கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 13, 2024
பார்வையிட்டோர்: 1,749 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவுக் காற்று முழுமையாக அசைவற்றிருந்தது அந்தக்கானகத்தில் தான் மூட்டிய நெருப்பின் முன் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த நாரதருக்கு அங்கு மரக்கிளைகள் கிறீச்சிடவோ, இலைகள் படபடக் கவோ ஒரு மூச்சுக் காற்றுக் கூட இல்லாதிருந்தது தெரிந்தது. இரவுக் குளிரிலிருந்தும், பூச்சிகளிட மிருந்தும் அவரைக் காப்பதற்காக அந்த நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. கொடிய காட்டு விலங்குகளை தூர வைத்திருக்க அந்த நெருப்பு உதவக் கூடும். ஆனால் நாரதருக்கு அவற்றில் எல்லாம், பயம் இல்லை. ஒரு துறவியின் அக அமைதியும், சாந்தியும் காட்டு விலங்குகளைக் கூட வசீகரித்து அமைதியாக்கி விடும் என்று நம்பினார். 

தீயின் நாக்குகள் அவர் கண்முன் ஆடின. எரிந்து கொண்டிருக்கும் சுள்ளிகளும், சருகுகளும் படபட என ஒலி எழுப்பின. புகை மூட்டம் எழுந்து அலைந்து அவர்கண்களுக்கு வேதனையூட்டின. அவர்கண்களை மூடினார். அப்போது தான் ஒரு காலடிச் சத்தம் அவருக்குக் கேட்டது. விலங்கொன்றின் காலோசையா? கண்களை மீண்டும் திறந்தார். கருமையான நிலவில்லாத அந்த இரவில், மரங்களின் கரிய நிழலுருவின் பின்ன ணியில் அவரால் எதையுமே கண்டு கொள்ளச் சிரம மாக இருந்தது. ஆனால்…,ஆம்..ஏதோ ஒன்றின் அல்லது யாரோ ஒருவரின் அசைவு தெரிகிறது. அடுத்த கனம் மரங்களுக்கிடையில் இருந்து ஒரு உருவம் வெளி யேறி, நாரதர் தான் வசிப்பதற்காக துப்பரவாக்கி இருந்த அந்தச் சிறிய வெட்ட வெளிக்கு வந்தது. மங்கலான தணலின் வெளிச்சம் அதன் மேல் பரவும் போது அது ஒரு மனித உருவம் தான் என நாரதரால் இனம் காண முடிந்தது. 

“யார் அது” நாரதர் வினவினார். 

“ஒரு வழிப்போக்கன்” மிக மென்மையான குரலில் பதில்வந்தது. 

“ஆச்சரியமாக இருக்கிறதே. எந்த ஒரு வழிப் போக்கனும் இந்த வழியில் இந்தக் காட்டிற்குக்கூட வருவதில்லையே.” 

‘நீ ஒரு கொள்ளைக்காரானக இருந்தால் நான் உனக்குத் கூறுவது இதுதான். என்னிடம் உலக வாழ்விற்குரிய உடமைகளோ, வெள்ளியோ, பொன்னோ எதுவுமில்லை”. 

“நான் ஒரு கொள்ளைக்காரனல்ல. நான் ஒரு வழிதவறிய பயணி” 

வெளிச்சம் முழுமையாக தன் மீது படும்படி அந்த உருவம் முன்னோக்கி வந்தபோது அது ஒரு வயதான மனிதர் என்பது தெரிந்தது. முதுமையினால் அவருடைய முதுகு பாதி கூன் விழுந்திருந்தது. அழுக்கடைந்த கிழிந்த ஆடைகளை அணிந்த படி கையில் சிறிய மூட்டை ஒன்றைச் சுமந்தபடி நிற்கும் அந்த மனிதரை இப்போது தெளிவாக நாரதரால் பார்க்க முடிந்தது. 

அந்த முதியவர் பிரயத்தனத்துடன் மெல்லத் தரையை நோக்கிக் குனிந்து நெருப்பின் மறுபுறத்தில் அமர்ந்தார். 

“மேலும் இந்தக் காட்டில் நீர் என்ன செய்கிறீர்” தணிந்த குரலில் மீண்டும் கேட்டார். 

“உலக வாழ்வின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன்” 

“அதில் நீர் வெற்றியடைந்தீரா?” முதியவர் சுருங்கிய முகப் புன்னகையுடன் கேட்டார். 

“இன்னும் இல்லை, எம்மை வாழ்வுடன் இணைத் திருப்பது மாயையின் சக்தி பொய்தோற்றத்தின் சக்தி என்பது எனக்குத் தெரிகிறது. எனது குருமாரும் இதைத்தான் போதித்தார்கள். புனித நூல்களும் இதைத் தான் கூறுகின்றன. ஆனால், கடலை ஒரு போதும் பார்க்காமல் அதைப்பற்றிக் கேள்விப்பட்டதையும் விபரிக்கப்பட்டதையும் மட்டும் தெரிந்த ஒருவனைப் போலவே இந்த உண்மையை நான் உணர்கிறேன். மாயையின் இந்த மிகப் பெரிய சக்தி இரகசியம் என்ன? அந்த மர்மம் தான் என்னை வாட்டுகிறது.” 

பற்களே இல்லாத தனது பொக்கை வாயைத் திறந்து முதியவர் சிரித்தார். 

“நீர் அஷ்டசாலி” முதியவர்” கூறினார். “எங்களில் சிலர் மாயைத் தோற்றமே இல்லாத பொருட்களால் வருத்தமடைகிறோம்.” 

“அதன் அர்த்தம் என்ன?” 

“இப்போது என்னைப் போல, நான் மிக நீண்டதூரம் நடந்து வந்ததால் களைத்துச் சோர்ந்து, மயங்கி, எல்லாவற்றிற்கும் மேலாக தாகத்தில் நாவரண்டு போயிருக்கிறேன். எனக்கு ஒரு குவளை நீர் கிடைக் காது போனால் நான் சில வேளைகளில் இறந்து விடுவேன்”. 

“என்னிடம் தண்ணீர் இல்லை” நாரதர் கூறினார்.

“சில மணித்துளிகளுக்கு முன்தான் கடைசி சொட்டு நீரையும் குடித்து முடித்துவிட்டேன். மிகுதி இரவை நீர் இல்லாமல் கழிப்பது என்று மனதுக்குள் தீர்மானித்துவிட்டேன்.” 

“ஆனால் கவலைப்பட வேண்டாம். பக்கத்தில் உள்ள அருவிக்குப் போய் நீர் கொண்டு வந்து உமக்குத் தருவேன்.” 

நாரதர் ஏழுந்தார் நெருப்பிலிடுவதற்காக தான் சேகரித்திருந்த சுள்ளிகளை இணைத்து ஒரு தீவட்டி செய்து நெருப்புச் சுவாலையில் பிடித்துக் கொழுத்திக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். 

நாரதர் வழக்கமாக தான் நீர் மொண்டு வரும் அருவியை நோக்கி காட்டினூடாகச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலமான காற்று வீசி அவருடைய தீவட்டியை சடுதியாக அணைத்து விட்டது. ஆச்சரியமாக இருக்கிறதே! காற்றே இல்லாத இப்படி ஒரு இரவில் இது எப்படி என்று யோசித்தார். அவருடைய வெளிச்சம் அணைந்ததால் அவர் காரிரு ளில் விடுபட்டார். வானம் மந்தாரமாயிருந்தது. நட்சத்திரங்களின் ஒளி கூட கனத்த மேகத்தை ஊடுருவி வர முடியாதிருந்தது. இருந்தாலும் அருவி இருக்கும் இடத்தை நோக்கி தனது புலனுணர்வின் வழிகாட் டலில் செல்ல முடியும் என அவர் நினைத்தார். இருளிலும் கூட அவருக்கு எந்த வித பயமும் ஏற்பட வில்லை. தொங்கிக் கொண்டிருக்கும் மரக்கிளைகளி னூடாக இருட்டில் தட்டித் தடவியபடி கஷ்டப்பட்டு தைரியத்துடன் சென்றுகொண்டிருந்தார். ஒரு முறை அடிமரம் ஒன்றுடன் மோதிக் கொண்டார். அதன் பின் ஒரு கையை முன்னே நீட்டிப் பிடித்தவாறு சென்றார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் ஒரு பெரிய மரவேரில் கால் தடுக்கி தொப்பென்று நிலத்தில் விழுந்தார். தனது குவளையையும் தவற விட்டுவிட்டார். ஒருவாறு கைகளால் நிலத்தைத் தடவி குவளையை திரும்ப எடுக்க அவரால் முடிந்தது ஆனால் விழுந்ததனால் அது உடைந்திருக்கக் கூடும் எனக் கருதினார். 

அவரால் என்ன செய்ய முடியும்? மீண்டும் சென்று வேறொரு குவளையும், தீவட்டியும் எடுத்து நீரரு வியை நோக்கிச் செல்ல எத்தனிக்க அவரால் நிச்சயமாக முடியும். ஆனால் தனது மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது ஒன்றை இப்போது அவர் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று, உண்மை என்ன வென்றால் அவர் வழி தவறிவிட்டார். நீரருவிக்கான வழியைக் கண்டு பிடிக்கச் சிரமப்படுவது போலவே தனது இருப் பிடத்திற்கு மீண்டும் செல்லும் வழியைக் கண்டுபிடிப் பதும் சிரமமாய் இருந்தது. தனது காலடிகள் போன போக்கில் மட்டுமே அவரால் போகவும் பார்க்கவும் முடிந்தது. முன்பு போல இருளில் தட்டித்தடவியபடி மேலும் பத்து நிமிடங்கள் வரை நடந்து கொண்டிருக் கும் பொழுது எதிர்பாராத விதமாக அந்தக் காட்டின் ஒரு எல்லைக்குத் தான் வந்துவிட்டதைப் போல அவருக்குத் தோன்றிற்று. 

ஒரு திறந்த வெளியை அவர் வந்தடையும் வரை மரங்கள் அடர்த்தியற்று இருந்தமையும் தெரிந்தது, அத்துடன் தொலைவில் மனிதக் குடியிருப்பொன்றி லிருந்து வரும் மங்கலான வெளிச்சத்தை அவரால் காண முடிந்தது. 

நாரதர் அந்தத்திசையை நோக்கி நடந்தார். மரங்கள் இப்போது சிறிய பற்றைகளுக்கு இடம் விட்டிருந்தன. அவர் கிராமத்தை அடையும் போது வீடுகளில் மங்கிய வெளிச்சம் தெரிந்தது. அவை குடியானவர்களின் வீடுகள் போலத் தெரிந்தன. தனது பாதையில் முதலில் தெரிந்த ஒரு மண் குடிசையை நோக்கி மேலே நடந்து சென்றார். கதவு சாத்தப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சிறிய ஜன்னலினூடாக வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் தனது குவளையைப் பார்த்தார். உண்மையில் அது உடைந்திருந்தது. பயனில்லை. அதை விட்டெறிந்தார் கதவைத் தட்டினார். 

அச்சமடைந்த தொனியில் ஒரு பெண்ணின் குரல் உள்ளிருந்து கேட்டது. 

”யார் அது?” 

“நான் காட்டில் வாழும் ஒரு துறவி. தண்ணீர் தேடி வந்திருக்கிறேன்” நாரதர் பதில் கூறினார். 

ஜன்னலினூடாக எட்டிப்பார்க்கும் அப்பெண்ணின் தலை தெரிந்தது. தான் நன்றாக அவளுக்குத் தெரியும் படி அந்தத் திசையை நோக்கி சில அடிகள் நடந்து சென்றார். அது அவளுக்கு நம்பிக்கையைத் தரும் என நம்பினார். அவள் கையில் விளக்கு வைத்திருந்தாள். விளக்கை உயர்த்திப் பிடிக்கும் பொழுது அவளது முகத்தை நன்றாகப் பார்க்க அவரால் முடிந்தது. நேர்த்தியான அழகுடைய அந்த முகத்தை ஆவலுடன் பார்த்தார். ஆனால் அதே நேரம் தான் கண்ட காட்சியை எண்ணிப் பலமாக ஒரு முறை மூச்சை உள்ளிளுத்தபடி பின்வாங்கினாள். பின்பு அவள் சொன்னாள். 

“எப்படி ஐயா உங்களுக்கு நான் நீர் தரமுடியும்?” 

“ஏன் முடியாது?” 

“நாங்களோ தாழ்ந்தவர்களிலும் மிகத் தாழ்ந்தவர்கள் மிருகங்களின் தோலை உரித்துப் பதனிடும் தொழிலைச் செய்து வாழ்க்கை நடத்துகிறது எனது குடும்பம். என்னால் எப்படி உங்களுக்குத் தண்ணீர் தரமுடியும்?” 

”ஏன் முடியாது?’ நாரதர் மீண்டும் கேட்டார்.

“உங்களுக்கு அது தீட்டை ஏற்படுத்தும் ஐயா” 

நாரதர் புன்முறுவல் செய்தார். 

”உலகத்தில் வாழும் சாதாரணங்கள் நினைக்கும் தூய்மை துடக்கு என்ற வேறுபாடுகள் உலகத்தைத் துறந்த எனக்குக் கிடையாது. தயவு செய்து எனக்கு நீர் கொண்டுவா” 

அவள் அவரைச் சந்தேகத்துடன் உற்றுப்பார்த்தாள். பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய் கதவடிக்கு….. வந்து கதவைத் திறந்து விட்டாள். நாரதர் குடிசைக்குள் நுழைந்தார். அவள் உள்ளே சென்று சிறிய மண்குவளை ஒன்றில் நீர் கொண்டு வந்தாள். தரையில் சம்மணமிட்டு அங்கு உட்கார்ந்திருந்த நாரதர் முன் அதை வைத்தாள். இப்போது அவரால் அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவள் இளமையாக இருந்தாள். சிறுபிள்ளைத்தனம் இன்னும் மாறவில்லை. வயது பதினெட்டிருக்கலாம் என ஊகித்தார். முகத்தில் கண்ட அழகிற்கு பொருத்தமாக உயர்ந்த மெல்லிய உடல் அவளுக்கு அமைந்திருந்தது. ஒரு முழுமை அழகை அது தருவதை நாரதர் உணர்ந்தார். 

“இந்த வீட்டில் நீ தனியாகவா இருக்கிறாய்?” அவர் கேட்டார். 

“எனது பெற்றோர் பக்கத்தில் உள்ள கிராமத்திற்குச் சென்றிருக்கின்றனர். ஏனென்றால் அங்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலை இருந்தது. இப்போது எந்த நேரமும் அவர்கள் திரும்பி விடு வார்கள்.” 

“இங்கே தனியாக இருப்பதற்கு நீ பயப்பட வில்லையா?” 

அந்தப் பெண் பதில் கூறத் தயங்கினாள். ஆனால் அது பற்றிப் பேசும் போது ஒரு வகைக் கர்வம் அவளில் இருந்தது. 

“நான் பயப்படுகிறேன் ஐயா. ஆனால் இது அடிக்கடி நடக்கிறதே. அத்துடன் இது தவிர்க்க முடியாதது. மேலும், பல வேலைகள் இந்த வீட்டில் செய்யக் கிடக்கிறது. வேலையில் மூழ்கும்போது என்னுடைய பயத்தை மறந்துவிடுவேன்.” 

“உனது பெற்றோருக்கு நீ மட்டும் தானா பிள்ளை?”

“ஆம், ஐயா, எனக்கு ஒரு அக்கா இருந்தாள்.அவள் மிக இளமையிலே காய்ச்சல் வந்து இறந்து போனாள்.”

”உன்னுடைய பெயர் என்ன?” நாரதர் கேட்டார். 

”மாயாவதி” 

“அழகான பெயர்” 

“ஆனால் நீங்கள் உங்களுடைய நீரைப் பருக வில்லையே” அவருக்கு முன் இருந்த குவளையைக் காட்டியபடி மாயாவதி கூறினாள். 

முதல் தடவையாக இப்போதுதான் காண்பது போல அவர் குவளையைப் பார்த்தார். 

“நான் தண்ணீர் கேட்டேனா? மறந்து விட்டேன். ஆனால் இது இங்கிருப்பதால் பருகுவேன்” 

எதற்காக அவர் வந்தாரோ அவற்றையெல்லாம் உண்மையாகவே மறந்து விட்டார். முதியவரைச் சந்தித்ததையும், தன்னை வருத்திக்கொண்டிருக்கும் மாயையின் வலிமை பற்றிய பிரச்சனையையும் கூட மறந்து விட்டார். கரும்பலகையில் எழுதிய எழுத்துக்கள் ஈரத்துணியால் துடைக்கப்பட்டது போல அவர் மனதில் இருந்தவை எல்லாம் மறைந்து விட்டன. அமைதியைான அன்பு நிரம்பிய மாயாவதி பின்முகத்தையும், வசீகரிக்கும் தன்மையுள்ள அவளது நீண்ட உடலையும், இனிய குரலையும் தவிர வேறெது வும் அவர் மனதில் இருக்கவில்லை. குவளையை உயர்த்தி உதட்டிற்படாது அண்ணாந்து நீரை வார்த்தார். தொண்டையினூடாக இறங்கிய நீர் குளிர்சியையும் ஆறுதலையும் தந்தது. 

மாயாவதியின் தாயும் தந்தையும் அந்த இரவு வீடு திரும்பிய பொழுது, தன்னைத் தீட்டுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் நாரதரைப் பற்றியே அவர்களும் கவலையடைந்தார்கள். இது சம்பந்தமில்லாதது எனவும், தான் ஒரு துறவியாக வாழ்க்கையைத் தழுவிய போது உலகின் சகல சமூக வேறுபாடுகளையும்கூட தான்துறந்து விட்டதாகவும் அவர் அவர்களுக்கு எடுத்துக் கூறினார். அந்தப் பெற்றோர் சற்று மரியாதையான முறையில் ஆனால் நட்புடன் பழகினர். அதேநேரம் நாரதர் அங்கிருப்பதால் தடுமாற்றம் அடைந்தனர். ஆனால் அன்றிரவு தான் அங்கு தங்குவதற்கான அனு மதியை அவர் கேட்டபொழுது அவர் மீதிருந்த மரியாதை யால் அவர் கோரிக்கையை மறுத்துரைக்க முடிய வில்லை. மேலும் அந்த இரவு நேரத்தில் அவர் திரும் பவும் காட்டினூடாக தன் இருப்பிடத்திற்குச் செல்ல இயலுமா என்பதையும் அவர்களால் நிவிக்கமுடிய வில்லை. அவர் களுடைய எளிய உணவை அவரும் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வசதியான படுக்கையை அளிக்க முடியவில்லையே என அவர்கள் கவலைப் பட்டார்கள். காட்டில் குகைகளின் தரையில் படுத்துறங் கிப் பழகிய தனக்கு இவையெல்லாம் முக்கியமான வையல்ல என அவர் கூறினார். அவர்களுடைய பாயொன்றில் அவர் சரிந்து படுத்தார். அன்று மாலை நடந்த சம்பவங்கள் சிறுசிறு காட்சித் துண்டுகளாக அவரது நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. ஞாபகத் திற்கு வரும் கனவுத் துண்டுகள் போல அவை இருந்தன. உடைந்த குவளையைப் பார்த்தபடி குடிசையின் ஜன்னலுக்கு வெளியே காத்திருந்ததை ஞாபகப்படுத்திப் பார்த்தார். தவிர, அன்று மாலை ஒரு முதியவரைச் சந்தித்ததை, பற்களே இல்லாத வாயை அகலத் திறந்தபடி அம்முதியவர் சிரித்ததை நினைவிற் குக் கொண்டுவர முடிந்தது. அவரை எங்கு சந்தித்தார் என்பதும் தெரியாமலிருந்தது. ஆனால் இப்பொழுது அம்முதியவரின் முகம் மாயாவதியின் முகமாக மாறி அவருடைய மூடிய இமைகளுக்கு முன்பாக மிதந்து கொண்டிருந்தது. குடிசையின் மறுபுறத்தில் அவள் தூங்கிக் கொண்டிருப்பதை அவர் சுய உணர்வுடன் அறிந்து கொண்ட போதும்கூட இருண்ட தூக்கத்தில் அவள் முகத்தைக் கனவுக் காட்டில் தொடர்ந்து துரத்திச் செல்வதாக அமைந்த கனவுப் பின்னல்கள் அவருக்குத் தோன்றின. தூக்கத்தின்போது ஏற்கனவே மனது ஒரு முடிவுக்கு வந்திருப்பதை உணர்ந்தபடி நாரதர் காலையில் கண்விழித்தார். அவர் எழுந்திருந்தபோது மாயாவதி யின் தந்தையார் வீட்டின் பின்புற முற்றத்தில் அமர்ந்த படிகுச்சியொன்றினால் பல்துலக்கிக் கொண்டிருந்தார். நாரதர் எழுந்து அவருக்கு அருகில் சென்று உட்கார்ந்து கொண்டார். 

“உங்களிடம் வேறொன்றையும் நான் கேட்க விரும்புகிறேன். நேற்றிரவு கூறியதுபோல, நான் வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுபடுவதற்கான அறிவைத்தேடிக் காட்டில் வாழ்ந்து கொண்டிருப் பவன். ஆனால் அந்த ஞானத்திற்கு ஆயத்தமான நிலையில் நான் இல்லை என்பதை இப்பொழுது உணர்கிறேன். ஏனென்றால் வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரிந்தது மிகச் சொற்பமே.” 

தந்தையார் மிக அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந் தார். “எனக்கு வாழ்க்கையைப் பற்றி என்ன தெரியும்? ஒரு செல்வந்தக் குடும்பத்தில் மகனாகப் பிறந்து; அந்த வசதிகளால் களைப்படைந்து, எல்லாவற்றையும் விட்டு காடு சென்று கடுமையான துறவு வாழ்க்கை யைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தேன். ஆனால் இவை இரண்டும் பெருவாரியான சாதாரண மக்களைப் பொறுத்தவரை வித்தியாசமானவை. தாங்களே தேர்ந் தெடுக்காத சகிக்கமுடியாத கொடுமைகளையும், வேதனைகளையும் கட்டாயத்துடன் சகித்துக்கொண்டு வாழ வேண்டியவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.” 

நாரதரை உற்று நோக்கியபடி தந்தையார் காத்திருந்தார். 

“எனக்கு முற்றிலும் அந்நியமான இந்த மற்ற வாழ்க்கையைப் பற்றி அறிய நான் விரும்புகிறேன். உங்களுடனும் உங்கள் குழந்தைகளுடனும் உங்கள் வீட்டிலேயே உங்களைப் போல வாழ்ந்து உங்களுடன் சேர்ந்து வேலை செய்து உங்களுக்கு நேரும் துக்க மானாலும், சந்தோஷமானாலும் அதை அனுபவித்து வர எனக்கு அனுமதியளியுங்கள். உங்களைத் தயவாகக் கேட்கிறேன்.” 

இப்பொழுது தந்தையார் கூறினார். “நீங்கள் எங்களு டன் சேர்ந்து எங்களுடைய வேலை செய்யப் போவ தாகக் கூறினீர்கள். அது என்ன வேலை தெரியுமா?” 

“நீங்கள் மிருகங்களின் தோலை உரித்துப் பதனிடும் வேலை செய்து வாழ்க்கை நடத்துவதாக மாயாவதி கூறினாள். நானும் அதைக் கற்று உங்கள் வேலையில் பங்கு கொள்ள விரும்புகிறேன்.” 

தந்தையார் திகைத்தார். 

”உங்களால் எப்படி அதைச் செய்ய முடியும். அது மிகவும் அசுத்தமான வெறுக்கத்தக்க வேலை. இதோ பாருங்கள்.” கையை நீட்டிக் காண்பித்தார். 

”எனது நகக்கண்ணுக்குள் இருக்கும் அழுக்கும், கறையும் இதோ. எனது உடல் முழுவதும் நான் வேலை செய்யும் பொருளே நாறுகிறது. ஒரு நாளில் பல தடவைகள் குளித்தால்கூட இந்த நாற்றத்தைக் கழுவி அகற்ற முடியவில்லை. மிக மென்மையாக வளர்க்கப்பட்ட உங்களால் எப்படி இந்த மாதிரி வேலைக்குப் பழக்கப் படுத்திக் கொள்ள முடியும்?’ 

“காட்டில் வாழ்ந்து பழகிவிட்டது போல் எந்த வேலைக்கும் என்னைப் பழக்கப் படுத்திக் கொள்ள முடியும்.” 

“காடு சுத்தமானது. மிருகங்களின் தோலை ஊறவைக்கும் அழுக்கான நாற்றமடிக்கும் குழிகளைப் போல் அல்லவே அவை.” 

நாரதர் எவ்வளவுதான் காரணங்களைக் கூறி முயற்சித்த போதும் தன்னுடன் இணைந்து வேலை செய்வதற்கு தந்தையார் சம்மதிக்கவில்லை. ஆனால் அவர் தங்கு வதை வரவேற்றார். ஒரு சோம்பேறியாக அவர்கள் வீட்டிலிருந்தபடி அவர்களுடைய உணவை உண்டு கொண்டிருப்பதற்கு நாரதர் மறுத்துவிட்டார். கடைசி யாக அவர்கள் ஒரு சமரசத்திற்கு வந்தனர். அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு துண்டு நிலம் குடிசையை ஒட்டினாற்போல் இருந்தது. நாரதர் விரும்பினால் அதில் அவர் விவசாயம் செய்யலாம் என்பதே அது. 

இந்தச் சம்மதத்திற்குப் பிறகு நாரதர் சந்தோஷ மாயிருந்தார். ஆனால் தான் முழு உண்மையுடன் செயல்படுகிறாரா என்பதில் அவருக்கு ஐயம் இருந்தது. ஏழைகளுடன் வாழ்ந்து அவர்களைப்பற்றி அறியும் விருப்பம் அவருக்கு இருந்தது. அது ஒரு புனைவல்ல. ஆனால் அந்தக் குடும்பத்துடன் இணைந்து கொள்ள அதுமட்டும்தான் ஒரு வலுவான காரணமா? அல்லது உண்மையில் மாயாவதியின் அழகும் இனிமையும் ஏற்படுத்திய வசீகரம்தானா இந்த முடிவை எடுக்க வைத்தது? இந்த முடிவுக்கே தந்தையாரும் வந்து விட்டாரா? 

தான் ஒரு செல்வந்தக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதை எந்த முன்யோசனையும் இல்லாமல், கூறியதால்தான் தந்தையார் இதற்குச் சம்மதித்தாரோ? அப்படியானால் தான் பணம் கொண்டு வருவேன் என்ற எதிர்பார்ப்புகள் எழாதபடி நேரத்துடன் தந்தைக்குப் புலப்படுத்திவிட வேண்டும் என எண்ணி னார். தனது குடும்பத்துடனான தொடர்புகளை அவர் அறுத்துவிட்டிருந்ததோடு எந்த வேளையிலும் அதைப் புதுப்பிக்கும் எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை. எனவே நாரதர் அந்தக் குடிசையில் இருந்து கொண்டு அந்தக் குடும்பதிற்குச் சொந்தமான நிலத்துண்டில் விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். நாரதருக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் தந்தையாரின் ஆலோ சனைப்படி, விவசாயத்தில் அறிவும், அனுபவமும் உள்ள அயலவரொருவரிடம் அறிவுரையும், வழி காட்டலும் பெற்றுக் கொண்டார். நாரதர் தானியங்கள் பயிரிட விரும்பினார். ஆனால் அயலவரோ சிரித்தபடி, ஓட முயல்வதற்கு முன் நடக்கப் பழக வேண்டும் எனக் கூறினார். 

“தானியங்கள் பயிரிடு நீர் பல விடயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். மழைக்காலம் எது, கோடைகாலம் எது என்று தெரிய வேண்டும். விதைப் புக்குச் சிறந்த காலம் எது, அறுவடைக் காலம் எது என்பது தெரிய வேண்டும்.ஏன் சுலபமான ஒன்றுடன் ஆரம்பிக்கக் கூடாது? கொடிவகைகள் பயிரிடலாமே. அவைகளுக்கு அதிக கவனிப்பு தேவையில்லை. இதன் மூலம் பயிர்கள் வளர்ந்து வருவதைக் கவனிக்கும் பழக்கம் உமக்கு ஏற்பட்டுவிடும்.”

நாரதர் விதைகளை ஊன்றிவிட்டு அது முளைவிட்டு வளர்வதை ஒவ்வொரு நாளும் அவதானித்தபடி இருந்தார். ஒரு விவசாயி என்ற வகையில் அவருக்கு வேலை செய்வதற்கு அதிக வேலை அப்போது இருக்கவில்லை. எனவே அநேகமான நேரம் மாயா வதி வீட்டு வேலைகள் செய்வதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பார். அல்லது அவர் ஓய்வாக இருக்கும் பொழுது அவளுடன் உரையாடுவார். தனது முன்னைய வாழ்க்கையைப் பற்றி அவளுக்குக் கூறினார். தனது குடும்பத்தவரின் செல்வப் பகட்டு, செல்வத்தை உழைப்பின் மூலம் உருவாக்கிய விவசாயிகளை அவர்கள் கொடுமைப்படுத்திய விதம், அவர்களுடைய பிராமணிய மதத்துடன் இணைந்த நல்லொழுக்கம் பற்றிய பாசாங்குகள், இவைகளினால் தனது குடும்பத்திலிருந்து தான் தனிமைப் பட்டுப் போனது ஆகிய எல்லாவற்றைப் பற்றியும் கூறினார். மாயாவதி தனது அகன்ற விழிகளால் அவரை நன்றாகக் கவனித்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் அவர் ஏதாவது கேள்வி கேட்டாலே ஒழிய மற்றும்படி அவள் மிக அரிதாகவே பேசினாள். 

நாரதருக்கு அவள் மீதிருந்த வசீகரம் கூடியது. அதேபோல் அவளது அன்பான குண இயல்பு அவள் மீது திடமான நம்பிக்கையை உருவாக்கியது. அதாவது, காயமடைந்த அணில் ஒன்றை அவள் கவனித்த விதம், தனது அயலவரொருவருடைய குழந்தை சுகவீனமுற்ற பொழுது அவள் பதற்ற மடைந்த தன்மை, அவளது குடும்பத்திலும் பார்க்க அருகாமையானவர்களிடம் அவள் காட்டிய பெருந் தன்மை போன்றவையே நற்குண இயல்புகள். தனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அவளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் அடிக்கடி யோசிப்பார். ஆனால் சில வேளைகளில், தனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு அவளைப் பற்றி அறிந்து கொண்டுவிட்டாரா என்ற ஐயமும் அவருக்கு இருக்கவே செய்தது. அப்படியான வேளைகளில் மாயைபற்றி அவருக்கு ஏற்கனவே இருந்த கற்பிதங்கள் திரும்ப வந்து தொந்தரவு செய்தன. மாயாவதி என்ற பெண்ணைப் பற்றிய படிமம் அவளது அழகினால் விழிப்படைந்த தனது ஆசையின் உருக்கமா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். முடிவாக, வாழ்வதினூடாகவே இத்தகைய சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். அவளிடம் சென்று இது பற்றிக் கேட்டார். 

“நீ ஏற்றுக் கொண்டால் என் வாழ்வை உன் வாழ்வுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன்.’ 

அவள் மிகுந்த சந்தோஷத்துடன் புன்னகைத்தாள். 

“நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே இதைக் கேட்டிருக் கலாம். நான் அப்போதே சம்மதித்திருப்பேன். நிச்சயமாக என்னுடைய பெற்றோரிடம் நான் இதைக் கேட்க வேண்டும். அவர்களுக்கும் உங்களைப் பிடிக்கும்.” 

திருமணச் சடங்குகள் எதுவும் அங்கு நடைபெற வில்லை.மறுநாள் இரவு அவர் உறங்கும், குடிசையின் மறுபுறத்திற்கு மாயாவதி தனது பாயுடன் வந்து அவருடன் உறங்கியபோது, பெற்றோர்கள் சம்மதித்து விட்டார்கள் என்பதை நாரதர் அறிந்து கொண்டார். இது எவ்வளவு எளிமை! எவ்வளவு உண்மை! என நாரதர் எண்ணிக்கொண்டார். அதேவேளை தனது அண்ணனின் திருமணம் பற்றித் தனக்குள் எழுந்த பேதங்களை எண்ணிப் பார்த்தார். பணத்திற்கும், நிலத்திற்குமாக நீண்ட நேரம் பேசப்பட்ட பேரம், அவமதிப்பதுபோல அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பக்தி பூர்வமான சமயச் சடங்குகள் என்பன ஞாபகத்திற்கு வந்தன. நாரதரும் மாயாவதியும் கணவன் மனைவியாகி விடுவார்கள் என்று ஏனைய கிராம மக்கள் நீண்ட காலத்திற்கு முன்பே எதிர்பார்த் திருந்தார்கள். ஒருவருடத்திற்குப் பின்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மாயாவதியையும் அடைந்து, ஒரு குழந்தைக்குத் தந்தையான பின்பும்கூட ஏன் தான் பூரண சந்தோஷம் அடையவில்லை என அடிக்கடி இரவில் விழித் தெழுந்து தனக்குத் தானே அவர் கேட்டுக்கொள்வார். தனக்கும் மாயாவதிக்கும் இடையில் இன்னமும் சிறிய இடைவெளி இருப்பதாக நாரதர் உணர்ந்தார். மாயாவதி அவரை ஒரு உயர்வான மனிதராகவே கருதினாள். ஏணைய கிராமத்துப் பெண்கள் தனது கணவன்மாரை கோபத்துடனும் அன்புடனும் பேசுவது போல் இவள் ஒருபோதும் செய்வதில்லை.

அது ஒரு மழைக்காலம். கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்தது. விட்டிற்கு வெளியே போய் எந்த வேலையையும் செய்ய முடியாதிருந்தது. இடைவிடாத இருட்டும், சொட்டிக்கொண்டிருக்கும் வானமும், இடி முழக்கமும் நாரதரை எரிச்சலடையச் செய்துகொண்டிருந்தன. அவர்களது உறவு தொடங் கிய ஆரம்ப நாட்களில் அழைத்தது போன்று யோசனை எதுவுமின்றி மாயாவதி “ஐயா” என விழித்தபோது நாரதருக்கு திடீரென கடும்கோபமே வந்துவிட்டது. 

“நானென்ன ஒரு நிலப்பிரபுவா? அல்லது கிராமத் தலைவனா? எது உன்னை ஐயா என அழைக்க வைத்தது?” 

மாயாவதி தலைவணங்கி “மன்னிக்க வேண்டும்” என்று கூறினாள். “நான் தவறு செய்து விட்டேன். அது எனது பழைய பழக்கம்.” 

கோபம் தணியும் வரை நாரதர் பொறுத்திருந்தார். அதன் பின் மிக அமைதியாக மீண்டும் கூறினார். 

“ஆனால் இது ஒரு வெறும் தவறு அல்ல” அவர் தொடர்ந்தார். 

”இன்னமும் என்னை உன்னிலும் பார்க்க மேலானவனாய் நடத்துகிறாய். சமனானவனாக அல்ல. இதனால் தான் இவ்வாறு நடக்கிறது.” 

“நீங்கள் எனது கணவராக இருக்கும் போது எவ்வாறு நான் உங்களுக்குச் சமமானவளாக இருக்க முடியும்?” அமைதியாக ஆனால் தன்னம்பிக்கையுடன் கூறினாள்.

“ஒருபெண்தனது கணவனுக்கு மரியாதை செலுத்தவும் கீழ்ப்படியவும் வேண்டும்தானே?” 

“அது நீண்ட காலத்திற்கு முன்பே நான் உதறிவிட்டு வந்த உலகத்தின் பொய்த் தோற்றங்களில் ஒன்று.”

”அனால் உங்களைப்போல் புத்திக் கூர்மையுள்ள வளோ, படித்தவளோ அல்ல” மாயாவதி பிடிவாதமாயிருந்தாள். 

“நான் எப்படி உங்களுக்குச் சமமானவளாய் இருக்க முடியும்?” 

“படித்தவளா? இல்லை, ஆனால் புத்திக்கூர்மை? கயிற்றை இழுக்கும்போது அது கழன்று வராதபடி ஒரு முடிச்சுப் போடத் தெரியாத ஒரு மூடனாக எப்படி நான் இருக்கிறேன் என்பதை நேற்று நீ எனக்குக் காட்ட வில்லையா?” 

“ஆனால் அது புத்திக் கூர்மையல்லவே”

“அப்படியென்றால் அது என்ன?” 

“அந்தவகையான வேலைகளை நான் வழமையாகச் செய்து வருவதால் அது மிகச் சாதாரணமாக முடிந்தது” ஆம்… வயிற்றில் நோய் கண்ட குழந்தைக்கு வேண்டிய சரியான மூலிகையை சாதாரணமாகக் கண்டு பிடிக்க முடிகிறது. அல்லது காகம் கரையும் முறையி லிருந்து வரப்போகும் புயல் பற்றி சொல்ல முடிகிறது. அல்லது பக்கத்து வீட்டுப் பெண்ணின் கண்களைப் பார்த்தே அவள்பொய் சொல்லுகிறாள் என உன்னால் கூற முடிகிறது.” 

மாயாவதிக்கு மிகுந்த வேடிக்கையாய் இருந்தது. 

“ஆம்… அதற்கு என்ன?” 

“ஆனால் என்னால் இவை எல்லாவற்றையும் செய்ய முடியாதே எனவே நான் புத்தி கூர்மையற்றவன். முட்டாளும் தானே” 

”ஆனால் எனக்குத் தெரியாத பல முக்கியமான விடயங்கள் உங்களுக்குத் தெரியுமே. எனவே நான் உங்களை மதிக்கவும், கீழ்ப்படியவும் வேண்டும் தானே”. 

“அது அப்படி என்றால் நான் என்ன செய்யச் சொல்கிறேனோ அதற்கு நீ இப்பொழுதே கீழ்ப்படிய வேண்டும்.” 

“சரி, உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” 

“அதாவது என்னை உனக்குச் சமமானவனாக நடத்த வேண்டும்.” 

ஒரு கணம் திகைத்த படி அவரை உற்றுப்பார்த்தாள். பின்பு உடல் குலுங்கச் சிரித்தாள். ஆனால் அந்த நேரம் முகத்தில் பயப் பீதி தெரிய தாயும் தந்தையும் உள்ளே ஓடி வந்துகொண்டிருந்தனர். 

“பிள்ளைகளே! ஆறு அணைக்கட்டை உடைத்து விட்டது. பெரிய வெள்ளப்பெருக்கு வரப்போவதாகப் பேசிக்கொள்கிறார்கள். குழந்தையைத் தூக்குங்கள். கொஞ்சம் உணவு எடுங்கள். விரையுங்கள். நாங்கள் தப்பியோட வேண்டும். ஒன்றுக்கும் நேரமில்லை.” 

எல்லாவற்றையும் அவசரமவசரமாகப் பேசி முடித்துக் கொண்டு குடிசையை விட்டு ஓடினார்கள். ஏனைய மக்களும் வீட்டைவிட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். சில மைல்களுக்கு அப்பால் வடக்குப் பக்கமாக உள்ள மேட்டுநிலத்தை நோக்கி எல்லோரும் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அரைவாசித் தூரத்தைக் கடக்குமுன்னரே வெள்ளம் அவர்களைச் சூழ்ந்துவிட்டது. பெருகிய வெள்ளம் இரக்க மில்லாமல் தன் பாதையில் வந்தவர்களைத் தன் போக்கில் அள்ளிச் சென்றுகொண்டிருந்தது. மாயாவதி யையும் குழந்தையையும் காப்பாற்றும் நம்பிக்கை யுடன் நாரதர் வீரத்துடன் போராடினார். ஆனால் நீரோட்டம் அவரை அப்பால் அடித்துச் சென்றது. அவரது தலை பாறை ஒன்றுடன் மோத அவர் நினைவிழந்தார். 

நாரதருக்கு நினைவு திரும்பியது. வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்ட அவர் ஒரு தட்டையான பாறை மீது கிடந்தார். எழுந்து சுற்றிலும் பார்த்தார். அவரின் பார்வைக்குத் தெரிந்ததெல்லாம் முடிவில் லாத வெள்ளக்காடே. அவரது மனைவியையோ, குழந்தையையோ பற்றி ஒரு தடயமும் இல்லை. நிலை குலைந்து பாறையில் வீழ்ந்து கண்ணீர் விட்டு மனம் புண்பட அழுது கொண்டிருந்தார். 

அப்போது தாழ்ந்த தொனியில் குரலொன்று கேட்டது. அது முன்பிருந்தே அவருக்குப் பரிச்சயமான ஒருவருடைய குரலாயுமிருந்தது. 

“குழந்தாய்! இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய்? அரை மணித்தியாலத்திற்கு முன்பு எனக்கு உறுதி அளித்தபடி நீர் கொண்டு வருவாய் என இங்கு நான் காத்துக்கொண்டிருக்கிறேன். 

அந்த முதியவரின் கண்களை உற்று நோக்கினார். அணைந்து கொண்டிருக்கும் நெருப்புத் தணலில் எதிர்ப்புறத்திலிருந்து முதியவர் நாரதரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு வெள்ளம் இருக்கவில்லை. அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்த காட்டின் வெட்டை வெளிப்பகுதிதான் அங்கிருந்தது. நாரதர் மீண்டும் முதியவரைப் பார்த்தார். திகைத்தார்.முதியவர் எழுந்து நின்றார். அவரது கூனல் முதுகு நிமிர்ந்து விட்டது. முதுமையைக் காட்டிய முகச் சுருக்கங்கள் மறைந்து விட்டன. இப்பொழுது அவர் நாரதருக்கு மேலாக பிரமாண்டமாக உயர்ந்து தனது விஸ்வரூபத்தினால் அடையாளம் காட்டினார். 

“விஷ்ணு” என்றபடி மூச்சை இழுந்தார். “பிரபுவே”

நாரதர் சாஷ்டாங்கமாக விழுந்தார். இறைவனின் உதட்டில் ஒரு அமைதியான நமட்டுச் சிரிப்பு மலர்ந்தது. 

“இப்பொழுது புரிந்து கொண்டாயா மாயையின் வலிமையை?” 

அது ஒரு காலை நேரம். காட்டின் வெட்டவெளியில் நீறாகிப் போன நெருப்பின் முன்னால் உற்சாகமிழந்த நிலையில் நாரதர் அமர்ந்திருந்தார். நாரதர் இந்த மனநிலையில் இருக்கும் போது விஷ்ணு மீண்டும் அவர் முன் தன் சுய உருவத்துடன் அந்த வெட்ட வெளியில் தோன்றினார். 

“உனக்கு என்ன பிழை நடந்தது” கடவுள் கேட்டார். குற்றம் சுமத்தும் பார்வையுடன் அவரை நோக்கினார் நாரதர். “ஏன் அந்தச் சூழ்ச்சியை என்மீது திணித்து விளையாடினீர்கள்”. 

”ஆனால் நீ விரும்பியதைத்தானே நான் செய்தேன். நீ மாயையின் வலிமையை அறிய விரும்பினாய். நான் ஒரு நேரடிப் பாடம் மூலம் அதை உனக்கு வெளிப் படுத்தினேன்.” 

”ஆம். இதை மிக நன்றாக மட்டுமே வெளிப் படுத்தினீர்கள்.” 

“நீ என்ன அர்த்தம் கொள்கிறாய். மேலும் உனக்கு இப்போது என்ன வேண்டும்?” 

“எனக்கு மாயாவதி வேண்டும்.” 

பாதி அலட்சியமும் பாதி அனுதாபமும் கலந்து புன்னகைத்தார். 

“ஆனால் அவள் இப்போது உயிருடன் இல்லையே. மாயையின் வலிமையை உனக்குக் காட்டுவதற்காக மட்டுமே அவளை நான் படைத்தேன்.” 

“அவள் ஒரு மாயை மட்டும்தான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவளை நான் கண்ட அந்த ரவிலிருந்து அவள் தண்ணீரில் மறைந்து போன அந்தக் கணம்வரை இதிலும் பார்க்க எனக்கு உண்மை யாக அவளால் இருந்திருக்க முடியாது. அவளுடன் ஒரு வருடம் வாழ்ந்தேன். அவளுடன் காதல் செய்தேன். அவளுக்கு ஒரு குழந்தை கிடைத்தது. இவையெல் லாம் ஒரு மாயை என்று உங்களால் எப்படிக் கூற முடியும்.” 

நாரதரின் மடமைத்தனத்தால் பொறுமையிழந்து வெறுப்புடன் தோள்களை உயர்த்தினார். 

“நாரதா கவனி! நீ ஒரு பெண்ணுடன் காதல் செய்ததாக ஒருபோதும் கனவு கண்டதில்லையா?” 

“ஆம். கண்டிருக்கிறேன். அதற்கு என்ன இப்போது?” ‘கனவு காணும்போது இரத்தமும் சதையும் கொண்ட எல்லாம் உண்மைப் பெண்களைப் போல அப்பெண்ணும் இருந்ததில்லையா? இருந்தாலும் நீ விழித்தெழுந்த பின்பு நீ தழுவிக் கொண்டிருந்த சூடான உடம்பு உன்னுடைய தலையணை மட்டும்தான் என்பது தெரியவரும். அநேகமாக தூக்கக் கலக்கம் மாறாது இருக்கும் போது சில கணங்களுக்கு அவள் பாதி உண்மையாகத் தெரிவாள். ஆனால் பகல் வரும் பொழுது கனவு முழுமையாகக் கலைந்து விடுகிறது. அப்படித்தானே?” 

“அதற்காக”

“நல்லது மாயாவதியின் விடயமும் அப்படித்தான். உறக்கத்தில் வரும் ஒரு வித்தியாசமான வகைக் கனவாக இருந்த போதும் நீ கண்டது கனவுதான் என்று சற்று எண்ணிப்பார். ஆனால் அந்தக் கனவுகளில் பொய்த் தோற்றமாக ஒரு பெண்ணைப்போல் வந்தவளே மாயாவதி. மேலும், நீ ஒரு வருடமாக அவளைக் காதலித்ததாகக் கூறுகிறாய். நான் இவ்வளவு நேரமும் இந்த நெருப்புக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அரை மணித்தியாலம் மட்டுமே சென்றிருந்தது. மனிதர்களின் நேரக் கணக்குப்படி அது கிட்டத்தட்ட அரை மணித்தியாலமே. கடவுள்களாகிய எமக்கு நிச்சயமாக அது அர்த்தமில்லாததே.” 

“ஏன்” 

“நித்தியத்தில் நாம் வாழ்வதால் எமக்கு நேரம் கழிவ தில்லை. ஆனால் நீ இன்னும் அதைப் புரிந்து கொள்ள ஆயத்தமாக இல்லை என்று எண்ணுகிறேன்.” 

“நித்தியத் தன்மையுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஏன் என்னைப் போன்று இறக்கும் தன்மை யுடையவர்களுடன் தந்திர விளையாட்டுக்களில் ஈடுபடுகிறீர்கள்?” 

”உன்னுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்றத் தான் அதாவது மாயையின் வலிமையை உனக்கு உணர்த்தத்தான் நான் விழைந்தேன். மேலும், மாயாவதி மீது நீ காதல் கொண்டதற்காக என்மீது குற்றம் சுமத்தாதே. நீ கனவில் ஒரு பெண்ணுடன் காதல் செய்யும் பொழுது அப்பெண்ணை தோற்று வித்தது உனது மறைந்த அல்லது முற்றாக மறைக்கப் படாத ஆசைகளேதான். அதே போலத்தான் இன்ன மும் அடக்கியாளப்படாத உன் ஆசைகளின் படிமமே மாயாவதி. 

”நான் இன்னமும் அப்படியேதான் இருக்கிறேன் எனக்கு அவள் வேண்டும்”. நாரதர் பிடிவாதமாக கூறினார்.”நீ குழந்தையாகி வருகிறாய். நான் மீண்டும் மீண்டும் கூறவில்லையா அவள் ஒரு பொய்த் தோற்றம் என்று” 

மண்ணுலகப் பொருட்களைப் பற்றிப் புனித நூல்களும் அதைத்தானே கூறுகிறது. அதாவது அவையெல்லாம் ஒரு பொய்தோற்றம் என்று” 

“அதற்காக?” 

”அப்படியென்றால் என்னைச் சந்தோஷமாக வைத் திருக்கும் அந்த பொய்த் தோற்றத்தை நான் ஏன் வைத்திருக்கக் கூடாது?” 

விஷ்ணு குழம்பிப்போய் நாரதரைப் பார்த்தார். 

“உங்களது வேலையை நீங்கள் மிக நன்றாகச் செய்தீர் கள் என்று நான் கூறினேனே பிரபு. அவள் அழகாக இருந்தாள் என்பதற்காக மட்டும் நான் அவளை விரும்பவில்லை. அவள் சாந்தமானவளாகவும், இரக்கமுற்றவளாகவும் இருந்தாள். வாழ்க்கை பற்றிய அவளது புரிந்துணர்வு துறவிகள் காட்டும் எல்லா ஞானத்திலும் பார்க்க மேலாக இருந்தது. மாயாவதியை எனக்குத் திரும்பித் தாருங்கள், பிரபு” 

சந்தேகம் இன்னும் மாறாத நிலையில் மீண்டும் விஷ்ணு நாரதரைப் பார்த்தார். 

“சென்ற தடவை உங்களுடனான சந்திப்பை எனது ஞாபத்திலிருந்து அகற்றியிருந்தீர்கள். இப்பொழுதும் அதையே மீண்டும் செய்யுங்கள் பிரபு. மாயாவதி இறந்த விடயத்தை என்னிலிருந்து மறக்கச் செய்யுங்கள். அவள் ஒரு பொய்தோற்றம் என்பதையும் என்னிலிருந்து மறக்கச் செய்துவிடுங்கள். நான் முன்பு செய்தது போலவே அவளை விரும்பவும், அவளுடன் வாழவும் விட்டுவிடுங்கள்”. 

விஷ்ணு சில கணங்கள் அமைதியாகச் சிந்தனை செய்தார். 

“மிக நல்லது. நான் மாயாவதிக்கு உயிரளிக்கிறேன். அவளிடம் செல். அதே கிராமத்தில் அதே குடிசையில் அவள் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்” விஷ்ணு கடைசியில் கூறினார். 

நாரதர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். 

“மிக்க நன்றி பிரபுவே”. 

இரவிலும் பார்க்க பகலில் காட்டைக் கடந்து செல்வது நாரதருக்கு சுலபமாகவும் விரைவாகவும் இருந்தது. காட்டின் மறு முனைக்குச் சென்று, சிறிது தூரத்தில் இருந்த கிராமத்தைக் கண்டபொழுது நாரதருக்கு ஞாபகமாயிருந்த பலவிடயங்கள் மனதிலிருந்து மறைந்து போயிருந்தன. சில காலம் கிராமத்தை விட்டுப் பிரிந்து எங்கோ இருந்ததாக அவர் நினைத்தார். தவிர, மிருகத் தோல்களை விற்பதற்கான நிலைமை களை அறிந்து வர பிரயாணம் செய்து வந்ததாக நம்பினார். எப்படியாயினும் தனக்குக் கிடைத்த சில அனுபவங்கள் அல்லது எண்ணங்கள் பற்றித் தெளிவு குறைவாக இருந்ததையும் உணர்ந்தார். அவர் எவ்வளவு காலம் பிரிந்திருந்தார்? அதை அவரால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ‘நீண்டபயணக் களைப்பின் காரணமாகத்தான் இப்படி ஏற்பட்டிருக்கக் கூடும்’ என தனக்குத் தானே நினைத்துக் கொண்டார்.

“அல்லது சிலவேளை இந்த வகையினால் ஏற்பட்டதே” 

அவர் குடிசைக்குள் நுழைந்த பொழுது தந்தையார் அவரைக் கட்டியணைத்து வரவேற்றார். 

”மகனே! உன்னைத் திரும்பவும் காண எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு காலம் சென்றுவிட்டது. ” 

“மிக நீண்ட காலமாகிவிட்டதா? ” நாரதர் கேட்டார்.

“ஏன் உனக்கு ஞாபகம் இல்லையா? வசந்தகால மழைக்கு முன் புறப்பட்டுச் சென்றாய். இப்போது கோடைகாலமாகிப் போய்விட்டது. நல்ல மழை பெய்தது சனங்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும்.”

“இதைத் தவிர ஒரு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டதாக ஒரு மங்கலான ஞாபகம் வருகிறதே” நாரதர் கூறினார்.

“வெள்ளப் பெருக்கா? என்ன கூறுகிறாய். நான் சிறுவானக இருந்ததிலிருந்து இந்தப் பகுதியில் வெள்ளைப் பெருக்கு எதுவும் ஏற்பட்டதில்லையே.” 

”நான் கனவு தான் கண்டிருக்கிறேன்” நாரதர் கூறினார் சமையற்கட்டிலிருந்து வந்த மாயாவதியின் தாயாரும் கூட நாரதரைக் கட்டியணைத்துக் கொண்டார். 

“மாயாவதி எங்கே?” சுற்றும் முற்றும் பார்த்தபடி நாரதர் கேட்டார். 

“அவள் இருக்கிறாள்” பதற்றம் நிறைந்த குரலில் தாயார் கூறினார். 

மாயாவதி தோன்றினாள். முந்தானையால் தலையை மூடியிருந்தாள். அத்துடன் தனது முகத்தின் ஒரு பகுதியை மறைப்பதற்காக முந்தானையை இழுத்துப் பிடித்திருந்தாள். 

“மாயவதிநாரதர்கத்தினார். “பிரிந்திருந்த இவ்வளவு காலமும் எவ்வளவு ஆசையுடன் உனக்காகக் காத்திருந்தேன்.” 

அவர் அவளை உற்றுப் பார்த்தார். ஆனால் ஒன்றும் கூறவில்லை. 

“ஏன் உன் முகத்தை மூடியிருக்கிறாய்?” 

“நான் ஒவ்வொரு இரவும் கனவு கண்ட முகமல்லவா அது. அந்தக் கனவிலும் பார்க்க அழகாக இருக்கும் அந்த முகத்தைப் பார்க்க விடு”. 

மாயாவதி நிலத்தில் அமர்ந்தாள், ஆனால் எதுவுமே இன்னும் பேசவில்லை. 

”ஏன் அங்கிருக்கிறாய்? இங்கே வா மாயாவதி. உன்னைத் தொட உன் கரத்தைப் பற்ற என்னை விடு” 

“நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது” மாயாவதி கவலையுடன் கூறினாள். 

“ஏன் முடியாது?” 

அங்கு நிலவிய நீண்ட அமைதியை தாயார் கலைத்தார். “அவளுக்குத் தொழுநோய்” 

“இது எப்போது ஏற்பட்டது. ” நாரதர் கேட்டார். 

“நீங்கள் பிரிந்து சென்று சுமார் ஒரு மாதத்தின் பின் முதல் அறிகுறிகள் தோன்றின.’ மாயாவதி கூறினாள். 

”நான் மற்றவர்களைத் தொட்டாலோ அல்லது அவர்கள் என்னைத் தொட்டாலோ நான் அவர்களுக்கு நோயைப் பரப்பிவிடுவேன் என்று கிராமத்து வைத்தி யர் கூறினார். நான் இப்போது குழந்தைக்குக் கூட உணவு ஊட்டுவதோ, கழுவுவதோ, உடை அணிவிப் பதோ இல்லை. தாயாரே எல்லாவற்றையும் செய கிறாள். ஆகையால் நான் உங்களைத் தொடக் கூடாது”. 

“இல்லை” நாரதர் கத்தினார். 

அவர் அவளை நோக்கிச் சென்றார். அவள் அவரிட மிருந்து பாய்ந்து பின் வாங்கிச் சென்றுவிட்டாள் நாரதர் கதியற்று நின்றபடி “உனது முகத்தையாவது எனக்குக் காட்டு” என மனமிளகக் கேட்டார். 

“வேண்டாம் அது விவகாரமாகவும் அவலட்சணமாக வும் இருக்கிறது. உங்களை வெறுப்படையச் செய்யும். என் மீது அருவருப்புக் கொள்வீர்கள். என்னை வெறுப்பீர்கள்.” 

“உன்னுடைய முகத்தை எனக்குக் காட்டு” நாரதர் மீண்டும் கேட்டார். 

அவள் மெதுவாக பயத்துடன் முந்தானையை தனது முகத்திலிருந்து நீக்கினார். 

“நீ இன்னமும் எனக்கு அழகானவளே மாயாவதி.’ நாரதர் கூறினார் “உன்னைக் காதலிப்பதை நான் ஒரு போதும் நிறுத்தமாட்டேன். நான் விரும்பும் உலகத்தில் எல்லாமே நீதான்.” 

அவள் மெதுவாக நிலத்தில் சரிந்தாள். தனது முகத்தை மறைத்தபடி வெடித்துச் சிதறி அழுது கொண்டிருந்தாள். 

நாரதர் இரண்டு நாட்கள் வீட்டில் தங்கினார். ஆனால் மாயாவதி அவரருகே வராது குடிசைக்குப் பின்னால் இருந்த சமையற்கட்டில் இரவில் படுத்துறங்கினாள். இந்த நிலமை நாரதருக்குத் தாங்கமுடியாத வேதனை யைத் தந்தது. இரண்டு நாட்கள் முடிந்தபின்பு அவளது நோய்க்கு சிகிச்சையளிக்க மருந்து தேடிப் புறப்பட்டுச் செல்வது எனத் தீர்மானித்தார். அப்படியே செய்தார்.

நாரதர் கிராமம் கிராமமாகவும், நகரம் நகரமாகவும் மருந்து தேடியலைந்தார். பலதடவைகள் வதந்திகளை நம்பிச் சென்று பின் விசாரித்துப் பார்த்து ஏமாற்ற மடைந்தார். இவையெல்லாவற்றிற்கும் பிறகு, அருகில் உள்ள நகரமொன்றில் வைத்தியர் ஒருவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். இம்முறை அவர் கேள்விப்பட்ட கதைகளில் உண்மை இருந்தது போல தோன்றியது அந்த வைத்தியரின் வீட்டுக்கான வழியை அறிந்து அங்கு சென்று அவரது அறையில் அவரைக் கண்டார். 

நாரதரின் கதையைக் கவனத்துடன் கேட்டார் அந்த முதிய வைத்தியர். 

”இந்த நிலையில் இன்னும் அதிகமாக எனது மனைவியை நான் காதலிக்கிறேன்.” என்று கூறி முடித்தார். 

“அவளுடைய புண்களைக் கழுவிச் சுத்தமாக்க சித்த மாயிருக்கிறேன். எனக்கு அதனால் வியாதி தொற்றி இறக்கக்கூட சித்தமாயிருக்கிறேன். ஆனால் அவளோ வெட்கப்பட்டு, தன்னைத்தானே அலட்சியப்படுத்திக் கொள்வதோடு என்னைப் பற்றியும் பயப்படுகிறாள். உங்களால் அவளைக் குணப்படுத்த முடியுமா வைத்தியரே?” 

வைத்தியர் தனது மேசையிலிருந்த மண் விளக்கில் ஏதோ ஒரு எண்ணெயை ஊற்றினார். பின் அதன் திரியைப் பற்றவைத்து அதன் மீது மந்திரத்தை சொல்லத் தொடங்கினார். பிறகு நாரதரிடம் திரும்பி வந்தார். 

“இந்த விளக்கு எரிந்து முடிகிற நேரத்தில் உனது மனைவி குணமாகிவிடுவாள். அவளிடம் திரும்பிப்போ” என்று கூறினார். 

நாரதர் அவருக்கு ஆழ்ந்த நன்றியைச் செலுத்திவிட்டுப் புறப்பட்டார். 

இரண்டு நாள் பயணத்திற்குப் பின்பு குடிசையை நெருங்கிக் கொண்டிருந்த நாரதரைச் சந்திப்பதற்காகத் தாயாரும், தந்தையும் வெளியே ஓடி வந்தார்கள். ஆனாலும் அவரை வாழ்த்தியபோது அவர்களது முகங்கள் சோர்வடைந்து காணப்பட்டன. 

“நீ மிகவும் களைப்படைந்து போயிருக்கிறாய் என் மகனே” தந்தையார் கூறினார். 

“ஆம் நேற்றிலிருந்து இருபது மைல்கள் நடந்து விட்டேன். அது ஒன்றும் முக்கியமானதல்ல. மாயாவதி எங்கே?” 

தந்தையும் தாயும் அமைதியாயிருந்தனர். 

“எங்கே அவள்? அவளுடைய நோய் இன்னும் குணமாகவில்லையா?” 

இப்போதும்கூட பெற்றோர் அமைதியாக இருந்தனர். ‘எங்கே அவள்?” துர்க்குறி காட்டும் அவர்களது முகத்தைப் பார்த்தபடி கத்தினார். 

“சாகவில்லை…. என்று நினைக்கிறேன்.”

“சாகவில்லை” தந்தை சொன்னார். “ஆனால் செத்திருக்கலாம் என ஆசைப்படுகிறேன்.’ 

“நீங்கள் அப்படிக் கூறக்கூடாது” அமைதியாக கடிந்து கொள்ளும் தொனியில் தாய் கூறினாள். “என்ன நடந்தது?” நாரதர் கேட்டார். 

“நீ புறப்பட்டுச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு…” தாய் விளக்கமளித்துக் கொண்டிருந்தாள்.

“திடீரென தொழுநோய் மறைந்துவிட்டது. வைத்தியர் களால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இது ஒருவகை அதிசயமாகத்தான் இருந்தது. அவள் சந்தோஷமாக இருந்தாள். நீங்கள் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த வேளை பக்கத்துக் கிராமத்து இளைஞன் ஒருவன் எங்கள் அயலவர் வீட்டிற்குக் குடிவந்தான்.” மேலும் நடந்தவற்றைச் சொல்லுவதற்குத் தாய் தயங்குவது போல் தெரிந்தது. 

‘ஆம்’ நாரதர் அவசரப்படுத்தினார். 

“என்ன நடந்தது என்று எனக்கு ஒன்றுமே புரிய வில்லை. “தாய் தொடர்ந்து கூறினாள். ”ஆனால் அவள் அவன் மீது காதல் கொண்டாள். அவளுக்கு வசியமருந்து கொடுத்ததுபோலோ அல்லது மந்திரம் போட்டது போலோ அது இருந்தது. அப்படியான விஷயங்கள் இருப்பது உனக்குத் தெரியும்தானே” 

”அதற்குப்பிறகு?” 

“அவள் அவனுடன் இங்கு வாழ விரும்பினாள். ஆனால் தகப்பன் அதற்கு அனுமதிக்கவேயில்லை. அதனால் அவள் அவனுடன் போய்விட்டாள்.” 

“அப்படியானால் குழந்தை?” நாரதர் கேட்டார்.

“அவள் குழந்தையை விட விரும்பவில்லை. அவர்கள் குழந்தையையும் கூட்டிச் சென்றனர். 

“அவளுக்குத் தொழுநோய் குணமாகாமல் இருந்திருந்தால் நல்லதாய் இருந்திருக்கும். தந்தை கசப்புடன் கூறினார். ”அவள் விகாரமாகவும், அழுக்காகவும் இருந்திருந்தால் ஒழுக்கம் கெட்டவளாகியிருக்க மாட்டாள்.” 

“நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது”. நாரதர் பதில் கூறினார். 

“இது அவளுடைய தவறு அல்ல. நான் அவளை அதிகமாக விரும்பினாலும் கூட எங்களுக்கிடையில் இன்னமும் ஒரு அந்நியத்தன்மை இருந்தது. ஒரு வேளை அந்த மனிதனுடன் அவளுக்கு அது சுலபமாக இருந்திருக்கலாம்.” 

தான் கொண்டு வந்த ஆடைப் பொதியைத் தூக்கிக் கொண்டார் நாரதர். 

“அவர்கள் எங்கு போயிருக்கலாம் என்று தெரியுமா என பக்கத்து வீட்டாரைக் கேட்டுப்பார்க்கிறேன்.” 

“மூர்க்கத்தனமாக எதையும் செய்துவிடமாட்டாய் தானே எனது மகனே?” கவலைப் பட்டுக்கொண்டே தாய் கேட்டாள். “நீ அவளைக் கண்டால் அவனுடன் சண்டை பிடிக்கவோ, அல்லது அவளைக் கொல்லவோ மாட்டாய் தானே…. என் மகனே?” 

“அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் தாயாரே” நாரதர் கூறினார். “நான் அவளை நிச்சயம் கண்டால் என்னுடன் மீண்டும் திரும்பிவர அவளை இணங்க வைக்க முயல்வேன். முடியாது போனால் அவளுக்கு எந்தவித தீங்கும் செய்யமாட்டேன். அப்படிச் செய் வதிலும் பார்க்க நான் இறந்துவிடுவேன் தாயாரே.’ “எல்லா இடங்களுக்கும் நடந்து நீ நன்றாகக் களைத்துப் போய்விட்டாய் மகனே’ தாயார் கூறினார். “சிறிது நேரமாவது ஓய்வெடுத்துவிட்டுச்சாப்பிடு.” ”வேண்டாம், நன்றி தாயே, நான் உடனடியாக போயே ஆகவேண்டும்.” 

கிராமத்தை விட்டுப் பிரிந்து செல்லும் தெருவால் சென்று கொண்டிருந்தார் நாரதர். ஆனால் அதிக தூரம் அவர் செல்லவில்லை. தெருவின் திருப்பத்தை அடைந்ததும் ஆலமரம் ஒன்று அவர் கண்ணுக்குத் தென்பட்டது. அம்மரத்தின் கீழ் ஒரு உருவம் நிற்பதைக் கண்டார். அதற்கு அருகாமையில் சென்ற பொழுது அதை அடையாளம் கண்டு கொண்டார். அது விஷ்ணுவேதான். அடையாளம் கண்டதும், பொங்கி வரும் கடலலைபோல நாரதருக்கு சகலதும் புரிந்தது. 

“இதைச் செய்தது தாங்களே என்று இப்போது எனக்குப் புரிகிறது.” மரத்தடிக்கு வந்த நாரதர் கூறினார். ‘ஆனால் ஏன்? முதலில் அவளைக் கொன்றீர்கள். பிறகு அவளுடைய அழகை அழித்தீர்கள். அதன் பின் அவளைச் சோரம்போகச் செய்தீர்கள். ஏன் இவற்றையெல்லாம் செய்தீர்கள். நான் மிகச் சாதாரண மகிழ்ச்சியைப் பெறவேண்டிய பொழுதெல்லாம் ஏன் எனக்கு கேடுக்கு மேல் கேடு விளைவித்தீர்கள்?” 

“நாரதாகவனி கடவுள்கூறினார். “உனக்குத் தெரியும் நான் மாயாவதியைப் படைத்தது உன்னுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்றவும், மாயையின் வலிமையை நீ புரிந்து கொள்ள உதவவுமே.” 

”ஆம்” 

“ஆனால் அவளைப் படைத்ததன் மூலமும், அவளை நீ காதல் செய்ய விட்டதன் மூலமும் நீ காதலித்தது வெறும் பொய்த்தோற்றமே தவிர வேறொன்று மில்லை என்பதைக் காட்ட நான் அவளைக் கொல்ல வேண்டியிருந்தது. ஆனால் நீயோ அதன் பிறகு மாயை வலையில் ஆழமாகச் சிக்கிவிட்டாய். நீ மீண்டும் அவளை வேண்டினாய்” 

“மேலும் தாங்கள் எனக்குத் திரும்பத் தந்தீர்கள். ஏன் அத்துடன் இதை விட்டிருக்கக்கூடாது?” 

“ஏனென்றால் மாயையிலிருந்து நீ விடுபட வேண்டு மென மேலும் நான் முயன்று பார்த்தேன். அவளது அழகை அழிக்க அவளுக்கு தொழுநோயைக் கொடுத் தேன். உனது காதலை அது கொன்றுவிடும் என்ற நம்பிக்கையில் அதைச் செய்தேன். ஆனால் நீயோ அவளது புற அழகையல்ல அக அழகைத்தான் விரும்பி னாய் என எனக்கு நிரூபித்துவிட்டாய். எனவே மீண்டும் ஒருமுறை நான் முயற்சி செய்ய வேண்டியிருந் தது. இம்முறை அவளை ஒரு சோரம்போனவளாக்கி அவள் மூலமாக உன் காதலை அழிக்க முயன்றேன். ஆனால் நான் தோற்றுவிட்டேன்.” 

“இப்பொழுது மேலும் என்னுடன் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” 

“நான் விட்டுவிட்டேன். நான் விட்டுவிட்டதற்குக் காரணம் நீ எந்தவகை மனிதன் என்பது எனக்கு இப்போது புரிந்துவிட்டது.” 

“நான் என்ன வகை?” 

“உண்மை அன்புடையான்.” 

“அதனுடைய அர்த்தம் தான் என்ன?” 

விஷ்ணுவின் குரல் ஒரு ஆசிரியருடைய தொனியில் ஒலித்தது. மண்ணுலகப் பொருள் ஒன்றை முழுமை யாகவும் முடிவில்லாமலும் விரும்பும் பலவகை மனிதர்கள் இருக்கிறார்கள். அளவு கடந்து அதை நாடுகிறார்கள். நியாயத்திற்கு எதிராக எத்தகைய தியாகத்தைச் செய்தாவது அதை அடைந்து விடுகிறார் கள். அந்த வழியில் சில மனிதர்கள் செல்வத்தை விரும்புகிறார்கள். சிலர் அதிகாரத்தை விரும்புகிறார் கள். ஆனால் இன்னொரு மனித உயிரில் அன்பு செலுத்தும் ஒருவகை மனிதரும் இருக்கிறார்கள். அது ஆணாகவும் இருக்கலாம் அல்லது பெண்ணாகவும் இருக்கலாம். அவர்கள் எல்லா விதமான தடைகளை யும், ஏமாற்றங்களையும், துன்பங்களையும் அதன் காரணமாகப் பெற்றும் தொடர்ந்தும் அன்பு செலுத்து கிறார்கள். நீ அந்தவகை மனிதன் தான்”

“அப்படியென்றால் பிரபு” நாரதர் மறுத்துரைக்கத் தொடங்கினார். 

“உலக பந்தங்களிலிருந்து விடுபடுவதே எனக்கு வேண்டும் என முதலில் நம்பியிருந்தேனே” 

“அது எனது கற்பிதம், ஆனால் அதனுடைய அர்த்தம் பெரும்பாலான மக்கள் உலகத்துடன் விட்டுக் கொடுத் தலும், ஒத்துப்போதலிலும் திருப்திப்படுவது போன்று நீயும் திருப்தி அடைவது அல்ல என்பதே அது. நீ உண்மையில் தேடிக் கொண்டிருந்தது என்ன வென்றால் பரிபூரண பக்தியுடன் நீ சரணடைய விரும்பிய ஏதோ ஒன்றைத்தான். அதாவது முழுமை யாக நேசிக்கப்படவேண்டிய ஒன்றுதான் எனக்குத் தேவைப்பட்டது. ஆனால் மாயாவதியைக் காணும் வரையில் நீ அப்படி ஒன்றையும் காணவில்லை.

“மேலும் இனி என்னுடன் என்ன செய்யப் போகிறீர்கள் பிரபு? திகிலுடன் கேட்டார் நாரதர். 

“ஒன்றும் செய்யமாட்டேன் பயப்படாதே. உன்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்க என்னிடம் எதுவும் இல்லை. மாயாவதியின் காதலன் அவளை விட்டுச் சென்று விட்டான், குழந்தையுடன் அவள் வீடு திரும்பியுள்ளாள் நீ வருவாய் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறாள். நீ விரும்பிய எளிமை யான சாதாரணமான மகிழ்ச்சியை இனி நான் குழப்ப மாட்டேன்.” ”இதையும் கேள்’ கடவுள் மீண்டும் உதட்டில் ஒரு நமட்டுப் புன்னகை சுழிக்க தொடர்ந்தார் ‘வாழ்க்கைச் சக்கரத்துடன் பிணைக்கப்பட்டிருப் பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருக் கும் எளிய, சாதாரணமான மகிழ்ச்சியின்மை காத்திருக்கிறது. 

“அதற்கு முகம் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் அந்தச் சக்கரத்திலிருந்து விடுதலையை நான் இப்போது வேண்டவில்லை, மனித வாழ்வின் இன்பங்களிலும், துன்பங்களிலும் திருப்தி கொள்ளவும், வாழ்க்கையை அதன் குறைகளுடன் பலவீனத்துடன் அணைத்துக் கொள்ளவும் மாயாவதி எனக்குக் கற்றுத் தந்திருக்கிறாள்”

“ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் உண்மை யில் எதைத் தேடுகிறார்களோ அதை அவர்கள் அடைந்தே தீருவார்கள். எனவே உனது வழியில் செல் நாரதா. நீ அதில் மனத் திருப்தி அடைவாய்.”

“நிச்சயம் செய்வேன் பிரபு. எனக்கு அதில் பயமெதுவும் கிடையாது.”

அவர் கடைசி முறையாக சாஷ்டாங்கமாக விழுந்துவணங்கினார்.

– 1998, காலம் காலாண்டிதழ் 12. ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தனா, தமிழில் : இ.கிருஷ்ணகுமார்.

றெஜி சிறிவர்த்தனா (Regi Siriwardena) – கொழும்பில் இயங்கும் இன ஆய்வுக்கான சர்வதேச நிறுவனத்தின் (International Centre for ethnic Studies) ஆசிரியராக தற்போது பணியுரியும் இவர் ஒரு பத்திரிக்கையாளராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், ஏற்கனவே பணியாற்றியவர், இலங்கையின் தலைசிறந்த இலக்கிய வாதிகளில் ஒருவரான இவர் ஐரோப்பிய மொழிகளிலிருந்து பல கவிதைகளையும், நாடகங்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். 

ஆங்கிலத்தில் இரு நாடகத் தொகுதிகளையும் வெளியிட்ட இவர் தற்பொழுது தனது இரண்டாவது நாவலை ஆக்கிக் கொண்டிருக்கிறார். 

இங்கு பிரசுரமாகும் “மாயா” என்ற சிறுகதை இவர் ஆசிரியராக பணிபுரியும் ICES நிறுவனத்தின் காலாண்டு வெளியீடான “Nethra” (Vol.1, No.3 1997) என்ற பருவ இதழில் வெளிவந்தது. 

“மாயா’வை ஒரு தொலைக்காட்சி நாடகமாக உருவாக்கும் நடவடிக்கைகளும் தற்பொழுது நடைபெறுகின்றன. றெஜி சிறிவர்தனா மனித உரிமை நடவடிக்கைகளிலும் தீவிர ஈடுபாடுடையவர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *