எண்ணிக்கொண்டிருக்கிறார். அவருடைய இந்தப் பைத்தியக்கார எண்ணத்தை எப்படி மாற்றுவதென்றே எனக்குத் தெரியவில்லை. எனக்கு மனோ சமாதானத்தைக் கொடுத்து, என் லட்சியத்தை நிறைவேற்றி வைத்த தீர புருஷனென்று நான் எப்பொழுதும் மனதிலேயே அவரைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கையில் எனக்காக அவர் ஏன் இவ்வளவு துக்கப்பட வேண்டும். நான் என் மனதிற்குள் அவரை வெறுக்கிறதாக அவர் நினைக்கிறாரோ என்னவோ! அவரிடம்தான் என் உள்ளத்தைத் திறந்து சொல்லி விட்டேனே, பணம் போனதைப் பற்றி நான் கவலைப்படவே இல்லை என்று. இதிலிருந்தாவது அவருக்குத் தைரியம் உண்டாக வேண்டாமா? நாளை எப்படியாவது என் ஒட்டியாணத்தை விற்றுக் கடனை அடைக்கும்படி அவரை வற்புறுத்த வேண்டும். அவர் இந்த ஏற்பாட்டிற்குச் சம்மதிக்கும் வரையில் நான் சாப்பிடவே மாட்டேனென்று பிடிவாதம் பண்ணப் போகிறேன். அப்படியானால்தான் அவர் ஒட்டியாணத்தை விற்றுக் கடனை அடைப்பார்.
கடனை அடைத்த பிறகாவது கவலையில்லாது வாழலாம். முருகனுடைய படிப்புக்கூட இப்பொழுது வீணாகக் கெட்டுவிட்டது. தோட்டத்தில் போய் வேலை செய்யவும், வீட்டுச் சாமான் வாங்கவுமே அவனுக்கு நேரம் சரியாய்ப் போய் விடுகிறது. பாக்கி நேரத்தில் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு விளையாடுகிறான். படிப்பதே இல்லை. ஆனால் பள்ளிக்கூடத்தில் நிறைய மார்க் எடுப்பதாக வாத்தியார் சொல்கிறார். ரொம்பப் புத்திசாலியல்லவா! வீட்டில் படிக்காமலிருந்தும் கூட வகுப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறான். கடவுள் அருளால் அவன் நன்றாகப் படித்துப் பெரிய உத்தியோகத்துக்கு வரவேண்டும்.
அண்ணனைப் போலவே குழந்தை மோகனாவும் ரொம்பக் கெட்டிக்காரியாக ஆவாளென்று தோன்றுகிறது. அண்ணனை விட்டுப்பிரிவதே இல்லை. அதற்குப் பிறந்த நாள் அடுத்த வெள்ளிக்கிழமை வருகிறது. மோகனாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை விமரிசையாக நடத்த வேண்டுமென்றுதான் நான் திட்டம் போட்டிருக்கிறேன். என் ஒட்டியாணத்தை விற்கும் பணத்தைக்கொண்டு கடனையும் அடைத்துக் குழந்தையின் பிறந்தநாள் விசேஷத்தையும் நடத்தி விடலாம். கோவில்களுக்கெல்லாம் அன்று சிறப்பாகச் செய்யவேண்டும். என் லட்சியத்தின் உருவமல்லவா இந்தக் குழந்தை. இவளுடைய பிறப்பு என்னுடைய பிறப்பைப் போல இழிவானதல்லவே. எங்கள் பரம்பரையிலிருந்து விலகி நான் செல்லும் புதுப்பாதையில் எனக்குப் பின் வருவதற்கு ஒரு சந்ததி கிடைத்துவிட்டது. பிற சமூகத்தில் உள்ள குழந்தைகள் போல மோகனாவும், தான் இன்னாரின் மகள் என்று துணிவுடன் கூற முடியும். இது போதும் எனக்கு. இதுதானே எனது லட்சியம்! லட்சியம் கைகூடிவிட்டது.
மோகனா வளர்ந்து பருவமடைந்து ஒரு புருஷனை மணந்து கொள்வதைப் பார்த்து விட்டால், என் ஆத்மா சாந்தி யடைந்துவிடும். இன்னும் பதினைந்து வருஷத்தில் து நடக்காமலா இருக்கும்! மோகனாவை மணப்பதற்கு எத்தனையோ மாப்பிள்ளை வீட்டார் வந்து கேட்பார்கள். அப்பொழுது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என் தாயார் என்னோடு இருந்து தையெல்லாம் அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை.
எனக்கு இப்பொழுது அடிக்கடி தோன்றுகிறது இந்தக் குழந்தையுடன் போய் என் தாயாரைப் பார்த்து வரலாமென்று. ஆனால் அவள் என்னை இங்கு திரும்ப வர விடமாட்டாள். அதோடு எங்களுக்குள்ள சம்பந்தமும் இந்த ஊரிலுள்ளவர்களுக்குத் தெரிந்து விடும். அப்புறம் நான் வெளியே தலைகாட்டவே முடியாது. தாயாரை இங்கு வரச்சொன்னாலும் இதே கதிதான் ஏற்படும். ஆகையால் தாயைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலை நான் அடியோடு விட்டுவிட வேண்டியது தான். ஒரு தீமையும் செய்தறியாத என் தாய்க்கு நான் துரோகம் செய்திருப்பதாகவே என் மனச்சாட்சி சொல்லுகிறது. அவளை ஒரு முறை சந்தித்தாவது திருப்திப்படுத்தலா மென்றால் என் சமூகத்திற்காக நான் செய்யப் புகுந்திருக்கும் லட்சிய வாழ்க்கையே சிதைந்து விடும். நான் தாசியின் மகள் என்பதை மறைப்பதற்கு எவ்வளவு சாமர்த்தியம் காட்ட வேண்டியிருக்கிறது. எத்தனை ஆவல்களை அடக்கவேண்டி வருகிறது! ஆசாபாசங்களையெல்லாம் களைய வேண்டியிருக்கிறது எதையோ திருடியவளைப் போல் நான் சாதாரண ஜனங்களுக்குக்கூட பயப்பட வேண்டியிருக்கிறது.
கொஞ்ச நாளாக இன்னொரு கவலையும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. தாசிப் பரம்பரைக்கே தனி உரிமையான கொடுநோயும் என் உடலைப் பீடித்திருப்பதாகத் தெரிகிறது. எனக்குப் புதிதாக வந்துள்ள வியாதியின் குணத்தையெல்லாம் ஒரு கிழவியிடம் சொன்னேன். அவள் ரொம்ப அனுபவசாலிபோல் தெரிகிறது. இது பரம்பரையாக வரும் தொத்து வியாதியென்று உடனே சொல்லி விட்டாள். இந்த வியாதி உடலிலேயே ஒட்டியிருந்து, உடலுழைப்பு மனக்கவலை இவை அதிகமாகையில் தொந்தரவு கொடுக்குமென்று சொன்னாள். இதைப்பற்றி வேறு ஒருவரிடமும் தெரிவிப்பதில்லை என்று நான் நிச்சயித்து விட்டேன். என் கணவரிடம்கூட நான் இதைப்பற்றித் தெரிவிக்கப் போவதில்லை. இவ்வியாதி என்னோடு நிற்க வேண்டுமேயென்று நான் கடவுளை அடிக்கடி வேண்டிக் கொள்கிறேன். குழந்தை மோகனாவிற்கு வாழ்க்கையில் என்னைப்போல இத்தகைய மன உளைச்சல் இராதல்லவா! ரூபத்தில் மோகனா என் தாய் சாரதாம்பாளைப் போலவே அழகாக இருக்கிறாள். ஆகவே அவளைப் போன்று வெகு காலம் உயிரோடிருந்து என் லட்சியத்தைப் பூர்த்தி செய்வாள் என்று நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதான் நல் வாழ்வுக்கு ஊன்றுகோல்! இந்த ஊன்றுகோலைக் கொண்டு தான் நான் சமுதாயத்தில் ஒவ்வொரு படியாக உயர வந்து கொண்டிருக்கிறேன். எல்லாம் என் லட்சியத்திற்கு அனுகூலமாகவே அமைந்து வருகிறது. மனதிற்கேற்ற கணவன், குணசாலியான மகன், தங்க விக்ரஹம் போன்ற பெண் குழந்தை, அன்போடுகூடிய தாம்பத்ய வாழ்க்கை! இது தானே நான் விரும்பியது. விரும்பியதை அடைந்து விட்டேன். இனி எனக்கு என்ன குறை இருக்கிறது. என் சமூகத்திற்கு நான் ஒரு லட்சிய விளக்கை ஏற்றி வைத்து விட்டேன். இருட்குகையில் போதை கொண்டிருக்கும் என் சமூகம் நான் ஏற்றிவைத்த விளக்கின் பிரகாசத்தை நோக்கி முன்னேறும் காலம் வந்தே தீரும்.
– தொடரும்…
– வளர் பிறை (நவீனம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1946, கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை ஸ்டேட்.
![]() |
சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம் தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். நன்றியுரை "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கலையாத வேடம்
எஸ்.மதுரகவி
June 17, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
June 17, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 17, 2026
