நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..?!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 3,570
‘சிந்திக்கிறதா..? சிந்திக்கறதைவிட செத்துப் போயிடறதே மேல்!’னு யாரோ எப்பவோ சொன்னது இப்போது நியாபகம் வருகிறது. ஏன் தெரியுமா?
ஐந்தாறுநாள் ஊரிலிருக்க மாட்டோம். வெளியூர் போகப் போறோம். தினசரி பேப்பர் போடற பையன் காலை ஐஞ்சு மணிக்கெல்லாம் போட்டுட்டுப் போயிடறது வழக்கம். அதூம் சைக்கிளிலிருந்து அவன் வீசுவது கேட்டைத் தாண்டியதாக வரலாறே கிடையாது. ரோட்லயே கிடக்கும். வாக்கிங்க் போற வர்ற நல்ல மனிசர்கள்ல சிலர் பார்த்து எடுத்து காம்பவுண்ட் மேல வச்சுட்டுப் போவதும் உண்டு. நாலைந்து நாள் பேப்பர் வாசல்ல கிடந்தா ஊர்ல இல்லைங்கறது வெளிப்படையாத் தெரிஞ்சுடும். அது ஆபத்து. காலம் கெட்டுக் கெடக்கு. எதுக்கு வம்புன்னு, ஏஜண்டிடம் சொல்லி, ’நான் வர்ற வரை பேப்பர் போட வேண்டாம்! நான், சொன்னதுக்கு அப்புறம் போட்டா போதும்!’னு சொல்லிவிட்டு புறப்பட்டுப்போனார் புருஷோத்தமன்.
திரும்பி வந்தால், சொன்னதுக்கு பலனே இல்லை! அப்படியே அஞ்சுநாள் பேப்பரும் கிடக்கு! எதுக்குச் சொன்னோம்?!னு போன் பண்ணீட்டார்!
போன் பண்ணிக் கேட்டா, அவர் சொல்றார்..’நீங்க சொல்ற காரணம் புரிஞ்சது. ஆனா, நாலைஞ்சு நாள் பேப்பரே போடாம விட்டா.. அப்பவும் வழக்கமா கிடக்கிற பேப்பர் இல்லையே?! அப்பவும், நீங்க ஊரிலில்லைனு வெளியாட்களுக்குத் தெரியும் தானே?! அதான் எப்பவும் போல போட்டேன்.’ என்றார்.
பிரச்சனையை நாம ஒரு மாதிரி அணுகினா, மத்தவங்க அதைவேற மாதிரி அணுகறாங்க..! நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..! நல்லவேளையாக ஏஜெண்ட் நினைத்தபடியோ, புருஷோத்தமன் நினைத்தபடியோ எதுவும் நடக்கவில்லை. நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது..! ஆனால், ‘நல்லது நினைத்தா; நல்லதே நடக்கிறது!’ அதான் அதிசயம்.