மகன்




அவசர அவசரமாய் மருத்துவமனைக்குள் நுழைந்த உமா எதிர்பட்ட நர்ஸ்சுகளுக்கு ‘குட் மார்னிங்’ சொல்லிக்கொண்டே ‘செவிலியரின்’ அலுவலகம்’ விரைந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தாள்.
நர்ஸ் யூனிபார்முடன் அறையை விட்டு வெளியே வரவும் ‘மெட்ரன்’ கூப்பிடுவதாக எதிரில் நின்ற தீபா சொன்னவுடன், பக்கென்று மனம் திடுக்கிட்டது உமாவுக்கு. ஏம்பா போட்டு கொடுத்திட்டீங்களா? பரிதாபமாய் கேட்டாள். நீ லேட்டா வந்ததுக்கு அந்தம்மா கூப்பிட்டிருக்க மாட்டாங்க, வேற ஏதாவதா இருக்கும், சொல்லிக்கொண்டே உடைமாற்றும் அறை கதைவை திறந்து உள்ளே சென்றாள் தீபா.

எஸ்..கமின்.. மெட்ரனின் அறைக்கதவை தட்டி உள்ளே சென்றாள் உமா. நல்ல சிவந்த நிறத்துடன் நாற்பது அல்லது நாற்பத்தி ஐந்து மதிக்கத் தகுந்த உருவமாய் உட்கார்ந்திருந்தாள் மெட்ரன். எஸ்..தலையை தூக்கியவள் உமாவை பார்த்ததும் மெல்லிய புன்னகையை சிந்தினாள். பயத்துடன் இதயம் படபடக்க உள்ளே நுழைந்திருந்த உமாவுக்கு மெட்ரனின் சிரிப்பை கண்டவுடன் உயிர் வந்த்து. கூப்பிட்டதா தீபா சொன்னாங்க, மென்மையாய் சொன்னாள்.
எஸ் உனக்கு இன்னையிலயிருந்து ‘வார்டு டூட்டி’ போட்டிருக்கேன். ஆர்த்தோ வார்டுக்கு போ, சொன்னவளிடம் உமா படபடப்பாய் மேடம் ஏன் திடீருன்னு, நான் ஒண்ணும் தப்பு பண்ணலையே? மெல்ல சீட்டை விட்டு எழுந்த மெட்ரன், மை டியர் ‘கேர்ல்’ உன்னைய தப்பு பண்ணிட்டே அப்படீங்கறதுக்காக அங்க அனுப்பலை. அங்க எனக்கு வேண்டிய நோயாளி ஒருத்தரு இருக்காங்க, அவங்களை நல்லா கவனிச்சுக்க னும்னுதான் அனுப்பறேன்.
ஏன் இவர்களே நேரடியாக அந்த நோயாளியை பார்த்துக்கொள்ளலாமே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும், ‘எஸ் மேடம்’ கண்டிப்பா அங்க போறேன், அவங்க பேரு? தீபக்குமார், ஆர்த்தோ பிரச்சினை சர்ஜரி பண்ணியிருக்கு, பாத்துக்க. கண்டிப்பா பார்த்துக்கறேன், சொல்லிவிட்டு ‘மெட்ரன்’ சொன்ன வார்டை நோக்கி நடந்தாள், மனதுக்குள் அந்த தீபக் எப்படியிருப்பான் என்று நினைத்துக்கொண்டே.
அவள் பொறுப்பு எடுத்துக்கொண்ட ஆர்த்தோ வார்டில் எல்லா அறைகளிலும் நோயாளிகள் இருந்தனர். இரவு டூட்டியில் இருந்த நர்சிடம் டூட்டியை மாற்றி அவளை அனுப்பி விட்டு ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று மருத்துவ குறிப்பேடுகளை பார்த்து கையில் கொண்டு போயிருந்த மாத்திரை வகைகளை பிரித்து கையில் கொடுத்து எப்படி சாப்பிடவேண்டியது என்று விளக்கி சொன்னாள்.. இப்படி ஒவ்வொரு அறையாக பார்த்து முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடி விட்டது. அப்படி சென்ற போது மூன்றாம் அறையில் ‘தீபக் குமார்’ என்ற பெயரை நோயாளிகள் அட்டையில் பார்த்த ஞாபகம் வர ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்து விட்டு அந்த அறையை நோக்கி நடந்தாள்.
‘ஹலோ’..இவளின் மென்மையான அழைப்பில் கட்டிலில் உட்கார்ந்து புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த இளைஞன் திரும்பி பார்த்தான். இவளை கண்டவுடன் சிஸ்டர் நீங்க கொடுத்த மாத்திரையை ஒழுங்கா சாப்பிட்டுட்டேன்.
இருந்தால் இருபத்தி ஐந்துக்குள் இவன் வயது இருக்கலாம், ஆனால் முகம் இன்னும் குழந்தையானதாகத்தான் இருந்தது. நான் அதுக்காக வரலை, எங்க ‘மெட்ரன்’ உங்களை நல்லா பார்த்துக்க சொல்லி சொன்னாங்க, அதனால இப்ப நீங்க என்னோட ஸ்பெஷல் பேஷண்ட்.
அவன் வெட்கத்துடன் சிரித்தான். ஐயோ அப்ப மத்த பேஷண்டுகளுக்கும் ‘ரிகமண்ட்’ இப்படி யாராவது பண்ணாத்தான் கவனிப்பீங்களா?
பார்த்தீங்களா ஒரு பேச்சுக்கு இப்படி சொன்னா, உடனே எங்களை குறை சொல்ற மாதிரி பேசறீங்களே, உமா முறுவலுடன் சொல்ல, அவன் சிரிப்புடன் ‘சிஸ்டர்’ கண்டிப்பா அப்படி ஒரு அர்த்தத்துல சொல்லலை. உங்களை கிண்டல் பண்ணறதுக்குத்தான் சொன்னேன். அவளும் உங்களுக்கு மட்டும்தான் கிண்டல் வருமா? எங்களுக்கும் வரும் அப்படீங்கறதுக்காக சொன்னேன்.
ஆமா என்ன புத்தகம் படிச்சிட்டிருக்கீங்க?
“பொதுவுடமையும் ஜனநாயகமும்”
எனக்கு இந்த மாதிரி புத்தகங்களை படிக்க சிரமப்படுவேன். பொதுவா இங்க வர்ற பேப்பர், கதை புஸ்தகங்கள் இதை தவிர வேற எதுவும் படிக்க முடியாது, படிக்கவும் நேரம் கிடைக்கறதில்லை.
பரவாயில்ல, உங்களுக்கு எங்களை மாதிரி பேஷண்டுகளை பாக்கறதுக்கே நேரம் சரியா இருக்கும் இல்லையா?
ஆமாம், அதற்கு பின் அவனுடன் பத்து நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் உமா.
இரண்டு நாட்கள் ஓடியிருந்தது. தீபக்குமாரை தினமும் காலையும் மாலையும் வந்து சந்தித்து பேசி விட்டு சென்றாள். சில நேரங்களில் அவனுடன் பேசுவது மிகவும் சுவாரசியமாக இருந்தது. வேலை களைப்பில் அவனுடன் பேசி களைப்பை போக்கி கொள்வாள். அவனுக்கு காலிலும், தொடையிலும் சர்ஜரி செய்யப்பட்டிருந்ததால், அந்த புண் ஆற தினமும் மருந்து போட்டு அதற்கு மாத்திரையும் கொடுப்பாள். அவன் எந்த வித அசைவும் காட்டாமல் அதற்கு ஒத்துழைப்பான்..
அன்று அவள் அவசரமாய் காலையில் மருத்துவமனைக்குள் நுழைந்து அவளது அலுவலகத்திற்குள் நுழைய போனவளை. ‘ஹலோ சிஸ்டர்’ குரல் கேட்டு திரும்பி பார்த்தாள். நாற்பது வயது மதிக்கத்தகுந்த ஒருவர் சபாரி உடையுடன் நின்று கொண்டிருந்தார்.
இவள் புரியாமல் புருவம் உயர்த்தி அவரை பார்க்க அருகில் வேகமாய் வந்தவர் சாரி அவசரமா போற உங்களை கூப்பிட்டுட்டேன். போங்க போய் உங்க டூட்டிக்கு அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு வாங்க, அவர் அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.
உமாவின் மனதுக்குள் ஒரு கேள்விக்குறி எழுந்த்து. யார் இவர்? குரல் அதிகாரமாய் இருப்பதாய் பட்டது. வேகமாய் சென்று ‘அட்டண்டென்ஸில்’ கையெழுத்து போட்டு விட்டு யூனிபார்மையும் மாட்டிக்கொண்டு வெளியே வர ‘மெட்ரன்’ எதிரில் நின்று கொண்டிருந்தார். முகம் அழுதது போல் இருந்தது. உமா அழைத்தபடி அவள் கையை பிடித்தவள் ‘ஜாக்கிரதை’ சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே உட்கார்ந்திருந்தவர் எழுந்து இவள் அருகே வந்து இவர்கள் இருவர் அருகில் நின்று கொண்டார். இது உமாவுக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்தது.
சார்..எதுக்கு என்னைய நிக்க சொன்னீங்க? குரலில் எரிச்சல் தலைகாட்டியது, சாரி கோபிச்சுக்காதீங்க, நாங்க போலீஸ் உங்க கிட்டே சின்ன எங்கொயரி, அவ்வளவுதான், உங்க வார்டுல ‘ஷியாம்சுந்தர்’ அப்படீன்னு யாராவது இருக்காங்களா?
சாரி அப்படி யாரும் கிடையாது, பட்டென வார்த்தைகளை விட்டாள் உமா.
அது எனக்கு தெரியும், உங்க ‘மெட்ரனை’ விசாரிச்சுட்டேன், இங்க பாருங்க இந்த போட்டோவுல இருக்கறவர் இங்க இருக்காரா? அவ்வளவுதான்.
போட்டோவில் தீபக்குமார் இருந்தான். அவள் திகைத்து அனிச்சையாய் ‘மெட்ரனை’ பார்க்க, அங்க பாக்காதீங்க, என்னைய பார்த்து சொல்லுங்க? தலையாட்டுவதை தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
குட்..அவர் நடக்கற கண்டிசன்ல இருக்காரா?
அது டாக்டர்தான் சொல்லணும், உமா அவரிடம் சொல்ல அதுவும் எனக்கு தெரியும், அவர் பாத்ரூம் போறதுக்கு இதுக்கெல்லாம் நடக்க முடியுமா? மீண்டும் தலையாட்டினாள் உமா. ஓகே நீங்க போகலாம்.
இயந்திரமாய் அவள் பணி செய்யும் வார்டை நோக்கி நடந்தாள். மெட்ரனிடம் அவர் எதுவோ சொன்னது கேட்டது. அவள் வார்டை அடைந்த போது அங்கிருந்த மற்ற நர்சுகளின் முகமும், சிப்பந்திகள் முகமும் பயந்திருந்தது.
உமா, வா, வா. அந்த தீபக்குமார் பேஷண்ட் ஒரு நக்சலைட்டாம், போலீஸ் கூட சண்டை போட்டதாலத்தான் அவனுக்கு காயமாயிடுச்சாம். இப்ப அவனை போலீஸ் கஸ்டடியில எடுத்துட்டு போறதுக்கு போலீஸ் வந்திருக்கு..இரவு டூட்டி பார்த்த நர்ஸ் இவள் காதில் ஓதினாள்.
சுற்றி வர போலீசுடன் தீபக்குமாரை கைத்தாங்கலாக இரு போலீஸ்காரர்கள் பிடித்து கொள்ள அவன் நொண்டி நொண்டி செல்வதை இவள் ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த சிறுவனா போலீசுடன் சண்டை போட்டவன், அவனுடன் இரண்டு நாட்கள் பேசியதும், பழகியதும் அவள் ஞாபகத்திற்கு வர, அவனோ அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அனைவருக்கும் ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்னை கவனிச்சுகிட்டதுக்கு சிரிப்புடன் சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்றதை இவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தீபக்குமாரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் மெட்ரனே கட்டிவிட்டதாக மாலையில் உமாவிடம் சொன்னாள் கூட இருந்த நர்ஸ்.
இவங்க எதுக்கு அந்த பையனுக்கு ரிஸ்க் எடுத்துக்கணும்? கேள்வியாய் கேட்ட உமாவிடம் கூட இருந்த நர்ஸ் அந்த பையன் அவங்களோட பையனாம். அதனால ஹாஸ்பிடல் செலவை அவங்களே கட்டிட்டாங்க. ஒரே பையனாம், அப்பாவும் இறந்துட்டாரு, என்ன பண்ணறது? சாதாரணமாய் சொல்லிவிட்டு சென்றாள் அந்த நர்ஸ்.
உமாவிற்கு மெட்ரனின் அழுது சிவந்த முகம் நினைவில் நின்றது.