பரிவட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2025
பார்வையிட்டோர்: 269 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் கைகள் உரம் மிகுந்த கைகள், அதுவும் முழங் கையிலிருந்து விரல்நுனி வரை நல்ல வலி வு தறியில் உட்கார்ந்து நாடாவை ஒட்டி ஒட்டி நரம்புகள் கெட்டிப் பட்டுப்போன கைகள். ஒரோரு சமயம் வெகு வேகமாய் நெய்யும்பொழுது புஜங்களில் நரம்பு முடிச்சு பந்துபோல் எழுந்து அமுங்குவதும், கண்ணவிந்து திக்குத் தெரியாமல் தவிக்கும் எலிபோல், மூலைக்கு மூலை,நாடா முன்னும் பின்னும் ஓடுவதும் வேடிக்கையாயிருக்கும்! 

ஒரு நாளைக்கு ஒரு பீஸ் (14 முழங்கள்). 

“அந்தப் பையனுக்கென்ன குறைச்சல்? அவன் தறியிலிருந்து தினம் ஒரு பீஸ் எகிறுது! புளைக்கிற பையன்! சும்மாவா மளிகை வீட்டுப் பெண்ணைக் கட்டினாக!-” 

அவனுக்குக் கலியாணமான புதிதில் ஊரெல்லாம் இதுதான் பேச்சு. ஊருக்கே ஒரு மளிகை. கொஞ்சம் சொத் துள்ள டத்திலிருந்து பெண் வந்தால் பேச்சில்லாமல் இருக்குமா? 

பெரிய இடத்துப் பெண்ணென்று வீட்டு வேலையில் அவள் ஒன்றும் சோடையாயில்லை. அவன் தாய் தாழ்வாரத் தில் உட்கார்ந்து நூலை இழைத்துக்கொண்டே, பானையை யும் சட்டியையும் எடுத்துச் சமையலறையில் நடமாடிக் கொண்டிருக்கும் மருமகளுக்கு சமையலின் பக்குவத்தைப் பற்றி அரற்றிக்கொண்டேயிருப்பாள். “உப்பு போட்டியா? புளியைப் போட்டியா? நல்லா கொதிக்க வை…” 

சமையல் என்னவோ உருப்படியாய் இரவு ஒருவேளை தான் அதுவும் கார்த்திகை மார்கழியில் பகலில் சமைக்கக் கூட நேரமிருக்காது. வேலை அவ்வளவு மும்முரம், அடுத் தாற்போல் பொங்கல் வருகிறதல்லவா? 

“பையனுக்கு வென்னீர் விளாவினையா?” 

இரவில் கிணற்றடியில், கொதிக்கும் வென்னீரில் உடலின் வலி தீரக் குளித்துவிட்டு, நடுமுற்றத்தில் நிலவின் வெளிச்சத்தில் வெண்கலக் கிண்ணத்துக்கெதிரில் தாயும் மகனும் உட்கார்ந்து மருமகள், சோற்றை ஆவி பறக்க வடித்து, எள்ளுத் துவையலும் ரஸமும் பரிமாறுகையில், ஆஹா! “வெத்தல் வறுக்கச் சொன்னேனே, வறுத்தியா? மறந்துட்டியா? வறுத்திருக்கையா? பின்னே ஏன் சும்மா வெச்சிருக்கே கொண்டுவந்து வை. கொழந்தே நல்லா யிருக்கா?’ 

பின்னே எப்படியிருக்குமாம்? 

காண்பதுபோல் 

அறையில் பாவு நூல் அடியில் படுத்துக்கொண்டு அரைத் தூக்கத்தில் கண்ணயருகையில், கனவு வெளிச்சத்தங்கள் காதில் விழும். 

“மாட்டுக்குத் தவிடு வெச்சியா? கண்ணுக்குட்டியைத் தனியாக் கட்டினையா? நேத்தி ராத்திரி நீ கட்டின லட்சணம் ன்னிக் காலையிலே கறக்கப்போனால் தாயும் கண்ணும் துள்ளி விளையாடுது, காலையிலே நம்ப பாவு நூல் ஓடுது போல இருக்குதே, கஞ்சி காய்ச்சினையா? சரி நேரமாச்சு, போய்ப் படு. பாலை எடுத்துக்கோ – அம்மாடி…” 

கிழவி தன் உடலை விசுப்பலகையில் நீட்டுகையில் யலகை நொடிக்கும். 

அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் அறைக் கதவு மெதுவாய்த் திறந்து மூடும். ‘கீறீச்’சீடும். 


அரிதான பளுவுகளைத் தூக்கியும், உடலைக் “கசிர் வாங்கும் காரியங்களை அனாயாசமாய்ச் செய்யும் அவன் கைகள், அவள் உடலின் மிருதுவைத் தொடக்கூட அஞ்சும். பகலில், வீட்டுக்கும் தொழிலிலும் மன்னனவன் இரவில், இவ்வோலைப் பாயில், மஞ்சளின் மணம் கமழும் அவள் அருகாமையில் தன்னையிழந்து போவது அவனுக்கே ஆச்சரியமாயிருக்கும். அவன் அணைப்பின் வேகத்தில், அவள் கூந்தல் சரிந்து அவன் தோள்மேல் விழும். பலகணி வழி நிலவொளியில், இடையில் நெகிழ்ந்த ஆடையுடன் பற்கள் தெரிய, மெளனச் சிரிப்பு அவள் சிரிக்கையில் அவன் மண்டை கிறுகிறுக்கும். அவன் கைகள் நிறைந்த அவள் ஆலிங்கனத்தில் குளித்துவிட்டு, அவளை அணைத்த கை யுடன், மல்லாந்து படுத்து, அவர்களிருவர் மேலும் பரவி யிருக்கும் பாவுநூலைச் சிந்திக்கையில், அது ஒரு குளிர்தரு. நிழல்போல் அவனுக்குப் படும். அவர்கள் ஜீவனமே அதன் குடை கீழ்தான்.விழித்தெழுவதும் அதன் கீழே, உழைப் பதும், உண்டு உடுப்பதும் அதனாலே, படுப்பதும், பரம்பரை வளர்வதும் அதன்கீழே. அவனேதான் அவன் தொழில். அவன் தொழிலேதான் அவன். 

அவர்களிருவரும் அதிகமாய்ப் பேசின ஞாபகம் அவனுக் கில்லை. அவர்கள் தொழிலிலேயே பேச்சுக்கு அதிக இடமில்லை. பேச்சில் கவனம் போனால், எந்த சமயம் எந்த இழை எப்படி அறுமோ? மத்தியானம், மாமியாரும் மருமகளும் எதிரும் புதிருமாய் உட்கார்ந்துகொண்டு நூல் நூற்பார்கள். மடியில் வைத்திருக்கும் கொட்டாங்கச்சியில் பரிவட்டம் கூத்தாடும். பாவில் குறுக்கே பாயும் கலர் நூலும் வெள்ளை நூலும், நாடாவுக்குத் திட்டமாய்க் கட்டைகளில் ஏற்றியாக வேண்டும். இடையிடையில் வீட்டு அலுவல்கள் காத்திருக்கும். சாப்பாட்டுக்கு நெல் புழுக்கணும்; பண்ணையாளுக்குக் கூழ் வார்க்கணும். சாயங்காலம் பரிவட்டத்தைத் தூக்கிக்கொண்டு, பாவு நூல் ஓடும் ஆலைக்குப் போகணும். 

இழைக்கு இழை நிமிட்டி நெய்தாகணும், இழைக்கு இழை. 

இதற்குள் இரவு மறுபடியும் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடும். 

ஆசை வெறியில் ஒருவர் அணைப்பில் ஒருவர் திணறும் மூச்சுத்தான் அவர்கள் பேச்சு. 

கிழவி விசுப்பலகையில் படுத்தவண்ணம் முனகுவாள். 

“அடுப்பைப் பார்த்து மூட்டு. உள்ளே பூனைக்குட்டி தூங்கிக்கிட்டிருக்கப் போவுது என்னிக்கோ இந்த வீட்டுக்கு வந்த பெண்ணு ஒண்ணு பார்க்காமே மூட்டிப் பிட்டு, ஒரு குட்டியைப் பொசுக்கித்தான் இப்போ மூணு தலைமுறையா வீட்டுக்கு ஒரே புள்ளையா நிக்கிது.எனக்குப் பாடை கட்டி சங்கூதினப்பறந்தான் பேரப்பிள்ளை வீட்டிலே நடமாடுவான் போலத் தோணுது. மருமவள் வீட்டுக்கு வந்து ஆறுமாதமாச்சு. இன்னும் ஒண்ணுந் தெரியல்லே…” 

கிழவியின் நெஞ்சுக் குறையைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அதைத் தீர்ப்பதும் அவர்கள் வசமில்லை. அதெல்லாம் முருகன் அருள். இப்பொழுதைக்கு ஒருவரில் ஒருவர் முழுகியிருந்தனர். அவ்வளவுதான். நெய்ய நெய்ய இடங் கொடுக்கும் பாவுநூல் போல்,ஒருவர் இன்பத்தை ஒருவர் நுகர நுகர. அவர்கள் ஆசை இடங்கொடுத்துக் கொண்டே போயிற்று. உடலில் இளமையிருக்கும் வரை அவை தளும்பிக் கொண்டிருக்குமே யொழிய துடிப்பற்று நின்று கொண்டிருக்குமா? 

நாளடைவில், அவனையுமறியாமல் அவளிடம் அவன் விழைந்துபோவதாகத் தோன்றிற்று. அவன் வைத்திருக்கும் ஆசையின் உணர்வே அவளுக்கு ஒரு தனி சோபையை அளித்தது. கண்ணெதிரில் புது மோஸ்தரில் கட்டான்களுடன் சிக்கலான வர்ணப் பாய்ச்சல்களுடன் உருவாகிக் கொண்டிருக்கும் துணிபோலும், அவளிடம் ஒரு தனி அழகு உருவாகிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். மேனியில் ஒரு தளதளப்பு. பார்வையில் ஒரு வெற்றி. பணியில் ஒரு சிறு தாமதம். பகலிலோ. இரவிலோ பரிமாறுகையிலோ, தறியி லிருக்கையில், தாகத்திற்கு, சாதத் தண்ணீர் கொண்டுவந்து கவனியாமல் தருகையிலோ, ஓரக்கண்ணால் அவளைக் அவனால் இருக்க முடியவில்லை. 

பகலெல்லாம் ஏன் இரவாயில்லை? 

அவள் எதிரில் அவள் உலவாத சமயத்தில் அவள் உரு அவன் கண்முன் எழும். நெற்றியில் வியர்வை கட்டும். இடையில் பல்வரிசைப் நெகிழ்ந்த ஆடையும், பளீர் அடிக்கும் மௌனச் சிரிப்பும் அவிழ்ந்து சரிந்த கூந்தலும்… 

மனமயக்கத்திலிருந்து அவன் தன்னை உதறிக்கொண்டு வேலையில் முனைகையில், நாடா முன்னும் பின்னும் பறக்கும். 

“பையா இறங்குடா – விளக்கு வெச்சுப் போச்சு- பிள்ளையார் கோவிலுக்கு விளக்குப் போட்டுட்டுவரணுமே!” 

“இரு அம்மா, இன்னும் ஒரு முழந்தான்.” 

அம்மாதம் மொத்தம் முப்பத்தைந்து பீஸ் அறுத்தான். தறியில் புதுப் பாவு பூட்டணும். 

தறியிலிருந்து இறங்குகையிலேயே விளக்கு வைத்தாகி விட்டது. வேலையோடு வேலையாய் இன்னிக்கே பூட்டி விட்டால், நாளைக்குப் பூட்டும் நேரத்துக்கு ஒண்ணு, ரெண்டு முழம் நெய்யலாம்.ஒரு முழம் என்றால் ஒரு முழம். ஒருநிமிஷம்தான் சொல்லு. அதுக்குள்ளே நாடா இரண்டு தடவை குறுக்கே போயிட்டு வருமே! 


அவர்கள் தொழிலில் அடுத்தடுத்துச் செய்யவேண்டிய வற்றைச் சொல்லாமலே அறிந்து செய்வது, அத்தொழிலின் இயல்புடனேயே இழைந்தது. இழையிலிருந்து துணியாகும் ஒவ்வொரு கட்டத்துக்கும் சொல்லிச் செய்வதென்றால் கட்டாது.தாயும் பிள்ளையுமாயோ, புருஷனும் மனைவி யாகவோ, இருவரும் சேர்ந்து ஓருருவாக்கும் துணிதான் அது. நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை. 

பையன் புதுப்பாவு பூட்டப் போகிறான் என்று கிழவி சொல்லாமலே அறிந்தாள். ஒத்தாசைக்கு மருமகளைச் சமையலறையிலிருந்து அனுப்பினாள். அடுப்பில் குழம்பு காய்ந்துகொண்டிருந்தது. 

கையில் தகரவிளக்கைப் பிடித்துக்கொண்டு, உயரத்தில் பாவு நூலை அவள் புருஷன் மாட்டுவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். வெளிச்சம் அவள் முகத்தையும் மார்பை மூடிய சிவப்புப் புடவையை மாத்திரம் ஏற்றியது. மைதீட்டிய விழிகள், மிருதுவான கன்னங்களுக்கு மேல் ஜ்வலித்தன. மோவாயின் குண்டு, விக்கிரஹத்துக்குச் செதுக் கினாற்போலிருந்தது. குழந்தைச் சிரிப்பில் இரண்டு பற்கள் மாத்திரம் வெளித் தெரிந்தன். ஒருகணம், கண்ணுக்குக் கண்வாள்போல் ஜ்வலித்தன. அதன் காரணந்தானோ என்னவோ கையில் ஏந்திய விளக்கு நூல் பக்கமாய்க் கொஞ்சம் சாய்ந்தது. சரசரவென்று நூல் பற்றிக் கொண்டது. இழைக்கு இழை அதிவேகமாய்ப் பொசுங்கியது இழைக்கு இழை உயிரைவிட்டுக்கொண்டு நிமிட்டிய இழை. தோளிலிருந்து பாவு நூல் தடாலென்று கீழே விழுந்தது. அவன் மனத்தில் எழுந்த குமுறலில் என்ன செய்தான் என்று அவனுக்கே புரியவில்லை. தன்னையே கொளுத்தினது போலிருந்தது.பளீர்! அவள் கன்னத்தில் அவன் அறைந்ததாக, அறைந்த பின்னர்தான் அறிந்தான். விளக்கு அணைந்து கீழே உருண்டது! 

அவன் அடித்த அடியில் அவள் திகைத்துவிட்டாள். வலியைவிடத் திகைப்பு. திகைப்பைவிடக் கோபம். அவள் ஒன்றுமே பேசவில்லை. அறைந்த கன்னத்தைக் கெட்டி யாய்ப் பிடித்துக்கொண்டு, அவ்விடம் விட்டு அகன்றாள். வாசற்கதவு தடாலென்று மூடியது. 

நடந்ததெல்லாம் நொடிப்பொழுதில்தான். சொல்லத் தான் இன்னேரம். 

சந்தடி கேட்டு, கிழவி சமையலறையிலிருந்து ஓடி வந்தாள். என்னடா பையா ஒரே இருட்டாயிருக்குது?” இருளிலிருந்து அவன் குரல் சீறிக்கொண்டு வந்தது. “உன் மருமவளைக் கேளு-” 

“எங்கே அவள்?” 

“வாசல் பக்கமாப் போனா – பாவை எரிச்சுட்டு-” 

“என்ன?” 

கிழவி உடலில் பாய்ந்த வீரத்திலும், கோபத்துடன் தெருவைப் பார்க்க நடந்த வேகத்திலும், அவள் வயதில் பத்தேனும் குறைந்திருக்கும். ஆனால் அவள் போன சுருக் கைவிட திரும்ப ஓடிவந்த சுருக்குத்தான் அதிகமாயிருந்தது. 

“வாசல்லே காணமேடா பையா!” 

கோபத்தில் அவன் உடல் வியர்த்தது. 

“வெள்ளிக்கிழமையும் அதுவுமா பாவு நூலை எரிச்சுட்டு வீட்டை விட்டும் வெளியே போயிட்டாளா?” 

துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெளி யில் கிளம்பினான். 

“என்னான்னு நெனிச்சிட்டிருக்கா, இதென்ன மான ஈனம் ஒன்னும் கிடையாதா? ராத்திரி வேளையிலே போட்டதை அப்படியே போட்டபடி போட்டுட்டு நடை யைக் கட்டினாளே! இந்த அக்கிரமம் கண்டதுண்டா, கேட்ட துண்டா!” என்று கிழவி அரற்றிக் கொண்டேயிருந்தாள். 

வாசற் கதவைத் திறந்துகொண்டு அவள் பிள்ளை வரும் சப்தம் கேட்டது. தனியாய்த்தான் வந்தான். விசுப்பலகையில் உட்காருகையிலேயே அவன் மனச்சோர்வு வெளிப்பட்டது. கோபத்தில் முகத்தில் கறு ரத்தம் குழம்பியிருந்தது.  

“எங்கேடா போனே?” 

“அவங்க வீட்டுக்கு-” 

“ஏண்டா போனே, போன சிறுக்கித் தானா வராள். பெரிய இடத்துப் பெண்ணாயிருந்தால் என்ன பெண்டாட்டி யென்பதை மறந்துட்டாளா?”” 

பெண்ணின் சமத்து அவங்களுக்குத் தெரியவேண்டாமா, என்று சொல்லத்தான் போனேன் 

“சொன்னியே என்னவாம்?” 

“அவங்க பெண்ணை விடமாட்டாங்களாம். அவங்க பெண் வீட்டு வேலை செய்யவேண்டிய அவசியமேயில்லை யாம். நம்ம மாதிரி நாலு தறி கூலிக்குப் போட்டு வேலை வாங்க தெம்பு இருக்குதாம் -” 

“என்ன, என்ன! பெண்ணின் சமத்துக்கு மேலேன்னா இருக்குது அவங்க சமத்து?” 

“என்னம்மா, அவங்களா பேசறாங்க, பணத்திமிர்ன்னா அப்படிப் பேச வைக்குது பெண்ணைக் கொடுத்துட்டா, மருமவனை விலைக்கு வாங்கிட்டதா நெனைச்சுருக்காங்க போல இருக்குது. மேலே வேலையை ஓட்டு-” 

வேலையை ஓட்டு என்று சொல்லிவிடலாம். ஆனால்… 


அவன் தாய் சமயலறையில் குழம்பைக் கிளறிக் கொண்டே காத்துக்கொண்டிருந்தாள். அவள் வயிற்றின் கொதிப்பை அவன் நன்றாய் அறிய முடியும். ஆயினும் அதைவிட அவன் தனிமைதான் அவனை உறுத்திற்று. சோறு, நாக்கு நுனியில் விஷமாய் மாறிற்று. 

இன்று அவன் படுக்கையில்,பாவு நூல் குடைபோல் அவன்மேல் படர்ந்து இல்லை. ஒரு பாதி எரிந்து, நூல்கள் அறுந்துபோய் ஒரு மூலையில் கிடந்தது. 

தூக்கமற்று, முன்னும் பின்னுமாய்ப் புரளுகையில், அவன் கைகள் உயிரற்று வெறும் பாயில் விழுந்தன. 

இந்தப் பாழும் பொழுதுதான் விடியுமா? 

அவன் தாய் முக்கி முனகிக்கொண்டு எழுந்து வாசலில் சாணித் தெளிக்கிறாள்; வயது காலத்தில் 

ஆயினும் அவர்கள் தொழிலில் வயதுக்காரர் வய தானவர் எல்லோருக்கும் வேலை உண்டு. சும்மாயிருக்க முடியாது இளமையிலிருந்து மூப்புவரை அவர்கள் வாழ்க் கையே, இழைக்கு இழை பின்னி நெய்த துணிபோலவே தான். மூச்சுக்கு மூச்சு இழை. இழைக்கு இழை மூச்சு. 

ஆயினும், இப்பொழுது அவன் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து ஏதோ கைக்கடங்காத நாடாபோல் இளமையின் விகாரங்கள் அவன் மனதில் கட்டுக்கடங்காத கட்டான்களை விழைத்தன. கட்டை விரலும் சுட்டு விரலும் ழையை நிமிட்டிக் கொண்டிருக்கையிலேயே திடீரென்று அவைகளின் செயல் நின்றுவிடும். மனக்கண்ணெதிரில் அவள் உரு எழும்.உட்செவியில், அவன் அணைப்பில், ஆசை வெறி யில் அவள் திணறும் மூச்சின் ஓசை. உள் வாசனையில் மனத்தை மயக்கும் அவன் உடல் நாற்றம். 

“அடே கொழந்தே என்னடா அப்படியே கல்லா சமைஞ் சுட்டே? துணியை எடுத்துக்கிட்டு போக வேணாமாடா…” 

இப்பொழுது அவன் மாமனார் கடையில் நெய்த துணி ணி யைப் போடுவதற்கில்லை. வாரா வாரம் மூணு மைல் நடந்து பக்கத்து ஊருக்குப்போய் விற்றுவிட்டு நூலை வாங்கி வரணும். போகிற வழியிலும் வருகிற வழியிலும் அவனைக் கண்ணாலும் கையாலும் சுட்டிக்காட்டி, குசுகுசுவென்று பேசுபவர் எத்தனைபேர்! வாயைத் திறந்து அவனை ஏசுபவர் எவருமில்லை. ஊருக்கே அவன் வேண்டியவன் தவிர, அவனை ஏச என்ன இருக்கிறது? 

அவனிடம் கொண்டு கொடுத்து சம்பந்தம் பண்ணின வரை தூற்றத் தைரியமுள்ளவருமில்லை. அநேகமாய் எல்லோருமே கூலிக்கு நெய்பவர்கள்தான். ஊரில் முக்கால் வாசித் தறிகள் அவன் மாமனாருக்குச் சொந்தம். ஏறத் தாழப் பேசினால், அல்லது பேசினதாய்க் காதில் விழுந்தால், வாயில் மண்தான். இந்தப் பணம் பண்ணும் வேலைதான் என்ன? பணம் ஒரு தினுசில் மனிதனை முறியடிக்கிறது. பாசம் ஒரு தினுசினால் முறியடிக்கிறது. 

இப்பவும் அவளை மறக்க, வேலையில் மும்முரமாய் விழுந்து நெய்துகொண்டே போகையில் அவள் செய்த செய்கையும், வீட்டை விட்டுப்போன விதத்தையும் நினைக் கையில், நெஞ்சில் மூண்டெழும் சினம், அவன் உடலிலும் மனத்திலும் ஒரு பரவசத்தை எழுப்பி வெகு நாழிகை அவனை வேலையில் நிறுத்தி வைக்கும். 

கோபம், குரோதம் இவையெல்லாம் கெட்ட உணர்ச்சி களாயிருக்கலாம். ஆயினும் அவை உடலுக்கும் மனதிற்கும் ஒரு தினுசில் தீவிரத்தைக் கொடுக்கின்றன. அப்படியா செய்தி? எத்தனை நாள் இப்படியே இருக்கப் போகிறாள் பார்த்துடுவோம். ஒரு பெண் பிள்ளைக்கு இவ்வளவு திமிரா, அவள் செய்த காரியத்துக்கு?’ 

“ஆனால் அப்படி என்ன செஞ்சுப்பிட்டா? ஒரு சிறு கேள்வி, அடுத்தாற்போலேயே, காலடியில் மண்ணைப் பறிப்பதுபோல் எழுந்து, கோபத்தையும் ரோஸத்தையும் கிளப்பிக்கொண்டு திடம் பண்ணிக்கொள்ளும் சித்தத்தைக் கலைத்தது. அன்பும், பிரிவாற்றாமையும் பழைய நினைவு களும் சஹிக்க முடியாத வேதனைகள். 

இரவு எப்பொழுது வரும்? 

வந்தால், பொழுது எப்பொழுது விடியும்? 

இப்படித்தான், நாளுக்கு நாள், இரவுக்கு இரவு, வாரம் மாதம்… 


அவன் அத்தெருப் பக்கம்கூடப் போவதில்லை, ஆயினும் அவ்வீட்டார் அவன் தாயையும், அவனையும் தூற்றும் வார்த்தைகள் மாத்திரம் காதில் படாமல் போகிறதா? அத்துடன் இல்லை. அவ்வார்த்தைகள் முதலில் கிளம்பினது எப்படியோ, வாய்க்கு வாய் மாறி அவன் செவிக்கெட்டுமுன், மூக்குமுழியெல்லாம் அவைகளுக்கு, ஏற்பட்டு, ராக்ஷஸப் பிண்டங்களாய்த்தான் வருகின்றன. 

“வீட்டுக்கு வந்த பெண்ணை, அந்தக் கிழவி அப்படிப் படுத்தினாளாம். இப்படிப் படுத்தினாளாம்; பெண் தூக்குப் போட்டுக்கக்கூட இருந்ததாம். அந்தப் பையன் அப்படி சம்பாரிக்கிறான்னு பேரு. ஒரு வெள்ளிக்கிழமை வந்தால், அவன் பெண்சாதிக்குன்னு ஒரு காலணா பூ வாங்கி வந் தான்னு உண்டா? அவன் கையாலே ஒரு அஞ்சு ரூபாய்க்குப் புடவை வாங்கிக் கொடுத்தான்னு உண்டா? காசைக் கொண்டுவந்து கிழவிகிட்டக் கொடுத்துட்டா ஆய்ப் போச்சா?” 

முதன் முதலில், அவன் தாயின் காதில்தான், இவ் வதந்திகள் விழும். குளிக்கப் போனவிடத்திலும், கடைக்குப் போன விடத்திலும், பேசப் போனவிடத்திலும், பேசவந்த வரிடத்திலும் கேட்டுக்கொண்டு வந்து கிழவி வயிற்றிலும் வாயிலும் அவன் எதிரில் அடித்துக்கொள்வாள். 

“பாருடா உனக்கும் எனக்கும். உன் பெண்சாதி வாங்கி வைக்கிற பேரு. ஏண்டா என்னைப் பார்த்தால் உனக்கு அப்படித் தோணுதாடா? அடே, என் வயித்திலே நீ ஒண்ணு தாண்டா பொறந்தே. எனக்கு வேறே பொண்ணுகூட இல்லேடா, மருமவளா நினைக்கல்லேடா, மகளாய்த் தாண்டா நெனைச்சேன்.ஒங்க இரண்டு பேருக்குமில்லாத சுகம் எனக்கென்னடா? நீங்க ரெண்டுபேரும் சந்தோஷமா யிருக்கறதைப் பாக்கறதுதானேடா எனக்கு சந்தோஷம். என் வயசுக் காலத்திலே-நான் என்னடா என்னோடே தூக்கிக்கொண்டு போவப்போறேன்!… 

வீண் அபவாதம் தாங்காமல் அவள் மனம் முறிந்து அழு கையில், அவன் தோள்களிடையில் தலை குனியும், அந்த சமயத்தில் அவன் மூளையைக் குழப்பும் உணர்ச்சிகள் ஒன்றா, இரண்டா? 

கடைசீலே எல்லாம், சாக்கடையிலே சக்கரம் சாஞ்ச தேர் மாதிரி ஒரு காலணாப்பூவிலேதான் வந்து நின்னு போச்சு. தன்னையே அவள்கிட்டக் கொடுத்துவிட்டு அவன் தவிக்கிறது பெரிசில்லே. ஒரு காலணாப் பூதான், அவனை விட, எல்லாத்தையும்விடப் பெரிசு. இதுவரையில் பொட்டலமாயிருந்த குடும்ப கெளரவம், எப்படி சீர்ப்படுகிறது- ஒரு காரணமுமில்லாமே! 

நாளடைவில் இன்னொரு சமாசாரம், உடல்மேல் முலு முலுவென்று ஊறும் எரும்புபோல், அவனுக் கெட்டிற்று: வீட்டைவிட்டு வெளியேறினதிலிருந்து அவள் ஸ்னானம் பண்ணவில்லையென்று. அவன் உடலை ஒரு பெரும் வேகம் ஊடுருவியது. அவளைப் போய்ப் பார்க்கலாமா? 

இரவில், படுக்கையில், திடீர் திடீரென்று, தீப்பந்தத்தில் ங்கிலியம் போட்டது போன்று, அவ்வெண்ணம் அவனை வாட்டுகையில், வேதனையில் கைகள் முஷ்டித்தன. உடல் அதிர்ந்தது. ஆசை பெருக்கெடுக்கையில் நியாயம், அநியாயம், சரி, தப்பு ரெண்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கிற புத்திகூட அடித்துக்கொண்டு போய்விடுகிறது. 

பிறகு திடீரென்று ஓரிரவு ஒரு எண்ணம் அவனுக்கு உதித்தது. 

அவன் தாய் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு. நூலை இழைத்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் தள்ளவில்லை. ஆயினும் நூலை இழைத்தாக வேண்டும். மாவை ஆலையில் கொடுத்து ஓட்டியாக வேண்டும். துணி நெய்தாக வேண்டும். தொழில் நடந்தாக வேண்டும். பரம்பரைத் தொழில்! 

அசதியுடன், விசுப்பலகையில் உட்கார்ந்தான். 

“அம்மா! நாம் இந்த ஊரைவிட்டுப் போவோம். ங்கே இருக்கப் பிடிக்கல்லே-” 

கிழவி பொக்கை வாயைத் திறந்து புகைச்சிரிப்புச் சிரித்தாள். 

“நல்லாயிருக்குதே உன் பேச்சு! என்னமோ மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தணும் என்கிறையா? இதோ பார்,நானும் மருமவளாய் இருந்து மாமியாராய் வந்திருக்கிறேன். எங்க நாளிலேயும் எங்க புருஷன் எங்களைக் கோபிக்கறதுண்டு, அடிக்கறதுண்டு. ஆனால் அதுக்காக, வீட்டுக்கு வந்த பொண்ணுங்களெல்லாம் வீட்டை விட்டுப் போனதில்லே. கொண்டவன் கொலை பண்ணால்கூடத் படி தாண்டினதில்லே. அந்தக் கால மெல்லாம், அடிச்சாலும் குத்தினாலும் புருஷன்தான் பெரிசு. என்னதான் காலம் மாறிப்போச்சுன்னாலும் இந்த மாதிரிப் பொண்ணுங்களுக்கெல்லாம் பயந்து ஊரை விட்டு ஓடிப்போறதுன்னா என்னமோ அப்பா, எனக்கு மனம் இடம் கொடுக்கல்லே நீ வேணுமானால் போ-இந்த புது காலத்துப் புள்ளையா. நான் பழங்காலத்துப் பொம்ம னாட்டியாவே இருந்துடறேன். எனக்கு இன்னும் ரொம்ப நாளில்லே. வயசாச்சு. நான் புகுந்த வீட்டிலே செத்துப் பூடறேன். எனக்கு அதுதான் கௌரவம். இந்த வீட்டிலே, உன் தகப்பன், அவருக்கு அப்பா, அவங்க அப்பாவுக்கு அப்பா எல்லோரும் வாழ்ந்து நல்லா ஆய்வந்த வீடு. நேத்திக்கு வந்த ஒரு பெண், இத்தனை நாளாய் இங்கே நிலைச்ச ஒரு குடும்பத்தைக் கலைச்சுடறதுன்னு இருந்ததுன்னா, அந்த அக்கிரமத்துக்கு அடங்கிப்போக என்னால் முடியாது. பெண்ணுக்கும் பெண்ணை பெத்தவங்களுக்கும், முன் புத்தி பின் புத்தி, ஈனமானம் இல்லாமல் போனால்,நமக்குக் கூடவா இல்லாமே போச்சு? ஊரைவிட்டு ஓடிப்போகும்படி என்னடா பண்ணிட்டோம்?” 

கிழவி நூலை இழைத்துக்கொண்டே பேசிக்கொண்டே போனாள். இழைக்க இழைக்க ராட்டினம் ‘கிர்’ரென்று சுழன்றது, அவர்கள் விதியின் சக்கரமே போல். 

“கோழி கூரை மேலே பறந்துபோய் குந்திகிட்டு ‘கொக்கரக்கோ’ என்று கூவிட்டா, உடனே வீடு அதுக்குச் சொந்தமாயிடுமா? அது அது இருக்கவேண்டிய இடத்திலே இருந்தால்தான் அது அதுக்கு லட்சணம் அவள் இந்த ஊரையே, அரசாளட்டுமே. அதனாலே போன மானத்தைக் கொடுத்துடுமா பணம், இல்லாட்டா புருஷனைத்தான் கொடுக்குமா? வாழாவெட்டி வாழாவெட்டிதானே, எத்தனைபேர் தாங்கினாலும்! 

“நீயே பார், அவள் வயத்திலே இப்பொழுது வளருதே, நம்ம வீட்டுக் கொழந்தே, அது பிறக்க வேண்டிய தினுசு இப்படித்தானா? இந்த வீட்டுக்கே மூணு தலைமுறையா ஒரே புள்ளை என் செல்லப் பேரனை என் மடியிலே வெச்சுக் கொஞ்சணும்னு எனக்கு இருக்காதா? மாதம் ஏழாச்சு. இன்னமும் நம்ம சொத்து நம்மகிட்ட வந்து சேர்க் கல்லே பாரு! சீமந்தம் பண்ணவேண்டாமா? ஊமைக் கொளந்தே பிறந்தால் என்ன செய்வாங்களோ தெரியல்லே! து மாதிரி அக்கிரமமாயிருந்துட்டா, அவங்க செய்யற காரியம் ஜரிச்சுப்போயிடுமா?” 

மனிதன் தானே தனக்கு இழைத்துக்கொள்ளும் அவஸ் தையை, என்னென்று சொல்வது? 


ஒரு நாளிரவு தெருக்கோடியில் வசிக்கும் அம்பட்டன் தாயாருக்கு அவசரமாய் ஆள் வந்தது. உடலின் ஊழச் சதை குலுங்க அவள் ‘லொங்கு’ லொங்கென்று ஓடினாள். 

மளிகை வீட்டுப் பெண்ணுக்கு இடுப்பு வலி எடுக்குதாம் என்று ஊரெல்லாம் சமாசாரம் பற்றிக்கொண்டது. 

ஒரே சமயம் இரண்டு பக்கமும் பேசும் சாமர்த்தியம், இந்த ஊர் வாய் என்னும் ஒரு வாய்க்குத்தான் உண்டு! 

“என்ன மானங்கெட்ட பிழைப்புப் பார்த்தியா, இந்த மளிகை வீட்டுக்காரருக்கு!” 

“இந்தப் பையனும் இப்படி வீம்பாயிருக்கானே; சாவற வரைக்குமிருக்க முடியுமா?” 

அன்று இரவெல்லாம் அவன் தூங்கவேயில்லை. இடுப்பு வலியில் அவள் துவளுவதைப்பற்றி நினைக்கையில், அவன் இதயம் மாரைப் பிய்த்துக்கொண்டு வந்துவிடும் போலிருந்தது. இப்பவாவது தன்னைப்பத்தி நினைக்கிறாளோ? 

அவன் அறையின் வாசற் பக்கத்து ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றிக்கொண்டு கற்சிலைபோல் நின்றான். அதன் வழி பார்த்தால் பக்கத்துத் தெருவின் திருப்பம் தெரிந்தது. வாய்க்காலுக்குப் போகும் வழி. 

விடியுமா? 

பலபலவென்று புலரும் வேளையில், ஒரு சிறு கூட்டம் அத்திருப்பத்தில் மெதுவாய் ஊர்ந்து செல்வதைக் கண்டான். எல்லோரும் மளிகை வீட்டுக்கார மனிதர்கள். அவர்களில் ஒருவன் – அவன் மாமனார், மஞ்சள் துணி சுற்றிய ஒரு சிறு மூட்டையை ஏந்திச் சென்றார். முகம் தொங்கியிருந்தது. 

அவனுக்குப் பிடரி குறுகுறுத்தது. மாரைப் பக் கென்று அடைத்தது. 

அன்று அந்திவேளை, வாய்க்காலுக்கும் கழனிக் கட்டு களுக்கும் அப்பாலிருக்கும் சுடுகாட்டுக்குப் போய், அங்கு புதிதாய் எழுப்பியிருக்கும் மேட்டண்டை நின்றான்! திம ரென மனத்தில் ஒரு எண்ணம். பரபரவென்று மண்ணைப் பறித்து, உள்ளே கிடக்கும் பிண்டத்தை எடுத்து ஒரு தடவையேனும் மார்மேல் அணைத்துக்கொண்டால் என்ன? அதன் முகம்தான் எப்படியிருக்கும்? 

அவனை எச்சரிப்பது போன்று, எங்கேயோ ஒரு நரி ஊளையிட்டது. 

அச்சமுற்று அவ்விடம் விட்டு அகன்றான். 


ஆயினும், நாளுக்கு நாள் புரை ஓடும் புண்போல் ஒரு அசதி அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்ன ஆரம்பித்துவிட்டது. வேலையில் மனம் ஊன்றவில்லை. அதற்கு முதல் அறிகுறியாக, அவன் இழைக்கு இழை ஓட்டு கையில், இன்னம் எத்தனை இழை ஓட்ட இருக்கிறது. நெய் கையில் நாடா குறுக்கே எத்தனை தடவை ஓடுது,என்றெல் லாம் அர்த்தமற்று, அசதி மூட்டும் கேள்விகள் உதிக்க ஆரம்பித்துவிட்டன. ஓராயிரம், இரண்டாயிரம் பத்தா யிரம் தடவை – பத்தாயிரமா? ஐயோ இன்னமும் எவ்வளவு நெய்யணும் ஒரு பீஸ் அறுக்க? இன்னிக்கு அறுக்க முடியுமா? தோணல்லே – கொஞ்ச தூரம் நடந்து வருவோம்- 

மாலை வேளை. மணி நாலாய்விட்டபோதிலும், வெய்யலின் வெப்பம் கடுமை. வாய்க்கால் ஜலத்தில் காலைக் குளிர நினைத்துக்கொண்டு, வயற்புறம் சென்றான். கழனிக்கட்டுக்களில் நெற்கதிர்கள் ரகசியம் பேசுவதுபோல் சலசலத்தன. காற்றின் குளுமை, கண்களுக்கும் கொதிக்கும் மண்டைக்கும் இதமாய் இருந்தது ஏற்றக் கிணறில் குளிக்க லாம்போல் தோன்றிற்று 

ஆயினும் கிணற்றில் இறங்குவதற்காக எடுத்துவைத்த கால் அப்படியே நின்றது. அவன் கண்கள் அவன் கண்ட காக்ஷியில் உறைந்து போயின. கிணற்றுள், ஒரு படிக்கட்டில் எவளோ உட்கார்ந்து குளித்துக்கொண்டிருந்தாள்! இருபத் திரண்டு வயதிருக்கும். பட்டு நூல் போல் பளபளக்கும் கட்டான உடல். யாரோ பண்ணையாளின் மனைவி போலும். அந்த சமயத்தில் யாரும் அந்தப் பக்கம் வருவார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாள் சௌகரியமாகவே குளித்துக்கொண்டிருந்தாள்! அவன் நெற்றியில் வியர்வை முத்திட்டது. அதுவரை உள்ளே அடக்கி வைத்திருந்த உடலின் வேட்கை திடீரென்று வெளிப்படுகையில், அவன் உடலே கிடுகிடென்று ஆடிற்று. வெகு வேகமாய் வீட்டுக்கு ஓடிப்போய்க் கதவைத் தடாலென்று அறைந்து தாளிட் டான் மிருகம்போல் அவனுக்கு மூச்சு இறைத்தது. மிருகத்தின் வாய்ப்பட்ட இரைபோல் அவன் தவித்தான் மனப்புயல்…! 

அதன் அலைகள் ஓய ஓயஅவன் மனத்தைக் கவித்துக் கொண்டிருந்த பனிப்படலமும் கொஞ்சங் கொஞ்சமாய் விலகத் தலைப்பட்டது. 

இன்று மாதிரி இன்னொரு தடவை நேர்ந்ததெனில் அவன் மனத்தை மறுபடியும் வெற்றிகொள்வது கடினந்தான். அவன் வயதுக்கு – அதுவும் ஆண்ட – அவனுக்கும் உடல் வேட்கை இயற்கைதான். அதை அடக்கமுடியாத சமயத்தில் அதை முடக்குவதில் எவ்வளவோ விபரீதம், இயற்கைக்கு விரோதம், அவன் தொழிலுக்கே ஹானி. அப்பனிடமிருந்து பிள்ளைக்குப் பரம்பரையாய் வந்து தன்னிகரில்லா தனித் தாழிலான நெசவுத் தொழில். இந்தப் பரம்பரையைக் காப்பாத்த ஒரு பிள்ளை வேண்டும். 

பெண்டாட்டிமேல் ஆசை இருக்க வேண்டியதுதான். ஆனால் ஆசை அறிஞ்சவதான் பெண்டாட்டி. அன்பை அறியணும்னா அன்பு இருக்கணும். அன்பில்லாதவள் இடத்திலே அன்பை வெச்சுட்டு அவஸ்தைபட்டால், பட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான். அவளுடைய அசட்டுத் தனத்துக்கும் அழுத்தத்துக்கும் எல்லையில்லாமல் போனா லும் அவன் பொறுமைக்கு எல்லையுண்டு. இதே மாதிரி தன் இடத்தையும் மானத்தையும் மறந்த பொம்மனாட்டி. கிட்ட காட்டற பொறுமை பொறுமையில்லே. அசட்டுத் தனம்தான். இத்தனை நாள் அவள் விசாரத்தை அவன் பட்டுக்கொண்டிருந்தது போதும். இனிமேல் அவள் விசாரத்தை அவளே படட்டும். அவன் கஷ்டத்துக்கு விமோசனம் அவன்கிட்ட இருக்குதேயொழிய அவள் கிட்டே இல்லே. உலகத்தை வெறுத்துட்டுப் போற வயசில்லே அவன் வயது. உலகத்தை ஏன் வெறுக்கணும்? உலகத்தை ஜயிச் சுட்டுத்தான் அதை வெறுக்கணும். அதுக்கு முன்னாலேயே வெறுத்தால் அதுக்குத் தோற்றால்போலதான். 


அனுமான் தன் பலத்தை மறந்ததுபோல், தன்னைத் தான் மறந்து இத்தனை நாள் இருந்ததே அவனுக்கு இப்பொழுது ஆச்சரியமாயிருந்தது. சமையலறையில் வேலையாயிருக்கும் தன் தாயிடம் தீர்மானத்துடன் போனான். 

“அம்மா நாம் இனிமேல் நம்ம வேலையைக் கவனிக்கணும்” என்றான். ”எனக்கு வயசு ஆச்சு; வீட்டுக்கு ஒரு மருமவள் வந்தாகணும். நல்ல மருமகள்…” 

ஒரு பெரும் மூச்சு கிழவியின் தொண்டையிலிருந்து கிளம்பிற்று. எத்தனையோ நாளாய் வெளிப்பட வேண்டு மென்று காத்திருந்த மூச்சு. 

“நல்ல பெண்ணாகக் கட்டறேன், நம்மை நாட்டாமை பண்ணாமே. வீட்டுக்கடங்கின சரக்காய் எனக்குத் தெரியும். நம்ம பக்கத்து வீட்டுக்காரன் தங்கை பெண். நல்ல நூலிழைக்கிறாள். நல்லா சமைக்கிறாள். நல்லா குடும்பத் திலே உயண்டிருக்கா. தன்னை நல்லா காப்பாத்திப்பாள். புருஷனைக் காப்பாத்தினால் தன்னைக் காப்பாத்திக்கிட்டாப் போலத்தானே? ஒரு பொம்மனாட்டிக்குப் புருஷனைத்தவிர என்ன வேணும். ஆண் பிள்ளைங்களுக்குக் கூட பெண்சாதி அவசியமில்லே. ஆனால் பொம்மனாட் டிக்குப் புருஷன் வேணும். புருஷன் இருக்கிறவரைக்கும் தான் அவங்களுக்கு மதிப்பு. நாளைக்கு நல்ல நாளா யிருக்குது. ஆள் விடறேன்.” 

ஊர் சும்மாயிருக்கிறதா? 

“இவன் இன்னொரு பெண்ணைக் கட்டினால், அந்த மளிகை வீட்டுப்பெண் கதி என்ன ஆவறது?” 

“அதுக்கு அவன் என்ன செய்வான்? கட்டின அப்புறம் கூட பெண்டாட்டியா இல்லாமே, மளிகை வீட்டுப் பெண் ணாய்த்தான் இருப்பேன்னு இருந்தால், அப்படியே இருந் துட்டுப் போவட்டும். அதனால் யாருக்கு நஷ்டம்?” 

அவன் தறியில் இறங்குகையில் மறுபடியும் பழைய உற்சாகம் அவன் உடலில் ஊறியது. ஒரு தீர்மானத்திற்கு வருகிற வரையில் தான் அவஸ்தை. வந்துவிட்டால் அப்புறம் அவ்வளவு கஷ்டமில்லை. இத்தனை நாள் அவளில் தன்னை இழந்துவிட்டு, இப்பொழுது தன் மதியால் தன்னைத் திரும்பிப் பெற்றதே ஒரு பெரும் ஆறுதல். அவனை அமுக்கிக் கொண்டிருந்த கேள்வியிலிருந்து தான் மீண்டதே ஒரு ஆச்சரியம். அவ்வனுபவம் சென்று கடந்ததெனினும், இப்பொழுது பின்னோக்கிப் பார்க்கையில்தான், அதன் பயங்கரம் இன்னும் தெளிவாய்த் தெரிந்தது. அவன் கஷ்டம் தீர்ந்தது. இனி அவள் கஷ்டம் தான், அவளே இஷ்டமாய் வரவழைத்துக் கொண்ட கஷ்டம். இஷ்டப்படி படட்டும். 

போனது போகட்டும். இனி மறுபடியும் ஏமாற மாட்டேன். என்னை இனி யாருக்கும் இழக்கமாட்டேன். இனி வருபவளிடம்கூட உஷாராய்த் தானிருப்பேன். என்னில் ஒரு பங்குதான் கொடுப்பேன். எனக்கு, என்னை பத்திரமாய் வைத்துக்கொள்வேன். கொடுத்தால் என் தொழிலுக்குங் கொடுப்பேன். என் தறி, என் நூல், நான் நெய்யும் துணி… 

“இன்னிக்கு வெள்ளிக்கிழமை. புதுப்பாவு பூட்டணும். விளக்கு வெச்சுப்போச்சு இப்போ, சோம்பல் பட்டால், அப்புறம் நேரமிருக்காது.” 

அவன் தாய் விளக்கைப் பிடித்தாள். சுருட்டிய பாவைத் தோளில் தாங்கிக்கொண்டு தறி மேடைமேல் ஏறினான். 


வாசற் கதவு திறந்து மூடியது. 

“யாரது?” 

பதிலில்லை. ஆனால் உள்ளே மாத்திரம் யாரோ. 

இருளிலிருந்து விளக்கின் ஒளியின் வீச்சுகள் அவள் வருகையில். அவனுக்கு வாயடைத்துப் போயிற்று. கிழவி யின் உடலெல்லாம் வெடவெடவென்று ஆடியது. மாமி யாரின் கை விளக்கை அவள் தன் கையில் வாங்கிக்கொண் டாள். பேச்சு அவளுக்கும் எழவில்லை. கன்னத்தில் கண்ணீர் மாலையாய் வழிந்தது. எப்படி இளைச்சுப் போயிருக்கா? 

கிழவி தள்ளாடிப்போய் விசுப்பலகையில் உட்கார்ந்து கொண்டாள். வெளியிலிருந்து அவள் குரல் கணீரென்று அவர்களை எட்டியது. 

“பெண்ணே,விளக்கை உஷாராய்ப் பிடி. அடே பையா அவள் சரியா பிடிக்காட்டால்கூட நீ அனாவசியமா கையை மிஞ்சிடாதே”. 

அவன் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். அவள் கண்களிலிருந்து கண்ணீர் மாலை மாலையாய் உதிர்ந்து கொண்டேயிருந்தது. அதைத் தடுக்க அவன் ஒன்றும் முயலவில்லை. இருவர் மனமும் இன்றிரவில்தான் லயித்திருந்தது. 

இத்தனை நாள் பட்ட துன்பமெல்லாம் இன்று ஓரிரவில் ஆறிவிடும். பிரிவின் நெருப்பில் கருகி இளைத்த இருவர் குடை உடலும் மறுபடியும் மலரும். மறுபடியும் நல்லரசின் நிழல்போல் அவர்கள் இருவர்மேலும் இன்றிரவு பாவு நூல் படர்ந்து காக்கும். இன்றிரவு பலகணி வழி சந்திர வெளிச்சம் உண்டு. படுக்கையில் புரளுகையில் அவன் கைகள் இன்றிரவு பொத்தென்று வெறும்பாயில் விழாது, இன்றிரவு… 

– அசோகன்.

– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *