மீனோட்டம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2024
பார்வையிட்டோர்: 200
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஏய் நீ என்ன பார்ப்பாரப் பெண்ணாயிருக்கையா, நீ!- அதுவும் கோவில் பூஜை செய்யற குடும்பமாவா இருக்கே? மீன் பிடிக்கிறையே, மீன்!!-‘”
“போடா, கையாலாகாட்டா, வாயை மூடிக்கோயேன்- நீ மாத்திரம் பார்ப்பானில்லையோ! பிடிக்க வகையில்லையாம். அஹங்காரத்தைப் பாரு”
எனக்கு ஆத்திரம் பொங்கிற்று.
“நிறுத்துடி – வாயை மூடு- ரொம்ப ரொம்ப நீட்டிநீட்டிப் – பேசறையே மணியாட்றவன் பெண்ணே”
“சரிதானப்பா, ரொம்ப ரொம்ப அலண்டு போயிடாதே – உங்கப்பா உத்யோகம் பண்ணினால்-உங்காத்து மட்டோடே-”
எனக்கு வெறி உச்சந்தலைக்கேறிவிட்டது.
“என்னடி ஒங்கப்பன், எங்கப்பன் இன்னு பேசறே? பல்லை ஓடைச்சுப் புடுவேன்-” என்று சொல்லிக் கொண்டே, முதுகில் ஒன்று வைத்துவிட்டேன். அவ்வளவுதான். ஆற்றங் கரையில் ஓங்கி நிற்கும் மணற் குன்றுகளிடையில் அவள் அழுகை நல்ல சப்த சுத்தத்துடன் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.
அவளை அடித்தது தான் தாமதம். என்னை வாதித்த வெறியும் தணிந்து விட்டது. அசடு வழிந்த முகத்துடன், வெயிலில் மீன்துண்டுகள் போல் வயிற்றைப் புரட்டிப் புரட்டித் துள்ளும். அந்தச் சிறு மீன்களைப் பார்த்துக்கொண்டு நின்றேன். என் மனதில் எண்ணாத எண்ணங்களெல்லாம் ஓடத் தலைப்பட்டு விட்டன.
“சீ, என்ன காரியம் செய்தோம்! கேவலம், இந்த மீனை அவளைப் போல் பிடிக்க நமக்குத் தெரியவில்லை என்கிற ஆங்காரத்தில் அவளைத் தொட்டு அடித்தோமே!-இந்த மீனை நாம் என்ன சாப்பிடப் போறோமா, வீட்டுக்கு கொண்டு போய் இதைப் பிடிச்சால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன?விளையாட்டாய் வந்து வினையா முடிஞ்சுதே!- அதுவும் நாளைக்கு ஊருக்குப் போகப் போகிறோம், போகிற போக்கில் கங்காவோடு சண்டை போட்டுண்டா போகணும்! அப்போ, நான் ஊரிலே இருந்தா, இந்தச் சண்டை நினைப்பு வந்தால், எவ்வளவு சங்கடமாயிருக்கும்! இப்படிப் பிழிய பிழிய அழறாளே, இந்தக் குரல் தானே, ராத்ரி நான் தூங்கறப்போ என் கனாவிலே கேட்கும்! அப்போ, ரொம்பக் கஷ்டமாயிருக் குமே, நான் என்ன செய்வேன்!”
துக்ககரமான யோசனையின் பரவசானந்தம் எனக்கு அப் பொழுது புதிது. அந்த சுகத்தில், நான் என்னை மறந்தேன் கங்காவை மறந்தேன். எல்லாம் மறந்து, என்னில் லயித்து விட்டேன். அதனால், கங்கா என்னைத் திடீரென்று கட்டி யணைத்ததும், எனக்குத் “திக்” கென்றது.
“ஏன் என்னிடம் வராய், மறுபடியும்?’ என்றேன்.
பின்னே நீ-இ-இ-யும் அழறையே -எ-எ-நான் தான் அழுதா-அ-அ-ல்-” என்று விக்கினாள் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு.
அப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது என் கன்னம் நனைந்திருப்பது— எனக்கே வெட்கமாய்ப் போய்விட்டது.
“சரி வா,ஆத்துக்குப் போகலாம்” என்றேன் பேச்சை மாற்ற.
“அதெல்லாம் முடியாது-உனக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்துட்டுத்தான்-பார், உன் கை என் கையை விட நன்னாயிருக்கு—நீ என்னை விட நன்னாப் பிடிப்பாய்”
“சரிதான் வாயேன்-‘”
“ஊ-ஹும்-இடுப்பு வேஷ்டியை அவிழ்த்துப் போடு. தண்ணு மேலே – பார், துணி மேலே எவ்வளவு மீன் குஞ்சு வரது-நாலு முனையும் ஒண்ணாச்சேர்-அப்படித்தான்- அகப் பட்டுக் கொண்டதையா நாலு- தொட்டுப்பார்-இந்தத் துணிக் குள்ளே இருக்கறதை விட்டுப்பிடி-அது பழகினதும் ஓடற தண்ணுலேயே பிடிக்கலாம்- இது மாதிரி” தண்ணீரில் வாய் போல் விரிந்து வேகமாய்ச் சென்ற அவள் விரல்கள் “சடக்’ கென மூடின. கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையில் தண்ணீரில் ஒரு சிறு கலவரம் உண்டாயிற்று.
“டேய்-டேய் தொட்டுப்பாரேன்-” என்று கங்கா கத்தி னாள் சிரித்துக் கொண்டே. மீன் செதிள் குறுகுறுவென்றது. அடுத்தடுத்து வரும் எங்கள் சிரிப்பு மணற் குன்றுகள் வரை உயர்ந்து அவைகளில் ஒளிந்தன.
மறுபடியும் அவ்வூற்று நீர்க்கரையோரந்தான்; அதே மணற்குன்றுகள் தான். எத்தனையோ காலடிகள் அமிழ்ந்து கலைந்தும், சற்றும் மாறாத அதே மணல் தான். அதோ தூரத் தில் காணும் ஊரைச் சுற்றிய தோப்பில், சில புது மரங்கள் வளர்ந்திருந்தன – பழைய மரங்கள் பட்டிருந்தன – அவ்வளவு தான்-வேறொரு வித்யாசமுமில்லை. கிராமாந்திரங்களில் கால வித்யாசம் அதிகம் தெரிவதில்லை. பட்டணத்தில் நேற்று போய் இன்று வருவதற்குள் ஒரே புரட்டல்
ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஊருக்கு வருகிறேன். ஆனி மாதம் வெயில் பட்டை வாங்குகிறது. செருப்புப் போட வில்லை. உள்ளங் கால்களிரண்டும் கீழே பதியாமல் தவிக்க ஆரம்பித்து விட்டன. காலை அலம்பிக் கொள்ளலாம் என்று கால்வாயில் இறங்கினேன்.
எதிர்க்கரையில் ஒரு சிறு கூட்டம். கலியாணக்கோலம். மஞ்சள் தெறித்த துணிகள் வெயிலில் பளீர் பளீர் என்றன. பாலிகை கொட்ட வந்தவர்கள் போலும்.
“டே, டேய் -உன்னைத் தானே, உன் பேர்- சுருக்க வாயில் வரவில்லையே!-‘
கங்காவின் தகப்பனார் தான், சந்தேகமில்லை. உடம்பு முன்னைவிடச் சற்று ஒடுக்கம். ஆனால் அவர்தான்.
அப்படியே கடந்து அக்கரையடைந்தேன். எல்லோரும் அன்புடன் வரவேற்றார்கள்.
“ஏண்டா, இன்னம் இரண்டு நாள் முன்னமே வரப் படாதோ!” “பத்திரிகை கூட அனுப்பிச்சோமே, தவறாமல்- தவிர, தபால் கூடத் தனியா எழுதினோமே!-”
“இல்லை மாமா, எனக்கு வந்து சேர்ந்திருக்காது – அந்த விலாசத்தில் நான் இல்லை-அந்த ஊரிலேயே இல்லை. இப் போது- இது யார் கங்காவா? ஏது அடையாளமே தெரியலையே!-”
“ஏன் தெரியும்-இன்னும் நாலு வருஷம் பொறுத்து வா!-“
கங்கா, கால் கட்டை விரலால், மணலைக் கிளறிக் கொண்டே கீழ்நோக்கிய பார்வையுடனே ‘சுறுக்’கென ஒரு கண்கணை தொடுத்து வெற்றிப் புன்னகை புரிந்தாள். என் மனத்தில் ஏன் முள் தைக்கிறது? ஏன் அவளைக் காணக் காண, மனதில் ஒரு வேகமும் ஆங்காரமும் உண்டாகின்றன? அவளைக் காணச் சகியாமல், கலியாணப் பிள்ளையின் பக்கம் திரும்பினேன்.
ஆனாலும் இந்தக் கரிக்கட்டையை கட்டிக் கொண்ட தற்கு இவளுக்கு இவ்வளவு ஆணவம் வேண்டியதில்லை. வாய்க் காவியைப் பார்த்தால், சக்கையாய்ப் புகையிலை தீட்டு வான் போலிருக்கிறது.
என் மருமான்”-கடலூரிலே தனியாக் கோவிலில் பூஜை பண்ணிக் கொண்டிருந்தான் – பெண்ணைக் கொடுத்து வீட்டோடே வெச்சுக்கலாம்னு தீர்மானிச்சுப்பிட்டேன். அவனுக்கும் பெற்றவாளில்லை-நமக்கும் புத்திர பாக்கியமில்லை என்று பகவான் வெச்சுப்பிட்டான்-எனக்கும் வயசாயிடுத்து. இங்கே கோவில் பூஜைக்கும் எனக்குக் கொள்ளி போடறத் துக்கும் ஒருத்தன் வேணுமில்லையா?-‘ என்றார் கங்காவின் தகப்பனார்.
“என்ன மாமா, கலியாண சமயத்திலே இப்படியெல்லாம் பேசலாமா?_”
“அதுவும் ஒரு கலியாணந்தாண்டா- சரி வாங்கோ போகலாம் – ” மத்தியான மெல்லாம் நான் ஜோலியாய்ப் பக்கத்தூருக்குப் போயிருந்தேன். சாயந்திரம்தான் திரும்பி வந்தேன். கலியாணப் பெண்ணே காப்பி கொண்டு வந்து விசிப் பலகையில் வைத்தாள்.
“கொஞ்சம் ஒழிந்திருக்கிறாப் போலிருக்கிறது!-” என்றேன்.
வெற்றிப் புன்னகையுடன் பின்னிடைந்தாள். இத்தனை தடபுடலுக்கும் காரணியாயிருப்பதன் இறுமாப்பு!-
“ரொம்ப அவசரமோ! எல்லாம் பழைய கங்கா தானே! வெட்கமோ?”
சிரித்தாள், பின்னலில் கட்டி இருக்கும் தாழம்பூவை முகர்ந்து கொண்டே.
“இதோ பார், உனக்குக் கல்யாணப் பரிசு வாங்கி வந் திருக்கிறேன்-” என்று கையிலிருந்த பொட்டணத்தைப் பிரித்து, சாமானைப் பலகையின் மேல் வைத்தேன்.
வெள்ளியில் வெற்றிலைப் பெட்டி; மீன் உருவத்தில் நிர்மாணம். இரு கண்களையும் உள் குடைந்து, ஒரு குழியில் பாக்கு, மற்றொன்றில் சுண்ணாம்பு. குழிகளின் மூடிகளின் பேரில் நீலக்கற்கள் புதைத்திருந்தன. அவைதான் மீனின் கண்கள், முதுகைத் திறந்தால் வெற்றிலை வைத்துக் கொள்ள இடம். மீன் வெகு களையாய்ப் பாய்ச்சலில் நின்றது.
அவள் கண்கள் மலர்ந்தன. சிரித்துக்கொண்டே அதைத் தடவ ஆரம்பித்தாள். அவளுடைய உதடுகள் செக்கச் செவேலெனப் பளபளத்தன.
திடீரென்று என்னை அவள் ஒரு கேள்வி கேட்டாள்.
“மீன் பிடிக்கக் கத்துண்டாச்சா?” என்றாள். அவள் கண்களில் குறும்பு கூத்தாடியது.
என் இதய நோவு விண்விண் எனத் தெறித்தது. சமாளித்துக் கொண்டு- “ஊ-ஹும்- என்ன இருந்தாலும் உன் சாமர்த்தியம் வருமா? – தவிர, பட்டணத்தில் எங்கே மீன் பிடிக்கிறது? எங்கேயும் குழாய் தான். சமுத்திரம் இருக் கிறது, ஆனால் அங்கே உன்மாதிரி கையால் பிடிக்கமுடி யாது- வலையோ தூண்டிலோ தான் போடவேணும்-வேணுமானால் நண்டு பிடிக்கலாம், கூவம் நதியும் பக்கிங் ஹாம் கால்வாயுமிருக்கிறது- நிறையச் சேறு எடுக்கலாம்-”
“ஏன், பார்த்தசாரதி கோயில் குளம் இருக்காமே! அதிலே-!”
“பாசி தான் மிதக்கும் -இடையிடையில் பிரேதமும் மிதக்கும் -”
அவள் முகம் ‘சடக்’கென மாறியது. என் வார்த்தையில் ஏன் இவ்வளவு வெடிப்பு? எனக்குப் புரியவில்லை. சமய மில்லா சமயத்தில் என் வாயில் ஏன் இந்தச் சம்பந்தமில்லாத அசம்பாவித வார்த்தை? எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று என் மார் நோவு பொறுக்க முடியவில்லை – பந்துபோல் சுருட்டிச் சுருட்டியடைத்தது… பொறுக்கமுடியவில்லை.
மீண்டும் அதே பொரியும் மணல்தான். ஜீவனற்று பிரேதம் போல் நீலம் பூரித்த ஆகாயம் தூரத்தில் கானலில் ஊர்த்தோப்பு நடுங்கியது. காலை வேளையிலேயே, கடுமை யான வெயிலில் என் கண்கள் இருண்டன. தவிர, பசி காதை அடைத்தது. வெறும் வயிற்றுடன் காலையில் பன்னிரண்டு மைல் நடந்து வந்திருக்கிறேன். காலணா இட்டிலி வாங்கு வதற்குக் கூட கையில் வழி இல்லை, க்ஷவரம் செய்து இரண்டு மாதங்கள் ஆகியிருக்கும்.
எல்லாம் அதொருகாலம் – இதொரு காலம் –
அக்ரஹாரத்துக்குப் போனால் பழைய சினேகிதத்தை வைத்துக் கொண்டு ஒரு வாரம் தள்ளலாம். என் பிழைப்பு அப்படியாகி விட்டது,
எல்லாம் அதொருகாலம்… இதொருகாலம்…
ஒரு கை தண்ணீர் குடித்துவிட்டுப் போகலாம் என்று கால்வாயில் இறங்கினேன். நான் இறங்கிய கரைப்பக்கத்தில் நெருப்பைக் குளிப்பாட்டிய நிறத்தில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். தோய்க்கிற கல்லின் மேல் துணியைக் கும்மி வைத்திருந்தார். கரையில் ஒரு பொடி மட்டை விபூதி சம்புடம், பட்டைப் புகையிலை, காய்ந்து போன வெற்றிலை நாலைந்து இரண்டு கொட்டைப்பாக்குகள் – எல்லாம் அவர் சொத்து.
எதிர்க்கரையில் ஒரு ஸ்திரீ ஸ்நானம் செய்து கொண்டி ருந்தாள். அவள் முகம் பழகிய முகமாயிருந்தது.
என் கையிலெடுத்த தண்ணீர் என்னையறியாமல் விரல் களின் வழியே வழிந்தது. ஆம் அவளேதான். ஆனால், அவளா இவள்?
பச்சையிலேயே பட்டுப்போனாற் போன்ற வற்றி இளைத்த உடல் தோற்றத்திலேயே ஒரு தனி அசதி. சோகம் தேங்கிய முகம். இவ்விடத்து நினைவு அற்று இருந்தன அவள் கண்கள். அந்தப் பழைய துறுதுறுப்பு எங்கே ஓடியது? இவளுக்கு இத்தனை கிழத்தனம் எங்கிருந்து வந்தது?
திகைப்புடன் அவளையே நோக்கி நின்றேன்,என்னை மறந்து அவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை, அவள் புடவை முன்றானை, தண்ணீரில் விழுந்து காற்று உள்புகுந்து படர்ந்து பொங்கியது. அதைக் கண்டதும் சடக்கென்று அவளது முகத்தில் ஒரு புன்னகை பாய்ந்தோடியது.அவள் முகத்தில் பழைய இளமையின் கனவைக் கண்டேன். வாய் போல் அவள் விரல்கள் விரிந்து தண்ணீரைக் கிழித்து நீந்தின,
“ஏ பிணமே நீ என்ன பார்ப்பாரப் பெண்ணா யிருக்கையா நீ அதுவும் கோவில் பூஜை செய்யற குடும்பமாவா இருக்கே? மீன் பிடிக்கிறையே,மீன் -?”
கர்ண கடூரமான அந்தத் தொனி, என் பக்கத்திலிருந்து திடீரென்று கிளம்பியதும், எனக்கே தூக்கிவாரிப் போட்டது. அந்தக் கறுப்புப் பிராம்மணன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பற்களை நெறநெற வெனக் கடித்து, இன்னும் என்னென்னவோ உளறினான். ஆனால், அவளைத் தான் பார்க்க சஹிக்கவில்லை. அவள் உடல், கைகள் எல்லாம் வெல வெலத்து விட்டன். ஏதோ பழகிய சப்தத்தைக்கேட்டு விட்டு அதைத் தேடுவது போல் சுற்று முற்றும் அவள் கண்கள் பதறித் தேடின. ஆனால் ஒருவருமில்லை. எதிரில் அவள் புருஷனும் நாடோடிப் பயலும்தான், இதற்குள் அவள் முகம் வெளுத்து நீலம் பூரித்து விட்டது. அவசரம் அவசரமாய் எதையோ கண்டு தப்பி ஓடுவது போல், புடவையைச் சுற்றிக் கொண்டு, சொட்டச் சொட்ட கரை ஏறி, மணல் மேட்டின் பின்புறம் மறைந்தாள்.
இரண்டு நிமிஷங்களுக்கெல்லாம், அவள் கணவன் அவளைத் திட்டிக்கொண்டே அவ்விடம் விட்டகன்றான்.
நான் திக்ப்ரமை பிடித்து அங்கேயே சற்று நேரம் உட் கார்ந்திருந்தேன், வேகும் வெயிலில் கால்வாய்த் தண்ணீரை விரைத்துப் பார்த்துக் கொண்டு, அந்த மீன்கள்-மனித வர்க்கம் வாழ்ந்தால் என்ன, வீழ்ந்தால் என்ன? அவைகளுக்கு கவலை? இரக்க மற்ற ஆனந்தத்துடன் மின் துண்டுகள் போல், வெள்ளி வயிற்றைப் புரட்டிப் புரட்டித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.
நான் அக்ரஹாரத்துள் புகவில்லை. வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு, ரயிலடிக்கு விரைந்தோடி னேன்; ஏதோ ஒரு குற்றவாளியைப் போல, அவசர அவசர மாய் ஓடினேன். காரணம் எனக்கே தெரியவில்லை.
– மீனோட்டம், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1991, வானதி பதிப்பகம், சென்னை.