வசதிப்பொருத்தம்!





“பருவத்துக்கு வந்தா பன்னிக்குட்டியும் பத்துப்பணத்துக்கு விக்கும்னு சொல்லுவாங்க. அது மாதர வயசுக்குன்னு வந்துட்டா பொண்ணுங்களும், பசங்களும் கொஞ்சம் கவர்ச்சியாத்தாந்தெரியுவாங்க. அந்தக்கவர்ச்சிய மட்டுமே நம்பி ஏமாந்திரப்படாது. அது ரொம்ப நாளைக்கு நெலைக்காது. படிச்ச பட்டமும், காட்டுப்பத்தரமும், சொந்த ஊடும் இருந்துச்சுதுன்னாத்தான் நெசமான மதிப்பே இருக்கும், எல்லாக்காலத்துலயும் வாழ்ந்து போட முடியும். அது நம்மளக்காப்பாத்தும்” என தன் மகள் வானதியிடம் கண்டிப்புடன் பேசினார் வந்தியன்.

வானதி படிப்பில் படு சுட்டி. வகுப்பில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று ஆசிரியர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவள். கல்லூரியிலும் ஹானர்ஸ், டிஸ்டிங்ஸன், கோல்டு மெடல் என அனைத்து பாடங்களிலும் முதலிடம் பெற்றதால் படிப்பு முடித்தவுடன் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் கல்லூரியிலேயே அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கப்பெற்றவள் எனப்பெயர் கிடைத்தது பெருமையாக இருந்தாலும், தனக்கு வசதியில்லாவிட்டாலும் மகளுக்கு நல்ல வசதியான இடத்தில் மாப்பிள்ளை அமைத்துக்கொடுத்துவிட வேண்டும் என்பதில் தந்தை வந்தியனுக்கு ஆர்வமும், வேகமும் அதிகமாவே இருந்தது. மாப்பிள்ளை பார்க்க வானதியும் பச்சைக்கொடி காட்டியிருந்தாள்.
ஐம்பது வரன்களுக்கு மேல் திருமணத்தகவல் மையத்திலிருந்து தேர்வு செய்தும் ஒன்று பிடித்தால் இன்னொன்று பிடிக்காமல் அதாவது அழகு பிடித்தால் வசதி குறைவு, வசதி பிடித்தால் அழகு குறைவு, இரண்டுமே பிடித்தால் வயசு அதிகம் என நிராகரித்தவள் முடிவில் வசதி இல்லாத அழகான மனம் கவர்ந்த வரனுக்கு மகள் முக்யத்துவம் கொடுத்து ஓகே சொன்ன போதுதான் கதையின் ஆரம்பத்தில் அவளது தந்தை சொத்து முக்கியம் எனப்பேசியிருந்தார்.
“நானும் சம்பாதிக்கிறேன். அவருக்கும் வேலை இருக்கு. இப்ப அவருக்கு வசதி, வீடு, சொத்து இல்லேன்னாலும் வருங்காலத்துல வாங்க முடியும்…”
“நீயி எங்க போயி வாங்குவே…? இன்னைக்கொரு வெலை, நாளைக்கொரு வெலை, நாளான்னிக்கு ஒரு வெலைன்னு கைக்கெட்டாத தூரத்துக்கு பூமி வெலை, ஊட்டோட வெலை போயிட்டிருக்குது. என்னதாம் படிச்சு வேலைக்குப்போனாலும் ரெண்டனப்பாவது காடு தோட்டமும், சொந்த ஊடும் இருக்கோணுங்கண்ணு. நீ சம்பாறிக்கிற பணத்துக்கு பத்து சென்ட்ல கடன வாங்கி ஊடு கட்டுனீன்னா ஆயிசுக்கும் அந்தப்பணத்துக்கு வட்டி தாங்கட்ட முடியும். அசல அடைக்கவே முடியாது. அதுக்குள்ள கொழந்தைங்க பொறந்து அவங்களுக்கு படிப்பு, மத்த செலவுன்னு வந்துரும். பையங்கொஞ்சம் அழகு கம்மியா இருந்தாலும் ஊடு, சொத்து இருந்துச்சுன்னு வெச்சுக்கோ நீ சம்பாறிக்கிறத ஏகபோகமா செலவு பண்ணி கவலையில்லாம சந்தோசமா வாழ்ந்து போடுலாம். அழகு சீக்கிரம் போயிரும், சொத்து அப்படியே கெடக்கும், வயசானாலும் காப்பாத்தும். நானும் என்ற மனசுல உள்ளத சொல்லிப்போட்டேன். ஒன்னிக்கேக்கறது, கேக்காமப்போறது உன்ற இஷ்டம்” என பேசிய தந்தை வந்தியனை ‘உலகம் புரியாத அப்பாவாக இருக்கிறார்’ என நினைத்து வெறுப்பாகப்பார்த்தாள் வானதி. இரவு முழுவதும் உறங்க முடியாமலும், உறுதியான முடிவெடுக்க முடியாமலும் தவித்தாள்.
‘அடுத்த தலை முறை, அதற்கடுத்த தலை முறைன்னு வருங்காலத்துல வரப்போற சந்ததிகளுக்காக, இன்னும் பிறக்காத குழந்தைகளுக்காக இப்போது நாம் வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியற்றதாக ஆக்க வேண்டுமா…? பிடித்தவரோடு வாழாமல் சொத்துக்காக பிடிக்காதவரோடு வாழ வேண்டுமா…? வாடகை வீட்டில் இருந்து கொண்டு பலர் மகிழ்ச்சியாக வாழ்வதில்லையா….? வரனை மனதை வைத்து முடிவு செய்வதா…? பணத்தை, சொத்துக்களை வைத்து முடிவு செய்வதா…? சொத்துக்களால் சோறு தர முடியும், சுகம் தர முடியுமா…? மனதுக்கு பிடிக்காமல் சொத்துக்காகத்திருமணம் செய்தவர்கள் சுகம் கிடைக்காமல் விவாகரத்து வரை நட்பு வட்டாரத்தில், உறவுகளில் போனதையும் பார்த்துள்ளோமே… நமக்கும் அவ்வாறு நேர்ந்து விடுமோ….?’ எனும் பயத்தால் ஏற்பட்ட மனப்போராட்டத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் தவித்தாள்.
காலையில் உறுதியாகவும், இறுதியாகவும் முடிவு எடுத்தவளாய் வசதியில்லாத, ஆனால் மனதுக்குப்பிடித்த வரனுக்கே சம்மதம் சொன்னவள், “இத பாருங்கப்பா… அந்தக்காலம் மாதிரி வீட்டுக்குள்ளயே முடங்கி கணவனோட விருப்பத்துக்கு, அவரோட வருமானத்துல வாழற காலம் இதுவல்ல. ரெண்டு பேரும் சம்பாறிக்கிற உலகம். இங்க மாதச்செலவுக்கு எப்பவுமே பஞ்சமிருக்காது. நான் எனக்கு புடிச்ச மாப்பிள்ளையக்கட்டிக்கிறேன். எனக்கு பிடிச்ச பொருள வாங்காம பணம் மிச்சம்பண்ணி வீடு, சொத்துன்னு வாங்கிக்கிறேன். அந்தக்காலத்துல விவசாயந்தாந்தொழிலு… அதுக்கு நிலம் வேணும். ஆனா நானும் அவரும் இன்னைக்கு இந்த நாட்ல… நாளைக்கு எந்த நாட்டுல வேணும்னாலும் வேலை பார்க்கற சூழ்நிலை வரலாம். போற எடத்துலெல்லாம் சொந்த வீடு வாங்கனம்னா முடியுமா…? வாடகை வீட்ல சந்தோசம் இல்ல, சொந்த வீட்ல தான் சந்தோசம்னு சொல்ல முடியுமா….? பங்களாவுல வாழறவங்க டைவர்ஸ் பண்ணறதில்லையா..? குடிசைல ஒற்றுமையா வாழறதில்லையா…? சந்தோசம் ஒரு வேளை சாப்பிட்டாலும் மனசுல இருக்கோணும்”
“நீ படிச்சுப்போட்டம்னு பெருசு பெருசா வார்த்தைகள வக்கீலு மாதர பொறுக்கிப்பொறுக்கிப்பேசறே..ம்… பேசு…பேசு.…”
“சரி உங்களோட விருப்பப்படியே நாங்கேட்டாலும் மாப்பிள்ளைக்கு வயசானா அழகு போற மாதிரியே எனக்கும் போயிரும் தானே…? அப்ப பெரிய சொத்துள்ளவங்க எடத்துல எனக்கு மதிப்பு இருக்குமா…? அழகுன்னு சொல்லிட்டு வெறுங்கையோட ஆடீட்டு வந்தவ தானே…? சொத்து இருக்குதுன்னு தானே என்னைக்கட்டிட்டேன்னு கேவலமா பேசுனா நான் காலம்பூரா எப்படி அவரோட சந்தோசமா குடும்பம் நடத்த முடியும்…? உங்க பொண்ணான எனக்கு பெரிய சொத்தோட வசதியான மாப்பிள்ளை வேணும்னு எதிர்பார்க்கிற உங்களால எனக்கு சொத்து ஏதாவது கொடுக்க உங்க கிட்ட சொத்து இருக்கா…? ஜோதிடப்பொருத்தம் போக வசதிப்பொருத்தம், படிப்புப்பொருத்தம், அழகுப்பொருத்தம், உயரப்பொருத்தம், வயசுப்பொருத்தமும் சந்தோசமா வாழறதுக்கு முக்கியம்தான். வசதிப்பொருத்தத்துல அவருக்கு இல்லாத வசதீன்னு நீங்க சொல்லறது நம்ம கிட்டவும் இல்லை தானே..? நாஞ்சொல்லற பொருத்தமெல்லாம் இந்த மாப்பிள்ளைக்கும் எனக்கும் இருக்குது…. அதனால மனசுக்குப்புடிக்குது…” என மகள் பேசியதைக்கேட்டு மறுத்து பேச வார்த்தை கிடைக்காததால் வானதியின் தந்தை வந்தியன் மௌனமானார். தந்தையின் மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியெனப்புரிந்து கொண்ட வானதியின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.