பிரியதர்சனி




(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்று – பையன் அவசரமாக பைக்குக்கு முகம் துடைத்துக்கொண்டிருந்தான். வெளியே கிளம்ப ஆயத்தம்.
“பெட்ரோல் விக்கற விலைக்கு எங்கே ஷிகாரி?”
சற்று என்னைச் சிந்தித்துவிட்டு என்னிடம் வந்தான். நிஜம் சொல்லவா? பொய் சொல்லவா?
“அது உனக்குத்தான் தெரியும். நீ எதைச் சொன்னாலும் நம்பித்தானே ஆகணும்!”
என் தோள்மேல் கை வைத்தான். “நல்ல அப்பா. அப்பாவாப் பழகவில்லை… ஸ்னேகிதனாவே பழகறேள்…அப்பா, சைட் அடிக்கப்போறேன்”.
“இப்படி ஒரு உண்மையைச் சொல்லிப் பெருமையைக் கட்டிக் கொண்டதா எண்ணமாக்கும்”.
“சைட் அடிக்கப் போறதாத்தானே சொன்னேன், கையைப் பிடித்து இழுக்கப்போறேன், செடி மறைவுக்கு அழைச் சுண்டு போறேன்னு சொன்னேனா? அதெல்லாம் ஒளியும் ஒலியில்தான்ப்பா. அப்படி என்னேனும் ஆச்சுன்னா கன்னம் ‘பன்’ ஆகிவிடும். பெண்கள் இப்போ கராத்தே பழகறாப்பா!”
“அப்போ இப்படி ஒரு பொழுது போக்கு ஏன்? மகனே, நெருப்போடு விளையாடாதே.”
“நோ பிராப்ளம். வரேன்பா! காலேஜ் பஸ் வர நேரமா யிடுத்து. என்னென்ன பெர்ப்யூம்ஸ், என்னென்ன பவுடர், ஜாதிமல்லி, எத்தனை கொண்டை, சடைப் பின்னல் எத்தனை பாப்கட்ஸ்! அப்பா, லைஃப் இஸ் வொண்டர் ஃபுல்”
“மகனே, நெருப்போடு விளையாடாதே.”
“அப்பா, நீங்கள் புத்தி சொல்லுங்கோ, கேட்டுக் கறேன். உங்களுக்குத் தலையாட்டிவிட்டு, உங்களுக்குப் பின்னால் வேறுமாதிரியா நடந்துகொள்ள முடியாதா? நம்பணும் அப்பா. அப்பா, எனக்கு நான்தான் காவல், நீங்கள் இல்லை. பொய் சொல்லியிருப்பேன். ஆனால், உங்களை ஏமாற்றினதில்லை. நேரமாயிடுத்து வரேன்!”
‘பைக்கை உதைத்து நிமிஷமாய்ப் பறந்துவிட்டான்.
என் பிள்ளை அழகன். அம்மா ஜாடை அவன் யமஹாவில் பறக்கையில் காற்றிலிருந்து பிதுங்கிய மின்னல் கொடியாய்ப் பாவிக்க ஆசையாயிருக்கிறது. சோழவரத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக் கிறான். வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஏமாற்றாமல் இருக்கலாம். ஆனால், சொல்வதைக் கேட்கமாட்டான்.
இன்று-
இருங்கள், சற்றுப் பொறுங்கள். இப்போது நான் இன்று என்றபோது எந்த இன்றைக் குறிக்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. வரவர எனக்கு நேரங்கள் குழம்புகின்றன. மந்தாரமிட்டிருந்தால், (இடாவிடினும்) காலைக்கும் மாலைக்கும் வேறு தெரியவில்லை. ஆகவே, இன்று என்று தனியாகத் தெரியாமல் என்றும் அதனுள் புகுந்து கொண்ட
இன்று-
விடியற்காலையில் என்னோடு யாருமில்லை. கிணற்றுள் எட்டிப் பார்க்கையில் – அது ஒரு பழக்கம்- ஏற்கெனவே பயந்து கொண்டிருந்தபடி தண்ணீர் இறங்கியிருந்தது தாரைகளின் நறுங்கல் தவிர ஜலம் அமைதி. ஓரிரண்டு யாதாமி இலைகள் மிதந்தன.
ஆழத்தில், என் முகத்தருகே *சடக்கென இன்னொரு முகம் தெரிந்து – யாரிது? – முகம் நிமிர்வதற்குள் பிம்பம் மறைந்துவிட்டது. திரும்பிப் பார்த்தால் முகத்துக்குச் சொந்தக்காரர் காணோம். ஆனால், ஓடின சத்தமும் கேட்கவில்லை. அத்தனை சுருக்க ஓடி இருக்கவும் முடியாது.
ஆனால், கொஞ்ச நாட்களாவே என்மீது புகார்கள் கிளம்பியிருக்கின்றன வீட்டில் பேசாததெல்லாம் எனக்குக் கேட்கிறதாம். அதனால் சண்டை போடுகிறேனாம்… கண்ணுக்கெதிரே குத்துக்கல்லாய் நிற்பது தெரியவில் லையாம். ஏதோ கேட்டால் சம்பந்தமில்லாமல் ஏதோ பதில் சொல்கிறேனாம். ‘வயசாச்சோன்னோ? – சமயம் வந்தபோதெல்லாம் இடித்துக் காட்டுகிறார்கள்.
பாதாமி மரத்தடியில் பாறாங்கல்லின் மீது உட்காரு கிறேன். தலை லேசாய்க் கிர்ர்ர்’ உண்மையில் தோன்றிற்றோ? பிம்பம் தோன்றி ஒளிந்துகொண்ட நொடி நேரத்துள் நெஞ்சில் தங்கிவிட்ட அந்த நினைப்பின் ருசி இப்படி உண்டோ? கொடுமை தி சாங் ஆஃப் தி சைரன்ஸ். அம்மா, என்னைக் காப்பாற்று. தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொள்கிறேன்.
முதலில் அது அவனா? அவளா? அதுவா? என் ஞாபகத்தின் சக்தியை முழு மூச்சில் கூப்பிடுகிறேன். பரட்டை முடியினின்று தப்பின ஓரிரு பிரிகள் என் கன்னத்தில் குறுகுறு?!!? அப்படியானால் அது நிச்சயம் அவள். அவளன்றி வேறாய் வேண்டாம்.
அது அவளானால் அவள் எவள்? அதுதான் கொடுமை. நெற்றி கசகசக்கிறது. திகைப்பூண்டு’ என்கிறார்களே அது உண்மையா? அடிக்கடி அவள் என்னைக் கேட்கும் கேள்வி.
“என்னப்பா, நாரத்தம் பச்சடின்னா ஒரு வெட்டு வெட்டுவியே, அம்மா நன்னாவும் பண்ணியிருக்கா, ஆனால் குருவியாட்டம் கொறிக்கறே, உடம்பு சரியில்லையா?”
பிள்ளையாண்டான் படு குஷியிலிருக்கிறான். சேவலின் கொண்டைச் சிலிர்ப்பிலிருக்கிறான். பஸ் ஸ்டாண்டில் இவன் கொடி கட்டிப் பறக்கறாப் போல இருக்கு. ஆனால், கண்களில் லேசான மருட்சி – அல்லது என் பிரமையா?
அவன் சொன்னாற்போல், நாங்கள் உண்மையிலேயே நல்ல நண்பர்கள். எனக்கு இந்த உறவு தேவையாயிருக் கிறது. உத்யோக ரீதியில் காம்ப் அல்லது வெளியூரில் கிரிக்கெட் மாட்ச் என்று இரண்டு நாட்கள் சேர்ந்தாப் போல, மது கண்ணில் படாவிட்டால் எனக்கு வேளையே மங்கிவிடுகிறது. திரும்பி வந்ததும் அவனைத் தொடணும் போல ஆசை பெருகுகிறது. வெட்கம், கௌரவம் தடுக்கின்றன.
மது நல்ல பையன்; ‘அண்ட் ஐ ஆம் ஆன் ஓல்ட் மேன்’.
என் பெருமூச்சு அவனுக்குக் கேட்டுவிடப் போகிறது. ஆனால், அந்தக் கவலை வேண்டாம். பூமியில் கால் பாவாது அவன் தன் உலகில் மிதந்துகொண்டிருக்கிறான். அவன் புன்னகை, ரகஸ்யமும், கனவொளியும் கொண்டு அவனுடைய அத்தனை கலகலப்பிலும் அவனைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது.
தட்இஸ் யூத்.
உச்சிவெயில் வீட்டுள் வெக்கையின் மயக்கத்தில் அவரவர் தம்தம் மூலையில் கண் செருகிக் கிடக்கின்றனர். சந்தடி செய்யாமல், கிணற்றடிக்குச் சென்று எட்டிப் பார்க் கிறேன். இப்படியும் பேதலித்துப் போகணுமா? மீண்டும் நிகழாதா? பாதாமி மரத்திலிருந்து, பறவை எச்சம் உச்சி மண்டைமேல் சூடாய் விழுகிறது. கோபம் பொங்குகிறது. கூடவே அழுகை பயமுறுத்துகிறது.
மரத்து நிழலடியில் ஒதுங்குகிறேன்; ஒடுங்குகிறேன்.
இந்த வயதில் நீ எனக்கு நேர்வானேன்?
இப்படிக் கேள்வி பிறந்ததுமே நீ நேர்ந்துவிட்டாய். உன்னை எனக்கு உண்மையாக்கிக் கொண்டுவிட்டேன் என்கிற எண்ணம் அதன் முழுக்கனத்துடன் என் நெஞ்சின் ஆழத்துள் அமிழ்ந்ததும் உடல் புல்லரித்துப் போனது.
அப்போது நீ நிஜம்.
உண்மையின் தரிசனம்.
ஆம். மெய்யும் பொய்யும் அவரவர் மட்டில்தானே! ஆதார நிஜம், பேசிக் ட்ரூத்’ என்று ஆயிரம் சொல்லிக் கொண்டாலும் எல்லாமே பார்வைகள். ஆயிரம் பார்வை கள், ஆயிரம் முகங்கள்.
இந்த ரீதியில் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்?
உன்னை எனக்கு நிஜம் பண்ணிக்கொண்டதனால் வேதனை அதிகரிக்கின்றதே ஒழிய, தெளிந்ததால் தென்பு ஏற்படவில்லை.
இதோ பார்,நான் காய்ந்த சருகு. என் உடல் இனி சிதைக்கு உரியது. இந்த நிலையில் நீ என்னுள் உன் பொறியை வைத்து வேடிக்கை பார்ப்பது நியாயமா? நெஞ்சில் அமிர்தம் சிக்கியதுபோல் அழியவும் முடியாது. வாழவும் வழியில்லை. தாங்க முடியவில்லையே!
ஒரு பெரிய கேவல் என்னின்று புறப்பட்டதும் மிரண் போனேன். புரண்ட பூமியின் பெருமூச்சு. தாளொணா ஏக்கம். அதன் கபந்தவாய், மிருதுவாய் என்னைக் கவ்வியதும் கண்ணீர் புரண்டது.
‘நித்யத்வத்தினின்று தெறித்த தருணம்
அது சிதறுண்டு நேர்ந்த கவிதை
சொல்லுக்குப் பதில் உகுத்த கண்ணீரில்தான்
காதல் பூக்கின்றது.
கானல் மேல் காதல். ஆகவே உன்மேல்
காதல் எனும்
எண்ணம் தைரியமாகத் தன்னில் தோன்றிவிட்டது.’
இரண்டு நாட்களாக அவன் மாறிவிட்டான். திடீரென ஒரே அடியாக வதங்கிவிட்டான். மகனே, என்ன நேர்ந்தது? உன்னை ஏன் தின்றுகொண்டிருக்கிறாய்? எங்களை, என்னை ஏன் ஒதுக்குகிறாய்?
வாய்விட்டுக் கேட்க முடியுமா? கேட்டால்தான் சொல்வானா?
ஆபீஸ் வேளைக்கு வீட்டை விட்டுப் போகிறான் ஆபீசுக்குப் போகிறானா? வேளை தாண்டி வீடு திரும்பு சிறான். வீட்டில் இருட்டு மூலைகளில், மொட்டை மாடி யில் வாழ்கிறான்.
காலேஜ் பஸ்சைத் தேடிப் போலையே, பஸ் ஸ்டாண்டில் உன் கொடி விழுந்துவிட்டதா? அப்படித்தான் தோன்றுகிறது.
நேற்று மாலை, மாடு அவளுடைய நந்தவனத்தில் புகுந்துவிட்டது. அவள், கத்திக்கொண்டே லொங்கு லொங் கென்று ஓடிவந்துகொண்டிருக்கையிலேயே அது போகிற போக்கில், செடியோடு ஒரு தொட்டியை இழுத்துச் சென்று தொட்டி உடைந்து ரோஜாச் செடி மாட்டின் வாயில். சாவகாசமாய் நின்று மென்று தின்றது.
அங்கேயே உட்கார்ந்து ஒரு பாட்டம் அழுதாள்.
வாய்விட்டு, நெஞ்சின் கனம் தீர அழுகைக்கு எங்கே போவேன்? நல்ல அழுகை, நல்ல ஸ்னானம்.
நான் தோளில் சாய்ந்தோ, மடியில் முகம் புதைத்து அழக்கூடியவர் யாவரும் மறைந்துவிட்டனர். இப்போது அவர்களை அழைப்பது என் துராசை.
என் வயதுக்கேற்ப, நோய்வாய்ப்பட்டு நாளடைவில் தேய்ந்து, ஒருநாள் மாய்ந்துபோவதில் நியதியிருக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட மரம் துளிர்க்கும் இன்ப வதையில் நியதி இல்லை, ஆனால் இதுதான் உன் லீலை.
மது படும் வேதனைக்கு மனம் பரிதபிக்கின்றது. ஆனால் அங்கு நியதி தெரிகிறது. அவன் வயதுக்கு நேரும் நோய் வாய்ப்பட்டுத்தான் ஆகணும். ஆனால், மனம் பரிதபிக் கிறது. சாயங்காலே – சாயங்காலம் அதன் அச்சங்களுடன், நாளை எனும் அநிச்சியத்துடன், மங்கல்களுடன் பூஜை அலமாரிக்கெதிரே நிற்கிறேன் உன் படத்துக்கெதிரே. என் தாபத்தினின்று விடுபட உன் காலிலேயே விழுகிறேன்
அவள் தன் உற்சாகமான பக்தியில் உன் படத்துக்கு மஞ்சள் கோர்த்த மஞ்சள் சருகு அணிவித்திருக்கிறாள். அதன மங்கலமான வேலியின் பத்திரத்தில் நின்றுகொண்டு என்னைச் சிரிக்கிறாய்.
ஆ– இப்போது உன் எதிரே நிற்கையில் கிணற்றில் தோன்றிய பிம்பம் யார் என்று ஓரளவு யூகிக்கத் தோன்று கிறது. படலம் விலகுகிறதா?
ஜன்மம் எனும் முடிவற்ற நினைவு அதில் எங்கோ எப்பவோ புதைவுண்ட எண்ணமாய் நீ உன் படுகையினின்று உன் வேளையில் கிணற்றுள் பிம்பமாய் மேல் வந்து மிதந்து, அந்த சலனத்திலேயே மறைந்தும் போய், உன் ஒளிவிலிருந்து வாட்டுகிறாய். அப்படித்தானே? சமாதானங்களை இப்படித் தான் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நீ நிரூ பணைக்கு அப்பாற்பட்டவள்.
மதுவைப் பார்க்க சஹிக்கவில்லை. என் கண்ணுக்குப் பாதியாகிவிட்டான். கண்களைச் சுற்றிக் கறுப்பு வளை யங்கள். நின்றவிடத்தில் நிற்கிறான். நாலடி நடந்து மலைக்கிறான். கண்ணுக்கெதிரே இளைக்கிறான். மது என்னடா செய்வேன்- செய்வோம்?
மின்சாரம் தோற்றுப்போய், வட்டமேஜை மீது ஏற்றி நட்டு வைத்திருக்கும் மெழுகுவர்த்தி ஒளிகூடத்தின் இருளைக் கூட்டிக் காட்டுகிறது. ஒரு மூலையில் அவள் ஒளியும் ஒலியும் அநியாயமாப் போய்விட்டதென்று புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
ஏதோ ஒரு அறை வாசலிலிருந்து மது வெளிப்படு கிறான். என்னை நோக்கி வருகிறான். என்னவோ சொல்லப் போகிறான். என் தோள் மேல் கை வைக்கிறான். காத்திருக்கிறேன். எங்கள் நிழல்கள் சுவர்மேல் வினோத நர்த்தனம் புரிகின்றன. அவன் உதடுகள் நடுங்குகின்றன. (ஷவரம் செய்து எத்தனை நாட்கள் ஆயினவோ). விழிகள் நிறைகின்றன. கன்னம் கன்ற வழியும் அவன் கண்ணீர் என் நெஞ்சில் ஆவி கக்குகிறது. திரும்பிப் போகிறான். அந்தத் தருணம் வந்து நின்று, தயங்கி, பொரியாமல், அதன் கனத் துடன் திரும்பிப் போய்விட்டது.
‘காதல் எனும் புரையோட்டம்
காதல் எனும் துரோக நதி. ஆனால் ஜீவநதி
காதல் எனும் வென்னீர் வீழ்ச்சி.
அதன் தழும்பிலிருந்து மீளமுடியாது…’
மாலை நேரங்கள் பயமாயிருக்கின்றன; பயங்கள் தலை விரித்தாடும் வேளை அப்போத்தான்.
என்னை அலசிப் பார்த்துக் கொள்கிறேன். மனதைச் சாட்டையாலடித்துக் கேட்கிறேன். மனம் மருள்கிறது. உடலின் வேட்கை அன்று இது. மனம் துணைக்குத் தவிக் கிறது. ஒரு பாதி குருதி சொட்ட தனிமையின் ஏக்கத்தில் நிற்கிறேன்.
ஒரு எண்ணம் தோன்றுகிறது.இதோ, இந்தக் கிணற்றடி யில் பாதாமி மரத்தின் கீழ், பாறாங்கல்மீது நான் உட்கார்ந் திருக்கையிலேயே என் எண்ணத்தின் தீவிரத்தில், கிணற்றில் பார்த்த பிம்பத்தின் உருவில் உன்னை நான் சிருஷ்டிக்க முடியாதா? மாலையில் செவ்வான குண்டத்தினின்று, அல்ல இந்தக் கிணற்றிலிருந்தே நீ ஏன் எழக்கூடாது? தவம் என்பதே என்ன, ஒரு எண்ணம். ஒரே எண்ணத்தின் தீவிரம் தானே!
ஒரு பாதாமிக் காய் என் தலைமீது விழுந்தது. என்ன, என்னை மண்டையில் தட்டி உட்கார வைக்கிறாயா?
நான் பைத்யமே ஆகிவிட்டேனா?
அவளுக்கும் அவளுடைய வெண்டைச் செடிக்கும் ஏதோ பேச்சு மௌனத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்கிறேன்.
மது, அவன் தனியாயில்வே. நேரே என்னிடம் வருகிறார்கள்.மஞ்சள் க்ரீம் ஜிப்பாவில் மெலிந்து, உயரமாய் வருகிறான்.
“அப்பா அம்மா சேர்ந்து நில்லுங்கோ. எங்களை ஆசீர்வதியுங்கள்.” நமஸ்கரித்து எழுந்து நிற்கிறார்கள். அவளுக்குச் சேவிக்கத் தெரியவில்லை. மண்டியிட்டு, தலை யைத் தரையில் அழுத்தி மீண்டும் மண்டியாகி, மண்டியி லிருந்து எழுகிறாள். பின்னல் பூமியில் புரள்கிறது. தாழம்பூச் சிவப்பு.
நன்னாயிரு மகராஜியா அவன் தாயார் திகைத்து நிற்கிறாள்.
“அப்பா நான் பொய் சொல்லியிருப்பேன். ஆனால், உங்களை ஏமாற்றியதில்லை.அப்பா! இவள் என்னை நம்பி, தன் பெற்றோரையே துறந்துவிட்டு வந்திருக்கிறாள். அப்பா இவளும் மேஜர். சட்டப்படி இவள் ‘ஃப்ரி அப்பா, இவள் பேர் அமீர்ஜான்.”
மதுவின் தடலடி பாணி, அவன் கண்களில் ஒரு கண்ணாடிச் சாமான் தைரியம், துணிச்சல், விளிம்பு பிசகினால்-
“என்னடா சொல்றே மது? இவள் யாருடா?”
நான் அவளைக் கையமர்த்துகிறேன்.
நீ யார் என்று கேட்க எனக்குத் தேவையில்லை. ஏற்கெனவே உன் பிம்பம் காட்டி சூசகம் காட்டியிருக்கிறாய். நீ வரப்போகும் அடையாளமாய் என் நெஞ்சின் சருகின்மேல் நடந்து சென்றிருக்கிறாய். அவ்வளவுதான். ஆனால் அதுவே எனக்குத் தாங்கவில்லை.
“அப்பா! அழாதேங்கோப்பா” தேம்பினான். “என்னால் முடியவில்லை.”
உஷ்! மகனே, இது அழுகையில்லை, அருவிஸ்னானத்தில் என் அழுக்குகள் கழுவப்பட்டு துல்லியமாகிக் கொண்டிருக்கிறேன்.
நீ லலிதாம்பிகை.
நீ ராஜ ராஜேஸ்வரி.
நீ கன்யாகுமாரி.
நீ பாலா.
நீ அமிர்ஜான்.
– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |