பெண் குழந்தை – ஒரு பக்க கதை





தனலெட்சுமி முகம் வாட்டமாக மூத்த மகன் வீட்டுப் படி ஏறினாள்.
”என்னம்மா ? ”
”உன் தம்பிக்கு மருத்துவமனையில பெண் குழந்தைப் பிறந்திருக்கு.”
”அதுக்கு ஏன் நீ வாட்டம் ? ”
”ஏற்கனவே அவன் குடிகாரன். இப்போ தலைச்சன் பெண். அந்த மனவேதனையிலும் அடுத்துப் பெண் பிறக்கும் என்கிற யோசனை, பயத்திலும் அதிகம் குடிப்பான்.”
”அதுக்கு நான் என்ன செய்ய ? ”
”பொண்ணு பெத்துட்டேன்னு வருத்தப்படாதே. குடிக்காம கொள்ளாம இருந்தா பத்துப் பெண் புள்ளைகள் பொறந்தாலும் கவலையில்லாமல் வாழலாம்ன்னு புத்தி சொல்லு ? ”
”தேவை இல்லே.”
”ஏன்டா ?? ”
”பெண் பிறந்திருக்கு என்கிற பயத்திலேயே பொறுப்பு வந்து குடியை நிறுத்தி யோக்கியமாய் வாழ்றவன் நிறைய பேர். பெண்ணை வெறுக்காதீங்க. திருந்தாத அப்பன்களை யெல்லாம் இதுங்க பொறந்து திருத்தி இருக்கு. இவன் அப்படி திருந்தலை….! அதிகமாச்சுன்னா…..நாம புத்திமதி சொல்லி கண்டிச்சு திருத்தலாம். கவலைப்படாதே.” என்றான் செல்வம்.
”சரிடா.” தாய் முகத்தில் இப்போது திருப்தி, தெளிவு.