கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2025
பார்வையிட்டோர்: 5,287 
 
 

இருபது வயதில் அனுபவங்களேதும் ஏற்படாத போது அடங்க மறுத்த தனது மனம், பல வித அனுபவங்களைப்பெற்ற பின் அறுபதிலும் அடங்க மறுத்த போது அதிர்ந்து போனார் ராகவன். 

கட்டவிழ்த்து விடப்பட்ட காளையாக, உலக ஆசை எனும் பயிர்களை மேய அது இப்போதும் முற்பட்டது அறிவிற்கு வேதனையளித்தது. பின் விளைவுகளைப்பற்றி யோசிக்க மறுத்தது. இவ்வாறு அறிவிற்கும், மனதுக்கும் பெரிய போரே நடந்தாலும் முடிவில் மனமே வென்று இதய சிம்சனத்தில் அமர்ந்து விட்டது அதிர்ச்சியாக இருந்தது.

‘நீ அதை செய்யாமல் இதை செய்திருக்க வேண்டும். அவரைப்போல் பெரிய வீடு கட்டியிருக்க வேண்டும். அந்தப்படிப்பை படித்திருக்க வேண்டும். கடன் வாங்கவே பயப்படுகிறாய். வாழ்வை முழுவதும் அனுபவிக்காமல் வீணாக்கி விட்டாய். பிறருக்குத்தெரியாமல் செய்யும் தவறும் சரியானது தான். மனமான எனக்குப்பிடித்த, மணமான பெண் வந்து அவளுக்கும் உன்னைப்பிடித்திருப்பதாகச்சொன்ன போது, ‘நீ வேறொருவரின் மனைவி’ என பின் விளைவுகளைசொல்லி நிராகரித்தாய். எதுவும் சட்டப்படி நடக்க வேண்டும் என்கிறாய். சட்டத்தை மீறுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி எதிலும் இல்லை என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறாய். தவறு செய்யத்தயங்குகிறாய். ஒழுக்கம் தவறவே கூடாது என்கிறாய். ஒழுக்கம் தவறுபவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை நீ தெரிந்து கொள்ளாமல் அறியாமையில் இருக்கிறாய்….’ என அறிவுடன் வாக்குவாதமே நடத்துகிறது மனம்.

பணமும், அதை விரும்பும் மனமும் பெரிய தீய சக்திகளாகத்தோன்றின. உலகில் பல பிரச்சினைகளுக்கு வித்திடுவதே இவைதான். மனிதனை நிம்மதியில்லாமல் செய்வதே அறியாத மனதின் செயல்பாடுகள் தான். உடலில் உள்ள உறுப்புகளும் கூட அறிவின் ஆலோசனையைப்புறந்தள்ளி மனதின் விருப்பத்திற்கே கட்டுப்படுகின்றன.

அறிவு, ‘சர்க்கரை நோய் இருப்பதால் இனிப்பு வேண்டாம்’ என்பதை நாக்கு ஏற்பதில்லை. ‘அதனால் என்ன ? மாத்திரை போட்டால் போகிறது’ என மனம் சொல்வதைத்தான் முடிவாக ஏற்கிறது. எதையும் செய்யத்தூண்டும் அதே மனம் செய்த பின் அதை தவறு எனப்புலம்புவதை அறிவால் ஏற்க முடியவில்லை. 

நேற்று ஹோட்டலுக்குப்போயிருந்த போது பூரிதான் வேண்டுமென மனம் பிடிவாதமாகக்கூறியதை அறிவும் ஒத்துக்கொண்டு ஆர்டர் செய்ததை சாப்பிட்டு முடித்து, வயிற்றின் பசியும் அடங்கிய பின் ‘நெய் ரோஸ்ட் சாப்பிட்டிருக்க வேண்டும்’ என்கிறது. 

‘மனம் போகிற போக்கில் போகக்கூடாது’ என முன்னோர்கள் அனுபவத்தின் அடிப்படையில் தான் கூறியிருப்பார்கள். ‘மனமது செம்மையானால் மந்திரமே தேவையில்லை’ என்று கூறியவர்கள், மனதை செம்மைப்படுத்த யோகா, தியானம் என பல வழிகளைக்கையாண்டார்கள். மனதை அடக்கியவர்கள் இல்லற வாழ்வைத்துறந்து, ஆசைகளைத்துறந்து, துறவறத்தை மேற்கொண்டு முக்தி பெற்றார்கள். நம்மால் வயதான காலத்திலாவது நிம்மதியாக வாழ அனுபவ அறிவைப்பயன்படுத்தலாமென்றால் அமைதி பெறாத மனதுடன் போராட வேண்டிதாகிவிட்டது’ என வேதனைப்பட்டார் ராகவன்.

‘அறுபது வயதாகியும் மனம் அடங்கவில்லையென்றால் தற்போதைய இளைஞர்களின் நிலை என்ன? செய்திகளில் குற்றச்செயல்கள் அதிகம் நடப்பதைப்படிக்க நேருகிறது. மனதைக்கட்டுப்படுத்தும் கல்வி முறை வேண்டும். பணம் சம்பாதிக்கும் வகையான, கருவிகளையும், கணனிகளையும் இயக்கும் படிப்பைக்கற்பதால் பண வளம் அதிகரித்தாலும், மன வளம் அதிகரிக்காததனால் குற்றங்கள் பெருகி விட்டன’ என கவலை கொண்டார்.

‘தொன்னூறு வயது பாட்டிகளின் மீதும், ஐந்து வயது பிஞ்சுக்குழந்தைகளின் மீதும் காமத்தின் நாட்டம் ஒரு வாலிபனுக்கு செல்கிறதென்றால் செம்மையற்ற மனதில் தோன்றும் விபரீத ஆசைகளின் வெளிப்பாடுதான். மனதில் ஏற்படும் செயல்களின் விளைவுதான். திருஞான சம்மந்தர், விவேகானந்தர் போன்றவர்களின் மனம் செம்மையானதால் மனதின் தடைகளின்றி நற்குணங்களை எளிதாக வெளிப்படுத்தி ஞானம்பெற இயன்றது. சிறுவயதில் மனதை அமைதிப்படுத்துவதென்பது அனைவருக்கும் முடியாது போலும். அந்த நிலை பெற பல ஜென்மங்களும் தேவைப்படும்போல் இருக்கிறது. நமக்கு இது முதல் ஜென்மமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வயதான பின்பும் அனைத்தின் மீதும் ஆசைகளை தூண்டும் மனதின் பேச்சை மறுக்காமல் கேட்டுக்கொண்டிருப்போமா?’ மனப்போராட்டத்தால் உடல் மிகவும் சோர்வானதை உணர்ந்தவர் படுக்கையறைக்குச்சென்று படுத்துக்கொண்டார். 

நேற்று கூட ஒரு திருமண விழாவில் மிகுந்த அழகுடைய இளம் பெண் ஒருத்தியை ‘நல்ல அழகுதான்’ என கலைப்பார்வையாகப்பார்த்ததற்கே ‘ச்சீ… இந்த வயசுல இது தேவையா….?’ என பேசிச்சென்றதைக்கேட்ட போது கேவலமாக இருந்தது. அதே சமயம் அவ்விளம்பெண்ணிற்கு ‘இந்த வயதில் இது தேவையில்லை’ எனும் ஞானம், மனப்பக்குவம் சின்ன வயதிலேயே வந்து விட்டதை நினைத்து ராகவனை பொறாமை கொள்ள வைத்தது.

உறக்கத்தில் மட்டும் தான் அறிவும் மனமும் சண்டையிடாமல் இருக்கின்றன. இரவு நேரத்தில் மட்டும் மனம் சொல்வதை உடலுறுப்புகள் கேட்பதில்லை என்பதையறிந்ததால் அதுவும் உடலுடன் சேர்ந்து அமைதியாகி விடுகிறது. உடல் அமைதியாக ஓய்வு பெறட்டும். இல்லையேல் சீக்கிரம் உடல் சிதைந்து போகும் என்பதை உணர்ந்த அறிவும், தனது அனுபவங்களை மறந்து, தன் செயல்களைத்துறந்து உறக்கத்தின் போர்வைக்குள் தன்னை முழுமையாகப்புகுத்தி ஓய்வு பெற்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *