வளர் பிறை
கதையாசிரியர்: மாறன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 61
(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-32
31. வேலாயுதம்

மோகனாவுடன் இங்கு வாழ்க்கை நடத்திவருவது மனதிற்கு உல்லாசமாக இருக்கிறது. திருநெல்வேலி எங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. ஊரைச்சுற்றிலும் பசுமையான வயல்கள். பொருனை நதி நகருக்கருகில் தங்கச்சரடுபோல வளைந்து செல்கிறது. பால் நிலவு பொழி கையில் நதியின் மணற்பரப்பில் நானும் மோகனாவும் உட்கார்ந்து இன்பமாகப் பேசிக்கொண்டிருப்போம்.
நாங்கள் தாசிக் குலத்துத் தம்பதிகள் என்பதை அடியோடு மறைத்து விட்டோம். ஏன்? நாங்களே அதை மறந்துவிட்டோம். குலத்தைப்பற்றி யோசிப்பதற்கே எங்கள் இன்ப வாழ்வில் நேரமில்லை. மோகனா வெகு சாமர்த்தியமாக வீட்டு வேலைகளைக் கவனித்து வருவதனால் எனக்குக் குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இல்லை. காலையில் நான் எழுந்திருப்பதற்குள் காபி தயாராகிவிடும். நான் ஆற்றுக்குப் போய்க் குளித்துவிட்டுத் திரும்பி வருவ தற்குள் மணி எட்டாகிவிடும். பின்பு பத்திரிகை பார்த்துக் கொண்டிருப்பேன். ஒன்பது மணிக்குள் மோகனா சமையல் செய்து விடுவாள். சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் தமாஷாகப் பேசிக்கொண்டிருப்போம். எனக்கு ஆபீசுக்கு நேரமாகிவிடும். சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவேன்.
மாலையில் ஆபீஸ் வேலை முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்துவிடுவேன். மாலை நேரம்தான் மகிழ்ச்சிக்குரிய நேரம். நானும் மோகனாவும் மாலை நேரத்தைப் பலவிதத்தில் இன்பமாகக் கழிப்போம். சில நாள் மோகனா வீணையுடன் பாடுவாள். நானும் என் மாமியார் சாரதாம்பாளும் மெய்ம்மறந்து அவளுடைய கீத வெள்ளத்தில் மூழ்கியிருப்போம். சில வேளைகளில் ரேடியோப் பெட்டியைத் திருப்பிக் கிராமப்பேச்சுக்களையும், நாடகங்களையும் கேட்டு ரசிப்போம். அடிக்கடி நாங்கள் இருவரும் ஒன்றாக வெளியே உலாவச் செல்வோம்.
நகரில் ஏதாவது நல்ல சங்கீதக் கச்சேரிகள், அறிவாளி களின் பிரசங்கங்கள் இருந்தால் நாங்கள் போகத் தவறு வதில்லை. ஒரு நாள் நாங்களிருவரும் சாரதாம்பாளுடன் முதல்முதலாக ஒரு நாட்டியக் கச்சேரியைப் பார்க்கச் சென்றிருந்தோம். அன்று ஏன் தான் அங்கு போனோம் என்று பின்பு நான் கவலைப்படும்படி ஆயிற்று.
நாட்டியமாடிய பெண் சுசீலா, பரத நாட்டியம், மணிபுரி நடனம், மயில் நடனம், என்று பலவித நவீன நாட்டிய வகைகளை மிகவும் திறமையோடுதான் ஆடினாள். ஜனக்கூட்டம் நாட்டியக்காரியைப்பற்றிய பூர்வோத்திரங் களையெல்லாம் கிண்டலாகப் பேசிக்கொண்டே ஆட்ட பாட்டத்தின் அழகைக்கண்டு களித்தார்கள். அப்பொழுது மோகனா எரிச்சல் பட்டுக்கொண்டேதான் நாட்டியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சாரதாம்பாள் தன் பொக்கை வாயைத் திறந்து அடிக்கடி கேவலமாகச் சிரித்தாள். நாட்டியமாடும் பெண் பாவங்களை நன்றாகவே வெளி யிடாமல் ஆட்டபாட்டத்தையே பிரதானமாகக் காட்டு கிறாள் என்பது இவர்களுடைய வருத்தம். மோகனாவின் கட்டாயத்தின்பேரில் நாங்கள் பாதி நேரத்திலேயே எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டோம்.
அதுமுதல் மோகனாவிற்கு நாட்டியப் பைத்தியம் பலமாகப் பிடித்துக்கொண்டது. அதே மேடையில் தனது நடனத்திறமையைக் காட்டுவதற்கு ஒரு சபையின் மூலம் ஏற்பாடு செய்யவேண்டுமென்று என்னை வற்புறுத்தினாள். எனக்கு இது பிடிக்கவேயில்லை. சாரதாம்பாளும் மோக னாவின் வேண்டுதலுக்குச் சிபார்சு செய்தாள்.
கலை கலை என்று இருவரும் புலம்புகிறார்களே ஒழிய சபையின் முன்னால் நின்று ஆடுவதனால் குடும்ப கௌரவம் எப்படி ஆகிவிடும் என்பதை அவர்களிருவரும் யோசிக்க வில்லை. இன்னார் மனைவி சபையில் போய் நாட்டியமாடு கிறாள் என்றால் எனக்கல்லவா அவமானம். மோகனா கற்ற கலை வீணாகிவிடுமே என்று சாரதாம்பாளுக்கு ரொம்ப வருத்தம். அதற்கென்ன செய்வது? குடும்ப வாழ்க்கை என்று ஏற்பட்டுவிட்டால் கலைப் பணி செய்வது கஷ் டம்தான். தலையில் பாரத்தைச் சுமந்துகொண்டு போகி றவன் அண்ணாந்து ஆகாயக் கப்பலைப் பார்க்க முடியாது தான். கலைப் பணி சிறந்ததுதான். ஆனால் மோகனா குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறாளே! ஆத்ம திருப்திக்காக வேண்டுமானால் வீட்டில் வைத்து நாட்டியம் ஆடிக்கொள்ளட்டுமே. யார் வேண்டாமென்கிறார்கள். கற்ற கலையைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்காம லிருந்தால் வீணாகிவிடுமேயென்று சாரதாம்பாள் கவலைப்படுகிறாள். இப்பொழுது நாட்டியம் பழகுவதற்கு அநேக பெண்கள் ஆசைப்படுகிறார்கள். மோகனா அவர்களுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுக்கட்டுமே. அதைப்பற்றியும் எனக்கு ஆக்ஷேபனையில்லை. நானே அதற்கு ஏற்பாடு செய்து வைப்பேன்.
மோகனாவிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன் “சபையில் போய் நாட்டியமாடுவது நமக்கு அழகல்ல. இதற்கு நான் அனுமதி கொடுக்கமாட்டேன்” என்று. இதனால் மோகனாவிற்கு என்மீது மிகவும் வருத்தம். இரண்டு நாட்களாக என்னோடு சரியாகப் பேசவே இல்லை. என்ன ஆகிறது என்று பார்ப்போம்.
32. மோகனா
நான் என்னென்னவோ நினைத்தேன். எப்படியெல் லாமோ முடிந்தது. எனது கலைப்பணிக்கு ஒரு பாதுகாப் பாக இருக்குமென்று கல்யாண வாழ்க்கையை நாடினேன். ஐயோ! இந்த வாழ்க்கை என் கலையைச் சிறையிட்டு விட்டதே. சபையில் போய் நாட்டியம் ஆடக்கூடாதென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் என் கணவர். புருஷன் மனது கோணாமல் நடந்துகொள்ளவேண்டுமென்று இப் பொழுது என் தாயாரும் புத்திசொல்கிறாள். எனக்கும் அது சரியென்றுதான் படுகிறது. குடும்பத்திலிருந்தால் கணவருடைய இஷ்டப்படி நடக்கவேண்டியது தானே மனைவியாகிய என் கடமை. ஆனால் என்னுள்ளே குமுறிக் கொண்டிருக்கும் கலையார்வம், இந்த வாழ்க்கையையே வெறுத்துவிட்டு, நடனமேடைக்கு ஓடிவிடும்படி தூண்டு கிறது. நாட்டில் கலையைப் பரப்புவதற்கே என் வாழ் நாளைச் செலவிட்டால் என்ன!
சேச்சே! நான் அவ்வாறு போய்விட்டால் என் கணவரின் மனம் என்னபாடுபடும்! இந்த ஒரு விஷயத் தைத் தவிர வேறு ஒரு விதத்திலும் எங்களுக்குள் அபிப்பிராய பேதமே கிடையாது. நான் அவருக்காக என் தலையை விட்டுவிடுவதா என்பதுதான் பிரச்னை. மேடையில் போய் நான் நாட்டியமாடினால், அவருக்கு அவமானமாக இருக்குமென்று சொல்லுகிறார். அவருடைய ஸ்தானத்தில் நான் இருந்தால் எனக்கெப்படியிருக்கும்!
தான் தாசிக்குலத்தில் பிறந்ததைப்பற்றியே சதா வருத்தப்பட்டுக்கொண்டிருந்தவர். தன் ஊரைவிட்டு இங்குவந்து கௌரவமான ஒரு அரசாங்க உத்தியோகத்தி லிருக்கிறார்.கவலையற்ற குடும்பவாழ்க்கை. மற்றக் குடும்ப ஸ்திரீகளைப்போலவே நானும் குடும்பப் பொறுப்பைமட்டும் நிர்வகித்துக்கொண்டிருந்தால் போதுமென்று அவர் விரும்புகிறார்.
நான் சபைகளில்போய் நாட்டியமாடினால் ஜனங்கள் என்னைப்பற்றியும், என் கணவரைப்பற்றியும் ஏதாவது தங்கள் மனம்போனவாறு பேசிக்கொள்ளத்தான் செய் வார்கள். எங்கள் மனது புண்படும்படியாகவும் அவர்கள் பேசக்கூடும். அதனால்தான் என் கணவர் என் வேண்டு கோளை மறுக்கிறார். நான் தனியாக இருந்திருந்தால் இதை யெல்லாம் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தமாட்டேன். என்னைப்பற்றிக் கேவலமாக யாராவது சொல்லிவிட்டால் அவருக்கும் சேர்ந்தல்லவா அவமானம் ஏற்படுகிறது. என் மனதிற்குகந்த கணவருக்கு நான் இவ்விதமான மனக்கஷ் டத்தைக் கொடுப்பானேன். கலையுணர்ச்சி மனதைப் பீறிக் கொண்டு வரும்போது அவர் சொல்வதுபோல வீட்டி லுள்ள நடராஜ விக்ரகத்தின் முன்னிலையிலேயே நடன மாடி என் ஆவலைத் தீர்த்துக்கொள்கிறேன். காலைந்து சிறு பெண்களுக்கு நாட்டியம் கற்பித்துக் கொடுக்க வேண்டும். இதற்கு என் கணவரே ஏற்பாடு செய்வதாகச் சொல்லுகிறார். சரி. மேடையில் நடனமாடவேண் மென்ற ஆசையை ஒழித்துவிட நிச்சயித்துவிட்டேன். இந்தத் தீர்மானம் என் கணவருக்கு மிகவும் திருப்தியளிக் கும். குடும்பரதமும் முட்டுக்கட்டையின்றி முன்போல இன்பப்பாதையில் சரளமாக ஓடும்.
கணவரின் கௌரவத்திற்காக, குடும்ப வாழ்க்கையின் நலத்திற்காகக் கலைப்பணியைத் தியாகம் செய்துவிட்டேன். என் கல்யாண வாழ்க்கை கலையை விழுங்கிவிட்டது. இயற்கை நியதி அப்படி இருக்கிறது. நான் என்ன செய்வது! தாயார் சாரதாம்பாளும் இந்தப் புரட்சிக்கு இடம் கொடுத்துவிட்டாள். எங்கள் குலத்தில் கலைப்பணி மங்கியது. கல்யாண வாழ்க்கை மிஞ்சியது. இது விபரீதமான மாறுதல்தான்.
முற்றிற்று.
– வளர் பிறை (நவீனம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1946, கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை ஸ்டேட்.
![]() |
சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம் தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். நன்றியுரை "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மாதம் பிறந்தது
ஜி.எஸ்.மணி
May 25, 2026
ஏவிவிடப்பட்ட கொலையாளி
திசேரா
May 25, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
May 25, 2026
