பணி





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘நான் உன்னிற் கலந்தேன். கடமையை இயற்றி, பயனை ஈசுரார்ப்பண மாக்கினேன். மௌனமும் என் யோகமே’….

அன்று மகாபாரதப் போர் முடிந்தது. வெற்றி அறத்தின் பக்கலில் பலித்தது. பார்த்தனின் காண்டீபம் வெற்றி நத்தி யெழுப்பிய நாணொலி இன்னமும் மடியாது நானாபக்கமும் எதிரொலிப்பதான பிரமை நிலவியது. பார்த்தசாரதியின் தேரிலே பூட்டப்பட்ட புரவிகள்கூட ஒருவித வெற்றிப் பெரு மிதத்தினால் ஆரோகணித்தன.
‘சத்திய நெறியே அகிம்ஸை. கொலையே கொல்லாமை யாகவும் அமையலாம். அதனை இயற்றும் கர்மமே க்ஷத்திரி யனான அர்ஜுனனின் சுயதர்மம் என்றேன். கீதையும் பிறந்தது. அதன் வழிநின்று அவன் நிச்சய புத்தியடைந் தான். பயன் ஈசுரார்ப்பணமாயிற்று. வெற்றி வெற்றியின் பக்கல் நிலைத்தது…..”-இவ்வாறு தீர்த்தனின் மனத்திலே எண்ண அலையொன்று சுழிந்தது. அவன் முகம் சத்திய சோதனையின் வெற்றி முறுவலாக ஒளிர்ந்தது.
வாகை வெறியில் காண்டீபம் தன் வகை மறைந்தது. பற்றுக்களை அறுத்த ஞானியாகப் பார்த்தன் கண்ணன் மீது பக்தி செலுத்துதல் அதற்குப் பிடிக்கவில்லை. ‘விஜயா! வில் என்றால் நான்; நான் என்றால் நீ. எனவே, வெற்றி நினதே!’ எனக் காண்டீபம் இரகசியமாகச் செவி கடித்துக் கூறிற்று
காண்டீபத்தின் கூற்றுக் கண்ணனின் திருச்செவிகளிலே விழத் தவறவில்லை. அவன் காண்டீபத்தைத் திரும்பிப் பார்த் தான். அவன் முகத்தில் அநந்தகோடி அர்த்தங்களைச் சொல்லாமலே சொல்லும் ஒரு முறுவல்.
தேரின் வேகம் குறைகிறது. தரிப்பு நிலை.
தேர்ச் சக்கரங்கள் பரம இரகசியமான குரலிற் பேசிக் கொண்டன. உரையாடலின் சாரம்: தக்க சமயத்தில் நாங்கள் மட்டும் நிலத்திலே புதைந் திருக்காவிட்டால், பார்த்தன் கர்ணனின் நாகாஸ்திரத்திற்குப் பலியாகியே யிருப்பான். யுத்தத்தின் முடிவு வேறு விதமாக அமைந்து இருக்கும்….’
கண்ணனின் திருச்செவிகள் இக்கூற்றைக் கிரகித்தன. அவன் முகத்தில் அதே முறுவல்.
கிழவியொருத்தியின் ஏக்கப் பெருமூச்சின் கேவல், கண்ணனின் செவிகளை அடைகின்றது.
‘எல்லாம் அக்கள்ளனின் சூழ்ச்சிகள்! போரிலே என் இஷ்டம் வென்றான். அந்த வெற்றிக்கு என் சிரேஷ்டனைப் பறிகொடுத்தேனே…. ‘மாமி, மாமி….’ என மயக்கி, அந்த மாயவன் தன் காரியம் யாவும் சாதித்து விட்டான்…. இவன் பொருட்டுப் பெற்ற வரம், கலவிக் கனியமுதின் முதலாவது அறுவடையாக ஈன்றெடுத்த மகனின் எமனாகியது….’
புதிதாகச் சுரந்துள்ள தாய்ப்பாசத்தின் ஏக்கரவே இவ் வோலம், என்பதைக் கண்ணன் அறிவான். அவன் முகத்தில் அதே முறுவல்.
தேரிலிருந்து இறங்கிய கண்ணன் எதையோ நினைவு படுத்திக் கொண்டவனாக, அச்சாணியே! ஏன் நீ மட்டும் மௌனமாக இருக்கின்றாய்?’ எனக் கேட்டான்.
‘பரந்தாமா!….நான் இருக்கும் நினைவு சக்கரங்களுக்கே இல்லாதபோது இத்தேருக்கோ, உன்னையே சாரதியாகப் பெற்ற பார்த்தனுக்கோ, அன்றேல் உலகுண்ட பெம்மானான உனக்கோ….
‘உன்னைப் பற்றிய நினைவு இல்லாவிட்டால், உன் நலனை விசாரித்திருப்பேனா? ஏதேனும் மனக்குறை….’ எனக் கண்ணன் குறுக்கிட்டான்.
‘கீதோபதேசம் என் செவிகளிலும் விழுந்தது. நான் உன்னிற் கலந்தேன். கடமையை இயற்றிப் பயனை ஈசுரார்ப் பணமாக்கினேன். அந்த இன்பத்தில் மௌனமானேன், மௌனமும் என் யோகமே என்பதைப் பரந்தாமன் அறியானோ?‘ எனக்கூறிய அச்சாணி மௌனத்தைத் தொடர்ந்து இயற்றியது.
கண்ணனின் முகத்தில் ஒளிர்ந்த முறுவல் சிரிப்பாகக் கனிந்து வெடித்தது!
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.