மனைவியாய் வந்தவள்




தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகள், உறவினர்களுக்கு செய்ய வேண்டிய எல்லா காரியங்களையும் ஒரு தகப்பனாயும், தாயாகவும் இருந்து செய்து முடித்து விட்ட பரமசிவத்துக்கு தன்னை பற்றி நினைக்க ஆரம்பிக்கும்போது வயது நாற்பதை தொட்டு விட்டது.
உள்ளே நுழையுமுன் வெறிச்சென்று இருக்கும் வீடு, வீட்டு வேலை செய்யும் சாந்தியம்மாள் தவிர எந்தவொரு மனித நடமாட்டமும் இல்லாமல் இருந்தது. இதனால்யே முடிந்த வரை அலுவலகத்திலேயே பொழுதை ஓட்டி விட்டு வீடு வரும்போது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிடும்.

அதற்கும் இப்பொழுது பிரச்சினை வந்து விட்டது. இவர் தினமும் நேரம் கழித்து செல்வதால் அலுவலக ஊழியர்களும் இவருக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது, இதனால் அவர்களும் நேரத்திற்கு வீடு போக முடியாமல் மனதுக்குள் புழுங்கி கொண்டிருக்கிறார்கள் என்பதை கார் ஓட்டி வரும்போது பெருமாள்சாமி இவர் காதில் போட்டு விட்டான்.
இப்பொழுதெல்லாம் பரமசிவம் கடற்கரை ஓரம், இல்லாவிட்டால் பூங்கா இவைகளில் உட்கார்ந்து பொழுதை ஓட்டி விட்டு வீட்டுக்கு செல்கிறார். அலுவலக ஊழியர்கள் இப்பொழுது நிம்மதியாக மாலை வேலை முடிந்து வீட்டுக்கு செல்கிறார்கள். ஆனால் முதலாளி, பாவம் இவர்களுக்காக கடற்கரையோரம், பூங்கா என்று உட்கார்ந்திருப்பதை அறியவில்லை.
இவரின் இந்த மனப்பான்மையை நன்கு அறிந்தவன் டிரைவர் பெருமாள்சாமி மட்டுமே. ஆனால் அவனால் என்ன செய்ய முடியும், அவன் ஒரு சாதாரண டிரைவர். இவர் இப்படி மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்தே வாழந்து என்ன பயன்?
இந்த வயது வரைக்கும் அவருக்கு என்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி தர உறவுகள் ஏற்பாடு செய்யாமல் விட்டு விட்டார்கள். எல்லோரும் அவரவர்கள் காரியம் முடிந்தவுடன் பறந்து விட்டார்கள்.
இனியும் இப்படியே இவரை விட்டு விடுவது சரியல்ல, மனதுக்குள் முடிவு செய்த பெருமாள்சாமி வீட்டில் இருந்த சாந்தியம்மாளை கலந்து ஆலோசித்தான். சாந்தியம்மாளுக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். இருபது வருடங்களாக இங்கு வேலை செய்து வருகிறாள். அவளுக்கும் பரமசிவத்தின் தனிமை புரிகிறது. என்ன செய்வது?
ஒரு நாள் தனிமையில் தனது அறையில் உட்கார்ந்திருந்த பரமசிவத்திடம் தயங்கி தயங்கி வருகிறாள் சாந்தியம்மாள். ஐயா…அவளின் தயக்கம் ஏதோ சொல்ல வருகிறாள் என்பதை உண்ர்ந்த பரமசிவம் என்ன சாந்தியம்மா, சொல்லுங்க..
இல்லே நான் சொல்ல வர்றது..மீண்டும் தயங்க, தயங்காம சொல்லுங்க, என்ன விஷயம்?
ஐயா நீங்க தனியா இருக்கறதை பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதய்யா, தயவு செய்து நீங்க ஒரு கல்யாணம் பண்ணி சந்தோசமா குடும்பத்தோட இருக்கணும்னு நினைக்கிறேன்.
சத்தமாய் சிரித்தார் பரமசிவம், கல்யாணமா? எனக்கா, கம்னு இரு சாந்தியம்மா,
ஏன் ஐயா நீங்க கல்யாணம் பண்ண கூடாதா? அப்படி என்ன உங்களுக்கு வயசாயிடுச்சு, இவ்வளவு காலம் உங்க உறவுக்கு எல்லாமே செஞ்சீங்க, இப்ப உங்களுக்கு செய்யறதுல என்ன கஷ்டம்.?
ப்ச்சு..ப்ச்சு..சலிப்பாய் உதிர்த்தவர், அதையெல்லாம் சொல்லி காட்டக்கூடாது,
இப்பொழுது கொஞ்சம் சரளமாய் பேசினாள் சாந்தியம்மாள், இல்லீங்கய்யா, அதுக்காக சொல்ல்லையிங்க, உங்களுக்குன்னு யாரோ ஒருத்தர் துணை வேணுமில்லை, அதான்
இப்ப என்ன சொல்ல வர்றே?
ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டுக்கறேன்.
ஆமா நான் தனியா கஷ்டப்படறேன்னு உனக்கு யார் சொன்னா?
சொன்னாத்தான் தெரியுங்களா? நீங்க லேட்டா வீட்டுக்கு வர்றது, கடலோரமா போய் உட்கார்ந்துக்கறது, இதுவெல்லாம்…
உனக்கு பெருமாள்சாமிதான் சொல்லியிருக்கணும்.
ஐயா அவனை ஒண்ணும் சொல்லாதீங்க, ரொம்ப வருஷமா இருக்கற புள்ளை.
சிரித்துக்கொண்டே எழுந்தவர் சரி சாந்தியம்மா நான் யோசிச்சு சொல்றேன், எழுந்து நடக்கவும் சாந்தியம்மாள் ஒதுங்கி கொண்டாள்.
ஒரு வாரம் ஓடியிருந்தது. பெருமாள்சாமி சாந்தியம்மாளை நெருக்கினான், என்னாச்சு, ஐயா ஒத்துகிட்டாரா?
ஒத்துகிட்ட மாதிரிதான், சரின்னு சொல்லியிருக்காரு..அப்ப விடு, பக்கத்து தெருவுல இருக்கற அவங்க சித்தப்பாவை போய் பார்க்கறேன்.
பெருமாள்சாமியின் அக்கறை தனக்கு இல்லாமல் போயிற்றே, குற்ற உணர்ச்சியில் அவரின் சித்தப்பா ஞானஜோதி கண்டிப்பா பார்த்து முடிச்சிருவோம், நீ கவலைப்படாதே. ஆறுதல் சொல்லி அனுப்பினார்.
வந்த போட்டோவை பார்த்த பர்மசிவம் பொண்ணுக்கு வயசு ரொம்ப கம்மியா தெரியுதே சித்தப்பா..
இங்க பாரு, நாங்க எல்லாம் பேசிட்டோம், அவங்க பேரண்ட்சுக்கு உனக்கு பொண்ணு கொடுக்க ரொம்ப ஆவலா இருக்கறாங்க.
எதுக்கும் பொண்ணுகிட்டே ஒரு வார்த்தை கேட்டுடலாமே…
அதையெல்லாம் அவங்க் பேரண்ட்க கேட்காமயா இதுக்கு ஒத்து வருவாங்க, நீ ம்முனு சொல்லு, அடுத்த மாசம் ஒரு நல்ல நாள்ல கல்யாணத்தை
வச்சிகிடலாம்.என்ன அவங்க வசதி கம்மியானவங்க, எல்லா செலவும் நாமதான் பார்த்துக்கணும்.
பரமசிவம் இப்பொழுது உலகை கனவுகளால் காண ஆரம்பித்தார். அவருக்கென்று ஒரு பெண், இனி அவரின் வாழ்க்கை தனி மரமல்ல, சில நேரங்களில் அந்த பெண்ணிடம் தொடர்பு கொள்ள நினைப்பார். மனதுக்குள் கூச்சம் வர அந்த எண்ணங்களை அப்படியே அடக்கி கொள்வார். என்ன இன்னும் பத்து நாட்கள்தானே, அதற்குள் ஏன் அவசரப்படவேண்டும்.
கோயிலில் திருமணம் முடிக்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து வந்த பெண்ணை அவரால் உற்று கூட பார்க்க முடியவில்லை. மணப்பெண் இவர் வாங்கி கொடுத்த பட்டு புடவையில் தேவதை போலிருந்தாள். அவளின் கை தொட்டு பிடித்தவருக்கு ஏதோ ரோஜா இதழை வருடி கொடுப்பது போல் இருந்த்து.
முதலிரவு… எத்தனையோ இரவுகள் வந்து போனாலும் ஒரு பெண்ணுடன் தனியாக ஒரு அறையை பகிர்ந்து கொள்வது இது முதன்முறை என்பதால் சற்று பதட்டத்துடனேயே இருந்தார் பரமசிவம்.. உள்ளே நுழைந்த பெண்ணை கண்டதும் கட்டிலில் உட்கார்ந்திருந்தவர் மெல்ல எழுந்து முன் சென்று கையை நீட்டினார்.
அந்த பெண் அவரின் கையை தள்ளி விட்டு கட்டில் அருகே சென்றவளை சற்று அதிர்ச்சியுடன் பார்த்தார்.
அவர் அவளை பார்த்து கொண்டிருக்க, கட்டிலில் உட்கார்ந்தவள், உங்களுக்கு என்ன வேணும்? நான்தானே வாங்க, இதுக்குத்தானே என்னோட விருப்பத்தை உங்க பணத்தால அழிச்சீங்க…
பரமசிவத்தின் ஆவல், மகிழ்ச்சி அனைத்தும் அப்ப்டியே அமுங்கிப்போய் ஒரு வித பதட்ட நிலைக்கு ஆளானா. என்ன சொல்றே? நானா உன்னை வற்புறுத்துனேன்.
பின்ன நீங்கன்னா என்ன அர்த்தம் உங்க பணம். அதுக்கு ஆசைப்பட்டுத்தானே எங்கப்பா, அம்மா இந்த கல்யாணம் நடக்குலையின்னா நாங்க செத்துடுவோம் அப்படீன்னு என்னை மிரட்டினாங்க. அவளின் கண்களின் கண்ணீர்…
அப்படிய கால்கள் தரையில் சாய்வது போலானது பரமசிவத்துக்கு, ஐயோ என்ன காரியம் செய்து விட்டோம், விருப்பமில்லாத பொண்ணை திருமணம் செய்து கொண்டோமோ?
அம்மா உனக்கு விருப்பமில்லையின்னா, அப்பவே எங்கிட்டே சொலியிருக்க லாமில்லையா, இவ்வளவு தூரம் வந்திருக்காதே. இல்லை யார் கிட்டேயாவது சொல்லி விட்டிருக்கலாமே..
அதற்கு அந்த பெண் எந்த பதிலும் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
பத்து நிமிடங்கள் ஓடியது. அதற்குள் தன்னை தைரியப்படுத்திக்கொண்ட பரமசிவம் சரி இப்ப நான் என்ன பண்ணனும் அதைய சொல்லு, குரலில் சற்று காரத்தை காட்டினார்.
நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம், அதான் எனக்கு மனசுக்கு புடிச்ச பையன் கூட சேர்ந்து வாழ விடாம பண்ணிட்டீங்களே..
சரி யார் அந்த பையன்? ஐந்து நிமிட அமைதிக்குப்பின் இவள் தன் காதலனை பற்றி சொல்ல ஆரம்பித்தாள். இரவு படுப்பதற்கு முன் அவளிடம் ஒரு உறுதியை கொடுத்தார். உன்னை எப்படியாவது அந்த பையனிடமே சேர்த்து விடுவதாக சொன்னார். அதற்குப்பின் அங்கு படுக்க அவருக்கு விருப்பமில்லாததால் அருகில் இருந்த அறைக்கு சத்தமில்லாமல் சென்று படுத்துக் கொண்டார், உறவுகள் அறியாமல்.
பெண்ணின் பெற்றோர் அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் அந்த பையன் அவ்வளவு சரியில்லை என்று எவ்வளவோ எடுத்து சொன்னார்கள். இவர் அவர்களிடம் பேசி பேசி மனதை கரைத்தார். அவரின் இந்த முடிவுக்கு சாந்திம்மாளும், பெருமாள்சாமியும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்தி ஒரு வழியாக அந்த பையனின் பெற்றோரை அழைத்து பேசினார். அவர்கள் வரதட்சணையாக கேட்ட தொகையை கொடுப்பதாக சம்மதித்து, அந்த பெண்ணையும், பையனையும் கோயில் ஒன்றில் திருமணத்தை முடித்து அனுப்பி வைத்தார்.
பெருமாள்சாமி இப்பொழுதெல்லாம் பரமசிவத்துக்கு பயப்படுவதில்லை. தைரியமாக திட்டுகிறான். முதலாளி கோபிச்சா கோபிக்கட்டும், மனுசன்னா ஓரளவுக்குத் தான் விட்டு கொடுக்க முடியும். இந்த ஆளு விட்டு கொடுத்து மத்தவன் எல்லாம் இவரை ஏமாளியா நினைச்சிக்கிறான். இப்படி இருந்தா என்னதான் செய்ய முடியும்.
ஒரு வருடம் ஓடியிருக்கும். பரமசிவத்தின் வாழ்க்கையில் எந்த மாற்றமு மில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. அவ்வப்பொழுது அவர் தன்னையே நொந்து கொள்வார். பின்னர் தன்னை சமாதானப்படுத்தி கொண்டு விடுவார்.
ஒரு நாள் தலைவிரி கோலமாய் ஒரு பெண் காம்பவுண்ட் கேட்டில் நின்று கொண்டிருக்க வாட்ச்மேன் விரட்டி கொண்டிருந்தான். முன் அறையில் அலுவலகம் கிளம்புவதற்காக தயாராக நின்று கொண்டிருந்த பரமசிவம் அருகில் நின்று கொண்டிருந்த பெருமாள்சாமியிடம் போய் பார்த்து வா என்றனுப்பினார்.
பெருமாள்சாமியுடன் வந்து நின்ற பெண்ணை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. அவள் சடாரென்று அவர் காலில் விழுந்து அழுத பின்னால் சட்டென அவருக்கு ஞாபகம் வந்தது. ஓ இவரின் மனைவியாய் வீட்டுக்கு வந்தவளல்லவா.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவள் அழுது கொண்டே சொன்ன கதைகளை கேட்ட பரமசிவம் ஒரு பெருமூச்சுடன் எழுந்தார். அந்த பெண் தயவு செய்து இந்த வீட்டுல ஒதுங்கறதுக்கு ஒரு இடம் கொடுத்தாலும் போதும், பெத்தவங்க அங்க வர வேணானுட்டாங்க, அவள் சொல்ல சொல்ல ஏதும் செய்ய முடியாமல் தயங்கிய பரமசிவம் சரி இந்த வீட்டுல இருந்துக்கோ, ஆனா மனைவியா மட்டும் நினைச்சுக்காதே., சொல்லிவிட்டு நகர்ந்தவரிடம்,
பெருமாள்சாமி ஐயா ஒரே ஒரு விண்ணப்பம், எனக்கு அனுமதி கொடுக்கணும், கை கட்டி நின்று கேட்டான்.
என்னவென்று அவனை கண்களை விரித்து சைகையால் கேட்டவரிடம் ஒரு நிமிசம் திரும்பியவன் அந்த பெண்ணின் கன்னத்தில் சடார் சடாரென இரண்டு அறை விட்டவன் அவ்வளவுதாங்க, வாங்க போலாம். என்னால முடியலைங்கய்யா, என்னை மன்னிச்சிடுங்க, கண்களில் நீர் வழிய அவரை காருக்கு அழைத்து சென்றான்.
![]() |
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க... |