நிச்சயித்தது ஒன்று நடந்தது ஒன்று
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 10,022
காலையில் கண் விழித்து கதவைத்திறந்து வெளியே வந்த “செல்வத்தின்” முகத்தில் “பனி” வந்து மோதியது.அதை மெல்ல துடைத்துக் கொண்டவன் மனது எல்லையில்லா இன்பத்துக்கு சென்றது. இப்படிப்பட்ட இடத்திற்கு தனக்கு பணி மாற்றல் தந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னான். இன்னும் கொஞ்சம் வெளியே நடந்து வீட்டை ஒட்டி செல்லும் பாதைக்கு வந்தவன் வளைந்து, வளைந்து செல்லும் பாதையும். எதிரில் வருபவர் கூட தெரியாத அந்த உறை பனியும்,கண்ணுக்கு எட்டிய மலை முகடுகளும் அவனை இன்ப மயக்கத்திற்கு கொண்டு சென்று அவன் வாயிலிருந்து ஒரு பாட்டை முணு முணுக்க வைத்தது.
‘செல்வம்’ மின்சாரப்பணியாளருக்கான தொழில் முறை பட்டயப்படிப்பை முடித்து கோவையில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தான். நான்கு வருடங்கள் கழிந்து அவனுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மின்சாரத்துறையில் “மின்சாரப்பணியாள்” வேலை கிடைத்தது. உள்ளுரிலேயே பணியிடம் கிடைத்ததால். பெற்றொருடனேயிருந்து பணிக்கு சென்று வந்து கொண்டிருந்தான். ஒரு வருடம் ஆன பின்னால் வால்பாறையில் உள்ள காடம்பாறை என்னும் ஊருக்கு பணிமாற்றம் செய்தார்கள். அவன் பெற்றோர் அந்த மலைப்பிரதேசத்துக்கு பணிமாற்றம் ஆனதை விரும்பவில்லை, காரணம் காட்டு விலங்குகளால் அவனுக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்ற பயம்தான். அவன் தன் பெற்றோரை சமாதானப்படுத்தித்தான் இந்த மலைப்பிரதேசத்துக்கு வந்திருந்தான்.
காலையும், மாலையும் மட்டுமே பொள்ளாச்சியில் இருந்து காடம்பாறைக்கு பேருந்து வரும்.
இதை அறியாமல் பேருந்து நிலையத்திற்கு வந்தவன் காலை பேருந்தை பிடிக்க முடியாமல் காத்திருந்து காடம்பாறைக்கு மாலையில் வந்து சேர்ந்தான். அங்கிருந்த கடும் குளிர் அவனை பயமுறுத்தியது.
பணியாளர்களும். அதிகாரிகளும் தங்குவதற்கு ஒரு விடுதி இருந்தது. அதில் இரவு தங்கினான். மறு நாள் அவனது அலுவல்கள் தெரிவிக்கப்பட்டு, மாலைக்குள் அவனுக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. வீடு கிடைத்த சந்தோசத்தில் அன்று இரவே குடி போய் விட்டான். காலையில் எழுந்து கதவை திறந்தவன் மனதை இந்த காலைப்பனி பரவசப்படுத்தி பாட வைத்துவிட்டது.
செலவம் இங்கு வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டன. பொதுவாக அங்குள்ள கடையில் சாப்பாட்டு வேலைகளை முடித்துக்கொள்வான். வீட்டில் அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுது ஒன்றும் அவசரமில்லை என்று சொன்னாலும் நித்தம் அவன் சாப்பிடும் கடைச்சாப்பாட்டை நினைத்து மனது கல்யாணத்துக்கு ஏங்கியது.
வரப்போகும் பெண்ணைப்பற்றிய கனவுகள் அவன் மனதில் பறவைகளாய் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.
பெண் பார்த்து, பார்த்து, வரன் கூடாமல்தட்டிப்போவது அவன் மனதை மேலும் சோகமயமாக்கியது.இப்பொழுதெல்லாம் இந்த பனி படர்ந்த மலைகள் அவனுக்கு ஒரு வித சோர்வையே அளித்தன.வேலைக்கு செல்வதும், வருவதும் இயந்திரமயமாகிவிட்டது. பேச்சுத்துணைக்கு கூட ஆட்களை தேடவேண்டி இருந்தது.
மனது இப்பொழுதெல்லாம் பரபரப்பை நினைத்து ஏங்கியது.
ஒரு நாள் அவன் செல் போன் கிணு கிணுத்தது. எடுத்தவுடன் அப்பா டேய் செலவம் இந்த வாரம் சனிக்கிழமை இங்க வரமுடியுமா? கேட்டவா¢டம் எதுக்குப்பா இவ்வளவு அவசரமா கூப்பிடறே, என்றவனிடம், ஜாதகம் ஒண்ணு சரியாயிருக்கு, நீ வந்தயின்னா பொண்ணை போய் பாத்துடலாம், மத்தது எல்லாம் பெண் வீட்டுல பேசிட்டோம், நீ வந்து பொண்ணு புடிச்சிருக்கா அப்படீங்கறத மட்டும் சொல்றே, அதனால கண்டிப்பா வெள்ளிக்கிழ்மை இராத்திரியே இங்க வந்துடு. செலவத்தின் காதுகள் இதைக்கேட்டவுடன் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியது. அப்பாடா தனக்கு ஒரு துணை கிடைக்கப்போகிறதா, மனம் நிலைகொள்ளாமல் தவித்தான். இந்த மலை வாசஸ்தலத்தில் தனிமை என்பது எவ்வளவு கொடுமை, அதை நினைத்தவன் வரப்போகும் பெண் எப்படி இருப்பாள் என கனவு காண ஆரம்பித்தான்.
செல்வம் இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியாக உள்ளான். அங்குள்ள மக்களிடம் தன் கல்யாணத்தைப்பற்றி சொல்லி சொல்லி மாய்கிறான். பெண் பார்த்த அன்றே பிடித்துவிட்டதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு பணிக்கு வந்தவன் மறு நாள் அவன் அப்பா போன் செய்து பெண் வீட்டாரிடம் சம்மதம் சொல்லிவிட்டதாகவும், வரும் ஆவணி மாதம் பத்தாம் தேதி அன்று கல்யாணத்தை வைத்துக்கொள்வதாக நிச்சயம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார். அதன் பின் அவன் கால்கள் வானத்தில் பறப்பது போல உணர்ந்தான்.
இப்பொழுதெல்லாம் கல்யாண வேலைகள் அதிகம் இருப்பதாக சொல்லி அடிக்கடி விடுமுறை எடுக்கிறான்.குடும்பம் நடத்துவதற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து வீட்டில் சேர்க்கிறான்.அவனுடைய எண்ணங்கள் ஆவணி மாதம் பத்தாம் தேதியை நோக்கியே இருந்தன.
கல்யாணத்துக்கு முதல் நாள், இவன் கோயமுத்தூரில் உள்ள தன் வீட்டில் இருக்கும்போது அவனுடைய கைபேசியிலிருந்து ஒரு அழைப்பு, நம்பர் புதியதாக இருக்கவே யாராய் இருக்கும் என்ற யோசனையில் போனை எடுத்தவன் நான் மேகலா பேசுகிறேன் என்ற குரலை கேட்டவன் ஒரு நிமிடம் யார் மேகலா என்று யோசித்தவன் திடீரென்று மின்னலாய் பளிச்சிட அட தனக்கு மனைவியாய் வரப்போகிறவள் பெயரல்லவா !
சொல்லுங்க மேகலா என்ன விசயம் மனதில் சந்தோசம் பரவ கேட்டவனிடம் எதிர் முனையில் இருந்து அந்த சந்தோசம் தென்படாமல் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்ற பதிலுக்கு இவன் சாயங்காலமா பேசலாமே, என்றவன் காந்தி பார்க் அருகில் நிற்கச்சொன்னான்.
சொன்னது போலவே காந்தி பார்க் அருகில நின்று கொண்டிருந்தாள் மேகலா.
செல்வத்துக்கு அவளைப்பார்த்தவுடன் பரவசம் தோன்றியது.ஆனால் அவளிடம் எந்த மாற்றமுமில்லை. முகத்தில் ஒரு இறுக்கமே இருந்தது.செல்வத்துக்கு இந்தப்பெண் முகத்தைப்பார்த்தவுடன் மனதில் ஒரு கலக்கம் வந்தது.
சொல்லுங்கள் மேகலா இவனே பேச்சை ஆரம்பித்தான்.” எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை” இந்த வார்த்தை அவன் மனதை சுக்கு நூறாக்கியது.
என்ன சொல்றீங்க, நாளைக்கு கல்யாணம், இப்ப போயி இந்த மாதிரி சொன்னா என்ன அர்த்தம்? இதை பொண்ணு பார்க்கறதுக்கு முன்னாடியே சொல்லித்தொலைச்சு இருக்கலாம்லே, செல்வத்துக்கு கோபம், வருத்தம், அவமானம் அனைத்தும் அவன் குரலில் அழுகையாய் வெடிக்கும் போல் இருந்தது.ஆனால் அவள் குரலில் அதே இறுக்கத்துடன் நான் எங்கப்பா அம்மாகிட்ட சொல்லியாச்சு, அவங்கதான் பொண்ணு பாக்கறது மட்டும்தான் அப்படீன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க, அதுக்கப்புறம் பார்த்தா நீங்க உடனே சம்மதம் சொல்லி இவங்களும் உங்களுக்கு ஒத்து ஊத ஆரம்பிச்சுட்டாங்க. என்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது, மேற்கொண்டு ஏதாவது நடந்தா நாளைக்கு வீணா நீங்க அவமானப்படவேண்டி வரும்னுதான் முன்னாடியே சொல்றேன்.
இவள் மீது தாங்கமுடியாத வெறுப்பு வந்தது செல்வத்துக்கு, என்னுடைய அவமானத்தைப்பற்றி கவலைப்படுகிறாளாம், நாளை காலையில் கல்யாணம்,இத்தனை நாள் இருந்துவிட்டு எனக்காக கவலைப்படுகிறாளாம். என்ன ஒரு நெஞ்சழுத்தம். நாளை என்ன செய்வாள்? ஓடிப்போவாள் அது எனக்கு மட்டும் அவமானமா, அவள் குடும்பமும் அல்லவா அவமானப்படவேண்டும்.இனி இவளிடம் பேசிப்பிரயோசனமில்லை, சரி இந்த கல்யாணத்துல எதுக்கு இஷ்டமில்லையின்னு தெரிஞ்சுக்கலாமா? விருப்பமிருந்தா சொன்னா போதும்.என்னோட படிப்புக்கும்,வேலைக்கும் நீங்க ஒத்து வரமாட்டீங்கன்னு நினைக்கிறேன், இதை நீங்க பொண்ணு பார்க்க வர அன்னைக்கே எங்கப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டேன், ஆனா அவங்க பொண்ணு பாக்கறது மட்டும்தான், அப்புறம் தட்டி கழிச்சுடலாம்னு சொல்லிட்டு கடைசியில என்னை ஏமாத்தி இப்ப கல்யாணம் வரைக்கும் போயிட்டாங்க. சொல்ல சொல்ல செல்வத்துக்கு தலையிலடித்துக்கொள்ளவேண்டும் போல் இருந்தது. இதுவரை இப்படி ஒரு கோணத்தில் அவன் சிந்தித்து பார்த்ததே இல்லை.
அவனுக்கு பெண் படித்தவளா இல்லையா என்ற அக்கறை கூட இல்லை, தன்னுடன் இணைந்து வாழ ஒரு துணை தேவை என்ற கோணத்திலே இருந்தான். இப்பொழுது என்ன செய்வது?அவனுக்கு தலை சுற்றியது.சரி மிஸ். மேகலா நான் உங்கப்பா அம்மாகிட்ட பேசி இந்த கல்யாணத்த நிறுத்த முடியுமான்னு பார்க்கறேன்.
மேகலாவின் அப்பா இவன் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.
இவன் ஆற்றாமையும், அழுகையுமாக சொல்வதை அவர் புரிந்துகொண்டதைப்போல் அவன் தோளைத்தட்டி நீங்க கவலைப்படாம போங்க இந்த கல்யாணம் நடக்கும், உங்களுக்கு ஒரு அவமானம் வர்றமாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.அவனை அனுப்பி வைத்தார்.செல்வத்துக்கு இந்த கல்யாணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் எங்காவது போய் விடலாமா என்று தலையை பிடித்துக்கொண்டான்.
கல்யாணசத்திரத்தில் இரவே உறவினர்கள் கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது.
செல்வத்துக்கு முகத்தில் ஜீவனே இல்லை, எப்படியும் அவமானப்படப்போகிறோம் என்று மனது சொல்லிக்கொண்டே இருந்தது. இரவு பெண் வீட்டார் மாப்பிள்ளை அழைப்புக்கு அழைத்த போது மணப்பெண்ணின் அப்பா உறவினர்கள் அனைவரையும் அழைத்தார்.மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் அனைவரையும் அழைத்தவர் “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட நான் முதல்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன்.என் பொண்ணு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டா, ஆனா நான் இவரைத்தான் மாப்பிள்ளையா தீர்மானிச்சுட்டேன், அதுக்கோசரம் என்னோட இரண்டாவது பொண்ணுகிட்ட அபிப்ராயம் கேட்டேன், அவ மனமுவந்து உங்களை கல்யாணம் பண்ண சம்மதிச்சிருக்கா. நீங்க உங்க சம்மதத்தை இந்த சபையில சொன்னீங்கன்னா இப்பவே நிச்சயத்தையும் வச்சு உங்களுக்கு மாப்பிள்ளை அழைப்பும் நடத்தி நாளைக்கு முகூர்த்தத்தையும் வச்சிடலாம். சிறிது நேரம் மெளனம், செல்வத்தின் அம்மா, அப்பா அவனது முகத்தை பார்க்க அவன் சம்மதத்தை தலையசைப்பின் மூலம் சொல்ல, செலவத்தின் பெற்றோர் அங்கிருந்த பழத்தட்டை எடுத்து பெண்ணின் அப்பாவிடம் கொடுத்து தங்களது சம்மததத்தை தெரிவித்தனர். ஒரு நிமிடம் என்று செலவம் சொல்ல அனைவரும் அவன் முகத்தை பார்க்க பொண்ணுகிட்ட சம்மதத்தை, அவங்க வாயால சொன்னா நல்லா இருக்கும் என்றான். அந்தப்பெண்ணை அனைவரும் பார்க்க அவள் முகம் வெட்கத்தால் சிவந்து மெல்ல தலையாட்டினாள்.
பதினைந்து நாட்கள் கழிந்து காடம்பாறை செல்லும் பேருந்தில் மனைவியின் மடியில் தலைவைத்து உறங்கிக்கொண்டு வந்தான் செல்வம். அவன் மனைவி இந்த பனி படர்ந்த மலைகளையும், வளைந்து செல்லும் பாதைகளையும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அன்புடையீர்
வணகம் கதையின் முடிவு அருமை பாராட்டுக்கள்
பூ. சுப்ரமணியன்,பள்ளிக்கரணை, சென்னை