நடுத்தெரு நாகரிகம்
கதையாசிரியர்: கு.ப.ராஜகோபாலன்
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 16, 2026
பார்வையிட்டோர்: 47
(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சோப்பு இல்லாமல் எத்தனை நாள் – தலைக்குத் தைலம் இல்லாமல் மயிர் கொத்துக் கொத்தாகக் கொட்டுகிறது” என்று என் மனைவி அன்று விடிந்த பிறகு மூன்றாவது தடவையாகச் சுவரைப் பார்த்துப் புகார் செய்ய வாய் திறந்ததும் நான் சடக்கென்று எழுந்து பேனாவை மூடி வைத்துவிட்டுக் கடைக்குப் போனேன்.
“வாங்கோ, ஸார். என்ன பத்து நாளாய் இந்தப் பக்கமே காணோமே!” என்று கடைக்காரர் குசலப்பிரச்னம் செய்தார்.
கொஞ்ச நாட்களுக்குமுன் அவர் சிறு பாக்கிக்காகக் காலையிலும் மாலையிலும் ஆள் அனுப்பினதிலிருந்து பணம் வந்த பிறகு ரொக்கமாகத்தான் வாங்குவது என்று நான் அந்தப் பக்கம் போகவில்லை. மனைவியின் புகாரும் அதனால்தான். ஆனால் குடும்பத்தில் நாம் செய்து கொள்ளும் பிரதிக்ஞைகள் எங்கே நீடிக்க முடிகிறது?
“ஏதாவது ஒரு சோப்புப் பெட்டியும் தைலச் சீசாவும் கொடுங்கள். கொஞ்சம் அவசரம்” என்றேன் நான்.
“போகலாம், ஸார்: உட்காருங்கள். கடைப் பையன் கொஞ்சம் வெளியிலே போயிருக்கிறான். வந்ததும் எடுத்துத் தரச் சொல்கிறேன். ஆமாம், ஜப்பான்…” என்று ஆரம்பித்தார்.
அன்று சாமான்கள் இல்லாமல் மனைவியின் முகத்தைப் பார்ப்பதில்லை என்று தீர்மானித்து, எழுதவேண்டிய விஷயம் மறந்து தொலைத்தாலும் தொலையட்டும் என்று கடைவாசலில் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்தேன்.
மாலை நேரமாதலால் திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் ரோடில் ஒரே கூட்டம்: இரைச்சல். கடற்கரைக்குப் போகிறவர்களும் வருகிறவர்களும், தினசரி விற்கும் பையன்களும், மோட்டார்களுமாகத் தெருவு ரணகளப்பட்டது.
தெருவைப் பார்த்துக்கொண்டே என்னுடன் ஏதோ வம்பளந்து கொண்டிருந்த கடைக்காரர் திடீரென்று எதிர்ச்சிறகில் நடைபாதையில் போய்க் கொண்டிருந்த யுவதிகளின் கூட்டம் ஒன்றைப் பார்த்துக் கைதட்டி, “மாடம், மாடம்!” என்று கூப்பிட்டார்.
அந்தக் கூட்டத்திலிருந்து யுவதி ஒருத்தி தலையைத் திருப்பிப் பார்த்து, “ஓ!” என்று உதடுகளைப் பிரித்துப் புருவங்களைத் தாக்கிக் கூப்பிட்டதற்குப் பதில் சொல்ல, தோழிகளிடம், “ஒரு நிமிஷம்!” என்று சொல்லி அங்கேயே நிறுத்திவிட்டுக் குதிகால் உயர்ந்த நடையுடன் ஒரு பாய்ச்சல் பாய்ந்து கடைப்புறம் வந்தாள்.
வரும்பொழுதே முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்துக். கொண்டு, ”குட் ஈவினிங்’ என்றாள்.
கடைக்காரரும் முறுக்காக, “குட் ஈவினிங்” என்று சொல்லிவிட்டு, “பணம் வந்து சேரவில்லையே! போன முதல் தேதியே மணியார்டரை எதிர்பார்ப்பதாகச் சொன்னீர்கள். இந்த முதல் தேதியும் போய் விட்டது. இன்று தேதி பதினைந்து. பாக்கி ரொம்ப நிற்கிறதே!” என்று தடதடவென்று பேசிக்கொண்டே போனார்.
யுவதி, பக்கத்தில் நான் இருப்பதைப் பார்த்துக் கொஞ்சம் கலவரமடைந்து, ”அது எப்படி ஆகிவிட்டது என்றால்…” என்று சமாதானம் சொல்ல ஆரம்பித்தாள்.
கடைக்காரர் கடுமையாகக் குறுக்கிட்டு, “நீங்கள்தான் சொல்லிக்கொண்டு வருகிறீர்களே, மூன்றாம் மாத முதல்! இதோ பாருங்கள்: நான் கணக்கு முடிக்கவேண்டியிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே அவள் முகத்தை உற்றுக் கவனித்தார்.
யுவதி, நான் அங்கே இருக்கிறேன் என்று சங்கடப்படுவதைக் கண்டு நான் பரிதாபமடைந்து, ஸார்”, கொஞ்சம் காரியம் இருக்கிறது; போய்விட்டுப் பிறகு வருகிறேன்” என்று சொல்லி எழுந்தேன்.
கடைக்காரர் விடவில்லை.
“இல்லை, ஸார்; இதோ வந்துவிட்டேன். ஒரு நிமிஷம். நானே எடுத்துக் கொடுக்கிறேன், வாங்கிக்கொண்டு போய்விடுங்கள்’ என்று சொல்லி என்னை உட்காரும்படி சமிக்ஞை செய்துவிட்டு அவளைப் பார்த்து, “அம்மா, இனிமேல் என்னால் பொறுக்க முடியாது” என்றார்.
யுவதி வெலவெலத்துப் போனாள்.
“முதல் தேதி கட்டாயம் பணம் வந்துவிடும். முழுப் பாக்கியும் தீர்த்துவிடுகிறேன். பிறகு பணம் கொடுத்தே வாங்கப் போகிறேன்!” என்று சொல்லிக்கொண்டு அவர் முகத்தை, ‘இதோடு என்னை விட்டு விடுங்கள்’ என்ற பாவனையாகப் பார்த்தாள்.
ஆனால் அவர் விடுவதாகத் தெரியவில்லை.
”செய்கிறபோது அப்படிச் செய்யுங்கள், தாராளமாக. எனக்கும் தொல்லையில்லை. ஆனால் இப்போது பாக்கி ரொம்ப இருக்கிறது. மாதமும் மூன்றுக்குமேல் ஆகிவிட்டது. நான் கடன் கொடுப்பதை நிறுத்தியும் மாதம் இரண்டாகப் போகிறதே. பாவம், வேண்டிய சாமான்கள்கூட இல்லாமல்..” என்று ‘வேறு இடத்தில் ரொக்கம் கொடுத்து வாங்குகிறீர்கள்’ என்பதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டினார் கடைக்காரர்.
யுவதியின் முகம் வேர்த்துவிட்டது. உதட்டைக் கடித்துக் கொண்டு கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். ஒரு நிமிஷம் மெய்ம்மறந்தவள் போல நின்றாள். பிறகு திடீரென்று தூக்கி வாரிப்போட்டது போல் நினைவு பெற்றுச் சமாளித்துக் கொண்டாள்.
“முதல் தேதி பாருங்களேன் – இந்தத் தடவை நிச்சயம் – இனிமேல் – “
“முடியாதம்மா! நாளைக்கே எப்படியாவது கணக்கைத் தீர்த்து விடவேண்டும்” என்று கடைக்காரர் இரக்கமின்றிக் கண்டிப்பான குரலில் சொன்னார்.
லிஷயம் தலைக்குமேல் போய்விட்டது என்று அவள் கொஞ்சம் திடமடைந்து, “தயை செய்து முதல் தேதிவரையில் பொறுங்கள்!” என்றாள்.
“அன்றும் பழைய ஸால்ஜாப்புத்தானே!”
அவள் கண்களில் நீர் ததும்ப, “இல்லை. ஸார். எப்படியாவது அன்று கொடுத்துவிடுகிறேன்” என்றாள்.
“நிச்சயமாகவா?”
“நிச்சயம்.”
“சாமான்கள் எங்கே வாங்குகிறீர்களோ?” என்று அவர் விஷமமாகக் கேட்டார்.
அவள் மனம் குழம்பி உளறலாக, “இல்லையே! அதாவது, ஒன்றிரண்டு.. கிட்டயே!” என்று வாய்க்கு வந்ததைச் சொன்னாள்.
கடைக்காரருக்குக் கடைசியாக இரக்கம் வந்தது. இவ்வளவு வாட்டினது போதும் என்று எண்ணினவர் போல, ”சரி; போய் வாருங்கன். ஞாபகம் இருக்கட்டும், குட் ஈவினிங்!” என்றார்.
அவள் பிழைத்தோம் என்று நிம்மதியுடன், “குட் ஈவினிங்!” என்று அரைகுறையாக முணுமுணுத்துவிட்டுப் பழைய குதிப்புடன் ரோடைத் தாண்டித் தன் தோழியருடன் போய்ச் சேர்ந்து கொண்டாள்.
முதலிலிருந்தே எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது. என்னை வைத்துக்கொண்டு அவர் ஒரு பெண்ணை அப்படி அவமானப்படுத்தினது எனக்குக் கொஞ்சம் கோபமாகக்கூட இருந்தது.
“என்னை வைத்துக்கொண்டு அவள் மானத்தை வாங்கிவிட்டீர்களே! மிகவும் தப்பு, ஸார்”.
“என்ன தப்பு? பணத்தைச் சரியான காலத்தில் கொடுக்கும் திறமையிருந்தாலல்லவா இந்த நலீன அலங்காரங்களையும் அழகுகளையும் செய்து கொள்ள வேண்டும்? மூன்றாவது மனிதரை வைத்துக்கொண்டு சொன்னால்தான் தைக்குமென்று சொன்னேன்.”
“நீங்கள் செய்தது மிகவும் கண்ணியக் குறைவான காரியம். நான் எதிர்பார்க்கவில்லை, நீங்கள், படித்தவர்கள். இப்படிச் சொல்வீர்கள் என்று…”
”கண்ணியமாய் எவ்வளவு தூரம் இருக்கலாம். சொல்லுங்கள்.”
“அப்படிப் பார்க்கப் போனால் சட்டப்படியல்லவா நீங்கள் வசூல் செய்ய வேண்டும்? இப்படி அவமானப்படுத்துவதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம்?”
கடைக்காரர் சிரித்துவிட்டார்.
“இந்தக் கேள்வியைக் கேட்கத் தெரியாமலா அவள் சும்மா இருந்தாள் என்று நினைக்கிறீர்கள்?”
“சட்டப்படி-” என்று நான் ஆரம்பித்தேன்.
அவர் குறுக்கிட்டு, “இருங்கள். சட்டப்படி என்று பேசலாம் ஸார். ஆனால் நடைமுதலில் அது உபயோகமில்லை” என்றார்.
“யாருக்கு உபயோகமில்லை?”
“இரண்டு கட்சிக்குந்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன். சட்டப்படி போனால் ஒன்றுமில்லையா என்ன? அன்று கோர்ட்டுக்குப் போயிருந்தேன். மூன்று மாதம் வீட்டு வாடகைப் பாக்கி என்று ஒரு பெண்ணுக்கு ‘ஸம்மன்ஸ்’ வந்தது. நவநாகரிகப் பெண், ஸார். கோர்ட்டுக் கூட்டத்தின் முன்னிலையில் வந்து நிற்பதுமட்டும் கௌரவமா?”
“வாடகையைப்பற்றி ஏதாவது தகராறு இருக்கலாம். அதில் என்ன அவமானம்?”
“நடவடிக்கைக்குச் சம்பந்தமில்லாமல் நீங்கள் பேசுகிறீர்கள்.”
“நீங்கள் பேசுவது, நீங்கள் நடந்துகொண்ட முறை சரியானது என்பதை ஸ்தாபிக்க முயலுவதுபோல் அல்லவா இருக்கிறது?”
‘“என் முறையில் ஒன்றும் பிசகில்லை. அவளுக்குச் செலவில்லாத முறை. அந்தப் பெண்ணே கோபித்துக் கொள்ளவில்லை. நீங்கள் ஏன் அவஸ்தைப்படுகிறீர்கள்?”
“எப்படித் தெரியும் உங்களுக்கு?”
“இந்தமட்டில் நான் விட்டுவிட்டது அவளுக்கு எவ்வளவோ சந்தோஷம் அல்லவா?”
“யார் அந்தப் பெண்?” என்று எனக்கு அதற்குமேல் கேட்க வேண்டும்போல இருந்தது; கேட்டேன்.
“மலையாள தேசத்துப் பெண். பிரஸிடென்ஸி காலேஜில் படிக்கிறாள். நாலைந்து பெண்களாகச் சேர்ந்து ஒரு வீட்டை அமர்த்திக் கொண்டு கூட்டாக வசிக்கிறார்கள். ஊரிலிருந்து சமையற்காரியையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள். மாசந்தோறும் பணம் வருகிறது; வராமல் இல்லை. எந்த முட்டாள்களோ தவறாமல் அனுப்புகிறார்கள். இந்தப் பெண்கள் அதைச் சோப்பிலும், பவுடரிலும், செருப்பிலும் லாண்டரியிலுமாகச் செலவழிக்கிறார்கள்.”
“இருந்தாலும் நீங்கள் இப்படிப் பேசும்படி, என்ன பிரமாதமாக உங்களுக்கு இவள் தரவேண்டும் அப்படி?”‘
“முப்பத்தைந்து ரூபாய், ஸார்!”
நான் திடுக்கிட்டுப் போனேன்.
“முப்பத்தைந்தா? அப்படி என்ன உங்களிடம் வாங்கமுடியும்? இன்றெல்லாம் சோப்பு வாங்கினாலும் மாதம் என்ன ஆகிவிடப் போகிறது? நீங்கள் விற்கும், பெண்களுக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மாசத்துக்குப் பத்து ரூபாய்கூட ஆகாதே!”
என் அறியாமையைப் பார்த்து இரக்கப்படுபவர்போல் கடைக் காரர், “ஐயோ பாவம். உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் நினைப்பதுபோல் ஜாப்தா அவ்வளவு சுருக்கமில்லை. சோப்பென்றால் ஒரு தினுசா? சீப்பென்றால் ஒன்றுதானா? கீழே விழுந்துவிட்டால் போச்சு! ‘டூத் பேஸ்ட்’ உயர்ந்த ரகம் இப்பொழுது என்ன விலை தெரியுமா உங்களுக்கு? நீங்கள் வாங்கினால் அல்லவா தெரியப் போகிறது?” என்றார்.
நான் ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன். பெரிய வீட்டுச் சேவகன் போல் தென்பட்ட ஒருவன் ஒரு சாமான் ஜாப்தாவைக் கொண்டு வந்து அவரிடம் நீட்டினான். கடைக்காரர் அதைப் படித்துக்கொண்டே, “பையன் வெளியே போயிருக்கிறான்; சற்றுக் கழித்து வா. ஜாப்தா இருக்கட்டும்” என்றார்.
“இருக்கட்டுங்க: லாண்டிரிக்குப் போய்விட்டு வந்திடறேனுங்க” என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.
“மாதிரிக்கு இந்தப் பெண்மணியின் ஜாப்தாவைக் கேட்கிறீர்களா?”
“பெண்மணியின் ஜாப்தாவா இது?”
“பின் என்ன? ஷாப்பு வியாபாரம் முக்கால்வாசி நவநாகரிகம் பெண்களால்தான் நடைபெறுகிறது. ஸார். நீங்கள் வாங்கியா ஆகிறது என்று நினைக்கிறீர்கள்? பெண்கள்தான். நேரில் சிலர் வருவார்கள். அவ்வளவு முன்னேற்றம் அடையாதவர்கள் ஆட்களை அனுப்புவார்கள். சுலோசனா அவர்களின் ஜாப்தாவைக் கேளுங்கள். கொஞ்சம். ரொம்ப விசேஷமாக இருக்கும்.”
எனக்கு ஏற்பட்ட வெறுப்பை மறைத்துக்கொண்டு, “வேண்டாம், வேண்டாம்! அந்தப் பெண்ணின் ரகசியங்களை நீங்கள் பகிரங்கப் படுத்துவது போல் ஆகும். நவீன யுகத்தில், டாக்டர், லாயர் இவர்களைப் போல ஷாப்புக்காரரும் தனி மனிதர்களின் (பெண்களின்) அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஆட்களாக இருக்கிறார் போல் இருக்கிறது. அந்தப் பொறுப்பை நீங்கள் துர்விநியோகம் செய்யக் கூடாது” என்றேன்.
‘பொறுப்பாவது மண்ணாங்கட்டியாவது, ஸார் கடன் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. அதிலும் பெண்கள் முடியாதென்றால் கேட்பதில்லை. சாமான்கள் கொடுத்ததற்குரிய காசை வாங்குவது கடைசியில் பிரம்மப் பிரயத்தனமாகிவிடுகிறது.”
“இன்னும் வேறென்ன?”
“அதை ஏன் கேட்கிறீர்கள். கடைக்காரர்கள் தொல்லையை? அது ஒரு தனிக் கதை! ரொக்கங்கூடக் கொடுக்கவேண்டியிருக்கிறது, ஸார்!”
“நாசமாய்ப் போச்சு! அது வேறா?”
“ரிக்ஷாவில் வந்து இறங்கி ரிக்ஷா வாடகை கொடுக்கச் சொல்லுவார்கள், இல்லாதுபோனால்…” என்று அவர் அந்தத் தனிக் கதையை ஆரம்பித்தார்.
“போதும், ஸார்!” என்றேன் கண்டிப்பாக.
சிறிது நேரம் யோசனை செய்துகொண் டிருந்துவிட்டு, “அடடா, நம் பெண்கள் இப்படி நடுத்தெருவில் வந்து நின்றா அவமானப்பட வேண்டும்?” என்றேன்.
கடைக்காரர் உடனே கிண்டலாக, “ஸ்திரீ சுதந்தரம், ஸார்! எந்தச் சுதந்தரத்துக்கும் உடனே பொறுப்புக்களும் கவலைகளும் வந்து விடுமல்லவா?” என்றார்.
“இவையெல்லாமா பொறுப்புக்கள், கவலைகள்? இதுவா சுதந்தரத்தின் விளைவு?”
“பின் வேறெதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என் அநுபவத்திலிருந்து சொல்லிவிடுகிறேன். ஷாப்புக்குச் சாமான் வாங்கவராத நவீனப் பெண்களே இல்லை. ஆகையால் என்னுடைய வாக்குமூலத்தை நீங்கள் நம்பலாம். மொத்தத்தில் சுருக்கமாகச் சொல்லுகிறேன். வெளிக்குப் பகட்டாகத் திரிய, நவீனப் பெண் ரகசியமாக எந்த அவமானத்துக்கும் உட்படத் தயாராக இருக்கிறாள்.”
எனக்கு அதற்கு மேல் தாங்கவில்லை,
“என்ன ஸார், தாறுமாறாகப் பேசுகிறீர்கள்? நீங்கள் சொல்வது சுத்தப் பிசகு. ஒரு சிலரை மனத்தில் வைத்துக்கொண்டு நீங்கள் பொதுப்படையாக எல்லாப் பெண்களையும் இப்படித் தூஷிப்பது தவறு. இல்லை. இல்லை? நீங்கள் சொல்வது அபாண்டம். நவீனப் பயிற்சிகூடப் பெண்ணுக்கு இயற்கையான குணத்தை மாற்ற முடியாது, தெரியுமா?”
“எனக்கு அந்தத் தத்துவமெல்லாம் தெரியாது, ஸ்வாமி! எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன்?”
“தப்பு,ஸார், தப்பு! இருக்காது, இருக்க முடியாது – இருக்கக் கூடாது!”
“என்னென்னவோ சொல்கிறீர்களே! இருக்கக்கூடாது என்றால்….” என்று அவர் மேலும் என்னைக் கிண்ட ஆரம்பித்தார்.
எனக்கு அங்கிருந்து போய்விட்டால் அந்தப் பரிதாபகரமான நினைப்பு மறக்குமோ என்று எண்ணம்.
“சரி, நான் வருகிறேன்” என்று கிளம்பினேன்.
கடைக்காரர் சிரித்துக்கொண்டு, “சாமான்கள் வேண்டாமா?” என்றார்.
மனைவியின் நினைவு வந்தது.
“ஓ, மறந்துவிட்டேன்!” என்றேன்.
“அப்படியா! பெண் என்றால்-” என்று இழுத்துக்கொண்டு. அவர் என் கையில் எடுத்துக் கொடுத்ததைச் சரியாகக்கூடப் பார்க்காமல் வீட்டுக்குப் புறப்பட்டேன்.
– ஜனவரி, 1942.
– கலைமகள் பொன்விழாக் கதம்பம் (1932-1961), பொன்விழா வெளியீடு, முதல் பதிப்பு: ஏப்ரல் 1982, கலைமகள் காரியாலயம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஜீவா செத்து போனான்
யுவராஜ் சம்பத்
May 16, 2026
கவர்ச்சிக் கனவு
அல்போன்ஸ் மோசஸ்
May 13, 2026
வாய்மை – நம்பகத்தன்மை: 96%
சு.அப்துல் கரீம்
May 13, 2026