நான் கோபமா இருக்கேன்




சே ! இவளை எவ்வளவு நம்பினேன், இப்படி செய்து விட்டாளே? இவளுக்கு தெரியாமல் இது வரை ஏதாவது செய்திருப்பேனா? எது செய்தாலும் இவளிடம் கேட்டுத்தானே செய்தேன். அப்படி செய்தவனுக்கு இவள் செய்த பலன் இதுதான். எனக்கு வேண்டும், அம்மா அப்பொழுதும் சொன்னாள், சொந்தத்துல பொண்ணு கட்டுனா சொன்னபடி கேக்க மாட்டாங்க, நான் கேட்டனா, அத்தை புள்ளை தான் வேணும்னு அடம் புடிச்சி கட்டுனதுக்கு எனக்கு கிடைச்ச தண்டனைதான் இது.இருக்கட்டும், எனக்கு ஒரு காலம் வரும், அப்ப பேசிக்கிறேன்.
கல்யாணம் அன்னைக்கு இராத்திரியே என்ன சொன்னேன், எது செய்தாலும் நம்ம இரண்டு பேர்ம் கலந்து பேசித்தான் செய்யணும்னு சொல்லித்தானே வச்சேன்.அப்ப எல்லாம் பூம் பூம் மாடு கணக்கா தலையாட்டிட்டு இப்ப இந்த காரியம் பண்ணிட்டு வந்திருக்கா.
பேசாம இவளை ஒதுக்கி வச்சுரணும், பசங்க கேப்பானுங்க இல்லே, அப்ப சொல்லனும், இப்படி எல்லாம் உங்கம்மா செஞ்சா அவளை எப்படி மதிக்கறது? அவனுங்க கேப்பானுங்கள்ள,! அப்ப மூஞ்சிய எங்க கொண்டு போய் வச்சுக்குவா? என்னதான் கல்யாணம் ஆகி வந்துட்டாலும் அவங்க பிறந்த ஊடுன்னா விட்டு தரமாட்டாங்க. அவ பங்குல இருந்து எடுத்து கொடுக்க வேண்டியதுதான? என் பையிலஇருந்து யாரு கொடுக்க சொன்னது? பணம் என்னா மரத்துலயா காய்க்குது? கொண்டு போய் கொட்டறதுக்கு?. பொறுப்பு வேண்டாம்,
எப்பவும் ஒண்ணாதான இருக்கோம்? அப்ப எல்லாம் எங்கிட்ட சொல்லாமில்ல, அது என்ன பழக்கம், சொல்லாம செய்யறது? இனிமே அவ மூஞ்சில கூட முழிக்க கூடாது. வயிறு பசிக்குது, அதுக்காக அவ கிட்ட போய் பசிக்குது சோறு போடுன்னு சொல்லுவனா? எப்ப எங்கிட்ட சொல்லாம அந்த காரியத்தை பண்ணுனாலோ அதுக்கப்புறம் அவ உறவே எனக்கு தேவையில்ல.
என்னைய கூப்பிடறதுக்குத்தான் வாறான்னு நினைக்கிறேன், பாரு, ராங்கிய பாரு வந்தவ என மூஞ்சிய பாக்காம எங்கியோ பாத்துட்டு நிக்கறத பாரு, எல்லாம் அவங்க ஊட்டுக்காரங்க கொடுக்கற தைரியம். புருசன்னா பயம் வேணாம், அந்த பயம் விட்டு போச்சுங்கறதுனாலதான் இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்திருக்கா?.
மூஞ்சிய திருப்பிகிட்டு போனவ அங்க போய் உட்கார்ந்து என்ன முணு முணுத்துகிட்டு இருக்கா? சனியன் அவ பேசறது காதுல விழ மாட்டேங்குது,என்ன சொல்லுவா, என்னைப்பத்தி ஏதாவது புலம்பிகிட்டு இருப்பா? அவளுக்கு என்ன வேலை? அவ செஞ்ச தப்பை அவ எப்பவாவது உணர்ந்திருக்காளா? அப்படி என்ன அவளுக்கு ராங்கி? என் கிட்ட வந்துதான ஆகணும்? அப்ப பாத்துக்கறேன்.
அவளுக்கு நாம ரொம்ப அழகுன்னு நினைப்பு? ஆரம்பத்துல அவ அழகா இருக்கிறான்னு அவ பின்னால அலைஞ்சதுனால அவளுக்கு என்ன பாத்தா தொக்கா போயிடுச்சு. பாரு இப்ப கூட நான் இம்புட்டு கோபமா இருக்கேன்னு தெரியுமில்லை?
வந்து பேசினாத்தான் என்ன? நான் செஞ்சது தப்புன்னு சொல்லாமில்லை? சொல்ல மாட்டேங்குறாளே? எப்படியும் நான் அவகிட்ட வந்து பேசுவேன்னு நினைக்கிறா போலிருக்கு? நான் எதுக்கு அவ கூட இனிமே பேசப்போறேன்? இனி மேல் ஜென்மத்துக்கும் அவ கூட பேசறதில்லையின்னு முடிவு பண்ணிட்டேன்.
இப்ப எதுக்கு இந்த ஆளு மூஞ்சை துக்கிட்டு உட்காந்திருக்கான்? என்ன ஆச்சு? எதையாவது நினைச்சுகிட்டு மூஞ்சிய தூக்கிட்டு உக்காந்துக்கறது? மூஞ்சை பாரு பசியில கருகிப்போய் கிடக்குது, இதுல கோபத்துக்கு ஒண்ணும் குறச்சல் இல்லை!சும்மா மூஞ்சிய துக்கிட்டு உக்காந்துட்டா, கூப்பிட்டு சோறு போட்டுடுவாங்களா? பெத்ததுக வரட்டும் வந்து இரண்டு வசவு போட்டாத்தான் தெரியும், அப்புறம் வந்து எங்கிட்ட தலையை சொறிஞ்சுகிட்டு நின்னுத்தான ஆகணும்? பாக்கறேன்.
அட நேரமாயிட்டே போவுதே, இந்த ஆளு மூஞ்சி காணாம போயிட்டே இருக்கு, பசிச்சா வந்து சோத்தை போட்டு சாப்பிட வேண்டியதுதானே. சோத்துக்கு முன்னாடி மூஞ்சிய திருப்பிகிட்டு உக்காந்தா ஆச்சா? பசி தாங்க மாட்டானே,போய் கூப்பிட்டுடலாமா? அப்படி என்ன ராங்கி? வருசமாகுதான்னாலும் இந்த பிடிவாதத்துக்கு ஒண்ணும் குறைச்சலுமில்ல?
நேமாயிட்டே போவுதே, வாசல்ல யாரோ வாற மாதிரி இருக்கு? யாரு? சரியா கண்ணும் தெரியமாட்டேங்குது? யாருப்பா?
நான் தான் பாண்டி. என்ன ஆத்தா இத்தனை வயசாயிட்டும் அதெப்படி அங்க வரும்போதே யாருன்னு கேக்கறே?
எலே எனக்கு அப்படி ஒண்ணும் வயசாவுலடா !
சும்மா சொல்லேன்? உனக்கு எம்புட்டு வயாசாச்சு?
இந்த ஆளை கல்யாணம் பண்ணி எழுபது வருசமாச்சு அப்ப எனக்கு வயது பதினஞ்சு.
ஆத்தா எண்பதை தாண்டிட்ட !
கண்ணு வைக்காதலே,
தாத்தனுக்கு என்ன வயசாச்சு?
அந்தாளுக்கு அப்ப இருபது இருக்கும்லே.
இப்ப எதுக்கு தாத்தன் மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டிருக்குது?
பழைய கோமணத்தையே கட்டிகிட்டிருக்கே, பேரங்கிட்ட சொல்லி புது துணி வாங்கிட்டு வர சொல்லிட்டம்லே, இது வச்சிருந்த காசுல இருந்து பத்து ரூபாயை உருவி அவங்கிட்ட கொடுத்துட்டனாம். உங்க புறந்த ஊட்டுக்கு கொண்டு போய் பணத்தை கொடுத்துட்டேன்னு மூஞ்சிய தூக்கி வச்சிகிட்டு இருக்குது.
ஏன் ஆத்தா நான் தாத்தன் கிட்ட பேசட்டுமா?
அதெல்லாம் ஒண்ணும் வேணாம், பேரன் வருவான், அவன் மூஞ்சிய பாத்த உடனே சாப்பிட உட்காந்துடும், அப்புறம் புது துணிய பாத்துட்டு உங்க தாத்தன் எங்கிட்ட வந்து பேசும். .பேரனை சீக்கிரம் கூட்டிட்டு வா, ரொம்ப நேரம் இது பசி தாங்காது..
எத்தனை ஆண்டுகள் ஆனால்தான் என்ன, தம்பதிகளுக்குள் பிணக்கு வரத்தான் செய்கிறது என்பதை வேடிக்கையாகச் சொல்லி இருக்கிறார் கதாசிரியர். வாழ்த்துகள்.