வசந்தம் வந்து போய்விட்டது
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2026
பார்வையிட்டோர்: 74
(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8
அத்தியாயம் – 5

“எவ்வளவு நேரம் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் எமிலி, நான் எதையும் வாங்கித் தரலாமா” டேவிட்டின் குரலின் கனிவு ஒரு கணம் எமிலியை நிலைகுலையப் பண்ணியது.
“நோ, தாங்க்ஸ், நான் கொஞ்ச நேரத்தில் வெளியே போய் வரலாம் என்றிருக்கிறேன்” அவனைப் பார்க்காமற் சொன்னாள் எமிலி.
அலிஸன் மகனுடன் செல்லம் பண்ணிக் கொண்டிருந்தாள். அவளின் குடும்பம் இப்போதுதான் வார்ட்டை விட்டுப் போய் இருந்தார்கள். இரண்டு கால்களிலும் பிளாஸ்டர் பண்ணி உயரக் கட்டிவிட்டிருந்தார்கள். பீட்டர் சிணுங்கிக் கொண்டிருந்தான்.
உஷாவும், ரவியும் இன்ரென்ஸிவ் கெயர் யூனிட்டில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். ரவிக்கு இடுப்பெலும்பு ஓடிந்திருந்ததால் வயிறு வரைக்கும் பிளாஸ்டர் போட்டு அசையாமல் வைத்திருக்கும்படி சொல்லப் பட்டிருந்தது. குழந்தையின் வேதனையைத் தீர்க்க மோர்பின் ட்ரிப் போய்க் கொண்டிருந்தது. குழந்தை அரைகுறையாய் அனுங்கிக் கொண்டிருந்தான்.
ஆபரேஷன் தியேட்டருக்குப் போகமுதல் ‘தாத்தாவைக் கூப்பிட மாட்டாயா’ என்று கேட்டவன் இப்போது நோவில் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். காலையில் துள்ளிக் கொண்டோடிய செல்வம் இப்போது வாடிய கொடியாய்த் துவண்டு கிடந்தது.
அந்த யூனிட் நிறைய மிகவும் ஆபத்தான நிலையிலிருக்கும் குழந்தைகள் இரண்டு வயது குழந்தையிலிருந்து பதினைந்து வயதுக் குழந்தைகள் வரை எத்தனையோ நோய்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். எமிலி மகனின் கட்டிலருகில் உட்கார்ந்திருந்தாள். இரவு ஏழுமணிக்கு மேலாகிவிட்டது.
காலை ஏழு மணிக்கு நிம்மதியாகப் படுக்கையை விட்டு எழும்பியவனுக்கு இப்படி ஒரு திருப்பம் நடக்கும் என்று ஒரு கணம் கூட யோசித்திருப்பாளா?
தூரத்தில் சாந்தி சோகத்துடன் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவளது குடும்பத்தினர் பலர் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவளின் கணவன் ராஜன் இன்னும் வந்து சேரவில்லை.
சாந்தியுடன் அவளின் இரு தமயன்களும் தம்பியும் நின்றிருந்தார்கள். இப்போது அவளுடன் அவள் தம்பி மட்டும் நிற்கிறான் போலும். சாந்தியின் இரண்டு தமயன்களையும் எமிலிக்குத் தெரியும். என் பிரண்டு சாந்தியின் வீட்டிற் சந்தித்திருக்கிறாள். அவளின் தம்பி குமார் பற்றி சாந்தி பல தடவை சொல்லியிருக்கிறாள்.
இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் ஒரு காலத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டவன் என்றும் இப்போது உலகத்தில் அதிகம் பற்றில்லாமல் ஏனோ தானோ என்று வாழுகிறான் என்றும் சாந்தி சொல்லியிருந்தாள்.
“நான் வாங்க வரும் சாப்பாடு பிடிக்காவிட்டால் நீங்களாவது போய் ஏதும் வாங்கிக் கொள்ளுங்கள் எமிலி. நான் ரவியுடன் கொஞ்ச நேரம் இருக்கிறேன்”
டேவிட்டின் பிடிவாதம் எமிலிக்கு இப்போது தர்மசங்கடத்தைத் தந்தது. அலிஸன் இன்னும் கொஞ்ச நேரத்தில் இவனைத் தேடிக் கொண்டு வந்தாலும் வருவாள். சும்மாவே எந்த நேரத்திலும் கணவனிற் சந்தேகப்படும் அலிஸன் இப்போது இந்த இடம் ஹொஸ்பிட்டல் என்றும் பார்க்காமல் எதையும் தேவையற்றுப் பேசி விடுவாள். அவள் வாய் எப்போதும் எதையாவது மென்று கொண்டிருக்கும். அந்த சும்மா மெல்லும் வாய்க்கு எமிலி ‘அவலாக’ விரும்பவில்லை.
“டேவிட் என்னைப் பற்றிய உங்கள் கரிசனத்திற்கு மிகவும் நன்றி. ஆனால் இந்த ஹொஸ்பிட்டலில் நான் தங்கும் வரை உங்கள் தலையீடு இல்லாமலிருப்பதை விரும்புகிறேன். எனது குழந்தையுடன் நான் படும் துன்பமே என்னால் தாங்க முடியாதிருக்கிறது. அதற்கு மேல் அலிஸனின் அலட்டல் வந்தால் அதை என்னாற் தாங்க முடியாது” எவ்வளவு நிதானமாக நடக்க முயன்றாலும் ரவியை அந்த நிலையிற் பார்த்த போது அவள் மனம் கலங்கிவிட்டது.
டேவிட் அவளை மௌனமாக ஏறிட்டுப் பார்த்தான். அவளிற் பரிதாபம் வந்தது. தன்னால் தன் குழந்தைக்குத் தாயாகவும் தகப்பனாகவுமிருந்து எல்லாம் செய்து முடிப்பேன் என்று எத்தனையோ கஷ்டப் பட்டாலும் அவளும் ஒரு சாதாரண பெண். அண்ணன் தம்பி, தமக்கை, தங்கை என்று ஆதரவு தர யாருமில்லாதவள்.
“என்னிடம் பரிதாபப் படவேண்டாம், இப்படித் துயரங்கள் ஒரேயடியாக வருவதில்லை. திடீரென்று யாருக்குத் தான் இந்தக் கஷ்டங்கள் வரும். நான் உங்களிற்தான் பரிதாபப் படுகிறேன் டேவிட்”
அவள் அவனை நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள். எரிச்சலும், இடைவிடாச் சண்டையுமான திருமண வாழ்க்கையில் அலிஸனும் டேவிட்டும் ஒருத்தரை ஒருத்தர் வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கொடுமைகளிலிருந்து ஒரு கொஞ்சம் நிம்மதி தேட டேவிட் எமிலியின் உறவைப் பாவிக்க யோசிக்கிறான் என்பது அவள் கருத்து.
அவனிடம் பரிதாபம் இருந்தாலும் அலிஸனுக்கு தெரியாமல் அவன் தன்னிடம் சினேகிதமாய் இருக்க முயல்வதை அவளால் மன்னிக்க முடியாததாக இருந்தது.
யாருடையவும் ‘சின்ன வீடாக’ இருக்க அவள் ஒரு நாளும் நினைத்ததில்லை. உறவுகள் சரியாக அமையாவிட்டால் அவர்கள் விவாகரத்துச் செய்து கொள்வது நல்லது என்பது அவள் அபிப்பிராயம்.
சம்பிரதாயங்களுக்காகவும் சமுதாயக் கோட்பாடு களுக்காகவும் சமய ரீதியாக ஒரு சடங்கைச் செய்து விட்டு ஒருத்தரை ஒருத்தர் வருத்திக் கொள்வது மிகக் கொடுமையான விடயம் என்று அவள் எத்தனையோ தரம் விவாதித்ததுண்டு.
அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதே நேரம் சாந்தியும் அவளின் தம்பியும் எமிலியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
“எமிலி இவரை இன்னமும் காணவில்லை….”
சாந்தி சொல்லிய வார்த்தைகள் முடிய முதல் ராஜன் அவசரத்தில் ஓடோடி வருவதைக் கண்டதும் சாந்தியின் கண்கள் குளமாகின.
காலையில் அவள் அணைப்பில் கண் திறந்த கணவனை மத்தியான நேரம் இன்னொருத்தியின் இணைப்பில் பார்த்த துன்பம் சாந்தியின் மனத்தை ஈட்டியாய்த் துளைத்தது. அவன் ஓடோடி வந்து மனைவியை அணைத்துக் கொண்டான். “உஷா எங்கே” சாந்தி மௌனமாய் நடக்க ராஜன் பின் தொடர்ந்தான்.
குமார் தமக்கையையும் மைத்துனரையும் பின் தொடராமல் நின்றான்.
“ஹலோ குமார்” எமிலி குமாரிடம் பேசினாள். ஒருத்தரும் அவர்களை அறிமுகப் படுத்தவில்லை. ஆனால் எமிலிக்கு அவனைப் பற்றித் தெரியும். எமிலி பற்றி அவனுக்குத் தெரியும்.
டேவிட் இன்னும் நின்று கொண்டிருந்தான். எமிலி இருவரையும் ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் செய்து வைத்தாள்.
“உங்கள் மகன் எப்படியிருக்கிறார்”
குமார் டேவிட்டைக் கேட்டான்.
“கால்கள் இரண்டையும் முறித்துக் கொண்டிருக்கிறான்” டேவிட் சோர்ந்த குரலிற் சொன்னான்.
“நான் போய் வருகிறேன்” டேவிட் எமிலியுடன் பேசிக் கொண்டிருக்காமல் போனான்.
“சாந்தி பாவம், உஷாவின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது…. ஆனாலும் டொக்டர்கள் நம்பிக்கையாய் இருக்கும் படி சொல்கிறார்கள்”
குமார் தூரத்தில் நிற்கும் தமக்கையையும் மைத்துனரையும் பார்த்த படி சொன்னான்.
“வருவது வரட்டும் என்றில்லாவிட்டால் பெரிய காற்றில் அடிபட்ட இலையாகப் பறந்துபோய் விடுவோம். சாந்தி மிகவும் இளகிய மனம் கொண்டவள். அவள் இந்த அனுபவத்தின் பின் திடமானவளாக வரலாம்”
குமாருக்கு அவளின் தத்துவம் பிடித்து விட்டது. எமிலி மிகவும் உறுதி வாய்ந்தவள் என்று எத்தனையோ தரம் சாந்தி சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறான்.
“வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பிலோசபி எனக்குப் பிடித்திருக்கிறது”
“பாடசாலையில் படிப்பது கையளவு. வாழ்க்கையின் அனுபவத்திற் தெரிந்து கொள்வது உலகளவு என்று நினைக்கிறேன்”
அவளின் நீல விழிகள் சோகத்துடன் அவனைப் பார்த்தன.
ரவியின் முனகல் அவர்களின் பேச்சைத் தடைபடுத்தியது. ஒரு நேர்ஸ் வந்து குழந்தையின் நிலையைப் பார்த்து எழுதிக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் ரவி அயர்ந்து தூங்கினான்.
உலகத்தை இருள் கவ்விக் கொண்டது.
வெளியில் கார்கள் ஆரவாரம் தணிந்து கேட்டது.
”குமார் எனக்கொரு உதவி செய்வீர்களா”
எமிலி தயங்கியபடி குமாரைக் கேட்டாள்
“என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்”
“நான் கொஞ்சம் வெளியிற் போக வேண்டும், ரவி தனது தாத்தாவைப் பார்க்க வேண்டும்” என்றான்.
“வெளியிற் போய் போன் பண்ணி விட்டு வருகிறேன். கொஞ்ச நேரம் ரவியுடன் இருக்க முடியுமா”
“தாராளமாக”
குமார் ரவியின் கட்டிலுக்கருகிலுள்ள கதிரை ஒன்றில் உட்கார்ந்தான்,
ஆங்கிலத் தாய்க்கும் தமிழனுக்கும் பிறந்த ரவியைப் பார்த்தால் பிராமணப் பையன் போல் மஞ்சள் கலந்த நிறமாயிருந்தான். நோவில் முனங்கிக் கொண்டு கண் திறந்தவன் குமாரை ஏற இறங்கப் பார்த்தான்.
“அம்மா எங்கே”
“அம்மா தாத்தாவுக்கு போன் பண்ணப் போய்விட்டாள்” குழந்தை ரவி இவனை ஏற இறங்கப் பார்த்தான்.
“என்ன ரவி வலிக்குதா” குமார் குழந்தையின் தலையை அன்புடன் தடவிவிட்டான்.
ரவியின் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. குழந்தைக்குச் சரியான வலிபோலும்.
“அழாதேயுங்கோ ரவி, எல்லாம் சரியாகப் போகும்” குமார் குழந்தையின் கைகளைப் பற்றிய படி சொன்னான்.
“நீங்கள் நீங்கள்…” குழந்தை ஏதோ சொல்லத் தவறினான்.
குமார் குழந்தையை அன்புடன் தடவி விட்டான்.
“நீங்கள் எனது தகப்பன்தானே” குழந்தை ரவி தேம்பி தேம்பி அழுதபடி கேட்டான்.
குமார் மலைத்துப் போய்ச் சிலையாய் அமர்ந்தான்.
உஷாவை செயற்கையாக மூச்செடுக்கும் இயந்திரத்துடன் இணைத்திருந்தார்கள். அவள் உடம்பு இயந்திரத்துடன் சேர்ந்து மூச்செடுத்தது.
இப்போதுதான் ராஜன் மகளைப் பார்க்க வந்திருக்கிறான். காலையில் வீட்டை விட்டுப் போகும்போது கள்ளம் கபடமற்ற கணவனாகத் தெரிந்தவன் இப்போது அப்படித் தெரியவில்லை.
அவள் மனம் பாறாங் கல்லாய்க் கனத்தது.
காலையில் கலவி புரிந்து மகிழ்ந்த நெகிழ்ச்சி எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்ததாக ஒரு பிரமை. பத்து வருடகாலத்தின் இனிமையான நினைவுகளை இன்று மதியம் அடித்த பேய்க்காற்று சீரழித்து விட்டதான கற்பனை.
பத்து மணியளவில் தான் இன்னுமொரு குழநதைக்குத் தாயாகப் போகிறதாக மழையில் நின்று குதித்தாளே அந்த மகிழ்ச்சி எங்கேயோ அடிபட்டுப் போயிற்று.
இரண்டுதரம் குழந்தை வருமாற்போல் சாடைமாடை காட்டிவிட்டு இயற்கை விளையாடி விட்டதே. இப்போது பூகம்பமாய் மனம் வெடிக்கும்போது ஒரு குழந்தை உயிரோடு போராடுகிறது. இன்னொரு குழந்தை உயிராக மலர்கிறது அவள் வயிற்றில்.
சாந்தி தேம்பித் தேம்பி அழுதாள்.
“அழக்கூடாது சாந்தி. உஷாவின் நிலை சரிவரும் என்று டொக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள் தெரியும்தானே” ராஜனின் குரல் அவள் காதுகளில் கிசுகிசுத்தன. அவளுக்கு அந்தக் குரல் நாராசமாக இருந்தது. அவன் அணைப்பு ஒரு பாம்பின் அணைப்பை ஞாபகப் படுத்தின.
அவளுக்கு அவனை இன்னொரு பெண்ணுடன் சந்தித்தது ஆச்சரியமல்ல.
அவன் ஒரு வழக்கறிஞன், எத்தனையோ பேர்கள் அவனின் உதவிக்கு வருவார்கள். ஆண்கள் பெண்கள் என்று பேதமில்லாமல் அவன் தனது வாடிக்கையாளரை கோர்ட்ஸ்க்கு அழைத்துச் செல்வது அவளுக்குத் தெரியும்.
ஆனால் இன்று அவனை இன்னொரு பெண்ணுடன் கண்ட தோற்றம் அப்படி உத்தியோக பூர்வமானதல்ல என்று அவள் மனம் சொல்லியது.
அப்படி முட்டாள்த் தனமாக அவள் ஏன் நினைக்கிறாள் என்றும் புரியவில்லை. ஆனால் அது முட்டாள்த்தனமான நினைவல்ல என்று மட்டும் மனம் சொல்லியது.
“பகலெல்லாம் உங்களைத் தேடினேன் உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று அவள் அழவில்லை.
எதிர்பாராத எத்தனையோ விடயங்களை அவள் மனம் கிரகிக்க முடியாமற் தத்தளித்தது.
இதுதான் வாழ்க்கையா? எதிர்பாராத சோதனைகளைக் கொடுத்து என்னைச் சீண்டுவதுதான் உனக்கு விளையாட்டா என்று கடவுளைக் கேட்க வேண்டும் போல் இருந்தது.
இருவருக்குமிடையில் ஏதோ பாரிய திரை விழுந்து விட்டாற் போலிருந்தது. அவனும் இவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. இவர்களைச் சுற்றிய உலகத்தில் நேர்சும் டொக்டர்களும் அலைந்து திரிந்தார்கள். இரவு நீண்டு கொண்டே போனது. ஒவ்வொரு பதினைந்து நிமிடமும் உஷாவின் உடல்நிலை பரிசோதிக்கப் பட்டது.
கணவனும் மனைவியும் அதிகம் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. இவர்களைச் சுற்றி டொக்டர்ஸ், நேர்ஸஸ் அடிக்கடி வந்ததால் அதிகப்படியாக ஒன்றும் பேசமுடியவில்லை. “நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை” அவள் அவன் முகத்தைப் பார்க்காமற் சொன்னாள்.
“நீ சாப்பிட்டாயா”
அவள் இல்லை என்று தலையாட்டினாள்.
இன்னும் சரியாக அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. காலையிற்தான் அவன் தலைவருடி அன்பு தந்தாள். இப்போது இந்த மாலை நேரத்தில் எத்தனையோ மைல்களுக்கப்பால் அவனைப் பார்ப்பது போலிருந்தது.
‘உங்களைப் பார்த்தால் எத்தனையோ சொல்ல வேண்டுமென்ற துடிப்புடன் ஒவ்வீஸ் தேடி ஓடி வந்தேன். ஆனால் உங்களுடன் மிக நெருக்கமாக ஒரு பெண்ணைப் பார்த்ததும் என் இருதயத்தை நெருப்பில் வாட்டியதுபோல் துடித்து விட்டேன். யார் அந்தப் பெண்?’ அவள் அவனிடம் கேட்கத் துடித்தாள். வாய்வரவில்லை.
நினைவில் வந்த வசனங்கள் நெஞ்சுக் குழிக்குள் அடைபட்டுக் கொண்டன.
பத்து வருடம் உடலையும் உணர்வையும் பகிர்ந்து கொண்ட மனிதன் இப்போது அந்நியமாய்த் தெரிந்தான்.
அவன் அந்நியமாய் வாழ்க்கையெல்லாம் இருந்திருக்கலாம். இவள்தான் ஏதோ கற்பனையில் அவனைத் தன் உயிராய் மதிக்கிறாள்.
அவள் எப்படி அடக்கியும் அவளின் விம்மலை அவளால் அடக்க முடியவில்லை. வயிற்றில் ஒரு கரு, கட்டிலில் இன்னொரு உயிர். இரண்டையும் தந்தவன் இப்போது இவளின் விம்மலுக்குக் காரணம் தெரிந்தும் தெரியாமலும் தர்மசங்கடப் பட்டுக் கொண்டிருந்தான்.
“நீங்கள் இருவரும் ஏன் கஷ்டப் படுகிறீர்கள். ஒரு ஆள் றெஸ்ட் எடுக்க மற்ற ஆள் குழந்தையுடன் இருக்கலாமே” ஒரு நேர்ஸ் வந்து சொன்னாள்.
“நீங்கள் வீட்ட போங்கோ” சாந்தி அவனிடம் சொன்னாள். அவன் பக்கத்திலிருந்தால் அவளின் அழுகை கூடும்போல் இருந்ததே தவிரக் குறையவில்லை.
அவன் மார்பில் முகம் புதைத்துத் தன் துயர் மறக்க வேண்டும் என்று துடித்தாளோ அவன் முகம் பார்க்கவே தயங்கினாள்.
“நீயும் வந்தால் உனக்குத் தேவையான சாமான்களை எடுத்துக் கொண்டு வரலாம்”
“நான் உஷாவை விட்டுப் பிரிய மனம் வரவில்லை” அவன் மௌனத்துடன் வெளியேறினான்.
அத்தியாயம் – 6
எமிலி தகப்பனுக்குப் போன் பண்ணியபோது அவர் வீட்டு ஆன்ஸ்வர் போன்தான் வேலை செய்தது. அவர் வீட்டிலில்லை. மிஸ்டர் ஸிம்சனுக்கும் மகளுக்கும் ஒரு நாளும் சுமுகமான உறவிருக்கவில்லை.
அவள் யோசனையுடன் நடந்து வந்துஹொஸ்பிட்டல் வாசலில் நின்றாள்.
டேவிட்டும் அலிஸனும் காரில் ஏறுவது தெரிந்தது. அலிஸனின் சொந்தக்காரர்கள் ஆஸ்பத்திரி அருகில் இருக்கிறார்கள். அலிஸன் அங்குபோய்த் தங்கி விட்டுக் காலையில் வருதாகச் சொன்னாள். டேவிட் அவளைக் கொண்டு போய் விட்டு விட்டு வந்து பீட்டருடன் வார்ட்டில் தங்குவதான ஏற்பாடு எமிலிக்குத் தெரியும்.
அலிஸனின் சின்ன மகன் சைமன் தாயில்லாமல் ஒரு இடமும் போக மாட்டான். அவனுடன் ஹொஸ்பிட்டலில் தங்குவது அலிஸனால் முடியாத காரியம்.
இன்னும் சில தினங்களுக்கு டேவிட்டை அடிக்கடி சந்திக்க வரும் என்று நினைத்தபோது எமிலியால் தர்ம சங்கடப் படாமல் இருக்க முடியவில்லை.
“எனது பெயர் டேவிட்” என்று அவன் தன்னை அவளுக்கு அறிமுகம் செய்து கொண்டபோது எனக்கு அலிஸன்என்றொரு மனைவியும் பீட்டர், சைமன் என்ற பெயர்களில் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தால் அவன் தொடர்பு தொடர்ந்திருக்குமா?
வழக்கமாகவே தன்னுடன் ஒட்டிக் கொள்ள வரும் உதவாக்கரைகளை ஒதுக்கி நடக்கப் பழகியிருந்தாள் எமிலி. சாதாரண பெண்களின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் அவளிடம் இல்லை.
குழந்தையாயிருக்கும்போதே அவள் வாழ்க்கையில் அனுபவித்த துயர்கள் அவளின் உறுதியான மனப் போக்குக்கும் காரணமாக இருக்கலாம்.
அழகிய குழந்தை எமிலி ஒரு பனிபெய்யும் பின்னேரம் பாடசாலையில் தாயை எதிர்பார்த்து நின்றதும் தாய் நீண்ட நேரம் வராமல் போனதும் கனவு போலிருக்கிறது.
ஆறுவயது எமிலிக்குத் தாயின் மௌன விம்மல்களின் அர்த்தம் புரிவதில்லை. வெறித்துப் பார்க்கும் தாயின் விரக்தியான பார்வையின் சோக மொழி என்ன என்று துல்லியமாக விளங்கிக் கொள்ள முடியாத வயது.
தனது ஆறுவயது மகன் அடிபட்ட நாயாய்ப் படுத்திருக்கிறான். அவனுக்கும் விளங்காது இவள் படும்பாடு. எல்லாக் குழந்தைகளுக்கும் தகப்பனோ தாத்தாவோ பக்கத்திலிருக்கிறார்கள். ரவியைத் தடவி விடத் தன்னைத் தவிர யாருமில்லை.
அவனுக்குத் தாயாகும்போது தான் செய்யும் முடிவு சரியானதுதானா என்று எத்தனையோ தரம் யோசித்தாள். ஆனந்தனைத் திருமணம் செய்யத் தான் ஒரு நாளும் நினைத்ததில்லை.
ஆனந்த் ஒரு தமிழன். மரபுக் கொள்கைகளில் மிகவும் ஈடுபாடுடையவன். ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பொறுப்புள்ள சகோதரனாகக் கடமையாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானவன்.
இளம் வயதுத் துடிப்புக்களின் பரிமாணத்தில் மட்டுமல்லாமல் பரந்த வாழ்க்கைப் போராட்டத்தையுணர்ந்த ஒரு ஏழைத் தமிழனின் மனத்தில் உருவாகிய அன்பு எமிலியைத் தன் துணைவியாக்கும் மனநிலைக்குத் தள்ளியது.
எமிலியைச் செய்து கொண்டு லண்டனிற் தங்கி விட்டால் இந்தியாவிற் தன் தங்கைகளின் சுமை எப்படியிறங்கும் என்று அவன் யோசிப்பது தெரிந்திருந்தது.
ஆனால் திருமண உறவுகளைப் பற்றி அவள் வைத்திருக்கும் தத்துவங்களை அவனுடன் வாதம் பண்ணி விவாதிக்க அவள் தயாராகவில்லை.
அவளில் எத்தனைதான் அன்பாயிருந்தாலும் அந்த அன்புக்குள் தன்னைச் சிறை பிடித்துக் கொள்ளத் தான் தயாராயில்லை என்பதை அவள் எத்தனையோ தரம் அவனுக்குச் சொல்லியிருக்கிறாள்.
பெரும்பாலான ஆசிய ஆண்கள் தங்கள் சுகத்துக்கும் கேளிக்கைகளுக்கும் ஆங்கிலேயப் பெண்களைப் பாவித்து விட்டுத் தங்கள் படிப்பு முடிய ‘நல்ல’ பிள்ளைகளாய்த் தங்கள் ஊருக்குப் போய்த் திருமணம் செய்து கொள்வது ஆனந்துக்குத் தெரியும்.
தனது குடும்பத்துச் சுமைகளைப் பார்த்துவிட்டு எமிலியைத் திருமணம் செய்து கொள்ள நினைப்பதாக அவன் சொன்னபோது அவள் சிரித்து மழுப்பி விட்டாள்.
“இங்கிலாந்தின் இனவாதம் என்னை மிகவும் வருத்துகிறது. ஆனால் அதே நேரம் இந்தியாவின் சாதிப் பாகுபாடும் என்னைத் துக்கப் படுத்துகிறது. நான் பிராமணன் என்பதால் எங்கள் மூதாதையர்களும் அவர்களைப் பின் பற்றிய தற்போதைய தலைவர்களும் செய்வதெல்லாம் சரியென்று நான் நினைக்கவில்லை. என்னோடு நீ வாழ நினைத்தால் லண்டனில் மட்டுமல்ல. உலகில் எந்த இடத்திலும் எந்த இடர்களையும் சமாளிக்கத் தயார்.” ஆனந்த் இப்படிச் சொன்னபோது எமிலிக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
உலகத்தில் எத்தனை கோடி மனிதர்கள். இப்படிச் சங்கற்பங்கள் எத்தனை கோடி வருடங்களாச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்?
அம்மாவும் அப்பாவும் இப்படித்தானே ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக் கொஞ்சியிருப்பார்களா? அப்பாவுக்கு அந்த அன்பு இருந்திருந்தால் என்னவென்று என்தாய் பனிபெய்யும் பட்டப் பகலில் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டாள்?
எமிலியின் கண்களில் நீர் வழிந்தது. ஆனந்தைத் தன் நீர் வழிந்த கண்களுக்குள் நிழலாய்ப் பிடித்துக் கொண்டு உருக்கமாய்ச் சொன்னாள் “உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் இப்படித்தான் ஒருத்தருக்கொருத்தர் சொல்லியிருப்பார்கள். ஆனால் மனித மனம் குரங்குபோன்றது. இடத்துக்கு இடம் தாவும். எல்லை மீறிக் குதிக்கும். இப்போது நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.எதிர்காலம் எப்படி இருக்குமோ தெரியாது. அளவுக்கு மீறிக் கற்பனைக் குதிரைகளை அவிழ்த்து விடாமல் அளவோடு சந்தோசத்தை அனுபவிப்போம்”
எமிலி ஏன் இப்படிப் பிடிகொடுக்காமற் கதைக்கிறாள் என்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தனது தாய் தகப்பன் தங்களின் காதலை ஏற்க மாட்டார்களோ என்ற பயத்திற்தான் எமிலி இப்படி நடக்கிறாளோ என்று ஒரு கணம் யோசித்தான்.
“காதல் என்பது ஒரு மயக்க நிலை. இளமையின் உணர்வுகளின் குழப்பத்தை வர்ணிக்கப் பாவிக்கப் படும் ஒரு சொல் என்றும் எடுக்கலாம். அந்த மயக்கத்தில் இரண்டு மனிதர்களின் வாழ்க்கையை ஒன்றாகப் பிணைத்துப் பின்னர் உணர்வுகளின் உற்சாகம் தளர்ந்தபின் அவதிப் படுவதைவிடக் கவனமாக இருந்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்கிறேன்’ இது எமிலியின் வாதம்.
“அப்படியானால் நீ என்னைக் காதலிக்கவில்லையா” இது ஆனந்த்தின் அவசரமான கேள்வி.
“சூரியக் கதிர்கள் பூமியை முத்தமிடாமலிருக்குமா மல்லிகை மணம் தென்றலிற் கலக்காமலிருக்குமா புல் நுனியில் பனிமலர்கள் உறங்காமல் முடியுமா”
அவள் சிரித்தபடி கேட்டாள்.
“அதெல்லாம் இயற்கையின் நியதிகள்” அவள் மெல்லிதழ்களைச் சுவைத்தபடி ஆனந்த் சொன்னான்.
“அதே போலத்தான் எனது உணர்வுகளும் இயற்கையானது, இந்த நிமிடத்தில் இந்தக் கணத்தில் எனது உடம்பையும் உயிரையும் என் உணர்வுகள் அனைத்தையும் உன்னுடன் கலந்த தாக்கி விட்டேன். இந்த இன்ப நிலையும் நெருக்கமும் நாளைக்கு அல்லது அடுத்த வருடத்துக்கு நிலைக்குமென்று என்ன நிச்சயம்”
அவனின் இளம்தாடியை வருடியபடி அவள் கேட்டாள். அந்த நேரம் ஒரு வசந்த காலமாலைப் பொழுது. அவனின் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.
அவனுடைய தாய் தகப்பன் படிப்பில் அக்கறை காட்டச் சொல்லி அடிக்கடி எழுதிக் கொண்டிருந்தார்கள்.
இவன் தனது காதலை விளக்கி எழுதிய கடிதத்திற்குத் தகப்பனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
“எல்லாம் மாயை” என்று இவன் தகப்பன் இவனுக்குப் பதில் எழுதவில்லை.
ஒரு தங்கை மட்டும் இவனது முறைப்பெண்ணைப் பெண்கேட்டுத் தாய் தகப்பன் போனது பற்றி ரகசியமாய் எழுதியிருந்தாள்.
“உனக்கு இந்தக் கடிதங்களைப் பற்றி எரிச்சல் வருவதில்லையா” ஆனந்த் எமிலிக்குத் தன் தங்கையின் கடிதத்தைக் கொடுத்த படி கேட்டான்.
“இல்லை” அவள் தன் நீல விழிகளை இவனுடன் பிணைத்தபடி சொன்னாள்.
“ நீ புதினமான பெண்” அவன் சலித்துக் கொண்டான். “இல்லை கொஞ்சம் புத்திசாலித்தனமாக வாழ நினைக்கும் பெண்”
“அப்படி என்றால்….” அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
“சமய வாதிகளின் திருப்திக்காகவும், சமுகவாதிகளின் முன்னுக்குப் பின் முரண்பாடான கோட்பாட்டுக்களுக்காகவும் குடும்பங்கள் ஒரு நாட்டின் ஆணிவேர் என்று போலிக் கூச்சல் போடும் அரசியல் வாதிகளுக்காகவும், வாழ்க்கை எல்லாம் ஒரு மனிதன் போடும் இலவச உணவுக்காகவும் எனது உடம்பையும் உணர்வுகளையும் ‘கல்யாணம்’ என்ற சடங்கின் மூலம் இன்னொருத்தரின் சொத்தாக்க நான் விரும்பவில்லை”
எமிலி நிதானமாகச் சொன்னாள்.
ஆனந்த் அவளை வியப்புடன் பார்த்தான். கடந்த பல மாதங்களாகத் ‘திருமணம்’ (?) செய்து கொள்ளாத தம்பதிகளாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனந்த் இந்தியா திரும்பிப் போவதை அவள் விரும்ப மாட்டாள் என்று அவன் எதிர்பார்த்தான்.
அவளோ இவனுடன் தன்னையிணைத்துக் கொள்ள மறுக்கிறாள்.
அப்படி என்றால் நீ என்னைக் காதலிக்கவில்லையா”
அவன் கேள்வி அப்பாவித்தனமாகப் பட்டது அவளுக்கு.
“I love you from the bottom of my heart but doesn’t mean that I will let my self imprisoned by that word” அவள் சிரித்தாள்.
“உனது ஞாபகம் என்னுடன் எப்போதும்வாழும். நான் உன்னில் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு உனக்குத் தெரியாமலே போகலாம். ஆனால் தயவு செய்து என்னைத் திருமணம் என்ற சிறைக்குள் இழுக்க வேண்டாம். உங்களுக்கு லண்டன் அலுக்க அதிக நாட்கள் எடுக்காது. படிப்பை முடித்து விட்டு ஊருக்குப் போங்கள். இல்லை என்றால் இதே தர்க்கம் எங்களுக்குள் நீண்டு கொண்டே போகும். ஒருத்தரை ஒருத்தர் பகைத்துக் கொள்வோம். எங்கள் அன்பின் பிணைப்பு மிகவும் வலிமையாக இருக்கும் போது எங்களைப் பிரித்துக் கொள்வோம். ஏனென்றால் இந்த இனிய நினைவுகள் எங்கள் எதிர்கால வாழ்க்கையின் ரசனையாக இருக்கும்.
ஒருத்தரில் ஒருத்தர் அலுத்துப் போய்ப் பிரிந்து விட்டு அந்தப் பிரிவினையைத் தாங்க முடியாமல் இன்னொரு உறவைத் தேடியலைந்து இந்த உறவில் பழைய சினேகிதத்தின் பகைமை எரிச்சலைப் பிரதிபலிக்காமல் இப்போது நாங்கள் இன்பமாய் இருக்கும் போது எங்கள் துன்பமான பிரிவை முடிவு கட்டுவோம்”
கல்லூரி ஆசிரியை போலச் சொல்லி முடித்தாள் அவள். அவர்கள் அப்போது இங்கிலாந்தின் கிழக்குக் கடற்கரை ஒன்றின் கரையில் பதிந்த குன்று ஒன்றில் சாய்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
உல்லாசப் பிரயாணிகளாகக் கடற்கரையில் புரண்டு விளையாடிய சிறுவர்களும் பெரியவர்களும் ஒவ்வொருத்தராய்க் கலைந்து கொண்டிருந்தார்கள்.
யூலை மாத வெய்யிலிற் கடல் அலைகள் வெள்ளித் துணிக்கைகளாய்ச் சிதைந்து பாய்ந்தன. நீலவானம் வெண்மேகக் கூட்டங்களில் முகம் மறைத்து முஸ்லீம் பெண்ணைப் போல் உலகத்தை எட்டிப் பார்த்தது.
கடல் தழுவிய இளம் காற்று இவர்களையும் கொஞ்சி விளையாடியது.
“நீங்கள் இன்னம் சில கிழமைகளில் ஊருக்குப் போகப் போகிறீர்கள், இன்றைய பினனேரம் எங்கள் கடைசிச் சந்திப்பின் சாட்சியாக இருக்கட்டும்”
அவள் குரல் தழுதழுத்தது.
அவளுக்கு இரும்பு மனமா என்ன?
அவனைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாள். அவன் இந்தியாவுக்குத் திரும்பும் வரை ஒன்றாகவும் சேர்ந்திருக்க மாட்டேன் என்கிறாள்.
“நான் ஊருக்குப் போகும் வரைக்கும் உன்னுடன் பழகக் கூடாது என்று சொல்கிறாயா” அவன் குரலிற் கோபம்.
“பார்த்தீர்களா, இப்படியெல்லாம் கோபம் வரும் என்று தெரிந்துதான் எங்கள் பிரிவைச் சட்டென்று முடித்து விடுவோம் என்று சொன்னேன்”
அவள் அவன் தலைமுடியைச் செல்லமாகத் தீண்டினாள். அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவள் அவன் என்ன சொன்னாலும் மறுமொழி சொல்லக் காத்திருக்கிறாள். அவள் பிடிவாதமானவள். ஆனால் ஏன் இப்படித் திடீரென்று தன்னைப் பிரிந்து விடச் சொல்லிச் சொல்கிறாள் என்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
இருவர் அணைப்பிலும் வெகுநேரம் கட்டுண்டு கிடந்தார்கள். இந்த நிமிடமும் இந்த இன்பமும் இனி ஒரு நாளும் திரும்பி வராது என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. அவளை இறுக்கி முத்தமிட்டான். அவனின் தாபம், சோகம், பிரிவின் துயர் அவன் அணைப்பிற் பிரதிபலித்தது.
ஒரு வெறி, ஒரு ஆங்காரம் ஒரு துயரமான ஓலம். இயற்கையன்னை அணைகளையுடைத்துக் கொண்டு அகிலத்தையே மூடிக் கொண்டதுபோல் அவன் உணர்வுகள் வெடித்துப் பெண்மையின் ஒவ்வொரு அணுக்களையும் ஆண்டு கொண்டது.
இரவு நடுச்சாமம் கடற்கரையிலிருந்து அவர்கள் பிரிந்தபோது அடுத்த நாள் அவளைச் சந்திக்க முடியாது என்று அவனுக்குத் தெரியாது.
அவள் இரண்டு மூன்று கிழமைகளுக்கு முன்னரே வேறு இடம் பார்த்து விட்டாள். அவன் இந்தியா போக ஒரு சில வாரங்களுக்கு முன்னரே அவனுடனுள்ள தொடர்பை அறுத்துக் கொள்வதாக அவள் முடிவு செய்து விட்டாள்.
அப்படி அவள் முடிவு செய்யா விட்டால் ஏதோ ஒரு சூழ்நிலையில் ‘ஆனந்த் நான் உங்கள் குழந்தையைச் சுமக்கிறேன். உங்களில் உள்ள அன்பின் சின்னமாக அந்தக் குழந்தையைப் பராமரிப்பேன்” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கதறிவிடுவாள் என்று தெரியும்.
அலிஸனைக் கொண்டு போய்ச் சினேகிதர்கள் வீட்டிற் சேர்த்து விட்டு வார்ட்டுக்குத் திரும்பியபோது டேவிட் மிகவும் களைத்து விட்டான். விடிந்த நேரத்திலிருந்து ஒரே கார் ஒட்டும். ஒரே அலைச்சல்.
மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது டேவிட்டின் மகன் பீட்டரின் கால் மட்டும்தான் உடைந்தது. உஷாவின் தலையோ மிகவும் பாரதூரமான அடிக்குள் உணர்விழந்து கிடக்கிறது.
டேவிட் மேற் கண்டவாறு சிந்தித்துக் கொண்டு வந்த போது ‘ஹலோ’ என்ற குரல் அவனைத் திடுக்கிடப் பண்ணியது.
ஆஸ்பத்திரி விறாந்தையிலுள்ள பெஞ்ச் ஒன்றில் தனிமையாக உட்கார்ந்திருந்த அந்த உருவத்தைக் கண்டதும் அவன் ஒரு தரம் கண்களை அகல விரித்துப் பார்த்தான்.
“என்ன டேவிட் அப்படிப் பார்க்கிறாய் நான் தான் பார்பரா” அவள் வசீகரமாய்ச் சிரித்தாள்,
“ஹலோ பார்பரா, கண்டு கனகாலம்.. எப்படி இருக்கிறீர்கள்… அலிஸன் இப்போதுதான் வீட்டுக்குப் போனாள்” அவன் படபடவென்று சொல்லிக் கொண்டு போனான்.
மத்தியானம் பெய்து கொட்டிய மழைக்கு எதிராக இப்போது வானம் மிகவும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூமி மனிதர்களுக்குக் கண் சிமிட்டியது.
விறாந்தையின் ஜன்னலால் வானத்தை வெறித்துப் பார்த்தான் டேவிட்.
“என்னை அடிக்கடி காண நேரமிருந்தாலும் தவிர்த்துக் கொள்வீர்கள் டேவிட் அப்படித்தானே”
அவள் அலங்காரமாய்ச் சிரித்தாள்.
குழந்தையை வார்ட்டில் வைத்துக் கொண்டிருக்கும் தகப்பனுடன் அவள் பேசும் சிருங்கார பாவனை ஒரு நாடகம் போலிருந்தது. பார்பரா என்றுதான் யதார்த்த உலகத்தைக் காணப் போகிறாள்?
அவள் கேட்ட கேள்விக்கு அவன் மறுமொழி சொல்லவில்லை.
“பீட்டரின் கால் உடைந்து விட்டது. மற்றக் குழந்தைகளிற் சிலருக்குப் பலத்த காயம், நல்ல காலம் பீட்டரின் நிலை பரவாயில்லாமலிருக்கிறது” டேவிட்டின் படபடப்பு இன்னம் மாறவில்லை.
“ஏன் என்னைக் கண்டால் உங்களுக்குக் கை கால்கள் தடுமாறுகின்றன.” அவள் குரலில் ஏளனம்.
அவனுக்கு எரிச்சல் வந்தது.
யூனிவர்சிட்டியில் அவனுடன் படிக்கும்போது பார்பரா இப்படி எத்தனையோ தரம் கேட்டிருக்கிறாள்
இரவில், உலகுறங்கும்போது ஒற்றையாய் வந்து மனித உணர்வுகளைச் சுண்டியிழுக்கும் மோகினிப் பேயா இவள்?
இவன் குழந்தைக்குச் சுகமில்லை. ‘எப்படி உன்குழந்தை என்று கேட்காமல் என்னைக் கண்டு ஓடுகிறாயே என்று இளிக்கிறாளே பார்பாராவின் இந்த நடிப்பு அலிஸனுக்குத் தெரியப் போவதில்லை. ஏன் என்றால் அலிஸனைக் கண்டதும் “ஐயோ என் அருமைச் சினேகிதியே உனக்கு ஏன் இந்தத் தண்டனை? அன்பில்லாத ஒரு கணவன் அடிபட்டுக் கிடக்கும் ஒரு குழந்தை. இதெல்லாம் கடவுள் சோதனையா” என்று கட்டி அழுதிருப்பாள்.
ஒஸ்கார் பரிசு எடுக்கக் கூடியவள்.
“வார்டுக்குக் குழந்தையைப் பார்க்கப் போனேன் தாய் தகப்பனைத் தவிர யாரும் இந்த நேரம் குழந்தைகள் வார்ட்டுக்குள் வரமுடியாதாம்”
பார்பரா சூயிங்கத்தைச் சுவைத்தபடி சொன்னாள்.
“நடு இரவிற்தான் சுகம் கேட்க, நேரம் கிடைத்ததா உனக்கு”
“என்ன செய்வது, என்னைப் போன்ற பெண்கள் தங்கள் வாழ்க்கைக்கு இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கிறது.” அவள் பெருமூச்சு விட்டாள். பெரு மூச்சு விடும்போது அவள் பெருத்த முலைகள் மெலெழுந்து தாழ்ந்தன.
டேவிட் பார்வையை இருளிற் செலுத்தினாள். அவளிடமிருந்து தப்புவது கடினம். என்ன சாட்டும் சொல்லி அவனுடன் வார்ட்டுக்கு வராமல் அவள் போகப்போவதில்லை.
பீட்டர் தூங்கிக் கொண்டிருக்கிறான். டேவிட் வார்ட்டை நோக்கி நடந்தான்.
அதே நேரம் எமிலி தனது குழந்தையிருக்கும் இன்ரென்ஸிவ் கெயர் யூனிட்டுக்குப் போக இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
எமிலிக்கு பார்பராவைத் தெரியாது. அலிஸனின் அல்லது டேவிட்டின் சினேகிதர்களாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வந்தாள்.
ஆஸ்பத்திரி வெளிச்சத்திலும் எமிலியின் அழகிய தோற்றம் டேவிட்டைக் கிறங்கப் பண்ணியது. இன்றெல்லாம் பசியோடும் துயரோடும் தவித்தும் அவள் முகம் இன்னும் நிதானமாகவும் வசீகரமாகவுமிருந்தது.
அவனின் பார்வையை ஒரு நொடியிற் புரிந்து கொண்டாள் பார்பரா, தங்களை அண்மிக்கும் எமிலியைக் கண்டதும் அவளைத் தான் எங்கேயோ பார்த்திருப்பதாக பார்பராவின் மூளையிற் தட்டியது.
டேவிட் படக்கொம்பனியில் வேலை செய்பவன். எத்தனையோ பெண்களுடன் பார்பரா அவனைத் தெருவில் சந்தித்திருக்கிறாள். படப்பிடிப்புக்கு அல்லது ஏதோ ஒரு பார்ட்டிக்கு என்று அவன் அவசரமாக விரைந்து கொண்டிருப்பான்.
பார்பரா இங்கிலாந்தில் பெயர் பெற்ற ஒரு மொடல், இப்போது பாரிசில் தனது ஒய்யார நடைபோட்டு நிறைய உழைத்து விட்டு வந்திருக்கிறாள்.
மொடல்களுக்கே உரித்தான வாளிப்பான உடலும் வசீகரமான சிரிப்பும் கொண்டவள் பார்பரா, நீண்ட தலைமயிர் எப்போதும் மேக்அப் போட்டுக் கொண்ட முகம், சிரிப்பை ஒட்டி வைத்த பாவம். இவ்வளவும் பார்பராவுக்குச் சொந்தம்.
“அலிஸன் வீட்டுக்குப் போய்விட்டாளா” ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காகக் கேட்டு வைத்தாள் எமிலி. அவனுடன் நிற்கும் பெண் அவளைத் துருவிப் பார்ப்பதை அவள் விரும்பாததால் முகத்தைத் திருப்பினாள். அவன் ‘உம்’ கொட்டினான்.
“குட் நைட்” சொல்லி விட்டு எமிலி நகர்ந்தாள். டேவிட் தன்னுடன் நிற்கும் பெண்ணை எமிலிக்கு அறிமுகம் செய்து வைப்பதா இல்லையா என்று தடுமாறுவது தெரிந்தது.
எமிலி இவர்களைக் கடந்து போனதும் பார்பரா திரும்பி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறேன்”
அவள் தன் உதட்டில் விரலை வைத்தபடி யோசித்தாள்.
“உனது மொடல்களில் ஒருத்தியாகச் சந்தித்தாயா” டேவிட் கிண்டலடித்தான்
பார்பராவுக்கு அவன் கிண்டல் பிடிக்கவில்லை என்பது அவளின் முக மாற்றத்திலிருந்து தெரிந்தது.
சட்டென்று அவள் முகத்தில் ஒரு குறும்பு.
“ஹலோ, ஹலோ, இந்தப் பெண்ணுடன் ரெஸ்ட்ரோண்டுகளுக்குப் போய்ச் செல்லம் பண்ணுவது அலிசனுக்குத் தெரியுமா?”
டேவிட் திகைத்து நின்றான், பார்பரா அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
– தொடரும்…
– இந்த நாவல் 1997-1998 ஆம் ஆண்டுக்குரிய இலங்கை சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது.
– வசந்தம் வந்து போய்விட்டது (நாவல்),முதற் பதிப்பு: டிசம்பர் 1997, குமரன் பதிப்பகம் , சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அவனுக்குத் தெரியுமா?
ஆர்.கே.பதி
July 2, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
July 2, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
July 2, 2026
