நீலகண்டன் ஹோட்டல்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: December 13, 2024
பார்வையிட்டோர்: 11,777
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21
16. துரையின் மாப்பிள்ளைக்கு எம்புர யாத்திரை!
பொன்னம்பலம் இறந்துவிட்டான்: அதில் சந்தேகத்திற்கு இடமேயில்லை.
நீலகண்டனும் அதற்குள் அங்கு வந்து சேர்ந்து விட்டார்.
“இங்குள்ள விளக்குகளுக்கு ‘ஸ்விட்ச்’ எங்கே இருக்கிறது?” என்று கேட்டார் பரஞ்சோதி.
நீலகண்டன் அந்த ஸ்விட்ச் இருந்த இடத்திற்குப் போய் அதைப் பொருத்திவிட்டு வந்தார். மூர்ச்சை அடைந்திருந்த ராணிபவானியை தெளிவடையச் செய்ய செல்வராஜ் அரும்பாடுபட்டுக் கொண்டு இருந்தான்.
இந்த சமயத்தில் வராந்தாவிலிருந்த இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி எதிர்க் கோடியிலே இருளில் ஏதோ ஒரு உருவம் தெரிவதைக் கவனித்தார்.
“யாரது? இங்கே வா” என்று அதிகார தொனியில் கத்தினார்.
தோட்டத்திற்கு இறங்கிச் செல்லும் படிக்கட்டின் அருகிலிருந்து ஒரு உருவம் மெதுவாக அவரை நோக்கி வந்தது.
“அட; தம்பித்துரையா? நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்?”
தம்பித்துரை ரொம்ப அமைதியாகக் காணப்பட்டார். பிணமாகக் கிடந்த பொன்னம்பலத்தைக் கூர்ந்து பார்த்தார்.
“இறந்துவிட்டானா? அவன் அடைய வேண்டிய பரிசை அடைந்து விட்டான்”
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.
“உங்கள் கையைக் காட்டுங்கள், தம்பித்துரை!”
“தாராளமாய்ப் பாருங்கள்!” என்று இருகை களையும் அகல விரித்துக் காண்பித்தார் தம்பித்துரை. அந்தக் கைகளில், எந்தவித ரத்தக் கறையும் இல்லை.
“இப்பொழுது தான், ராஜாபகதூர் தில்லையம்பலம் தனது காரை கிளப்புவதற்கு அவருக்கு ஒத்தாசை செய்துவிட்டு வந்தேன்–” என்று புன்னகையுடன் கூறினார் தம்பித்துரை.
“அவர் எங்கே–எங்கே போனார்?” என்று அவசரமாகக் கேட்டார் பரஞ்சோதி.
“நான் வெளியிலிருந்து வந்த பொழுது, அவர் தன் காரில் உட்கார்ந்திருந்தார். சீதோஷ்ண நிலையால் காரைக் கிளப்ப முடியாமல் இருப்பதாகவும், தனக்குச் சிறிது உதவி செய்யும்படியும் கேட்டார்…..அவர், சென்னைக்குச் செல்கிறார். டிரைவரைக் கூப்பிடுவதாகச் சொன்னேன். ஆனால் அவர் ரொம்ப அவசரமாகக் கிளம்பிக் கொண்டு இருந்ததால், டிரைவருக்காகக் காத்திருக்கக்கூட அவரால் முடியவில்லை……
சட்டென்று இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி நீலகண்டனின் பக்கம் திரும்பி, அதிகாரமான குரலில், “செல்வராஜைக் கூட்டிவா! யாராவது ஒரு வேலைக்காரி, ரா ணி பவானியைப் பார்த்துக் கொள்ளட்டும். அவளிடம் பிறகு பேசிக் கொள்கிறேன். உடனே, சென்னை பிரதம போலீஸ் அதிகாரிக்கு டெலிபோனில் தொலைதூரத் தொடர்பு ஏற்படுத்த முயற்சி செய்! உள்ளூர் டாக்டரைத் தருவிப்பதோடு, உள்ளூர் போலீஸாருக்கும் தகவல் கொடு!” என்றார்.
“நான் எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யமுடியுமா?” என்று கேட்டார் தம்பித்துரை.
இதுவரை பிணத்தினருகில் முழங்காலிட்டு உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி மெதுவாக எழுந்து, தன் முழங்காலில் ஒட்டியிருந்த தூசியை ஜாக்கிரதையாகத் தட்டிவிட்டுக் கொண்டார். பிறகு, தம்பித்துரையின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்தார்.
“முடியாது, தம்பித்துரை! அதற்குக் காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும். இந்த நேரத்தில், உங்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது!”
“என் மேல்–எதனால் சந்தேகம்?” என்று இழுத்தார் தம்பித்துரை.
“ஏனென்றால், இறந்து போன பொன்னம்பலம் உங்களுடைய பழைய மாப்பிள்ளை!” என்று நிதானத்துடன் கூறிய பரஞ்சோதி, “இவன் உங்கள் மகளை மணந்து ரொம்ப மோசமாக நடத்தி இருக்கிறான். பணக்காரனைப் போல் வேஷம் போட்டு உங்களை ஏமாற்றி இருக்கிறான். இவன் பெயரென்ன?” என்று கேட்டார்.
“இவனுடைய பெயர் தங்கையா. இவனைச் சிறையில் இருந்து தப்பி வந்த குற்றத்திற்காகவும், மற்றும் பல குற்றங்களுக்காகவும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்” என்றார் தம்பித்துரை.
“இவனை வெகு காலமாக நீங்கள் தேடிக் கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டார் பரஞ்சோதி.
“அதைப்பற்றி பிறிதொரு சமயம் பேசலாம்.” என்று சாந்தமாகக் கூறிய தம்பித்துரை, “இவன் பெயர் தங்கையா என்று சொன்னேன். இதை ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டுமானால் இலங்கை போலீஸுக்குத் தகவல் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, அவரை யோசனை யோடு பார்த்துக் கொண்டு இருந்தார்: “உங்களால் உதவி செய்ய முடியுமா என்று கேட்டீர்கள் அல்லவா? முடியும்! ஆனால், அந்த உதவியை நீங்களாகவே வலிந்து செய்ய வேண்டும். கையிலே வாரண்டு இல்லாமல், நான் உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. நீங்கள் அணிந்து கொண்டு இருக்கும் ஆடைகளை சோதனை செய்வதற்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.
“தாராளமாக!” என்று கூறிய தம்பித்துரை, “நான் கொலை செய்தேனென்று நினைக்கிறீர்கள். ஆடைகளில் ரத்தக்கறை இருக்கிறதா என்று பார்க்க விரும்புகிறீர்கள். அப்படித்தானே? நல்லது; போலீஸ் சேவகர்கள் வரும் வரை நான் காத்திருக்கிறேன். நான் உடைமாற்றும் பொழுது, அவர்கள் என்னை கண்காணித்துக் கொண்டு இருக்கட்டும்” என்றார்.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி தன் சட்டைப் பையில் இருந்து ஒரு சிறு கத்தியை எடுத்து விரித்தார்.
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லாவிட்டால், தம்பித்துரை உங்கள் சட்டையின் “கமிசை” வெட்டி எடுத்துக் கொள்ளுகிறேன்” என்று முழுக்கை சட்டைகளிலுள்ள கைகளின் நுனிக்கு “கமிசு” என்று பேச்சு வழக்கில் கூறப்படுகிறது. கூறியபடி, அரை அங்குல அகலத்திற்கு அந்த இடத்தில் சட்டையை வெட்டி எடுத்துக் கொண்டார்.
தம்பித்துரை அதை சுவாரசியமாகக் கவனித்தாரே தவிர, எந்த விதத்திலும் சங்கடப்பட்டதாகத் தெரியவில்லை.
“நீங்கள் போய் வேறு உடைமாற்றிக் கொள்ளலாம்” என்றார் பரஞ்சோதி.
தம்பித்துரை, மெதுவாக தாழ்வாரத்தில் நடந்து சென்று, அறையை அடைந்தார்.
இதற்கிடையில், பிணம் கிடந்த இடத்திற்கு செல்வ ராஜ் வந்து சேர்ந்தான்.
“செல்வராஜ்! உனது மைத்துனர் இப்பொழுதுதான் காரில் ஏறிக்கொண்டு எங்கோ செல்கிறார். அவர் எங்கு செல்கிறார் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார் பரஞ்சோதி.
செல்வராஜ் அளவுகடந்த கலவரத்தோடு, கொலையுண்டு கிடந்த பொன்னம்பலத்தின் உடலை வெறிக்கப் பார்த்தான்.
“இறந்து விட்டானா?” என்று ஈனசுவரத்தில் முனகிய செல்வராஜ், “ஆண்டவனே!” என்று தன் இதயத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டான். பிறகு மெதுவாகக் குனிந்து, பொன்னம்பலத்தின் உடலில் குத்தியிருந்த கத்தியைத் தொடப்போனான்.
“அந்தக் கத்தியைத் தொடாதே!” என்று கடுமையாகக் கூறிய இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, “அந்தக் கத்தி யாருடையது என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
செல்வராஜ் தயங்கினான் பிறகு–
“தெரியும்; இது இது ராஜாபகதூருடையது. ஆனால் அதை யாரும் எடுத்திருக்க முடியும். இது சரித்திரப் பிரசித்தி பெற்ற குடக்கண்ணதீசன் வைத்திருந்த கத்தி!” என்றான் செல்வராஜ்.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி புன்னகை பூத்தபடி, “குடக் கண்ணதீசனின் கத்தி! ஆம்; எனக்கு அதைப்பற்றிய முழு விவரமும் தெரியும். சொல்லப்போனால், ஒருமணி நேரத்திற்கு முன்னால் அந்தக் கத்தி என் கையில் இருந்தது. உன் சகோதரி என்ன சொல்லுகிறாள், செல்வராஜ்?” என்று கேட்டார்.
“ஒன்றும் சொல்லவில்லை; அவளால் தொடர்பாக பேசக்கூட முடியவில்லை! அவள் தாழ்வாரத்தின் பக்கம் சென்றிருக்கிறாள். அப்பொழுது பொன்னம்பலம் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறான்-”
“அந்த நேரத்தில் எதற்காக தன் அறையை விட்டு தாழ்வாரத்திற்குப் பவானி சென்றாள்?”
“ஏனென்று எனக்குத் தெரியாது” என்று எரிச்சலுடன் கூறிய செல்வராஜ், “புழுக்கமாக இருந்ததால் வெளியே இருந்திருக்கலாம்” என்றான்.
“தூர நின்று பிணத்தைப் பார்த்திருந்தால், பவானியின் கையிலும், புடவையிலும் ரத்தக்கறை பட்டிருக்க வழியில்லை. அவனை அவள் தீண்டியிருக்க வேண்டும்–அவனுக்கு ரொம்ப அருகாமையில், அவள் இருந்திருக்க வேண்டும் எப்படியிருந்தாலும், அந்த விவரங்களை எல்லாம் விசாரிக்க இப்பொழுது அவசரம் ஏற்படவில்லை…” என்று கூறிக்கொண்டே வந்தவர்–சட்டென்று தாழ்வாரத்தின் கோடியைப் பார்த்தபடி, “அது யார்?” என்று கேட்டார்.
தமயந்தி தான் தன் அறைக்குள்ளிருந்து மெதுவாக தலையை வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி அவள் அறையை நோக்கி நடந்தார்.
“எதுவும் தகறாரா?” என்று கேட்டாள் தமயந்தி.
“ஒன்றுமில்லை!” என்று மழுப்பிய பரஞ்சோதி “உனக்கு எதுவும் சத்தம் கேட்டதா?” என்று கேட்டார்.
“கடிகாரம் சரியாகப் பதினொன்றரை அடிப்பதற்கு சிறிது முன்னால் நான் விழித்துக் கொண்டேன். அந்த சமயத்தில், தாழ்வாரத்தில் ஏதோ ‘தொப்’பென்று விழுந்ததைப் போன்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்தே கடிகாரமும் பதினொன்றரை அடித்தது!” என்றாள் தமயந்தி.
“ரொம்ப சுவாரசியமாக இருக்கிறதே!” என்று கூறிய இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, “உன்னால் நிச்சயமாக அதைச் சொல்ல முடியுமா? யாரோ விழுந்த சத்தம் கேட்டது. அதன் பிறகு கடிகாரம் பதினொன்றரை அடித்ததா?” என்று கேட்டார்.
“ஏதோ நடந்திருக்கிறது–ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது! இல்லாவிட்டால், நீங்கள் இப்படி கேள்வி கேட்கமாட்டீர்கள்” என்று பதட்டத்துடன் கூறிய தமயந்தி தனது தலையை வெளியே நீட்டிப் பார்த்தபடி, “அது யார்–பொன்னம்பலமா?” என்று கலவரத்துடன் கேட்டாள்.
“அவன் தான்” என்று நிதானத்துடன் கூறிய பரஞ்சோதி, “அவன் உன்னுடைய நண்பனல்ல என்று நினைக்கிறேன்” என்றார்.
“இல்லை; அவன் என் நண்பன் அல்ல. அவனை அடியோடு வெறுத்தேன்–அதாவது அவனை எனக்குப் பிடிக்காது. அவன் இறந்து விட்டானா?”
“ஆம், கொலை செய்யப்பட்டு விட்டான்” என்று கூறிய பரஞ்சோதி, ஒரு விநாடி யோசனையாக இருந்துவிட்டு, “உன் நிலைமையில் நானிருந்தால், தமயந்தி; அவனுக்கும் எனக்கும் பகையிருந்ததாக வெளியே விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டேன்” என்றார்.
அந்தச் சமயத்தில் நீலகண்டன் திரும்பி வந்து விட்டதால், இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி பிணம் கிடந்த இடத்தின் பக்கம் சென்றார்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் போலீஸார் வந்து விடுவார்கள்! இன்ஸ்பெக்டர் ருத்ரபதியும் வந்து விடுவார்” என்றார் நீலகண்டன்.
“ருத்ரபதியா!” என்று திகைப்புடன் கூறிய பரஞ்சோதி, “தாம்பரத்தில் அவர் தான் இருக்கிறார் என்பதை நான் மறந்து விட்டேன்” என்றார்.
இன்ஸ்பெக்டர் ருத்ரபதியை பரஞ்சோதிக்குப் பிடிக்காது. அதே போல ருத்ரபதியும் வட்டி முதலுடன் அவரை வெறுத்தார்.
பிறகு நீலகண்டனின் பக்கம் திரும்பிய இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, “இங்குள்ள எல்லோரும் அணிந்திருக்கும் ஆடைகள் எனக்கு வேண்டும். ராமையாவின் ஆடை உள்பட எல்லாம் எனக்கு வேண்டும்!” என்றார்.
இதைக் கூறிவிட்டு, மாடியை விட்டிறங்கி ராணி பவானி உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றார்.
“ராணிபவானி! என்ன நடந்ததென்று இப்பொழுது உங்களால் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
“எனக்குத் தெரியாது……யாரோ கீழே விழுந்தது போன்ற சட்தம் கேட்டது. நான் என் அறையை விட்டு தாழ்வாரத்திற்கு வந்தேன். பிறகு அவன் விழுந்து கிடப்பதைப் பார்த்தேன்…….அவன் தானென்று தெரிந்து கொண்டேன்……….அவனுக்கு உதவி செய்ய முயன்றேன். ஆனால்–” என்று கூறிக்கொண்டே வந்தவள், உடல் எல்லாம் நடுங்க தன் முகத்தைப் பொத்திக் கொண்டாள். அவளது கைகளில், அவள் காதலனின் ரத்தம் இன்னும் அப்படியே இருந்தது! அதைக் கவனித்த பரஞ்சோதி அங்கிருந்த வேலைக்காரியை அழைத்தார்:
“ராணிசாகிப்பை, மாடிக்கு கூட்டிச்சென்று, உடைகளை மாற்றுவதற்கு உதவி செய். அவள் இப்பொழுது அணிந்திருக்கும் ஆடைகள் எனக்குத் தேவைப்படும். ஆதலால் நீ கீழே வரும்பொழுது அதை எடுத்துவா” என்றார்.
இதற்குள் சென்னை பிரதம போலீஸ் அதிகாரியிடமிருந்து ‘டெலிபோன்’ அழைப்பு வந்தது. இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி நடந்த விவரங்களை எல்லாம் விரிவாகக் கூறினார்.
17. பரஞ்சோதி துப்பறிதல்
அதிகாலையில், அந்த நேரத்திலேயே, ராமையா தனது வேலையைத் தொடங்கிவிட்டான். பொன்னம்பலத்தின் பிரேதம் கிடந்த இடத்தில் நிறைய இரத்தம் சிந்தியிருந்தது. அந்த ரத்தத்தைத் துடைத்து. சுத்தம் செய்யும் வேலையில் தான், ராமையா ஈடுபட்டிருந்தான்.
இரவு பூராவும், தூக்கமில்லாமல் போவதற்குக் காரணமாக இருந்த பொன்னம்பலத்தின் மீது அவனுக்கு அளவு கடந்த ஆத்திரமிருந்தது. அதுமட்டும் இல்லாமல் பிரேத விசாரணைக்கு வந்த இன்ஸ்பெக்டர் ருத்ரபதியும் அவனைக் கன்னா பின்னாவென்று கேள்விகள் கேட்டு அசந்து போகச் செய்துவிட்டார்.
“இரவு பூராவும் அந்த ஆள் என்னை கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டார். கொலை நடந்த சமயத்தில், நான் கீழ்த்தளத்தில்தான் இருந்தேன் என்று நீலகண்டன் கூறிய போதிலும், அவர் என்னென்னவோ கேள்விகளைக் கேட்டு என்னை அவதிப்படுத்திவிட்டார்!” என்று குறைபட்டுக் கொண்டான் ராமையா.
இன்ஸ்பெக்டர் ருத்ரபதி, “வானப்பிரகாசம்” ஹோட்டலிலேயே ஒரு போலீஸ் ஸ்டேஷனை அமைத்துவிட்டார். தனது விசாரணைக்கு என்று ஒரு தனி அறையையும் ஒதுக்கிக் கொண்டார். அந்த அறைக்குள், அவர் ராஜ கம்பீரத்துடன் செல்வதையும், திரும்பி வருவதையம் வியப்போடு பார்த்துக் கொண்டு இருந்தார் இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி.
குற்றம் நடந்த இடம் தாம்பரமானதால், அதை விசாரிக்கும் முழு அகிகாரமும் தாம்பரம் போலீஸார் கையில்தான் இருந்தது. சென்னைப் பிரதம போலீஸ் காரியாலயத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டரான பரஞ்சோதிக்கு, விசேஷ உத்திரவு அளிக்கப்பட்டு இருந்தாலொழிய, அவர் அந்த விவகாரத்தில் தலையிட முடியாது. அதனால் இன்ஸ்பெக்டர் ருத்ரபதி செலுத்தும் சர்வாதிகாரங்களை எல்லாம், பரஞ்சோதி மௌனமாகப் பாத்துக் கொண்டு இருக்கத்தான் முடிந்தது. கொலை நடந்தவுடன், பரஞ்சோதி போட்டிருந்த சில உத்திரவுகளை எல்லாம் இன்ஸ்பெக்டர் ருத்ரபதி அங்கு வந்ததும், அவை “அநாவசியமானவை” என்று ரத்து செய்து விட்டார். அதைப் பற்றி பரஞ்சோதி ஒன்றுமே பேசவில்லை.
விஷயம் எந்த நிலையிலிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக ருத்ரபதியின் அறைக்குச் சென்றார் பரஞ்சோதி.
“ராஜாபகதூரைப் பற்றி ஏதும் தகவல் வந்ததா?” என்று கேட்டார்.
“ஒரு தகவலுமில்லை. அவர், சென்னையிலுள்ள தனது பங்களாவிற்கும் செல்லவில்லை. சென்னைப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்து, ரஸ்தா மார்க்கமாகவோ கடல் மார்க்கமாகவோ, அவர் தப்பித்துச் செல்லாதபடி கண்காணிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். அவர் தான் கொலைகாரர் என்பதில் சந்தேகமே இல்லை. இருந்த போதிலும், நான் எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து பரிசீலனை செய்துதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். எனக்குத் தோன்றுவது என்னவென்றால், தனது மனைவியும், பொன்னம்பலமும் தாழ்வாரத்தில் உல்லாசமாக இருந்தபொழுது ராஜாபகதூர் திடீரென்று அங்கு தோன்றி அவனைக் கத்தியால் குத்தியிருக்க வேண்டும். அவர் தனது மனைவியையும் கொலை செய்து இருக்கக் கூடும். ஆனால், அவள் தப்பி ஓடிவிட்டாள். ராஜாபகதூர் பொன்னம்பலத்தைக் கத்தியால் குத்திய பொழுது, ராணிபவானி பொன்னம்பலத்தை தழுவிக் கொண்டு இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவள் ஆடைகளில் ரத்தக் கறை படிந்திருக்க வேண்டியதில்லை!” என்றார் இன்ஸ்பெக்டர் ருத்ரபதி.
பரஞ்சோதி அவரை யோசனையோடு பார்த்தார். அவர் முகத்திலே அளவுகடந்த பிரமிப்பு தாண்டவ மாடியது.
“பிரமாதம்!” என்று உற்சாகமாகக் கூறிய பரஞ்சோதி, “இதை மனதில் வைத்துக் கொண்டு தான், ராணிபவானியைக் கேள்விகள் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.
“ஆமாம்! ஆனால், அவள் எந்தவிதத் தகவலும் கூற மறுத்துவிட்டாள்–என்னுடைய குற்றச்சாட்டையே, காலாடித்தனமான கற்பனையென்று சொல்லுகிறாள்! பட்டுப்புடவை கட்டி, வைரக் கம்மலை மாட்டிக் கொண்டாலே, இந்தப் பெண்களுக்கு வாய்த்திமிர் அதிகமாகி விடுகிறது!–கொலைக்கு உடந்தையாக இருந்தவள் என்று அவளைக் கைது செய்துவிடலாம். ஆனால், அவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்க நான் விரும்பவில்லை!” என்றார் ருத்ரபதி.
பரஞ்சோதி சிரித்தார்: “அவளைக் கைது செய்ய, மாஜிஸ்ட்ரேட்டிடம் அவ்வளவு சுலபமாக “வாரண்ட்” பெற்று விடமுடியாதென்று நினைக்கிறேன். அதிருக்கட்டும்; பொன்னம்பலத்தின் மேஜை மீதிருந்த அவனுடைய லெட்டர் பேப்பரைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.
“இன்னும் இல்லை!” என்று அவசரமாகக் கூறினார் ருத்ரபதி.
“நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும். குடிகாரர்கள், குடிபோதையில் பென்சிலை எடுத்து எதையும் எழுத ஆரம்பித்தார்களானால், தங்கள் மனதில் அந்தச் சமயத்தில் எது ரொம்ப ஆதிக்கம் பெற்றிருக்கிறதோ அதைத்தான் எழுதுவார்கள். அவனுடைய லெட்டர் பேப்பரில், “புருவம்” என்ற வார்த்தை இருபது தடவைகளுக்கு மேல் எழுதப்பட்டு இருக்கிறது” என்றார் பரஞ்சோதி.
“புருவமா?” என்று புரியாமல் கேட்டார் ருத்ரபதி.
‘வெறும் ‘புருவம்’ தான் பருவம் அல்ல; கண்களுக்கு மேலிருக்கும் ‘புருவம்’ தான். நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன்”
“புருவத்தையா?–கிண்டலா செய்கிறீர்கள்–? நான் எத்தனையோ புருவத்தைப் பார்த்து இருக்கிறேன்!” என்று சீறினார் ருத்ரபதி.
“நான் பொன்னம்பலம் எழுதி வைத்திருந்ததைக் குறிப்பிடுகிறேன்”
“அதன் அர்த்தமென்ன?” என்று கேட்டார் ருத்ரபதி.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி சுற்றிலும் ஒருமுறை பார்த்துகொண்டு மெதுவான குரலில், “உங்களுக்கு ஒரு பெரிய விஷயம் சொல்லப் போகிறேன். இதை இந்த உலகத்தில் வேறுயாரிடமும் சொல்ல மாட்டேன்–அந்தப் புருவத்தின் மர்மம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை! அடிக்கடி பொன்னம்பலத்தின் அறையில் இருந்த மணி எதனால் ‘ரிப்பேர்’ ஆயிற்று என்று விசாரித்தீர்களா? தன்னையறியாமல், மறந்துபோய் தனது அறைச் சாவியை ராஜாபகதூர் தன் கையிலேயே எடுத்துப் போய்விட்டார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?” என்று நிறுத்தினார்.
“அவற்றிற்கும் இந்தக் கொலைக்கும் என்ன சம்பந்தம்?” என்று அதிகாரத்தோடு கேட்டார் ருத்ரபதி.
“அதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்!” என்று விஷமத்தனமாகக் கூறினார் பரஞ்சோதி.
ருத்ரபதியின் அமர்க்களம், ஆரம்பத்திலிருந்தே பரஞ்சோதிக்குப் பிடிக்கவில்லை. கொலை விசாரணைக்காக “வானப்பிரகாசம்” ஹோட்டலுக்குள் நுழையும் பொழுதே, உரத்த குரலில், “இங்குள்ள யாரும் என் விசாரணை முடியும் வரையில் எங்கும் நகரக்கூடாது!” என்று சத்தம் போட்டுக் கொண்டுதான் வந்தார்.
ஆனால் ருத்ரபதி அங்கு வருவதற்குள் இருபது முப்பது பேர் வந்து போய்விட்டதால் அவருடைய உத்திரவு பயனில்லாததாகவே இருந்தது. அதோடு ருத்ரபதி அங்கு வந்ததும், ஏற்பட்ட சிறு குழப்பத்தின் போது, ராஜாபகதூரின் தோட்டத்து முனையில், ஏதோ நெருப்புப் பிடித்து எரிவதாகத் தகவல் வந்து எல்லோரும் ஓடினார்கள். அருகில் சென்று பார்த்த பொழுது யாரோ, குளிர் காய்வதற்காக தீ மூட்டியிருந்தது போல் தோன்றியது. எல்லோரும் அங்கு சென்ற பொழுது, அந்த தீ அநேகமாக அணைந்து விட்டது.
ருத்ரபதி விசாரணை நடத்தும் பொழுது, தனியாக பரஞ்சோதியும் விசாரணை நடத்துவதற்கு முடியாது. அதற்கு அவருக்கு உரிமையோ அதிகாரமோ இல்லை. இருந்த போதிலும், விடியற்காலம் ஆறு மணிக்கு, டெலிபோன் காரியாலயத்தில் (டெலிபோன் எக்ஸ்சேஞ்சில்) இருந்த ஆளைக் கூப்பிட்டு, தான் யாரென்று கூறி, அவரிடமிருந்து பல தகவல்களைக் கிரகித்துக் கொண்டார்.
இதை அறிந்த ருத்ரபதி தனது மேலதிகாரிகளுக்கு இந்த விஷயத்தைப் பற்றி புகார் செய்தார்.
அன்றைய தினம் இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, செல்வராஜை சந்தித்த பொழுது, அவன் அளவு கடந்த கவலையோடு இருப்பதைக் கவனித்தார். இரவு பூராவும் அவனையும் ருத்ரபதி கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு அவதிப்படுத்தி இருந்தார்.
செல்வராஜிடம் பரஞ்சோதி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் ஒன்று இருந்தது.
“நீ எவ்வளவு நேரம் ராஜாபகதூரிடம் டெலிபோனில் பேசிக் கொண்டு இருந்தாய்?”
செல்வராஜ் சிறிது நேரம் யோசித்து விட்டு, “ஐந்து நிமிஷம் இருக்கலாம்” என்றான்.
“ஆனால் ராஜாபகதூர் பதினேழு நிமிஷம் டெலிபோனில் பேசிக் கொண்டு இருந்ததாக, குரோம் பேட்டை டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் உள்ளவர்கள் சொல்லுகிறார்களே” என்றார் பரஞ்சோதி.
“அது எப்படியிருந்தாலும், நான் பேசியது ஐந்து நிமிஷங்களுக்குள் தான் இருக்கும்” என்று ஆயாசத்துடன் கூறினான் செல்வராஜ்.
“அதை நானும் ஒப்புக் கொள்கிறேன்; சுமார் நான்கு நிமிஷங்கள் இருக்குமென்று தான் நானும் நினைக்கிறேன். அதை குரோம்பேட்டையில் உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகாரனே என்னிடம் கூறினான். அது சரி; ராஜாபகதூர் தாம்பரத்திற்கு வருவதாகக் கூறினாரே, இரவு இங்கு தங்கியிருப்பதாக சொன்னாரா?” என்று கேட்டார் பரஞ்சோதி.
“இல்லை, நாங்கள் முற்றிலும் வேறு விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம்”
“அந்த வேறு விஷயம் என்னவென்று சொல்ல முடியுமா? அது ரொம்ப முக்கியம்” என்றார் பரஞ்சோதி.
செல்வராஜ் சிறிது தயங்கினான். பிறகு “நல்லது; நானே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனென்றால், இங்குள்ள வேலைக்காரர்கள் மூலம் நீங்கள் அந்த வதந்தியைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ராஜாபகதூர் ரொம்ப சந்தேகப்பேர்வழி; எக்காரணத்தாலோ அவருக்கு பொன்னம்பலத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, அவர் டெலிபோனில் பேசியதெல்லாம், அது சம்பந்தமானது தான். என் சகோதரி என்ன செய்து கொண்டு இருந்தாள்; எங்கெங்கு போனாள்; பொன்னம்பலத்தை சந்தித்தாளா, இத்யாதி கேள்விகளைத்தான் அவர் கேட்டார்” என்றான்.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதிக்கு திடீரென்று வேறொரு சந்தேகம் ஏற்பட்டது.
“நீ சொன்னதையெல்லாம் உன் மைத்துனர் நம்பினாரா?” என்று கேட்டார்.
செல்வராஜ் திடுக்கிட்டுவிட்டான்: “ஏன் அப்படி கேட்கிறீர்கள்?” என்று மெதுவாகக் கேட்ட செல்வராஜ், “உண்மையில் அவர் என்னை நம்பவில்லை. அதையறிய எனக்கு ரொம்ப ஆத்திரமாக இருந்தது. நான் சொன்ன பல விஷயங்களை அவர் மறுதலித்தார். அந்தக் கோபத்தில், நான் டெலிபோனைக் கீழே வைக்கப்போகும் சமயத்தில்தான் தன்னை வந்து பார்க்கும்படி என்னிடம் கூறினார்” என்றான்.
பரஞ்சோதி தலையை ஆட்டியபடி, “இதிலிருந்து பல விஷயங்கள் புரிகின்றன. சந்தேகம் ஏற்பட்டுவிட்டால், மனிதன் மிருகமாகி விடுகிறான். நேற்றிரவு, உன்னுடைய மைத்துனர் மிருகமாகத்தான் ம றியிருக்கிறார்!” என்றார்.
“நீங்கள் சொல்லுவது புரியவில்லையே!” என்று திகிலுடன் கூறிய செல்வராஜ், “அவர் இங்கு வந்தபொழுது நன்றாகத்தானே இருந்தார்? ஒருக்கால், அவர் திடீரென்று மீண்டும் கிளம்பிப்போய் விடக்கூடும் என்ற சந்தேகந்தான் எனக்கிருந்ததே தவிர, வேறு எந்த விதச் சந்தேகமும் என் மனதில் எழவில்லையே?” என்றான்.
“அவர் சொல்லிக்கொள்ளாமல் போனதை அறிந்ததும், பிரமித்துப்போய் விட்டாய் அல்லவா?”
“இல்லை. அவர் அதிகாலையில் புறப்பட்டுச் செல்வதாக முதலிலேயே ஏற்பாடு செய்திருந்தார்” என்றான் செல்வராஜ்.
செல்வராஜை விட்டுக் கிளம்பிய இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி நேராக சமையற்கட்டுப் பக்கம் சென்றார். ராமையா அங்கு உட்கார்ந்து தேநீர் அருந்தி கொண்டு இருந்தான். பரஞ்சோதியைக் கண்டதும் அவன் முகத்திலே ஆத்திரம் படர்ந்தது.
“இன்னும் உங்களுடைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்லத் தயாராக இல்லை! நேற்றிரவு எனக்கு ஏற்பட்ட அநுபவமே போதும். நான் இப்பொழுது தூங்கப் போகிறேன்–நீலகண்டன் என்ன சொன்னாலும் சரி!” என்றான்.
பரஞ்சோதி மௌனமாக, அங்கு கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். அவர் ஏதோ திட்டத்துடன் தான் வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டான் ராமையா. “இன்ஸ்பெக்டர்! வாழ்க்கையில் நான் ரொம்பவும் சங்கடப்பட்டுப்போய் விட்டேன். இனிமேல், நேர்மையாகவே நடந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்தக் கொலையைப் பற்றி எனக்கு ஏதாவது தெரிந்திருந்தால்–”
“நிச்சயமாக இந்தக் கொலையைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது! உன் கண்ணால் பார்த்ததைத் தவிர, எதையுமே நீ வாய் விட்டுக் கூறமாட்டாய்! அப்படிப்பட்ட உத்தமன் நீ!” என்று உற்சாகமாகக் கூறிய இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, “நான் உன்னை இப்பொழுது கேட்க வந்தது வேறு விஷயம். நேற்றிரவு, ராஜாபகதூருடன் டெலிபோனில் பன்னிரெண்டு நிமிஷங்கள் பேசிக் கொண்டு இருந்தாயே, அப்பொழுது அவரிடம் என்ன சொன்னாய்? பிறகு அவர் அறைக்கு நீ சென்றாயே அப்பொழுது–” என்று ஏதோ கேட்க வந்தவர் சட்டென்று நிறுத்திக்கொண்டு, “அந்த விஷயத்தை அப்புறம் கவனித்துக் கொள்ளலாம். முதலில் இதற்குப் பதில் சொல்; ராஜாபகதூரிடம் என்ன பேசிக்கொண்டு இருந்தாய்?” என்று கேட்டார்.
“டெலிபோனிலா?” என்று உஷாராகக் கேட்ட ராமையா, நான் அதிகமாக எதுவும் பேசவில்லை. செல்வராஜ் எங்கே இருக்கிறாரென்று ராஜாசாகிப் கேட்டார். அவரை அழைத்து வந்து பேசச் சொல்லவா என்று நான் கேட்டேன்” என்றான்.
“செல்வராஜை அழைத்து வரவா என்று கேட்டதற்கு நீ பன்னிரெண்டு நிமிஷங்கள் டெலிபோனில் பேச வேண்டியிருந்ததா? மரியாதையாகச் சொல்; வேறு என்ன பேசினாய்?” என்று ஒரு தினுசாகக் கேட்டார் இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி.
ராமையா மௌனமாக இருந்தான்.
பரஞ்சோதி திடீரென்று, “உன் சட்டைப் பைகளில் இருப்பதை எல்லாம் வெளியே எடுத்து வை” என்றார்.
ராமையா என்னவோ சொல்ல வாயெடுத்தான். பரஞ்சோதியின் முகத்தில் நிலவிய பயங்கரம் அவனை ஆடிப்போகச் செய்தது.
ராமையா தன் சட்டைப் பையில் இருந்தவற்றை எல்லாம் வெளியே எடுத்து வைத்தான். ஒரு சாவிக் கொத்தும், ஐந்து பத்து ரூபாய் நோட்டுகளும் தான் இருந்தன. அந்த நோட்டுகள் புத்தம் புதியனவாக இருந்தன.
“இந்தப் பணம் உனக்கு எங்கிருந்து கிடைத்தது?’
“என் நண்பன் ஒருவன்–” என்று ஆரம்பித்தான் ராமையா.
“உன்னுடைய வேதாளக்கதையை நிறுத்திக் கொள்! உனக்கு நண்பர்களும் கிடையாது: அப்படி இருந்தாலும் உனக்கு கடன் கொடுக்கமாட்டார்கள்!”
சில விநாடிகள் வரையில் மௌனமாக இருந்த ராமையா, “ராஜாபகதூர்தான் இதை எனக்குக் கொடுத்தார்” என்றான்.
“நேற்றிரவு கொடுத்தாரா?”
“ஆமாம் ”
“அவரை நேற்றிரவு நீ எங்கு சந்தித்தாய்?”
“அவருடைய அறையில்–செல்வராஜ் என்னைப் பார்த்து வரும்படி அனுப்பிய பொழுது!–அவர் அனுப்பாவிட்டாலும் நான் போயிருப்பேன்!”
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி அவனை யோசனை யுடன் பார்த்தபடி, “நேற்றிரவு நீ கீழே இறங்கி வந்தபொழுது அவர் அறையில் இல்லை என்றும், தோட்டத்தில் இருப்பதாகவும் சொன்னது பொய்தானே?”
ராமையா அவர் முகத்தைப் பார்க்காமல் வேறுபுறம் திரும்பியபடி, “பொய், நிஜமெல்லாம் எனக்குத் தெரியாது! அங்குதான் அவரைக் கடைசியாகப் பார்த்தேன்!” என்றான்.
“நீ கொடுத்த எந்த தகவலுக்காக, அவர் உனக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தார்? ராணி பவானியை வேவு பார்ப்பதற்குத்தானே அவர் உனக்கு அந்தத் தொகையை கொடுத்தார்?”
ராமையா கற்சிலையைப் போல் உட்கார்ந்து இருந்தான்.
“நீ பார்த்தவற்றை எல்லாம் அவரிடம் சொன்னாய்; அல்லது பார்த்ததாகக் கற்பனை செய்தவற்றை எல்லாம் அவரிடம் கூறினாய்! அதைத்தான், பன்னிரெண்டு நிமிஷ நேரம் நீ டெலிபோனில் பேசிக் கொண்டு இருந்திருக்கிறாய்? நீ வீணாக மறுக்க வேண்டாம். எல்லாவற்றையும் டெலிபோன் எக்ஸ்சேஞ்சு குமாஸ்தா என்னிடம் கூறினான்” என்றார்.
ராமையாவுக்கு அந்த இடத்தில் நிற்கவே முடியவில்லை. மெதுவாக நழுவப்பார்த்தான். பரஞ்சோதி அவனை திரும்பக் கூப்பிட்டார்.
“நீயாகப் பேசாவிட்டால், உன்னைப் பேசவைப்பேன்!” என்று பற்களை நறநறவென்று கடித்தபடி கூறிய பரஞ்சோதி, “அவரிடம் என்ன சொன்னாய்?” என்று அதட்டினார்.
ராமையா தன் வரண்ட உதடுகளை நாவினால் தடவி ஈரமாக்கிக் கொண்டான்.
“உங்களிடம் உண்மையைக் கூறி விடுகிறேன். இன்று பகல் பூராவும், பொன்னம்பலம் ராணிபவானியோடு இருந்ததாக ராஜாபகதூரிடம் கூறினேன். அவன் அம்மாதிரி இருந்தானா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் அம்மாதிரி சொல்ல வேண்டுமென்று தான் ராஜாபகதூர் எதிர்பார்த்தார். வேறுவிதமாக சொன்னாலும் அவர் நம்பமாட்டார்”
“அப்படியானால் நீ தான் கற்பனையாக அப்படி கூறினாயா?” என்று கடுமையாகக் கேட்ட இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, “அதன் பிறகு என்ன நடந்தது?” என்று கேட்டார்.
ராமையா மௌனமாக நின்று கொண்டு இருந்தான். பிறகு இன்ஸ்பெக்டர் பரஞ்சோதியே பேச ஆரம்பித்தார்.
“நீ கொடுத்த தகவல் அவரைக் கொதிப்படையச் செய்திருக்குமென்று நினைக்கிறேன்?”
“ஆமாம்; அவரை நான் நேரில் சந்தித்த பொழுது ரொம்பவும் ‘ஆடி’ப்போய் இருந்தார்” என்று ஒப்புக்கொண்டான் ராமையா.
“சரி நீ போகலாம்!” என்று பரஞ்சோதி கூறிவிட்டு கொஞ்ச நேரம் வரை அங்கேயே யோசனையோடு உட்கார்ந்திருந்தார்.
18. ஒரே தடவை உபயோகப்படுத்திய சோப்பு!
ராமையாவின் காதகத்தனமான செய்கை, இன்ஸ்பெக்டர் பரஞ்சோதியை ஆச்சரியமடையச் செய்ய வில்லை. ஏனென்றால், ராமையா ஒரு பிறவிக் குற்றவாளி. அவன் அம்மாதிரி தான் நடந்து கொள்ளுவான்….
இன்ஸ்பெக்டர் ருத்ரபதியை சந்திப்பதற்காக, அவரை தேடிக் கொண்டு சென்றார்.
“தம்பித்துரையின் ஆடையைப் பரிசோதித்து, ரசாயன சாலையிலிருந்து தகவல் வந்துவிட்டதா?” என்று விசாரித்தார் பரஞ்சோதி.
“தகவல் வந்தது, அந்த ஆடையில் எதுவும் காணப்படவில்லை!” என்றார் ருத்ரபதி.
“மற்றவருடைய ஆடைகள்?”
“அவற்றை நான் சேகரித்து அனுப்பவில்லை. அப்படியனுப்பி சோதிப்பது அவசியம் என்று நான் நினைக்கவில்லை!” என்றார் ருத்ரபதி.
“வேலைக்காரன் ஆடையை வாங்கிக் கூட அனுப்பவில்லையா?”
இன்ஸ்பெக்டர் ருத்ரபதி திடுக்கிட்டவராய், “வேலைக்காரனா? யார், அந்த ராமையாவா? அவனுக்கு இந்த விவகாரத்தில் ஏதும் சம்பந்தம் இருக்குமென்று நினைக்கிறீர்களா? இருக்காதென்றல்லவா நான் நினைக்கிறேன்!” என்றார்.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.
“எனக்கு ஒரு சிகரெட் கொடுங்கள்” என்று அதிகாரத்தோடு கேட்டார்.
ருத்ரபதி சங்கடத்தோடு தன் சட்டைப்பையில் கையைவிட்டபடி, ரண்டு சிகரெட்கள் தான் என்னிடம் இருக்கின்றன” என்றார்.
“ஒவ்வொன்றாகப் பற்றவைக்கிறேன்!” என்று கூறியபடி ஒரு சிகரெட்டைக் கையில் வாங்கிக்கொண்டு, “இன்னொரு சிகரெட் உங்களிடமிருப்பதை அப்புறம் எனக்கு ஞாபகப்படுத்துங்கள்!” என்று கூறியபடி சாவகாசமாக சிகரெட்டைப் பொருத்தினார்.
“இன்ஸ்பெக்டர் ருத்ரபதி! இந்த ராமையா சிறைக்குப்போய் வந்தவன். அதுமட்டுமல்ல; பொன்னம்பலத்தைக் கண்டால் அவனுக்கு விஷத்தைக் கண்டது மாதிரி. ஏனென்றால், ராமையா ஒரு பழைய ‘கேடி’யென்று பொன்னம்பலத்திற்கு தெரியும்! அவனை, ‘கேடி’யென்ற பெயரைச் சொல்லியே பகிரங்கமாகவும் அழைத்து வந்தான். இதை நீங்கள் மறந்து விடக்கூடாது” என்று எச்சரித்தார் பரஞ்சோதி.
ருத்ரபதி அதற்கு ஒன்றுமே கூறவில்லை. பிறகு, தனது மேஜை டிராயரைத் திறந்து, அதற்குள்ளிருந்து இரண்டு சிறு பட்டுத்துணிகளை எடுத்தார். அவை, முன்பு வெள்ளையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது அவை சிவப்பாக இருந்தன. அவற்றின் மீது, ரத்தக்கறை பட்டிருக்கிறதென்று புரிந்து கொண்டார் பரஞ்சோதி.
“இவற்றைப் பாருங்கள், உங்களுக்கு ஏதாவது தோன்றினால் சொல்லுங்கள்” என்று கூறிய ருத்ரபதி, “இவை தோட்டத்தில் ஒரு புதர் மறைவில் கிடந்தன. இவற்றை, ஒரு போலீஸ் சேவகன் எடுத்துக் கொண்டு வந்தான்” என்றார்.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி அவற்றை கவனமாகப் பார்த்தார். ஒரு துணியில் தான், ரத்தக்கறை இருந்தது. மற்றொன்றில், புழுதி படிந்திருந்தது. அந்த துணிகளை முகர்ந்து பார்த்தார் பரஞ்சோதி. அவற்றில் பெட்ரோல் வாடை வீசியது.
கொஞ்ச நேரம் வரையில் ஆழ்ந்த யோசனையில் உட்கார்ந்திருந்த பரஞ்சோதி “இதன் மூலம் நமக்கு ஒரு தடயம் கிடைத்ததென்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதைப் புதருக்குப் பின்னால் போட்ட நபர், வீண் ஜம்பத்திற்கு ஆசைப்பட்டு, தனது கிதாப்பைக் காட்டிக் கொள்ளவே அங்கு போட்டிருக்க வேண்டும்!” என்றார்.
பிறகு, அந்த இரண்டு துண்டுகளையும் ருத்ரபதியிடம் திருப்பிக் கொடுத்து விட்டு அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து பரஞ்சோதி கிளம்பினார்.
நேராக, தோட்டத்தை அடைந்த பரஞ்சோதி, முதல் நாளிரவு தீப்பிடித்திருந்த இடத்திற்குச் சென்றார். அங்கு குவிந்திருந்த சாம்பலையும், கரியையும், ஒரு குச்சியால் தள்ளிப் பார்த்தார். அவருக்கு எந்தவிதத் துப்பும் கிடைக்கவில்லை. அங்கிருந்து, சிறிது தூரம் நடந்து சென்றார் பரஞ்சோதி. அங்கு ஒரு சிறிய நீர்நிலை இருந்தது. அந்த நீர்நிலையின் கரையில் ஒரு ‘சோப்’ கட்டி கிடந்தது. அந்த சோப், ஒரு தடவைதான் உபயோகிக்கப்பட்டு இருப்பதாய் தெரிந்தது. அந்த சோப்பை கையில் எடுத்துக்கொண்டு மீண்டும், அந்த சாம்பல் கிடந்த இடத்திற்கு வந்தார்…..அப்பொழுது அவருடைய பார்வை எதேச்சையாக ஹோட்டலின் பக்கம் சென்றது. ராணிபவானி அவரையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு ஹோட்டலின் பின்புறத்தில் நின்று கொண்டு இருந்தாள்.
இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி மெதுவாக அவள் இருந்த இடத்தை நோக்கி நடந்தார்.
“இன்னும் சோதனை நடத்திக் கொண்டு இருக்கிறீர்களா?” என்று கேட்ட ராணிபவானி, “என் கணவரைப் பற்றி எதுவும் தகவல் கிடைத்ததா?” என்று கேட்டாள்.
“ஒன்றும் கிடைக்கவில்லை” என்று கூறிய இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி, வெகு நேரம் வரையில் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவளை ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டு இருந்தார். அந்த விவகாரத்தை அவர் யூகித்திருந்த போதிலும் அவள் வாயின் மூலமாகவே கேட்க வேண்டுமென்ற ஆசை அவருக்கு.
“பொன்னம்பலம் உன்னுடைய காதலன் தானே?” என்று பரஞ்சோதி தைரியமாகக் கேட்டார்.
அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, “ஆம்!” என்று நிதானமாகக் கூறினாள் பவானி.
“இது நீலகண்டனுக்கும் தெரியும் அல்லவா? அவன்தானே, உன்னையும் பொன்னம்பலத்தையும் தீ விபத்திலிருந்து காப்பாற்றியது?”
‘ஆம்’ என்ற பாவனையில் தலையசைத்தாள் பவானி.
‘இருந்தாலும், நீலகண்டன் இதைப்பற்றி ஏன் வெளியே பேசவே இல்லை? அந்த ஆள், உண்மையிலேயே உயர்ந்தவன் தான்!” என்றார் பரஞ்சோதி.
“நீலகண்டன் ஏன் அப்படி நடந்து கொண்டாரென்று எனக்கே தெரியவில்லை” என்று கூறிய பவானி, “அது நன்றியறிதல் என்று அவர் சொல்கிறார். ஆனால், அவர் நன்றி காட்டும் அளவிற்கு நான் அவருக்கு எதுவுமே செய்ததில்லை. அவர் என்னிடம் ரொம்பப் பிரமாதமாக நடந்து கொள்கிறார். அதனால் அவருக்கு உண்மையிலேயே எந்தவிதமான உபகாரமும் இல்லை-” என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டு இருந்த இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி திடீரென்று ஆச்சரியத்தால் துள்ளிக் குதித்து, தனது தொடையில் ஓங்கி அடித்தபடி, “ஆ! இப்பொழுது புரிகிறது! விஷயங்களெல்லாம் மிகத்தெளிவாக எனக்கு விளங்குகின்றன!” என்று குதூகலித்தார்.
– தொடரும்…
– நீலகண்டன் ஹோட்டல் (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1958, பிரேமா பிரசுரம், சென்னை.