அன்பின் விலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 23, 2026
பார்வையிட்டோர்: 47 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

அன்று கோலாலம்பூரின் அம்பாங் பகுதியில் இருந்த அவர்களின் இரண்டு மாடி வீட்டில் விடிந்த காலை, எவ்வளவு அழகானது! காலை நேரத்து வெயிலும் மிதமான தென்றலும் வீட்டின் முற்றத்தில் இருந்த மல்லிகை, ரோஜா பூக்களின் வாசனையும் அந்தப் பெரிய வீட்டைச் சூழ்ந்திருந்தன.

வரவேற்பறையில் ஒரு பெரிய நீல நிறப் பயணப் பை திறந்த நிலையில் இருந்தது. கிருஷ்ணன சோபாவில் அமர்ந்து, தன் மகனின் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து, ஒரு சுருக்கம்கூட விழுந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாய் மடித்து அடுக்கிக் கொண்டிருந்தார்.

சமையலறையிலிருந்து தடபுடலாக பாத்திரங்கள் உருளும் சத்தமும், நெய் மணமும், வறுத்த மசாலாக்களின் வாசமும் வீடெங்கும் கமிழ்ந்து வண்ணமிருந்தன. கிருஷ்ணனின் மனைவி லெட்சுமி, தன் ஒரே மகனின் பயணத்திற்காக விடியற்காலையிலிருந்தே பல்கலைக்கழக விடுதியில் சாப்பிடுவதற்காக அவனுக்குப் பிடித்தமான பிரியாணியையும் பலகாரங்களையும் சமைத்துக் கொண்டிருந்தார்.

“மகிழா… எல்லா ஆவணங்களையும் எடுத்து வச்சிட்டியாடா? அந்த ஆஃபர் லெட்டர், எஸ்.பி.எம் ரிசல்ட் ஸ்லிப், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எல்லாம் முக்கியம்டா…” என்று கிருஷ்ணன் சிறிது பதற்றத்தோடு மாடியைப் பார்த்துக் குரல் கொடுத்தார்.

மாடிப் படிக்கட்டுகளில் இறங்கி வந்த பதினெட்டு வயது மகிழன், “எல்லாம் எடுத்து வச்சுட்டேன்பா… நீங்க ஏன் எப்பப் பார்த்தாலும் இப்படிப் பதற்றமாகுறீங்க? மனுஷனை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா?” என்றான் சலிப்புடன்.

“என்னடா பெரிய படிப்பு படிக்கப் போறேன்னு திமிர் வந்துடுச்சா? பெத்தவன் கேக்குறது உனக்கு நச்சரிப்பா இருக்கா? எப்பப் பார்த்தாலும் அந்த போனை

வச்சுக்கிட்டு…” என்று கிருஷ்ணன் சற்று சத்தமாகப் பேசத் தொடங்க, சோபாவில் அமர்ந்திருந்த பாட்டி வள்ளியம்மாள் உடனே குறுக்கிட்டார்.

“ஏன்டா கிஷ்ணா… புள்ளையை ஏன் இப்படி ஏசுற? அவன் என்ன சின்னப் பையனா? என் பேரன் தங்கமானவன்டா. அவன் எல்லாத்தையும் பத்திரமாத்தான் எடுத்து வச்சிருப்பான். நீ அமைதியா இருப்பா” என்று பேரனுக்கு சாதமாகப் பேசினார். மகிழன் தன் பாட்டியைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, தன் கையில் இருந்த கோப்புகளையும் இன்னும் சில பொருட்களையும் எடுத்து வந்து வரவேற்பறையில் வைத்தான்.

அவன் கொண்டு வந்த ஒவ்வொரு பொருளையும் கிருஷ்ணன் கோபித்துக் கொள்ளாமல், அவனது லேப்டாப் சார்ஜர் முதல் சிறிய மருந்துப் பெட்டி வரை அனைத்தையும் கவனமாகப் பையில் அடுக்கினார்.

சமையலறையிலிருந்து வியர்வை சொட்டச் சொட்ட வந்த லெட்சுமி, “எல்லா சாப்பாடும் சமைச்சு முடிச்சாச்சுங்க. பிரியாணி, கோழி வறுவல், அவனுக்குப் பிடிச்ச முறுக்கு எல்லாம் ரெடி” என்றார். கிருஷ்ணன் உடனே சமையலறைக்குச் சென்று, மலேசியாவின் வெப்பநிலைக்கு உணவு கெட்டுப் போய்விடக் கூடாது என்பதிலும், பயணத்தின் போது சாறு சிந்திவிடக் கூடாது என்பதிலும் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார். ஒவ்வொரு உணவுக் கொள்கலனையும் தனித்தனியாக பிளாஸ்டிக் பையில் சுற்றி, துளிக்கூடச் சிந்தாதபடி மிக அழகாகப் பொட்டலமிட்டார். ஒரு தந்தையின் பேரன்பு அந்தப் பொட்டலங்களில் வெளிப்பட்டது. தந்தையின் இந்த அதீத அக்கறை மகிழனுக்குச் சில நேரங்களில் எரிச்சலூட்டினாலும், அவன் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

அவர்கள் காரில் ஏறி, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருந்த அந்தப் புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகத்தை நோக்கிப் பயணித்தபோது, கிருஷ்ணன் வழியெல்லாம் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மகிழனுக்குப் பல ஆலோசனைகளைக் கூறிக் கொண்டே வந்தார். “மகிழா, புது இடம். பார்த்து நடந்துக்கணும். கண்ட கண்ட இடங்கள்ல சாப்பிடாதே. காசை வீணாக்காதே. படிப்புல மட்டும் கவனம் இருக்கட்டும்…” என அப்பா பேசப் பேச, மகிழன் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி, “ம்… சரிப்பா… ஓகேப்பா…” என்று இயந்திரத்தனமாகத் தலையாட்டிக்

கொண்டிருந்தான்.”மகிழா, உடம்பப் பார்த்துக்கோடா… காசு விஷயத்துல கவனமா இரு… எங்களுக்கு நீ மட்டும்தான்டா உலகம்” என்று உருகினார்.

பல்கலைக்கழக வளாகத்தை அடைந்ததும், கிருஷ்ணனும் லெட்சிமியும் வியந்து போயினர். அது ஒரு பிரம்மாண்டமான கல்வி நிறுவனம். மகிழனை அங்கே சேர்த்துவிட்டு, அவனுடைய விடுதி அறைக்குச் சென்று, அவர்கள் கொண்டு வந்த ஒவ்வொரு பொருளையும் அவனுக்கு வசதியாக அடுக்கிக் கொடுத்தார் தந்தை. திரும்பக் கிளம்பும் நேரம் வந்தது. மகிழனைக் கட்டிப்பிடித்து விடைபெற்றபோது மீனாட்சியின் கண்கள் கலங்கின. கிருஷ்ணனின் மனதில் ஒரு கனம் குடியேறியது.

திரும்பும் வழியெல்லாம், “அவன் ஒழுங்கா சாப்பிடுவானா லெட்சுமி? காலைல அவன நம்மதான் எழுப்பிவிடணும், அவனா எழுந்துப்பானா?” என்று கிருஷ்ணன் தவித்துப் போனார். அன்றிலிருந்து தினமும் இரவு 8 மணிக்கு மகனுக்கு அழைத்து, அவன் சாப்பிட்டதை உறுதி செய்த பிறகே கிருஷ்ணன் தூங்கச் செல்வார். அது அவரின் அன்றாட கடமையாக மாறியது.

முதல் பருவ விடுமுறைக்கு வந்த மகிழன், தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருந்தான். ஆனால், இரண்டாவது செமஸ்டர் விடுமுறையின்போது, வந்த இரண்டே நாளில், “அப்பா, பல்கலைக்கழகத்துல ஒரு முக்கியமான வேலைபா. விரிவுரையாளர் என்னை உடனே வரச் சொல்லிட்டாரு” என்று பயணப் பையைக் பூட்டினான். கிருஷ்ணனின் நெஞ்சில் ஏதோ ஒரு வலி தோன்றியது. இருந்தாலும், மகனின் எதிர்காலம் முக்கியம் என்று நினைத்து, அவனுக்குத் தேவையான பாரம்பரிய உணவுகளையும், தின்பண்டங்களையும் தேடித் தேடிப் பார்த்து வாங்கித் தந்து அனுப்பி வைத்தார்.

மூன்றாவது பருவத்தின் விடுமுறைக்கு அவன் ஊருக்கே வரவில்லை.

“அப்பா, கல்லூரி மாணவர் மன்றத்தோட வேலை நிறைய இருக்குப்பா. வர முடியாது” என்று அலைபேசியில் ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான்.

“சரிடா கண்ணா, படிப்புதானே முக்கியம்” என்று கிருஷ்ணன் தன் ஏக்கத்தை மனதுக்குள்ளேயே புதைத்துக் கொண்டார்.

நான்காவது பருவத்தில் மகிழன் பல்கலைக்கழகத்தில் வாங்கிய பதக்கங்கள், சான்றிதழ்கள், பாராட்டு விழாக்கள் என எல்லாவற்றையும் புலனம் வழி அனுப்பினான். அதைப் பார்த்து கிருஷ்ணன் தன் தெருவில் இருந்தவர்களிடம் எல்லாம், “என் மகன் மலேசியாவிலேயே பெரிய அறிவாளியா வரப்போறான் பாருங்க” என்று பெருமிதத்தோடு மார்தட்டிக் கொண்டார்.

ஐந்தாவது பருவத்தின்போது மகிழனைச் சிறு வயதிலிருந்து உயிராகக் கருதி வளர்த்த பாட்டி வள்ளியம்மாள், திடீர் மாரடைப்பால் இறைவனடி எய்தார்.

வீடே அழுகைக் கடலில் மூழ்கியிருந்தது. கிருஷ்ணன் கைகால்கள் நடுங்க, தன் மகனுக்குத் தொடர்பு கொண்டார். “மகிழா… பாட்டி… பாட்டி… தவறிட்டாங்கடா… உடனே கிளம்பி வாடா…” என்று கதறினார்.

ஆனால், மறுமுனையில் இருந்த மகிழனின் ஒரு கணம் மௌனம் கொண்டான். பின் “அப்பா… பாட்டி இறந்தது ரொம்ப கஷ்டமா தான் இருக்கு… ஆனா, எனக்கு நாளைக்கு ரொம்ப முக்கியமான பிரசென்டேஷன் இருக்கு. என்னால இப்போ கிளம்ப முடியாதுப்பா…” கிருஷ்ணனின் தலை சுற்றியது.

“என்னடா சொல்ற? உன்ன இத்தனை வருடம் வளர்த்த பாட்டி பிணமா இருக்காங்க! உனக்கு அங்கே என்னடா பிரசென்டேஷன்? நீ மனுஷன் தானாடா?” என்று கத்தினார்.

“மன்னிச்சிடுங்க பா, என்னால வர முடியாது” என்று கூறிவிட்டு அவன் இணைப்பைத் துண்டித்தான். கிருஷ்ணன் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இறுதிச் சடங்கிற்கு வந்த உறவினர்கள், “ஏன் கிஷ்ணா, உன் மகன் வரலையா? வளர்த்த பாட்டி பிணமா இருக்காங்க… அவனுக்கு என்ன அவ்வளவு பெரிய வேலை?” என்று ஏளனமாகப் பேசினர்.

தன் மகனை ஒரு துரோகி என்று உலகம் தூற்றுவதைச் சகித்துக் கொள்ள முடியாத அந்தத் தந்தை, தன் மனதிலுள்ள இரணத்தை மறைத்துக் கொண்டு, “அவன் பல்கலைக்கழகத்துல பெரிய பொறுப்புல இருக்கான். அரசாங்கத்தோட முக்கிய வேலை… அதான் வர முடியல” என்று பொய் சொல்லி, தன் மகனின் மானத்தைக் காக்க முயன்றார்.

பாட்டியின் முப்பதாவது நாள் சடங்கு வந்தபோதும் மகிழன் வரவில்லை. “எனக்கு தேர்வு நடக்குது” என்று அலைபேசியை அணைத்து வைத்தான்.

கிருஷ்ணனுக்குள் இருந்த தந்தையின் பாசம், அவனின் இத்தனை துரோகங்களுக்குப் பிறகும் அவனைக் காணத் துடித்தது. “லெட்சுமி, வா… நாமளே அங்க போவோம். அவன் முகத்தைப் பார்த்து எனக்கு சில கேள்விகள் கேட்கணும்” என்று கோபமும் அழுகையுமாய் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் கார் நுழைந்தது. நேராக நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று, மகிழனின் அடையாள அட்டையைக் காட்டி விபரங்களைக் கேட்டார் கிருஷ்ணன். அங்கே இருந்த கணினியைத் தட்டிய அதிகாரி, நிமிர்ந்து இவர்களை பார்த்து “ஓ நீங்க தான் மகிழனின் பெற்றோரா? அவர் இப்போது ஆடிட்டேரியத்தில் இருக்கிறார்” என்றார். இந்த விவரங்களைப் பெற்ற கிருஷ்ணன் தன் வாகனத்தை ஆடிட்டோரியத்தை நோக்கி செலுத்தினார்.

அவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரம்மாண்டமான ஆடிட்டோரியத்தை அடைந்தபோது, அங்கே ஒரு பெரும் திருவிழாக் கூட்டமே கூடியிருந்தது. பேராசிரியர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் அமர்ந்திருக்க, மேடையில் மகிழன் மைக் பிடித்துக் கம்பீரமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் லெட்சுமி, “என் புள்ளை…” என்று ஓட முயன்றாள். ஆனால், கிருஷ்ணன் அவளைத் தடுத்து, “இரு, அவன் என்னதான் பேசுறான்னு கேட்போம்” என்று கடைசி வரிசையில் நின்றார்.

மேடையில் இருந்த பெரிய திரையில் மகிழனின் இறுதி ஆண்டு ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு மின்னியது: “செயற்கை நுண்ணறிவும் மனித உணர்வுகளும்: முதியோர் இல்லங்களின் எதிர்காலம்”

“நண்பர்களே, இன்றைய அவசர உலகில், பிள்ளைகள் தங்கள் சுயநலத்திற்காகப் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடுகிறார்கள். அங்கு அவர்கள் தனிமையில் வாடுகிறார்கள். அவர்களுக்குப் பாசமும், அன்பான பேச்சும்தான் தேவை. பிள்ளைகளால் கொடுக்க முடியாத அந்த அன்பை, நான் உருவாக்கியுள்ள இந்த ‘ செயற்கை நுண்ணறிவு எம்பதி ரோபோ’ (AI Empathy Robot) கொடுக்கும். வயதானவர்கள் அழும்போது இது ஆறுதல் சொல்லும், அவர்களின் பிள்ளைகளைப் போலவே பாசத்தைக் காட்டும்…”

அங்கிருந்தவர்கள் அனைவரும் வியந்து கைதட்டினர். மகிழன் தன் பேச்சைத் தொடர்ந்தான்.

“இந்த ஆய்வை நான் எப்படி இவ்வளவு வெற்றிகரமாகச் செய்தேன் தெரியுமா? இதற்குப் பின்னால் ஒரு பெரிய தியாகம் இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக, என் தந்தை எனக்கு தினமும் இரவு 8 மணிக்குத் தொடர்பு கொண்டு பேசுவார். அவர் பேசும்போதெல்லாம், ஒரு முதியவர் தனிமையில் சந்திக்கும் மன அழுத்தத்தின் குரலின் தரவுகளை நான் ரகசியமாகப் பதிவு செய்தேன். என் பாட்டி இறந்தபோது கூட, நான் வீட்டிற்குச் செல்லவில்லை. அது எனக்கு பெரும் இழப்புதான். ஆனால், என் பாட்டியின் மரணத்தால் என் தாய் தந்தை அடைந்த அந்தப் பேரிழப்பின் அதிர்வலைகளை என் ரோபோவின் மென்பொருளில் புகுத்த எனக்கு அந்தத் தரவுகள் தேவைப்பட்டன. என் குடும்பத்தின் உண்மையான துக்கத்தையும், தனிமையையும் நான் ஒரு ஆராய்ச்சிப் பொருளாக பயன்படுத்தியதன் காரணம் இந்த அன்பான ரோபோவை

உருவாக்குவதற்காகதான். ஏனென்றால், என் பெற்றோரைப் போல் இனி எந்த பெற்றோரும் அந்த தனிமையில் வாடக்கூடாது என்ற நல்லெண்ணமே ஆகும்.”

மேடையே கைதட்டல்களால் அதிர்ந்தது. பேராசிரியர்கள் எழுந்து நின்று அவனுக்கு ‘இந்த ஆண்டின் சிறந்த இளம் விஞ்ஞானி’ விருதை வழங்கினர்.

ஆடிட்டோரியத்தின் இருளில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனின் கால்கள் பலமிழந்தன. அவர் அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தார். லெட்சுமி தன் வயிற்றிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறினாள். ஆனால், அந்தப் பெரும் கைதட்டல் சத்தத்திற்கு நடுவே, ஒரு தாயின் அழுக்குரல் யாருக்கும் கேட்கவில்லை.

மகிழன் பணத்திற்காகவோ, புகழுக்காகவோ பெற்றோரை மறக்கவில்லை. அவன் உலகிற்குச் செயற்கை அன்பை விற்க, தன் பெற்றோரின் அன்பையும் இயற்கையான கண்ணீரையும், தன் பாட்டியின் மரணத்தையும் வெறும் தரவுகளாக மாற்றி, ஒரு பரிசோதனைக் கூடத்து எலியைப் போலத் தன் குடும்பத்தையே கையாண்டிருக்கிறான் என்ற உண்மை அவனின் பெற்றோரின் மனதில் இடியாய் இறந்கியது.

மேடையில் பல நூறு கேமராக்களின் வெளிச்சத்திற்கு நடுவே, தன் கையில் இருந்த தங்கப் பதக்கத்தை முத்தமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்த தன் மகனை, கிருஷ்ணன் நிமிர்ந்து பார்த்தார். அவனது கண்களில் பாட்டியைக் கொன்ற குற்ற உணர்ச்சியோ, பெற்றோரை ஏமாற்றிய வலியோ இல்லை; ஒரு மாபெரும் காரியத்தைச் சாதித்துவிட்ட அகந்தை மட்டுமே இருந்தது.

கிருஷ்ணன் மெதுவாக எழுந்தார். தன் மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டார். அவரின் குரல் அறவே உடைந்திருந்தது.

“வா லெட்சுமி… போயிடலாம்… நாம பெத்தது ஒரு மனுஷனை இல்ல… மேடையில நிற்குதே ஒரு இயந்திரம், அதைவிடக் கொடூரமான ஒரு ஜடத்தைத்தான் நாம பெத்து

வளர்த்திருக்கோம். நாம தோத்துட்டோம் லெட்சுமி… இந்த உலகத்துக்கே அன்பு செய்யப் போறதா சொல்ற அந்தப் பாவிக்கு, தன் அப்பனோட கண்ணீரும், அம்மாவோட வேதனையும் புரியாது… வா போயிடலாம்…” எனக் கூறிய கிருஷ்ணன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு வாகனத்திற்கு சென்றார்.

பிறகு,

மலேசியாவின் பிளஸ் நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த வாகனங்களின் முகப்பு விளக்குகள் சாலையின் இருளை நீக்கும் அளவு ஒளி வீசியது. ஆனால், கிருஷ்ணனின் மனதுக்குள் படர்ந்திருந்த இருளைப் போக்க அங்கிருந்த எந்த விளக்குகளாலும் முடியவில்லை. அவரின் கைகள் ஸ்டீயரிங்கை கோபமகவும் இறுக்கமாகப் பற்றியிருந்தன.

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த லெட்சுமி, அவரின் கைகளைப் பற்றி ஆறுதல் கூறினார். அப்போது கிருஷ்ணனின் அலைபேசி மின்னியது. அது இரவு சரியாக 8 மணி. கடந்த இரண்டு வருடங்களாகத் எப்படி தன் மகனின் குரலைக் கேட்பதற்காக அவர் ஆவலோடு காத்திருக்கும் அதே நேரம் இன்றும் வந்தது. அலைபேசியின் திரையில் மகிழன் என்று பெயர் மின்னியது. ஆனால், இன்று அந்த ஆவல் அவரிடம் இல்லை. கிருஷ்ணன் அந்த அலைபேசியைப் எடுத்துப்பார்த்தார்.

– நிஷாஹந்தினி த/பெ எ ஜோன், பேராசிரியர்: முனைவர் முனீஸ்வரன் குமார், சுலுத்தான் இதுரீசு பல்கலைக்கழகம், மலேஷியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *