பேறு





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘ஞானத்திற்கும் கர்மத்திற்கும் உள்ள தொடர்பினை விசாரிக்கும் எண்ணம் பரமாத்மாவிற்குத் தோன்றியது. இரு மீமாத்சைகளையும் பக்தி என்ற இனிய பிணைப்பினாற் பூரணப்படுத்தி என்னை அருளினார்.’

அந்நூல் நிலையத்தின் ஒதுக்குப்புறமான மூலை. பழைய நூல்கள் மூன்று. பல்லாண்டுகள் நோற்றிய மௌனத்தைக் கலைத்தன.
‘என் மகிமையை இத்தலைமுறையினர் மறந்தனர் போலும். நூலகத்திலுள்ள அத்தனை நூல்களிலும் யானே சிறந்தவன். சைமினி முனிவரால் சிருஷ்டிக்கப்பட்டவன். ‘தர்மத்தை அறிய ஆசை…’ என்பதே என் தொடக்கம். சுயதர்மத்தில் ஜனிக்கும் கர்ம சுத்தியை விளக்குகின்றேன் எனப் பூர்வ மீமாம்சை தன் பெருமைக்குச் சுயகட்டியங் கூறியது.
‘சற்றே அடக்கத்துடன் பேசு. சைமினி மாமுனி வரின் குருதேவரான வியாச முனிவர் என்னைப் படைத்த னர். ‘பிரமத்தை அறிய ஆசை….” என்று என்னைத் தொடங்கினார். ஞானநிமித்தமானது கர்மம். எனவே, ஞானத்தை விளக்குவதனால் நான் உயர்ந்தவனல்லவா?’ என முன்னதின் ஏமாப்பினை மடக்கும் வகையில் பிரம மீமாம்சை சாற்றியது.
”யான்’ என்பது அகங்காரம்; ‘என்னது’ என்பது மமதை. ஞானமும், ஞான நிமித்தமும் பேசும் ஒரு முழு நூலின் இரு பாகங்களாகக் குருவும் சீடரும் இரு மீமாம்சை களையும் அருளினர். ஞானத்திற்கும் கர்மத்திற்குமுள்ள தொடர்பினை விசாரிக்கும் எண்ணம் பரமாத்மாவுக்குத் தோன்றியது. இரு மீமாம்சைகளையும் பக்தி என்னும் இனிய பசைப் பிணைப்பினாற் பூரணப்படுத்தி என்னை அர்ஜு னனுக்கு அருளியதைப் போன்று உலகிற்கு அருளினார். எனவேதான், ‘இது வேத உபநிடதங்களின் சாரமாக அமைந்தது’ என அறிந்தோர் கூறுவர்’ என பகவத்கீதை சமத்துவபுத்தி பேச விழைந்தது.
இம்மூன்று நூல்களும் தமது உரையாடலின்போது வித்திக்கொண்டிருந்த நித்திலக் கருத்துக்களைக் கேட்டுச் சுவைத்துச் சுகிப்பதற்கு அந்நூல் நிலையத்தில் துப்பறியும் நாவல் ஒன்று தானும் இருக்கவில்லை. ஜனரஞ்சக வாசகர்களின் வீடுகளுக்கு அவை ‘பறந்து பறந்து’ பயணஞ் செய்த வண்ணம் இருந்தன.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.