பாசத்தின் நிழலில்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 22, 2026
பார்வையிட்டோர்: 172 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

ஒரு தாத்தா பாட்டி, இரண்டு பேரன்கள் – சிரிப்பும் சின்ன நாடகமும் கலந்த ஒரு வீட்டு வாழ்க்கை.

இந்த வீட்டில் நான்கு முக்கியமான நபர்கள் பற்றி முதலில் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வீட்டை உயிரோட்டமாக வைத்தது நம்ம ‘ஹீரோ’ மாணிக்கம் தாத்தாதான்.

மாணிக்கம் தாத்தா, கமலம் பாட்டி, ஆனந்த் பேரன், மற்றும் அரவிந்தன் — இவர்களால்தான் அந்த வீடு எப்போதும் உயிரோட்டமாக இருந்தது.

மாணிக்கம் தாத்தா வயசுக்கு ஏற்ற மாதிரி நடக்கவே மாட்டார். எண்பத்திநான்கு வயதிலும் அவர் ஒரு இளைஞனைப் போல சுறுசுறுப்பாக இருப்பார். கமலம் பாட்டிக்கும் வயது அதே எண்பத்திநான்கு.

கமலம் பாட்டி சரியான தைரியசாலி. பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அதனாலேயே அவர் சமையல் மட்டுமல்ல, எல்லா வேலைகளையும் நுணுக்கமாக செய்வார். அவருடைய கைப்பக்குவம் யாருக்கும் வராது.

வடகம், வத்தல், எள்ளுருண்டை போன்ற எல்லா வகையான பலகாரங்களையும் ஒற்றை ஆளாக செய்து முடித்து விடுவார்.

கமலம் பாட்டி எதையும் தனக்கென எடுத்து வைத்துக் கொள்ள மாட்டார். அனைவருக்கும் பகிர்ந்தளித்து விட்டு, மீதம் உள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்.

அவர்களின் வீட்டுக்கு யாராவது வந்தால், சாப்பாடு போடாமல் அனுப்பவே மாட்டார். ‘முதல்ல சாப்பிடு, அப்புறம் தான் பேசணும்’ என்பதுதான் அவரது மரபுச் சட்டம்!

ஆனால் அதே சமயம், அவருக்குள் கொஞ்சம் வைராக்கியம் அதிகம்.

ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதை மாற்றுவது என்பது மலை அசைப்பதைப் போல கடினம். தண்ணீர் கூட அந்த முடிவை விட்டு விலகி ஓடிவிடும்!

ஆனந்த் பேரனா? அவன் இந்த இருவருக்கும் நடுவில் சிக்கி வாழும் சின்ன ராஜா.

ஸ்கூல், டிவி, சாப்பாடு – இதுதான் அவன் உலகம். ஆனால் அவன் பேசும் சீரியல் வசனங்கள் மட்டும் பெரியவர்களைக் கூட மடக்கிவிடும்!

அரவிந்தன் இதற்கெல்லாம் முற்றிலும் வேற மாதிரி.

அவன் அதிகம் பேச மாட்டான். அமைதியாக இருப்பவன். வீட்டில் நடக்கும் சண்டை, சிரிப்பு, அலப்பறை – எல்லாத்தையும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவன் போல இருப்பான்.

ஆனால் அந்த அமைதிக்குள் ஒரு உறுதியான குணம் இருக்கும்.

தவறு நடந்தால் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க மாட்டான். உள்ளுக்குள் கோபம் வரும் — அது வெளியில் வந்தால், அது சத்தமாக இல்லாமல் தெளிவாக இருக்கும். அதனால்தான் வீட்டில் சிலர் அவனை ‘அமைதியான புயல்’ என்று சொல்லுவார்கள்.

அன்று வீட்டுக்குள் ஒரு விசித்திரமான அமைதி. ஆனாலும் அந்த அமைதிக்குள் மறைந்து கிடந்தது மாணிக்கம் தாத்தாவின் உடல்நிலைதான்.

“ஆஹ… அம்மா…” என்று மெதுவாகக் குரல் விட்டுக்கொண்டே கண்களை மூடி படுத்திருந்தார். பார்த்தவுடன் யாருக்கும் பயம் வந்துவிடும். காய்ச்சலால் சோர்ந்து போய்விட்டவர் போலவே இருந்தார். ஆனால் அவரை நன்றாக அறிந்தவர்கள் இதை உடனே நம்ப மாட்டார்கள்.

எண்பத்திநான்கு வயசு ஆனாலும், மாணிக்கம் தாத்தா நடமாட்டத்தில் இருபத்திஐந்து வயது இளைஞன் மாதிரி. வீட்டிலே அமைதியாக உட்கார்ந்து இருக்கவே மாட்டார். ஏதாவது வேலை, இல்லையென்றால் வெளியே சுற்றல்—அப்படித்தான் வாழ்க்கை.

அதனால்தான் இவருக்கு காய்ச்சல் வந்தாலும் யாரும் பெரிசாக எடுத்துக்க மாட்டார்கள். ‘ஒரு நாள் படுத்துக்குவார், மறுநாள் காலையிலே எழுந்து என்ன சாப்பாடு?ன்னு கேட்பார்’ என்பதே வழக்கம்.

ஆனா இந்த முறை வேற மாதிரி. ஒரு நாள், இரண்டு நாள்… நாலு நாள் ஆகிவிட்டது. இன்னும் எழுவே இல்லை.

கமலம் பாட்டிக்கு உள்ளுக்குள் பதட்டம். வெளியில காட்டிக்க மாட்டார்.

ஆனாலும் மனசு அமைதி இல்லை.

“கண்ணு அரவிந்தா…” என்று அழைத்தார்.

அரவிந்த் அருகே வந்தான்.

“தாத்தாக்கு ஏதாவது ஆனா… நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்…”

அந்த வார்த்தையிலேயே பாட்டியின் பயம் தெரிந்தது.

அரவிந்த் சிரிக்க முயற்சிச்சான்.

“அதெல்லாம் ஒன்றும் ஆகாது பாட்டி… நம்ம தாத்தா ஸ்ட்ராங்…”

என்று சொல்லி விட்டு பையை எடுத்துக் கொண்டு

“நான் எக்ஸாம் போயிட்டு வர்றேன்…” பாட்டி என சென்று விட்டான்.

அவன் போனதும் பாட்டி தனியாக தாத்தா அருகில் கவலையுடன் அமர்ந்து விட்டார்.

மாணிக்கம் தாத்தா? அவர் கொஞ்சம் செலவாளி. சம்பாத்தியத்தில் பாதி செலவு. அதனால் சண்டை வந்து விடும்.

ஆனா அந்த சண்டையும் அரை மணி நேரம் தான்.

அவர்கள் சண்டை போட்டா, சின்ன பேரன் ஆனந்த் உடனே,

“ஆரம்பிச்சுட்டாங்கப்பா… ஆரம்பிச்சுட்டாங்க…” என்று சீரியல் வசனம் போடுவான்.

ஆனந்த் – ஐந்தாம் வகுப்பு. பிறந்த நாளிலிருந்தே தாத்தா பாட்டி வீட்டில்தான்.

மழைக்காலம் வந்தா அவனை ஸ்கூலுக்கு அனுப்புவது பெரிய வேலை.

“டேய் ஆனந்த்! நேரம் ஆயிடுச்சு!”

“இல்ல பாட்டி… இன்னைக்கு லீவு விடுவாங்க… நியூஸ் பார்த்துட்டு வர்றேன்…”

அவன் லாஜிக்குக்கும் குறும்புக்கும் அளவே இல்லை. யார் பேச்சையும் கேட்க மாட்டான்

ஆனா கமலம் பாட்டி எடுத்த சீப்புக்குத்தான் அவன் பயப்படுவான்.

“இல்ல பாட்டி… இனிமேல் செய்ய மாட்டேன்…” என்று சொல்லி விட்டு நிமிஷத்துல மாறிவிடுவான்.

அதுக்கப்புறம் மீண்டும் அவனே ராஜா.

“இன்று சாயங்காலம் இதை செஞ்சு வை… பாட்டி அதை செஞ்சு வை… பாட்டி” என்று மெனு போடுவான்.

மாணிக்கம் தாத்தாவுக்கு ஆனந்த்தோட கூட்டணி தான் ரொம்ப பிடிக்கும்.

காலை எழுந்தவுடனே, “டேய் ஆனந்தா… ஸ்கூல் போகலையா?”ன்னு சத்தம் போடுவார்.

ஆனா அடுத்த நிமிஷமே, “இன்னைக்கு என்ன வேணும்? பிஸ்கட்டா? சாக்லேட்டா?”ன்னு கேட்டு வாங்கிட்டு வர போயிடுவார்.

ஆனந்திற்கு தாத்தாவைப் பார்த்தா எப்போதும் ஒரு குஷி.

“தாத்தா நீங்க தான் பெஸ்ட்!”ன்னு சொல்லுவான்.

பாட்டி இதைக் கண்டு கோபமாக, “அவனை ரொம்ப கெடுக்காதீங்க!”ன்னு திட்டுவார்.

ஆனா தாத்தா அதை எல்லாம் காதுல போட்டுக்க மாட்டார்.

‘பிள்ளை சந்தோஷமா இருந்தா போதும்’ன்னு அவரோட உலக தத்துவம்.

மாலை ஆனா வீடு இன்னும் கலகலப்பாகும்.

“டேய் ஆனந்தா… வாப்பா பஜ்ஜி வாங்கிட்டு வந்து சேர்ந்து சாப்பிடலாம்!”ன்னு தாத்தா திட்டம் போடுவார்.

ஆனந்த் குதூகலமாக, “சரிங்க தாத்தா!”ன்னு கிளம்புவான்.

அரவிந்தன் மட்டும் சிரிச்சுக்கிட்டு, “இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வீட்ட சாப்பாட்டு கடையா மாத்திடுவாங்க”ன்னு நினைப்பான்.

அன்றைய தினம் தாத்தாவின் நிலையை பார்த்ததும், ஆனந்துக்கு உள்ளுக்குள் ஒரு சின்ன குஷி:

“ஆஹா… தாத்தாஇப்படி இருந்தா ஒரு வாரம் ஸ்கூல் லீவு!” என்று கணக்குப் போட்டுக்கொண்டான்.

ஆனா அதே நேரத்தில் கவலையும் இருந்தது.

ஸ்கூலுக்கு போகும் வழியில் தாத்தா தான் அவனுக்கு பிஸ்கட், சாக்லேட் வாங்கித் தருவார்.

‘இப்போ யார் வாங்கித் தருவாங்க?’ என்ற கவலை.

‘இந்த ரூல்ஸ் ராமானுஜம் பாட்டியிடம் கேக்க முடியுமா?’ என்று மனசுக்குள் யோசனை.

இவன் இப்படிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, அரவிந்தனுக்கு வேறு கவலை.

அவன் மனதில்:

‘தாத்தா நல்லா இருந்தா தான் நான் எக்ஸாம் எழுத முடியும்… கடைசி எக்ஸாம் பாஸ் ஆனா தான் காலேஜ் முடியும்…’ என்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்தான்.

ஆனால் உண்மை என்ன?

மாணிக்கம் தாத்தாவுக்கு ஒன்றுமே இல்லை! அப்போது அவரின் வயது பேசியது—உடல் அசதியாக.

சென்ற வாரம் அவர் நண்பர் வீட்டில் போய், உடலுக்கு ஒத்துக்காத நான்-வெஜ் மற்றும் மீன் சாப்பிட்டுவிட்டார்.

அதனால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல்.

‘இது பாட்டிக்கு தெரிஞ்சா நொறுக்கி விடுவா!’ என்று பயந்து விட்டார். அதனால் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார். இது காய்ச்சல் நாடகம் அல்ல என்று தெரிந்து, ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று வந்தான் அரவிந்த். ஆனால் தாத்தா மிகவும் சோர்ந்து போய் விட்டார்.

மாணிக்கம் தாத்தாவுக்கு ஒரு சிறிய ஆதங்கமும் இருந்தது.

கமலம் பாட்டி அடிக்கடி தனியாக மகள்களுடன் வெளியே போவார்.

‘நீ வீட்டிலேயே இரு’ என்று அவரை விட்டுவிடுவார்.

அதனால், ‘என்னை கவனிக்கணும்!’ என்ற குழந்தை மனசு.

அதனால் இது மாதிரி ஏதாவது ஒரு விஷயத்தை செய்துவிடுவார். இவர் படுத்தால் உடனே கமலம் பாட்டி போன் செய்வது அவருடைய தங்கைக்கு மட்டும் தான். தங்கை மேல் மிகுந்த பாசம் கொண்ட மாணிக்கம் தாத்தா, தங்கை சொன்னால் போதும் தட்டாமல் கேட்டு நடப்பார்.

ஆனால் அன்றோ எதேச்சையாக அவரது தங்கை ஊரிலிருந்து திடீரென புறப்பட்டு தன் அண்ணனை பார்க்க வந்துவிட்டார். தங்கையைப் பார்த்தவுடன் மாணிக்கம் தாத்தாவிற்கு நிலை கொள்ளவில்லை. கமலம் பாட்டி சுவையான உணவுகள் வேறு தயாரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

அரை மணி நேரத்திற்கு பிறகு மெதுவாக எழுந்து உட்கார்ந்து, “எனக்கு ஒண்ணும் இல்லை… எவ்வளவு நேரம் தூங்குவது? கொஞ்சம் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடு…” என்றார்.

தங்கை, “அண்ணா, நான் எடுத்துட்டு வந்து தரேன்… சாப்பிடுங்க. சாப்பிட்டா தான் காய்ச்சல் சரி ஆகும்…” என்று சொல்லி சூடாக சமைத்தவற்றை கொண்டு வந்து கொடுக்க, தங்கையுடன் அமர்ந்து ஒரு பிடி பிடித்தார்.

அதற்குப் பிறகு:

ஒரு கணம் யோசிச்சார்… அப்புறம் திடீர்னு ஒரு உற்சாகம் வந்த மாதிரி, “தங்கச்சி வந்திருக்கா… அவளுக்கு பிடிச்ச பலகாரம் வாங்கணுமே…”ன்னு சொல்லிக்கிட்டே எழுந்தார்.

வேட்டியை சரி பண்ணிக்கிட்டு,

“நான் போய்ட்டு வர்றேன்… சுடச்சுட எதாவது வாங்கிட்டு வரேன்…”ன்னு சொல்லி வாசல் பக்கம் போக ஆயத்தமானார்.

வீட்டில் இருந்த எல்லாருக்கும் அதைக் கண்டு சிரிப்பும், ஆச்சரியமும் ஒரே நேரத்தில் வந்தது.

“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்…” என்று புறப்பட்டார்.

சற்று நேரத்தில் பஜ்ஜி, போண்டா வாங்கிக்கொண்டு வந்து 25 வயது இளைஞராக மாறிவிட்டார்!

சாயங்காலம் ஸ்கூல் முடிந்து வந்த ஆனந்த் தாத்தாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாலும், “அடடா… லீவு போச்சே!” என்று உள்ளுக்குள் குழந்தைத்தனம் மாறாமல் வருந்தி, “வட போச்சே!” என்றான்.

அரவிந்தன், “கடவுளே நன்றி…” என்றான்.

அரவிந்தன் அமைதியாக மாணிக்கத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “தாத்தா, நீங்க இனிமேல் எப்போதும் இப்படி செய்யாதீங்க… நீங்களும் பாட்டியும் தான் எங்களுக்கு வழிகாட்டிகள். அதனால் நீங்க எப்போதும் எங்களோட ஆரோக்கியமா இருக்கணும்…” என்றான்.

மாணிக்கம் தாத்தா அரவிந்தையும் ஆனந்தையும் இரு கைகளால் அணைத்துக் கொண்டு, “இல்லடாப்பா… இனிமே நான் ஜாக்கிரதையா இருக்கேன்…” என்றார்.

மாணிக்கம் தாத்தா, கமலம் பாட்டி, ஆனந்த் பேரன், மற்றும் அரவிந்தன் — இவர்களால்தான் அந்த வீடு எப்போதும் உயிரோட்டமாக கலகலப்பாக இருந்தது.

– மே 2026

கல்பனா ராஜகோபால் பெயர்: கல்பனா ராஜகோபால்வயது: 56எழுதிய சிறுகதைகள்: 25பிரசுரமானவை: 12 கல்கி/மங்கையர் மலர் ஆன் லைன்: 11 சிறுகதைகள் தளம்: இங்கே படிக்கலாம் ஆரம்ப எழுத்தாளரான நான் கடந்து ஒரு வருட காலமாக கட்டுரைகள் மற்றும் கதைகளை கல்கிக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *