கவசமில்லாத சலனங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2026
பார்வையிட்டோர்: 470 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இறுக்கமான, அதே சமயத்தில் மிகப் பெரிய அமைதி அந்த வீட்டில் சூழ்ந்திருந்தது. இருபத்தோறு பேர் கூடியிருந்த முன் வீட்டில் மூச்சு விடக் கூட யோசித்துக் கொண்டு ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்கக் கூட விரும்பாமல், தரையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இனி யார் பேச ஆரம்பிப்பது என்று ஒவ்வொரு முகத்திலும் கேள்விக் குறி எழுந்தது. வெளியேயிருந்து ஓடி வந்த சிறுவன் விஜய் ‘டுர்… டுர்…. என்று சப்தம் எழுப்பிக் கொண்டு வர அங்குள்ள அமைதி சிறிது குலைந்து போக, அவனுடைய அம்மா இந்துமதி அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.

“கணேசா, நீ பேசமாலிருப்பது கொஞ்சம் விநோதமாகத் தானிருக்கிறது” என்று அங்கிருந்த பெரியவர், கணேசனின் அப்பா திருமூர்த்தி பேச்சை ஆரம்பித்தார். 

இவ்வளவு நேரம் பேசி அமளி துமளி பண்ணி விட்டுத் திடீரென்று அமைதியான பிறகும் இப்படி எதுவும் பேசாமல் இருந்தான். “எப்படி கணேசன் நீ உன் மனதில் என்ன இருக்கிறது என்று சொல்ல வேண்டாமா?” பெரியண்ணன் குருபிரபா கேட்டார். 

“என்ன ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறீர்கள், சின்னண்ணன் சேகர் இறந்து போனதால் அண்ணி இந்துமதி விதவையாகிப் போய் விட்டார். தம்பி கணேசன் அவளைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கு? அப்பா கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அத்தை மகள் பத்மினி இவனுக்குத் தான் என்று அவள் பெரியாளானதிலிருந்து நீங்கள் தான் அத்தைக்கு வாக்குக் கொடுத்தீர்கள். 

இப்போது நீங்களே வாக்கு மீறினால் எப்படி? சின்னண்ணன் விபத்தில் இறந்து போனது விதிவசம் தான். சின்னண்ணி இந்துமதி இருப்பதைந்து வயதைக் கூட தாண்டாத இளம் விதவை தான். அவளையும் பிள்ளை விஜயையும் யார் காப்பாற்றப் போகிறார்கள் என்பது கேள்விக் குறி தான். 

அதற்காக ஏற்கனவே புள்ளிமான் போல துள்ளித் திரியும் ஒரு ஜோடியைப் பிரிப்பது எந்த வகையில் நியாயம்? அவர்களுக்கு திருமணம் தான் முடியவில்லையே தவிர கணேசனும் பத்மினியும் ஏறக்குறைய புதுத் தம்பதிகளாகத் தான் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்

இந்தச் சமயத்திலே தம்பி கணேசனிடம் இப்படி ஒரு பாரச் சுமையை தூக்கி வைத்து, உன் கனவுகளை யெல்லாம் உடைத்துப் போட்டு விட்டு இதைச் சுமந்து கொண்டு போ என்று சொன்னால் என்ன அர்த்தம்” அக்கா சியாமளா படபடப்பாகச் சொல்லிக் கொண்டே போனாள். 

“சியாமளா, நீ சொல்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள். உனக்கோ அல்லது இந்த வீட்டுப் பெண்ணுக்கோ, இப்படி ஒர் நிலைமை என்றால் நாம் எப்படி முடிவுக்கு வருவோமோ அந்த மாதிரி தான் இந்துமதியைப் பற்றியும் யோசிக்க வேண்டும்” என்றார் குருபிரபா.

“நான் இந்துமதியை வேறு வீட்டுப் பெண்ணாக நினைத்துப் பார்க்கவில்லையே, கணேசனின் நிலைமையைத் தான் சொன்னேன்” என்றாள் சியாமளா. 

“இப்போது சேகர் இருந்திருந்தால் இந்த விஷயம் வந்திருக்கவும் செய்யாது, கணேசன் பத்மினி திருமணமும் முடிந்து போயிருக்கும். இப்போதுள்ள சூழ்நிலையிலே கணேசன் பத்மினியை மறநது விட்டு இந்துமதியையும் விஜயையும் ஏற்றுக் கொண்டால் தான் நம் வீட்டுப் பிரச்சினைகள் தீரும்” என்றான் குருபிரபா. 

“ஏன் கணேசனையே விரட்டுகிறீர்கள், உங்களுக்கு வருமானத்திற்கு குறைச்சலில்லையே! இந்த மதியை ஏன் இரண்டாம் தாரமா திருமணம் பண்ணிக் கொள்ள கூடாதா?” என்று கேட்டாள் சியாமளா. 

“சும்மா இருங்கள்” என்று அதட்டினார் குருபிரபாவின் மனைவி.
 
“சியாமளா என்ன உளறுகிறாய். இந்துமதியை இவ்வளவு நாளும் என் பெண் குழந்தை போல பாவித்து விட்டு திடீரென்று அவளை மணந்து கொள்ச் சொல்கிறாயே எவ்வளவு பெரிய அபத்தம்?” என்று கத்தினான் குருபிரபா. 

உடனடியாக துள்ளி எழுந்த கணேசன், “அண்ணா நான் சொல்ல வந்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள். அண்ணி இந்துமதியை நான் என் அன்னைக்கு சமமாகப் பாவித்தவன். அந்த அண்ணியை இப்போது மனைவியாக ஏற்றுக் கொள்ளச் சொன்னால் என்ன அர்த்தம்? மனதும் உடலும் இப்படி ஒரு உறவிற்கு பக்குவப்பட முடியுமா? அல்லது ஏற்றுக் கொள்ளத் தான் முடியுமா?” என்று கேட்டான். 

“என்னடா, ஆளாளுக்கு என்னவோ பேசிக்கிட்டிருக்கீங்க. இந்துமதிக்கு என்னதான் வழி சொல்லப் போறிங்க?” தந்தை திருமூர்த்தி கத்தினார். 

சமையலறைக்குள்ளிருந்து, அழுது கொண்டே, விஜயையும் இழுத்துக் கொண்டு வந்த இந்துமதி, “ஏன் மாமா என் வாழ்க்கைக்காக எல்லோரும் இப்படி வீணாக விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். என் தலைவிதி என் கணவர் விபத்திலே இறந்து போய் விட்டார். 

அந்த மகாராசன் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினைகள் வந்திருக்காது. போகட்டும் எனக்கும் சாப்பாடு போட்டு ஒரு மூளையில் தங்க இடம் கொடுங்கள் அது போதும். பாகப்பிரிவினை வரும் போது என் கணவரின் சொத்துக்களை என் பையனுக்கு கொடுத்து விடுங்கள். அவனும் பிழைத்துக் கொள்வான். நீங்கள் வீணாக ஏன் தர்க்கம் செய்து கொள்கிறீர்கள்?” தொடர்ந்து அழ ஆரம்பித்தாள் இந்துமதி.

“இப்படி உணர்ச்சி வசப்பட்டு எதையும் பேசி விடலாம். உனக்கு இருபத்தைந்து வயது கூட தாண்டவில்லை. மனதையும் உடலையும் வெல்ல வேண்டிய நாட்கள் இனி தானிருக்கின்றன. நாங்கள் பேசி முடிவெடுக்கும் வரை கொஞ்சம் அமைதியாக இருக்கிறாயா?” சாந்தமாக சொன்னார் திருமூர்த்தி.

“என்னதான் முடிவெடுக்கப் போறீங்க? பத்து நாளா தினமும் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒன்றும் முடிவான  மாதிரி தெரியல்லயே?!” மூத்தண்ணன் குருபிரபா சலித்துக் கொண்டார். 

கொஞ்ச நேரம் திரும்பவும் அமைதி ஏற்பட, மெள்ள எழுந்து நடந்து கொண்டே “அம்மாவாக பாவித்த அண்ணி இந்துமதியை இனி என்னால் திருமணம் செய்து கொண்டு மனைவியாக பாவித்து வாழ்க்கை நடத்த முடியாது.

அப்படி நடக்க என் மனது இடம் கொடுக்காது. அப்படி நடந்தால் முள் மேல் நடக்கும் வாழ்க்கையாக அது நரக வேதனை மிக்க தினங்களாகத் தான் என் வாழ்க்கையில் கழியும். அதனாலே நான் எந்தத் திருமணமும் செய்யாமலே இருந்து விடுகிறேன். அத்தையிடம் சொல்லி பத்மினிக்கு நல்ல வரன் பார்த்து கட்டிக் கொடுத்து விடலாம்.

நான் விஜயை என் பையனாக எடுத்துக் கொண்டு அண்ணியை என் அம்மாவை போலவே எண்ணிக் கொண்டு காலமெல்லாம் காப்பாற்றுகிறேன்.

அதெல்லாம் நடக்காத காரியம் என்று விதண்டா வாதம் செய்ய வேண்டாம். திருமணம் என்ற சடங்கு, மனைவி என்ற பந்தங்கள் எதுவும் வேண்டாம். அண்ணன் சேகரின் மனைவி இந்துமதியையும் அண்ணன் பையன் விஜயையும் பார்த்து ஆளாக்குவது என் கடமை. யாரும் இதை பற்றி பேச வேண்டாம்” என்று கணேசன் தீர்க்கமாக பேசினான். ஆளாளுக்கு அதை சொல்லி கலைந்து செல்ல ஆரம்பித்தார்கள். கணேசன் இருந்த திசையை பார்த்து பத்மினி ‘இப்படி ஏமாத்திட்டியே, பாவி மனுசா’ என்று திட்டி விட்டுப் போனது சலசலப்பை ஏற்படுத்தியது.

– ஜூன் 2002, மும்பை தமிழ் டைம்ஸ்.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *