கடற்சங்குகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 17 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்ற இளங்கோவடிகளின் வரிகளை நினைவூட்டும் ஞாயிற்றுக் கிழமை. முற்பகல் நேரம். கடற்கரை ஈரக் காற்றும் தூறல்களும் எந்த வயதினருக்கும் மகிழ்ச்சியைத் தானே கொடுக்கும்? கண்ணப்பருக்கு இந்த ஈரக் காற்றும் சாரலும் பிடித்துப் போனவை தான். ஆனால், இன்று அவருக்கு மகிழ்ச்சி கொடுக்கவில்லை . சேர நாட்டின் முசிறிப் பட்டினத்தின் கடற்கரை அரசினர் மாளிகைக்கு வெளியே வர்த்தகர் கண்ணப்பர், தமது பேத்தி பதின்பருவ பெண் யவனிகாவுடன் திண்ணையில் அமர்ந்து இருந்தார். சேர சாம்ராஜ்யத்தின் துறைமுக அதிகாரி முத்தனார், தம்மை வந்து பார்க்கும்படி கட்டளை அனுப்பி இருந்ததால் கண்ணப்பர் இங்கு வந்திருக்கிறார். அதனால் மனதில் பதற்றம். நரை திரை எதுவும் இல்லாத, வயதைக் கண்டுபிடிக்க முடியாத தோற்றம் கொண்டிருந்தார் கண்ணப்பர். பெரிய மீசை. நெற்றியில் திருநீறு . ஒடிசலான உருவம் சிவந்த மேனி கொண்ட அவரது பேத்தி அவரது கைகளைப் பற்றிக் கொண்டிருந்தாள்.

மாளிகையின் உள்ளிருந்து வந்த காவலர் ஒருவர் , அதிகாரியைப் போய்ப் பார்க்கும்படி சைகையில் கூறினார்.

கண்ணப்பர் எழுந்து நின்றார். பேத்தியிடம் நீ இங்கே இரு என்று கூறி விட்டு கண்ணப்பர் உள்ளே சென்றார்.

வாட்டசாட்டமான உருவம் , நடுத்தர வயது அதிகாரி முத்தனார் பெரிய ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். அதே போன்ற மற்றொரு பெரிய ஆசனத்தில் வெளிநாட்டவர் உடை தரித்த ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட நபர் அமர்ந்து இருந்தார். கண்ணப்பர் ,

அதிகாரியிடம் முகமன் கூறி , தாம் கையுறையாக கொண்டு வந்திருந்த கிளிஞ்சல்களால் செய்யப்பட்ட மலர்க்கொத்து போன்ற பொம்மையை அதிகாரியின் அருகில் உள்ள தாழ்வு மேசையில் வைத்து விட்டு

தாங்கள் ஏற்க வேண்டும் என்று பணிந்து கூறினார்.

அதிகாரி முத்தனார் புன்னகை பூத்தார்.

அவர் எதுவும் பிரஸ்தாபிக்காமல் மௌனம் காத்து நின்றதால் கண்ணப்பரே

உரையாடலைத் தொடங்கினார்.

“சமூகத்தின் முன் அடியேன் வர வேண்டும் என்று கட்டளை கிடைக்கப் பெற்றேன்.”

அதிகாரி கனைத்துக் கொண்டார்.

“என்னவோ ஏதோ என்று அச்சம் கொள்ள வேண்டாம். தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லுங்கள் … அப்புறம் சொல்கிறேன் தங்களை அழைத்த காரணம் என்ன என்று “

“அடியேன் இங்கு கடற்கரை வீதி அருகில் அங்காடி தெருவில் வித்தியாசமான மண்பாண்டப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடியை நடத்தி வருகிறேன். பட்டினத்திற்குள் போய் குயவர்களிடமிருந்து வெளிநாட்டவரும் நம் நாட்டவரும் விரும்பி வாங்கக் கூடிய வடிவமைப்பு மிக்க மண் பாண்ட பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறேன். நான் என் மனைவி , எங்கள் பேத்தி அந்த வருவாயில் செட்டாக வாழ்ந்து வருகிறோம். “

நிறுத்தினார் கண்ணப்பர் .

“இந்த கிளிஞ்சல் மலர் உங்கள் மனைவியாரின் கைவண்ணமா ? “

“இல்லை இது என் பேத்தி யவனிகாவின் கைவண்ணம். கடற்கரையிலிருந்து கிளிஞ்சல்கள் , கடற் சங்குகளைத் தேடி எடுத்து வந்து இது போல் பல வடிவங்கள் செய்து மகிழ்வாள் “

“சூட்டிகையான பெண் தான் உங்கள் பேத்தி அது என்ன யவனிகா ?

தங்கள் மகள் வயிற்றுப் பேத்தியா ? மகன் வயிற்றுப் பேத்தியா ? “

“அது …. சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாய் பேச இயலாத ஓர் இளம் பெண் யவனப் பெண்ணா ? உரோமானியப் பெண்ணா தெரியவில்லை. எங்களிடம் வேலை கேட்டு வந்தாள். நானும் என் மனைவியும் எங்கள் கடையில் அவளுக்கு வேலை தந்தோம். பட்டினத்திலிருந்தோ கப்பலில் இறங்கியோ வெளிநாட்டினர் அவளைத் தேடி வந்தால் அனுப்பி வைத்து விடலாம் என்று இருந்தோம். அவள் ஒல்லியாக இருந்ததால் அவள் சூலுற்று இருப்பது எங்களுக்குத் தெரியவில்லை. என் மனைவி எளிதில் கண்டுபிடித்து விடுவாள் . அவளும் அதை அறியவில்லை. ஐந்து மாதங்கள் கழித்து , கருவிழியாள் என்று நாங்கள் அழைத்த அந்த இளம் பெண் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெண் மகவை ஈன்றாள். அவள் நெஞ்சில் ஏதோ ஒரு முள் போலும் சில நாட்களில் உலகை விட்டுப் பிரிந்தாள். நாங்கள் யவனிகா என்று பெயரிட்டு அந்த குழந்தையை வளர்த்து வருகிறோம். அது எங்களை அப்பா அம்மா என்று கூப்பிடாமல் தாத்தா பாட்டி என்றே அழைத்தது . அதுவும் எங்களுக்கு இனிமையாகத் தான் இருந்தது. “

“பணிப் பெண் ஈன்ற குழந்தையை வளர்த்து வருகிறீர். மெச்சத் தக்க செயல்”

“ஐயா , அடியேனை தாங்கள் அழைத்த…”

“சொல்கிறேன் . கண்ணப்பர் அவர்களே … இதோ என் அருகே அமர்ந்து இருப்பவர் என்னுடைய நீண்ட கால நண்பர் . பேர்ல் என்பது இவரது திருநாமம் . இவர் உரோமாபுரி நாட்டில் மிகப்பெரிய வர்த்தகர். பிரமுகர் . தமது இருபது வயதிலிருந்து உரோமாபுரியிலிருந்து முசிறிப் பட்டனத்திற்கு எண்ணற்ற முறை வந்து போகிறவர். தங்களிடம் பணிபுரிந்த அந்த ஊமை மகள், தன் உடலுக்குள் உயிர் வளர்க்க இவர்தான் காரணமாக இருந்தவர்.”

அதிகாரி பேச்சை நிறுத்தி விட்டு கண்ணப்ரின் முகத்தை ஆராய்ந்தார். அதிகாரியின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பேரிளம் பெண் , அதிகாரியின் குறிப்பை உணர்ந்து , மாளிகையின் வாயிலில் அமர்ந்து இருந்த யவனிகாவை அழைத்து வரச் சென்றார்.

உள்ளே வந்த யவனிகா , மான் போல் தாத்தாவின் அருகில் வந்து நின்றாள். அதிகாரியின் கண்களும் உரோமாபுரி வணிகரின் கண்களும் யவனிகா மீது சென்றன.

யவனிகாவின் விழிகளோ தாத்தாவைப் பார்த்தன. பழக்கம் இல்லாத இடத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பு இல்லாமல் பேசினாள் ….

“பாட்டனாரே பேச்சை முடித்து விட்டு வாருங்கள் . நான் தூறலில் நனைந்தபடியே கிளிஞ்சல்களையும் கடற் சங்குகளையும் தேடித்தேடி எடுக்க வேண்டும். அதில் ஒரு தனி இன்பம் தெரியுமா?”

அதிகாரி புன்னகை பூத்தார்.

“போகலாம் இரும்மா… கண்ணப்பர் அவர்களே… அந்த பேசா மடந்தையையும் அவள் ஈன்ற குழவியையும் பற்றி தகவல் அறிந்து கூறும்படி இவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். உரோமாபுரியில் உள்ள இவரது முதல் மனைவியாரும் புதல்வர்களும் இருவரையும் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரச் சொல்லி விட்டார்களாம். என்னுடைய ஊழியர்கள் , பல இடங்களில் தேடி விசாரித்து அந்தக் குழந்தை உம்மிடம் வளர்வதைக் கண்டுபிடித்து என்னிடம் கூறினார்கள். நேற்று தான் இவரும் நமது சேர மண்ணுக்கு வந்து சேர்ந்தார். எப்படியும் பெண் குழந்தையை தாங்கள் மற்றொரு இடத்திற்குத் தானே அனுப்பி வைக்க வேண்டும். அதனால் யவனிகாவின் தந்தையாரான இவருடனே…”

“ஐயா … தாங்கள் கட்டளையாக கூறவில்லை அல்லவா?”

“அவ்வாறு இல்லை. உம்முடைய பேத்தி , நமது சேர நாடு போல் வளமான உரோமாபுரி நாட்டில் செல்வச் செழிப்புடன் வாழப் போகிறாள் அதனை எண்ணி…”

“ஐயா அடியேன் வளர்த்த புதல்வியை எப்படி கரை சேர்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியாதா? அதிகாரி அவர்கள், அடியேனுக்கு விடை கொடுக்க வேண்டுகிறேன். யவனிகா ஐயா உடன் பேசி முடித்து விட்டேன். வா… கடையை பாட்டியார் பார்த்துக் கொள்வார். நாம் கடற்கரையில் கடற்சங்குகளைத் தேடுவோமா?”

கண்ணப்பர், யவனிகாவுடன் மாளிகையின் வாயிலை நோக்கி விரைந்தார்.

குறிப்பு –

1) முசிறிப் பட்டினம் என்பது தமிழ்நாட்டின் (சேர மண்ணின் ) தொன்மையான துறைமுக நகரங்களில் ஒன்று. முதல் நூற்றாண்டிலிருந்தே வெளிநாடுகளுடன் குறிப்பாக ரோம் உடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த மும்முரமான துறைமுக மாநகரம். (தமிழ்நாட்டில் உள்ள முசிறி வேறு நகரம்)

பின்னர், ஏதோ பேரிடர் காரணமாக இது அழிந்துபட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் பட்டினம் என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் இந்த முசிறிப் பட்டினத்தின் சான்றுகளாக ரோமானிய தங்க நாணயங்களும் தனித்துவம் மிக்க ரோமானிய ஜாடிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

2) அகநானூறு 149 எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் இயற்றிய பாடலில் யவனர்கள் / ரோமானியர்கள் , தங்கத்தைக் கொடுத்து மிளகைப் பெற்றுச் செல்லும் காட்சியின் வாயிலாக சேர நாட்டின் முசிறியின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

3) சேர நாட்டின் செல்வ வளம் குறித்து புலவர் பரணர் பாடிய புறநானூறு பாடல் 343 ல் முசிறியின் சிறப்பு எடுத்து இயம்பப்பட்டுள்ளது. நற்றிணையிலும் முசிறி பற்றிய குறிப்பு உள்ளது.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *