கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2026
பார்வையிட்டோர்: 552 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

பாரயிறுதியின் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் யாரோ திட்டமிட்டுத் தான் கெடுத்தது போன்ற உணர்வு. சனியன்று காலையிலேயே மனைவியுடன் பிணக்கம். உம், சரி, திலீப்பையாவது பார்த்து விட்டு வரலாமென்று கிளம்பினேன். திலீப் வீட்டில் தனித்திருந்தான். “என்னடா, பார்த்து ரொம்ப நாளாச்சில்ல. இவ்வளவு கிட்டத்துல இருக்கம்னு பேரு, சந்திக்கக் கூட முடியறதில்லல்ல. அது சரி எப்டிடா இருக்க?” என்று காலையில் வீட்டில் நடந்த சிறு சச்சரவையும் மறந்து நண்பனைக் கண்ட மகிழ்ச்சியில் அளவளாவ ஆரம்பித்தேன். என் குரலில் இருந்த உற்சாகம் அவனிடம் இல்லை.

என் உற்சாகம் அவனுக்குத் தொத்திக் கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகளே இல்லை என்பதை அவனது சோர்ந்த முகம் என்னிடம் சொல்லாமல் சொல்லியது. “உம், ஏதோ இருக்கேன். வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?” என்று ஏதோ கேட்க வேண்டிய கடமைக்காக கேட்டான் திலீப். “ஏம்பா ஏதோ இருக்கேன்னு சுரத்தே இல்லாமச் சொல்ற. உடம்பு கிடம்பு சரியில்லையா? கொஞ்ச நாளாவே உன்கிட்ட பழைய உல்லாசமேயில்லடா” என்று நான் கூற, “இல்லடா சுந்தர். மனசு சரியில்ல. என் பொறுமையை நீ புகழுவாயே. இப்ப என் பொறுமையும் எல்லைய மீறிடுச்சுடா” என்கிறான். “மனசு விட்டு பேச நினைச்சா சொல்லுடா. உன்னோட பேசத் தான் வந்திருக்கேன்,” என்று நான் ஊக்குவிக்க, என்று நான் ஊக்குவிக்க, “உங்கிட்ட இல்லாம யாருகிட்ட நான் பேசுவேன், சொல்றேன்” என்ற பீடிகையுடன் சௌகரியமாய் உட்கார்ந்து கதைகதையாகச் சொல்ல நான் வாயடைக்கவும் மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். எல்லாமே நான் சற்றும் எதிர்பாராத விதமாய் அவனுடைய மனைவியைப் பற்றியது.

அவன் கூறிக் கொண்டே வர என் மனத்தின் மூலையில் என் மனைவியைப் பற்றி எண்ணி, ஒப்பிட்டு உயர்வாக எண்ணத் தலைப்பட்டேன்.

வேலைக்குப் போகிறேன் பேர்வழி என்று பதின்மவயது மகனையும் மகளையும் கூட கவனிக்காமல், அரைகுறை ஆடைகளை நாகரிகம் என்ற பெயரில் உடுத்தி, வயதைக் குறைக்கும் முயற்சியில் பொருத்தமில்லாம ஒப்பனைகளுடன் ஒரே ஆடம்பரமாய்ச் செலவு செய்திருக்கிறாள். இரண்டு சம்பளங்களையும் செலவு செய்து தீர்க்கவே கங்கணம் கட்டிக் கொண்டவள் போல் தாம்தூம் என்று செலவு செய்திருக்கிறாள். அதுவரை பொறுத்திருந்தானாம் திலீப்.

உச்சகட்டமாய் கிரெடிட் கார்டுகளில் மட்டும் ஓரிரு மாதங்களில் இருபத்தி ஆறாயிரம் கடன் ஏற்றிவிட்டிருக்கிறாள். இதை அறிந்தவனுக்கு அதிர்ச்சி. கடந்த இரண்டு மாதமாகவே தன் முழுச் சம்பளத்தையும் கடனுக்கு அடைக்கிறானாம். எப்படியிருக்கிறது கதை?

மகனைப் பற்றி பயப்படாதவன், மகள் தாய் வழி நடப்பாள் போல் இருக்கிறதென்று வேறு சந்தேகம், மற்றும் பயம். அவனுக்கு ஆறுதல் கூற வழி தெரியாமல் தவித்தேன். காலையில் என் மனைவி சாந்தி ஆசையாக முதல் நாள் தான் வாங்கிய மோதிரத்தைக் காண்பித்ததும் கோபத்தில் கத்தியதை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை. நூறு வெள்ளிக்குள் இருந்த அப்பொருளை வாங்கியதற்காக அந்த அளவு கடிந்து கொண்டது மிகையென்று என் மனம் என்னை இடித்தது.

இருவருமே சேர்ந்து மணவிலக்குக்கு இணங்கியிருப்பதாயும் தற்சமயம் பெயரளவில் ஒரே வீட்டில் இருவரும் வெவேறு அறையில் வாழ்வதாகவும் கூறினான். என்னால் விஷயங்களை ஜீரணிக்கக் கூட முடியவில்லை.

“என்ன நல்லா முட்டாளாக்கிட்டாடா. உனக்குத் தான் தெரியுமே, நான் ஐஞ்சு வருஷம் முன்னாடியே முன்னாடியே ‘வாசக்டமி’ செஞ்சுக்கிட்டேன். ஆனா, இவ இப்ப கருக்கலைப்பு செஞ்சிருக்காடா. பல பேர் சொன்ன கதையெல்லாம் நான் நம்பல. இப்ப நானே ஆஸ்பிடல் பில்லப் பார்த்து அசந்துட்டேன்” என்று பொருமினான்.

எனக்கு அவன் மீது பரிதாபம் எல்லை மீறியது. வற்புறுத்தி அவன் மனத்தைத் திறக்க வைத்த எனக்கு அவன் மனக் காயங்களுக்கான மருந்து தான் கொடுக்கத் தெரியவில்லை. தோளைத் தொட்டு தட்டி “ரொம்ப கஷ்டமாயிருக்குடா கேக்கவே. தைரியமா இருடா. என்ன உதவின்னாலும் தயங்காம கேளு சரியா” என்று விடைபெற்றேன்.

வீட்டிற்குள் நுழையும் போது சாந்தியின் நினைவு வர, கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்துத் தனக்காக ஒரு சிறு நகை அவள் வாங்கப் போக அவளை மிகக் கடுமையாகப் பேசிவிட்டோமே என்று ஒரு வித குறுகுறுப்புடன், “சாந்தி, சாந்தி,” கூப்பிட்டவுடன் வந்தவள் என்னைப் பார்த்தவுடன் நிற்க, “இன்னிக்கு நாம தீபாவளி ஷாப்பிங் போறோம். எல்லாரும் ரெடியாகுங்க,” என்று அறிவித்தேன். சாந்தியின் முகத்தில் குழப்பம், மகிழ்ச்சி, நம்பிக்கையின்மை என்று மாறி மாறி தெரிந்தது.

தான் காண்பதும் கேட்பதும் கனவா நனவா என்று தன் கையில் தானே கிள்ளி ஊர்ஜிதம் செய்து சொண்டவளைப் பார்த்து நான் என்னை மறந்து சிரித்தேன்!

– 01-07-2004, தமிழ்முரசு.

jeyathisankar சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *