வசந்தம் வந்து போய்விட்டது

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 239 
வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம் – 7

இரண்டு நாட்களாகியும் உஷாவுக்கு உணர்வு வரவில்லை. ‘கோமா’ (coma) நிலையில் குழந்தையின் மூளை இயங்குவதாக டொக்டர்கள் சொன்னார்கள். 

சாந்தியால் எதையும் கிரகிக்க முடியவில்லை. அவள் சரியாகச் சாப்பிட்டு, நித்திரை செய்து இரண்டு நாட்களாகிவிட்டன. 

மூன்றாம் நாள் அவளின் தமயன் சங்கர் வந்து தான் குழந்தையுடன் நிற்பதாகவும் சாந்தியும் ராஜனும் அன்றைக்கு வீட்டுக்குப் போய்க் குளித்து உடை மாற்றிக் கொண்டு வரும்படியும் சொன்னான். 

தமயனின் பாசம் அவள் இருதயத்தைத் தொட்டது. எவ்வளவோ படித்த தமயன் லண்டனில் ஒரு நல்ல வேலைக்கு போக முடியாமல் மளிகைக் கடை வைத்திருக்கிறான். 

எத்தனையோ படித்த தமிழன்களின் நிலையது. அவன் கடையை விட்டு விட்டு அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு வந்தால் அவனது மனைவிக்கு பிடிக்காது. லண்டனுக்கு வந்து எதைக் கண்டோம் என்று பெருமூச்சு விடுபவர்களில் ஒருத்தி. எதைக் கொடுத்தாலும் நிறைவு காணாத மனம் அவளுக்கு. 

சங்கரின் மனைவி ராசிகா பெரிய இடத்துப் பெண். வாழ்க்கையின் நிறைவை வீட்டில் குவித்து வைக்கும் பொருட்களின் மூலம் அளவிடுபவள் அவள். 

“வேண்டாம்  அண்ணா, குமார் வருவதாகச் சொல்லியிருக்கிறான் அவன் வந்ததும் நான் போகிறேன்”. 

சாந்தி தமயனை அனுப்பி விட்டு மகளின் அருகில் உட்கார்ந்திருந்தாள். 

அன்று பின்னேரம் ரவியை வார்ட்டுக்கு மாற்றி விட்டார்கள். சாந்தி மட்டும் மகளுடன் அந்த இன்ரென்ஸிவ் கெயரில் குந்திக் கொண்டிருந்தாள்.

ராஜன் வேலைக்குப் போவதில்லை. ஆனால் யாருக்கோ அடிக்கடி போன் பண்ணினான், அடிக்கடி வெளியே போய் வந்து கொண்டிருந்தான். 

அவளின் சிந்தனைகள் மிகவும் குழம்பிப் போயிருந்தன. நேற்று வரைக்கும் எமிலி அருகில் இருந்தாள். இப்போது ரவிக்குக் கொஞ்சம் பரவாயில்லை என்ற நிலை வந்ததால் வார்ட்டுக்கு அனுப்பி விட்டார்கள். 

அன்று பின்னேரம் குமார் வந்தான். தமக்கையின் கலைந்த தலையும், உறக்கமற்ற கண்களும், கசங்கிய உடுப்பும் அவளை மிகவும் பரிதாபமாகக் காட்டின. 

“ராஜன் அக்காவைக் கூட்டிக் கொண்டு போங்கள். நான் உஷாவுடன் நிற்கிறேன்” 

வாழ்க்கையில் எந்த அனுபவமுமில்லாத குமார் பெரிய. குடும்பத்தான் போல பேசினான். 

ராஜன் மௌனமாக மனைவியைப் பார்த்தான். அவள் பிளாஸ்டிக் பை ஒன்றில் தேவையில்லாத சாமான்களைத் திணித்துக் கொண்டிருந்தாள். கடந்த மூன்று நாட்களாக அவள் கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஏனோ தானோ என்று பழகிக் கொண்டார்கள். 

சாமான்களைத் திணித்ததும் “சரி நான் போய் வருகிறேன் உஷாவின் நிலையில் ஏதும் மாறுதல் என்றால் எனக்கு உடடினடியாகப் போன் பண்ணு” தம்பிக்கு உத்தரவிடும் தோரணையில் சொன்னாள். 

எனக்கு உடடினடியாகப் போன் பண்ணு என்று அவள் சொன்னது அவனுக்குப் புதிராக இருந்திருக்க வேண்டும். ராஜனை ஏறிட்டுப் பார்த்தான் குமார். ராஜன் அவன் பார்வையைச் சந்திக்க விரும்பாமல் மெஷினின் உதவியுடன் உயிரைப் பிடித்துக் கொண்டு கிடக்கும் தன் அருமை மகளைப் பார்த்தான். 

சாந்தி படபடவென்று வெளிக்கிட்டாள், ராஜன் பின் தொடர்ந்தான் 

காரில் ஏறும் வரைக்கும் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. 

லண்டன் நகரம் பின்னேரம் குதூகலத்தில் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. இவர்களைப் போல் எத்தனை மனிதர்கள் தம்பதிகள் என்ற சட்டத்துக்குள் தங்களைத் தாங்களே சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள்? சாந்தியின் மனம் யோசித்தது. 

கடந்த பத்து வருடம் அனுபவிக்காத துயர்களைக் கடந்த இரண்டு நாட்களில் அனுபவித்த அலுப்பு. 

சென்ரல் லண்டனை விட்டு மோட்டோர்வேயில் கார் வேகமாக 

ஓடியது. அவளின் மௌனம் அவனுக்கு ஆத்திரத்தையுண்டாக்கியது. 

“அண்டைக்கு ஒவ்வீசுக்கு வந்தேன்” சாந்தி சொன்னாள், குரலில் எரிமலை வெடித்தது. 

“தெரியும்” அந்த எரிமலையைத் தணிக்கும் குளிர்ச்சி அவன் குரலில். 

“யார் அந்தத் தேவடியாள்” 

சாந்தி கெளரவத்தைப் பார்க்காமற் கத்தினாள். 

காரின் வேகம் சட்டென்று குறைந்தது. மிகவும் விரைவாக இவர்களுக்குப் பின்னால் வந்த கார் ஹோர்ன் அடித்துத் தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது. அவன் இவளைத் திரும்பி பார்த்தான். 

அவள் அழாமல் அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

“என்ன வாயில முட்டையா” 

அவள் பைத்தியம் போற் சத்தம் போட்டாள். 

கல்யாண வாழ்க்கையில் அவர்கள் எல்லாத் தம்பதிகள் மாதிரியும் தர்க்கம் பண்ணி யிருக்கிறார்கள். ஆனால் அவள் இப்படிப் பைத்தியத்தனமாகக் கத்தவில்லை. 

“வீட்டுக்குப் போய்ப் பேசலாம்”, நிதானமாகச் சொன்னான். 

அவள் வாயில் வந்தபடி முணுமுணுத்துக் கொண்டு வந்தாள். கடந்த மூன்று நாட்களாக மனத்தில் அடக்கி வைத்திருந்த ஆத்திரம், நித்திரையற்ற களைப்பு, பசியின் கொடுமை எல்லாம் சேர்த்து அவளை நிலை தடுமாற வைத்தன. 

கார் பார்க் பண்ணும்போது இரவு கவிழ்ந்து கொண்டு வந்தது. கிழவன் பார்க்கின்ஸன் “ஹலோ லேடி” என்றபடி இவளைக் கண்டதும் ஓடிவந்தார். 

”ஐயாம் சொறி, ஐயாம் சொறி, குழந்தைகளுக்கெல்லாம் பலத்த அடியாம்.. உஷா எப்படி” கிழவன் பரிவுடன் கேட்டார். 

அவள் அழத் தொடங்கி விட்டாள். 

“நிலைமை இன்னும் சீரியஸாக இருக்கிறது” ராஜன் கிழவனுக்கு மறுமொழி சொன்னான். 

“நான் உன்னுடன் ஆறுதலாகக் கதைப்பேன் பெண்ணே” கிழவன் கை காட்டி விடை கொடுத்தார். 

வீடு உஷாவில்லாமல் செத்த வீடாய்த் தெரிந்தது அவனுக்கு.

மாடிப்படியில் குந்தியிருந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்,

“சாந்தி” ராஜன் மனைவியை அன்புடன் அணைக்க வந்தான். 

பாம்பாகச் சீறி விழுந்தாள். 

“பட்டப்பகலில் தோளில் கை போட்டுக் கொண்டு சிரித்தபடி போனாளே அந்தத் தேவடியாள், அவளைப் போய்க் கட்டிப் பிடியுங்கள். அவளோட தான் கடந்த மூன்று நாளும் படுத்தெழும்பியிருப்பீர்கள்” அவள் நாராசமாகப் பேசினாள், 

அவன் விடுவிடுவென்று மேலே போனான். மறுமொழி சொல்லிப் பிரயோசனமில்லை என்ற தோரணையில் நடந்து கொண்டான். 

அவள் விடுவதாக இல்லை. “இந்த வீட்ட நான் கோயிலாக வச்சிருந்தன். உங்களைக் கடவுளாக மதிச்சன். நான் பைத்தியக்காரி” 

அவள் தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டாள், தலையைப் பிய்த்துக் கொண்டாள். பைத்தியம் போல் தன் சட்டையைக் கிழித்துக் கொண்டாள். 

“நான் உங்களுக்கு என்ன குறை வச்சன்” அவள் அவன் காலில் விழுந்து கதறினாள். 

அவன் குழந்தைபோல் அவளை வாரியணைத்துக் கொண்டான். 

“சாந்திக் குஞ்சு”அவன் அவளை இறுக்கியணைத்துக் கொண்டான், 

“என்னில இப்பிடி நம்பிக்கையில்லாம கதைக்கிறதுக்கு உன்னிடம் நிறயப் பலம் இருக்கு. ஆனால்.. ஆனால் ….” அவன் அவள் முகத்தை இறுக்கிப் பிடித்து அவன் முகத்திற்கு முன் நிமிர்த்தினான். 

“என் கண்ணே உனது திட்டுக்களை எல்லாம் நான் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் அதற்கு முதல் ஒரு கேள்வி கேட்க விரும்புவன்” அவன் உதடுகள் நடுங்கின, கண்கள் பனித்தன. கைகள் நடுங்கின. 

அவள் அவனிடமிருந்து திமிறியழுதாள், அவன் தலையைப் பிடித்துக் குழப்பினாள், மார்பில் குத்தினாள். 

“நான் உனக்குத் துரோகம் செய்வன் என்கிற நம்பிக்கை உனக்கிருந்தால் நான் இப்பவே இந்த வீட்டை விட்டுப் போறன். ஏனென்றால் என்னில் நம்பிக்கை வைத்து நான் சொல்லும் விடயங்களைக் கேட்க முடியாத உன்னால் ஒன்றையும் சீரியஸாக எடுக்க முடியாது.” 

“அலிஸன் சொல்கிறதெல்லாம் சரி, ஒரு ஆண்களையும் நம்பக் கூடாது. கல்யாணம், சடங்கு, மோதிரம் தாலி என்றதெல்லாம் சொல்லிப் பெண்களை ஏமாற்றிப் போட்டு எப்படியும் தாங்கள் நினைத்த மாதிரி நடப்பினம், எமிலி சொல்கிறது சரி, கல்யாணம் என்கிற சடங்கு ஆண்களின் மரியாதைக்கு, சமுதாயக் கௌரவத்திற்கு உண்டாக்கப் பட்ட ஒரு சமுதாய வழக்கு” 

ராஜனுக்கு எரிச்சல் வந்தது. இவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. கல்யாணமாகி பத்து வருடமாகிறது. இப்படிப் பயங்கரமாகச் சண்டை போட்டதில்லை. 

இப்போது அவள் பைத்தியம் மாதிரிக் கத்திக் கொண்டாள்.

“அலிஸன் ஏன் இப்படிக் கணவரில் சந்தேகப்படுகிறாள் என்று நான் அடிக்கடி நினைத்ததுண்டு. டேவிட், நீங்கள் எல்லாம் ஒரே ரகத்தைச் சேர்ந்தவர்கள். உங்களுக்கு சமைத்துப்போட ஒருத்தி, சல்லாபத்திற்கு இன்னொருத்தி” 

அவன் பேசாமல் வெளிக்கிட்டான். அவளுடன் பேசிப் பிரயோசனமில்லை. அவன் இரண்டு நாட்களாக நினைத்தவற்றைச் சொல்ல நினைத்தால் அவள்இருக்கும் மனநிலையில் நஞ்சையோ நாராசத்தையோ குடித்துச் செத்துப் போனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. 

கால்போன போக்கில் நடந்தான். செயின் அல்போன்ஸ் நகரம் இரவின் கேளிக்கைகளுக்குத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தது. 

இவனைத் தாண்டிப் போன ஒரு ஆங்கிலேயப் பெண் சேலராவை ஞாபகப்படுத்தினாள். 

ஸேராவைத் தேவடியாள் என்று பட்டம் கட்டிய சாந்தியிற் கோபம் வந்தது. 

வெள்ளைத் தோல் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்பதும் கறுப்புத்தோல் போர்த்த பெண்கள் எல்லாம் பத்தினிகள் என்பதும் சாந்தியின் நம்பிக்கையா? 

செயின் அல்போன்ஸ் கதிட்ரல் கம்பீரமாக நிலாவொளியிற் காட்சியளித்தது. அவன் ஒன்றும் பெரிய பக்திமான் இல்லை. ஆனால் சமயங்களைக் கிண்டல் செய்யும் அஞ்ஞானியுமில்லை. உலகத்தில் சரி பிழைகளைத் தன்னால் முடிந்த மட்டும் உணர்ந்து பழக வாழும் ஒரு சாதாரண மனிதன். 

வாழ்க்கையில் ஒரு மிகவும் சோதனையான இக்கட்டில் மாட்டுப் பட்டுக் கொண்டிருக்கிறான். இந்த நேரம் பார்த்துத்தானா எல்லாத் தொல்லையும் வரவேண்டும்? குழந்தைக்கு அக்ஸிடென்ட் பட்ட அதே நேரத்தில் அவன் அண்டர்கிரவுண்ட் ரெயினில் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் தன் வாழ்க்கையில் தோன்றி மறைந்த ஸேராவைக் காணுவேன் என்று கனவு கண்டானா? 

ஸேராவை மட்டுமா கண்டான். தன்னையே உரித்து வைத்திருக்கும் அந்தப் பையனைச் ஸேராவுடன் கண்டபோது அவள் எத்தனை நிதானமாக அந்தப் பையனுக்குச் சொன்னாள். “கிருஷ்ணா, இதுதான் உனது அப்பா” 

அவனுக்கல்லவா பைத்தியம் வந்திருக்க வேண்டும். 

தனக்கு ஒரு மகன் அமெரிக்காவில் வளர்கிறான் என்பதை அவன் கனவிலும் நினைத்திருப்பானா? 

இவள் எங்கே போய்விட்டாள் என்று இரண்டு வருடங்களாகப் பைத்தியம் போற் சுற்றித் திரிந்தானே அந்த நேரத்தில் தான் தனியாக இந்தப பையனைக் கவனித்தேன் என்று கண்கலங்கச் சொன்னாளே இந்தக் கதை எல்லாம் சாந்திக்குச் சொன்னால் தற்கொலை செய்யாமல் விடமாட்டாள் என்று என்ன நிச்சயம். 

கற்பவதியாகத் தான் எழுதிய கடிதங்கள் ஒன்றும் தனக்குக் கிடைக்காததன் மர்மத்தின் பின்னால் அக்கா பிரமிளாவின் கொடூரத்தனம் எப்படிப் புதைந்திருக்கிறது என்று அவனுக்குத் தெரியுமா? 

அமெரிக்காவுக்குக் கலைக் கண்காட்சிக்குப் போனவள் கல்லூரிக்குக் கடிதம் போட்டாள். ஒரு சில மாதங்களிற் திரும்பி வருவதாகவும் அப்போது மிகவும் ‘முக்கியமான’ விடயத்தை அவனிடம் சொல்லப் போவதாகவும் எழுதியிருந்தாள். 

அவன் அப்போது சட்டப் படிப்பை முடித்து விட்டு ‘சேம்பரில்’ சேர இடம் தேடிக் கொண்டிருந்தான். 

லண்டனில் இனவாதத்தின் கொடுமை அப்போது நன்றாகப் புரிந்தது. சட்டத்துறையை ஆங்கிலேய மேல்மட்டம் தன் பிடியில் வைத்திருக்க எதையும் செய்யும் என்று தெரிந்தது. 

அவன் இளைஞன், இந்தக் கொடுமைகளால் மனம் தளர்ந்து விட்டான். கல்லூரி வாழ்க்கை முடிந்தபோது தனக்குத் தமக்கை வீட்டு விலாசத்திற்குக் கடிதம் எழுதச் சொலலி அவன் எழுதியிருந்தான். 

கெதியில் ஒரு இடம் எடுத்ததும்தான் தன்பாட்டுக்கு இடம் எடுத்துக் கொண்டு போவதாகச் சொல்லியிருந்தான். 

“லண்டனில் வழக்கறிஞராகப் பிரபலம் ஆவதைவிட ஸ்கொட்லாந்தில் நன்றாக உழைக்கலாம். ஸ்கொட்டிஸ் மனிதர்கள் ஆங்கிலேயர் மாதிரி இனவெறி பிடித்தவர்கள் இல்லை” அவனின் அத்தானும் புத்திமதி சொன்னார். 

அவனுக்கு அது சரியானதாகப் பட்டது. லண்டனில் அலைந்து திரிந்தபோது ஸேராவின் ஒரே ஒரு கடிதம் கிடைத்தது. அது அவள் தனது கலைக் கண்காட்சி நியுயோர்க்கில் 

கடிதம். அடுத்த நடத்தியபோது எழுதிய கடிதம். அடுத்த கண்காட்சி கலிபோர்னியாவுக்குப் போன பின் தான் கடிதம் எழுதுவதாகச் சொன்னாள். 

அவன் லண்டனில் இருந்தபோது அவளிடமிருந்து வந்த அந்தக் கடிதத்திலுள்ள முக்கிய விடயம் தங்களின் கல்யாணமாக இருக்கலாம் என்று அவன் கற்பனை செய்து கொண்டான். 

கற்பனைகள் அபூர்வமானது. அந்தக் களிப்பில் அவன் தன் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தனை செய்தான். ஸேராவுடன் தனது வாழ்க்கை இணைவதைப் பற்றித் தமக்கை என்ன சொல்வாள் என்றும் தெரியும். 

நான் லண்டனுக்கு வர உதவி செய்ததற்காக எனது ஆத்மாவின் வேட்கையை விரயமாக்கலாமா? 

கலிபோர்ணியாவில் கலைக் கண்காட்சியை முடித்த கையோடு ஸேரா லண்டன் திரும்பினாள். தெரிந்த நண்பர்களின் கூற்றுப்படி ராஜன் தமக்கை வீட்டுக்கு ஸ்கொட்லாந்துக்குப் போய்விட்டான் என்று கேள்விப்பட்டதும் ஓடோடிப் போனாள். 

இலையுதிர்காலத்தில் மரங்கள் பழுத்து மஞ்சள் வெயிலுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தது. அறுவடை முடிந்த வயல்கள் அடுத்த பயிர்ச் செய்கைக்குப் பதப்படுத்திக் கொண்டிருந்தது. 

இருமாதக் குழந்தை வயிற்றில் வளர ஸேரா பிரமிளாவின் கதவைத் தட்டினாள். 

கல்லூரிப் படிப்புடன் தம்பியின் காதலும் முடிந்துவிடும் என்றிருந்த பிரமிளா ஸேராவைக் கண்டதும் தன் அதிர்ச்சியைக் காட்டாமல் அன்புடன் வரவேற்றாள். ஸேராவின் கலைக் கண்காட்சி பற்றிக் கேட்டாள். ஸேராவுக்கு பிரமிளாவில் ஒரு மதிப்பு பிறந்தது. 

நீண்ட நேரப் பேச்சு ஒரு நெருக்கத்தை உண்டாக்க ஸேரா தான் ராஜனின் குழந்தையைத் தாங்கிக் கொண்டிருப்பதைப் பற்றிச் சொன்னாள். பிரமிளா சிரித்தபடி விடயத்தைக் கிரகித்துக் கொண்டு “என்ன சோதனையிது” என்று புலம்பத் தொடங்கி விட்டாள். 

லண்டனிலிருந்து ஸ்கொட்லாந்துக்குத் தன் வாழ்க்கையை மாற்ற முதல் சில சினேகிதர்களுடன் ராஜன் பாரிசுக்குப் போயிருந்தான். ஒரு கிழமைப் பிரயாணத்தை அன்று காலையிற்தான் தொடங்கினான். 

ஸேரா வரும் ஒரு சில நிமிடங்களுக்கு முந்தி அவன் பாரிசில் சுகமாய்ப் போய்ச் சேர்ந்திருப்பதாகப் போன் பண்ணினான். 

ஸேரா ராஜனை இனி ஒரு நாளும் பார்க்காமல் செய்ய வேண்டும் என்ற தீவிரம் பிரமிளாவின் மனத்தில். ஸேராவை அணைத்துக் கொண்டு அழுதாள். 

“ஏன் இப்படித் துக்கப் படுகிறீர்கள்” ஸேரா வியப்புடன் கேட்டாள். 

“ஆண்களை நம்பக் கூடாது ஸேரா” பிரமிளா மூக்கைச் சிந்திக் கொண்டாள். 

ஸேரா விளக்கமில்லாமல் வெறித்துப் பார்த்தாள். 

“நான் எனது தம்பி உன்னுடன் பழகும்போதே இப்படி நடக்கும் என்று நினைத்தேன்” 

பிரமிளா மூக்கைச் சிந்திக் கொண்டாள். 

“உலகத்தில் பெரும்பாலான ஆண்கள் எப்போதும் பெண்களைத் தங்கள் இச்சைக்கும் இசைவுக்கும் தானே பாவித்துக் கொள்கிறார்கள். நாங்களும் காதல், கல்யாணம் என்று நம்பிக் கொண்டு அவர்கள் விரிக்கும் வலைகளில் விழுகிறோம்”

பிரமிளா என்ன பேசுகிறாள் என்று ஸேராவால் ஒரு கொஞ்ச நேரம் புரிந்து கொள்ள முடியாமலிருந்தது. 

வெளியில் பெரிய காற்றடித்து பழுத்த இலைகளை விழுத்தி மரத்தைப் பட்ட மரமாக்கிக் கொண்டிருந்தது. 

வெட்ட வெளிச்சமாயிருந்த வானம் இப்போது கருமேகங்களைத் தாங்கிக் கொண்டு ஸேராவுடன் சேர்ந்தபடித் தயாராகிக் கொண்டிருந்தது. 

பக்கத்து வீதியில் யாரோ ஒரு குழந்தை தாய் தகப்பனைப் பிரிந்து விட்டதோ என்னவோ பரிதாபமாக அழுது கொண்டிருந்தது. 

தூரத்தில் ஏதோ பஸ்சும் காரும் அடிபட்ட சத்தம். போலிஸ் வானும் ஆம்புலன்சும் அலறிக் கொண்டு பறந்தன. 

ஸேரா தனக்குப் பரிதாபப் படும் தன் காதலனின் தமக்கையைத் தன் வெறித்த பார்வைக்குள் நிழலாக்கினாள். 

“படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்வதாக இருந்தோம். ஆனால் எனது கலைக் கண்காட்சி முன்னரே ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால் நான் அமெரிக்கா போக வேண்டியிருந்தது” 

ஸேராவின் பேச்சு முன்னுக்குப் பின் முரணானதாகப் பட்டது. அவள் குழபம்பிப் போயிருக்கிறாள் என்று அவளின் வெளிறிய முகம் சொல்லியது. 

“உம்… இதெல்லாம் இப்போது சரித்திரமாக வேண்டிய விடயம்தான். ராஜன் … ராஜன்” பிரமிளா இப்போது நிச்சயமாகவே அழுதாள், 

“ராஜனுக்கு என்ன நடந்தது” ஸேரா பதறினாள் 

“அவனுக்கு ஒன்றும் நடக்கவில்லை… நீதான் பாவம்” ஸேராவைத் தழுவிக் கொண்டு சொன்னாள் பிரமிளா. 

“இத்தனை அழகான பெண்ணுக்கு எத்தனை அழகான குழந்தை பிறக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். உம்… அவனுக்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை” பிரமிளா ஸேராவின் தலையைத் தடவி விட்டாள். 

“என்ன நடந்தது ராஜனுக்கு”

“அதுதான் சொன்னேனே அவனுக்கு ஒன்றும் நடக்கவில்லை… அவன்தான் போன கிழமை பெரிய ஆரவாரமாகப் பெரிய கல்யாணம் செய்து கொண்டானே” பிரமிளா பெருமூச்சு விட்டாள். 

“என்ன” ஸேரா அடிபட்ட நாகம் போற்ச் சீறி விழுந்தாள், 

“இரண்டு கிழமைக்கு முதல் இலங்கைக்குப் போனான். போன கிழமை கல்யாணம் நடந்தது…” பிரமிளா கவனமாகத் தன் பொய்யை உண்மை போல் அவிழ்த்து விட்டாள். 

“நடக்காது நடக்காது நிச்சயம் ராஜன் இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்திருக்க மாட்டார்” ஸேரா அலறினாள். 

பெண் நாகம் சீறியது. பூகம்பம் வெடித்தது, எரிமலை சிதறியது. ஸேரா அலறினாள். 

“உம், நாங்கள் அப்படித்தான் எல்லாரையும் நம்புகிறோம். எனக்கு அவன் அப்படிச் செய்வான் என்று தெரிந்திருந்தால் இலங்கைக்குப் போகவே விட்டிருக்க மாட்டேன்.” 

பிரமிளா கோபத்துடன் சீறினாள். 

“இப்படியும் நடக்குமா”

ஆங்கில நாகரீகத்தில் வளர்ந்த ஸேரா தான் கேட்பது உண்மையா இல்லையா என்பதுபோல் தன்னையே கேட்டுக் கொண்டாள். 

பிரமிளாவின் மனத்தில் சந்தோசம். 

“நீங்கள் பொய் சொல்கிறீர்கள், ராஜன் அப்படிச் செய்ய மாட்டார். நான் இப்போதே விமானம் எடுத்து இலங்கைக்குப் போகிறேன்” என்றெல்லாம் ஸேரா இல்லாமல் தான் சொன்னதை நம்பி விட்டதை எண்ணிப் பூரித்தாள். 

“அடுத்த கிழமை கல்யாணப் படங்கள் வரும் அனுப்பி வைக்கிறேன்” பிரமிளா அன்புடன் ஸேராவின் முகத்தை வருடினாள். 

“ஸே, என்ன நான் மஸோக்கிஸ்டா? என்னை நானே துன்பப்படுத்திச் சந்தோசப்பட” 

ஸேராவின் ஆச்சரியம் இப்போது ஆத்திரமாக மாறுவது கண்டு பிரமிளா பூரித்தாள். 

இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. ஸேரா முகத்தை மூடிக் கொண்டு தலையைத் தாழ்த்திக் குனிந்து கொண்டிருந்தாள். 

பூமி பிழந்து விழுங்காதா என்றிருந்தது அவளுக்கு, 

சொன்னதெல்லாம் பொய்யா? என்னை மலராக்கிய மன்னன் இன்று இன்னொருத்தி மடியிலா? ஸேராவுக்கு இதயம் வெடிப்பது போலிருந்தது. 

தலையடிபட்டுப் பரிதாபமாகக் கிடந்த ராஜனின் சோர்ந்த முகம் ஞாபகம் வந்தது. 

“அந்தத் தடியன்கள் அடித்துக் காயம் பண்ணியபோதே சாக விட்டிருந்தால் எனக்கு இந்த கதி வராமற் போயிருக்கலாம்” 

அப்படி நினைக்கிறாளா ஸேரா. 

அவனைத் தேடி சிவப்பு ரோஜாக்களுடன் ஓடிவந்த அந்த மென்மையான பெண்ணாக ஸேரா இல்லை. 

வாடிய மலராகத் துவண்டுபோய்க் கதிரையில் அமர்ந்திருந்தாள். 

“இனி அவன் லண்டனுக்கே வரமாட்டானாம். திருமணம் செய்திருப்பது பெண் டொக்டராம். அவுஸ்திரேலியாவுக்குப் போகிறானாம்” 

பிரமிளா பெரிய கற்பனை எழுத்தாளராக இருந்திருந்தால் நிறைய எழுதிக் காசு உழைத்திருப்பாள். 

ஸேரா தன் காதைப் பொத்திக் கொண்டாள்.

என்னையவன் பொன் என்றான் பூவென்றான்,

புனலாகும் நீரென்றான் – இன்று 

அனலாகும் உலகிற் தள்ளி 

அவன் என்னை வாட்டலாமா?, 

ஸேரா மூடிய முகத்தைத் திருப்ப வில்லை. 

பிரமிளா ஸேராவின் அருகில் வந்து உட்கார்ந்தாள், அன்று பின்னேரம் அவள் கணவன் வீட்டில் இல்லை. குழந்தைகள் இருவரும் சினேகிதர்கள் வீட்டுக்குப் போய் விட்டார்கள். 

பிரமிளாவின் சேர்ஜரி காலையில் முடிந்து விட்டது, அந்த நேரம் ஸேரா வந்தது பிரமிளாவிற்கு மிகவும் நன்மையாகப் பட்டது. 

குழந்தைகள் யாருமிருந்தால் அவளால் இப்படிப் பொய்களைச் சொல்ல வழியிருக்காது. அவர்கள் எப்போதும் வந்துபோய்க் கொண்டிருப்பார்கள். 

பிரமிளாவின் கணவன் தன் மைத்துனர் ஆங்கிலேயப் பெண் ஒருத்தியுடன் தொடர்பு வைத்திருப்பதை விரும்பவில்லை. ஆனால் ஸேரா வாயும் வயிறுமாய் வீடு தேடி வந்தபோது அவள் முகத்தை நேரே பார்த்துக் கொண்டு உன்னை காதலித்தவன் போன கிழமை இன்னொருத்தியைச் செய்து விட்டான் என்று பொய் சொல்லியிருக்க மாட்டார். 

தான் சொன்னதை ஸேரா நம்பி விட்டாள் என்று தெரிந்ததும் பிரமிளா மிகவும் சந்தோசப் பட்டாள். ஆனாலும் தன் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு ஸேராவைத் தடவினாள். 

“என்னதான் உறவென்றாலும் இப்படி ஒரு பெண்ணைத் தவிக்க விட்ட மனிதனை என்னால் மன்னிக்க முடியாமல் இருக்கிறது” 

பிரமிளாவின் முதலைக் கண்ணீர் பேதலித்துப் போயிருந்த ஸேராவையும் கலங்கச் செய்தது. இப்படியான ஒரு அருமைத் தமக்கைக்குத் தம்பியான ராஜனா இப்படி என்னை ஏமாற்றினான்! 

கண்ணிருந்தும் குருடாகக் காதிருந்தும் செவிடாக ஏன் இருந்தேன், என் இதயத்தைப் பிழக்கும் இந்தத் துயரை யாரிடம் சொல்வேன். 

“நான் உன் நிலையில் இருந்தால் என்னை ஏமாற்றிய அந்தப் பாவியின் சின்னத்தை என் வயிற்றில் வளர விடமாட்டேன்” பிரமிளா ஸேராவின் வயிற்றைத் தடவி விட்டாள். 

ஏனோ ஸேராவுக்கு அந்த வார்த்தைகள் பிடிக்கவில்லை. சட்டென்று எழுந்தாள். 

“உங்கள் அட்வைஸ்க்கு நன்றிகள்” உதடுகளை இறுக்கிப் பிடித்துத் தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு விடுவிடுவென்று வெளியேறினாள் ஸேரா. 

வானுயர்ந்த மலை முகடுகள் அவள் துயர்கண்டு பெரு மூச்சு விட்டோ என்னவோ புகார் பரப்பித் துயர் கொண்டாடின. 

ஸ்கொட்லாந்தின் வளைந்தோடும் இளம் நதிகள் இந்தப் பேதையின் கண்ணீரைத் தன்னோடு பிணைத்துக் கொண்டன. உலகத்தின் பெரும்பாலான ஆண்களே ஒன்று சொல்லிவிட்டு இன்னொன்று செய்பவர்களா? 

அடுத்த கிழமையே லண்டனை விட்டுப் போய்விட்டாள் ஸேரா. லண்டனில் இனிக் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று அவள் மனம் அழுதது. 

அவளின் தாய் தகப்பன் நியுகார்ஸல் என்ற இடத்தில் வசிப்பவர்கள். ஏன் தங்கள் மகள் அமெரிக்காவைத் தன் வாழ்விடமாகக் கொண்டாள் என்று புரியாமற் தவித்தார்கள். 

ஒவ்வொரு வருடமும் மகளையும் மகளுக்குப் பிறந்த பேரனையும் பார்க்க அமெரிக்கா போய் வந்தார்கள். இந்த வருடம் அவளின் தகப்பன் இறந்து விட்டபடியால் ஸேரா தகப்பனின் இறுதிச் சடங்குகளை கழிக்க லண்டன் வந்தாள். 

பன்னிரண்டு வயதான மகன் எனது “அப்பா எங்கே” என்று கேட்கும்போதெல்லாம் அவன் லண்டனில் இருப்பதாகச் சொன்னாள். 

பிரமிளா சொன்னதுபோல் ராஜன் அவுஸ்திரேலியாவில் வாழ்வதானாற் தான் ஒரு நாளும் லண்டனில் ராஜனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வராது என்று நினைத்திருந்தாள். 

அமெரிக்காவிலிருந்து வந்த அடுத்த கிழமையே ராஜனை அண்டர்கிரவுண்ட் ரெயினிற் சந்தித்த போது அவளால் மெல்லவும் முடியவில்லை விழுங்கவும் முடியவில்லை. எல்லோர் முன்னிலையிலும் “அட பாவி ஏன் என்னை ஏமாற்றினாய்” என்று கேட்டுச் சண்டை பிடிப்பதா அல்லது தகப்பன் அளவு வளர்ந்திருக்கும்மகனிடம் எனது அப்பா எங்கே என்று கேட்டாயே இதுதான் உன் அப்பா” என்று சொல்வதா என்று திண்டாடினாள். 

ஸேராவைக் கண்ட ராஜன் திடுக்கிட்டான். அத்துடன் தன்னை உரித்து வைத்திருக்கும் அந்தப் பையனைப் பார்த்ததும் அவன் உணர்வுகள் சிலிர்த்தன. 

இதுதான் உனது அப்பா என்று சொன்னதும் அவன் அப்படியே உறைந்து போனான். 

அவளைப் பிரிந்ததும் ஒரு சில மாதங்களில் அவள் ஏன் தன் வாழ்க்கையிலிருந்து மறைந்து போனாள் என்று திண்டாடினான். கலிபோர்ணியா போனவள் ஏன் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று யோசிக்கப் பைத்தியம் வரும்போலிருந்தது. 

ஒரு வார விடுமுறையில் பாரிசுக்குப் போயிருந்தபோது அவள் அவனின் தமக்கையிடம் வந்ததோ பிரமிளா ஸேராவுக்குப் பொய் சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டதோ அவன் அறியான். 

ஒவ்வொரு நாளும் ஓடோடி வந்துகடிதங்களைத் தேடுவான். ஏமாற்றம், ஏமாற்றம். 

என் உயிர் நீயென்றாள். நீயின்றி நானில்லை என்றாள். இன்று ஏன் என்னைப் பிரிந்து விட்டாள், எண்ணெயிற் புழுவாய் வதக்குகிறான். 

“இனவாதம் பிடித்த ஆங்கிலேய ஆண்கள் தெருவில், ஒழுங்கையில் தனியாக வரும்போது அடிப்பார்கள், இனவாதம் பிடித்த பெண்களோ எப்படியும் ஒரு கறுப்பனுடன் படுத்துப் பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்” பிரமிளா குத்தலாகச் சொன்னாள். 

“நான் சொன்னேனே கேட்டாயா? என்ன இருந்தாலும் இந்த வெள்ளைக்காரிகளை நம்பக் கூடாது. 

“தசையாசைக்குமேல் எந்த ஒரு தத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியாதவர்கள்” பிரமிளா எரியும் தீயில் எண்ணெய் வார்த்தாள். 

“எங்கள் ஊர்ப்பெண்ணாக இருந்தால் இப்படி ஏமாற்றி விட்டுப் போவாளா? கை தொட்ட மனிதனுக்காகத் தன் உயிரையே கொடுக்கத் தயங்க மாட்டாள் ஒரு தமிழ்ப் பெண்” பிரமிளா தன் கலாச்சாரத்தில் கண்ணகிகள், சத்திய சாவித்திரிகள், தீயிறங்கும் சீதைகள், சேலை பறிகொடுக்கும் திரௌபதிகள் பற்றித் துதி பாடினாள். 

அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். 1985ம் ஆண்டு லண்டனில் போலிஸாரின் அட்டூழியத்தால் ஒரு கறுப்புப் பெண் மரணித்தாள். 

பிறிக்ஸன் என்ற நகரில் கலவரம் நடந்தது. 

இனத்துவேசத்தின் பிரதிபலிப்பு அவனை ஆங்கிலேயர் களிடமுள்ள நல்ல குணங்களின் அம்சத்தையும் மறைக்கப் பண்ணியது. 

அக்கா சொல்வதுபோல் ஸேரா தன்னை உண்மையாகத் தான் ஏமாற்றி விட்டாளா? தனக்குத் தானே எத்தனையோ தரம் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டான். 

அவள் சொன்னதெல்லாம் பொய்யா? 

அவள் புன்னகை போலியா? செவ்விதழ் விஷம் தோய்ந்ததா?

சட்டத்துறையில் அவன் கவனம் செலுத்தினான். உலகத்துப் பெண்களில் எல்லாம் வெறுப்பு வந்தது. எத்தனை பெண்கள் ஸேரா மாதிரி சல்லாபத்துடன் தொடர்ந்த உறவால் கண்ணியமான இளைஞர்களின் வாழ்க்கையைக் கெடுத்திருப்பார்கள்? 

அவன் குழம்பிப் போனான், அவளின் மறைவு மிகவும் மர்மமாக இருந்தது. 

தமக்கை சாப்பாடு போடும்போதும் தண்ணீர் கொடுக்கும் போதும் தம்பியின் பாசத்தில் அவனை ஏமாற்றிய வெள்ளைக்காரியைத் திட்டுவாள். 

அப்படி அவனைக் குமுறப் பண்ணியவள் பன்னிரண்டு வருடங்களின் பின் திடீரென்று முளைத்திருக்கிறாள். 

நீதானா என் தகப்பன் என்ற பாவனையில் தன்னையுற்று நோக்கும் அந்தப் பையனின் பார்வை குத்திக் கிழித்தது. 

“கலைக்காட்சி தொடர்பாகக் கலிபோர்னியா போன நீ ஏன் ஒரேயடியாக மறைந்து போனாய்” தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கேட்டான். 

“என்னைப் பிரிந்த இரண்டு மாதத்தில் இன்னொருத்தியைத் திருமணம் செய்த உங்களைத் தேடி உலகமெல்லாம் ஓடி வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா” 

“என்ன சொல்கிறாய்” அண்டர்கிரவுண் ரெயினிற் தன் கடந்த காலச் சரித்திரத்தைத் தொடர அவன் விரும்பவில்லை. 

அடுத்த ஸரேசனிற் தன்னுடன் இறங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டான். 

“மகன், என்னைக் கொஞ்ச நேரம் உன் தகப்பனுடன் பேச அனுமதி தருவாயா” ஸேரா கௌரவமாகத் தன் மகனைக் கேட்டாள். 

அந்தப் பையன் என்ன செய்வது என்று தெரியாமல் நினைத்துக் கொண்டிருந்தவன் “உங்களை மீண்டும் சந்திக்க ஆசைப்படுகிறேன்” என்றான். 

“கட்டாயமாக, கட்டாயமாக” ராஜன் அவசரப்பட்டு சொன்னான். 

அன்று முழுதும் ஸேராவும் ராஜனும் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நடந்த வாழ்க்கையின் திருப்பத்தைத் துயருடன் பகிர்ந்து கொண்டார்கள். 

பைத்தியக்காரன் மாதிரி இரண்டு வருடங்கள் அவன் அவள் உறவை நினைத்துத் துடித்ததை அவள் கேட்டு அழுதுவிட்டாள். 

பிரமிளா செய்த கொடுமை நம்ப முடியாமலிருந்தது. இப்படியும் பெண்கள் உலகத்திலிருப்பார்களா? இன்னொரு பெண்ணை வாயும் வயிறுமாகக் கண்டும் இப்படி ஒரு கொடுமை செய்ய மனம் வருமா? 

ஸேரா ஒரு ஆங்கிலேயப் பெண் என்பதால் பிரமிளா இப்படிக் குரூரமா நடந்தாளா? தனது சொந்தத் தம்பியின் உயிருக்கு உயிரான காதலியிடம் இப்படிக் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள அவளால் எப்படி முடிந்தது. 

ஸேரா இந்தக் கேள்வியை எத்தனையோ தரம் அவனிடம் கேட்டாள். அவனுக்கு மறுமொழி சொல்லத் தெரியவில்லை. அன்றெல்லாம் அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார்கள். தனது ‘புதிய’ மகனுடன் மத்தியானச் சாப்பாடு உண்டான். T.V ரேடியோ கேட்கவில்லை. மகள் ஆஸ்பத்திரியில் இருப்பதும் தெரியாது. 

அத்தியாயம் – 8

டேவிட் பார்பராவுடன் மௌனமாக நடந்து வந்தான். பெரும்பாலான விசிட்டர்கள் போய் விட்டார்கள். அங்கும் இங்கும் ஒன்றிரண்டு தாய் தகப்பன் துயர் படிந்த முகங்களைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தார்கள். 

பார்பரா ஒரு காலத்தில் டேவிட்டுடனும் அலிஸனுடனும் படித்தவள். வாழ்க்கையின் குறிக்கோள் டேவிட்டைத் தன்னுடையவனாகக் கொள்வது என்று கனவு கண்டாள். 

பார்பராவின் உண்மையான தாய் அவளைச் சிறு வயதிலேயே கைவிட்டு விட்டாள். வளர்ப்புத்தாய் தந்தையர் வசதி படைத்தவர்கள் என்றாலும் தன்னைப் பெற்ற தாய் தன்னை அனாதையாக்கி விட்டாள் என்ற அவமானம் பார்பராவை அழித்துக் கொண்டிருந்தது. 

சுமந்து பெற்ற தாயே தன்னை வெறுத்து விட்டாள். யார் என்னை உண்மையாக நேசிப்பார்கள் என்று துயர் பட்டாள். 

தாய் தகப்பனுடன் சந்தோசப்படும் தன் சினேகிதிகளிற் பொறாமை வரும். 

டேவிட்டின் தாய் தகப்பன் கடவுள் பக்தி நிறைந்த கண்ணியமான மனிதர்கள். கல்லூரி நாட்களில் அவர்களைச் சந்தித்தவளுக்கு அவர்களின் மருமகளாக வரும் பாக்கியம் தனக்கு வராதா என்று ஏங்குவாள். 

அலிஸன் அவளின் சினேகிதி, வெட்கம் நிறைந்த பெண். டேவிட் அலிஸனிற் பரிதாபப் படுவது பார்பராவுக்குப் பொறாமையாக விருந்தது. 

அவன் அன்பைப் பெற அவள் எத்தனை மயக்க விளையாட்டுக்கள் காட்டலாமோ அத்தனையும் செய்தாள். பார்பரா மிகவும் உயர்ந்து வளர்ந்த தோற்றமுடையவள். பார்ப்பவர்களைக் கவரக் கூடிய தோற்றம். ஆனால் டேவிட்டுக்கு அவளின் போக்கு பிடிக்கவில்லை. எந்த ஆண்களுக்கும் தங்களைத் துரத்திப் பிடிக்கும் பெண்களைப் பிடிக்காது. 

அன்பு என்பது இரு உள்ளங்களின் ஒருமித்த சங்கமத்தில் வளர்வது. பார்பரா தன் வசீகரமான தோற்றத்தால், வாளிப்பான உடம்பின் நெழிவு சுழிவால் அவனை ஆட்கொள்ளலாம் என்று எத்தனம் செய்தாள். 

டேவிட்டின் உறவு அலிஸனுடன் தொடங்கியது. சாதாரண சக மாணவி என்ற பெயரிற்தான். காலகட்டத்தில் அலிஸனுடன் நெருங்கிப் பழகினான். 

அவனைத் தெரிந்த பெண்களுக்கு அவன் எடுத்த முடிவு ஆச்சரியம் தந்தது. 

“ஆண்கள் எப்போதும் அசடுகளும் அழுமூஞ்சி களையும்தான் விரும்புவார்கள், ஏனென்றால் அப்போதுதானே அந்த அசடுகளைக் கொன்ட்ரோல் பண்ணுவதன்மூலம் தங்கள் ‘ஆண்மையைக்’ காட்டிக் கொள்ளலாம்” இப்படி ஒருத்தி சொன்னாள். 

“போடி டேவிட் போன்ற ஆண்கள் ஒரு பெண்ணுடன் திருப்தி பட்டுக் கொள்வதில்லை. அலிஸன் போன்ற முட்டாள்களை வீட்டில் வைத்துக் கொண்டு வெளியில் தனக்கு விருப்பமானவர்களுடன் திரிவார்கள்.” பார்பரா தன் தேன் குரலிற் செல்லம் செய்தாள். 

அவனை முழுமையாகத் தன்னுடையவனாக ஆக்க முடியாவிட்டாலும் அலிஸன் அவள் சினேகிதி என்றபடியால் அவள் உறவு டேவிட்டுடன் தொடரும் என்று பார்பராவுக்குத் தெரியும். 

அவனின் எடுப்பான தோற்றம் எந்தப் பெண்ணையும் கவரும், இனிய இரக்க சுபாவம் எவரையும் கவர்ந்திழுக்கும், குறும்புத் தனமான போக்கு எந்தப் பெண்களையும் குதூகலிக்கச் செய்யும். அவன் படக்கொம்பனி ஒன்றில் வேலை செய்கிறான். சினிமா நடிகைகள், செக்கிட்டரிகளுடன் அவன் கும்மாளம் போடவில்லை என்று யார் கண்டார்கள்? 

பார்பராவைப் பொறுத்தவரையில் டேவிட் அலிஸனுடன் இணைந்து கொண்டது இலகுவான வாழ்க்கை ஒன்றையமைப்பதற்குத்தான் என்று தெரியும். 

இலைமறை காயாய் இருந்த அன்பை அவனிடம் பார்பரா எடுத்துக் கூறியபோது டேவிட் அவளை ஏறிட்டுப் பார்த்தான். 

அந்தப் பார்வையை அவளாற் சகிக்க முடியவில்லை. 

“என்னிடம் இல்லாத அழகு, கவர்ச்சி அலிஸனிடம் இருக்கிறதா” குரூரமாகக் கேட்டாள். 

“பார்பரா நான் உன்னுடன் சினேகிதமாகப் பழகுகிறேன். அதற்கப்பால் உன்னுடன் எதையும் வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. நீ எனது மனைவியின் சினேகிதி என்பதைத் தவிர வேறு எந்த விதமான தொடர்பையும் நான் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.” 

அவன் கௌரவமாகச் சொல்லிக் கொண்டான். 

தாடகைகள் இப்போதெல்லாம் நாகரீகமாக நடமாடுகிறாள். 

அவனின் உதறல் அவளையுறுத்தியது. அலிஸனின் சந்தோசம் அவளை எரியப் பண்ணியது. 

இயற்கையாகவே அலிஸன் கொஞ்சம் மந்தம், வெட்கம், எதையும் நம்பும் சுபாவம். 

தன் கணவனின் காந்த ரூபத்தில் மயங்கிவிட்டாள் அலிஸன். 

பார்பராவைக் கண்டால் டேவிட் புகழ்பாடத் தொடங்கிவிடுவாள். பார்பரா லண்டனிலும் பாரிசிலும் மொடலாக வேலை செய்கிறாள். ஒவ்வொரு நாளும் எத்தனையோ ஆண்களைச் சந்திக்கிறாள், ஒரு சிலர் அவள் அழகுக்கும் கவர்ச்சிக்கும் மயங்கி எதையும் செய்யத் தயாராகியிருக்கிறார்கள். அவளோ யாரோ ஒருத்தியின் கணவனில் கருத்தைப் பறிகொடுத்து விட்டாள். 

பச்சை மண்ணான தன்னை யாரோ ஒருவர் கையில் ஒப்படைத்துப் போன தாயில் கோபம், தன் கருத்தைக் கவர்ந்து தன்னை உதாசீனம் செய்யும் டேவிட்டில் ஆத்திரம், அவனைத் தன்னுடையவனாக்கிக் கொண்ட அலிஸனிற் பொறாமை. 

நேரம் கிடைக்கும் பேதெல்லாம்அலிஸன் வீட்டுக்குப் போவாள், அல்லது தனது வசீகர மொழியால் அலிஸனைத் தன் மிகவும் படாடோபமான வீட்டுக்கும் வரப் பண்ணிவிடுவாள். 

விலையுயர்ந்த உணவு வகைகளும், கருத்தைக் கலக்கும் மதுபானங்களையும் நிறைத்து வைத்திருந்தாள் பார்பரா. 

“எனது அருமைச் சினேகிதியே நீ என்னில் எவ்வளவு அன்பாய் இருக்கிறாய்” சிவப்பு வைன் மயக்கத்தில் அலட்டுவாள் அலிஸன். 

”உம்… சில வேளைகளில் உன்னிற் பரிதாபப்படுகிறேன்” பெருமூச்சு விடுவாள் பார்பரா. 

“ஏன் என்னில் பரிதாபப்படுகிறாய், கண் நிறைந்த கணவன் ஆசைக்குக் குழந்தைகள், கை நிறைய உழைப்பு, வசதியான வீடு இவ்வளவும் எனக்கிருக்கிறது ஏன் என்னிற் பரிதாபப் படுகிறாய்” 

பேதைத்தனமாகக் கேட்பாள் அலிஸன். 

“ஐயோ ஐயோ என் சினேகிதியே, உனது முட்டாள்த்தனத்தை என்னாற் புரிய முடியாமலிருக்கிறது” தன் குரலில் தேனையும் பாலையும் குழைத்து அலிஸனின் உணர்வைத் தூண்டி விட்டாள் பார்பரா 

“என்ன முட்டாள்த்தனம்” அலிஸன் தன் கீச்சுக் குரலிற் கேட்டாள். அலிஸன் கண்ணாடி அணிபவள். 

ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாதவள். ஒரு சில பிரச்சினைகளுக்கும் உடனடியாகக் குழம்பிப் போவாள், கண்ணீர் எப்போதும் ஊற்றெடுக்கும். 

தன் அப்பாவிச் சினேகிதியை அன்புடன் அணைத்துக் கொண்டாள் பார்பரா. அலிஸனுக்கு அந்த அணைப்புத் தர்ம சங்கடமாக இருந்தது. சாதாரணமாகவே சங்கோஜப்படுபவள். பார்பராவின் அணைப்பு வெறும் சாதாரணமான அணைப்பாகத் தெரியவில்லை. 

வாழ்க்கை முன் அலிஸனுக்குக் குழப்பம் தருபவை. மெலனிக்கு ஆண் சினேகிதர்கள் இருக்கிறார்களா அல்லது பெண் சினேகிதர்கள் இருக்கிறார்களா என்று அவள் குழம்பிப் போவாள். ஏனென்றால் பார்பராவின் ‘அந்தரங்க’ வாழ்க்கை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறிக் கொள்வது அலிஸனாற் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கை, கணவனுக்கு விருப்பமான மாட்டு வரட்டலையும் உருளைக் கிழங்கு பொரியலையும், இரண்டு மூன்று அவித்த மரக்கறிகளையும் செய்து விட்டு அவனுக்குப் பிடித்த வைனை எடுத்து பிறிட்ஜில் வைத்து விட்டு வீட்டைத் துப்புரவாக்கி விட்டு அவன் வரவில் சந்தோசப் படுவாள் அலிஸன். 

யூனிவர்சிட்டிப் படிப்புடன் அவள் வெளியிற் கொஞ்ச நாள் வேலை செய்தாலும் குழந்தைகள் வந்தவுடன் அவள் வேலையை விட்டு விட்டு நல்லதொரு குடும்பத் தலைவியாகி விட்டாள். 

அமைதியான அந்தக் குடும்ப அமைப்பு பார்பராவின் பொறாமைத்தீயில் எண்ணெய் வார்த்தது. 

எவ்வளவோ பணம் உழைத்தும், எத்தனையோ வசதிகள் இருந்தும் தான் நினைத்த அன்பன் யாரோ சொத்தாக இருப்பது அவள் இதயத்தைப் பிழிந்தது. 

குழம்பிப் போயிருக்கும் அலிஸனை அணைத்து முத்தமிட்டாள் பார்பரா. “நான் உன்னில் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்று தெரியுமா” அலிஸனை இறுக்கியணைத்தபடி கிசுகிசுத்தாள். 

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அலிஸனுக்கு உடம்பெல்லாம் எரிந்தது. கஷ்டப்பட்டுத் தன்னை பார்பராவிடமிருந்து விடுவித்துக் கொண்டு இன்னொரு கிளாஸ் வைனை ஊற்றிக் கொண்டாள். 

‘உனது நன்மைக்குத்தான் சொல்கிறேன்.. டேவிட்” பார்பரா தான் சொல்ல வந்ததைச் சொல்லாமற் தன் அசட்டுச் சினேகிதியின் முகத்தை அளவெடுத்தாள். பார்பராவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அலிஸன். 

“டேவிட்டைப் பற்றி என்ன சொல்லப்போகிறாய்” அலிஸனின் குரல் நடுங்கியது. 

பார்பரா எத்தனையோ போய் பிரண்ட்ஸ், கேர்ள் பிரண்ட்ஸ் அதாவது பார்பரா தான் ஒரு ‘பைசெக்சுவல்’ என்று மறைமுகமாக எத்தனையோ தரம் அலிஸனுக்கு சொல்ல முயன்றும் அரை மந்தம் அலிஸனுக்கு அவ்வளவாக விளங்கவில்லை. இப்போது என்ன சொல்லப் போகிறாள் இவள். தன்னுடைய கட்டிற் சினேகிதர்களில் டேவிட்டும் ஒருத்தன் என்று சொல்லப் போகிறாளா? 

அலிஸன் மடமடவென்று இரண்டு கிளாஸ் வைன் குடித்து முடித்து விட்டாள். 

“பார்பரா உண்மையைச் சொல்…” 

அலிஸன் அழத் தொடங்கி விட்டாள். 

“என்ன உண்மை பொய் சொல்வது? உன் கணவன் போல் வாட்ட சாட்டமான ஆண்கள் உன் ஒருத்தியுடன் திருப்திப் படுவான் என்று நினைக்கிறாயா” 

பார்பரா குத்தலாகக் கேட்டாள். அலிஸன் ஓவென்று அழுதாள். 

பார்பராவின் மனம் சந்தோசத்தில் துள்ளியது. டேவிட்டைப் பழிவாங்க எந்த இடத்தில் அடிபோடலாம் என்று எதிர்பார்த்தவளுக்கு அலிஸனின் முட்டாள்த்தனம் மிகவும் இலகுவாகப் பயன்படுத்தப்பட்டது. 

“பார்பரா .. பார்பரா “அலிஸன் பிதற்றத் தொடங்கினாள், ஒரு சில நிமிடங்களுக்கு முன்னால் பார்பராவிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டோடியவள் இப்போது ஓடிவந்து பார்பராவை அணைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கிக் கொண்டழுதாள், 

“டேவிட்டுடன் கட்டிலுக்குப் போகும் பெண்களில் நீயும் ஒருத்தியா’ அலிஸன் கேவிக் கேவியழுதாள். ஆணழகனாக யூனிவர்சிட்டி மாணவர்களால் கருதப்பட்ட டேவிட் அசட்டு முகம் படைத்த தன்னை விரும்பியதற்குக் காரணம் தன்னை வீட்டு வேலைக்காரியாக வைத்துக் கொண்டு உலகம் சுற்றவா? 

“அடி அசட்டுஅலிஸனே, நான் அப்படியெல்லாம் துரோகம் செய்வேனா? உன்னில் உள்ள அன்பில் அவனைப் பற்றிய சில விடயங்களைச் சொல்கிறேன்” 

பார்பராவின் நச்சு வார்த்தைகள் குழம்பிப் போயிருந்த அலிஸனை மிகவும் கலக்கி விட்டது. அதுதான் ஆரம்பம். 

அதன்பின் ஒரு கொஞ்சம் பிந்தி வந்தாலும் “யாருடன் இருந்து விட்டு வருகிறாய்” என்று கீச்சு குரலிற் கத்துவாள் அலிஸன், 

அலிஸனின் இந்தக் கேள்விகளை டேவிட் ஆரம்பத்தில் சட்டை செய்யவில்லை. வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் எத்தனையோ பெண்மணிகளுக்குத் தங்கள் கணவர்களில் இப்படிச் சந்தேகம் வரும் என்று அவனுக்குத் தெரியும். சாதாரணமாகவே அவன் மிகவும் பிஸியானவன். 

காலை ஒன்பது தொடக்கம் பின்னேரம் ஐந்து மணி வரைக்கும் செய்யும் வேலையல்ல அவனது வேலை. எப்போது படப்பிடிப்புத் தொடங்கும், எப்போது முடியும் என்று சொல்ல முடியாத நிலையற்ற தொழில். 

அந்த மாதிரி வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்தால் அலிஸனின் வார்த்தைகள் வில் அம்புகளாய்த் துளைத்தன. சாதாரணமாகவே பலவீனமான மனமுள்ள அலிஸன் குழந்தைகள், வீடு என்று பல பிரச்சினைகளிலும் தலையைப் போட்டுக் குழப்பிக் கொண்டு கஷ்டப்படுவதாக அவன் யோசித்தான். 

‘சில பெண்கள் தீட்டுத் துடக்கு வந்தால் இப்படிச் சினந்து கொள்வர்’ என்று ஒரு சினேகிதன் சொன்னான். 

‘கணவர்களில் சந்தேகப்படுபவர்கள் போல் நடந்தாற்தான் சில பெண்களுக்குத் திருப்தி வரும்’ என்றான் இன்னொருத்தன். இப்படியான சந்தேகப் பேச்சுக்கள் எல்லாம் யாரோ அவர்களின் மனத்தைக் குழப்பி விடுவதால் வரும் பிரதிபலிப்பு’ என்றான் சைக்கோலாஜி படித்துக் கொண்டிருக்கும் சினேகிதன் ஒருத்தன். 

‘உங்கள் செக்ஸ் உறவில் பிரச்சினையா’ என்று கண்ணடித்தான் இன்னொரு குறும்பன். 

ஆறுதலாக அலிஸனுக்குத் தன் விளக்கங்களை எல்லாம் சொல்லிக் களைத்து விட்டான் டேவிட். அந்த நேரத்திற்தான் எமிலியை ரெயினிற் சந்தித்தான். 

தொடர்பு வளர்ந்தது. ஒன்றிரண்டு தரம் சாப்பிடவும் ஒன்றிரண்டு தரம் சினிமாவுக்கும் போனார்கள், ஆனாலும் எமிலி இவனிடமிருந்து தூரத்திற் தன்னை வைத்துக் கொண்டு பழகினாள். 

ஒரு நாள் சாப்பிட்டு விட்டு வரும்போது தன்னை யாரோ கூர்ந்து நோக்குவது போலிருந்தது. யாரென்று திரும்பிப் பார்த்தான். பார்பரா தன் ஆடம்பரமான உடையுடன் ஒரு பெரிய மாளிகை மாதிரியான காரிலிருந்து இறங்கி வந்து இவனுடன் சாப்பாட்டுக் கடையால் வெளிவரும் பெண்ணை உற்றுப் பார்த்தாள். டேவிட் தர்மசங்கடப்பட்டான். ஆனால் எமிலி டேவிட்டின் தர்ம சங்கடத்தையோ அல்லது பார்பரா என்றொரு பெண் தன்னைக் கொலை செய்வது போல் பார்ப்பதையோ கவனிக்கவில்லை. 

ஒரு சில கிழமைகளின் பின் சாந்தியும் ராஜனும் அலிஸன் குடும்பத்தையும் எமிலியையும் சாப்பிடக் கூப்பிட்டார்கள். இடி, மின்னல், புயல் எல்லாம் ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. 

அன்றுதான் எமிலிக்கு டேவிட் யார் என்று தெரிந்தது. அலிஸனின் கணவன் என்று தெரிந்திருந்தால் அவள் அவனுடன் நெருங்கிப் பழகியிருக்க மாட்டாள். 

சாந்தியும் கணவரும் அவர்களை அறிமுகம் செய்து வைத்தபோது கௌரவமாக “ஹலோ ஹவ் டூ யு டூ” சொல்லிக் கொண்டார்கள். 

அடுத்த நாள் ரெயினிற் கண்டபோது “உங்களைப் போல் எத்தனையோ பேர் இப்படி மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டாள் எமிலி. 

“நான் உன்னை ஒன்றும் ஏமாற்றவில்லை” 

“நான் முட்டாளுமில்லை” அவள் முனங்கிக் கொண்டாள்,

“அலிஸன் உங்களில் நம்பிக்கையில்லாமல் பேசுவது சரியென்று படுகிறது. ‘எனது கணவன் டேவிட் யாரோ பெண்ணுடன் லண்டனிற் திரிந்தாராம்’ என்று அலிஸன் அழுதபோது அந்த டேவிட் என்னைச் சாப்பாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போன நீங்கள்தான் என்பதை நான் என்னவென்று சிந்திக்காமல் விட்டேன்” எமிலி உதடுகளை இறுக்கிப் பிடித்துத் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டாள். 

இப்போது செத்த பிணம் தின்னும் பேயாய் டேவிட்டின் பின்னால் வந்து கொண்டிருந்தாள். 

“நீங்கள் யாரோ முன் பின் தெரியாத பெண்ணுடன் கூத்தடித்துக் கொண்டு திரியவில்லை, அலிஸனுக்குத் தெரிந்த பெண்ணுடன்தான் உங்கள் கேளிக்கைகளை வைத்துக் கொள்கிறீர்கள்” 

பார்பரா சுருதி தவறிய தாளம் மாதிரி உதிர்த்துக் கொண்டிருந்தாள். 

“பார்பரா’ 

டேவிட் குரலில் உறுதியுடன் அவளைத் திரும்பிப் பார்த்தான். 

என்ன என்பது போல் அவள் புருவங்களையுயர்த்தி அவனைப் பார்த்தாள். 

“எனது மகன் ஆஸ்பத்திரியில் இருக்கிறான். அலிஸன் சும்மாவே என்னில் சந்தேகப்பட்டுத் தன் மனத்தை வீணாகக் குழப்பிக் கொண்டிருக்கிறாள். தயவு செய்து நீ வீண் கதைகளைப் பேசி அவளைக் கலக்காதே” 

“ஓ மனைவியில் எவ்வளவு அன்பு. அப்படி அன்புள்ளவர் ஏனாம் இன்னொரு பெண்ணுடன் சாப்பாட்டுக் கடைப்பக்கம் போகிறீர்களாம்” 

“அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் நீ நினைக்கும் அளவுக்கு எந்த உறவுமில்லை. நாங்கள் சினேகிதர்கள்” 

“அப்படிச் சினேகிதமாக என்னுடனும் இருந்து கொள்ளலாமே” பார்பரா வயலின் வாசிப்பது போற் சொன்னாள். 

“என்ன” டேவிட்டின் குரலில் எரிச்சல் 

“உங்கள் ரகசியத்தை நான் அலிஸனிடம் சொல்லாமல் இருப்பதானால் அதற்கு நிபந்தனையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்” 

அவன் கேள்விக் குறியுடன் அவளைப் பார்த்தான். “என்னுடன் ஒரு கிழமை பாரிசுக்கு வரவேண்டும்” 

அவன் சிலையாய் நின்றான். 

பார்பரா அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அப்படியே அவனை அள்ளி எடுக்க வேண்டுமென்று இச்சை அவள் கண்களில் பிரவகித்து ஓடியதை டேவிட் கவனிக்காமல் இல்லை. 

“என்ன பிளாக் மெயில் செய்கிறாயா” 

“அப்படி ஒன்றுமில்லை, மரமண்டை அலிஸனை ஒரு கிழமை பிரிந்து விட்டு என்னுடன் பாரிசுக்கு வாருங்கள். சொர்க்கத்தின் யதார்த்தம் எப்படி இருக்கும் என்பதை இருவரும் சுகிப்போம்”

அவளை விட்டு உலகத்தில் எந்த மூலைக்கோ ஓடி விட வேண்டும் போலிருந்தது டேவிட்டுக்கு. 

“உலகத்தில் இதெல்லாம் நடக்காத விடயங்களா? 

அலிஸனுக்கு நான் சத்தியம் செய்திருக்கிறேன் அவளுடன் உங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று” 

அவள் கவர்ச்சியாகச் சிரித்தாள், 

“உன் சினேகிதியில்லையா அலிஸன்” 

பார்பரா இப்போது சத்தம் போட்டுச் சிரித்தாள். 

“நான் அவளுடன் சினேகிதமாய் இருப்பது உங்களுடன் நெருக்கமாய் வரத்தானே”

“உன் கனவு ஒரு நாளும் பலிக்காது” அவளை விட்டு அவன் வேகமாகப் போனான்.

– தொடரும்…

– இந்த நாவல் 1997-1998 ஆம் ஆண்டுக்குரிய இலங்கை சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது.

– வசந்தம் வந்து போய்விட்டது (நாவல்),முதற் பதிப்பு: டிசம்பர் 1997, குமரன் பதிப்பகம் , சென்னை.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *