பூசைக்குள் வரும் பூக்கள்
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2026
பார்வையிட்டோர்: 62
அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10
அத்தியாயம் – 7

சப்-இன்ஸ்பெக்டர் சாரதி பாலு வீட்டு முன் புல்லட்டை நிறுத்தியதுமே ‘என்னவோ வில்லங்கம்?’ ஆப்பக்கடை ஆயாவும், முத்துலட்சுமியும் ஒருவரை ஒருவர் பார்த்து துணுக்குற்றார்கள்.
“வீட்டுல யாரு?” சாரதி கதவைத் தட்டினார்.
கதவைத் திறந்த சாருவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
உள்ளே நுழைந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு அந்த எட்டடிக் குச்சியில் யாரும் இல்லாதது தெம்பாய் இருந்தது.
சாரு மஞ்சள் பூ சி குளித்து குத்து விளக்கு, குடும்ப பெண் போல் புதுசாய் இருப்பதைப் பார்க்க அவரையும் அறியாமல் அவருக்குள் ஒரு கிளர்ச்சி தோன்றியது.
“ஏய்….! என்ன ஓடிவந்துட்டே! கழுத்துல இருக்கிறது நிஜத் தாலியா இல்லே ரைடுன்னா நீங்களெல்லாம் வழக்கமா போட்டுக்கிற பொய்த் தாலியா?” ஆச்சரியப்படுவர் போல்கேட்டார்.
“சா…சார்…!” சாரு மெல்ல அலறினாள்.
சாரதிக்கு முகம் மாறியது.
“இந்த சார் மோரெல்லாம் வேணாம். மரியாதையா இன்னைக்கு ராத்திரி என் வீட்டுக்கு வந்துடு.” என்றார்.
“ம..ன்னிக்கனும் சார்.”
“ஏன்?” அதட்டினார்.
“நான் திருந்திட்டேன் !”
“எவனைக் கேட்டு திருந்தினே?!”
‘யாரைக் கேட்டு திருந்தனும்?’
இவளுக்குக் கேட்க தெம்பில்லை. கேட்டால் சாரதிக்கு இன்னும் அதிகம் கோபம் வருமென்பது தெரியும். மௌனமாக நின்றாள்.
“என்னைக் கேட்டுத் திருந்தனும். இல்லே உனக்கு பதில் எனக்கு ஒரு ஆளை வைச்சுட்டுத் திருந்தனும்” என்று சூடாய் சொன்னவர் கொஞ்சம் இறங்கி வந்து, “ஓ.கே. நீ யோக்கியமா இருக்கிறதைப் பத்தி சந்தோசம். அது உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது. ஆனா இந்த யோக்கியத்தை எனக்காக மூட்டைக் கட்டி வைச்சிட்டு சரியா எட்டு மணிக்கெல்லாம் வழக்கம் போல ஆட்டோவுல வந்துடு.” என்றார்.
என்ன அயோக்கியத்தனம்!
“வந்து… வந்து…” தடுமாறினாள்.
“வரத்தான் சொல்றேன்! உன் புருசன் நீ இப்படிப்பட்டவள்ன்னு தெரிஞ்சுதானே தாலி கட்டினான்? அதனால நீ தப்பா நடந்தா அவன் தப்பா நெனைக்க மாட்டான் வருமானம்ன்னு சந்தோசப்படுவான். வந்துடு.”
“அ அ…க்கா…”
“அவ யாருடி அக்கா? ஓகோ..! இவரோட முதல் சம்சாரமா. அவளையும் கூட்டி வர்றேன்னு சொல்றீயா? தாராளமா வா. ஒன்னுக்கு ரெண்டு எனக்கு ரொம்ப சந்தோசம்!” சிரித்தார்.
‘அட நாயே!’ இவளுக்குள் சட்டென்று கோபம் எட்டிப் பார்த்தது. அடக்கினாள்.
“தப்பா பேசாதீங்க சார். அவுங்க நல்லவங்க.”
“எனக்கு நல்லவள்ன்னா புடிக்கும். இன்னைக்கு நீ ரொம்ப புதுசா இருக்கே. இதே கெட்டப்புல வந்துடு.” தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் எழுந்து ஆசையாய் அவள் கன்னத்தைத் தொட்டார். சாருவுக்கு அவர் கை பட்ட இடம் எரிந்தது.
“அவளையும் கூட்டி வா. அழகா இருப்பான்னு கேள்வி பட்டேன்.” உஷ்ண மூச்சு விட்டார்.
‘மனுச மனம் தெரியாத நாய்ங்களா?!’ சாருவிற்கு அவர் முகத்தில் துாவென்று காறி துப்பவேண்டும் அளவிற்கு எரிச்சல் வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
“அக்கா அப்படி இல்லே. நீங்க இப்படி பேசினது கேள்விபட்டாலே துாக்கு மாட்டி தொங்கிடுவாங்க.” என்றாள்.
“இதோ பார். இந்த சால்சாப்பு, சாக்கு போக்கு சொல்லி தப்பிக்கிற வேலையெல்லாம் எனக்கு வேணாம். அவள் எப்படி இருந்தாலும் எனக்குக் கவலை இல்லே. எனக்கு நீ வேணும். வரலைன்னா கதை கந்தல். அந்த நொண்டி உன்னையும் பொண்டாட்டியையும் வைச்சு தொழில் செய்யுறான்னு புடிச்சு பொய் கேசு போட்டு எல்லாரையும் உள்ளே தள்ளிடுவேன்!”
சாருவிற்கு இது அதிர்ச்சியாக இருந்தது. மனசுக்குள் நடுக்கம் வர வேர்த்தாள்.
சாரதி நல்லப்பிள்ளையாய்க் கொஞ்சம் இறங்கி வந்தார்.
“இதோ பார். உன்னால ஒரு குடும்பம் கெடக்கூடாது, ஒருத்தி வாழ்க்கைப் பாழாக கூடாது. பழைய வாழ்க்கைதான் நல்லது. அதுதான் உனக்கு, எனக்கு எல்லாருக்கும் சவுகரியம். இந்த குடும்பமும் கெடாது. நீயும் பிரச்சனை இல்லாம இருப்பே.” ரொம்ப நல்ல பிள்ளை போல் புத்தி சொன்னார்.
‘மனுசன் தன் ஆசைக்காக எப்படி எப்படியெல்லாம் வேசம் கட்டுகிறான்!’ – சாருக்குள் வியப்பு எட்டிப் பார்த்தது.
‘நான் தான் பொண்ணா என்னை விட்டால் வேறு ஆட்களே இல்லையா?’ நினைத்தாள்.
“என்ன யோசனை? மவளே…! நீ மட்டும் நான் சொல்றபடி நடக்கலை… அப்புறம் நான் சொன்னதைச் செய்வேன் ஜாக்கிரதை!” – சாரதி மீண்டும் மரத்தில் ஏறி உறுமிவிட்டு வெளியே வந்து அதே வேகம் புல்லட் உதைத்துப் புறப்பட்டார்.
சாரு அப்படியே நிலைக்குத்தி அமர்ந்தாள்.
மாலா வந்து தொட்டபிறகே துணுக்குற்று நிமிர்ந்தாள். சுயநினைவிற்கு வந்தாள்.
உடன்….அதுவரை அடக்கி வைத்திருந்த ரணம் ஆத்திரம் அழுகையாய் உருவெடுக்க… “அக்கா…ஆ!” என்று அவளைப் பிடித்துக் கொண்டு கதறினாள்.
மாலா அரண்டாள்.
“என்ன நடந்துது?” உலுக்கினாள்.
இவள் நடந்தது சொல்ல…இப்படி ஒரு சிக்கல் வருமென்று நினைத்துப்பார்க்கவில்லை. அவளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
‘இதென்ன தொழிலை விட்டு வந்தவளைத் தொடர்கிறார்கள். மீறுகிறார்கள்?’ – அதுவும் சட்டத்தைக் காவல் காப்பவர்களே மாலாவிற்குள் கேள்வி பிறக்க… சூடு பறந்தது.
“அழாதே!” சாருவை மெல்ல அணைத்தாள்.
அவள் நிறுத்த முடியாமல் தொடர…
“எதுக்கு இப்போ நீ அழறே?” குரலைக் கொஞ்சம் கூட்டி அதட்டினாள்.
சாரு, தாய் அதட்டிய குழந்தை போல நிறுத்தி திகைத்தாள்.
“நீ வாழ்க்கையில அடிபட்டவள். என்னைவிட துணிச்சலாய் இருப்பேன்னு எதிர்பார்த்தேன். கோழையாய் இருக்கே. அவன் வாடின்னு கூப்பிட்டதும் நீ போடான்னு அவனை வெளியே அனுப்பி இருக்கனும். அதுதான்டி துணிச்சல்!” சமாதானம் சொன்னாள்.
சாரு கண்களைத் துடைத்துக் கொண்டு தெளிந்தாள்.
‘அதிகாரம் உள்ளவன் அழைக்கிறான். போகவில்லை என்றால் கண்டிப்பாய் தான் சொன்னது செய்வான். என்ன செய்ய?’ மாலாவிற்குள் சிந்தனை ஓடியது.
தடுக்காவிட்டால் தனக்கும் ஆபத்து! யோசித்தாள். பளீரென்று அவளுக்குள் மின்னல் தோன்றியது. மாதவி மாதர் சங்கத்தலைவி வாசுகி அவள் கண்களில் தெரிந்தாள். முகம் தெளிய…
“வா வெளியில போகலாம்.” அழைத்தாள்.
“எங்கேக்கா?” சாரு ஏறிட்டாள்.
“இதுக்கு ஒரு முடிவு கட்டனுமில்லியா அதுக்கு!”
“என்ன நடவடிக்கை?”
“மாதர் சங்கத் தலைவிகிட்ட போய் நடந்ததைச் சொல்வோம். காப்பாத்துவாங்க.”
“அவுங்க நம்ப கோரிக்கையை ஏத்துப்பாங்களா?”
“அவுங்களுக்குப் பெண்கள் மேல் பாசம். வேசம் கட்டாம எங்கே யார் பாதிக்கப்பட்டாலும் தட்டிக் கேட்பாங்க. கேட்கலைன்னா போராட்டம் செய்து முடிப்பாங்க. நிறைய நடத்தி சரி செய்திருக்காங்க. கண்டிப்பா ஏத்துப்பாங்க.”
சாருக்குள் இப்போதுதான் தான் காப்பாற்றப்படுவோம்! என்ற நம்பிக்கை வந்தது, தெளிந்தாள்.
“வாங்கக்கா போவலாம்.” எழுந்தாள்.
வாசலில் பாலு தலை தெரிந்தது,
‘ஆளுக்கு விசயம் தெரிந்து வருகிறானா?!’ மாலாவிற்குள் சின்ன விதை விழுந்தது.
அவன் மோட்டார் வண்டியைவிட்டு இறங்கி வேகமாக முட்டி போட்டு உள்ளே வந்தான்.
சாருவும் அவனைக் கலவரமாகப் பார்த்தாள்.
“என்ன! அலுவலகத்திலேர்ந்து நேரத்தோட வந்துட்டீங்க?” கேட்டாள்.
“இந்தா!” அவன் ஒரு ஐநூறு ரூபாய் கட்டை எடுத்து மாலா கையில் கொடுத்தான்.
“ஏது பணம்?!“ புரியாமல் பார்த்தாள்.
“ம்ம் கொள்ளையடிச்சேன்”. சிரித்தவன், “நம்ம திட்டப்படி கடை வைக்கிறதுக்காக என் அலுவலக சேமிப்பிலேர்ந்து கடன் வாங்கினேன் மாலா. எழுதிவிட்டது இன்னைக்குத்தான் கெடைச்சுது. எனக்கொன்னும் பயமில்லே. நான் கையில வாங்கினதும் மேலாளருக்குத்தான் என்கிட்டே இருந்து எவனாவது கொள்ளையடிச்சுட்டுப் போயிடுவானோன்னு பயம். காலம் கெட்டு கிடக்கு நீ இவ்வளவு பணத்ததை வைச்சிக்கிட்டு அலுவலகம் விட்டுப் போக வேணாம். நேரத்தோட போயிடுன்னு அனுப்பி வைச்சார். மூத்தவர் சொல்றார். முரண்டு பிடிக்கக்கூடாதுன்னு வந்தேன். என்ன கடை வைக்கப் போறதா உங்க ரெண்டு போரோட முடிவு?” சாரு மாலாவைப் பார்த்தான்.
“மளிகை கடை வைக்கிறதா உத்தேசிச்சுத்தான் கடைத்தெருவுல போய் நாலு நாளாய் அலைஞ்சு இடமெல்லாம் பார்த்தேன். டம் வாடகையெல்லாம் புடிச்சிருந்தது, அப்புறம் அக்கம்பக்கம் கடை இல்லை நம்ம வீட்டு வாசல்ல வைச்சா நல்லா வியாபாரம் ஆகும்ன்னு யோசனை. வாடகை மிச்சம். நாங்க அலையாம வீட்டுக்குள்ளேயே இருந்து ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பார்த்துக்கிலாம் வசதின்னு நெனைச்சு புத்தியை மாத்தியாச்சு.” சொன்னாள்.
பாலுவிற்கு இந்த யோசனை பிடித்திருந்தது.
“உங்க விருப்பம் செய்யுங்க” தலையசைத்தான்.
மாலா சாருக்கு வெளியே செல்ல முடியாத சங்கடம். ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
“என்ன?” பாலு கேட்டான்.
மாலாவிற்கு இவனிடம் எப்படி சொல்வது என்று தயக்கம். அவன் சாருவைப் பார்த்தான்.
சொல்லித்தான் ஆகவேண்டும். வேறு வழி? சொல்லாமல் விட்டு கம்மென்று இருந்தால் நடு நிசிக்குப் போலீஸ் வந்து நடங்க நாய்ங்களா என்று அள்ளிக் கொண்டு போவது அசிங்கம்! துணிந்தாள்.
சொன்னாள். பாலுவிற்கு முகம் கறுத்தது.
“கவலைப்படாதீங்க…” என்று மாலா தடுக்க இருந்த அடுத்த திட்டத்தையும் சொல்லி “நாங்க புறப்பட தயாராய் இருந்தோம். நீங்க வந்துட்டீங்க” முடித்தாள்.
பாலுவிற்கும் இப்போதுதான் முகம் பழைய நிலைக்கு வந்தது.
“வாங்க போவோம்!” அவனும் புறப்பட்டான்.
“நீங்க தேவை இல்லே. ஓய்வெடுங்க. நாங்க போய் முடிச்சு வர்றோம்!” என்ற மாலா “சாரு இதை உன் கையால பொட்டியில வைச்சு பூட்டி வா” எழுந்தாள்.
சாரு அதை வாங்கி சுவர் மூலையிலிருந்த டிரங்கு பெட்டிக்குள் பத்திரப்படுத்திவிட்டு கிளம்பினாள். இருவரும் வெளியே வந்து ஆட்டோ பிடித்து வாசுகி வீட்டு முன் நின்றார்கள். கேட் பூட்டி இருந்தது. மாலா தட்டினாள். காவல்காரன் எட்டிப்பார்த்தான்.
“அம்மா இல்லீங்க. குடும்பத்தோட வெளியூ ர் போயிருக்காங்க. நாளைக்குத் திரும்புவாங்க” சொன்னான்!
‘இன்னைக்குப் பலிதான்!’ திரும்பினார்கள்.
ஆனாலும்… எக்காரணத்தைக் கொண்டும் போகக்கூடாது! என்பதில் இருவருக்குள்ளுமே உறுதி இருந்தது.
அதை மாலாவே சாருவிடம் சொன்னாள். மேலும்….
“என்ன நடக்குதுன்னு பார்த்துடலாம்! சின்னப்பன் சொல்லிட்டுப் போனது போல எவனாவது வருவானா. இல்லை, சப்- இன்ஸ்பெக்டரே தேடி வந்து புடிச்சுப் போவாரா பார்க்கலாம்!” என்றாள். பாலுவிடமும் வந்து விசயத்தைச் சொன்னார்கள்.
அவனும் “பார்க்கலாம் படுங்க” என்று தைரியம் சொன்னான். என்னதான் தைரியமாப் படுத்தாலும் மூவருக்கும் துாக்கம் பிடிக்கவில்லை. எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்! என்கிற எதிர்பார்ப்பில் உள்ளுக்குள் மூவருக்கும் திகில்.
“ஏங்க! விபரம் சொல்லி ஆயா முத்தம்மாவை நம்ம வீட்டுக்குக் கூட்டி வந்து துணைக்குப் படுக்க வைச்சுக்கிட்டா என்ன?” மாலா கணவனைக் கேட்டாள்.
“அப்படி செய்யுறதால லாபம்?” இவன் அவளைத் திருப்பிக் கேட்டான்.
“சப்-இன்ஸ்பெக்டர் நம்மகிட்ட அராஜகமா நடக்கிறார், தரகர் நமக்குத் தொல்லை கொடுக்கிறார் என்பதற்கு சாட்சி. ஊருக்கும் தெரியுமில்லே..?” என்றாள்.
“சரி. ஆள் வந்தா செருப்பாலடிச்சு துரத்தலாம். சப்- இன்ஸ்பெக்டர் வந்தாத்தான் சிரமம். வாங்கடின்னு அவுங்களையும் இழுத்துப் போனால் வம்பு. அவுங்க சாட்சியும் எடுக்காது. நம்மால அவுங்களுக்கும் கஷ்டம்!” பாலு.
‘இது சிக்கல்!’ மாலா உணர்ந்தாள்.
“அவுங்களை அவுங்க வீட்டிலேயே விழிச்சிருக்கச் சொல்லலாம்! வந்தா கவனிப்பாங்க.” சாரு தன் புத்தியில் பட்டதைச் சொன்னாள். “இது சரிங்க” மாலா எப்படியும் தப்பிக்கும் மனநிலையில் சொன்னாள்.
“இருக்கலாம் மாலா. நம்மால அவுங்களுக்குச் சிரமம். அவுங்க அப்படி விழிச்சிருந்தாலும் யார்கிட்ட சாட்சி சொல்லி நம்மை விடுவிக்கப் போறாங்க?”
“குப்பத்தைக் கூட்டி ஸ்டேசனுக்கு முன் வந்து நியாயம் கேட்கச் சொல்லிட்டுப் படுப்போம்!”
“இவுங்க பேச்சை மக்கள் கேட்டு வருவாங்களா?”
“போலீஸ் ஜீப் வந்தாலே போய் ஊரைக் கூட்டச் சொல்வோமே!”
“ராத்திரி ஒரு பொழுது தப்பிச்சா போதும்!” மாலா தவித்தாள்.
“அவுங்களுக்குச் சிரமம் கொடுக்காம இன்னொரு நல்ல யோசனை அக்கா”
“என்ன?”
“இன்னைக்கு இந்த வீட்டுல யார் இருந்தாலும் ஆபத்து. தான் நினைச்சது நடக்கலை என்கிற ஆத்திரத்துல புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் அடிச்சு இழுத்துப் போவான். மிரட்டி பொய்க் கேசு போட்டு நம்மை மடக்கப் பார்ப்பான். ராத்திரி மட்டும் நாம மூணு பேருமே வீட்டைக் காலி செய்துட்டுப் போய் ஆயா முத்தம்மாளோட படுத்திருந்தா யாருக்கும் கஷ்டம் பிரச்சனை இல்லே.” என்றாள்.
“போலீஸ் அடுத்த வீடு வந்து பார்க்காதா?”
“பார்த்து தொந்தரவு கொடுத்தா அவுங்களுக்கு கண் முன்னாலேயே அவுங்க அராஜகம் தெரியும்!”
“என்ன பேசாம இருக்கீங்க?” மாலா கணவனை உசுப்பினாள்.
“மத்தவங்களைச் சிரமப்படுத்த வேணாம்ன்னு எனக்கு யோசனை…”
“அக்கம் பக்கம் உதவி. இதுல சிரமத்துக்கு என்ன வேலை? இன்னைக்குத் தப்பிச்சாலும் வஞ்சம் வைச்சு போலீஸ்காரன் பழி வாங்குவான். நாளைக்கும் உதவி. பக்கத்து வீட்டுக் கண் என்னைக்கும் நம்ப மேல இருக்க வழி” சொன்னாள்.
“சரி“ தலையசைத்துச் சம்மதித்தான்.
அதே சமயம் “சாரு!” வாசலில் ஆயா குரல் கேட்டது. கதவைத் திறந்தாள். அவளும் முத்தம்மாள் மூட்டை முடிச்சுகளுடன் நின்றார்கள்.
“என்ன ஆயா?” மாலா வெளியே வந்தாள். அவளைத் தொடர்ந்து சாருவும் வந்தாள்.
“ஏழுமலையானைத் தரிசிக்கப் போறோம். திரும்ப மூணு நாளாகும் நம்ம வீடுங்க மேல கொஞ்சம் கண்ணை வைச்சுப் பார்த்துக்கோங்க.”
இருந்த பிடியும் நழுவ முகம் வெளிறி “சரி பாட்டி!” தலையாட்டினாள்.
அவர்கள் திரும்பி நடந்தார்கள். துாரத்தில் சுற்றுலா பேருந்து இவர்களுக்காக காத்து நின்றது. ஏறி பேருந்து புறப்படும்வரை அசையாமல் நின்று பார்த்த மாலா ‘இன்னைக்கு நாம எடுத்ததெல்லாம் தடை தடங்கலா இருக்கு. கெட்டது நடக்க அஸ்திவாரமா?’ நினைத்தாள். சாருவுக்கும் இதே நினைப்பு! வயிற்றில் கலக்கத்துடன் மாலாவைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தாள்.
‘ஆள் இன்னேரம் வீடு வந்திருப்பான். போதை ஏத்தியிருப்பான். காணாத ஆத்திரம் அதிரடியாய் வருவான்.’ சாருவிற்குள் எண்ணம் வர கலக்கியது.
“பயப்படாம படு.” பாலு சொல்ல படுத்தாள்.
படுத்து சாரு மணியைப் பார்த்தாள். பத்து. வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது.
“எத்தினி மணிக்கு வரச் சொன்னான்?” மாலா அவளைக் கேட்டாள்.
“எட்டு!”
“ஏன் இன்னும் காணோம்?”
“தெ…தெரியலை..!”
‘வருவானா?!’ எல்லாருக்குள்ளும் இதே கேள்வி தொக்கி நின்றது.
அத்தியாயம் – 8
“ஹோத்தா! ராத்திரி முதலமைச்சர் அலுவலகத்துல குண்டுன்னு எவனோ புரளியைக் கிளப்பி விட்டு நம்ம திட்டத்தைக் கெடுத்துட்டானுங்க…இருங்கடி சமயம் வரும் உங்களைக் கவனிச்சுக்கிறேன்!” – என்று முணுமுணுத்துக் கொண்டே சாரதி ஸ்டேசனுக்குள் நுழைந்த அதே நேரம்…
மாலா சாருவை இழுத்துக் கொண்டு தலைவி வீட்டை நோக்கிச் சென்றாள்.
சிறிது நேரத்தில் இருவரும் அந்த பிரமாண்ட வீட்டின் முன் நின்றார்கள்.
கேட்டில் நாய்கள் ஜாக்கிரதை என்ற போர்டு தொங்கியது. சுவரில் ஒரு பக்கம் சண்முகசுந்தரம் வக்கீல் என்று சலவைக் கல்லில் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது, இன்னொரு பக்கம் வாசுகி மாதவி பெண்கள் மன்ற தலைவி பெயர்ப் பலகை இருந்தது. வீடு திறந்திருந்தது இருவருக்கும் நிம்மதியாய் இருந்தது.
மாலா அழைப்பு மணியை அழுத்தினாள். போர்டிகோவிலிருந்து ஒரு ஆள் வெளிப்பட்டான். வேட்டி பனியன் தலையில் முண்டாசு தோட்டக்காரனைப் போலிருந்தான். அவன்தான் வந்து கேட்டைத் திறந்தான்.
“அம்மா இல்லே?” மாலா கேட்டாள்.
“இல்லீங்களே!”
“எங்கே போயிருக்காங்க?”
“இங்கேதான் எங்கேயோ வரதட்சணைக் கொடுமைன்னு போயிருக்காங்க.”
“எப்போ திரும்புவாங்க?”
“சொல்ல முடியாது. போலீசெல்லாம் போனா திரும்ப நேரமாகும்.”
‘என்ன செய்யலாம்?’ என்று மாலா நகத்தைக் கடிக்கும் போதே பின்னால் காரின் ஹாரன் ஒலித்தது.
“இதோ வந்துட்டாங்க” அவன் அகல கதவைத் திறந்தான். மாலா சாரு நகர்ந்தார்கள். கறுப்புக் கண்ணாடி ஏற்றிய அந்த கார் உள்ளே நுழைந்தது. இவர்கள் உள்ளே நுழைந்தார்கள். அவன் கதவை அடைத்தான்.
போர்டிகோவில் நின்ற காரிலிருந்து சினிமா நடிகையைப் போல் வாசுகி இறங்கினாள். இவர்களைப் பார்த்து “வாங்க” கையசைத்து உள்ளே சென்றாள்.
இவர்கள் நுழைய….. அவள் சோபாவில் அமர்ந்திருந்தாள். எதிரில் செல்ல…..”உட்காருங்க” நாற்காலிகளைக் காட்டினாள் அமர்ந்தார்கள்.
“என்ன பிரச்சனை சொல்லுங்க ?”
மாலா நுனி சீட்டுக்கு வந்தாள்.
“நான் மாலா. இவன் என் தங்கச்சி!” தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பாலுவை தான் திருமணம் செய்து கொண்ட காரணம் அதனால் ஆண்கள் பார்வை ஜொள்ளு எல்லாவற்றையும் விளக்கி சாரு யார், அவளைத் திருமணம் செய்து கொண்ட காரணங்களையும் விலாவாரியாக கொட்டினாள்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட வாசுகி “இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை?” கேட்டாள்.
“இவளை வைச்சி சம்பாதிச்சிக்கிட்டிருக்கிற ஆள் வந்து நீ தொழிலுக்கு வரனும்ன்னு கட்டாயப்படுத்துறார் மேடம். அடுத்து… சப்- இன்ஸ்பெக்டர் சாரதி வந்து தனக்கு வேணும்ன்னு கட்டாயப்படுத்தி என்னையும் சாக்கடையில தள்ள வழி செய்யறார் மேடம்!”
“அப்படியா?!“ வாசுகிக்கு அதிர்ச்சி ஆச்சரியமாக இருந்தது.
“ஆமாம் மேடம். மறுத்தா என்னை அவரையெல்லாம் புடிச்சு உள்ளே தள்ளி நாரடிச்சுடுவேன்னு மிரட்டிப் போறார் மேடம்.”
‘சுயநலத்திற்காக திருந்தியவர்களை வாழ விடாமல் துரத்தி இருப்பவளையும் கெடுக்க…என்ன அயோக்கியத்தனம்!’ வாசுகிக்கு நெஞ்சு கொதித்தது.
“சரி நீங்க சொன்னதெல்லாத்தையும் அப்படியே விலாவாரியாய் எழுதி என்கிட்ட கொடுத்துட்டுப் போங்க. கவனிக்கிறேன்!” என்றவள் எழுந்து சென்று சுவரோரம் இருந்த மேசையைத் திறந்து தாளும் பேனாவும் எடுத்து வந்து நீட்டினாள்.
“ச…சப்-இன்ஸ்பெக்டரால எங்களுக்கு எந்த நேரமும் ஆபத்து மேடம்!” சாருவால் உதறலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“எது நடந்தாலும் உடனே எவரை விட்டாவது எனக்கு ஒரு வார்த்தை சொல்லி அனுப்புங்க. கவனிக்கிறேன்!” அபயம் அளித்தாள்.
மாலா டீபாயின் மேல் தாளை வைத்து விடு விடுவென்று எழுதினாள். அதில் இருவரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்கள்.
“ஏன்க்கா! இவுங்க எப்படி நடவடிக்கை எடுப்பாங்க? சப்- இன்ஸ்பெக்டர்கிட்ட போய் நேரடியாய் மோதுவாங்களா?” சாரு அப்பாவியாய் கேட்டாள்.
“கண்டிப்பாய் மோதி நம்மை விடுவிப்பாங்க.”
“இன்னைக்குத் தப்பிச்சாலும் ஆத்திரம் அவமானம் அந்த ஆளால நாளைக்கு நமக்கு மேலும் தொந்தரவு இருக்காது?!”
“நமக்கு அதைப் பத்தி கற்பனை வேணாம். அடுத்து..நம்ம வேலையை நாம் பார்ப்போம். கடை வைக்க ஏற்பாடு செய்வோம். கூரை கட்டுறவரைப் பார்த்து வாசலோரம் கடை கட்றதுக்கு ஆலோசனைக் கேட்கலாம்.” மாலா சொல்லிக் கொண்டே ஆட்டோ பிடித்தாள். இருவரும் அதில் ஏறினார்கள்.
“ஏம்பா இங்கே எங்கேயாவது வீடு கூரை பிரிச்சு கட்டுறவர் இருக்காறாரா?” மாலா டிரைவரைக் கேட்டாள்.
“பக்கத்துல இருக்கார்ம்மா கொண்டு போய் விடுறேன்!” அவன் வண்டியை விட்டான்.
செல்வராசு இருபத்தைந்து வயது இளைஞனாக இருந்தான். இவர்கள் ஆட்டோவை விட்டு இறங்கி விசயத்தைச் சொல்லி இடத்தைச் சொன்னதுமே…
“அட… பாலு சார் வீடா! எனக்குத் தெரியுமே!” என்றான்.
“எப்படி?“
“அந்த வீட்டையே நான்தான்ம்மா சாருக்குக் கட்டிக் கொடுத்தேன். நீங்க போங்க மதியம் மூணு மணிக்கு மத்த ஆளுங்களோட வர்றேன். பார்த்து என்னென்ன தேவை, எவ்வளவு செலவாகும்ன்னு சொல்றேன்!” அனுப்பினான்.
திரும்பும் போதுதான் பிரச்சனை. பாதி வழியைக் கடந்திருப்பார்கள். துாரத்தில் சாலையை அடைத்து கூட்டம்.
டிரைவர் நிறுத்தி எதிரில் வந்தவனிடம், “விபத்தா?” கேட்டான்.
“ஆமாம்! ரொம்ப கொடுமை.. உடல் ஊனமானவனை போலீசு வண்டி துாக்கிடுச்சு. அவன் வந்த மூணு சக்கர சைக்கிள் நொறுங்கி ஆள் இடத்திலேயே காலி. அடிச்ச வண்டியும் சாலையோரம் மோதி நிக்குது!” சென்றான்.
கேட்ட மாலா சாருவுக்குச் சொரக்கென்றது,
‘இரவு போகாததால் ஆத்திரப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சாரதி வேலைக்குச் சென்ற ஆள்மீது ஏற்றி கொன்று விட்டாரா?!’ இருவரும் ஒருவரையொருவர் கலவரமாய்ப் பார்த்தார்கள்.
“இருப்பா” சொல்லி விட்டு இருவரும் இறங்கி அந்த கூட்டத்தை நோக்கி ஓடினார்கள்.
“நகருங்க நகருங்க” மனிதர்களை விலக்கிப் பார்க்க அங்கே…
யாரோ ஒருவன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். பாலு இல்லை. சாருவிற்கும் மாலாவிற்கும் நிம்மதி மூச்சு வந்தது. வீட்டிற்கு வந்தார்கள். இருந்தாலும் சாருக்குள் சின்னதாய் இன்னொரு யோசனை. அவளையும் அறியாமல் நிழலாடியது.
சேத்துப்பட்டில் சின்னப்பன். ஒருத்தனை இரண்டு ஆள் வைத்து பின்னி எடுத்தார்.
“நாயே! வந்தோமா வந்த இடத்துல ஒழுங்கு மரியாதையாய் இருந்து தன் ஜோலியை முடிச்சுட்டுப் போனோமான்னு இருக்கனும். அதை விட்டுட்டு உனக்கு ஏன்டா அவகிட்ட உன்னைக் கட்டிக்கிறேன்னு பேச்சு? ஓடிடலாம்ன்னு கணக்கு? இங்கே நாங்க எவனையும் வா, பழகிட்டு காசு குடுத்துட்டுப் போன்னு அழைக்கலை. நீங்களா தேடி வர்றீங்க போறீங்க. இப்படி நாங்க உங்க விசயத்துல தலையிடாம இருக்கும் போது நீங்க ஏன் எங்க விசயத்துல தலையிட்டு எங்க பொழைப்புல மண்ணையள்ளிப் போடனும்? இனி இப்படி ஏடாகூடமா தலையிட்டீங்க…மவனே! இந்த அடி மன்னிப்பு. அடுத்து தண்டனை சாவு நெனப்பு வைச்சுக்கோ ஓடு” துரத்தினார்.
அவனைத் துரத்தியோடு நிறுத்தாமல், “ஏன்டி உங்களுக்கொல்லாம் இந்த நாரப் புத்தி? இவனுங்களெல்லாம் காதல் கத்தரிக்காய்ன்னு உளறி உங்களை மயக்கி கூட்டிப் போய் ஆசை தீர்ற வரைக்கும் வைச்சிருப்பானுங்க. அடுத்து விட்டுட்டு காணாம் போயிடுவானுங்க, இல்லே துரத்தி விடுவானுங்க. எந்த பலான பொண்ணு ஒழுங்கு மரியாதையாய் ஒரு வீட்டுக்கு மருமகளாய்ப் போயிருக்கா? எந்த குடும்பம் சேர்த்திருக்கு? நிர்க்கதியாய் நின்னு கடைசியாய் திரும்ப இந்த தொழிலுக்குத்தான் வரனும். இதெல்லாம் தேவையா? போங்கடி உள்ளே!” சம்பந்தப்பட்டவளோடு நிறுத்தாமல் கூடி வேடிக்கைப் பார்த்தவர்களையும் அதட்டி அனுப்பினார்.
அது இப்போது உள்ளே கம்பளிப் பூ ச்சியாய் ஊற…. அலுவலகத்திற்குப் போயிருக்கும் பாலுவை சின்னப்பன் மறைத்து ஆள் வைத்து அப்படி ஏதாவது செய்தால்? நினைக்க திக்கென்றது.
“என்ன சாரு திடீர்ன்னு ஒரு மாதிரியாய்ப் போயிட்டே?”
சொன்னாள்.
“அதையும் பார்க்கலாம்!”
அவள் தைரியம் இவளுக்கு வியப்பாய் இருந்தது.
நெருங்கி வந்து பார்க்க முடியாத அளவிற்கு வேலை விசயமாக ஒரு முதலாளியைப் பார்க்கச் சென்ற சீனுவிற்கு திரும்பி வரும்போதுதான் காலை பதினோரு மணியளவில் மாலா சாரு செல்வராசுடன் பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.
“எதுக்காக பாலா அதுங்க இங்கே வந்திருக்கும்?” இவன் அருகில் வந்தவனைக் கேட்டான்.
“தெரியலை.”
“செல்வராசைக் கேட்கலாமா?”
“அது நமக்கு வீண் வேலை!”
நண்பன் ஒதுக்கினாலும் சீனுவிற்கு ‘அது என்ன காரணம்?‘ உறுத்திக் கொண்டே வந்தது.
‘இந்த சப்-இன்ஸ்பெக்டர் சொதப்புறாான்! எப்படியாவது அவளுங்களைத் தொழிலுக்குக் கொண்டு வந்து மூக்கை உடைக்கனும்!‘ என்று யோசித்து நாயாய் திரிந்து கொண்டிருந்த ரகு அவர்கள் கண்ணில் பட்டான்.
‘மாலா மேலேயே நாட்டமாய் இருந்து அவர்களையே மோப்பம் பிடித்துக்கொண்டு அலையும் இவனைக் கேட்டால் விசயம் தெரியும்!‘ நப்பாசையில் சீனு, “ரகு!” எதிரில் வந்தவனை அழைத்தான்.
வெகு நாட்களாக நண்பர்களைப் பார்க்காத தாக்கம்., “ஹாய்! எங்கேடா போய் வர்றீங்க?” இவர்கள் அருகில் வந்தான்.
அவர்கள் சென்ற விசயத்தைச் சொன்னார்கள்.
“வேலை கிடைச்சுடுச்சா?”
“ம்ம்…. நாளைக்கு இவனுக்கு அவர் கம்பெனியிலேயும் எனக்கு ஜவுளி கடையிலேயும் வேலை. மாசம் பத்தாயிரத்து ஐநுாறு சம்பளம்” என்ற சீனு, “உன் பட்சிங்களை இன்னைக்குச் செல்வராசோட பார்த்தோம்.” தகவல் சொன்னான்.
“எந்த செல்வராசுடா!” ரகு துணுக்குற்றான்.
அவனுக்கும் தொற்றியது.
“அதான்ப்பா கூரை கட்டுறவன். என்ன விசயம்?”
“ஏன்?”
“தெரியலை. வர்றேன்!” ஆளைத் தெரிந்து கொண்ட ரகு அடுத்த வார்த்தை பேசாமல் சிட்டாக பறந்தான்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
குர்பானி
ஜே.எம்.சாலி
July 26, 2026
உயிர் உனதானதே!
லாவண்யா ஸ்ரீராம்
July 26, 2026
அணில் குத்திகள்
காஞ்சி.தங்கமணி
July 26, 2026
