‘புரணி’ பேச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2024
பார்வையிட்டோர்: 14,015 
 
 

மாலை ஆறு மணிக்கு மேல் களைத்து வீட்டுக்கு வந்த கணவன் ராமசேஷனிடம் அலுத்துக்கொண்டாள் கார்த்தியாயினி.

ஏங்க இந்த வீடே நமக்கு வேண்டாங்க..

ஏற்கனவே களைப்பாய் இருந்த ராமசேஷனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அங்கும் இங்கும் அலைந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து, கம்பெனிக்கு அருகிலேயே வாடகைக்கு பிடித்து அப்பாடி என உட்கார்ந்த வீடு. இந்த இடத்தில் அன்றாட வேலைக்கு போவோரும், மாத மாதம் சமபளம் வாங்கும் ஊழியர்களும் இருக்கின்றார்கள். இவனும் ஒரு அறையில் தங்கி ஐந்து வருடம் தற்காலிக ஊழியனாய் வேலை செய்து இப்பொழுதுதான் இந்த கம்பெனியில் நிரந்தர அலுவலக கணக்கனாய் சேர்க்கப்பட்டு ஊருக்கு சென்று உறவினர் பெண்ணை மணமுடித்து இங்கு குடி வந்து ஒரு வருஷம் முடிவதற்குள் இவள் இப்படி சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது?

இருந்தாலும் கார்த்தியாயினி ஐந்து மாத கர்ப்பமாய் இருப்பதால் கோபத்தை வெளிக்காட்டாமல் மேலுக்கு சிரித்தவாறு என்னாச்சு கார்த்தி, இப்பத்தான கஷ்டப்பட்டு இந்த இடத்துல வீடு பிடிச்சு வந்து உட்கார்ந்தோம், அதுக்குள்ளே இப்படி சொன்னா எப்படி?

அதுக்கெல்லீங்க, இங்க பொண்ணுங்களெல்லாம் ஒரு மாதிரி இருக்கறாங்க… அடுத்த வார்த்தையை எடுக்கு முன் ஏன் கார்த்தியாயினி இப்படி சொல்றே? ஏன் அநாவசியமா அவங்களை குறை சொல்றே?

ஐயையோ நான் அதை சொல்ல வரலீங்க, ஒவ்வொருத்தரும் நேர்ல பார்த்தா நல்ல பேசிக்கறாங்க ஆனா அந்த பக்கம் நகர்ந்துட்டா பொம்பளைங்க ஒருத்தருக்கு ஒருத்தர் “புரணி” பேசிகிட்டே இருக்காங்க அதான், இழுத்தாள்.

இந்த உலகத்துல யாரு “புரணி” பேசலை, ஏன் நான் நானும் நீயும் கூட ஏதோ ஒரு கட்டத்துல புரணி பேசித்தான் இருப்போம், அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம். அவங்க என்னமோ பேசிகிட்டு போறாங்க, நீ பாட்டுக்கு வீட்டுல இருக்க வேண்டியதுதானே?

அவசரப்படாதீங்க, நான் யாரையும் குறை சொல்ல்லை, இந்த பக்கத்து வீட்டு அம்மா எங்கிட்ட வந்து அடுத்த வீட்டம்மாவை பத்தி குறை சொல்றது, அடுத்த வீட்டம்மா இந்த பக்கத்து வீட்டம்மாவை பத்தி குறை சொல்றது. அப்புறம் நீ என்ன சொல்றே? நான் சொல்றது கரெக்டுதானே? அப்படீன்னு கேட்கறது. எனக்கு பயமா இருக்கு, நான் ஏதாவது சொல்லிட்டேன்னா. இதைய அடுத்த வீட்டுல இல்லை அக்கம்பக்கம் சொல்லி நமக்கு விரோதத்தை கொண்டு வந்துடுவாங்களோன்னு பயமாயிருக்கு. அது மட்டுமில்லை, சும்மா யாரவது ஒருத்தர் வந்து காப்பி பொடி இருக்கா? எண்ணெய் இருந்தா கொஞ்சம் கொடு இப்படீன்னு..நச்சிகிட்டே இருக்காங்க.

கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான். கார்த்தியாயினி நீ நம்ம ஊரு பட்டிக்காட்டுல பிறந்து வளர்ந்திருக்கறே. நான் நம்ம ஊரை விட்டு எங்கப்பா காலத்துலயே இங்க வந்துட்டேன். இதெல்லாம் இங்க சகஜம், ஒருத்தரை பத்தி ஒருத்தர் குறை சொல்லி கிட்டுத்தான் இருப்பாங்க. ஏன் நம்ம சொந்தத்துல மட்டும் இந்த பழக்கம் இல்லையா? அட்ஜஸ்ட் பண்ணித்தான் போகணும். கொடுக்கல் வாங்கல் எல்லா இடத்துலயும் இருக்கும். இருந்தா கொடு, இல்லையின்னா இல்லைன்னு சொல்லிடு, அவ்வளவுதானே..

என்னமோ போங்க., அலுத்துக்கொண்டே இரவு சமையல் செய்ய சமையலறைக்கு சென்றாள்.

அவள் போனதும் ஒரு பெருமூச்சை வெளியிட்ட ராமசேஷன், அப்பப்பா ஒரு இடத்துல வசிக்கணும்னா எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்குது, மனசுக்குள் நினைத்துக்கொண்டிருந்தவன் வாசலில் யாரோ நிற்கும் அரவம் கண்டவுடன் பார்வையை தூக்கினான. நான்கைந்து இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள்

வணக்கம், நாங்க இந்த ஏரியாவுல நற்பணி இயக்கம் ஒண்ணு வச்சு நடத்திட்டு வர்றோம், வருசா வருசம் இந்த ஏரியாவுல விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சி எல்லாம் நடத்திட்டு வர்றோம்.

அடுத்து என்ன கேட்பார்கள் என்பதை உணர்ந்திருந்த ராமசேஷன் என்னால நூறு ரூபாய்தான் கொடுக்க முடியும், அதுவும் அடுத்த வாரம்தான் என்ன சொல்றீங்க.

இவன் இப்படி பட்டென்று போட்டுடைப்பான் என்று எதிர்பார்க்காதவர்கள் சரி என்று சொல்வதா, இல்லை என்று சொல்வதா என்று தடுமாறினார்கள். இறுதியாக சரி, இரசீது இப்பவே போட்டுடலாமா சார்? இல்லே..இழுக்கவும் வேண்டாம் வேண்டாம் நான் கொடுத்துட்டு வாங்கிக்கறேன்.

அதற்கு அடுத்த வாரம் அவர்கள் தெருவில் கோயில் திருவிழா என்று மற்றொரு கோஷ்டி வரவும் அவர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அடுத்ததாக வேறொரு குழு மற்றொரு தெய்வத்துக்கு விழா எடுக்க வாசலுக்கு வர கொஞ்சம் கோபமானான். அதற்குள் கார்த்தியாயினி கணவனது கோபத்தை எப்படியோ உணர்ந்து கொண்டவள் சட்டென்று உள்ளே சென்று பணம் கொண்டு வந்து கொடுத்து இரசீதை வாங்கி சென்றாள்.

உண்மையிலே இந்த பணம் எல்லாம் இதுக்குத்தானா? அவனின் கேள்வியை எதிர்கொண்ட கார்த்தியாயினி அதனாலென்னங்க, தெய்வத்து பேரை சொல்றாங்க, நாம் என்ன செய்ய முடியும்.

இவனுக்கே இப்பொழுது இந்த ஏரியாவில் இருக்க மனக்கசப்பாக இருந்தது. சீக்கிரம் வேறு இடத்துக்கு மாறிவிடவேண்டும் என்று முடிவெடுத்தான். அலுவலகத்தில் நிறைய பேரிடம் சொல்லியிருந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை மெதுவாக எழலாம் என்று படுத்திருந்தார்கள் இருவரும். கதவை தட்டும் சத்தம் கேட்டவுடன் யார் இது இந்த நேரத்தில் சலிப்புடன் கதவை திறந்தான். வெளியே நான்கைந்து பெண்கள் நின்று கொண்டிருக்கவும், சட்டென வாங்க வாங்க அழைத்து விட்டு சட்டென உள்ளே சென்று சட்டையை அணிந்து கொண்டான்.

அதற்குள் சத்தம் கேட்டு வெளியே வந்த கார்த்திகாயினி அக்கம் பக்கம் இருக்கும் வீட்டு பெண்கள் ஒன்றாய் வந்திருப்பதை பார்த்து ஆச்சர்யத்துடன் வாங்கக்கா என்று சொன்னவள் அவர்களை உட்கார சொன்னாள். அதெல்லாம் வேண்டாம் கார்த்தியாயினி, உனக்கு நாங்க எல்லாம் மசக்கை சாப்பாடு செஞ்சு போடறதுக்கு முடிவு பண்ணியிருக்கோம்.ஆளுக்கொரு வீட்டுல இருந்து கலவை சாதம் ரெடி பண்ணி கொண்டு வந்துடுவோம், ஸ்வீட்டுக்கு இரண்டு வீட்டுல ஏற்பாடு பண்ண போயிருக்காங்க. நீங்க இரண்டு பேரும் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைன்னு எங்காவது கிளம்பிட கூடாது இதைய சொல்றதுக்காக வந்திருக்கோம். ஒன்பது மணிக்குள்ள வந்துடுவோம். இரண்டு பேரும் வீட்டுல எதுவும் செய்ய வேண்டாம். புரிஞ்சுதா? சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் ராமசேஷனும், கார்த்தியாயினியும். காலை மதியம் அவர்கள் வீட்டில் அக்கம் பக்கத்து வீட்டு சாப்பாடும், ஸ்வீட்டும் சாப்பிட்டார்கள்.

இவர்கள் இருவரும் வந்தவர்களை வெறும் கையில் அனுப்பாமல் அவர்களுக்கு காப்பி பலகாரம் கொடுத்து, கையில் ஒரு ஜாக்கெட் துணியையும் கொடுத்து கெளவரவமாய் அனுப்பி வைத்தார்கள். இதற்காக ராமசேஷன் நேரத்திலேயே கடை வீதிக்கு கிளம்பி கடை கடையாய் ஏறி துணிகளை வாங்கி வந்திருந்தான்.

இப்பொழுதெல்லாம் கார்த்தியாயினியும், ராமசேஷனும் வீடு மாறுவதை பற்றி யோசிப்பதில்லை. அவர்களும் எல்லா நல்லது கெட்டதுகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

கார்த்தியாயினி பிரசவம் முடிந்து கையில் குழந்தையுடன் வரும்வரை ராமசேஷன் சகோதரனாய் பார்த்து கொண்டார்கள் அக்கம் பக்கத்து பெண்கள்.

இவர்களின் “புரணி” பேச்சு கார்த்தியாயினிக்கு இப்பொழுதெல்லாம் சாதாரணமாய் போய்விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *