மனதோடு மட்டும்!




தனது சகோதரியின் மகள் திருமண விழாவிற்காக ரஷ்யாவிலிருந்து வந்திருந்த சுந்தரி, தாடியுடன் இருந்தாலும் முகம் அடையாளம் காட்டும் படி தெரிந்ததால் கல்லூரியில் தன்னுடன் படித்த ரகுவை நேரில் பார்த்ததும் பரவசமானாள்.

“மொகத்த நேராப்பார்த்து ரொம்ப வருசமாயிடுச்சு…” பெண்கள் அருகிலேயே செல்வதைத்தவிர்த்து வந்த ரகு, ஏக்கமாகச்சொன்ன சுந்தரி அருகில் போய் பக்கமாக அமர்ந்து கொண்டான்.
அவனது கைகளை இறுகப்பற்றி தனது அன்பை முகத்தில் முழுமையாக வெளிப்படுத்தினாள். கல்லூரியில் படிக்கும் காலத்தில் பார்த்து பேசியது மட்டும் தான். தொட்டுப்பேசியது கூடக்கிடையாது. ஆண், பெண் தொட்டுப்பேசும் பழக்கம் இப்போது போல் அப்போது கிடையாது. வெளிநாட்டில் வாழ்ந்து விட்டு வந்த பின்பு அருகில் அமர்ந்து தொட்டுப்பேசும் பழக்கம் இயல்பாக வந்து விட்டது.
“குழந்தைகள்….?” தயங்கியபடி கேட்டாள். நீண்ட வார்த்தைகள் வர மறுத்தன. உணர்வுப்போராட்டம் உள்ளத்தில் ஏற்பட்டதால் உள்ளபடி பேச இயலவில்லை. ஐம்பது வயதிலும் ஒருவித நடுக்கம்.
“கல்யாணம் பண்ணிக்கல….”
கேட்டவள் அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.
“ஏன்…?”
“பிடிக்கலை…”
“பொண்ணுங்களையா…? கல்யாணத்தையா….?”
“வேற பொண்ணுங்களோட என்னோட கல்யாணத்த… ஒரு பொண்ணோட மனசால வாழ்ந்துட்டு இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க வேண்டாம்னு தான்….”
“அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி யாருன்னு நானுந்தெரிஞ்சுக்கலாமா…?”
கைகளின் இறுக்கம் தளர்ந்தது. கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது. அவளது முகத்தை நேருக்கு நேராகப்பார்க்க முடியாதவனாக திரும்பியபடி தேம்பி அழுததைக்கண்டதும் அதிர்ந்தாள். அவள் படித்திருப்பது சைக்காலஜி என்பதால் புரிந்து கொண்ட அவளது கண்களும் குளமாயின.
அவனது தளர்ந்த கைகளை இறுகப்பற்றினாள்.
கண்ணீரானது ஏக்கத்தின் தேக்கத்தை வடிந்தோடச்செய்து ஒருவித சாந்த நிலையைத்தரும் அற்புத மருந்தென்பதைப்புரிந்தவள் என்பதால் அவன் அழுவதைத்தடுக்காமல் வெறுமனே இருந்தாள்.
அவர்களிடம் காதல், காமம் எதுவும் துளியளவும் தற்போது இல்லை. மனம் இணக்கமானவர்கள் அருகிலிருப்பது கூட ஒருவித தியான நிலை தான் என்பதை முதலாக இப்போது தான் இருவருமே புரிந்து கொண்டனர்.
‘தியானம், யோகாவில் கூட இவ்வித சலனமற்ற மனநிலையைக்கண்டதில்லை. இறைவன் படைப்பின் அதிசயம். ஆயிரம் கோடி சொத்துக்கள் தராத நிம்மதி…’ என மனதுள் வார்த்தைகள் சனலமற்று ஓடிக்கொண்டிருந்ததை உணர்வால் புரிந்து கொண்டாள்.
சக தோழி ரஞ்சிதா வந்து சுந்தரியின் பின்பக்கமாக நின்று கண்களை இரண்டு கைகளாலும் மூடிய போது “யாரது…?” என கேட்ட படி கண்டு பிடிக்க இயலாமல் திணறியவள், கண்களை மூடிய கைவிரல்களை தனது கையால் தொட்டு எண்ணிப்பார்த்தவள் வலது கையில் சுண்டு விரல் இல்லாததை அறிந்ததும்”ரஞ்சீ…..” என உற்சாகமாகிக்கூறியதும் கண்களை மூடியிருந்த கைகள் அங்கிருந்து கீழிறங்கி இடுப்பைக்கிள்ளியபடி கட்டிப்பிடித்தன.
உடனே எழுந்து திரும்பிய சுந்தரி ரஞ்சிதாவை மார்போடு அணைத்துக்கொண்டாள். இருவரும் தனியாகச்சென்று காஃபி குடித்தவர்கள் பழைய கதைகளைப்பேசி மகிழ்ந்தனர்.
ரஞ்சிதாவைக்கண்ட மகிழ்ச்சியில் ரகுவை மறந்து விட்டதை உணர்ந்த சுந்தரியின் கண்கள் அவனைத்தேடின. மண்டபம் முழுக்கத்தேடியும் அவனைக்காணவில்லை.
‘ரஞ்சிதாவைப்பார்த்ததும் அவனை கண்டுகொள்ளாமல் விட்டுச்சென்றதால் கோபப்பட்டிருப்பானோ….? இல்லை தன்னுடன் தொடர்ந்து இருந்தால் பழைய எண்ணங்கள் வந்து ஆக்கிரமித்து மனதைத்துன்புறுத்தும் என்பதால் சென்று விட்டானோ….?’என நினைத்தாள்.
“என்னடி… ரகுவைத்தானே தேடறே….?”
“ஆமா…”
“அவன் சைக்கோ மாதிரி ஆயிட்டான். பேசிட்டே இருப்பான். சொல்லாமையே எழுந்து போயிடுவான். ஏதோ லவ் பெயிலியர் போலிருக்கு.ஸ்கூல்ல இருந்து பெஸ்ட் ஸ்டூடண்ட் னு பேரு வாங்கினான். மார்க்லயும் எப்பவும் பஸ்ட் தான். என்ன ஆச்சோ….? குறிப்பா சொல்லப்போனா டூ தௌசண்ட்ல இருந்து மாறிட்டான். உன்னோட கல்யாணத்துக்கப்புறம்னு வெச்சுக்கவே…’ இதைக்கேட்டு தூக்கி வாரிப்போட்டது சுந்தரிக்கு.
“எந்தப்பொண்ணா இருந்தாலும் பிடிச்சிருந்தா சொல்லியிருக்கலாமே…. மனசுல மட்டும் பசிக்கிறத நெனைச்சா சோறு கிடைக்குமா….? பசிக்குதுன்னு சொன்னாத்தானே கிடைக்கும். என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லியிருந்தா கூட உடனே ஓகே சொல்லியிருப்பேன். ஏன்னா அவனை எனக்கு ரொம்பப்புடிக்கும். இப்ப வீணா வாழ்க்கைய முடிச்சிட்டானே….” கூறிய சுந்தரியின் கண்களில் கண்ணீர் பெருகியது.
“சரி நீ எப்படி இருக்கே….?” ரஞ்சிதாவைக்கேட்டாள் சுந்தரி.
“மேரேஜ் ஆகி ரெண்டு வருசத்துல ஒரு பையனக்கொடுத்துட்டு அவரு விபத்துல போயிட்டாரு. அப்புறம் தனியாதான் பையன வளர்த்துட்டு வாழ்ந்தேன். சரி நமக்கும் இப்படி ஆயிடுச்சு. மாமா பையன் ரகுவுக்கும் கல்யாணம் நடக்கலே. அவனோட வாழ்ந்தா என்னன்னு தோணுச்சு. என்னோட அப்பாகிட்ட சொன்னேன். அவங்க பேரன்ஸ்க்கும் பிடிச்சுப்போய் ரகுவ கன்வின்ஸ் பண்ணி என்ன பொண்ணு கேட்டாங்க. ஆனா அவரு பேரன்ஸ் விருப்பத்துக்காக பண்ணிக்கிற மாதிரி காட்டிகிட்டான். சரி போகப்போக சரியாயிடும்னு நானும் நம்பிட்டேன். ஒரு கோயில்ல வெச்சு சிம்பிளா கல்யாணம் நடந்துச்சு. அப்புறம் என்னோட பையனுக்கு நல்ல அப்பாவா நடந்துக்கறான். எனக்கு நல்ல புருசனா ஒரு நாள் கூட இருபது வருசத்துல நடந்துக்கல. யாரு கேட்டாலும் இன்னும் கல்யாணம் நடக்கலேன்னுதான் சொல்லுவான். என் கூட எந்த விசேசத்துக்கும் தனியா வரமாட்டான். என்னப்பார்த்தா உடனே அங்கிருந்து போயிடுவான். ஒரு போட்டோ கூட கல்யாணத்துலயும், அப்புறமும் எடுத்துக்கல. அப்படித்தான் இப்பவும் என்னப்பார்த்ததும் போயிட்டான்” சொன்ன ரஞ்சிதாவும் கண்ணீர் சிந்தினாள்.
“என்னடி முதல்ல அவன யாரோ, எவனோ மாதிரி பேசுன. இப்ப ரகுவோட கல்யாணமே நடந்திருச்சுன்னு சொல்லறே….? அவனக்கேட்டா கல்யாணமே நடக்குலேன்னு சொல்லறான். என்ன ரெண்டு பேரும் டிராமா பண்ணறீங்களா…? இப்ப ரகு வீட்ல இருப்பானா….?”
“இருப்பான்….”
“நட போகலாம். ரகுவோட நிறைய பேசனம்”
“ம்…” என சம்மதித்த ரஞ்சிதா சுந்தரியை அழைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே சென்றவள், அங்கே நிறுத்தியிருந்த தனது காரில் தோழியை அமரச்செய்து வீட்டிற்கு கிளம்பினாள்.
வீடு அரண்மனை போன்று இருந்தது. இன்னொரு காரும் போர்டிகோவில் நின்று கொட்டிருந்தது. வீட்டின் பாதுகாவலர் வீட்டின் கேட்டைத்திறந்து மூடினார். வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்த வேலைக்காரப்பெண் ரஞ்சிதாவிடமிருந்து தோள்பையை வாங்கிச்சென்றாள். அரண்மனை வாழ்க்கை தான்’ என மனதில் நினைத்து ஏங்கினாள் சுந்தரி.
“என்னோட அப்பா எனக்கு வாங்கிக்கொடுத்த வீடு. அவரு எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணினார். ரகுவை நானும் காலேஜ்ல படிக்கிறப்ப இருந்து உயிரா காதலிச்சேன். அவன் கிட்ட ஒரு நாள் லவ்வ சொன்னேன். அவன் எந்த ரெஸ்பான்ஸ்சும் பண்ணல. அப்பதான் புரிஞ்சுகிட்டேன். அவனோட மனசுல இன்னொரு பொண்ணு இருக்கான்னு. காலேஜ் பங்ஸன்ல அவனோட நீ நடிச்ச நாடகத்துல உன்னோட எடுத்த ஒரு போட்டோவ தினமும் படிக்கிற பகவத்கீதை புத்தகத்துல இருந்தத பார்த்த பின்னாடி நான் புரிஞ்சிட்டேன். அவன் உன்னைத்தான் காதலிச்சிருக்கிறான். ஆனா நீ முழு நேரமும் படிப்ப காதலிச்சதால அவன, அவனோட லவ்வ புரிஞ்சுக்கல. அவனும் உன்கிட்ட சொல்லாம மனசோட வெச்சிட்டான்” ரஞ்சிதா பேசிக்கொண்டிருக்கும் போது காஃபி வந்தது. ரசித்துக்குடித்தாள் சுந்தரி. ரகு ரஞ்சிதா ஜோடியாக எடுத்த போட்டோ எதுவும் ஹாலில் மாட்டியிருக்கவில்லை. கிருஷ்ணர் போட்டோ மட்டும் இருந்தது.
அப்போது ஒரு ஆச்சர்யம் நடந்தது. இருபது வருடங்களாக ஷேவ் செய்யாமல் சாமியார் போல் தாடி வளர்த்திருந்தவன், இன்று தாடியை முழுவதுமாக ஷேவ் செய்து அகற்றி விட்டு பளிச்சென கல்லூரியில் கண்ட தனது அதே முகத்தை சுந்தரிக்குக் காட்டிச் சிரித்தான்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |