செண்பகம், ஆஷா மற்றும் உஷா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 22, 2026
பார்வையிட்டோர்: 58 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(இந்தப் புனைகதை முற்றிலும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.)

ஒரு முழு நிலவு நாள் இரவு. சென்னை – திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் விழுப்புரம் நகரின் புநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த மாளிகையில் இரண்டு பெண் ஆவிகளின் உரையாடல்…

“நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“அறிமுகம் வேணுமா? என் பேரு செண்பகம்.. போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருந்தேன். என் புருசன் அல்பாயுசுல என்னை மேல அனுப்பிட்டான்… என்னை விட சின்னப் பொண்ணு மாதிரி உன் குரல் இருக்கு… உன் கதை எப்படி முடிஞ்சுது?“

“என் பேரு ஆஷா… நீங்க ஒங்க கதையை சொல்லுங்க அப்புறம் என்னைப் பத்தி சொல்றேன்…”

“அப்படி வரயா… ஆவியானப்புறம் பேச்சுத் துணையா இன்னொரு ஆவி வந்து சேர்ந்து இருக்கே… பேசிப் பேசித்தான் நாம நிம்மதி அடைஞ்சுக்கணும்… என்னோட அப்பா அம்மா என்னோட சின்ன வயசுல போய்ட்டாங்க.. என்னை என்னோட பாட்டி என்னோட அப்பாவோட அம்மாதான் வளர்த்துச்சு… போலீஸ் ஆகணும்னு ஆசை… விழுப்புரத்திலேயே போஸ்ட்டிங் கிடைச்சு போலீஸ் ஆயிட்டேன். நான் உண்டு என் வேலை உண்டுன்னு என் வண்டி போய்க்கிட்டு இருக்கிறப்ப , என் பாட்டி , அதான் பெரியவங்க சொல்லுவாங்களே.. கண்ணை மூடறதுக்குள்ளே உன் கல்யாணத்தைப் பார்க்கணும்னு அது மாதிரி பேசி பாட்டி என்னை கல்யாணத்துக்கு தலை ஆட்ட வெச்சிடுச்சு. அதுதான் மாப்பிள்ளை பார்த்துச்சு எங்க மாமா பையனைத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… அவன் சுயரூபம் தெரியாம அவனுக்கு கழுத்தை நீட்டிட்டு இப்ப ஆவியா அலையறேன். போன மாசம் எனக்கு பர்த் டே … அன்னிக்கு மினிஸ்ட்டர் பங்சன் ட்யுட்டி.. நான் ட்யுட்டி முடிச்சுட்டு , பாட்டி உடம்பு சரியில்லேன்னு போன் பண்ணிச்சு.. அது வீட்டுக்கு போய் பன் பிரெட் ஓஆர்எஸ் எல்லாம் வாங்கி குடுத்துட்டு ஆஞ்சு ஓய்ஞ்சு போய் வீட்டுக்கு வந்தேன். உணவு கூட வேணாம்னு தோனிச்சு. உடை மாத்திகிட்டு படுத்தா போதும்னு இருந்துச்சு.. இந்த கிராதகன் என் புருசன் , ஸ்வீட் சாப்பிடு நான் பண்ண பாயசம் சாப்பிடுன்னு கொடுத்தான். நான் வேணாம்னா விடலை. சரி காதல்ல கொடுக்கறான்னு நம்பி சாப்பிட்டேன்.. என் கதை முடிஞ்சுது… ராத்திரியோட ராத்திரியா என்னை இந்த பங்களாவுல கொண்டு வந்து போட்டுட்டு போய்ட்டான். காலை பத்து மணிக்கு இங்க சீட்டாட வந்தவங்க தான் போலீசுக்கு சொல்லி என்னை மீட்டாங்க எனக்கு நடக்க வேண்டியதை எல்லாம் நடந்துச்சு… என் புருசன் எல்லார் எதிரேயும் அழுது புரண்டு பெர்பாமன்ஸ் பண்ணதுல எங்க டிபார்ட்மென்ட் ஆளுங்களுக்கே அவன் மேல சந்தேகம் வரலை. எங்க பாட்டிக்கு சந்தேகம் இருந்துச்சு போல . ஆனா இவன் பெரிய மனுசனோட இருக்கிறவன் ங்றதால அழுது புலம்பிட்டு இருந்துச்சு. ஆனா அவனை கொள்ளி வைக்க விடலை. பாண்டிச்சேரில இருந்த எங்க சித்தப்பாவை வரவழைச்சு தீ மூட்ட வெச்சுது எங்க பாட்டி …”

“ஒங்கள மாதிரி தான் எங்க அப்பா அம்மா நான் ஒன்பதாவது படிக்கும் போதே கார் ஆக்சிடென்ட் ல போய்ட்டாங்க .. எங்க அப்பா அம்மாவுக்கு நாங்க ரெண்டு பொண்ணுங்க என்னோட அக்கா உஷா .. நான் … எங்க அப்பா அம்மா எங்களுக்கு வெச்சிட்டு போன வீடு இருந்துச்சு.. மாடில ரெண்டு போர்ஷன் வாடகை , அம்மா அப்பா போட்டு வெச்சிருந்த எப்டி சேவிங்ஸ் எல்லாம் வைச்சு சமாளிச்சோம் . . அக்கா அதிர்ச்சி அடையாம தைரியமா இருந்தா நமக்கு நாமே ன்னு … எப்படியோ கஷ்டப்பட்டு ஆளாயிட்டோம். நான் விழுப்புரத்திலேயே தான் வேலை பார்த்தேன். அக்கா மெட்ராஸ் போனா.. சின்னத் திரை நட்சத்திரமா ஆயிட்டா …டிவி சீரியல்ல பார்த்து இருப்பீங்களே உஷா தேவின்னு … … அவ சென்னையில பெரிய தாதாவா இருந்த பார்த்திபனோட சுத்திகிட்டு இருக்கான்னு எனக்கு நியுஸ் வந்துச்சு. அவ இங்க வந்தப்ப வயசானவன் , தாதா அதனால வேணாம் விட்டுடு … அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி காலேஜ் போற ஒரு பொண்ணு இருக்குன்னு சொல்றாங்க தொடர்பை விட்டுடுன்னு சொன்னேன்…”

“பொருந்தா காதல்ன்னு கண்டிச்சு இருக்கே…”

“ஆமாம் சரி விட்டுடுவான்னு பார்த்தா…. பார்த்திபனோட அம்மா , மனைவி மகள் எல்லாம் சேர்ந்து அவங்க வீட்லேயே உஷாவுக்கும் அவனுக்கும் சிம்பிளா கல்யாணம் நடத்தப் போறாங்கன்னு போன் பண்ணி சொன்னா .. நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்லி அவங்க கல்யாணத்துக்கு முதல் நாள் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை பண்ணிகிட்டேன்…”

“நீ அப்படி நெனச்சுட்டு இருக்கே… மாத்திரையால உன் கதை முடியல… யாரோ உன்னை முடிச்சுட்டு இங்க கொண்டு வந்து போட்டு இருக்காங்க. நீ தற்கொலை பண்ணிகிட்டா உன் வீட்லேயேதான் விழுந்து கிடக்கணும்.. ஊருக்கு வெளியில இந்த பாழடைஞ்ச பங்களாவிலேந்து தான் போலீஸ் உன்னை மீட்டு உன் அக்கா கிட்ட கொடுத்து இருக்காங்க…”

“ஆமாம் அக்கா .. நீங்க சொல்றதுதான் கரெக்ட்…”

“நான் உனக்கு அக்கா ஆயிட்டேனா…”


மறு நாள். முற்பகல் வேளை .

“செண்பகம் அக்கா அங்க பாருங்க இந்த பங்களாவுக்கு எதிரே இருக்கிற பூட்டி இருக்கிற கல்யாண மண்டபத்து வாசல் பகுதில நிக்கறாங்க பாருங்க அதுதான் என் அக்கா உஷாவும் அவ புருசனும்…”

“புது மண ஜோடியா… ஒங்க அத்தானைப் பார்த்தா வயசானவன் மாதிரி தெரியலையே … கட்டுடல் ஆளா தானே இருக்கான்.. ஆஷா அங்க பாரு … ஒரு முகமூடி மனுசன் பின்னாலேந்து அவங்கள தாக்க வர்றான்…”

“ஆமாம் அக்கா… வாங்க அங்க போவோம்… அவங்கள காப்பாத்துங்க..”

“நாம எப்படி காப்பாத்த முடியும்.. நாம ஆவிங்கறதை மறந்துட்டே…”


மூடி இருந்த தென்றல் திருமண மண்டபத்தின் முகப்பில் தரையில் ஆடிப் போய் அமர்ந்திருந்தாள் உஷா தேவி. அவளிடம் தண்ணீர் புட்டியைக் கொடுத்தான் அவளுடைய கணவன் பார்த்திபன். அவள் அருகில் தரையில் அமர்ந்தான்.

அவள், வலது கையை மடக்கி கணவனின் கன்னத்தில் குத்தினாள்.

“யோவ் நான் நல்வழில போய்க்கிட்டு இருக்கேன். என் மேல எந்த போலீஸ் ஸ்டேசன்லேயும் கேஸ் இல்ல எனக்கு எனிமி யாரும் இல்லேன்னு சொன்னே … இப்ப நூத்தி அம்பது கிலோ மீட்டர் தாண்டி வந்துட்டான். உன்னால நானும் போய் சேர்ந்து இருப்பேன் என் தங்கச்சி போன இடத்துக்கு…”

பார்த்திபன் பேசினான் –

“என்ன மேம் … கதையை மாத்தறீங்க .. அவன் என்னை தாக்க வரலை ஒங்களத்தான் தாக்க வந்தான்”

“என்ன உளர்றே எனக்கு இங்கு உயிரை எடுக்கற அளவுக்கு பகை கிடையாது” உஷா சொன்னாள்.

“அது சரி… ஒங்க வீட்டு மாடில இருக்கிற டெனன்ட் லேடி என்ன சொன்னாங்க ? ஆஷா, மர்மமான முறையில இந்த பங்களாவில சடலமா இருந்தா மாதிரி ரெண்டு வாரத்திற்கு முன்னால இதே பூத் பங்களாவில சடலமா கான்ஸ்டபிள் செண்பகம் இறந்து கிடந்தாங்கன்னு சொன்னாங்களா? ஏதோ ஒரு கனக்ட்டிங் பாயின்ட்… செண்பகம் , ஆஷா… ரெண்டு பேரையும் முடிச்சுட்டு ஒங்கள முடிக்க வந்திருக்கான் அந்த முகமூடி மனிதன்…”

“அப்படியா சொல்றே… உன்னை கட்டிகிட்டதுக்கு பாடி கார்டு மாதிரி காப்பாத்திட்ட… சரி காரை எடு அசிஸ்டன்ட் கமிஷ்னர் பவானி மேடம் எனக்கு தெரிஞ்சவங்க அவங்கள போய் பார்த்துட்டு வருவோம்…”


ஆவிகளின் உரையாடல் தொடர்கிறது…

“ஆஷா உன் அத்தான் சொன்னதுதான் உண்மை போலிருக்கு..”

“ஒங்க வீட்டுக்காரர் பேர் ரவிச்சந்திரனா?”

“ஆமாம் அதான் அவன் பேரு”

“அவர் திடீர்ன்னு ஒரு சண்டே அன்னிக்கு டிசர்ட் பேன்ட் போட்ட ரெண்டு யங்ஸ்டர்சோட வீட்டுக்கு வந்துட்டாரு … அவரோட பேர சொல்லிட்டு அவங்க பாஸ் பத்தி எல்லாம் சொல்லிட்டு ஒங்க வீட்ல பெரியவங்க இல்லை அதனால உன் கிட்டேயே கேட்கிறேன் … ஒங்க ரெண்டு பேரையும் இவங்க ரெண்டு பேருக்காக பொண்ணு கேட்கிறேன் னு பேசினாரு … நான் போன் நம்பர் கொடுங்க .. அக்கா கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லி அனுப்பி இருக்கலாம். வாயை வெச்சிட்டு சும்மா இல்லாம இவங்க ரெண்டு பேருக்கு என்ன உத்யோகத்துல இருக்காங்க இல்ல பிசினெஸ் பண்றாங்களான்னு கேட்டுட்டேன். ரவிச்சந்திரன் , இவங்க ரெண்டு பேருக்கும் அதெல்லாம் தேவை இல்லை . பணம் காசு சொத்து சுகம் ஏராளம்ன்னு சொன்னாரு… இயக்கம் எதுவும் இல்லாம இருக்கிறவங்களுக்கு யார் பொண்ணு கொடுப்பாங்களோ அங்க பொண்ணு எடுத்துக்கங்கன்னு சொல்லிட்டேன். மூணு பேரும் முகம் மாறி உடனே வெளியே போய்ட்டாங்க…”

“நானும் வாயாலதான் கெட்டிருக்கேன். இப்ப ஞாபகம் வருது. ஒங்க வீட்டுக்கு போய்ட்டு வந்ததை பத்தி என் புருசன் புருசனா அவன் அரக்கன் என் கிட்ட சொன்னான் – என் பாஸோட பேரன்களுக்கு பொண்ணு கேட்டு ஒரு வீட்டுக்கு அழைச்சுகிட்டு போனேன். அங்க ஒரு பொண்ணு இந்த மாதிரி பேசிச்சுன்னு சொன்னான்…. நான் போலீஸ் வேலைல இருந்துகிட்டு ஒழுங்கான வேலையும் முறையான சம்பளமும் இல்லாத உனக்கு மாமா பையனாச்சேன்னு திருத்திடலாம்ன்னு கழுத்தை நீட்டினேன் .. அந்த மாதிரி எல்லா பொண்ணுங்களும் இருக்குமா ன்னு கேட்டு விட்டேன். பணம் ஈட்டுறதில நாட்டம் இல்லாம அந்த பெரும் புள்ளியோட வீட்ல நாய் மாதிரி இருக்கிறதுல என்ன பிரயோசனம் ன்னு கேட்டேன்.”

“பொட்டுல அடிச்சா மாதிரி கேட்டிருக்கீங்க…”

“அதுக்கு தான் அவன் வஞ்சம் வைச்சு என்னை தீர்த்து கட்டிட்டான்…”


அன்று மாலை நேரம் . இலேசான தூறல். தென்றல் திருமண மண்டபத்தின் முகப்பில் தரையில் இரண்டு இளைஞர்கள் வந்து அமர்ந்தனர். மூன்றாவது நபராக அங்கே செண்பகத்தின் கணவன் ரவிச்சந்திரன் வந்து நின்றான்.

ஆவிகள் செண்பகமும் ஆஷாவும் அங்கு வந்தன.

ஒரு இளைஞன் பேசினான் –

“ரமேசு… இந்த கல்யாண மண்டபத்தையும் எதிர்ல இருக்கிற பங்களாவும் அப்படியே போட்டு வெச்சிருக்காங்க… பாகம் பிரிக்கிறதுல பிரச்சினை போல அது போகட்டும்… தம்பி… இந்த ரவி ரொம்ப ஆபத்தான ஆளுடா… பொண்ணு கேட்டு போனப்ப துடுக்குத்தனமா பேசின பொண்ணு கதையை முடிச்சு இந்த பங்களாவில கொண்டு வந்து போட்டுட்டான்…”

“பெண்டாட்டியையும் அப்படித்தான் பண்ணான் சுரேசு… நம்மள எங்கேயாவது இதுல எல்லாம் இழுத்து விட்டுடப்போறியா…”

“யோவ் ரவி …. பெண்டாட்டி என்னய்யா பண்ணிச்சு”

“அது வந்து துரை… எனக்கு சரியான வேலை இல்லன்னு குத்திக் காட்டி பேசிகிட்டு இருந்துச்சு எப்ப பார்த்தாலும்… அதுக்குத்தான்… ஆஷா வோட அக்கா உஷாவையும் முடிக்க பார்த்தேன் இன்னிக்கு தப்பிச்சிட்டா…”

“சுரேசு…ரவி மெதுவா பேசுங்கய்யா … பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப் கிட்ட ஒரு பாட்டி நின்னுகிட்டு இருக்கு…”

“கையில கோல் வெச்சருக்கிற கிழவியா? அது நம்ம பேச்சை கேட்டா என்ன ஆயிடப் போகுது? ரவி சரக்கு , ஸநாக்ஸ் எல்லாம் காரிலிருந்து எடுத்துகிட்டு வா”

“இங்கேயா துரை….”

“எங்கே சரக்கு அடிச்சாலும் தாத்தா கிட்ட போய் சொல்லிடறாங்க . இதுதான் நல்ல இடம் … எடுத்துகிட்டு வா… மண்டபம் வாசல்ல ஒரு மினி பல்பு எரியுது இல்ல அந்த வெளிச்சம் போதும்…”

ரவிச்சந்திரன், தரையில் துண்டை விரித்து அதில் மதுபான புட்டிகளையும் கிளாஸ்களையும் தண்ணீர் புட்டிகளையும் பரப்பினான். நொறுக்குத் தீனிகளை ஒரு காகித தட்டில் வைத்தான் . மது அருந்த ஆரம்பித்தார்கள். நேரம் செல்ல செல்ல போதை தலைக்கேறி சத்தமாக சிரித்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இவர்களைப் பார்த்துக் கொண்டு சென்றார்கள்.

சில நிமிடங்கள் கழித்து பேச்சு ஒலிகள் நின்றன.

ஆவிகள் பேசத் தொடங்கின.

“செண்பகம் அக்கா… என்ன அக்கா… சத்தம் போட்டுகிட்டு இருந்தாங்க பேச்சு மூச்சு காணோம்…”

“அந்த ரெண்டு தடியனுக்கும் போதை தலைக்கேறி சாஞ்சுட்டானுங்க…. ரவி கிராதகனுக்கு பேச்சும் நின்னு போச்சு மூச்சும் நின்னு போச்சு”

“என்ன அக்கா சொல்றீங்க?”

“ஆமாம். ஆஷா… பஸ் ஸ்டாப்ல ஒரு பாட்டி நிக்குதுன்னு சொன்னாங்களே அந்த தடியனுங்க… அது என்னை வளர்த்த வசந்தா பாட்டி தான்… அது தன்னோட கையில இருந்த கோலால ரவிச்சந்திரனோட மூச்சு அடங்க வெச்சிடுச்சு. அதோ பார்… வந்து நிக்கிற டவுன் பஸ்ல ஏறிப் போறாங்க பாரு அவங்கதான் என்னோட வசந்தா பாட்டி…”

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *