கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 13, 2024
பார்வையிட்டோர்: 1,007 
 
 

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வியர்த்து விறுவிறுக்க, ஒரு ஃபயர் என்ஜினாய் அவன் அவசரம் அவசரமாய் ஓடி வரும்போது, நகர பஸ் நிலையம் கூத்து முடிந்த கொட்டகையாய் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. 

சுள்ளென்ற வெயில். 

கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது மணி 9.35. சாதாரணமாய் அரை மணி நேரமாவது லேட் ஆகாமல் இந்த டெர்மினலை விட்டுக் கிளம்பி அறியாத பஸ் இன்று சமர்த்துப் பிள்ளையாய் குறிப்பிட்ட நேரத்துக்கே ஒழுங்காகப் போய்விட்டிருந்தது. 

இனி பத்து மணிக்கு முன் அடுத்த பஸ் வரும் லட்சணம் இல்லை. அட்டன்டன்ஸ் ரிஜிஸ்டரில் லேட் மார்க் விழும். ஒரு காஷஷுவல் லீவில் மூன்றில் ஒன்று நஷ்டம். 

அவனுக்குப் பாஸ்கரனை நினைத்துக் கோபம் கோபமாய் வந்தது. பால்ய கால நட்பை புதுப்பித்துக் கொள்ள, தன் வீட்டுக்கு அவன் விஜயம் செய்த பொன்னான நேரம்…! காலையில் இவன் அவசரம் அவசரமாய் – அன்று அல்லாமலேயே ஐந்து நிமிஷம் லேட், வியாழக்கிழமை, ஷேவிங் நாள், இவன் ஆபீஸூக்கு இறங்கும்போது, ஒரு கார் இவன் வீட்டின்முன்வந்து நிற்கிறது. காரிலிருந்து இறங்கியவனைப் பார்த்தபோது முதலில் இவனுக்கு அடையாளமே தெரியவில்லை. பள்ளியில் வாசிக்கையில் ஒடிந்து விழுவதைப்போலிருந்த பாஸ்கரன் எங்கே, தொப்பையும் உருண்டு திரண்ட கை கால்களும், உடம்புமாய்க் காரில் வந்திறங்கும் இந்தப் பருமனான ஆசாமி எங்கே… 

கடைசியில் புரிந்தது இப்போ பாஸ்கரன், பட்டணத்தில் அமர்க்களமாய் பிஸினஸ் செய்கிறானாம். சம்பை – உலர்ந்த மீன் வியாபாரம். இங்கே இருந்து லாரி லாரியாய் வரவழைத்து டின்னில் பேக் பண்ணி வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்து அந்நியச் செலாவணி உண்டு பண்ணுகிறான். உலர்ந்த மீனை தூள் பண்ணி முதல் ரகம் இரண்டாவது ரகம் என்று கூறாக்கி, மனிதனுக்கு, மாட்டுக்கு எல்லாம் தீவனம் போடுகிறானாம். ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஆனால்… பாவி கார், பங்களா, பாக்டரி என்றெல்லாம் அவன் அருமை பெருமைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லிக் கேட்கவைத்து, போகும் போக்கில் தன் காலை நேர பொன்னான பொழுதையும் அபகரித்துக் கொண்டுபோய் விட்டானே. 

உள்ளுக்குள் அவனை கருவிக்கொண்டே இவன் அடுத்த பஸ்ஸுக்காகக் காத்து நின்றான். 

வீதியில் அவசரம் அவசரமாய் விரையும் மனித யந்திரங்கள்… இந்த வெயிலுக்குத்தான் அதுக்குள் என்ன உஷ்ணம்… 

கீழே பத்திரிகைகள், புத்தகங்கள் கடை பரப்பி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான் ஒரு பையன். புத்தகங்களை என்னடா இப்படி ஈ மொய்க்கிறது என்ற கூர்ந்து பட்டைகளைப் பார்த்த போது இவனுக்கு விஷயம் புரிகிறது. 

பாம்பின் படம்போல் கை விரல்களைக் கூர்மையாய் கூப்பி ஒவ்வொருவரையும் கொத்திக்கொத்தி யாசகம் செய்து கொண்டிருக்கிறான் ஒரு கன்னங்கரிய முக்கால் அம்மண பிச்சைக்காரன். 

வளர்ச்சி குன்றி சூம்பிப்போன கால்களைக்கொண்ட தன் பெண்டாட்டியை உப்பு மூட்டையாய் முதுகில் சுமந்துகொண்டு நீட்டிய அவள் கைக்காக பிச்சை கேட்கிறான் இனியொருவன். 

ஒரு பஸ் வந்தது… 

இவன் ஓடிச் சென்று போர்டைப் பார்த்தபோது அவன் பஸ் அல்ல. 

இப்போ பஸ் ஸ்டாண்டில் கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்கள் சேர்ந்துகொண்டிருந்தார்கள். ஒரு கலகலப்பு… 

இவனுக்கு எரிச்சலாக வந்தது. இன்னும் பஸ்ஸைக் காணவில்லையே, மணி 9.45… 

ம்ஹ்யா 

ஓ… ஓ… கப்ஷா… 

பின் பக்கமிருந்து எழுத்து வடிவில் சிறைப்படுத்த முடியாத ஒரு சத்தம்.

திரும்பிப் பார்த்தபோது… 

லாட்டரி டிக்கட் விற்பனை செய்யும் பெட்டிக் கடையின் பின் பக்கம், ஆள் கூட்டத்திலிருந்த விலகி ஒண்டியாய் தெய்வமேண்ணு நிற்கும் சிவந்த தபால் பெட்டியின் வலப் பக்கம் அந்த பச்சைச் சட்டை தரித்த வாட்ட சாட்டமான கிழவன். முழங்கால் தெரிய உடுத்தியிருக்கும் நிறம் மங்கிப்போன லுங்கி, பரட்டைத் தலை, அடர்ந்த வெள்ளைத் தாடி… கை கால்கள் எல்லாம் வீங்கி தலையணைபோல் பொத்து பொத்தென்று…

விழிகள் வெள்ளை வெளேரென்று… பார்வை இருப்பதாய்த் தோன்றவில்லை. 

சுளீரென்று அவன்மீது விழும் வெயில் வெள்ளை விழிகள் மேலே மொழுமொழுவென்று தெரிய, கையையும் காலையும் ஆக்ரோஷமாய் ஆட்டி, பல்வேறு உணர்ச்சி கொந்தளிக்கும் முகத்துடன், திக்கெட்டும் ஒலிக்க முழுத் தொண்டையில் எடுத்தெழுத முடியாத தொனி விசேஷங்களை எழுப்பி பிரவேசித்துக் கொண்டிருக்கிறான். என்ன மொழி என்று தெரியவில்லை. 

ரோடில் போகிறவர்களும் வருகிறவர்களும் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு, அது ஒரு அன்றாட நிகழ்ச்சி என்று அவரவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு விரைந்துகொண்டிருக்கிறார்கள். பஸ்ஸை இன்னும் காணவில்லை. வேறு செய்ய ஒன்றும் இல்லாததால் அந்தக் கிழவனைக் கவனித்துக்கொண்டு இவன் நின்றான். 

முன்னால் நின்று கேட்க ஒருவர்கூட இல்லாதிருந்தும்கூட, எவ்வளவு தீவிரத்துடன், தன் சக்தியை முழுதும் ஒன்று திரட்டி, கன்ன எலும்புகள் எழும்பி நிற்க, கழுத்து நரம்புகள் புடைத்துத் தெரிய முழுத்தொண்டையில் குரல் எழுப்பி அவன் பிரவாசகம் செய்துகொண்டிருக்கிறான்! 

சுள்ளென்ற வெயிலில் அவன் சட்டை நனைந்து குளிர்ந்திருப்பது தெரிகிறது. 

சே, பஸ்ஸை இன்னும் காணோமே… 

லாட்டரிக் கடையின் பக்கம் நீங்கி நின்று ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்தான் இவன். 

இப்போது கையில் குடையுடன் அவசரம் அவசரமாய்ச் சென்று கொண்டிருந்த வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த ஒருவன் முகத்தில் இருந்த குறுந்தாடி, தலையிலிருந்த தொப்பியிலிருந்து அவன் முஸல்மான் என்று அவன் யூகித்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையில் இருந்து பன்னும் பழமும் வாங்கி அவன்முன் கொண்டுவந்து வைக்கிறான். உரிமையோடு அவன் பக்கத்தில் இருந்த அஷ்டகோண அலுமினிய குவளையை எடுத்துக்கொண்டுபோய் குழாயில் இருந்து நீர் மொண்டு கொண்டுவந்து வைத்துவிட்டு அவன் பாட்டுக்கு அவசர அவசரமாய்ச் சென்று விடுகிறான். 

கிழவன் இதை ஒன்றும் சட்டை செய்ததாய்த் தெரியவில்லை. மேலும் மேலும் தொண்டை கிழிய திக்கெட்டும் முழங்க, கை கால்களை ஆட்டி ஒரு வித காரிய கௌரவத்துடன் அலறிக் கொண்டிருக்கிறான். அவன் பேசும் மொழி ஒரு வேளை அரபியோ, உருதுவாக இருக்குமோ… இப்போ இவன் மனசில் இப்படி ஒரு சந்தேகம். 

இவன் அந்தப் பக்கமே உன்னிப்பாகக் கவனிப்பதைப் பார்த்த லாட்டரி கடைக்காரன், ‘சார்… அவர் ஆள் வெளியே பார்ப்பது போல் ஒண்ணும் இல்லே, பெரிய சித்தர்…’ என்கிறான். அவன் குரலில் ஒரு பயபக்தி. இவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அண்டம்கிடுங்க அலறுவதில் ஒரு எழுத்தைக்கூட தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே. யாரும் புரிந்துகொள்ள மெனக்கெடு வதாகவும் தெரியவில்லை. இருந்தும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தான் இதுக்காக நியமிக்கப்பட்டவன் என்ற ரீதியில் அவன்பாட்டுக்குத் தன் கர்மமே கண்ணாயிருக்கும் அந்த ஆத்மார்த்தத்தை – சமர்ப்பண புத்தி இவனை என்னவோ செய்கிறது. 

இத்தனை நேரமாகியும் கடுகளவுகூட கீழிறங்காமல் இவ்வளவு தூரம் ஓவென்று அலறி ஆகமம் செய்யும் மாசக்தி எங்கிருந்து இவனிடத்தில் பொங்கிப் பிரவகித்து வருகிறது? 

பேசுவதை நிறுத்திவிட்டு, குனிந்து குவளையை இரு கைகளாலும் துழாவும்போது கிழவன் கையில் பன்னும் பழமும் தட்டுப்படுகிறது. இப்போ அவன் முகத்தில் திடீரென்று ஒரு உணர்ச்சித் தீவிரம்… பன்னைக் கையில் எடுத்து ஒரு கணம் சிலைபோல் அப்படியே நிற்கிறான். விழிகளின் அந்த வெண்மை வெயிலில் பளிச்சென்று தெரிகிறது. திடீரென்று, கன்னத்தில், விழியில், முகத்தில் எல்லாம் பளார் பளார் என்று அறையத் தொடங்கினான். 

அறை விழுந்ததுக்கு மேலே மேலே மீண்டும் மீண்டும் அறை… அறை…

அறையென்றால்… 

இப்படியொரு அறை, யாரும் யாருக்கும் கொடுத்திருப்பதை இதுக்கு முன்னால் இவன் பார்த்ததில்லை. அந்த அறையில், ஒன்றே ஒன்று தன் முகத்தில் விழுந்தால் அவ்வளவுதான் சுருண்டு விழுந்து விடுவோம் என்ற உணர்வு… இருந்தும் இந்த உதைகள் தன் முகத்திலேயே விழுவதுபோல்… 

முகம் ரத்தமாய் சிவக்க, விழிகளிலிருந்து குபு குபுவென்று நீர் வழிய கிழவன் சரமாரியாய் அறைகளை முகத்தில் பொழிந்து கொண்டே இருக்கிறான். 

ஆத்ம பீடனமா…? 

கடைக்காரன், அதுவும் அவன் வழக்கமான பிரவாசகத்தின் ஒரு பகுதி என்ற தோரணையில், தன் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். 

இவனால் சகிக்க முடியவில்லை. 

‘ஏன் இப்படித் தன்னைத்தானே அடிச்சுக்குறான்’ இவன் கடைக்காரனிடம் கேட்டான். 

‘அது அவர் வழக்கம் சார்… ஏதாவது சாப்பிடும்முன் இப்படித்தான் அறைஞ்சுக்குவாரு.’ 

ஒரு கணம் அடிப்பதை நிறுத்திவிட்டு, பன்னைப் பிய்த்து வாய்க்குள் கொண்டுசெல்கிறான். பிறகு மறுபடியும் கன்னத்திலும் முகத்திலும் மண்டையிலும் மூர்க்கமாய் அறையத் தொடங்கினான். 

அறை மேல் அறை பேயறை… அறைந்த… அறையில் வாய்க்குள் பிட்டுப் போட்ட ரொட்டித் துண்டுகூட வெளியே வந்துவிட்டது தெரிகிறது…

‘உனக்குப் பசிக்குமாடா… பசிக்குமாடா…’ என்று உள்ளுக்குள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டே அவன் அடிப்பதுபோல்… 

சற்றுக் கழிந்து பன்னை பிய்த்துத் திங்கத்தொடங்கினான். 

பஸ் வந்தது. இவன் முண்டியடித்துக்கொண்டு ஏறி உட்கார்ந்து கிழவன் இருந்த திசையைப் பார்த்தபோது, அவன் மறுபடியும் தன் சர்வ சக்தியையும் ஒன்று திரட்டி முழுத் தொண்டையையும் திறந்து, உச்ச ஸ்தாயியில் கத்தி தன் பிரவாசகத்தை – பிரசங்கத்தைத் தொடங்கி விட்டிருந்தான். 

– 15.06.1974 

– நீலக் குயில் 7.1974

– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *