பள்ளியறையும் ஒரு படிப்பறிவும்!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 2,690
அந்தப் பள்ளிக்கூடம் ‘டிசிப்ளினு’க்குப் பெயர் பெற்றது.தலைமை ஆசிரியர் ஆறுமுகம் என்றால், மாணவர்களுக்குச் சிம்ம சொப்பனம் ! புறங்கையில் முழுகைச் சட்டைக்குள் காரமடைப் பிரம்பு மறைந்திருக்கும். தப்புச் செய்தால் அவ்வளவுதான். அடி பின்னி எடுத்துவிடுவார். இருந்தாலும் இடம் கிடைக்க பள்ளிக் கூடத்தில் அப்படியொரு போட்டி.
அன்று மதியம் கொஞ்சம் உச்சி வெயில். பள்ளி வேளையில் ஸ்கூலை மேற்பார்வை செய்ய ‘ரவுண்ட்ஸ்’ வந்தார்ஆறுமுகம். ஓய்வு பீரியடில் ஆசிரியர் அறையில் இருக்கையில் மேஜை மேல் கவிழ்ந்து படுத்து கம்பீரமாய்த் தூங்கிக் கொண்டிருந்தார் அரங்கசாமி ஸ்போர்ட்ஸ் மாஸ்டர். பார்த்துவிட்ட ஆறுமுகம் அதை தன் செல் போனில் போட்டோ எடுத்துக் கொண்டார். ‘ ஸ்டாப் மீட்டிங்கில்’ வைத்துக் கிளிக்க எண்ணம். இது பள்ளிக் கூடமா.?. அரங்கன் துயில் கொள்ளும் சீரங்கமா?!
முதல்தடவை எச்சரிக்கை செய்துவிட்டு மறுபடியும் நடந்தால் கண்டிப்போம்னு நினைத்துக் கொண்டார். .அவருடைய துரதிஷ்டம் அவரே ஒருநாள் தூங்க, அதை அரங்கசாமி தன் செல்போனில் படம்பிடித்துக் கொண்டார். எத்தனுக்கு எத்தன் இருக்கத்தானே செய்வான்?!
‘நீங்க தூங்கினது எங்கிட்ட படமா இருக்கு தனியாய்க் கூப்பிட்டு மிரட்டினார் ஆறுமுகம் அரங்கசாமியை.
பதிலுக்கு அவரும் போட்டோ காட்டிச் சொன்னார், ‘நீங்க தூங்கற படமும் எங்கிட்டே இருக்கு.’
‘நான் வேலை வாங்குகிற ஹெசெம்… நான் தூங்கலாம்னார்.’ மிரட்டலாக.
பதிலுக்கு இவர் சொன்னார்.
‘வேலை வாங்குகிறவனே தூங்குகையில் வேலை செய்யறவன் ஏன் அசதியில் தூங்கக் கூடாது!?! அதூம் லெசர் டைமில?! ‘ என்று பதில் கேள்வி கேட்டார் அரங்கசாமி.
பிரம்மன் தலையில் குட்டிய ஆறுமுகம் அரங்கசாமியால் குட்டப்பட்டார்.
ரெண்டையும் கேள்விப்பட்ட செகரட்டரி ரெண்டு பேருக்குமே மெமோ கொடுத்துவிட்டு
‘கடமையில் தூங்கியவன் புகழிழந்தான்!’ என்று பாடம்புகட்டிவிட்டு இதுவரை இந்த பள்ளிக்கூடம் மாணவர்களுக்குத்தான் பாடம் புகட்டியது இப்போ ஆசிரியர்களுக்கே பாடம் புகட்டிவிட்டது என்று சொல்லிச் சிரித்தார்.
அனுபவம் அங்கதமாய் வெளிப்பட்டது!.