பூங்கண்கள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 235
(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அம்மா….. அய்யோ !…” பக்கத்துக் கட்டிலில் படுத்துக் கிடந்த கிழவி ஈனக் குரலில் முனகிக் கொண்டிருந்தாள்.
பகல் உணவிற்குப் பிறகு கட்டிலில் புரண்டு கொண்டி ருந்த விக்கி தலையை இலோசத் திருப்பிக் கிழவியைப் பார்த்தாள்.
கிழவி படுகோரமாதக் கட்டிலில் சரிந்து கிடந்தாள் அப்பப்பா என்ன பயங்கரம்!…
மூக்கில் ஒரு ரப்பர் குழாய் கோர்க்கப்பட்டிருந்தது. வலது கையில் இன்னொரு குழாய் இணைக்கப்பட்டிருந்தது. அக் குழாய் இரும்புச் சட்டத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு புட்டியில் இணைந்திருந்தது. விலாப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த மற்றொரு குழாய் கட்டிலுக்கடியில் வைக்கப் பட்டிருந்த ஓர் அழுக்கு வாளிக்குள் கிடந்தது. இது ஏன் வாளிக்குள் கிடக்கிறது …..?
மொத்தத்தில் கிழவியின் நிலை கண்ணால் பரர்க்கக் கூடியதாக இல்லை, இரண்டு நாட்களுக்கு முன் கிழவி அந்த மருத்துவப் பிரிவிற்குக் கொண்டு வரப்பட்டதி லிருந்து நினைவிழந்துதான் கிடந்தான்.
விக்கி தன் தலையை உயர்த்தி அந்த அறையை ஒரு முறை நோட்டமிட்டாள் – முழுமையாக.
அந்த அறையில் படுத்துக் கிடந்த அல்லது உட்கார்ந் திருந்த சில பெண் நோயாளிகளைத் தாதிமார் கவனித்துக் கொண்டிருந்தனர்.
இரண்டு கட்டிலைச் சுற்றி மறைப்புபோடப்பட்டிருந்தது அங்கே மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தூய்மைப் படுத்திக்கொண்டிருந்தனர்.
ஒரு தாதி நோயாளியொருத்தியின் உடல் வெப்ப நிலையைக் கணக்கெடுத்துக் குறிப்பேட்டில் குறித்து வைத்தாள்.
காலியான சில கட்டில்களின் விரிப்புகள் மாற்றப் பட்டுப் புதிதாகப் போடப்பட்டிருந்தன. மருந்து புட்டிகள் நிரம்பிய ஒரு தள்ளுவண்டியை நகர்த்திக் கொண்டு ஒரு தாதி வலம் வந்து கொண்டிருந்தாள்.
ஓர் அசல் மருத்துவமனையின் ‘ஏகபோக’ உரிமைக் குரியதைப் போல், “டெட்டால் மணம்” எங்கும் நிறைந் திருந்தது.
கிழவி படுத்திருந்த பக்கமே திரும்புவதற்கு விக்கி பயந்தாள், எப்போதும் கிழவியின் கண்கள் மூடியே இருந்தன. முனகல்சத்தம் மட்டும்தான். நான்கு வயது சிறுமிக்கு அச்சமூட்ட இவை போதாதா?
அவள் கட்டிலைக் கடந்து சென்றபோது மேலான் என்ற தாதி, ” எப்படி இருக்கிறாய் விக்கினேஸ்வரி ?…” என்று நலம் விசாரித்தாள்.
நான் நலமாக இருக்கிறேன். என்னை விக்கி என்று கூப்பிடுங்கள். அதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது …” ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளினாள்.
“ஓ;… தாராளமாக . நீ கழுத்தை அதிகமாக அசைக் காதே.” மேலான் அன்புடன் எச்சரித்து விட்டு அவ் விடத்தை விட்டகன்றாள்.
கழுத்தைச் சுற்றி மாக்கட்டுப் போடப்பட்டிருந்தது அவளுக்கு அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது. ஒரு தடவை தடவிப் பார்த்துக் கொண்டாள். மொர மொரப் பாக இருந்தது.
அவள் குளியல் அறையில் விழுந்துவிட்டதால் கழுத்தில் அடிபட்டதாக விக்கியின் தந்தை கூறியிருந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அவள் அறிந்திருக்கவில்லை. அவள் நினைவிழந்து போனதாக வும் அஞ்சப்பன் கூறியிருந்தார்.
அன்று மாலை அவள் தன் தந்தையீடம், “அப்பா, இந்தக் கிழவியைப் பார்க்க பயமா இருக்கு. கண் மூடியே இருக்கு. ஏம்பா அதுக்குக் கண் இல்லையா?…” என்று வினவினாள்.
அவள் தந்தை அஞ்சப்பன் தன் மகளுக்கு ஏற்பட்டிருக் கும் அச்சத்தைப் புரிந்து கொண்டு, “அந்தப் பாட்டி நோய் கண்டிருக்கிறதால அப்படி இருக்கிறாங்க. நல்லா இருக்கும் போது, அவுங்களும் அழகாய்த்தான் இருப்பாங்க …” ஆதர வாகப் பதில் கூறினான்.
“உங்களுக்கு எப்படித் தெரியும்? …”
“இதே, செய்தித் தாள்ல அந்தப் பாட்டியியின் படம் போட்டிருக்கே. எவ்வளவு அழகா இருக்காங்க …” அன்றைய நாளிதழில் அக்கிழவியின் படமும் செய்தியும் வெளியாகியிருப்பதைக் காண்பித்தான்.
“ஆமா, அந்தக் கிழவிதான். அப்பா… அப்பா….. என்ன எழுதியிருக்குன்னு சொல்லுங்கப்பா.”
கிழவி சாலையாரத்தில் மயங்கிக் கிடந்தவள். சமூக நல இலாகாவினர், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தன்னைப் பற்றிய விவரங்கள் எதனையும் சொல்லும் திறனை முற்றாக இழந்திருந்தாள். இருதய நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் உறவினர்கள் அப்படி யாராவது இருந்தால்) தொடர்பு கொள்ள வேண்டுமென்று மருத்துவமனை முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இவற்றை எல்லாம் குழந்தைக்கு எப்படி விளக்கிச் சொல்வது?
“இந்தப் பாட்டியை வந்துப் பார்க்கும்படி எழுதி இருக்கு….” எவ்வளவு சுருக்கமாக முடியுமோ அவ்வளவு சுருக்கிச் சொன்னார்.
“யாருமே வந்து பார்க்கலையே. சொந்தக்காரங்க இல்லையோ?….” விக்கி தொடர்ந்து கேட்டான்.
இதுவரை பேசரமல் இருந்த அஞ்சப்பனின் மனைவி ராமேஸ்வரி , தன் கணவனின் கரத்தைப் பற்றி கொஞ்ச தூரம் அழைத்துச் சென்று, “என்னங்க, குழந்தை பயப்படுறாளே, வேறு கட்டிலுக்கு மாற்றும்படி கேட்கப் படாதா….?” என்று கிசுகிசுத்தாள்.
“அங்கே மட்டும் நோயாளிகள் இருக்கமாட்டாங்களா? அங்கேயும் பயந்தால் பிறகு எங்கே போவது? பிள்ளைக்கு ஏற்பட்டிருக்கும் பயத்தைப் போக்க முயலுவோம் வா…” என்று அஞ்சப்பன் ஆதரவாகப் பேசியதும் மனைவி ஆறுத லடைந்தாள்.
பிறகு குழந்தைக்கு நிறைய செய்திகளை எடுத்துக் கூறினார். நோய்கண்டிருக்கும் போது எல்லாரும் பார்க்க நன்றாக இருக்க மாட்டார்கள். அதனால் அதைக்கண்டு அஞ்ச வேண்டியதில்லை என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வண்ணம், குழந்தை மனம் புண்படாமல் எடுத்துச் சொனனார்.
அன்று மாலை நேரத்திற்குப் பிறகு, விக்கியின் நிலையில் பெரும் மாற்றம் இருந்தது. கிழவியின்பால் அந்தக் குழந் தைக்கு அன்பு சுரக்கத் தொடங்கியிருந்தது.
“பாவம் இந்தப் பாட்டி! வந்துப் பார்க்க யாருமே இல்லை. பால் வாங்கி வரவும் பழம் வாங்கி வரவும் இவங்களுக்கு அப்பா அம்மா…இல்லையோ!… … ச்சு! … ச்சு… ” என்று கருணைகொண்டு கிழவியைப் பார்க்கத்தொடங்கினாள்.
இப்போது அந்தக் கிழவி பிசாசாகத் தெரியவில்லை. பாட்டியாகத்தான் தெரிந்தாள்.
அன்றைய மாலைப்பொழுது பூராவும் பாட்டியைப் பற்றிய சிந்தனையிலே சிறுமி கழித்தாள்.
சற்று முன்பு தனக்குத் தன் பெற்றோர் சோறு ஊட்டி யதும், குமிட்டிப்பழத்தை விதை நீக்கிச் சாறு பிழிந்து கொடுத்ததும் நிழலாடின. இரக்கம் விழி எல்லாம் நிறைந் திருக்கப் பக்கத்துக் கட்டிலைப் பரிவோடு பார்த்தாள் சிறுமி. மூடிய விழிகள்!
கட்டிலோடு ஒட்டிப்போன உடல்!
ரப்பர் குழாய்கள்!
தொங்கும் புட்டிகள்: இரத்தப் பைகள்!
வெள்ளைப் போர்வை!
முனகல்!… முனகல்!…. முனகல்!…
இரவு ஒன்பது மணியவில் ஒரு தாதி கிழவியின் சத்துநீர் புட்டியை மாற்றி விட்டுப் போனாள்.
விக்கிக்கு ” ஓவலும்” வெண்ணய் தடவிய ரொட்டி யும் வைத்துவிட்டுப் போனாள்.
பாட்டிக்குக் கொஞ்சம் ஊட்டிவிடலாமா என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தாள். மருத்துவர் திட்டுவார் என்று அவ்வெண்ணத்தைக் கைவிட்டாள்.
இரவு மணி பண்ணிரண்டு.
அந்த மருத்து “வார்டு” உறக்கத்தில் மூழ்கி இருந் தது. சில சுவர் விளக்குகளைத் தவிர மற்றபடி எங்கும் இருளாட்சி.
குறட்டை ஒலிகள்-முனகல் ஒலிகள்-புரண்டு படுப்ப தால் எழும் கட்டிக்ல் ஒலிகள். காற்றாடி சுழல்வதுகூட நன்றாகக் கேட்டது.
விக்கி உறங்கவில்லை. குறுகுறுவென்று விழித்துக் கொண்டு கிழவியின் பக்கம் தலை வைத்துப் படுத்திருந்தாள். ஏனோ கிழவியப் பாதுகாக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியிருந்தது. அவளுக்கு இதுவரை தூக்கம் வராத ததும் வியப்புதான்.
சற்று நேரத்திற்கெல்லாம் கிழவி முனகத் தொடங் கினாள். தொடக்கத்தில் சாதாரணமாக இருந்த முனகல் சத்தம், வர வரத் தீவிரமாகியது உடலும் சற்று அசைந் தது. இதுவரை மரம்போல் கிடந்த ‘உடல் அசைவ தென்றால்! …
விக்கி சடாரென்று எழுந்து கிழவியின் அருகில் எந்த வோர் அச்சமுமின்றி வாஞ்சையுடன் சென்றாள்.
என்ன ஆச்சரியம்! கண்கள் திறந்திருந்தன. முதல் தடவையாகக் கிழவியின் திறந்த விழிகளைப் பார்த்தாள் விக்கி.
விக்கியைப் பார்த்ததும் தனது சூம்பிப் போன இடது கையை இலேசாகத் தூக்கி வட்டமாக ஆட்டிக் காண்பித் தாள் கிழவி. கிழவி, தன்னருகில் நிற்பது ஒரு மனிதவாரிசு என்பதை அடையாளங் கண்டு கொண்டாளோ?…
சிறுமிக்குக் கிழவியின் சைகை புரியவில்லை. தொலை பேசி வழி செய்தி சொல்லச் சொல்கிறாளோ! யாருக்குச் சொல்வது?… சிறுமி திகைத்தாள்.
ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவனாய் தாதியர் அறைக்குச் சென்றாள். அங்கு எப்போதும் விழித்திருக்கும் தாதிமார் அன்று உறங்கிக்கொண்டிருந்தனர்.
“பாவம் ! அவர்களைத் தொந்தரவு செய்ய வேண் டாம்…” என்று தனக்குள் முடிவு செய்து கொண்டவளாய் தான் மட்டுமே பாட்டியின் வேண்டுகோளை நிறைவேற்ற நியமிக்கப் பட்டிருப்பவள் போல், அடுத்த அறையினுள் சென்று தொலைபேசியைக் கையில் எடுத்தாள்.
“எந்த எண்களைச் சுற்றுவது? “சற்று நேரம் சிந்தனை செய்தாள்.
ஆபத்து நேரங்களில் உதவிக்கு அழைக்கத் தொலைக் காட்சியில் அடிக்கடி நினைவு படுத்தும் எண்கள் அந்தச் சிறிய மூளைக்கு எட்டின. பேசாமல் 999 என்ற எண்களைச் சுழற்றுவதாகக் கற்பனை செய்து கொண்டு ஏதோ மூன்று எண்களைச் சுழற்றினாள்.
யாரோ ஒருவர் பேசுவது கேட்டது . “டாக்டரைக் சீக்கிரம் வரச்செல்லுங்க. பாட்டிக்கு முடியல. பாட்டியை வந்து பார்க்கச் சொல்லுங்க!…” என்று ஆங்கிலத்தில் கூறி விட்டு ஒரு நிறைவோடு தொலைபேசியைக் கீழே வைத்தாள்.
அவள் திரும்பிச் செல்லும் போது ஒரு கடமையை நிறை வேற்றிய பூரிப்பு அவளுக்கு இருந்தது. கட்டிலை அடைந்த போது பாட்டியின் விழிகள் மூடி இருந்தன. உடல் அசைவோ, முனகலோ இல்லை.
“சரி, பாட்டி தூங்கட்டும்…” என்று தனக்குள் கூறிக் கொண்டு தனது கட்டிலில் ஏறி படுத்தாள். சற்று நேரத் திற்குள் உறங்கியும் போனாள்.
மறுநாள் தாதி அவளை எழுப்பியதும் முதல் வேலையாகப் பக்கத்துக் கட்டிலைப் பார்த்தாள்.
அது காலியாகக் கிடந்தது. புது படுக்கை விரிப்பு மாற்றப்பட்டு ஒழுங்காகக் காட்சியளித்தது.
“பாட்டி எங்கே?…” பதைபதைப்புடன் சிறுமி தாதியை நோக்கி வினவினாள்.
தாதிக்குத் தடுமாற்றமாய்ப் போய்விட்டது. சிறுமிக்குப் பொருத்தமாக என்ன பதில் சொல்லலாம் என்று அவள் சிந்தனையிலாழ்ந்தாள்.
“வீட்டுக்குப் போயிட்டாங்களா…?” விக்கிதான் கேட்டான். அவளுக்குத் துன்பமாய் இருந்தது.
ஒருவகையில் சிறுமியின் கேள்வியிலேயே பதிலும் இருப்பதை உணர்ந்த தாதி, ” ஆமா, வீட்டுக்குத்தான் போயிட்டாங்க …” என்று சொல்லிவிட்டகன்றாள்.
“பாட்டி மோசம். என்னிடம் சொல்லாமலே போயிட்டாங்களே! …” என்று பாட்டியின்மேல் குறைபட்டுக் கொண்டாள். அவளுக்கு அழுகை வந்தது. அவள் பூங்கண்கள் பனித்தன. உண்மையில் கிழவி அவளிடம் சொல்லிவிட்டுத்தானே போனாள். சிறுமியால்தான் உணர முடியவில்லை.
-1983, புதிய அலைகள், முதற் பதிப்பு: மார்ச் 1984, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை