புன்னகையாய் ஒரு பதில்!






(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘டமார்’ என்ற சப்தம் கேட்டதும் பதறிப் போனாள் பவித்ரா. எப்போது இதுமாதிரி பேரிரைச்சல் கேட்டாலும் சகஜ நிலைக்கு அவள் திரும்ப கொஞ்ச நேரமாகும்.

“என்னம்மா, மறுபடியும் அதே நினைவா?” மானேஜர் நந்தகுமார் கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்து ‘ஆமாம்!’ என்பது போல தலை அசைத்தாள். கண்களில் நீர் தளும்பியது.
“விடும்மா… இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மனசுல அதையே சுமந்துகிட்டிருப்பே? எல்லாத்தையும் மறந்துட்டு சகஜமாகற வழியைப் பார்!”
“அப்படி லேசுல மறக்கற காரியமா சார்…?”
“புரியுதும்மா… புரியுது ! வார லீவுக்காக ஓசூரிலிருந்து கோவைக்கு, பஸ்ஸில் செல்லில் பேசியபடியே வந்து கொண்டிருந்தார் உன் கணவர் விஜய். ஒரு திருப்பத்தில் பஸ் தடுமாறி, ‘டமார்’ என்ற சப்தத்துடன் கவிழ்ந்து விழுந்தது. பல பேருக்கு பலத்த அடி. உன் கணவர் ஸ்பாட் அவுட். அது நடந்து ரெண்டு வருஷமாச்சு! இப்போதும், பெரிதாக சப்தம் கேட்டால் உனக்கு அந்த ஞாபகம் வந்து விடுகிறது என்பது எனக்குத் தெரியும். அதை எல்லாம் மறந்துட்டு, நீ வேற ஒரு கல்யாணம் பண்ணிட்டு புனர் ஜென்மத்துக்கு வழி பார்ப்பயா, அதை விட்டுட்டு…”
“எப்படி… எப்படி சார் முடியும்? அது இன்னமும் மனசுல பாரமா இருக்கே… இந்த நிலைல எப்படி மறுவாழ்வு? அந்த பாரத்தை அவ்வளவு சீக்கிரமா இறக்கி வைத்துவிட முடியுமா சார்? இறக்கிவிடுகிற பாரம்தானா அது?”
“சரி சரி அதை விடு! ஒன்னு சொல்றேன் கேள்… ! நீ உன் உள்ளங்கையை விரித்தபடி கையை நீட்டி வை” என்றார்! அவள் கையை நீட்டி வைக்க ‘குட்’ அப்படியே வைத்துக் கொண்டிரு! என்று சொல்லிவிட்டு, ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதை அவள் உள்ளங்கையில் வைத்து, “இதை நீ ஒரு அஞ்சு நிமிஷம் சுமந்து கொண்டிருக்க முடியுமா?” என்றார்.
“இதென்ன சார் பிரமாதம்? ஒரு கிண்ணம் தண்ணி ஒரு சுமையா? தாராளமாய் சுமக்கிறேன்!” என்றாள்.
“அரை மணி நேரம்…’
“ஓ எஸ்! தாராளமாய்!”
“இரண்டு மணி நேரம்?”
“சுமக்கலாம்… ஒரு கிண்ணம் தண்ணிதானே? ஆனா, என்ன கைதான் மரத்துப் போகும்!”
“ஒரு வாரம்…”
“ஊகும்… அதெப்படி சார் முடியும்?”
“ஒரு கிண்ணம் தண்ணிதானேம்மா?”
“ஒரு கிண்ணம் தண்ணிதான் சார். ஆனா, சுமக்கறது வாரமாச்சே?”
“பலே…! இப்ப உன் நிலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதேதான். உன் மனசுல இருக்கிற சோகமும் ஒரு கிண்ணம் தண்ணி மாதிரிதான். சோகம்கறது ஒரு சுமை! அது எப்போதும் ஒரு பிரச்னையே இல்லை… அதை நாம எத்தனை காலத்துக்கு சுமக்கறோம் என்பதைப் பொறுத்துத்தான் அதன் வலியும். உன்னை உன் கணவர் ஏமாத்திட்டுப் போயிடலை. விதி வசத்துல இறந்து போயிட்டார். அவ்வளவுதான். அதை இன்னும் காலா காலத்துக்கும் வலியாய்… சுமக்கப்போறயா? அதை சுமையாய் நினைக்காம, பேசாம மறுமணம் பண்ணிட்டு புதுவாழ்வைத் தொடங்கும்மா…!” என்றார்.
அவளிடமிருந்து புன்னகை பதிலாய் தவழ்ந்தது!
– குமுதம் 03.07.2019.